Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 10 3

இருவரும் வீட்டுக்கு வந்ததும் “அருண், உமா, ஏதாவது அவங்களைப் பத்தின தகவல் தெரிஞ்சதா?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.

“இல்லைப்பா”, என்றாள் உமா.



Advertisement

“பவித்ரா எப்படி இருக்கான்னு கூட தெரியலையா”, என்று அவர் ஆதங்கமாக கேட்க “அவங்க இப்ப உயிரோட இல்லை பா”, என்று சொன்னதும் அதிர்ந்து போனார்.

Advertisement

“என்ன சொல்ற நீ?”, என்று கேட்கும் போதே அவர் கண்கள் கலங்கிப் போனது. ஒரு கணவனாக, தந்தையாக வாழ்க்கையில் தோற்றுப் போன உணர்வு அவருக்கு எழுந்தது. ஒரு பெண்ணுடன் உணர்வு பூர்வமாக வாழ்ந்து கடைசியில் அவள் இறந்த தகவலைக் கூட பல வருடங்கள் கழித்து கேட்கும் நிலையில் இருக்கும் அவருக்கு வேதனையாக இருந்தது.

Advertisement

“அம்மா வாழ்க்கைல வரக் கூடாதுன்னு ஒரெடியா போயிட்டாங்க போல பா?”, என்று கேட்ட உமா அன்னையைப் பார்க்க கோதை தலை குனிந்தாள்.

Advertisement

“அப்பா, நீங்களும் அம்மாவும் சேந்து வந்து உங்க இன்னொரு பொண்ணைப் பத்தி கேட்டா சிவன் தகவல் சொல்லுவேன்னு சொல்லிட்டான். நீங்க ரெண்டு பேரும் வறீங்களா?”, என்று கேட்டான் அருண்.

ராதாகிருஷ்ணன் புன்னகையுடன் தலையசைக்க அனைவரும் கோதையைப் பார்த்தார்கள். “எனக்கு பவித்ரா இறந்தது கஷ்டமா தான் இருக்கு. ஆனா அதுக்காக அந்த பொண்ணை என்னோட பொண்ணா எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. நீங்க வேணும்னா அவளை இங்க கூட்டிட்டு வாங்க. இந்த வீட்லயே இருக்கட்டும். நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதை தவிர என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாது”, என்று சொல்லி விட்டாள் கோதை.

“நீங்க ரொம்ப சுயநலமானவங்க அம்மா. நீங்களே மாறினா தான் உண்டு”, என்று சொல்லி விட்டு உமா அறைக்குள் சென்று விட்டாள். அருணும் அலுவலகம் சென்று விட்டான். உமா, அருண் இருவரும் சென்றதும் “இப்ப உனக்கு சந்தோஷமா?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன். கோதை தலை குனிந்தாள்.

“பவித்ரா தான் இப்ப இல்லையே? அவளுக்கு பிறந்தது என்னோட பொண்ணு கோதை. இனி அவ நம்ம மக. பிளீஸ் வா அவளை கூட்டிட்டு வருவோம்”

“இல்லைங்க, என்னால முடியாது”

“கோதை…”

“நான் இப்ப இருக்குற எதார்த்ததை தான் சொல்றேன். எப்பவும் நான் சுயநலமானவ தான். எனக்கு என் பிள்ளைங்க எதிர்காலம் முக்கியம். இப்ப என்னோட பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாண வயசு வந்துருச்சு. இப்ப சம்பந்தம் பண்ண வரவங்களுக்கு உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்குனு தெரிஞ்சா அது உமா அருண் வாழ்க்கையை பாதிக்கும். நீங்க அந்த பொண்ணைப் போய்க் கூட்டிட்டு வாங்க. இந்த வீட்ல இருந்தாலும் நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். ஆனா அவ உங்க பொண்ணு தான்னு வெளிய விஷயம் பரவுரதை நான் விரும்பலை”

“இப்படி ஒரு சுயநலவாதி கூட வாழுறேன்னு நினைக்கும் போது…. சே… இனி என் முகத்துலே முழிக்காத”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் ராதாகிருஷ்ணன்.

மதிய உணவை முடித்து விட்டு கடைக்கு வந்த சிவனை ஆவலாக பார்த்தான் கருப்பட்டி.

“என்ன டா?”, என்று கேட்டான் சிவன்.

“ஏன் நான் உன் கிட்ட என்ன கேக்க வறேன்னு உனக்கு தெரியாதோ?”

“சொன்னா தானே தெரியும்?”

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யார் வீட்டுக்கு வந்தா?”

“நீ தானே அட்ரஸ் சொல்லி விட்ட? உனக்கு தெரியாதா?”

“ஏட்டிக்கு போட்டி பேசாத சிவா? அந்த பிள்ளையை பாத்த தானே? ஆளே மாறிப் போயிருச்சு”

“ம்ம்”

“ஏன் டா அவ இப்படி இருக்கா? எப்படி இருந்த பொண்ணு? அவ கிட்ட பேசுனியா? ஏன் அவ அப்படி ஆகிட்டான்னு விசாரிச்சியா?”

“இல்லை டா”

“அட கல் நெஞ்சக்காரா. சரி அவங்க எதுக்கு உன்னைப் பாக்க வந்தாங்க?”, என்று அவன் கேட்டதும் நடந்ததைச் சொன்னான்.

“ஓ, நீ சொன்னது சரி தான். அவங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்து கேட்ட பிறகு கண்மணி பத்தி சொன்னாப் போதும். சரி அதை விடு. நீ ஏன் உமா கிட்ட பேசலை. எதனால இப்படி ஆனான்னு ஏன் கேக்கலை? உனக்கு அவளைப் பிடிக்கும் தானே?”

