Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thalaivanin Kaathali

அத்தியாயம் 9.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 9

என்னைப் பிரிந்து காதல்

செய்வதை விட அருகில்

இருந்து வதை செய் அன்பே!!!



Advertisement

 

தன்னை நோக்கி வரும் சுசிலாவை கண்டு எழுந்து நின்றான் சுமன். அவனைப் பொறுத்த வரைக்கும் அவனுடைய தலைவனின் காதலி அல்லவா அவள். அதனால் தன்னாலே அவனுக்கு மரியாதை வந்திருந்தது.

 

Advertisement

சுமனிடம் அனைத்து உண்மைகளையும் கேட்க தான் சுசீலா அங்கே வந்தாள். ஆனால் அவன் அருகே வர வர  அவள் மனநிலை மாறி விட்டது. சுமனிடம் உண்மையைக் கேட்க அவளுக்கு தயக்கம் வந்தது.

Advertisement

 

அந்த வீட்டின் முதலாளியாக இருப்பவர்களைப் பற்றி அவனிடம் கேட்பது தவறு என்று பட்டது அவளுக்கு.

 

Advertisement

ஒரு வேளை அந்த உண்மை சுமனுக்கு தெரியவில்லை என்றால் அவளே அதை சொன்னது போல ஆகி விடுமே. அதனால் அவன் அருகில் வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

 

“என்ன ஆச்சு சுசீ? உங்களுக்கு ஏதாவது வேணுமா?”, என்று கேட்டான் சுமன். எப்போதும் மாயாவும் சுசிலாவும் கேட்கும் பொருள்களை சுமன் தான் வாங்கி வருவான் என்பதால் அவ்வாறு கேட்டான்.

 

என்ன சொல்ல என்று தெரியாமல் ஒரு நொடி விழித்த சுசீலா “சமையல் காரங்க, மாளிகை சாமான் எல்லாம் காலியாகப் போகுதுன்னு சொன்னாங்க. நீங்க கொஞ்சம் பாத்து வாங்கிக் கொடுத்துறீங்களா?”, என்று சொல்லி சமாளித்தாள்.

 

“கண்டிப்பா வாங்கிக் கொடுக்குறேன் சுசீ”, என்று சுமன் சொன்னதும் அங்கிருந்து சென்று விட்டாள் சுசீலா.

 

பின் சிறிது நேரம் தன்னுடைய அறையில் இருந்தவள் மதிய உணவை எடுத்துக் கொண்டு சாரு அறைக்கு சென்ற போது நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சாரு.

 

அதைக் கண்டு திகைத்தவள் “அம்மா என்ன ஆச்சு?”, என்று அவசரமாக சாரு அருகே ஓடினாள்.

 

“தண்ணி தண்ணி”, என்று சாரு முணங்கலாக சொன்னதும் அவசரமாக தண்ணீர் எடுத்து சாருவைக் குடிக்க வைத்தாள்.

 

“யுவனையும் மாயாவையும் பாத்துக்கோ சுசீமா”, என்று சொல்லி விட்டு படுத்துக் கொண்டாள் சாரு.

 

“அம்மா உங்களுக்கு என்ன செய்யுது? இருங்க மா நாம ஹாஸ்பிட்டலுக்கு போயிறலாம்”, என்று சொல்லி விட்டு யுவனின் எண்ணுக்கு அழைத்தாள்.

 

ஒரு ரிங்கிலே அதை எடுத்த யுவன் “சொல்லுங்க சுசீ”, என்றான்.

 

“அம்மாக்கு கொஞ்சம் முடியலை. நீங்க சீக்கிரம் வாங்களேன். அவங்களை நாம ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகலாம்”, என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

 

கண்கள் சொருகிய நிலையில் இருந்த சாருவைக் கண்டு சுசீலாவுக்கு பதட்டம் வந்தது.

 

அப்போது அடித்து பிடித்து உள்ளே வந்தான் யுவன். “அம்மா, என்ன ஆச்சு? என்னைப் பாருங்க”, என்று சுசீ கத்திக் கொண்டிருக்க அங்கே வந்த யுவன் “அம்மா, என்ன மா ஆச்சு? நெஞ்சு வலிக்குதா?”, என்று கேட்டான்.

 

சாருவின் கண்கள் சொருகிய நிலையில் தான் இப்போதும் இருந்தது. “சுசீ, நீ சுமனை காரை எடுக்க சொல்லு. நான் அம்மாவை தூக்கிட்டு வரேன்”, என்று யுவன் சொன்னதும் அங்கிருந்து செல்லப் பார்த்த சுசீலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சாரு.

