Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழி மொழி பேசு

அத்தியாயம் 8_ 3 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

இப்படிச் சொல்பவனை அவளால் தான் என்ன சொல்ல முடியும்? ஏன் அவளுக்கு என்று இப்படி ஒரு நிலைமை? அவள் மேல் அவனுக்கு இருந்த அதிகப் படியான அன்பே அவனை அப்படி பேச வைக்கிறது என்று அவளுக்கு புரிந்தது. 

அவள் அவனையே தவிப்பாக பார்க்க “நீ எனக்கு வேண்டாம் டி. நீ வேண்டவே வேண்டாம். நீ நான் நினைச்ச மாதிரி இல்லை. ஏன் இப்படி மாறிப் போன? நீ ஏன் நல்லவளா இல்லாம போன?”, என்று தளர்வாக கேட்டான் விக்ரம். 



Advertisement

“நீங்க நினைக்கிறது எதுவுமே உண்மை இல்லை விக்ரம். நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க”

“நம்ப மாட்டேன். உன்னை நம்பவே மாட்டேன். நீ ஒரு பொய். உன் உடம்பெல்லாம் சுயநலம். உன்னைப் பாக்கவே எனக்கு புடிக்கலை”

Advertisement

Advertisement

“சரி நான் இப்ப என்ன செய்யனும்? இங்க இருந்து போகனுமா? நான் போயிட்டா நீங்க சந்தோஷமா இருப்பீங்களா?”

“ஏன் என்னோட அம்மா அப்பா எல்லாரும் வருத்த படவா?”

Advertisement

“இப்ப நான் என்ன தான் செய்யணும்? எனக்கு ஒண்ணுமே புரியலை. கால்ல வேணும்னாலும் விழுறேன். என்னை மன்னிச்சுருங்க”

“மன்னிக்கிற மாதிரி தப்பு நீ செய்யலை ரேகா. கண்டிப்பா உன்னை இந்த ஜென்மத்துல என்னால மன்னிக்க முடியாது. ஒரு வேளை அடுத்தவங்களுக்காக நான் உன் கூட வாழ ஆரம்பிச்சாலும் நான் உன்னை நெருங்குற ஒவ்வொரு நிமிசமும் எனக்கு உன்னோட துரோகம் தான் நினைவுக்கு வரும். இது தான் நமக்கு கடைசி வரை விதிச்சது. உன்னால நானும் என்னால நீயும் வேதனைப் படணும்னு தான் நம்ம தலைல எழுதிருக்கு. சரி எங்க மாமா வீட்டுக்கு இப்ப விருந்துக்கு போகணும். சீக்கிரம் கிளம்பு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றான். 

“உங்க மனசு கண்டிப்பா மாறும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு”, என்று எண்ணிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தாள். அவள் கிளம்பி முடித்த பின்னர் தான் அறைக்குள் வந்த விக்ரம் கிளம்ப ஆரம்பித்தான். அவள் உடை மாற்றுவாள் என்று எண்ணி வெளியே இருந்து கண்ணியம் காத்த அவனை எண்ணி மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது ரேகாவுக்கு. 

இவர்கள் கிளம்பி கீழே சென்ற போது அனைவரும் எழுந்திருந்தார்கள். காயத்ரி ரேகா முகத்தை கூர்ந்து கவனித்தாள். முதலிரவு கொண்டாடிய பெண்ணிடம் இருக்க வேண்டிய எந்த அறிகுறியும் அவளிடம் இல்லாதது அவளை புருவம் உயர்த்த வைத்தது. 

அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்கள் ரேகாவும் விக்ரமும்.  விக்ரம் தான் காரை ஓட்டினான். அவள் அவன் அருகே அமர்ந்திருந்தாள். ஒன்றரை மணி நேர பயணம் புது மணமக்களுக்கு அமைதியாகவே கழிந்தது. அங்கு சென்றதும் விக்ரமின் மாமா வீட்டில் அவர்களை அன்புடன் வரவேற்று கவனித்தார்கள். 

அதனால் அங்கே நேரம் நன்றாக சென்றது. இவர்களும் காதலித்த ஜோடிகள் போல அவர்கள் முன்னிலையில் நடந்து கொண்டார்கள். விக்ரமின் மாமா பெண் வைஷாலி ரேகாவுடன் தோழி போல பழகினாள். அவள் விக்ரமை கிண்டல் அடிக்கும் போது ரேகாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள். பின் மஞ்சு ஊருக்கு கிளம்புவதால் அவர்களிடம் சொல்லி விட்டு மனமில்லாமல் அங்கிருந்து திரும்பி வந்து விட்டார்கள். 

