அத்தியாயம் 8.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 8
பெண்ணே எத்தனை முறை தான்
வீழ்த்திக் கொண்டே இருப்பாய்
Advertisement
விழி மொழி பேசி!!!
அடுத்த நாள் காலை இரண்டு குடும்பமும் எதிரெதிரே நின்றது. சகுந்தலா மற்றும் அமர் இருவரையும் ரதி வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தருமர்.
Advertisement
Advertisement
தருமரைக் குடும்பத்துடன் கண்டதும் மஞ்சு மற்றும் தாமோதரன் முகம் இறுகியது. அறைக்குள் இருந்த ரதியை மஞ்சு அழைக்க திவ்யாவும் வந்து விட்டாள்.
அங்கே நின்ற அமரைக் கண்ட ரதி அவனை பரிதவிப்பாக ஏறிட அவளை அந்த நிலையில் நிறுத்தி விட்டோமே என்று மனம் வெம்பி நின்றான்.
Advertisement
சகுந்தலாவுக்கு ரதியைப் பார்த்ததும் அவ்வளவு பிடித்தது. தன்னுடைய மகன் அவள் அழகில் மயங்கியதில் தவறே இல்லை என்ற எண்ணம் தான். ஆனால் அவள் எதுவும் சொல்ல முடியவில்லை.
அவளது வேலை விஷயம் என்றால் கணவனை ஒரு கை பார்த்து விடுவாள். ஆனால் அமர் இருவருக்கும் மகன் அல்லவா? அவள் மட்டும் முடிவு எடுக்க முடியாதே. அதனால் வெறும் பார்வையாளர் மட்டும் தான்.
ரதி அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க அவனுக்கோ அவளை எதிர் கொள்ள கூட முடியவில்லை. சிறகடித்து பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியை றெக்கையை பிய்த்து எரிந்தது போன்ற தோற்றத்தில் இருந்தாள்.
“என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க? இங்க என்ன சம்பந்தம் பேசவா வந்துருக்கோம்? நான் கூட முதல்ல உங்க மக விஷயத்தை வேற மாதிரி முடிக்கணும்னு தான் யோசிச்சேன்”, என்று தருமர் சொல்ல அவர் சொன்ன முடிவு என்ன என்று தான் நேற்றே சொல்லி இருந்தாரே. அவர் சொன்ன கேவலமான வார்த்தைகள் எல்லாம் இப்போதும் அனைவரின் காதுக்குள்ளும் எதிரொலித்தது.
“அமர் என்ன பேசனுமோ சீக்கிரம் பேசு, கிளம்பலாம்”, என்றார் தருமர்.
அவன் உள்ளம் ரத்தம் கண்ணீர் வடிக்க அவன் உதடுகளை ஆவலாக பார்த்தாள் ரதி. தன்னை அவன் விட்டு விட கூடாது, தங்களின் காதலை கௌரவ படுத்த வேண்டும் என்ற ஆவல் அவளுக்குள் எழுந்தாலும் நேற்று தருமர் பேசிய பேச்சு அவளுக்கே பயத்தைக் கொடுத்தது தான்.
“நான் பொய் சொன்னேன் ஏமாத்துனேன்னு எல்லாம் சொல்லப் போறது இல்லை ரதி. அழகா இருந்த எனக்கு உன்னை பாத்ததும் பிடிச்சது. அதனால உன்னை காதலிச்சேன். ஆனா நீயும் நானும் சேர முடியாதுன்னு விதி இருக்கும் போது அதை மாத்த நினைக்கிறது முட்டாள் தனம். உன் மனசுல சலனத்தை ஏற்படுத்துனதுக்கு என்னை மன்னிச்சிரு. உனக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்கும். அதே போல தான் எனக்கும். எங்க அம்மா அப்பா பேச்சும் என்னோட வாழ்க்கையும் தான் எனக்கு முக்கியம். என்னோட வாழ்க்கை சந்தோசத்துக்காக நம்ம காதலை இழக்குறது தான் நல்லதுன்னு தோணுது. நாம சேந்து வாழ்ந்தா சந்தோஷமா இருக்காது. இனி நான் உன் வாழ்க்கையில வர மாட்டேன். உனக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன். நீயும் என்னை தொல்லை பண்ண மாட்டேனு நம்புறேன்”, என்று அவளை பார்த்த படி சொன்னான். அவன் கண்கள் அவளை பார்த்த படி தான் இருந்தது. அவள் ஏங்கி ஏங்கி கண்ணீர் விட அது மனதுக்கு வலி கொடுத்தாலும் அவளைப் பார்த்தான்.
