Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 15 3

அதைக் கேட்டு வியப்பாக இருந்தது மதிக்கு. ஒரே காரில் அலுவலகம் செல்லும் போது “நீங்க தான் என்னைப் பொண்ணு கேக்க சொன்னீங்களா?”, என்று கேட்டாள் மதி.

“ஆமா, அதை தானே அன்னைக்கு சொல்ல வந்தேன். முதல் நாள் உன்னைப் பாத்த உடனே எனக்கு பிடிச்சிருச்சு”



Advertisement

“அப்புறம் ஏன் அன்னைக்கு என் கிட்ட அது பத்தி பேசலை?”

Advertisement

“நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லிருந்தா என் காதலை ஏத்துகிட்டு இருப்பியா?”

Advertisement

“கண்டிப்பா மாட்டேன்”

Advertisement

“அது தெரிஞ்சு தான் நான் எதுவும் காட்டிக்கலை. உனக்காகவே தான் டி உன்னைக் கல்யாணம் பண்ணினேன். ஆனா உமாவுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணினது கஷ்டமா தான் இருந்துச்சு. அதுவும் உன்னை கண்ணு முன்னாடி வச்சி ரொம்ப நாள் வாழாம இருக்க முடியாதுன்னு நினைச்சு தான் உங்க அண்ணா கிட்ட பேசச் சொன்னேன். மத்த படி உங்க அண்ணா கிட்ட போய் நீ பேசலைன்னா உன்னை உன் வீட்டுக்கு அனுப்பிருவேன்னு சொன்னேனா? இல்லை உன் அண்ணன் என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணலைன்னா நான் உன் கூட வாழ மாட்டேன்னு சொன்னேனா? ஆனா உனக்கு தான் என்னைப் பிடிக்கலை”

“எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்”, என்று சிரிப்புடன் சொல்ல காரை நிறுத்தி அவளைப் பார்த்தான். அவன் பார்வையில் முகம் சிவந்தவள் வெட்கத்துடன் அவனைப் பார்க்க அவன் கரங்கள் நீண்டு அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

அவன் கைகளுக்குள் இருந்தவள் “ஐயோ இங்க காரை நிறுத்திட்டு என்ன பண்ணுறீங்க?”, என்று சிணுங்க “உமா கல்யாணம் முடியுற வரைக்கும் உன் கூட வாழாம இருக்குறது கஷ்டம் தான். ஆனா அதுக்காக ஒரு முத்தம் கூட இல்லாம எல்லாம் என்னால இருக்க முடியாது”, என்று சொன்னவனின் இதழ்கள் அவள் முகத்தில் ஊர்வலம் போக அவள் கரங்களும் அவனை வாகாக அணைத்துக் கொண்டது.

அதற்கு அடுத்து ஒரு மாதம் வரைக்குமே அனைவரின் வாழ்க்கையும் சாதாரணமாக தான் நகர்ந்தது. அன்று கண்மணிக்கு வலி வர சிவன் மற்றும் கருப்பட்டி இருவரும் அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக தான் இருந்தார்கள்.

பார்வதி துணையுடன் அவளை மருத்துவமனையில் அனுமதிக்க அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இளவரசன் மீண்டும் பிறந்து விட்டான் என்று எண்ணி அனைவரும் சந்தோஷப் பட்டார்கள்.

“டேய் கருப்பட்டி உன் மகனை பாரு டா”, என்று சிவன் சொல்ல கருப்பட்டி ஆனந்த பூரிப்புடன் தன் மகனை கையில் வாங்கிக் கொண்டான்.

உமா வீட்டில் இருந்து அனைவரும் கண்மணியையும் குழந்தையையும் காண வந்திருந்தார்கள். ராதாகிருஷ்ணனுக்கு மகளையும் பேரனையும் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆசை தான். ஆனால் கண்மணி விருப்பம் தான் முக்கியம் என்று எண்ணி விட்டுவிட்டுச் சென்றார்கள்.

வீட்டுக்கு வந்ததும் பார்வதி மருமகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டாள். கருப்பட்டியோ கடைக்கு போகாமல் டிமிக்கி கொடுத்து விட்டு மகனுடனே நேரம் செலவழித்தான். சிவனுக்கும் அவர்கள் சந்தோஷம் தானே முக்கியம்? கருப்பட்டியும் கண்மணியும் சகஜமாக பேசிக் கொள்வதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவனுக்கு அவ்வப்போது வீட்டுக்கு வரும் உமாவைத் தான் கண் கொண்டு பார்க்க முடிய வில்லை. அவள் வந்தால் இவன் வெளியே சென்று விடுவான். முன்பை விட அவள் உடல் நிலை சற்று தேறி இருந்தாலும் பழைய படி அவள் மாற வில்லை தான். அதனால் அவளைக் காண காண அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

அவனைப் பார்த்து விட்டு மனதளவில் உமா படும் துயரத்தைப் பார்த்த அருண் தந்தையிடம் உமா திருமண விஷயம் பற்றி பேசினான். கூடவே உமா சிவனைக் காதலிப்பதைப் பற்றியும் பேசினான். அது மட்டுமில்லாமல் சிவனுக்கு உமாவை திருமணம் செய்து கொடுத்தால் அவள் கண்மணியை நன்கு பார்த்துக் கொள்வாள் என்று அவன் எடுத்துச் சொல்ல ராதாகிருஷ்ணன் உடனே சரி என்று சொன்னார்.