 

இருவரும் சாருவையே திகைப்பாக பார்த்தார்கள். இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு “நீங்க ரெண்டு பேரும்…..நல்லா இருக்கணும்….மாயாவைப் பாத்துக்கோங்க”, என்று சொன்னதும் சாருவின் உயிர் அவள் உடலை விட்டு சென்றது.

 

“அம்மா”, என்று சொல்லி அழுதாள் சுசீலா. கண்களில் நீர் வழிய திகைத்து போய் நின்றான் யுவன்.

 

அப்போது அங்கே வந்த மாயா “ஐயோ அம்மாக்கு என்ன ஆச்சு?”, என்று கதறி சாரு உயிருடன் இல்லை என்ற உண்மை தெரிந்து “நான் தான் அம்மாவைக் கொன்னுட்டேனா? என்னால தான் அவங்களுக்கு இப்படி ஆச்சா?”, என்று கதறினாள்.

 

அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான் யுவன். “பையா, பையா அம்மாவைப் பாரு பையா? அம்மா வர மாட்டாங்களா”, என்று கேட்டு கேட்டு அழுதாள் மாயா,

 

யுவனுக்கும் அழுகை பொங்கியது. இருவரும் அழுது கொண்டிருப்பதை பார்த்து விட்டு அங்கிருந்து சென்ற சுசீலா சுமனுக்கு விஷயத்தை சொன்னாள்.

 

சுமனும் கேசவும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். அடுத்தடுத்து உடனடியாக காரியங்கள் நடந்தன, சிறிது நேரத்திலே சாருவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

 

சொந்த பந்தம் யாருமே இல்லாமல் அவள் மேல் உண்மையான அன்பு உள்ளவர்களை வைத்து சாருவின் இறுதி யாத்திரை முடிந்திருந்தது.

 

அன்று இரவு வீடே சோகத்தில் மூழ்கியிருக்க மாயா அருகில் இருந்தே அவளைத் தேற்ற முயன்றாள் சுசீலா.

 

மாயாவை தேற்ற சுசீலா இருந்தாள். ஆனால் யுவனுக்கோ யாரும் இல்லாமல் அவன் தனிமையிலே அழுது கரைந்தான்.

 

மாயா தூங்கியதும் அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு யுவனின் நினைவு வந்தது. அவனைத் தேடிச் சென்றாள். அவனுடைய அறையில் அவன் இல்லாமல் இருக்க தோட்டத்தில் எங்கோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான் யுவன்.

 

இருவரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சாரு தன்னிடம் விட்டுச் சென்றது நினைவில் வந்தது.

 

அவன் அருகில் சென்று “இங்க பாருங்க. இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருக்க போறீங்க? மாயாவும் எப்பவும் அழுதுட்டே இருக்குறா. சாரும்மா இழப்பு பெருசு தான். அதுக்காக அதையே நினைச்சிட்டு வாழ்ந்துற முடியுமா? நீங்களே இப்படி இடிஞ்சு போய் இருந்தா மாயா எப்படி சரியாவா? சாரும்மா இங்க தான் இருக்காங்க. அவங்க ஆத்மா இங்க நம்மளைச் சுத்தியே தான் இருக்கும். அவங்க எங்கயும் போகலை. கவலைப் படாம இருக்கப் பாருங்க”, என்று ஆறுதல் சொல்லி விட்டு வந்த வழியே சென்று விட்டாள்.

 

அந்த நேரத்தில் அவள் சொன்ன அந்த சின்ன ஆறுதல் எவ்வளவு விலை மதிப்பானது என்று சுசீலாவுக்கு தெரியாது. ஏதோ தனக்கென்று ஒரு ஆள் இருப்பது போல உணர்ந்தான் யுவன். அவனுடைய போராட்டத்தில் அவனுக்கு இளைப்பாற கூட நேரம் இருந்ததில்லை.

 

சாரு இருந்தவரை வீட்டைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்தவன் இப்போது சாரு போனதும் தனிமையை உணர்ந்தான். மாயாவை நினைத்து தன்னை தேற்றிக் கொள்ள முயன்ற போது மாயா சுசீலாவின் கைக்குள் இருப்பதைக் கண்டு நிம்மதியானவன் தனக்கென்று யாரும் இல்லாதது போல உணர்ந்தான். சுசீலா பேசியதும் ஏதோ ஒரு உயிர்ப்பு வந்தது போல இருந்தது அவனுக்கு. போகும் அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான்.