ஏனென்றால் இனி அவளை எப்போது எங்கே பார்ப்போம் என்று நிச்சயம் இல்லாத போது அவன் கண்கள் அவளை மனதுக்குள் நிறைத்துக் கொண்டது.
“எங்க பக்கம் தெளிவா சொல்லியாச்சு. இதுக்கு மேல தேவையில்லாம பிரச்சனை பண்ண மாட்டீங்கன்னு நம்புறேன். காதல் கத்தரிக்காய்ன்னு பிரச்சனை பண்ணாம ஒதுங்கி போயிருங்க. அது தான் எல்லாருக்கும் நல்லது”, என்று சொன்ன தருமர் “சகு அமரை கூட்டிட்டு வெளிய போ”, என்றார்.
அவர்கள் இருவரும் செல்ல, போகும் அவனையே ஏக்கமாக பார்த்தாள் ரதி. அவளைக் கண்ட தருமர் “சொன்னது நினைவு இருக்குல்ல? நீங்க வியாபாரம் பண்ண வேற வழி இருக்கு. வேணும்னா சொல்லுங்க நானே ஆள் பிடிச்சு தரேன். ரெண்டு பேருமே லட்டு மாதிரி தான் இருக்காங்க”, என்று விஷத்தை கக்கி விட்டுச் சென்றார்.
ரதி அப்படியே மடங்கி அமர்ந்தாள். அவளது கனவுக் கோட்டை அனைத்தும் தகர்ந்தது போல இருந்தது. இதயம் வேறு வெடித்துச் சிதறுவது போல வலி கொடுத்தது. அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கனவை ஒரு நொடியில் தவிடு பொடியாக்கி விட்டானே என்று துடித்தாள்.
“நீங்க சும்மா விளையாட்டுக்கு தானே இப்படி பேசுறீங்க அமர்? இதெல்லாம் உண்மை இல்லை தானே? ஏன்னா.. நம்ம லவ்.. உண்மையானதுன்னு எனக்கு தெரியும். உங்க அப்பாவுக்காக இப்படி பேசுறீங்களா?”, என்று மனதுக்குள் தான் கேட்டாள் கண்களில் கண்ணீரோடு. அவளிடம் பேசாமல் தான் அவன் சென்று விட்டானே. மனம் ஒரு மாதிரி வெறுமையை அடைந்தது. அவன் தன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டான் என்று மட்டும் அவள் மனதில் ஆழமாக பதிந்து போனது.
அவன் காதல் உண்மையோ பொய்யோ அவள் காதல் உண்மை. அவனது நிம்மதிக்காக அவனையே விட்டுக் கொடுப்பதில் என்ன தவறாம்?
கதவு வரை சென்ற தருமர் “பரவால்ல என் பையன் இந்த வயசுலே தெளிவான நல்ல முடிவா தான் எடுத்திருக்கான். ரொம்ப சந்தோஷம். இனி நீங்களும் நிம்மதியா இருங்க. இந்த பேச்சு இதோட முடிஞ்சதா இருக்கணும்”, என்று சொல்ல அனைவரும் அவரை வெறுப்பாக பார்த்தார்கள்.
முதல் ஆளாக காரில் சென்று ஏறி அமர்ந்த அமர் தலையை பின் பக்கம் சாய்த்துக் கொண்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“என்ன தான் டா நடக்குது? அவரும் சொல்ல மாட்டிக்கார். இப்ப நீயும் இப்படி அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு வர?”, என்று கேட்டாள் சகுந்தலா. ஆனால் அவனோ எதுவுமே சொல்லவில்லை.