அன்றே சிவனின் வீட்டுக்கு சென்று ராதாகிருஷ்ணன் மற்றும் கோதை இருவரும் அவர்கள் திருமணம் விஷயம் பற்றி பார்வதியிடம் பேச மகனிடம் கேட்காமலே சம்மதம் சொன்னாள் பார்வதி.

அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிவனுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் வெளியே அமைதியாக இருந்தான். திருமணத்துக்கு நாள் குறித்து விட்டு வீட்டுக்கு சென்றதும் திருமண விஷயம் கேள்விப் பட்ட உமா கோபத்தில் அண்ணனிடம் பொரிய அவனோ “எனக்கு தோணினதை நான் அப்பாவை வச்சு பண்ணிட்டேன். உனக்கு வேண்டாம்னா நீ அப்பா கிட்ட போய் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

உமா தந்தையைக் காணச் செல்ல “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் உமா குட்டி. நீ சிவனைக் கல்யாணம் பண்ணினா காலம் முழுக்க நீ கண்மணி கூடவே இருப்ப. நீ அவ கூட இருந்தா நாங்களும் அவ கூட இருக்குற மாதிரி”, என்று சந்தோசமாக சொல்ல உமாவால் அவரிடம் மறுத்துப் பேச முடியவில்லை. அவருக்கு கண்மணி மேல் இருக்கும் பாசம் அவளுக்கு தெரியுமே?

வேறு வழியில்லாமல் சிவனை அழைத்தாள். அழைப்பது அவள் என்று தெரிந்து அதை எடுத்து “ஹலோ”, என்றான்.

அவன் எடுத்ததும் “நீங்க எதுக்கு கல்யாணத்துக்கு சரின்னு சொன்னீங்க? இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லுங்க. இந்த கல்யாணம் நடக்க கூடாது”, என்றாள் உமா. அவள் அப்படிச் சொன்னது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவள் தன் மீது இருக்கும் கோபத்தில் அப்படிச் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன் திருமணத்துக்கு பிறகு அவளை மாற்றி விடலாம் என்று நம்பிக்கை கொண்டான்.

அதனால் “என்னால அது முடியாது. எங்க அம்மா கிட்ட போய் நான் இதைச் சொன்னா அவங்களால இதை தாங்க முடியாது. வேணும்னா நீயே தடுத்து நிறுத்திக்கோ”, என்று சொல்லி போனை வைத்து விட்டான். அவளுக்கு அவன் மீது கோபமாக வந்தது.

உமாவுக்கு வேறு என்ன செய்ய என்று தெரிய வில்லை. ஒரு வழியாக சிவன் உமா திருமண நாளும் வந்தது. பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் நிச்சயம் சந்தோஷம் இருந்தது. அதுவே வீட்டினருக்கும் கருப்பட்டிக்கும் போதுமானதாக இருந்தது.

மணப்பெண் அலங்காரத்தில் உமா அவன் அருகே அமர வைக்கப் பட்டாள். அனைவரும் அவர்கள் ஜோடிப் பொருத்ததை பற்றி மட்டுமல்லாமல் அவர்கள் பெயர் பொருத்தத்தைப் பற்றியும் வியந்து பேசினார்கள். அவன் அருகே அமர்ந்திருந்த உமாவைத் தவிர அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

சிவன் கூட அன்று சந்தோஷமாக இருந்தான். உமாவும் வெளியே புன்னகை முகத்துடன் தான் இருந்தாள். அவர்கள் தோழிகள் நால்வரும் பெரிய கிஃப்ட்டுடன் திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.

ஆனால் உமாவுக்கு உள்ளுக்குள் ஏதோ தோற்றுப் போன வலி இருந்து கொண்டே இருந்தது. காதல் நிறைவேறாத வலியை விட அவன் அவமானப் படுத்திய நிகழ்வுகள் மேல் எழுந்து அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

அவள் காதலைச் சொன்ன போது அவன் அவளை மறுத்தான். அவளை பிடிக்க வில்லை என்று சொன்னான். அதை புரிந்து கொள்ளாமல் அவள் முட்டாள்தனமாக சாப்பிடாமல் இருந்தது எல்லாம் வேறு.