 

அதன் பின் நாட்கள் கொஞ்சம் கனமாக தான் நகர்ந்தது. உடனே யுவனாலும் பழைய நிலைக்கு வர முடியவில்லை.  சுசீலா தான் தவித்து போனாள். ஏனென்றால் அதற்கு காரணம் மாயா. சுசீலா எவ்வளவு முயன்றும் மாயாவை அவளால் தேற்ற முடியவில்லை.

 

மாயா தனக்குள்ளே ஒடுங்கிப் போனாள். சாருவின் இறப்பில் அவளுடைய பழைய காயங்கள் மேலே எழும்பியதால் தன்னையே தனிமை படுத்திக் கொண்டாள். சுசீலா சொன்ன ஆறுதல் கூட அவளை சென்றடைய வில்லை.

 

யுவன் கொஞ்சம் தெளிவாகி விட்டால் அவனிடம் மாயா பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் சுசீலா.

 

நாட்கள் மாதமாக நகர்ந்த போது ஒரு நாள் தூக்கம் வராமல் மொட்டை மாடிக்கு சென்றாள் சுசீலா.

 

அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு இருட்டையே வெறித்து பார்த்த படி நின்றான் யுவன். அவன் அங்கே இருப்பான் என்று எதிர்பார்க்காததால் உடனே திரும்ப தான் எண்ணினாள்.

 

அவன் நிற்கும் நிலை அவளுக்குள் ஒரு இறக்கத்தை உருவாக்கியது. யாருமே இல்லாத அநாதை போல நின்றான் யுவன். அந்த நிலையில் அவனை எப்படி தனியாக விட்டுச் செல்வது என்று உணர்ந்தவள் அவனை நோக்கிச் சென்றாள்.

 

அவன் அருகில் சென்று அவள் நின்றதைக் கூட யுவன் உணரவில்லை. அவன் பார்வை இலக்கின்றி ஆகாயத்தை வெறித்தது. இயற்கையிடம் பேசுவது போல இருந்தது அவன் செய்கை.

 

தொண்டையைக் கணைத்து தன்னுடைய வரவை உணர்த்தினாள் சுசீலா. அவள் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் அவளை அந்நேரம் அங்கே எதிர் பார்க்க வில்லை.

 

“என்ன ஆச்சு சுசீ? எதுக்கு இந்நேரம் இங்க வந்துருக்க? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டான் யுவன்.

 

“தூக்கம் வரலை. அதனால தான் வந்தேன். உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு ஏதோ போல இருக்கீங்க? சாரும்மா நினைவு வந்துருச்சா?”, என்று கேட்டாள் சுசீலா. அவள் கேள்வி அவனுக்கு மயிலிறகால் வருடியது போல இருந்தது.

 

தனிமையில் நின்றிருந்தவனிடம் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்வது போல இருந்தது அவளுடைய பேச்சு.

 

அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவன் “சும்மா தான் இங்க வந்து நின்னேன். மாயா தூங்கிட்டாளா?”, என்று கேட்டான்.

 

“ஆமா, தூங்கிட்டாங்க”, என்று சொன்னவளின் குரலில் எதுவோ வருத்தம் இருந்தது.

 

“ஏன் ஒரு மாதிரி இருக்குற சுசீ? உனக்கும் ஏதாவது பழைய நினைப்பா? அம்மா அப்பா ஞாபகம் வந்துருச்சா?”

 

“சில நேரம் இவன் வா போன்னு பேசுறான். சில நேரம் வாங்க போங்கன்னு பேசுறான். ஏன் இப்படி?”, என்று மனதில்

எண்ணிக் கொண்டவள் “இல்லை, என்னைப் பத்தி நினைக்க என்ன இருக்கு? என்னோட வாழ்க்கைல நினைச்சு பாக்குறது எல்லாமே வலிகளா தான் இருக்கும். நான் மாயாவைப் பத்தி தான் நினைச்சேன்”, என்றாள்.

 

“ஒரு அம்மா போல மாயாவை நீ பாத்துக்குறது எனக்கு எவ்வளவு நிறைவைத் தருது தெரியுமா? ஏதோ நீ வந்த பிறகு தான் வீடே

உயிர்ப்போட இருக்கு”

 

“இது வீடா? கோட்டைன்னுல நான் நினைச்சேனே?”, என்று சிரித்தாள் சுசீலா.

 

அந்த வானத்து நிலவின் ஒளியில் மெதுவாக அவள் உதடுகள் மலர்வதை கண்டு அவனது மன இறுக்கம் முற்றிலுமாக தளர்ந்தது.

 

ஒரு அழகான சித்திரம் போல் நின்றவளை ரசித்தான் யுவன். பின் தன்னை அடக்கி கொண்டவன் “மாயா பத்தி என்ன பேசணும்னு நினைச்ச?”, என்று கேட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!