Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 28

 

 

காதலும் கடத்தப்படும் – 28



Advertisement

 

வீட்டிற்கு திரும்பியதும், அஞ்சலி கீழே இறங்கிக்கொள்ள, காரினை அதனிடத்தில் நிறுத்தியவன், மதனிடம்,

“நான் வீட்டுக்கு கிளம்பறேன், நீ வரியா?” என்றான்.

Advertisement

“அஜூ, அந்த புள்ள அழுவுதுடா. பாவம் அஜூ…”

Advertisement

“சரி, நான் கிளம்பறேன், நீ வரும்போது வா…” என்றவன் விருட்டென செல்ல, 

“இரு அஜூ நானும் வரேன்” என்று மதன் பின் தொடர்ந்தான். 

 

Advertisement

வீட்டு வாயிலில் அஞ்சலி கவலையோடு நிற்க,

“அஞ்சலி, அவன் கோவமா இருக்கான், நானும் அவனோட கிளம்பறேன்” என்றான் மதன்.

“நீயாவது காரணத்தை சொல்லு மதன்…”

“டேய் மதனா” என்று அர்ஜுன் குரல் கொடுக்க, “நான் வரேன் அஞ்சலி” என்றவன் ஓடிச்சென்று அவனோடு நடக்கத் தொடங்கினான். அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்வது அஞ்சலிக்கு தெரிந்தது. 

 

தனது அறைக்குள் சென்றவள், தனது கைப்பையை பிரித்தாள். அதிலிருந்த அன்பளிப்பை எடுத்துப்பார்த்தாள். அதில், அவளுடைய கைகளை இதய வடிவில் அச்செடுக்கப்பட்ட உருவம் இருந்தது. தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு, அவ்வடிவம் சிறிய மேடை மீது அமைக்கப்பட்டது போல் இருந்தது. அந்த சிறு பலகையின் முகப்பில், அர்ஜுன் அஞ்சலி என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. 

 

“அஜூ, எவ்வளவு ஆசையாசையா உன்கிட்ட என் மனசுல உள்ள காதலை சொல்ல வந்தேன். எதுக்கு இப்ப கோவிச்சுக்கிட்டு போன? நான் என்ன தப்பு பண்ணேன்னு புரியல. முதல்முதலா நான் சம்பாதிச்ச காசு இந்த யூடியூப் சேனல் மூலமாத்தான். அதுல தான் ஆசையாசையா இதை செஞ்சு வாங்கிட்டு வந்தேன். இன்னைக்கு என் பிறந்த நாள்ல உன்கிட்ட கொடுத்து, பிறந்தநாள் பரிசா ‘நீ வேணும், உன் காதல் வேணும்’னு கேட்க ஆசைப்பட்டேன். கேட்டிருந்தா நீயும் கொடுத்திருப்ப. எனக்குத் தெரியும்… ஏன் அஜூ போன? உன்னோட கோவத்தையம், ஒதுக்கத்தையும் தாங்கிக்கற அளவு எனக்கு சக்தி இல்லை அஜூ. எப்போ உன் மேல பைத்தியம் ஆனேன்னு தெரியல. ஆனா, எப்பவுமே எனக்கு நீ தான் அஜூ. ஒரு நாள் என் மனசு உனக்கு புரியும்…” என்று அந்த பரிசினை ஏந்தியபடி கூறிமுடித்தவள், அதனை நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு, அழுதபடி உறங்கிப்போனாள். 

 

சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம் கேட்டு, முகத்தினை துடைத்தபடி அவள் கதவினை திறக்க, வெளியே வேதநாயகம் நின்றிருந்தார்.

“அப்பா…”

அழுது வீங்கியிருந்த அவளது முகத்தினைக் கண்டவருக்கு, மனம் வெம்பியது.

“என்னமா? ஏன் அழற? என்னாச்சு?” என்று பதறினார்.

