Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 16 2

“ஹி ஹி”, என்று கருப்பட்டி அசடு வழிய சிறு சிரிப்புடன் போனை வைத்தான் சிவன். அப்போது “அத்தான், என்ன சிரிப்பெல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு?”, என்று கேட்டாள் சிவானி.

செந்திலின் தங்கை என்பதால் சிவானியுடன் மரியாதைக்காக நின்று பேசிக் கொண்டிருந்தான் சிவன். குளித்து முடித்து வெளியே வந்த உமா சிவன் ஒரு பெண்ணுடன் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டாள். உமாவுக்கு சிவானி யார் என்று தெரிய வில்லை. அதனால் “மதி”, என்று அழைத்தாள்.

“என்ன அண்ணி?”, என்று கேட்ட படி வந்தாள் மதி.

“அது யாரு?”



Advertisement

“எது? அண்ணனோட பேசிட்டு இருக்குறதா?”

“ஆமா”

“நம்ம செல்வி அக்காவோட நாத்தனார். செந்தில் மச்சானோட தங்கச்சி. உங்க கல்யாணம் அப்ப அவங்க ஒரு எக்ஸாம் எழுத போய்ட்டாங்க. அதான் இன்னைக்கு பாக்க வந்திருக்காங்க. அவங்களை தான் அண்ணனுக்கு கட்டி வைக்கணும்னு செல்வி அக்காவுக்கு ஒரே ஆசை”, என்று சொல்லி விட்டு சென்றாள். இல்லை இல்லை, திரியை கொழுத்தி போட்டு விட்டுச் சென்றாள்.

Advertisement

சுள்ளென்று எரிச்சல் வந்தது உமாவுக்கு. அவன் அவளை விரும்ப வில்லை என்றாலும் அவளுக்கு அவனை மிகவும் பிடிக்குமே? அதனால் அவன் இன்னொரு பெண்ணுடன் பேசுவதைக் கண்டு பொறாமை உணர்வு அவளுக்கு எழுந்தது. மெதுவாக அவர்களை நெருங்கிச் சென்றாள்.

Advertisement

“இதோ வந்துட்டா, இவ தான் என்னோட மனைவி. பேர் உமா”, என்று சிவானிக்கு அறிமுகப் படுத்திய சிவன் உமா புறம் திரும்பி “உமா, இவங்க சிவானி. செல்வியோட நாத்தனார்”, என்றான்.

“ஹாய்”, என்ற படி உமாவும் பேசினாள். சிவானியும் பேசினாள்.

அப்போது “எல்லாரும் சாப்பிட வாங்க”, என்று அவர்களை அழைக்க வந்த செல்வி “வா சிவானி”, என்று சொல்லி அவள் கையை பற்றி அழைத்துக் கொண்டு சென்றாள்.

Advertisement

அவர்கள் சென்றதும் கணவன் மனைவி மட்டுமே நின்றார்கள். “வா உமா சாப்பிட போகலாம்”, என்றான் சிவன்.

“ஒரு நிமிஷம்”

“என்ன உமா?”

“பேச்சும் சிரிப்பும் கொஞ்சம் அதிகமாவே இருக்கு? என்ன டா இருந்த ஆப்சனை மிஸ் பண்ணிட்டோமேன்னு இருக்கா?”, என்று அவள் கேட்டதும் “என்ன சொல்ற நீ?”, என்று குழப்பமாக கேட்டான்.

“சிவானியை தான் உங்களுக்கு கட்டி வைக்கணும்னு பேச்சு அடி பட்டுச்சாமே?”, என்று அவள் கேட்க அவன் புருவம் உயர்ந்தது. அவனுக்கு அந்த பேச்சே தெரியாது என்பதால் “என்ன சொல்ற நீ?”, என்று கேட்டான்.

“நல்லா நடிக்கிறீங்க, ஒண்ணும் தெரியாத மாதிரி”, என்று அடிக்குரலில் சீறினாள்.

“சும்மா என்னைக் காயப் படுத்தணும்னு பேசாத உமா. நிஜமாவே இந்த விஷயம் எனக்கு தெரியாது. நான் எதுக்கு உன் கிட்ட நடிக்கணும்?”

“ஆமா ஒண்ணும் தெரியாம தான் அவ கிட்ட பல்லை பல்லைக் காட்டி பேசினீங்களா?”, என்று அவள் கோபத்துடன் கேட்க அப்போது தான் அவளின் பொறாமையே அவனுக்கு புரிந்தது. புரிந்ததும் அவன் கண்கள் மின்னின. அவளின் கோபத்தைக் கண்டு சிரிப்பு தான் வந்தது.

“சரி உனக்கும் எனக்கும் தான் ஒண்ணும் இல்லையே? அப்புறம் நான் அவ கிட்ட சிரிச்சு பேசினா உனக்கு என்ன? முறைச்சு பேசினா உனக்கு என்ன?”, என்று சிறு முறுவலுடன் கேட்டான்.

“அது”, என்று அவள் தயங்க “எனக்கே தெரியும். பொறாமை தானே?”, என்று கேட்டு கண் சிமிட்டினான்.

“மண்ணாங்கட்டி. நீங்க சொன்ன ஒரு ஆமையும் இல்லை”, என்று வெடுக்கென்று சொல்லி விட்டு அவள் செல்ல சிறு சிரிப்புடன் அவள் பின்னே நடந்தான்.

“ஆமா, நான் ஏன் கோபப் பட்டேன்? அவன் யார் கிட்ட பேசினா எனக்கு என்ன?”, என்று எண்ணிய படியே சாப்பிடச் சென்றாள் உமா.

