Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 13 2

ராதாகிருஷ்ணன் மற்றும் கோதை கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு சட்டென்று இதில் என்ன சொல்ல என்று தெரிய வில்லை. ஆனாலும் கண்மணிக்கு மறுவாழ்வு அமைந்தால் சந்தோஷம் தான் என்று எண்ணினார்கள்.

அன்னை அப்படிச் சொன்னதும் செல்வி அப்படியே அதிர்ந்த படி அங்கிருந்து வெளியே பார்த்து நடக்க செந்தில் குழந்தையுடன் அவள் அருகே ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான்.



Advertisement

குழந்தையைக் கையில் வாங்கியவள் “அம்மா பேசினதைப் பாத்தீங்களா? நானாங்க பொறாமை படுறேன்? எனக்கு அவங்க நல்லா இருக்கணும்னு ஆசை இல்லையா? நீங்களும் நான் கண்மணி அண்ணி நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்னு தான் நினைக்கிறீங்களா?”, என்று கேட்டாள்.

Advertisement

“நான் எப்படி அப்படி நினைப்பேன்? எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா? அத்தை புரியாம பேசுறாங்க டா. ஆனா அவங்க ரெண்டாவது கல்யாணம் பத்தி பேசும் போது நீ தடை சொல்லலாமா? கண்மணிக்கு ஒரு நல்ல முடிவு வரணும் தானே?”

Advertisement

“நான் அவங்க கல்யாணம் பண்ணுறதுக்கு மறுப்பு சொல்லலைங்க. அது எனக்கு சந்தோஷம் தான். நான் மறுத்தது மாப்பிள்ளையா என் அண்ணன் இருக்குறதை தான்”

Advertisement

“ஏன் சிவா மச்சான் கண்மணியைக் கல்யாணம் பண்ணக் கூடாதா? அவர் கண்மணியை எவ்வளவு அன்பா கவனிச்சிக்கிறார்? அவங்க ஒண்ணு சேந்தா நல்லது தானே? இளா மச்சான் குழந்தையை அவர் அவரோட குழந்தையா வளர்ப்பார் செல்வி”

“ஐயோ, உங்களுக்கு புரியலைங்க. அண்ணனோட பிளானே வேற. கண்மணியை கருப்பட்டி அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் நினைக்கிறாங்க”

“என்ன? என்ன சொல்ற நீ?”

“ஆமாங்க. அண்ணன் அப்படி தான் என் கிட்ட சொல்லுச்சு. அதனால தான் அண்ணியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற பொறுப்பை மதிக் கிட்ட கொடுத்தாலும் அவங்களுக்கு துணையா கருப்பட்டி அண்ணனை அனுப்ப காரணமே அவங்க ஒண்ணு சேரணும்னு தான். இது மதிக்கும் தெரியும். அவங்களுக்குள்ள கொஞ்சம் நெருக்கமும் உண்டாச்சு. அதுக்குள்ள இந்த அம்மா…”

“கண்மணியும் கருப்பட்டியும் நல்லா பேசிப்பாங்களா?”

“நல்லா பேசிக்கலைன்னாலும் சுந்தரி அம்மாவை இப்ப அண்ணி தான் கவனிச்சிக்கிறாங்க. எப்பவும் அவங்க கூடவே உக்காந்து கதை பேசுவாங்க. அவங்களுக்கு சாப்பாடும் அவங்க தான் ஊட்டி விடுறாங்க. மதி வந்தா கூட அவளை தடுத்துட்டு அவங்களே செய்யுறாங்க. அதைப் பாத்து கருப்பட்டி அண்ணனுக்கும் அவங்களை பிடிச்ச மாதிரி தான் தெரியுது. ஆனா இந்த அம்மா இடைல புகுந்து இப்படி எல்லாருக்கும் நிம்மதி இல்லாம பண்ணினா எப்படி?”

“சரி விடு, நீ டென்ஷன் ஆகாதே. எல்லாம் நல்ல படியா நடக்கும் டா”

“எப்படிங்க?”

