Skip to content
Post Views: 3,174
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 17
இரவு ஒன்பதரைக்குக் கூட்டம் குறைந்தது. இரண்டு பக்க நெருங்கிய உறவினர்கள் மட்டும்தான் மண்டபத்தில் இருந்தனர். எல்லோரும் சேர்ந்து சாப்பிட சென்றனர். ஆதி ரஞ்சனாவோடு ஆருவும், சஞ்சனாவும் சாப்பிட செல்ல… மீரா அவர்களோடு செல்லாமல், அர்ஜுனின் பெரியம்மாவின் அருகே சென்று அமர்ந்தாள்.
அப்போது அவளைப் பார்த்த வித்யா, “மீரா சாப்பிடுடா… உன்னைக் கவனிக்கவே முடியலை…” என்று மீராவிடம் அக்கறையாகச் சொல்ல… அர்ஜுனின் பெரியம்மா “அதுதான் உன் பையன் அவளை மட்டும் தான கவனிக்கிறான், அது பத்தாதா…” என்று மனதில் நினைத்தவர், “நான் பார்த்துகிறேன் வித்யா, நீ கவலைபடாதே.” என்றார். வித்யாவும் சரி என்று அங்கிருந்து சென்றார்.
அப்போது அர்ஜுன் அங்கே வந்தான். வந்தவன் எதிரில் இருந்த இருக்கைக்குச் செல்ல… அவனை அழைத்த பெரியம்மா, “அர்ஜுன்… இங்க பக்கம் உட்காரு” என்று அவருக்கு அடுத்து இருந்த இடத்தைக் காட்ட…. மீரா அவருக்கு அந்தப் பக்கம் அமர்ந்து இருந்தாள்.
“வேண்டாம்… நான் எதிர்லையே உட்கார்த்துகிறேன்.” அர்ஜுன் சொல்ல…
“ஏன் டா நடிக்கிற? நான் உங்க அம்மாட்ட சொல்லிடுவேன்னு நினைக்கிறியா, நான் சொல்ல மாட்டேன்.” பெரியம்மா உருக…
“அதுக்கு இல்லை பெரியம்மா, இங்க உட்கார்ந்தா மீராவை சரியா பார்க்க முடியாது, எதிர்லைனா நல்லா பார்க்கலாம்.” என்றதும், பெரியம்மாவின் முகம் போன போக்கை நான் சொல்லவும் வேண்டுமா…
அவர்கள் பேசியதை கேட்ட மீரா கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள். அர்ஜுன், சூர்யாவோடு எதிர்வரிசையில் அமர்ந்தான். விதவிதமான உணவு வகைகள் வர, சுவையும் அருமையாக இருந்தது. எல்லோரும் பசியில் இருந்ததால் நன்றாகச் சாப்பிட்டனர். அர்ஜுன் மீரா ஏன் ஆருவுடன் இருக்காமல் தனியாக இருக்கிறாள் என்று நினைத்தான்.
சாப்பிட்டதும் வித்யாவும், கணேசனும் உறவினர்களை அழைத்துக் கொண்டு, தாங்கள் வந்த பஸ்சில் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்குக் கிளம்பினார்கள். ஆதியையும், ரஞ்சனாவையும் வைத்து இன்னும் சில போட்டோஸ் எடுக்க வேண்டியது இருந்ததால் அர்ஜுனும், ஆருவும் அவர்களோடு இருக்க… வித்யா மீராவையும் அவர்களோடு காரில் வர சொல்லிவிட்டு மற்றவர்களுடன் கிளம்பினார். சூர்யாவும் அர்ஜுனோடு இருந்தான்.
மாடியில் இருந்த ஏசி ரூமில் ஆதியையும், ரஞ்சனாவையும் வைத்து போட்டோ எடுத்தனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும் என்பதால் அர்ஜுன், ஆரு, மீரா மூவரும் வெளியே வந்துவிட்டனர். சஞ்சனா மட்டும் அங்கேயே இருந்தாள்.
சூர்யா பக்கத்தில் இருந்த ஏசி அறையில் இருந்தான். இவர்களும் அங்கே சென்றனர். அர்ஜுன் மீராவோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைபட்டான். அதனால் சூர்யாவிடம் தன் மொபைலில் அவர்களைப் போட்டோ எடுக்கச் சொல்லியவன், மீராவோடு அங்கிருந்த சோபாவில் அமர, சூர்யா அவர்களைப் போட்டோ எடுத்தான்.
