Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனைச் சுற்றி ஏகாந்தம்

அத்தியாயம் 8-2 : எனைச் சுற்றி ஏகாந்தம்

அதை எடுத்தவன் “சொல்லுங்க மாமா”, என்றான்.

 

“தூங்கிட்டீங்களா மாப்ள? தொல்லை பண்ணிட்டேனா?”, என்று அவர் கேட்க “அப்படி எல்லாம் இல்லை மாமா. சும்மா வானத்தை பாத்துட்டு தான் படுத்திருக்கேன். என்ன விஷயம் சொல்லுங்க?”, என்று கேட்டான்.

 



Advertisement

“நாளான்னைக்கு காயலுக்கு பிறந்த நாள் மாப்ள. அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன். உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்ல? திடீர்னு நினைவு வந்துச்சு. அதான் உடனே சொல்லணும்னு கூப்பிட்டேன். சரி மாப்ள தூங்குங்க. வைக்கிறேன்”, என்று சொல்ல “நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க மாமா. தேங்க்ஸ்”, என்று சொல்லி போனை வைத்தான்.

 

இரவு முழுவதும் அவளுக்கு என்ன கிஃப்ட் கொடுக்க என்று அவன் மனம் எண்ணமிட்டது. வாங்கி வைத்திருந்த கம்மல் மற்றும் மோதிரத்தை திருமணத்துக்கு பிறகு தான் அவள் வாங்குவாள் என்பதால் வேறு ஏதாவது கொடுக்க முடிவு எடுத்தான். அப்போது தான் அன்று அவள் காலைக் காட்டியது நினைவு வந்தது. உடனே கொலுசு வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

Advertisement

 

Advertisement

அடுத்த நாளே கடைக்குச் சென்று வாங்கி விட்டான். அன்றே அவன் ஆர்டர் செய்திருந்த வண்டியும் வந்தது. அன்றே அதை கயலிடம் காட்ட தான் அவனுக்கு விருப்பம். ஆனால் அடுத்த நாள் அவளுக்கு பிறந்த நாள் என்பதால் அடுத்த நாளே அவளிடம் காட்ட முடிவு எடுத்தான்.

 

அவன் வண்டி வாங்கியதற்கு சிதம்பரம் மீனாட்சி சந்தோஷப் பட்டார்கள். “வண்டியை இங்கயே விட்டுட்டு போ மாப்ள”, என்று சிதம்பரம் சொல்ல சரி என்று சொல்லி விட்டு அங்கேயே விட்டுவிட்டுச் சென்றான். அவன் போன திசையை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

Advertisement

 

“என்ன டி தமிழை வெறிச்சு பாத்துட்டு இருக்க?”

 

“ஏங்க அன்னைக்கே உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன்? அவன் டிரஸ்சையும் வாங்கி வச்சீங்க? இப்ப வண்டியையும் இங்க விடச் சொல்றீங்க? ஏன் என்ன ஆச்சு?”

 

“எல்லாம் உன் மதினிக்காரிக்கு பயந்து தான்”

 

“ஏன் என்ன ஆச்சு?”

 

“இந்த பய கல்யாணப் பத்திரிக்கை வாங்கி வீட்ல வச்சிருக்கான். அதை கிழிச்சு வச்சிருக்கா டி”

 

“என்னங்க சொல்றீங்க?”

 

“ஆமா டி, திருப்பி அடிக்க கொடுத்து அதை தான் எல்லாருக்கும் கொடுக்குறோம்”

 

“ஏங்க இப்படியுமா ஒரு பொம்பளை இருப்பா?”