திரும்பி வரும் போது “விக்ரம் உங்க அத்தை பொண்ணு ரொம்ப அழகுள்ள?”, என்று கேட்டாள் ரேகா. 

“உன்னை விட அழகில்லை”, என்று மனதில் எண்ணிய விக்ரம் “ம்ம்”, என்று மட்டும் சொன்னான். 

“நீங்க பேசாம அவளையே கல்யாணம் பண்ணிருக்கலாம். அப்புறம் காயத்ரி அண்ணி தங்கையையும் உங்களுக்கு கல்யாணம் பண்ணுறதா இருந்ததாம். அவளை கல்யாணத்துல பாத்தேன். ரொம்ப அழகா இருந்தா. ரெண்டு அழகான முறைப் பொண்ணுங்களை விட்டுட்டு கடைசில என் கிட்ட தான் நீங்க மாட்டிக்கிட்டீங்க”, என்று சொல்லி சிரித்தாள் ரேகா. 

அவள் அப்படிச் சொன்னதும் அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வையைக் கண்ட ரேகாவுக்கு அவன் கட்டாயம் மனது கஷ்டப் படுவது போல பேசப் போகிறான் என்று புரிந்தது. அதை தாங்கிக் கொள்ள தயாரானாள்.  

“நிமிசத்துக்கு நிமிஷம் ஆளை மாத்துறது உனக்கு வேணும்னா பழக்கமா இருக்கலாம்., ஆனா நான் அப்படி இலை. எத்தனை பேரை என் முன்னாடி வந்து நிறுத்தினாலும் நான் உன்னை தான் தேர்ந்தெடுத்துருப்பேன். ஏன்னா நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டது உன்னை மட்டும் தான். நீ கெட்டவன்னு தெரிஞ்சும் உன்னைக் கட்டிருக்கேனே? அதுலயே என் குணம் உனக்கு தெரிஞ்சிருக்குமே”, என்று ஆழ்ந்த குரலில் சொன்னான். 

அவன் சொன்ன விஷயம் சந்தோஷத்தை கொடுத்தாலும் சொன்ன முறை வருத்தத்தைக் கொடுத்தது. நம்முடைய நாட்டில் பல கணவன் மனைவிகள் காதல் என்ற ஒன்று இல்லாமலே கடமைக்காக வாழ்கின்றனர். அவர்களுக்கும் காதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கும். ஆனால் கடைசி வரை அது கிடைக்க வில்லை என்றால் தங்களின் மனதை சமாதான படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் ரேகா நிலை அது அல்ல. திகட்ட திகட்ட அவனுடைய காதல் அவ மேல் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாத கொடுமை ரேகாவுக்கு வேதனையாக இருந்தது. 

ஒரு மனிதன் அகோரப் பசியில் இருக்கும் போது அவன் முன் தலை வாழை இலை போட்டு விதவிதமான உணவை பரிமாறி விட்டு சாப்பிடாதே என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலை தான் ரேகாவுக்கு. 

அவன் அப்படிச் சொன்ன பின் இருவரிடத்திலும் எந்த பேச்சு வார்த்தையுமில்லை. வீட்டுக்கு வரும் வரை அவன் புறம் அவள் திரும்பவே இல்லை. 

அவர்கள் வீட்டுக்கு வரும் போது மஞ்சுவும் சுதாகரும் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீடே பரபரப்பாக இருந்தது. மஞ்சு கிளம்பிக் கொண்டிருக்க காயத்ரியும் சாரதாவும் அவர்களுக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். 

ரேகா சென்றதும் அஞ்சலி அவளுடன் ஒட்டிக் கொண்டாள். அதன் பின் அஞ்சலியைக் கவனிப்பதும் அவளுக்கு உணவு ஊட்டுவதும் அவளை கிளப்புவதும் என ரேகாவுக்கு நேரம் போனது. அதை சந்தோஷமாக செய்தாள் ரேகா. அவர்கள் கிளம்பும் போது அவர்களை டெல்லிக்கு அழைத்தார்கள் மஞ்சுவும் சுதாகரும். 