ஏனோ அப்பாவின் இந்த அக்கறை அவளுக்கு அப்போது தேவையாக இருந்தது.

“ஒண்ணுமில்ல பா…” என்றாள்.

“ஒண்ணுமில்லன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்கிட்ட சொல்லு” என்றவர், தயங்கித் தயங்கி, “அம்மா ஞாபகம் வந்துடுச்சா?” என்றார்.

அவரது வருத்தம் புரிந்தவளாய்,

“அப்படியெல்லாம் இல்லைப்பா. எனக்கு கொஞ்சம் வயித்துவலி… அதான்…” என்றாள்.

“சரி வா, டாக்டரை பார்த்துட்டு வரலாம்”

“இல்லைப்பா வேண்டாம்… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்”

“நான் லேடி டாக்டரை வர சொல்லவா?”

“இல்லைப்பா, வேண்டாம். தேவைப்பட்டா நானே சொல்றேன்…”

மனம் தவித்தாலும், மகளுக்காக ‘சரி’ என்று அமைதியானார்.

 

“உனக்கு பிறந்தநாளுக்கு இந்த செயினை வாங்கிட்டு வந்தேன்” என்றவர் சிறிய நகைப்பெட்டி ஒன்றினை நீட்டினார். அதனை பெற்றுக்கொண்டவள் அணிந்துகொள்ள, அவரது முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

“அழகா இருக்குப்பா…” என்று மகள் சிரிக்க, அவரது மனம் குழைந்தது.  

“நீ தூங்குமா” என்று அவர் கூற, ‘சரி’ என்று தலையாட்டியவள் தனது அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.

 

அடுத்த இரண்டு நாட்களும் அர்ஜுனும், மதனும் வீட்டிற்கு வரவில்லை. மதனை அவள் அழைத்து காரணம் கேட்க, தனக்கு சற்று உடம்பு சரியில்லை என்றான். பொய்க்காரணம் என்று தெரிந்தபோதும் அவள் எதுவும் கூறவில்லை.

 

மதியம், தனது வீட்டு வாயிலில் அமர்ந்தபடி கைபேசியில் யாருக்கோ அழைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான், மதன்.

“மதனா” என்றபடி அவன் எதிரே வந்து நின்றாள், அஞ்சலி.

“எப்படி இருக்க மதனா? இப்போ உடம்பு எப்படி இருக்கு?” 

“அஞ்சலி… அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீ உள்ள வா…” என்றான்.

 

அவள் உள்ளே சென்று அமர, 

“இரு அஞ்சலி, நீ குடிக்க டீ வாங்கிட்டு வரேன்” என்றான்.

“வேண்டாம் மதனா, கொஞ்சம் தண்ணி கொடு”

அடுக்களைக்குள் சென்று மதன் நீர் எடுத்துவர, அதனை வாங்கி குடித்து முடித்தாள்.

“அஞ்சலி எப்படி வந்த இவ்வளவு தூரம்?”

“ரெண்டு பஸ் மாறி, நடந்து வந்தேன்… ரெண்டு மணி நேரம் ஆச்சு… தினமும் எப்படி இவ்வளவு தூரத்திலேர்ந்து வீட்டுக்கு வரீங்க?”

“அது, இந்த பக்கம் நேரா போனா பைபாஸ் வரும். அங்க சில சமயம் லாரில லிப்ட் கேட்டு வருவோம். சிலசமயம் பஸ்ல… அதை விடு, நீ எதுக்கு இப்போ கிளம்பி வந்த? ஒரு போன் பண்ணியிருந்தா நாங்க வந்திருப்போம்ல?”

“திரும்பி வரமாட்டீங்களோன்னு எனக்கு பயமா இருந்தது. அதான் நானே வந்துட்டேன்…”

“வராம நாங்க எங்க போவோம் அஞ்சலி?!!”

அவள் கண்கள் ஈரம் கொண்டன.

 

“அஜூ எங்க?”