 

“எனக்கு என்னமோ அவளுக்கு மன நலம் சரியில்லாம போய்ட்டோன்னு தோணுது டி. நல்ல மனசு இருந்தா இப்படி எல்லாம் செய்வாங்களா? அதான் துணியை அங்க வச்சா எரிச்சிருவான்னு பயந்து தான் வாங்கிக்கிட்டேன். வண்டியை அங்க விட்டா என்ன செய்வாளோன்னு பயந்து தான் இங்க விடச் சொன்னேன்”

 

“செஞ்சாலும் செய்வா. இப்படி ஒருத்தியை கட்டி வச்சு என் அண்ணனை நானே கொன்னுட்டேனேங்க?”, என்று சொன்ன மீனாட்சி அண்ணனின் நினைவில் கண்கள் கலங்க அவளை சமாதானம் செய்வதற்குள் சிதம்பரம் தான் திணறினார்.

 

அடுத்த நாள் கயலின் பிறந்த நாள் எப்போதும் போல தான் விடிந்தது கயலுக்கு. ஆனால் அவளை வாழ்த்த தான் ஒரு ஜீவனும் இல்லை. இப்போது மட்டும் அல்ல இத்தனை வருடங்களில் அவளை யாருமே வாழ்த்தியது இல்லை. அதனால் சில நேரம் பாரமாக இருந்தாலும் அவள் பெரிதாக அதை யோசித்தது இல்லை.

 

ஆனால் இன்று அதிகமாக கஷ்டமாக இருந்தது. கண்கள் கூட கலங்கியது. கலங்கிய கண்கள் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். தனக்கென்று யாரும் இல்லாதது பெரிய கொடுமையாக இருந்தது. தான் செய்த காலை உணவை உண்டு விட்டு வெளியே சென்ற தந்தை கூட தன்னை வாழ்த்தாதது அவள் மனதை வாள் கொண்டு அறுத்தது.

 

அவர் வாழ்த்துவதை விட எப்போதும் தமிழ் அனுப்பும் காலை வணக்கம் கூட இன்று வராதது தான் அவள் மனதை பெரிதும் பாதித்தது. அவளது பிறந்த நாள் அவனுக்கு தெரியாது என்று அவளுக்கு தெரியும் தான். ஆனாலும் அவனிடம் இருந்து ஒரு அழைப்பு வராதா என்று மனம் ஏங்கியது.

 

“பிளீஸ், நீங்களாவது இன்னைக்கு எனக்கு ஒரு கால் பண்ணுங்களேன். எனக்கு உங்க பெர்த்டே விஷ் கூட வேண்டாம். உங்க குரலை கேட்டா கூட போதும்”, என்று மனதளவில் ஏங்கினாள்.

 

ஆனால் அவள் வீட்டு வேலைகளை முடித்து வேலைக்கு கிளம்பும் வரைக்குமே அவனிடம் இருந்து அழைப்பு வர வில்லை.

 

மனம் முழுக்க பாரத்துடன் அவள் அலுவலக நிறுத்தத்தில் இறங்கும் போது “ஹாய் பொண்டாட்டி”, என்ற அவனின் குரல் கேட்டு ஆனந்தமாக திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் சந்தோசத்தில் விரிந்தது. கூடவே பொலபொலவென்று கண்ணீரும் வடிந்தது. அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

 

புது பைக்கில் சாய்ந்த படி நின்றிருந்தான் தமிழ். அதுவும் அவன் அழகும் அவள் மனதில் அப்படியே பதிந்தது. அவள் முகம் மட்டும் அல்ல, அகமும் அவன் வருகையால் மலர்ந்து தான் போனது. இது வரை மனதை அழுத்திய துன்பம் நொடியில் மறைந்ததை உணர்ந்தாள்.

 

“கயல் இங்க வா”, என்று அழைத்ததும் அவனை நெருங்கி நின்றாள். ஆனால் அவளால் எதுவும் பேச முடிய வில்லை. வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனது போல உணர்வு அவளை ஆட்கொண்டது.

 

அவள் பேச மறந்தவள் போல நிற்க “என்ன கயல் எதுவுமே பேச மாட்டிக்க?”, என்று கேட்டான்.