ஆதியும் ரஞ்சனாவும் போட்டோ எடுத்து முடித்ததும், எல்லோரும் வீட்டுக்கு கிளம்பினர். ரஞ்சனா இரவு மண்டபத்திலேயே தங்கிக் கொண்டாள்.
இவர்கள் வீட்டுக்குச் சென்ற போது… வித்யாவை தவிர மற்ற எல்லோரும் தூங்கி இருந்தனர். வித்யா அடுத்த நாளுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் வந்தது ஆதியும், சூர்யாவும் மேலே ஏறி அவர்கள் அறைக்குச் சென்றனர்.
“என்னோட ரூம்க்கு வந்து நகை எல்லாம் கழட்டி குடுத்திட்டு போ.” வித்யா ஆருவிடம் சொல்ல… அவள் வித்யாவோடு சென்றாள்.
மீரா மேலே தங்கி இருந்த அறைக்குச் சென்றவள், கதவை சாற்ற முயல, அர்ஜுன் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை சாற்றினான்.
“யாரவது வரப்போறாங்க அர்ஜுன்.” மீரா பயப்பட… “டூ மினிட்ஸ்…” என்றவன். மீராவின் இடையில் கைகொடுத்து இழுத்து அனைத்துக் கொண்டான். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, “ரொம்ப அழகா இருக்க மீரா… நான் உனக்குப் பொருத்தமா இருக்கேனா?” அர்ஜுன் கேட்க…
மீரா அவன் முகத்தை நிமிர்த்தி, அவன் இதழில் முத்தம் பதித்து, “நம்ம ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி தெரியுமா…” என்றாள். அர்ஜுன் மீராவை போல் நிறம் இல்லை… அதற்காகக் கருப்பும் இல்லை… கோதுமை நிறம். அதனால் வந்த சந்தேகம்.
அர்ஜுன் மீராவின் நெற்றி, கண்ணம், இதழ் என்று மாறி மாறி முத்தம் கொடுக்க… மீரா “போதும் அர்ஜுன், போங்க ஆரு வந்துடுவா.” என்றாள்.
அர்ஜுனுக்குப் போகவே இஷ்டம் இல்லை. ஆனால் வேறு வழி இல்லாததால், மீராவை ஒரு முறை இறுக்கி அணைத்துவிட்டு, பின் விலகி கதவை திறந்து கொண்டு அவன் அறைக்குச் சென்றான்.
அர்ஜுன் சென்றதும் ஆரு வந்துவிட்டாள். மீராவை பார்த்து, “நீ இன்னுமா புடவை மாத்தலை.” என்று கேட்க… இன்னும் அர்ஜுனின் முத்தத்தில் இருந்து வெளிவராத மீரா “ம்ம்...மாத்தணும்…” என முனங்கியபடி உடை மாற்ற சென்றாள்.
மறுநாள் காலை எல்லோருக்கும் மிகவும் பரபரப்பாக இருந்தது. மீராவும், ஆருவும் இன்றும் புடவை தான் கட்டி கொண்டனர். காலை ஆறு – எழு முகுர்த்தம் என்பதால்…. எல்லோரும் விடியற்காலையிலேயே எழுந்து தயார் ஆகி மண்டபத்திற்குச் சென்றனர். எல்லாச் சடங்குகளும் முடிந்து, ஆதித்யா அக்னி சாட்சியாக ரஞ்சனாவை தன் மனைவி ஆக்கிகொண்டான்.
மீரா இன்றும் அர்ஜுனின் பெரியம்மாவோடு கீழேயே அமர்ந்து கொண்டாள், மேடைக்குச் செல்லவில்லை. சூர்யாவும் மீராவிற்கு அடுத்து அமர்ந்திருந்தான். மீரா அர்ஜுனையே பார்த்து கொண்டிருந்தாள். அவன் ஆதியையும் அவன் அண்ணியையும் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தான்.