அனைவரும் போனதும் ரதி அழுத படி இருக்க “அவன் தெளிவா தான் இருந்துருக்கான். நீ தான் பைத்தியக்காரி மாதிரி அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க. குடும்ப மானமே போக பாத்துச்சு, எனக்கு இப்ப தான் அப்பாடின்னு இருக்கு. இதுக்கு மேல ஒரு ஆம்பளை பையன் பின்னாடி அலைஞ்சு தப்பான பொம்பளைன்னு பேரு வாங்கி எங்களை காவு வாங்கிறாத”, என்றாள் மஞ்சு. அன்னையை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் ரதி அழுது கொண்டே இருக்க திவ்யா அவளை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
உள்ளே சென்றதும் “அக்கா அழாத, கஷ்டமா தான் இருக்கும். நம்ம மச்சான் கிட்ட பேசலாம்”, என்றாள் திவ்யா.
“அதான் பேசியாச்சே?”, என்று விரக்தியில் முணுமுணுத்தாள்.
“அது ஏதோ எல்லாரும் சொன்னதுனால சொல்லிருப்பாங்க. அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், வேணும்னு சொல்லிருக்க மாட்டாங்க அக்கா”
“தெரியும். என்னோட நல்லதுக்காக தான் இருக்கும். ஆனா முடிவு சொல்லிட்டார் தானே? அதனால இது முடிஞ்சது தான்”
“அவர் மேல கோபமா இருக்கியா?”
“அவர் கண்ணுல நான் பாத்த காதல் பொய் இல்லை திவி. அதை பொய்ன்னு அவரும் சொல்லலை. அப்புறம் எதுக்கு கோபம்? அவர் கூட சேந்து வாழ்ந்தா தான் காதலா? அவரை நினைச்சிட்டே வாழ்ந்துட்டுப் போறேன்? நான் சந்தோஷமா இருப்பேன்னு தானே என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனார். அந்த சந்தோஷத்தை அவருக்கு நான் கொடுக்கணும்ல?”, என்று சொல்ல ரதியை வியந்து பார்த்தாள் திவ்யா.
தங்கையின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் ரதி. கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது. அவர்களுக்கு உணவை உள்ளே எடுத்து வந்த மஞ்சு “எல்லாத்தையும் தலை முழுகிட்டு சாதாரணமா இருக்க பாரு. இனி ரெண்டு பேரும் காலேஜ்க்கு போக வேண்டாம். இன்னும் ஒரு மாசத்துல எக்ஸாம் இருக்குல்ல? அதுக்கு போனா போதும். அந்த படிப்பு கூட இந்த செமஸ்டர் மட்டும் தான். ரெண்டு பேருக்கும் கல்யாணம் தான் பண்ணி வைக்கணும். மாப்பிள்ளை தேட ஆசை வந்துருச்சுல்ல? இனி நாங்க சொல்றதை கேட்டு ஒழுங்கா இருக்கணும். சாப்பிடுங்க”, என்றாள்.
“அம்மா திவ்யா காலேஜ்க்கு போகட்டும். அவ படிக்கட்டும். நான் தானே தப்பு பண்ணினேன்? நான் போகலை. அவளை போக விடுங்க”, என்றாள் ரதி. தங்கையின் கனவு அவளுக்கு தெரியுமே?
“எதுக்கு அவ தூது போகவா உன் காதலுக்கு? எல்லாம் தெரிஞ்சும் கமுக்கமா தானே இவ்வளவு நாள் இருந்தா? பேசாம சொல்றதை கேட்டு இருங்க. இல்லைன்னா பரீட்சை எழுத கூட விட மாட்டேன்”, என்று சொல்ல அவர்களால் எதுவுமே சொல்ல முடியவில்லை.