 

“நீங்க என் கண்ணு முன்னாடி நிக்குறதை என்னால நம்பவே முடியலை? நான் உங்களை எதிர் பாக்கவே இல்லை தெரியுமா? எனக்கு பேசக் கூட வார்த்தை வரலை. கண்ணு தான் கலங்குது”

 

“அழாத டி. கஷ்டமா இருக்கு. ஆனா இது சந்தோசத்துல வர கண்ணீர் அப்படிங்குறதுனால எனக்கு கொஞ்சம் நிம்மதியாவும் இருக்கு. சரி மத்தது எல்லாம் அப்புறம் பேசலாம். நீ முதல்ல வண்டில ஏறு”

 

“ஹேய், வண்டி வாங்கிருக்கீங்களா? நேத்து நைட் பேசும் போது கூட சொல்லவே இல்லை”, என்றவள் வண்டியை பார்வை இட்டாள்.

 

“உன் கிட்ட நேர்ல காட்டணும்னு தான் சொல்லலை. நேத்து ஈவினிங் தான் டெலிவரி எடுத்தேன். சரி நீ ஏறு”

 

“என்ன விளையாடுறீங்களா? எனக்கு ஒன்பது மணிக்கு ஆபீஸ் போகணும்”, என்று சொன்னாலும் அவள் கண்கள் ஆசையாக வண்டியை தழுவியது.

 

“அதெல்லாம் நீ வேலைக்கு போக வேண்டாம். இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடு”

 

“என்னது லீவா? ஐயோ அதெல்லாம் முடியாது”

 

“என்ன முடியாது? நீ கண்டிப்பா வர”, என்று சொல்ல அதற்கு மேல் அவனிடம் மறுத்து அவளுக்கு என்ன கிடைக்க போகுதாம்? அவனுடன் இருக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விடவா வேலை பெரியது? “சரி வரேன். ஒரு நிமிஷம்”, என்று சொன்னவள் உடனே சேகரைத் தான் அழைத்தாள்.

 

வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் கயல் அழைக்கவும் “சொல்லு மா, என்ன காலைலே என்னைக் கூப்பிட்டுருக்க? உன் ஆள் பேசலையா?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

 

“அப்படி எல்லாம் இல்லைண்ணா, எனக்கு ஒரு நாள் லீவ் வேணும்”, என்று அவள் கேட்க “கயல் என்ன ஆச்சு மா? உடம்பு சரி இல்லையா? உன் சித்தி உன்னை எதுவும்….?”, என்று கவலையாக கேட்டான்.

 

“அப்படி எல்லாம் இல்லைண்ணா. வேலைக்கு தான் கிளம்பி வந்தேன். ஆனா அது… அது  வந்து…. அவங்க வந்திருக்காங்க. லீவ் போடச் சொன்னாங்க”

 

“யாரு தமிழா?”

 

“ஆமாண்ணா”

 

“ஹே, பாருடா. அவுட்டிங்க் போகப் போறீங்களா ரெண்டு பேரும்? கலக்குங்க கலக்குங்க. சந்தோஷமா லீவ் எடுத்துக்கோ டா. நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னவன் தமிழிடமும் பேசி விட்டு போனை வைத்தான்.

 

“உங்க மேலதிகாரி பெர்மிசன் கொடுத்தாச்சு. சரி வா கயல் போகலாம்”

 

“எங்க போக போறோம்?”

 

“நீ ஏறு சொல்றேன்”, என்று சொன்னவன் அவளது லன்ச் பேகை வாங்கி வண்டியில் மாட்டிவிட்டு ஸ்டார்ட் செய்தான். அப்போதும் அவள் தயங்க “என்ன ஆச்சு டி? ஏறு. ஏன் தயங்குற? என் கூட வண்டில வர மாட்டியா?”, என்று கேட்டான்.