“எங்க போனான்னு தெரியல. அவனுக்கு தான் ரொம்ப நேரமா போன் போடறேன். சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான்…”

ஆழ்ந்த பெருமூச்சு எடுத்தவள், “அன்னைக்கு எதுக்கு கோவப்பட்டான்னு சொல்லு மதனா”

“அது…”

“எதுவா இருந்தாலும் சொல்லு…”

“நீ உன்னோட பிறந்த நாள்ன்னு எங்ககிட்ட சொல்லலனு அவனுக்கு வருத்தம். அதுவுமில்லாம எல்லாரும் உனக்கு கிப்ட் வாங்கிட்டு வந்திருந்தாங்க. நாங்க ஒன்னும் வாங்காம வந்ததிருந்தோம்… நம்ம பசங்களும்…”

“என்ன பண்ணாங்க?”

“எதுவும் பண்ணல… ‘ஒன்னும் வாங்கிட்டு வரலையா?’ங்கற மாதிரி கேட்டுட்டாங்க, அதுல அஜுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு…”

“யாரு அப்படி கேட்டது மதனா?”

“விடு அஞ்சலி, அவங்க கிண்டலா கேட்டுட்டாங்க. அஜுக்கு தாங்கிக்க முடியல. உன் மேல கோவப்பட்டுட்டான்… நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல?”

“மதனா…”என்றவள், சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “நான் சொல்லாக்கூடாதுன்னு எதுவும் நினைக்கலை… நம்ம சேனல்ல வந்த முதல் வருமானம் தான் எனக்கு அன்னைக்கு பெரிய சந்தோஷமா இருந்தது. நான் என்னை பத்தி எல்லாமே அஜூகிட்ட சொல்லியிருக்கேன், ஒரு பிறந்தநாளை பகிர்ந்துக்க மாட்டேனா?!!”

“அதையே தான் நானும் சொன்னேன் அஞ்சலி. ‘டிரைவர்கிட்ட எதுக்கு சொல்லணும்னு அவ நினைச்சுட்டா போல’னு சம்மந்தமே இல்லாம பதில் சொல்றான். அவனோடு வாக்குவாதம் பண்ணி, நான் சோர்ந்துபோயிட்டேன். என்கிட்டயும் கோவிச்சுக்கிட்டு நேத்து எங்கயோ போயிட்டு ராத்திரி தான் வந்தான். இன்னைக்கு காலைல நான் எழுந்திருக்கும் போதே ஆள காணோம். என்ன பண்றான்னே தெரியல…”

கண்கலங்கியவள், “நான் என்னைக்குமே உங்க ரெண்டு பேரையும் தாழ்வா நினைச்சதில்லை மதனா. நான் அப்படி நினைக்கறேன்னு அஜூக்கு தோணியிருக்குனா, நான் அந்தளவு அவனை காயப்படுத்தியிருக்கேன் போல. எனக்கே தெரியல மதனா. அன்னைக்கு கோயில்ல காசு கொடுத்தபோதே அவன் கோவப்பட்டான். அப்பவே சுதாரிச்சிருந்திருக்கணும். என் மூளைக்கு எட்டல மதனா. இப்ப கூட, ‘ஏன் உன் பிறந்த நாளை என்கிட்டே சொல்லல’ன்னு அஜூ உரிமையா கேட்கலைனு தான் தோணுச்சு. நான் சரினு சொல்லல, ஆனா தப்பு பண்ணா அவன் தான் சொல்லி திருத்தணும். இதே வீட்ல வச்சு எனக்கு எவ்வளவு அட்வைஸ் பண்ணான்?! இப்ப ஏன்?… 

 

அன்னைக்கு எல்லாருக்கும் பணத்தை கொடுத்ததும் கிளம்பிடுவாங்க, அதுக்கப்புறம் அஜுக்கு வேற ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு யோசிச்சு வச்சிருந்தேன். ஆனா என்னென்னமோ நடந்துடுச்சு…” – தனது காதலை தவறி மதனிடமோ, யாரிடமோ பகிர்ந்துவிடக்கூடாது என்பதில் அவள் தீர்க்கமாய் இருந்தாள். அவளது மனதின் அபிலாஷைகளை அறிந்து கொள்ளும் உரிமை அர்ஜுனுக்கு மட்டுமே உண்டு என்று முடிவாய் இருந்தாள்.

கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டவள்,

“நான் மனசு விட்டு முதல் முதல்ல பேசினது அஜூ கிட்ட தான். சித்தப்பாகிட்ட கூட என் மனசுல உள்ள வலியை சொன்னதில்லை, ஆனா அஜூகிட்ட சொன்னேன்… அவனே என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டான்ல… எல்லாரையும் எல்லாரும் எல்லா நேரமும் சரியா புரிஞ்சுக்க முடியாது தான்… தவறான புரிதல் தப்பில்ல… ஆனா, பேசாம ஒதுக்கறது தப்பு மதனா… எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?”

என்றவள், தாங்கமுடியாமல் அழுதாள். மதன் முடிந்தளவு சமாதானங்கள் கூற, ஓரளவு அமைதி கொண்டாள்.

 

முகத்தினை அழுந்த துடைத்துக்கொண்டு, 

“நான் வந்தது வேற ஒரு முக்கியமான விஷயத்துக்கு” என்றவள், தனது கைப்பையிலிருந்து ஒரு சீட்டினை எடுத்து, “நாளைக்கு காலைல பத்து மணிக்கு இவரை போய் பாருங்க. நம்ம ரெக்கார்டிங் எஞ்சினியர் கொடுத்தார். இவங்க பல பிரபலங்களை வச்சு கான்சர்ட் பண்ற கம்பெனி. இவங்க ஓகே சொல்லிட்டா, அஜூ நாம நினைச்சதவிட ரொம்ப பெரிய ஆளா ஆகிடுவான். என் மேல இருக்கற கோவத்தை ஓரமா வச்சுட்டு, தயவு செஞ்சு ரெண்டு பெரும் போய் பார்த்துட்டு வாங்க…”

“என்ன அஞ்சலி நீ? இவ்வளவு தூரம் சொல்லணுமா? நாங்க நிச்சயம் போய் பார்த்துட்டு வரோம்…”

‘சரி’ என்றவள் கிளம்ப எத்தனிக்க, மீண்டும் ஒருமுறை அர்ஜுனை கைபேசியில் அழைத்தான், மதன். அவன் எடுக்கவே இல்லை…

“விடு மதனா. நீ சொல்லிடு. அப்புறம்…” என்றவள், ஏக்கமாக மூடியிருந்த அறை கதவினைக் கண்டாள். அதை புரிந்துகொண்ட மதன், 

“ஒரு நிமிஷம் அஞ்சலி…” என்றுவிட்டு, அறைக்குள் சென்று, சில நொடிகள் கழித்து வெளியே வந்தான்.

“வா அஞ்சலி” என்றவன், “ரூம் சுத்தமா இருக்கான்னு பார்த்தேன்” என்றான்.

 “பரவால்ல மதன்” என்றவள், உள்ளே சென்று இளமாறன், இந்துமதியின் புகைப்படங்களைக் கண்டு வணங்கினாள். கீழே இருந்த ட்ரங்க் பெட்டியை தொட்டுப் பார்த்தாள். அறையை பார்த்தாள். சாளரம் திறந்து வெளியே சில நிமிடங்கள் பார்த்தவள், அந்த கட்டிலின் மேல் அமர்ந்தாள். ஓர் இரவு முழுதும் அர்ஜுனோடு கதை பேசிய நினைவு வந்தது. கண்ணீரும் துளிர்த்தது.

 

எழுந்தவள், “நான் கிளம்பறேன் மதனா” என்றாள்.