அர்ஜுனின் முகம் வெகு களையாக இருக்கும். அதுவும் அவன் சிரிக்கும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். மீராவிற்கு அவன் இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியா சென்று விடுவான் என்பது நியாபகம் வர… அவனது பிரிவை நினைத்துக் கண் கலங்கினாள். இருக்கும் இடம் அறிந்து கண்களைத் துடைத்தவள், சூர்யாவை பார்க்க அவனும் மேடையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கண்களில் மின்னும் ஒளியை வைத்து, இவன் யாரை இப்படிப் பார்கிறான் என்று மீரா மேடையைப் பார்த்த போது… அங்கே ஆரு தான் இருந்தாள். அவள் போகும் பக்கம் எல்லாம் சூர்யாவின் பார்வையும் போக, மீராவிற்கு உறுதியாகத் தெரிந்தது, அவன் ஆருவை தான் பார்கிறான் என்று.
சஞ்சனா இன்று கொஞ்சம் அடங்கித் தான் இருந்தாள். அவள் அர்ஜுனை வழிக்குக் கொண்டு வருவதை விட… வீட்டுப் பெரியவர்களைக் காக்கா பிடித்தால், தான் நினைத்த காரியம் சாதிக்கலாம் என்று அவள் அக்கா கல்யாணத்தில் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தாள்.
காலை பத்து மணிக்கு வந்த விருந்தினர் எல்லாம் சென்றுவிட, இரண்டு பக்க நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் தான் மண்டபத்தில் இருந்தனர். புதுமணத் தம்பதிகளை அழைத்துக் கொண்டு ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றனர். அந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற பெரிய சிவன் கோவில்களில் ஒன்றாகும்.
ஆதியும், ரஞ்சனாவும் காரில் வர… அவர்களோடு ஆருவும், சஞ்சனாவும் சென்றனர். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வந்த பஸ்சில் ஏற…. மீராவும் சென்று பஸ்சில் ஏறினாள். மீரா ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் முகம் மிகவும் வாடி இருந்தது. ஆரு மீராவுடன் இல்லாததால் தான் மீரா அப்படி இருகிறாளோ என்று நினைத்து அர்ஜுன் கவலைப்பட்டான்.
கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ததும், ஆளுக்கு ஒருபுறம் சென்றனர். பெரியவர்கள் எல்லோரும் ஒரு புறம் சென்று அமர்ந்தனர். எப்படியும் மதிய உணவுக்கு மண்டபம் சென்றால் போதும் என்பதால் கோவிலிலேயே அமர்ந்துவிட்டனர். குழந்தைகள் அங்கே ஓடி பிடித்து விளையாட… இளையவர்கள் எல்லோரும் கோவிலை சுற்றி நடந்தனர்.
ஆதி ரஞ்சனாவோடு சஞ்சனாவும் ஆதியின் நண்பர்களும் செல்ல… அர்ஜுன், மீரா, ஆரு மற்றும் சூர்யா அவர்கள் பின்னே மெதுவாக நடந்தனர். அர்ஜுன் அமைதியாக வந்தான். அதைக் கவனித்த, ஆரு “என்ன ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க….
“நீ அண்ணி வந்ததும், மீராவை கழட்டிவிட்டுட்ட இல்ல…” என்றான். அவன் சொன்னதைக் கேட்ட மற்றவர்கள் திகைத்தனர். மீரா அர்ஜுனை பார்த்து, “எதுக்கு இப்படிப் பேசுறீங்க?” என்று கேட்க… ஆருவிற்கு அழுகை வந்துவிட்டது, அவள் அங்கயே ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
எல்லோரும் சென்று ஆருவின் அருகே அமர… மீரா ஆருவை சமாதானம் செய்தாள். அர்ஜுன் அப்போதும் அமைதியாக இருந்தான். அவனைப் பார்த்த சூர்யா, “அர்ஜுன்… நீ ஓவரா போற… அன்னைக்கும் இப்படித்தான் நீ அவளை வம்பிழுத்த…” என்று கோபபட… மீராவிற்கு இப்போது உறுதியாகச் சூர்யா ஆருவை விரும்புகிறான் என்று புரிந்தது. ஆனால் கோபமாக இருந்த அர்ஜுனும், ஆருவும் இதைப் பற்றி யோசிக்கவில்லை.