 

“பயமா இருக்குங்க”

 

“என்னது பயமா? ஏன் என் கூட வந்தா உங்க வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னு பயப்படுறியா? நான் மாமா கிட்ட பேசுறேன் டி”

 

“அந்த பயம் இல்லை”

 

“வேற என்ன பயம்? உன்னை எங்கயாவது கடத்திட்டு போய்ருவேனோன்னு பயமா இருக்கா?”

 

“என்னை நீங்க கடத்திட்டு போனா கூட எனக்கு சந்தோஷம் தான்”

 

“அப்புறம் என்ன பயம்? தனிமை கிடைச்சா உன்னை சுவாகா பண்ணிருவேனோன்னு பயமா?”

 

“ஐயோ, எனக்கு வண்டில போக தான் பயம் போதுமா? நான் இது வரை யார் கூடவும் வண்டில போனது இல்லை. ஏறத் தெரியாம ஏறி கீழ விழுந்துட்டா என்ன பண்ண?”, என்று அவள் வெகுளியாக கேட்க மனம் விட்டு சிரித்தான் அவன்.

 

“அதெல்லாம் விழ மாட்ட. அப்படி உன்னை கீழ போட்டுருவேனா? ஏறு டா”, என்று சொல்ல முதன்முதலாக ஒரு ஆண்மகனுடன் வண்டியில் பயணம் என்பதால் சிறிது தடுமாற்றத்துடன் தான் ஏறி அமர்ந்தாள்.

 

அவன் அருகாமையில் திணறி ஒரு மார்கமாக அமர்ந்திருக்க “இப்படி உக்காந்தா கண்டிப்பா விழுந்துருவ கயல். என்னை பிடிச்சிக்கோ டி”, என்றான். தடுமாற்றத்துடன் அவன் தோளில் கை வைக்க மனதுகினியவளுடன் கிடைத்த முதல் பயணத்தில் அவனது பல்சர் சீறிப் பாய்ந்தது. அவன் வேகத்தில் மிரண்டு அவன் முதுகோடு அவள் ஒட்டிக் கொள்ள அவளது செய்கை மனதுக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும் அவள் பயம் புரிந்து கொஞ்சம் வேகம் குறைத்தான். அது இனிமையான பயணமாக இருந்தது இருவருக்கும். அதுவும் அவள் மொத்தமாக அவன் மீது சாய்ந்திருக்க அவள் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்தான்.

 

முதலில் நெல்லையப்பர் கோவிலுக்கு தான் அவளை அழைத்துச் சென்றான். கோவிலுக்கு வெளியே இருந்த பூக்கடையில் மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தவன் உள்ளே அழைத்துச் சென்றான். அர்ச்சகரிடம் கயலின் பெயர் நட்சத்திரம் சொல்லி அவன் அர்ச்சனைக்கு கொடுக்க அவனை வியப்பாக பார்த்தாள்.

 

சாமி கும்பிட்டுட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்தார்கள். “என்னோட நட்சத்திரம் எப்படி உங்களுக்கு தெரியும்?”, என்று கேட்டாள்.

 

“சொல்றேன், உனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு”

 

“என்னன்னு சொல்லுங்க. பிளீஸ். எனக்கு ஆசையா இருக்கு”

 

“கண்டிப்பா சொல்றேன் டி”

 

“இப்பவே சொல்லுங்க”

 

“நான் அந்த சர்பிரைஸ் பத்தி சொன்னதும் நீ சந்தோசத்துல எனக்கு ஏதாவது கொடுக்க நினைக்கலாம். அதுக்கு இந்த இடம் தோது படாது. வா வெளிய போகலாம்”, என்று சொல்லி வெளியே அழைத்து வந்தான்.

 

“ஏதாவது சாப்பிடுறியா கயல்?”

 

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்”, என்று அவள் சொன்னதும் அவளை அழைத்துச் சென்றது படத்துக்கு தான். கயல் வாழ்நாளில் முதல்முறையாக தியேட்டருக்கு வருகிறாள். படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்தது. வார நாள் என்பதால் தியேட்டரில் கூட்டமும் இல்லை.