வீட்டுக்குச் சென்ற அமருக்கு முழுக்க முழுக்க ரதியின் நினைவு தான். அவளது கண்ணீரைக் கண்டு மனம் பதபதைத்தது. அவள் தவறான முடிவு எடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் திவ்யா அவளைப் பார்த்துக் கொள்வாள் என்று தெரியும். இருந்தாலும் மனம் அவளை எண்ணி அவ்வளவு வேதனை கொண்டது.
நிம்மதியாக சந்தோஷமாக இருந்த பெண்ணை காதல் என்று இழுத்து விட்டு தீராத பழி பாவத்துக்கு ஆளாகி விட்டோமே என்ற குற்ற உணர்வு வேறு அவனைக் கொன்றது.
அவளைக் காயப் படுத்தியதற்கே இப்படி துடிப்பவன் அவளுக்கு இன்னொரு கொடுமையையும் சேர்த்து செய்திருக்கிறான் என்று அறிந்தால் என்ன ஆவானோ?
தருமர் அப்போது உள்ளே நுழைய “இப்ப உங்களுக்கு சந்தோஷமா?”, என்று சத்தமாக கேட்டான் அமர். அப்போது சாணக்கியனும் ஸ்னேகாவும் அங்கே தான் இருந்தார்கள்.
தம்பியின் ஆக்ரோஷத்தை முதல் முறை கண்ட சாணக்கியன் “என்ன ஆச்சு அமரா?”, என்று கேட்டான்.
“என்ன ஆச்சுன்னு இந்த ஆளைக் கேளு”, என்று அமர் கத்த அடுத்த நொடி அவனை இழுத்துச் சென்ற தருமர் அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டு மீண்டும் அடி வெளுக்க ஆரம்பித்தார்.
அவன் கெஞ்ச கெஞ்ச அவனுக்கு அடி உதை தான். அவரை திருப்பி அடிக்கவோ தடுக்கவோ அவனுக்கு ஒரு நொடி போதும். ஆனால் ஏனோ ரதிக்கு செய்த பாவத்துக்கு இந்த அடியை அவன் பெற்றுக் கொண்டிருந்தான். அவள் கை காலில் இருந்த சிவப்பு அவள் வாங்கிய அடியை அவனுக்கு சொல்லி இருக்க இப்போது அவன் வாங்கிக் கொண்டிருந்தான்.
அவனை அடித்து முடித்த தருமர் “அங்க அவளை வேண்டாம்னு சொல்லுன்னு சொல்ல கூட்டிட்டு போனா அப்படி காதல் பார்வை பாத்துட்டு இருக்க? என்ன கண்ணால பேசிக்கிறீங்களோ? இப்ப கூட அவளை ஏதாவது செஞ்சிருவேன்னு தானே வேண்டாம்னு சொல்லிட்டு வந்த? அந்த பயம் எப்பவும் இருக்கணும். ஏதாவது என்னை மீறி பண்ணின அந்த பொண்ணும் சரி அவ தங்கச்சியும் சரி ஏதாவது விபச்சார விடுதில தான் இருப்பாங்க”, என்று சொல்லி செல்ல அப்படியே தளர்ந்து போய் தரையில் அமர்ந்தான். அவனால் எதுவுமே செய்ய முடியாத நிலை.
அடுத்து வந்த நாட்களில் ரதி அழுது கொண்டே இருந்தாள். காதல் தோற்றதற்கு அழுதாளா? இனி அமர் தனக்கு இல்லை என்று அழுதாளா? தன்னால் திவ்யா ஆசைப் பட்ட படிப்பு என்ன ஆகுமோ என்று அழுதாளா தெரியவில்லை.
ஆனால் அழுது கொண்டே இருந்தாள். திவ்யாவும் அழட்டும் என்று விட்டுவிட்டாள். அழுதாலாவது அவள் மனபாரம் தீருமே என்ற ஆசை தான். ரதி இதிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறாள் என்று அவ்வளவு கவலையாக இருந்தது திவ்யாவுக்கு.