அதற்கு பின்னரும் ஒரு மரியாதைக்கு கூட அவளுக்கு என்ன ஆனது என்று அவன் கேட்க வில்லை. அவள் உடல் ஏன் மெலிந்திருக்கிறது என்று கூட அவன் கேட்க வில்லை.

எப்போதோ ஒரு முறை பார்ப்பவர்களிடம் கூட மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வோம். ஆனால் அவன். அவளுக்கு அவன் அவளை விசாரிக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இருந்தது தான். அது அவள் காதல் கொண்ட மனதின் எதிர் பார்ப்பு.

அவன் தன்னிடம் இருந்து ஒதுங்கியே இருந்தது அவன் மீது மரியாதையை பெற்றுத் தந்தது. ஆனால் அவளது தந்தை அவளை திருமணம் செய்ய பேசினபோது அவன் சரி என்று ஒத்துக் கொண்டதை தான் அவளால் தாங்க முடிய வில்லை.

அவன் மீது இருந்த மரியாதை அப்படியே சரிந்து தான் போனது. அவன் உடனே ஒத்துக் கொள்ளாமல் அவனுடைய அன்னைக்காக கட்டாயத் திருமணமாக இருந்தால் கூட அவள் மனது ஆறி இருக்கும். ஆனால் இவ்வளவு நாள் அவளை ஒரு மனுஷியாக கூட நினைக்காத அவன் உடனே திருமணம் செய்ய ஒத்துக் கொண்டது அவளுக்கு பிடிக்க வில்லை.

இன்னொரு காரணம் அவன் ஒத்துக் கொண்டது கூட கண்மணி மற்றும் மதிக்காக கூட இருக்கலாம் என்பது அவளது மற்றொரு எண்ணம். மொத்தத்தில் தான் அவனை உயிராக நினைத்திருக்க ஆனால் அந்த எண்ணம் துளியும் இன்றி அடுத்தவர்களுக்காக திருமணம் செய்ய சம்மதித்ததை அவளால் மன்னிக்க முடிய வில்லை.

“இப்ப இவ்வளவு யோசிக்கிற நீ உங்க அப்பா கேக்கும் போது அவனை வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே? அப்ப எங்க போச்சு உன் மானம் எல்லாம்?”, என்று அவள் மனசாட்சி கேள்வி எழுப்ப அந்த கேள்வியில் கண்களில் ஆறாக பெருகியது.

அவன் மீதான காதலால் அவள் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள் என்பது தான் உண்மை. ஆனால் அதை ஒத்துக் கொள்ள முடியாமல் அவளுக்கு அழுகையாக வந்தது. இப்போதும் அவன் அவளுக்கு கிடைத்ததை எண்ணி அவள் மனம் சந்தோஷப் படுவதை தான் அவளால் தாங்க முடிய வில்லை.

தன்னை தனக்காகவே விரும்பும் ஒருவன் கணவனாக வர வேண்டும் என்று எதிர் பார்ப்பது பெண்களின் இயல்பு தானே? அதற்கு உமா மட்டும் விதி விலக்கா என்ன?

அனைவரின் ஆசியோடு அவர்கள் திருமணம் நடந்தது. திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்து அவளை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் கிளம்பி விட்டார்கள். உமா பல முறை இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்பதாலும் சிவனைத் தவிர அனைவரும் அவளுடன் நன்றாக பேசுவதாலும் அவளுக்கு அங்கே இருக்க எந்த சங்கடமும் இல்லை. பார்வதியிடம் மரியாதையாக நடந்து கொண்டாலும் மற்ற அனைவரிடமும் இயல்பாக பேசினாள்.

அவர்களுக்கு அன்று இரவு முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவளிடம் பல விஷயங்கள் பேச வேண்டும் என்று முடிவில் இருந்தான் சிவன்.

அவளை முதல் முறை பார்த்தது, பார்த்தவுடன் அவளை ரசித்தது, அதற்கு பின் அவனின் கோபம், அவளைத் திட்டிவிட்டு வருத்தப் படுவது, ஹாஸ்பிட்டலில் அவளைப் பார்த்து அழுதது என அனைத்தையும் அவளிடம் சொல்ல எண்ணினான்.

“உன் காதலை புரிஞ்சிக்கிட்டேன் டி, நானும் உன்னை விரும்புறேன்”, என்று அவளிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசையில் இருந்தான்.

அப்போது அவனது ஆசை நாயகியே அறைக்குள் வந்தாள். முழு அலங்காரத்தில் கையில் பால் செம்புடன் தலை குனிந்த படி வந்தவளைக் கண்டு சிறு சிரிப்பு வந்தது.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!