“கலகம் பிறந்தா தானே நல்லது நடக்கும்? அத்தை பிரச்சனையை ஆரம்பிச்சிட்டாங்கல்ல? கண்டிப்பா நல்ல முடிவா கிடைக்கும் வா. உள்ள போகலாம்”, என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

அவர்கள் போன போது பார்வதி கண்மணியிடம் பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் அமைதியாக இருந்தார்கள். சிவன் தன்னுடைய நண்பனைத் திரும்பி பார்த்தான். “உன்னால மட்டும் தான் ஏதாவது பண்ண முடியும்? பண்ணு டா”, என்று கண்களால் கருப்பட்டியிடம் கெஞ்சினான் சிவன்.

கருப்பட்டிக்கு நிலைமை புரிந்தது. ஆனால் என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் குழம்பினான். உமாவிடம் காதலைச் சொல்ல வில்லை என்றாலும் சிவன் மனதில் அவள் தான் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். அவனுக்காக தன்னுடைய உயிரையே உமா மாய்த்துக் கொள்ளக் கூட தயங்க மாட்டாள் என்றும் அவனுக்கு தெரியும். அவர்கள் காதல் ஒன்று சேர வேண்டும் என்றால் சிவன் கண்மணி திருமணம் நடக்க கூடாது என்று கருப்பட்டிக்கு புரிந்தது.

அதற்கு நிச்சயம் இவன் கண்மணியை திருமணம் செய்தால் எல்லா பிரச்சனையும் முடிந்து விடும். ஆனால் கண்மணியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவன் என்ன செய்ய முடியும்? அவனிடம் தயங்கி தயங்கி பேசுகிறாள். அவனுடைய உதவியை அமைதியாக ஏற்றுக் கொள்கிறாள். அவனது அன்னை அவனுடைய கையால் புடவையைக் கொடுக்கச் சொன்ன போது தயக்கத்துடன் என்றாலும் மறுக்க வில்லை.

தன்னுடைய அன்னையை அவளுடைய தாயைப் போல விழுந்து விழுந்து கவனிக்கிறாள். ஆனால் திருமணத்துக்கு இது மட்டும் போதாதே. இப்போது அவள் பணக்கார குடும்பத்தின் வாரிசு. அது மட்டுமில்லாமல் கண்மணிக்கு சிவனை திருமணம் செய்ய விருப்பம் இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பமும் இருந்தது.

என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் நண்பனைப் பார்த்தான். “பிளீஸ் டா உதவி செய் டா”, என்று சிவனின் கண்கள் அவனிடம் மீண்டும் கெஞ்சியது. உடனே கண்மணியைப் பார்த்தான். அவளோ பார்வதிக்கு பதில் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு உள்ளுணர்வு உண்டாக கருப்பட்டியை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.

அவனைக் கண்டதும் அவள் கண்களில் ஒரு நிம்மதி தோன்றியது. அவளது கண்களும் அவனிடம் எதையோ யாசித்தது. அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று குழம்பி அவளையே பார்த்தான். அவளோ அவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்பவே உங்க கல்யாணம் நடக்கணும்”, என்று சொன்ன பார்வதி ஒரு தாம்பூலத்திலிருந்த மஞ்சள் கயிரையும் மஞ்சளையும் எடுத்து கட்டிக் கொண்டிருக்க கண்மணியின் பார்வை அவனை விட்டு இம்மியும் நகர வில்லை.

“சிவா இங்க வா டா”, என்று மகனை அழைத்த பார்வதி அவன் கையில் அந்த தாலியைக் கொடுக்க அதை வெறித்துப் பார்த்தான் சிவன். உமாவுக்கு முதல் முறையாக இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது. அவளால் இந்த சூழ்நிலையை சாதாரணமாக கடக்க முடியவில்லை. அருகில் அமர்ந்திருந்த அருணின் கைகளை இறுக பிடித்துக் கொண்டாள்.