ரதியோ அவன் நினைவிலே இருந்தாள். “நான் எப்படி அமரை மறப்பேன்? மறக்க கூடிய உறவா எங்களோடது? என்னோட உயிர் இருக்குற வரைக்கும் அவர் எனக்குள்ளே இருப்பாரே?”, என்று எப்போதும் அவன் நினைவும் அவர்கள் பேசி சிரித்த நினைவுகளும் தான் அவளை ஆட்கொண்டது. திவ்யா தான் அவளை சரியான நேரத்துக்கு சாப்பிட வைத்தாள்.
அடுத்து வந்த நாட்கள் அனைவருக்குமே ஒரு மார்கமாக தான் சென்றது. அமர் தந்தையுடன் பேசுவதை அறவே நிறுத்தி விட்டான். அவனுக்கு தான் முதலில் பரீட்சை முடிந்தது. முடிந்ததும் ரிசல்ட் வருவதற்கு முன்பே அவனை பாரின்க்கு அனுப்பி வைத்து விட்டார் தருமர். அவனும் மறுத்து எதுவும் பேச வில்லை. ஆனால் அவர் படிக்க அனுப்ப அவன் எந்த கோர்சிலும் சேர வில்லை. ஒவ்வொரு நாளும் சும்மாவே ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.
அவன் ரதியை மறக்க வேண்டும் என்று ஒரு நொடி நினைக்க வில்லை. மாறாக அவளுடன் இந்த இடத்துக்கு வந்தால் எப்படி இருக்கும்? அவள் தன்னுடன் இந்த நேரம் இருந்தால் என்ன பேசி இருப்பாள் என்று எண்ணி ஒவ்வொரு நொடியும் அவளுடன் வாழ ஆரம்பித்தான்.
தருமரின் பணத்தை தண்ணீராக செலவழிக்க அவன் தயங்கவே இல்லை. பிடித்ததை உண்டான். பிடித்த இடத்துக்கு போனான். ரதி அழுதே கரைந்தால் என்றால் அவனோ அவள் நினைவில் அனுபவித்து வாழ்க்கையை வாழ்ந்தான்.
சாணக்கியன் எப்படி திவ்யா நன்றாக இருக்க வேண்டும் என்று விலகிச் சென்றானோ அதே போல தான் அமரும். அண்ணன் தம்பி இடையே எதில் ஒற்றுமையோ இல்லையோ காதலில் ஒன்று போல தான். தம்பியை எண்ணி சாணக்கியனுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனால் எதுவும் செய்ய முடிய வில்லை.
ஏனென்றால் அவனுக்கு தருமரைப் பற்றி நன்கு தெரியும். நல்ல வேளை தன்னுடைய காதல் அவருக்கு தெரிய வில்லை என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அவன் காதலும் அவர் அறிந்தவர் என்று அவனுக்கு தான் தெரிய வில்லை.
அமருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று அவன் அழைக்கும் போதெல்லாம் அமர் அவனையும் சேர்த்தே புறக்கணித்தான். சகுந்தலாவுடன் மட்டும் தான் பேசுவான்.
மஞ்சு பேச்சு தான் அந்த வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தது. சும்மாவே பேசிக் கொண்டே இருப்பாள். இப்போது கேட்கவும் வேண்டுமா? தாமோதரனுக்கு கோபம் இருந்தாலும் மகள் பாசம் அவரைக் கட்டிப் போட்டது. அவள் அழுது கொண்டே இருக்க “அம்மாடி ரதி”, என்ற படி அவள் அருகில் அமர்ந்தார்.
“அப்பா”, என்ற படி அவர் மடியில் படுத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.
அவள் தலையை வருடி விட்டவர் “இது எல்லாம் இந்த வயசுல வர உணர்வு தான் டா. பசங்க புத்தியும் பொண்ணுங்களை மயக்குறதா தான் இருக்கும். இதை எல்லாம் அப்படியே கடந்து போயிரணும் பாப்பா. அந்த பையன் தெளிவா தானே இருக்கான். நீயும் அதை கடந்து உன்னோட படிப்பு வேலைன்னு கவனம் செலுத்தணும் சரியா மா? அம்மா கிட்ட சொல்லி உன்னையும் திவ்யாவையும் படிக்க வைக்கிறேன்”, என்று சொல்ல அவள் அமைதியாக கேட்டுக் கொண்டாள்.