 

அப்போது அவளைத் திரும்பிப் பார்த்து அமர்ந்தவன் தன்னுடைய சட்டைப் பையில் இருந்து ஒரு பர்சை எடுத்து “ஹேப்பி பேர்த்டே கயல்”, என்று அவளிடம் நீட்டினான்.

 

சந்தோசத்தில் அவள் கண்கள் கலங்கி விட்டது. “உங்க…. உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.

 

“முந்தாநேத்தே உங்க அப்பா கால் பண்ணி சொன்னார். சரி கிஃப்ட் புடிச்சிருக்கான்னு பாரு”, என்று சொன்னதும் ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்தாள். அதில் அதிக சலங்கைகள் வைத்த வெள்ளிக் கொலுசு இருந்தது.

 

“உனக்கு தங்கத்துல நிறைய வாங்கிக் கொடுக்க ஆசை இருக்கு டி. ஆனா அன்னைக்கு உன் காலுல கொலுசு இல்லாததைப் பாத்தேன். அதான் உடனே வாங்கிட்டேன். பிடிச்சிருக்கா?”

 

அதை கையில் எடுத்து அழகு பார்த்தவள் “நான் என் வாழ்க்கைல இது வரைக்கும் கொலுசு போட்டதே இல்லை. இது ரொம்ப அழகா இருக்கு”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.

 

“ஏய் என்ன டி சந்தோஷப் படுவேன்னு பாத்தா அழுற?”, என்று கேட்க அடுத்த நொடி அவன் நெஞ்சில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழுது விட்டாள். அவளை சமாதானப் படுத்துவதற்குள் வெகுவாக திணறிப் போனான்.

 

ஓரளவு சமாதானம் ஆனதும் “கொலுசு பிடிச்சிருக்கு தானே?”, என்று கேட்டான்.

 

“ரொம்ப அழகா இருக்கு. எனக்கு எப்படி பிடிக்காம போகும்? அதுவும் நீங்க வாங்கிக் கொடுத்ததாச்சே?”

 

“அதை இன்னும் அழகாக்க வேண்டாம்? உன் கால்ல போட்டா தான் அந்த கொலுசு இன்னும் அழகா இருக்கும்”, என்று சொன்னவன் அதை வாங்கி அவள் ஒரு காலை எடுத்து தன்னுடைய மடியில் வைத்து போட்டு விட ஆரம்பித்தான். கூச்சத்தில் நெளிந்தாள் கயல்.

 

கொலுசு போடும் சாக்கில் அவளே எதிர்பாராதவாறு குனிந்து அவள் காலில் இதழ் பதிக்க அவன் செய்கையில் அவள் விதிர்த்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

“ஐயோ, என்ன பண்ணுறீங்க?”, என்று அவள் பதற அவனோ அழகாக சிரித்தான்.

 

கொலுசை போட்டு முடித்தவன் அவள் காலை கீழே விட மனதில்லாமல் மடியிலே வைத்திருந்தான். அவன் விரல்கள் நகர்ந்து அந்த கொலுசின் மணியை சுண்டி விட கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருந்தாள் கயல்.

 

சிறிது நேரம் கொலுசைப் பற்றி பேசிக் கொண்டிருக்க படமும் ஆரம்பித்தது. முதல் முறை தியேட்டரில் அவள் பார்க்கும் படம் என்றாலும் அவள் கவனம் ஒரு நொடி கூட படத்தில் செல்ல வில்லை. அவனது அருகாமை மட்டுமே அவள் மனதில் ஓடியது. அதுவும் அவளுக்கே அவனது தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் அவன் கரங்களுடன் கரம் கோர்க்க வேண்டும் என்ற ஆசையும் பெருக்கெடுக்க அதை செய்ய தைரிய மில்லாமல் தடுமாறினாள்.