அவள் மனது புரிந்தாலும் அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவன் உமாவுக்காக பேசினால் நிச்சயம் கண்மணி பாதிக்க படுவாள். இரண்டு தங்கைகளில் அவன் யாருக்கு சாதகமாக பேச முடியும்? அது மட்டுமில்லாமல் சிவன் உமாவின் காதலை வேறு ஏற்றுக் கொள்ள வில்லையே. அதனால் உமாவை ஆறுதலாக தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான். அது தான் அவனால் செய்ய முடிந்தது.

“என்ன டா யோசிக்கிற? பிடி. இதை என் மருமக கழுத்துல கட்டு”, என்று சொல்லி பார்வதி தாலியை சிவன் கையில் திணிக்க நண்பனைத் திரும்பிப் பார்த்தான். சிவனின் பார்வையும் கண்மணியின் பார்வையும் கருப்பட்டி மீதே இருக்க தன்னுடைய தாயை திரும்பிப் பார்த்தான் கருப்பட்டி. ஏனோ சட்டென்று அந்த தாய்க்கு மகனின் குழப்பம் புரிந்ததோ? இல்லை அவளுடைய மனதின் ஆசையோ?

எதுவோ ஒன்று வெற்றி பெற சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சுந்தரி அதற்கு மேல் மகனின் பரிதவிப்பைப் பார்க்க முடியாமல் “பார்வதி ஒரு நிமிஷம்”, என்று அழைத்தாள்.

“என்ன சுந்தரி?”

“சிவாவுக்கும் கண்மணிக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கான்னு கேட்டியா?”

“இதுல கேக்க என்ன இருக்கு? அவன் என் மகன். நான் சொன்னா செய்வான். என் மருமகளும் என் பேச்சைக் கேப்பேன்னு சொல்லிருக்கா”

“உன் மகன் உன் பேச்சைக் கேப்பான். ஆனா அதை பிடிச்சு தான் செய்றான்னு உனக்கு தெரியுமா? அப்புறம் உன் மருமக உன் பேச்சைக் கேப்பேன்னு சொல்லிருக்கா. ஆனா மாப்பிள்ளை சிவாவா இருந்தா அவ சரின்னு சொல்லுவாளா? அவங்க ரெண்டு பேர் முகத்தையும் பாரு பார்வதி. அவங்களுக்கு விருப்பமே இல்லை. நீ ரெண்டு பேருக்கும் அவசரமா கல்யாணம் பண்ணி வச்சிறலாம். ஆனா நாளைக்கு வாழப் போறது அவங்க தானே? அண்ணன் பொண்டாட்டியை எப்படி சிவா தன்னோட பொண்டாட்டியா பாப்பான்? அதே மாதிரி நண்பனா நினைக்கிற சிவா கூட கண்மணி எப்படி வாழ்வான்னு யோசிக்க மாட்டியா?”, என்று சுந்தரி கேட்டதும் பார்வதி சிவா மற்றும் கண்மணியைப் பார்த்தாள்.

இருவர் முகத்தில் இருந்த கண்ணீரே அவர்களின் மனதைப் புரிய வைக்க பார்வதிக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.

“இப்ப என்ன பண்ணுறது சுந்தரி? நான் என் மருமகளுக்கு ஒரு நல்லது செஞ்சு பாக்க நினைக்க கூடாதா? இன்னும் மூணு மாசத்துல என் பேரன் வருவான். அவன் அப்பா இல்லாம தான் வளரணுமா? கண்மணி வாழ வேண்டிய பொண்ணு? அவளை காலம் முழுக்க இப்படியே வச்சிருக்க முடியுமா?”

“உன்னை யார் அப்படியே வைக்க சொன்னா? மாப்பிள்ளையா சிவா வேண்டாம்னு தான் சொல்றேன்”

“சுந்தரி நீ என்ன சொல்ற?”

“சரி நான் என் மனசுல பட்டதைச் சொல்லிறேன். எனக்கு கண்மணியை எங்க வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்கணும்னு தோணுது. அவளை உன் கிட்ட பொண்ணு கேக்குறேன். என் மகனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறியா?”, என்று சுந்தரி நேரடியாக கேட்டதும் அனைவருக்குமே திகைப்பு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!