“நானே காயப் படுத்திட்டு நானே உனக்கு வலிக்குதானு கேட்டா நல்லாவா டா இருக்கும்? அதான் அவ கிட்ட பேசலை”

“உனக்கு அவளைப் பாத்தா பாவமா இல்லையா சிவா?”

“நாம பாவப் படுற நிலைமைல அவ இல்லை டா கருப்பட்டி. இன்னும் கொஞ்ச நாள்ல அவ பழைய படி மாறிருவா. நான் பேசின பேச்சுக்கு அவ மனசுல காதல் எல்லாம் இருக்காது. முடிஞ்சு போன விஷயத்தை நாம ஆரம்பிக்க கூடாது. பேசாம வேலையை பாரு”

“உனக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது டா”

“நன்றி”, என்று சிவன் சொல்ல அவனை முறைத்தான் கருப்பட்டி.

அறைக்குள் சென்ற உமாவோ சிவனை எண்ணி அவளுடைய காதலை எண்ணி ஏங்கி ஏங்கி அழுதாள்.

அவனை விரும்பிய ஒருத்தி அந்த நிலைமையில் அவன் கண் முன் சென்று நிற்கும் போது அவன் ஏன் எதற்கு என்று கூட ஒரு வார்த்தை கேட்கவில்லையே என்று ஆற்றாமையாக இருந்தது அவளுக்கு.

“அவன் சரியா தான் இருந்துருக்கான். அவன் உன்னைப் பத்தி விசாரிக்க நீ என்ன அவன் காதலியா? அவனுக்கு முதல்ல இருந்து உன்னைப் பிடிக்கலை. அதான் விலகி இருக்கான். நீ முட்டாள் தனமா அவனை நினைச்சு பட்னியா கிடந்தா அதுக்கு அவன் பொறுப்பா? அது மட்டுமில்லாம அவனுக்கு இப்ப கல்யாணம் ஆகிருச்சான்னு கூட தெரியலை”, என்று கேள்வி எழுப்பியது அவள் மனசாட்சி.

அது உண்மை என்றாலும் அவள் மனம் வேதனை கொண்டது. காதலில் ஏமாந்தது நெஞ்சை அறுக்கும் வலியைக் கொடுத்தது.

இனி அவனைக் காணக் கூடாது என்று அவள் நெஞ்சம் ஏங்கியது. ஆனால் அப்பாவின் இன்னொரு பெண் யார் என்ற விவரத்தை அவன் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் அவனைப் பார்த்து தான் ஆக வேண்டும் என்று புரிந்தது.

அடுத்த நாள் அவனைக் காண கிளம்பி விட்டாள். அப்போது மதியை அருணின் அலுவலகத்தில் விட சென்றிருந்தான் சிவன். மிகப் பெரியதாக இருந்த அந்த கட்டிடம் உமாவை அவனை விட்டு தூர நிறுத்தியது. மனதை அழுத்திய பாரத்துடன் தங்கையை அங்கே விட்டுவிட்டு கடைக்கு வந்தான்.

சுந்தரிக்கு உடல் நிலை சரியில்லை என்று கருப்பட்டியும் அன்று சீக்கிரம் கடை திறக்க வில்லை. அதனால் சிவன் கடைக்கு வரும் போது உமா கடைக்கு வெளியே தான் நின்றிருந்தாள்.

அவளைக் கண்டதும் அவன் கண்களில் சிறு வியப்பு குடியேறியது. அவளையே ஒரு நொடி இமைக்காமல் பார்த்தான். ஒரு காட்டன் சுடிதார் அணிந்து தலை முடியை ஒரு கிளிப்பில் அடக்கி விரிய விட்டு பெரிய அளவிலான எந்த ஒப்பனையும் இன்றி சாதாரணமாக தான் இருந்தாள். அவளது உடை அவளது மெலிவை தெளிவாக எடுத்துக் காட்டியது. ஆனாலும் அவன் கண்களுக்கு அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். பார்வையை அவளிடம் இருந்து திருப்ப முடிய வில்லை.

அவனைக் கண்டதும் அவளுக்கும் சிறு படபடப்பு தான். அவளை அறியாமலே காற்றில் மிதப்பது போல ஒரு உணர்வும் அவனை அடித்து வீழ்த்தும் கோபமும் ஒருங்கே வந்தது. ஆனால் தன்னுடைய உணர்வுகளை மறைத்துக் கொண்டு சாதாரணமாக அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் அவனை முழுமையாக பார்வை இட்டது.

அவன் அணிந்திருந்த உடை முதற்கொண்டு அவள் மனதில் பதிய அவளை நினைத்து அவளுக்கே வெறுப்பாக இருந்தது.

அவன் அமைதியாக வந்து கடையைத் திறக்க அவன் அருகே வந்தாள். அவன் என்னவென்று நிமிர்ந்து பார்த்தான். மீண்டும் அவள் காதலை பற்றி பேச வேண்டும் என்று அவனுக்கு ஏக்கமாக இருந்தது. ஆனால் அவளோ “பிளீஸ் என்னோட அக்கா யாருன்னு சொல்லுங்க”, என்றாள்.

ஒரு நொடி திகைத்தாலும் “இதுக்கு நேத்தே பதில் சொல்லிட்டேனே? உங்க அம்மா அப்பா வந்து கேட்டா சொல்றேன்”, என்றான்.

“அம்மா வரலைன்னு சொல்றாங்க. ஆனா எங்களை கூட்டிட்டு வரச் சொல்லிட்டாங்க. அக்கா எங்க வீட்ல இருக்கலாமாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!