 

அவனது சிறு தொடுகை தனக்கு அவ்வளவு பெரிய சந்தோஷத்தை அளிக்கும் என்பதை அவள் புரிந்த நொடி அது தான். ஆணின் சிறு தொடுகைக்கு இவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்த அந்த பிரம்மனை எண்ணி பிரம்மித்தாள்.

 

அவளைத் திரும்பி பார்த்தவன் அவள் பார்வை தன் மீது இருக்கவே அவள் பார்வையை படிக்க முயன்றான். அவள் கண்களில் வழிந்த காதலில் அவளுடைய கைகளோடு தன்னுடைய கரத்தை கோர்த்துக் கொண்டவன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் இருவர் மனதும் தடுமாறத் தான் செய்தது.

 

இன்னும் சில நாட்களில் திருமணம் என்ற உரிமையா, அளவுக்கு அதிகமான காதலா ஏதோ ஒன்று இருவர் மனதையும் அசைத்து தான் பார்த்தது.

 

ஸ்கிரீனில் இருந்து நழுவி அவன் பார்வை அவளைத் தழுவ அவளுக்குள் படபடப்பை விதைத்தது. அவள் பக்கமாக நெருங்கி அமர்ந்தவன் “இந்த படத்தை இந்த ஜென்மத்துல நம்மளால மறக்க முடியாதுல்ல?”, என்று கிசுகிசுத்தான்.

 

அவன் சூடான மூச்சுக் காற்று அவள் தோளைத் தொட உடல் சிலிர்த்து கண்களை இறுக மூடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அந்த உரிமையான செய்கை அவன் மனம் வருட அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். பொது இடத்தில் இருக்கிறோம் என்று தெரிந்தாலும் அதிகரித்த காதலாலும் தியேட்டரில் இருந்த இருள் கொடுத்த தைரியத்தாலும் அவன் இதழ்கள் அவள் இதழைத் தேடித் தழுவியது. கரங்களும் சற்று உரிமை எடுத்தது.

 

படம் முடிந்து வெளியே வந்ததும் அவளை சாப்பிட அழைத்துச் சென்றான். அவளுக்கு பிடித்த உணவுகளை கேட்டு தெரிந்து கொண்டதோடு அதை வாங்கிக் கொடுத்து அவளை சாப்பிடவும் வைத்தான். பின் சயின்ஸ் செண்டருக்கு அழைத்துச் சென்று சுற்றிப் பார்த்தார்கள். அப்போது மாலை ஐந்து ஆனதும் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டு அவளையும் அருகில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான். பின் எப்போதும் அவள் வேலை முடிந்து செல்லும் நேரம் அவளை அவளது வீட்டுக்கு முன் இறக்கி விட்டான்.

 

அவர்களைக் கண்ட சமுத்திரம் “உள்ள வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தார்.

 

“இன்னொரு நாள் வரேன் மாமா. அப்புறம் கயல் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தா. அதான் கொண்டு வந்து விட்டேன்”, என்று தயங்காமல் பொய் சொன்னான். காதல் வந்தால் கள்ளமும் வருவது இயல்பு தானே?

 

“உங்க பொண்டாட்டியை கூட்டிட்டு வந்ததுக்கு நீங்க காரணம் சொல்லனுமா மாப்பிள்ளை”, என்று அவர் சொல்ல காதலாக அவளைப் பார்த்தான். அவளும் புன்னகைக்க சந்தோசமாக கிளம்பிச் சென்றான்.

 

தந்தையைக் கண்டு அவள் தயங்கி நின்றாள். அவள் இன்று வேலைக்கு போகாதது அவருக்கு தெரியாதே. அதனால் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்க வைத்தது. அவள் தயக்கத்துடன் நிற்க “பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா. இதையும் ஏதோ ரோட்டுல போறவன் சொல்றதா நினைச்சிக்கோ”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.