“நானும் நேத்துல இருந்து பார்கிறேன், இவ அண்ணியோடவே இருக்கா… மீரா தனியாவே இருக்கா… மீராவையும் அவளோட வச்சிக்கலாம் இல்லை.” அர்ஜுன் கேட்க…
“நான் ஒன்னும் அவளைத் தனியா விடலை, அவதான் அந்தச் சஞ்சனா எதோ சொல்லிட்டான்னு விலகி விலகி போனா… நான் என்ன பண்றது?” ஆரு அழுது கொண்டே சொல்ல….
மீரா அர்ஜுனை பார்த்து, “உங்களுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படிப் பேசுறீங்க?” என்று கேட்க… “நீ ஏன் டல்லா இருக்க… உன் முகம் ரொம்ப வாடி இருந்தது. நீ தனியாவே இருந்த… ஒருவேளை ஆருனால தான் அப்படி இருக்கியோன்னு நினைச்சேன்.” என்றான் அர்ஜுன்.
“நான் ரொம்ப வருஷமாதனியா தான் அர்ஜுன் இருக்கேன், இப்ப புதுசா என்ன? நான் அதுக்கெல்லாம் பீல் பண்ணுவேனா… ஆரு என்னைக் கூப்பிட தான் செஞ்சா…. நான் தான் விலகி இருந்தேன். அவ அண்ணன் கல்யாணம் அவதான் முன்னாடி நிற்கணும்.”
“நான் அதுக்காகப் பீல் பண்ணலை. நீங்க இன்னும் கொஞ்ச நாள்ல ஆஸ்திரேலியா போறத பத்தி நினைச்சு தான் உம்னு இருந்தேன் போதுமா? தெரியாம எதாவது உளறக் கூடாது. ஆருட்ட சாரி கேளுங்க.” மீரா அர்ஜுனை அதட்ட… அர்ஜுன் ஆருவை பார்த்து, “சாரி ஆரு” என்றான். “உன்னோட சாரிய தூக்கி குப்பை தொட்டியில போடு…”ஆரு கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.
எல்லோரும் கோவிலில் இருந்து மண்டபம் சென்றனர். அங்கே மதிய விருந்து தயாராக இருந்தது. அர்ஜுன் ஆருவிடம் சென்று பேச… ஆரு அவனோடு பேச தயாராகவே இல்லை.
எல்லோரும் சாப்பிட செல்ல… அர்ஜுனும் சென்று சூர்யா அருகில் அமர்ந்தான். அவன் எதிரில் மீரா அமர்ந்து இருந்தாள். அர்ஜுன் ஆரு முகத்தைப் பார்க்க… அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அர்ஜுன் சாப்பிடவேயில்லை சூர்யா சொல்லியும் கேட்கவில்லை. அவனைப் பார்த்து மீராவும் சாப்பிடவில்லை… இருவரும் இலையை மூடிவிட்டு எழுந்து சென்றனர்.
புதுமணத் தம்பதிகள் அன்று பெண் வீட்டிலேயே தங்குவதால் மற்றவர்கள் எல்லோரும் அவர்களைக் பெண் வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்குக் கிளம்பினர். ஆதியும், ரஞ்சனாவும் நான்கு நாட்கள் கழித்துச் சென்னைக்கு வருதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. எல்லோரும் புதுமணத் தம்பதிகளிடம் விடைபெற்றுக் காரில் சென்று ஏறினர்.
பஸ்ஸில் மீராவும் ஆருவும் ஒரு சீட்டிலும், அர்ஜுனும் சூர்யாவும் ஒரு சீட்டிலும் அமர்ந்து இருந்தனர். மீரா அருவிடம், “தெரியாம சொல்லிட்டாங்க ஆரு, ப்ளீஸ்… அவங்ககிட்ட பேசு… என்னால தான இப்படி ஆச்சு சாரி.” என்று எவ்வளவோ சொல்லியும், ஆரு அசையவே இல்லை… சிறிது நேரம் கழித்து மீராவும் அமைதியாக இருந்தாள்.
எல்லோரும் இரவு உணவு சாப்பிட இறங்க… அர்ஜுன் சீட்டில் படுத்துக் கொண்டு இறங்கவே இல்லை… மீரா வித்யாவிடம் எனக்குப் பசிக்கலை என்று சொல்லிவிட்டு அவளும் பஸ்சிலேயே இருந்துவிட்டாள்.