“விக்ரம், ரேகாவை அழைச்சிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரணும்”, என்று அழைத்தான் சுதாகர்.

“சரி மாமா”, என்றான் விக்ரம். 

“ஆமா டா தம்பி, ரெண்டு பேரும் சும்மா ஒரு வாரம் தங்குற மாதிரி வரக் கூடாது. ஒரு மாசமாவது அங்க இருக்கணும்”, என்று விக்ரமிடம் சொன்ன மஞ்சு ரேகா புறம் திரும்பி “ரேகா, அவன் வேலைல மறந்தாலும் நீ அவனை நச்சரிச்சு அங்க கிளம்பி வந்துரனும் சரியா?”, என்றாள். 

“சரிங்க அண்ணி”, என்று சிரித்த ரேகா விக்ரமைக் காண அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் பார்வையை காயத்ரி பார்த்து விட்டாள். அது காதல் பார்வையாக இல்லாமல் போனதில் அவள் மனதில் குழப்ப மேகங்கள் சூழ்ந்தன.

சிறிது நேரத்தில் மஞ்சு, சுதாகர், அஞ்சலி கிளம்பிச் சென்றார்கள். ஆதியும் விக்ரமும் தான் அவர்களை வழி அனுப்ப சென்றிருந்தார்கள். 

மஞ்சுவை பிரிவது ஒரு உண்மையான தோழியை பிரிவது போல ரேகாவுக்கு கஷ்டமாக இருந்தது. இரண்டே நாளில் அவள் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்த மஞ்சுவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் ரேகா. மஞ்சு மட்டும் அல்ல அந்த வீட்டில் இருக்கும் அனைவருமே அவளுக்கு பல ஜென்ம பழக்கம் உள்ளவர்கள் போன்று தான் அவளுடன் பழகினார்கள். 

இத்தனை சொந்தத்தை தந்த விக்ரம் மீது அவளது காதல் இன்னும் கூடியது. அவளது அன்புக்காக ஏங்கினாள் ரேகா. 

அதன் பின் நாட்கள் அழகாக கடந்தன. சேதுபதி, ஆதித்யா, விக்ரம் மூவரும் கட்டுமானத் தொழில் செய்கிறார்கள் என்பதால் அவர்கள் அனைவருக்கும் வேலை குவிந்திருந்தது. அதனால் ஆதித்யா அவனிடம் ஹனிமூன் போகச் சொன்ன போது “கொஞ்ச நாள் போகட்டும் அண்ணா”, என்று சொல்லி விட்டான் விக்ரம். 

ரேகா ஆஃபிஸ்க்கு பத்து நாள் லீவ் சொல்லியிருந்ததால் சாரதாவுடனும் காயத்ரியுடனும் நேரத்தை செலவிட்டாள். 

காலையில் போகும் விக்ரம் இரவு தான் வீட்டுக்கு வருவான். அப்போது அவள் ஏதாவது சாதாரணமாக கேட்டால் கூட கொட்டும் தேள் போல் அவளை வார்த்தையால் கொட்டினான். அதனால் முடிந்த அளவு அவனிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டாள் ரேகா. 

இவர்களுக்குள் எதுவோ சரியில்லை என்பதை முதலில் கண்டு பிடித்தது காயத்ரி தான். ரேகாவின் பார்வை ஆர்வமாக விக்ரம் மீது படிவதும், அதற்கு விக்ரம் பதிலுக்கு காதல் பார்வையை கொடுக்காமல் அவள் பார்வையை தவிர்ப்பதையும் கண்டு கொண்டாள். 

என்ன பிரச்சனை என்று ரேகாவிடம் கேட்க சங்கடப் பட்டு ஆதியிடம் சொன்னாள். அவனுக்கும் விக்ரம் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. இருந்தாலும் “இது அவங்க பெர்சனல் காயு. நாம நம்ம இஷ்டத்துக்கு மூக்கை நுழைக்க கூடாது. கொஞ்ச நாள் பாப்போம். அப்பவும் சரியாகலைன்னா நான் விக்ரம் கிட்ட பேசுறேன்’, என்றான் ஆதி. 

ஆனால் ஆதித்யா கவனித்த வகையில் விக்ரம் எதற்காகவோ ஓடிக் கொண்டே இருப்பது போல இருந்தது. புதிதாக திருமணம் ஆனவன் போல இல்லாமல் வேலை வேலை என்று கிடந்தான். அவன் அப்படி இருப்பதைப் பார்த்து திகைத்தான் ஆதி. 