 

அவர் சொன்னது கஷ்டமாக இருந்தது. தான் அன்று அப்படி அவரிடம் பேசும் போது அவருக்கும் கஷ்டமாக தானே இருந்திருக்கும் என்று எண்ணமிட்டவள் மனதுக்குள் தந்தையிடம் மன்னிப்பு கேட்டாள். ஆனால் அவருடைய வாழ்த்தால் சிறு சந்தோஷமும் அவளுக்கு வந்தது. கூடவே உள்ளுக்குள் மறைந்திருக்கும் தந்தையின் அன்பும் அவளுக்கு புரிந்தது. மறைந்திருப்பது மறைந்தே இருக்கட்டும் என்று எண்ணிக் கொண்டு உள்ளே சென்றாள்.

 

அவள் உள்ளே வரும் போதே அவளது கொலுசொலி கேட்க திகைத்து திரும்பி பார்த்த வேணி “ஏய் நில்லு டி”, என்றாள்.

 

“என்ன சித்தி?”

 

“என்ன புதுசா கொலுசு சத்தம்? எங்க காலைக் காட்டு”, என்று சொல்ல தயக்கத்துடன் காலைக் காட்டினாள்.

 

“ஏது டி கொலுசு? நீயா வாங்கின? இல்லை மாமா வாங்கிக் கொடுத்தாங்களா?”

 

“இல்லை சித்தி… இது தமிழ்…. வாங்கிக் கொடுத்தது”

 

“ஓ அவனா? சரி சரி போ”, என்று சொல்ல “அப்பாடி தப்பித்தோம்”, என்று எண்ணி அறைக்குள் செல்லப் போனாள்.

 

“ஏய் நில்லு, ஆமா என்ன தலையிலே பூ எல்லாம்? பூவும் அவன் தான் வாங்கிக் கொடுத்தானா?”

 

“ஆமா சித்தி”

 

“அந்த அளவுக்கு வந்துருச்சா? இங்க பாரு டி. கல்யாணம் முடியுற வரைக்கும் கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இரு. அவன் கூட அங்க போனேன், இங்க போனேன்னு தெரிஞ்சது சூடு வச்சிருவேன் பாத்துக்கோ. கழுத்துல தாலின்னு ஒண்ணு கட்டுற வரைக்கும் அடக்கம் ஒடுக்கமா இரு. அதுக்கப்புறம் எக்கெடோ கெட்டு போ. நம்ம குடும்பத்துக்கு ஒழுக்கம் தான் முக்கியம் பாத்துக்கோ”, சொல்ல தலையசைத்து விட்டு அறைக்குள் வந்தாள். வேணி பேசியது கஷ்டமாக இருந்தாலும் அவன்  வாங்கிக் கொடுத்த கொலுசு அவளுக்கு சந்தோசத்தையே கொடுத்தது.

 

காலை ஆட்டி அதன் சத்தத்தை ரசித்தவள் அவனுக்கு அழைத்தாள். அதை எடுத்தவன் “சொல்லுங்க பெர்த்டே பேபி. என்ன பண்ணுறீங்க? இந்த நேரம் கூப்பிட மாட்டீங்களே?”, என்று கேட்டான்.

 

“உங்க கிட்ட பேசணும் போல தோணுச்சு, அதான் கூப்பிட்டேன்”

 

“எனக்கும் தான் டி. அது கூட எனக்கு இன்னும் ஒரு படம் உன் கூட சேந்து உக்காந்து பாக்கணும் போல தோணுது”, என்று கிசுகிசுப்பாக சொல்ல அவன் சொல்ல வருவது புரிந்து உதடு கடித்தாள்.

 

“என்ன டி சைலண்ட் ஆகிட்ட?”

 

“இப்படி பேசினா என்ன சொல்லவாம்?”