“அஞ்சலி, ஒரு பத்து நிமிஷம் இருக்கியா, இந்த அஜூவை எப்படியாவது தேடிப் பிடிச்சு கூட்டிட்டு வந்துடறேன்…”

“வேண்டாம்… நாளைக்கு நான் சொன்னவரை போய் பார்த்து பேசிட்டு, எனக்கு ஒரு போன் மட்டும் பண்றியா?”

“நேரா வீட்டுக்கு வரோம் அஞ்சலி…”

சிரித்துக்கொண்டவள், ‘சரி’ என்று தலையசைத்தபடி கிளம்பினாள்.

 

“அஞ்சலி, நான் கார் ஏற்பாடு பண்றேன்…”

“வேண்டாம் மதனா… தனியா பஸ்ல போறது கூட நல்லாத்தான் இருக்கு. நான் இந்த மாதிரி போனதில்லை…”

“அதுக்கில்ல அஞ்சலி…”

“விடு மதனா, நான் போயிடுவேன்”

பேசிக்கொண்டே இட்டிலி கடையின் அருகே வந்து நின்றனர்.

“மதன் அண்ணா…” என்றபடி இட்டிலி கடை பெண்ணின் மகள் வந்து நின்றாள்.

“அக்கா நீங்க?”

“என் பேரு அஞ்சலி”

“நீங்க அஜூ அண்ணனோட ப்ரெண்ட் தான? நீங்க இங்க தங்கியிருந்தபோது பார்த்திருக்கேன்”

அழகாய் புன்னகைத்தாள், அஞ்சலி.

“வா மா” என்றபடி வந்து நின்றாள், இட்டிலி கடைப் பெண்.

தனது கைப்பையிலிருந்து, ஒரு தபால் உரையை எடுத்து அச்சிறுமியிடம் நீட்டினாள், அஞ்சலி.

“இது உன்னோட காலேஜ் பீஸுக்கு…”

“அக்கா, எனக்கு எதுக்கு… பரவால்ல…” என்று தயங்கினாள், அவள்.

“அண்ணா கொடுத்தா வாங்கிப்ப, அக்கா கொடுத்தா வாங்கிக்கமாட்டியா? வாங்கிக்கோ” என்றதும் அச்சிறுமி பெற்றுக்கொண்டாள்.

இட்டிலி கடைப் பெண்ணை நோக்கி, “மா, பாப்பாவை படிக்க வைக்கறது என் கடமை. அப்பாகிட்ட பாப்பாவை பத்தி, உங்கள பத்தி சொல்லி காசு வாங்கிட்டு வந்தேன். பாபாவோட மொத்த செலவையும் அப்பா ஏத்துக்கறதா சொல்லச் சொன்னாங்க…” என்றவள், அச்சிறுமியிடம், 

“உனக்கு என்னெல்லாம் படிக்கணும்னு தோணுதோ நீ படி, அக்கா நான் இருக்கேன். எது வேணும்னாலும் எனக்கு யோசிக்காம போன் பண்ணு” என்றாள்.

“தேங்க்ஸ் அக்கா” என்று அச்சிறுமி நெகிழ்ந்து போக,

“ரெண்டு இட்டிலி சாப்பிடுறியா?” என்றாள் அச்சிறுமியின் தாய், அஞ்சலியிடம்.

“இன்னும் ரெண்டு சேர்த்து கொடுங்க, ரொம்ப பசியில இருக்கேன்” என்று அவள் கூற, மகிழ்வோடு அவளுக்கு வேண்டியதை பார்த்துப்பார்த்து பரிமாறினாள், அப்பெண். 

மதனும் உடன் அமர்ந்து உண்ண, ஏனோ ஒவ்வொரு வாயும் அவனுக்கு சிக்கித் திணறி விழுங்க வேண்டியதாயிற்று. பொங்கும் கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, உண்டு முடித்தான். 

 

அஞ்சலியை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பியவன், அர்ஜுனுக்காக காத்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!