அவன் வயதைக் கடந்து வந்தவன் தானே? அதனால் தம்பியிடம்  ஏதோவோ சரியில்லை என்று அவனுக்கு புரிந்தது. தன்னை அண்ணன் வாட்ச் செய்கிறான் என்று தெரியாமலே ரேகாவிடம் இருந்தும் அவனுடைய இளமை உணர்வுகளிடம் இருந்தும் தப்பித்துக் கொண்டிருந்தான் விக்ரம். 

சில நேரம் இல்லை பல நேரம் அவளால், அவள் ஏற்படுத்தும் உணர்வுகளால் தவித்துப் போனான் விக்ரம். அவனது வயதுக்கான தேவைகள் அதிகமாகி அவளை நாட வேண்டும் என்ற ஆவல் கொழுந்து விட்டு எரியும் போது தன்னையே வெறுத்தான். மனதுக்கு பிடித்த மனைவி அருகில் அவள் இருக்கும் போது அவளை அடைய முடியாமல் அவன் ஆசைகளை நிறைவேற்ற முடியாத நிலையை எண்ணிக் கோபமும் எழுந்தது. 

திருமணமே ஆக வில்லை என்றால் அது வேறு. ஆனால் உரிமையாய் உறவாய் உயிராய் எண்ணிய அவள் அருகில் இருக்கும் போது, அதுவும் சில நேரம் அவள் காதல் பார்வை பார்க்கும் போது அவளை அப்படியே எடுத்துக் கொள்ளச் சொல்லி அவன் மனது மூளை சொல்லும். சில நேரம் அவள் உடை சிறிது விலகியிருக்கும். அப்போதெல்லாம் அவன் உணர்வுகள் அவனை கொன்று தின்று கொண்டிருந்தன. அதனால் தான் வேலை வேலை என்று திரிந்தான். 

இப்படியே ஐந்து நாட்கள் கடக்க ஒரு நாள் கட்டிலில் அமர்ந்து தன்னுடைய போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். அப்போது துவைத்து வைத்த துணிகளை எடுத்து வந்து கட்டிலில் போட்டு மடிக்க ஆரம்பித்த ரேகா “என்னங்க மஞ்சு அண்ணி டெல்லிக்கு விருந்துக்கு வரச் சொன்னாங்க. சுதாகர் அண்ணாவோட அம்மாவும் அப்பாவும் கூட வரச் சொன்னாங்க. நேத்து அண்ணி போன்ல எப்ப வரீங்கன்னு வேற கேட்டாங்க. அவங்க கிட்ட என்ன சொல்லட்டும்? எனக்கு அஞ்சலியை பாக்கணும் போல இருக்கு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள். 

“போகலாம்”, என்று சொல்லிக் கொண்டே அவளைத் திரும்பி பார்த்தவன் திகைத்தான். அவளது சேலை சற்று விலகி இருக்க அதை அறியாமல் துணி மடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள். 

அவள் இருந்த நிலையைக் கண்டு அவன் உணர்வுகள் லேசாக தலை தூக்க துவங்க அடுத்த நொடி அங்கிருந்து எழுந்து கொண்டான். “எப்ப போகலாங்க?”, என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க அவள் கேள்விக்கு பதில் சொல்லாமலே அவன் வெளியே சென்று விட்டான். 

பதில் சொல்லாமல் சென்ற அவனது இந்தக் செய்கை வேதனை அளித்தது ரேகாவுக்கு. இவன் மனது எப்போது தான் மாறுமோ என்று எண்ணி சோர்ந்து போனாள். 

வேகமாக மொட்டை மாடிக்குச் சென்றவனுக்கோ எதில் இருந்தோ தப்பி வந்த விடுதலை உணர்வு தான் வந்தக்து. மோகத்தைக் கொன்று விடு. அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு என்ற பாரதியின் வரிகளுக்கான அர்த்தம் தெளிவாக இப்போது புரிந்தது அவனுக்கு.

 

வேகமாக மூச்சுகளை இழுத்து விட்டு தன்னை சமநிலை படுத்தினான். பின் நிலவைப் பார்த்த படி நின்றான். அப்போது அவன் தோளில் ஒரு கரம் விழ திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். 

விழி பேசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!