 

“ஏதாவது சொல்லு. படத்துக்கு போகலாம்னு சொல்லு”

 

“கல்யாணம் முடியட்டும். தினமும் ஒரு படம் கூட பாக்கலாம்”

 

“கல்யாணம் முடிஞ்ச பிறகு வீட்ல தனிமை கிடைக்கும் போது அங்க எதுக்கு போகனுமாம்?”, என்று அவன் சரசமாக கேட்க அவளுக்கு அடி வயிற்றில் மின்னல் தெறித்தது. அவள் தடுமாற்றத்தை உணர்ந்தவன் வேறு ஏதோ பேசி அவளை திசை திருப்பி விட்டான்.

 

மறுபடியும் “உனக்கு ஒரு போன் வாங்கித் தரட்டா டி?”, என்று கேட்டான்.

 

“ஐயோ வேண்டாம் பா, இன்னைக்கே எனக்கு லேசா திட்டு விழுந்துச்சு”, என்று சொல்ல எதற்கு என்று கேட்டான்.

 

அவள் வேணி பேசியதைச் சொல்ல “யாரு ஒழுக்கத்தைப் பத்தி பேசுறதுன்னு இல்லை”, என்று எண்ணிக் கொண்டவன் அதை அவளிடம் சொல்ல வில்லை. அப்படி இப்படி என்று திருமணமும் நெருங்கியது.

 

திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை வேளையில் தமிழ் வீட்டில் இருந்து அனைவரும் பெண்ணழைக்க கிளம்பினார்கள். இரண்டு வேன் ரெடியாக நிற்க தமிழின் தங்கைகள் மூவரும் சரோஜாவிடம் வரச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவளோ அசையாமல் அமர்ந்திருந்தாள்.

 

“நீ செய்யுறது ரொம்ப தப்பு மா. தயவு செஞ்சு ஊர்க்காரங்க முன்னாடி, சம்பந்தகாரங்க முன்னாடி குடும்ப மானத்தை வாங்காத. நீ வரலைன்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க?”, என்று கேட்டாள் தேவி.

 

மற்றவர்களும் கேட்க சரோஜா பதில் சொல்ல வில்லை. மூன்று மருமகன்கள் கூட சரோஜாவுக்கு மன நிலை சரியில்லையோ என்று தான் எண்ணமிட்டார்கள். என்ன முயன்றும் அவளை கிளப்ப முடியாததால் மற்றவர்கள் கிளம்பினார்கள்.

 

வைஷு, தேவகி, மீனாட்சி, தமிழின் மூன்று தங்கைகள், அவர்களது குடும்பம் என அனைவரும் கிளம்பினார்கள். தமிழும் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக கிளம்பி நின்றான்.

 

அனைவரும் வேனில் ஏறி அமர தமிழும் சந்தோஷமாக அமர்ந்தான். மூன்று மச்சினன்களும் சேகரும் சேர்ந்து தமிழை கிண்டல் செய்து கொண்டு வர வேனே கலகலத்தது. அந்த கலகலப்பில் சரோஜா வரவில்லை என்ற கவலையே யாருக்கும் இல்லை.

 

இங்கே தாயின் பட்டுப் புடவை அணிந்து தாயின் நகைகளை அணிந்து தயாராக இருந்தாள் கயல்விழி. அக்கம் பக்கத்திலிருக்கும் பெண்கள் தான் அவளை தயார் செய்தார்கள். வேணியும் சரி சித்ராவும் சரி அவள் பக்கத்தில் கூட வரவில்லை. அவர்களை அவள் எதிர் பார்க்கவே இல்லை.

 

கயல் உற்சாகமாக இருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் இந்த கொடுமையான வீட்டில் இருந்து கிளம்பப் போகிறாளே? அவளது தமிழிடம் செல்லப் போகிறாள்? இனி அவளை கொடுமை படுத்துபவர்கள் யாரும் இல்லை. என்ன நடந்தாலும் இனி அவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி அவள் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!