மீராவிற்கு உண்மையில் ரொம்பப் பசி, அவள் மதியமும் சாப்பிடாததால் பசி வயிற்றைக் கிள்ளியது. அதனால் ஒரு பாட்டில் தண்ணிர் முழுவதையும் குடித்தாள். சூர்யா அதைப் பார்த்துக் கொண்டே பஸ்சில் இருந்து இறங்கினான்.
ஆரு அங்கிருந்த ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வர… சூர்யா அவளிடம் சென்றான்.
“உன் அண்ணன் செஞ்சது தப்புதான். அதுக்காக வெளிய வந்த இடத்தில இப்படித் தான் பண்ணுவியா? அவன் மதியமும் சாப்பிடலை, இப்பவும் சாப்பிடலை. அதனால மீராவும் சாப்பிடலை. உங்க அண்ணன், தங்கை சண்டைக்கு மீராதான் கிடைச்சாளா…. பாவம் அவளை ஏன் ரெண்டு பேரும் வாட்றீங்க? அவள் பசிக்கு தண்ணிய குடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கா.”
“அவன் மட்டும் அப்படிப் பேசலாமா?”
“நானும் அவன் செஞ்சது தப்புன்னு தான் சொல்றேன். அவனுக்கு மீராவுக்கு ஆதரவா யாரும் இல்லைன்னு டென்ஷன், இப்ப அவளை விட்டுட்டு ஆஸ்திரேலியா போறோம்னு டென்ஷன். அதனால எதோ பேசிட்டான் விடு.” என்றதும், ஆரு பஸ்ஸை நோக்கி சென்றாள்.
ஆரு சென்று அர்ஜுனை எழுப்பி, “சாப்பிட வா…” என்று சொல்ல…
“பரவாயில்லை உன்னைப் பேசினதுக்கு நான் தண்டனைன்னு நினைச்சிக்கிறேன், இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடாம இருந்துக்கிறேன்.” அர்ஜுன் சொல்ல….
“சரி… நான் உன்னை மன்னிச்சிட்டேன் போதுமா, நீ மட்டுமா சாப்பிடாம இருக்க… உன்னால மீராவும் மதியத்துல இருந்து சாப்பிடலை.” ஆரு சொன்னதும், அர்ஜுன் எழுந்து மீராவை பார்த்து, “வா மீரா சாப்பிடலாம்.” என்று கூப்பிட… மீரா எழுந்திருக்காமல் இருந்தாள்.
அர்ஜுன் அவள் கையைப் பிடித்து இழுக்க… மீரா அழுதுகொண்டே வரமாட்டேன் என்று சொல்ல… அர்ஜுன், “ஏன் மீரா?” என்றதும், “என்னால தான்.” மீரா சொல்ல… அர்ஜுன் “நீ என்ன பண்ண? என்னால தான்” என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கையில் பார்சலோடு வந்த சூர்யா, “யாராலைன்னு அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம். இப்ப எல்லோருக்கும் பிரைட் ரைஸ் வாங்கி இருக்கேன், சீக்கிரம் சாப்பிடுங்க. மத்தவங்க எல்லாம் சாப்பிட்டு வந்திடுவாங்க.” என்று சொல்லி பார்சலை ஆருவிடம் கொடுக்க… அவள் அதிலிருந்து எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு பாக்ஸ் எடுத்துக் கொடுத்தாள்.
எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டனர். அர்ஜுன் சாப்பிடும் போது மீண்டும் ஆருவிடம் மன்னிப்பு கேட்டான். ஆருவும் முன் தினம் சஞ்சனா பேசியதை சொல்ல… அர்ஜுன் அவளுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான் என்று, அவன் அதற்கு மேல் சஞ்சனாவை பற்றி யோசிக்கவில்லை.
சிறிது நேரத்தில் அர்ஜுனும், ஆருவும் வழக்கம் போல் பேசிக்கொள்ள… மீராவிற்குத் தன்னால் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை வந்ததை இன்னும் மறக்க முடியாமல் மனதில் வைத்துக் குழப்பிக் கொண்டிருந்தாள். அவள் மனதிலிருப்பது ஒரு நாள் வெடிக்கப் போவதை அறியாத அர்ஜுன், ஆருவோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.
Advertisement
Advertisement
Advertisement
error: Content is protected !!