திவ்யா மற்றும் ரதி இருவரும் பரீட்சைக்கு மட்டும் சென்று கொண்டிருந்தார்கள். இருவருக்கும் வேறு வேறு நாட்கள் தான் பரீட்சை இருந்தது. ஆனால் ரதிக்கு இருக்கும் போது திவ்யா அவளுடன் துணைக்குச் சென்றாள். எல்லா தேர்வும் திவ்யா நன்றாகவே எழுதினாள். ரதி இப்போது எதுவும் படிக்க வில்லை என்றாலும் முன்பு படித்ததை வைத்து எதையோ எழுதி வைத்தாள். அன்று இருவருக்குமே கடைசி பரீட்சை. குளித்து கிளம்பிய பிறகும் திவ்யா வயிறு வலியால் சோர்ந்து படுத்திருந்தாள்.
நேரம் ஆனதும் “போகலாமா திவி?”, என்று கேட்டாள் ரதி.
“போகலாம், சே எப்படா எக்ஸாம் முடியும்னு இருக்கு. ஏற்கனவே வயிறு வலிக்குது. இதுல எப்படி மூணு மணி நேரம் ஒரே இடத்துல உக்காந்துருக்கவோ? வந்தது தான் வந்தது இந்த பீரியட்ஸ் நாளைக்கு வந்திருக்க கூடாது?”, என்று புலம்பிய படியே நடக்க ரதிக்கு திக்கென்று இருந்தது.
நாட்கள் தள்ளி ஏழு நாட்கள் ஆகியிருந்தாலும் ரதிக்கு வர வில்லை என்றதும் உள்ளமெல்லாம் அப்படி ஒரு அதிர்வு. “இதை எப்படி மறந்தேன்? கடவுளே அப்படி எல்லாம் ஆகிருக்குமோ? ஆனா ஒரே நாள்ல யா?”, என்று அவள் திகைத்த படி நிற்க “ஐயோ அக்கா வா லேட் ஆகிருச்சு”, என்று அவள் கை பற்றி அழைத்துச் சென்றாள் திவ்யா.
இத்தனை நாட்களை விட இன்று ரதி அவ்வளவு மோசமாக இந்த பரீட்சையை எழுதி வைத்தாள். ஒரு வரி எழுதி முடிக்கும் போதே “உண்மையாவே வயித்துல பாப்பா இருக்குமா? எப்படி? இருந்தா அடுத்து என்ன செய்யுறது? பாப்பா யார் மாதிரி இருக்கும்? என்னோட அமர் மாதிரி இருக்குமா?”, என்று பல விதமான எண்ணங்களில் அவள் மனம் தறிகெட்டு ஓடியது.
எக்ஸாம் எழுதி முடித்ததும் அவளுக்காக காத்திருந்தாள் திவ்யா. “அக்கா போகலாமா? சீக்கிரம் போகலைனா அந்த ஹிட்லர் அம்மா ஏதாவது சொல்லும்”, என்றாள்.
“வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி நம்ம ஒரு இடத்துக்கு போகணும் திவி”
“எங்க அக்கா? அமர் மச்சானை பாக்க போறோமா?”
“அவங்க வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் அவங்களை தொல்லை பண்ண கூடாது திவி. இது வேற?”
“எங்க?”
“மெடிக்கல் ஷாப்க்கு”
“உனக்கும் உடம்பு சரி இல்லையா?”
“ஆமா”
“சரி வா”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள். அங்கே சென்றதும் “என்ன வேணும்னு சொல்லுக்கா?”, என்று சொன்ன திவ்யா ரதி சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்து போய் அவளைப் பார்த்தாள்.
கடைக்காரனும் திகைத்த படி அவர்களை பார்த்து விட்டு அவர்கள் கேட்டதை எடுத்துக் கொடுக்க தயக்கத்துடன் அதை பெற்றுக் கொண்டாள்.