அவள் வீட்டுக்குள் சென்ற போது அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க மதியும் கண்மணியும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

சிவானி அருகே உமா மற்றும் சிவனுக்காக இரண்டு இலை போடப் பட்டிருந்தது. அதைக் கண்ட உமா எங்கே சிவன் அவள் அருகில் சென்று அமர்ந்து விடுவானோ என்ற பயத்தில் அவசரமாக சிவானி அருகே கிடந்த இலையில் அமர்ந்தாள்.

அவள் அவசரத்தைப் பார்த்த சிவனுக்கு அவள் மனது தெள்ளத் தெளிவாக புரிந்து அவனது சிரிப்பை இன்னும் அதிகப் படுத்தியது. சிறு சிரிப்புடன் மனைவி அருகே சென்று அவளை இடித்த படி அமர்ந்தான். அனைவரின் முன்னிலையிலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஆனாலும் இருவரின் கால் மூட்டுகளும் உரச அவளுக்கு தான் தவிப்பாக இருந்தது.

அதற்கு அடுத்த நாள் அருண் அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்ல ஏற்பாடு செய்திருந்த டிக்கட்டைக் கொடுத்தான். அனைவரின் முன்னிலையில் அமைதியாக நின்றாலும் அறைக்குள் வந்ததும் “எனக்கு உங்க கூட எங்கயும் வர விருப்பம் இல்லை. நீங்களே அண்ணா கிட்ட வேண்டாம்னு சொல்லுங்க”, என்றாள்.

“ஏன் வர விருப்பம் இல்லை. நாம போகத் தான் போறோம்”, என்றான் சிவன்.

“நான் வரலை”

“அதான் ஏன்னு கேக்குறேன்? ஊட்டி குளிர்ல உன்னை ஏதாவது முழுங்கிருவேன்னு பயமா இருக்கா? முழுங்கணும்னா இந்த நாலு நாள்ல முழுங்கிருக்க மாட்டேனா?”, என்று அவன் சிறு சிரிப்புடன் கேட்க “ஓகோ இந்த நினைப்பு எல்லாம் இருக்கா உங்களுக்கு? அப்படி மட்டும் நடக்கட்டும். எல்லாரையும் கூப்பிட்டு பஞ்சாயத்தை கூட்டிருவேன் பாத்துக்கோங்க”, என்றாள்.

“அப்படியா? பஞ்சாயத்துல என்ன சொல்லுவ? என் புருஷன் என்னைக் கெடுத்துட்டான்னா?”, என்று அவன் நக்கலுடன் கேட்க முகச் சிவப்புடன் அவனைப் முறைத்துப் பார்த்தாள் உமா. அந்த முகச்சிவப்பு அவன் மீது வந்த கோபத்தாலா? இல்லை அவன் சொன்னதால் வந்த வெட்கத்தாலா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் சிவன். அவளோ அவன் பார்வையைத் தாங்க முடியாமல் அவனை முறைத்தாள்.

“என்ன முறைக்கிற? நம்ம விஷயம் நமக்குள்ள இருக்கணும். இந்த ஒரு வாரம் எந்த கல்யாண ஆபரும் இல்லை. ஸ்டூடியோவையும் கருப்பட்டி பாத்துக்குவான். எனக்கு மறுக்க எந்த ரீசனும் இல்லை. என்னால எல்லார்கிட்டயும் போய் எனக்கு ஹனிமூன் போக விருப்பம் இல்லைன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது. நான் உன் கூட போக தான் போறேன். உனக்கு என் கூட வர விருப்பம் இல்லைன்னா தாராளமா உன் கையை உடைச்சிக்கோ, உன் காலை உடைச்சிக்கோ”, என்று சொல்லி விட்டுச் செல்ல அவனை முறைத்த படியே நின்றாள் உமா.

வேறு வழியில்லாமல் அவனுடன் கிளம்பிச் சென்றாள். ஊட்டிக் குளிரும், யாரும் இல்லாத் தனிமையும், அவனது அருகாமையும் அவள் காதலை கொஞ்சம் கொஞ்சமாக மேல் எழுப்பியது. அப்போது அவனாக அவளை நெருங்கி இருந்தால் அவள் அவனுடன் சேர்ந்திருப்பாள். ஆனால் சிவன் ஒரு தோழியுடன் சுற்றுலா வந்திருந்ததைப் போல தான் இருந்தான்.

அவர்கள் ஊட்டியில் இருந்து வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அப்போது ஒரு நாள் சிவன் அறைக்குள் வர அவள் மீது மோதி விட்டான். அவள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக அவளைப் பிடித்தும் விட்டான்.

அவன் கையில் இருந்து விலகி நின்ற உமாவோ அவனை முறைத்துப் பார்த்தாள். “இப்ப எதுக்கு என்னை முறைக்கிற? நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்டான் சிவன்.

“என்ன செஞ்சீங்களா? இப்ப நடந்ததுக்கு பேர் என்ன?”

“இது ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடெண்ட்”

“கட்டிப் பிடிச்சிட்டு நிக்குறது ஆக்ஸிடெண்ட்டா?”

“லூசா நீ? திடீர்னு நீ வெளிய வருவேன்னு நான் கனவா கண்டேன்? வேணும்னு யாரும் கட்டிப் பிடிக்கலை”

“காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாஞ்சது மாதிரி பாஞ்சி பிடிச்சிக்கிட்டு இப்ப ஒண்ணுமே இல்லைன்னு சொல்ல வேண்டியது”, என்று எரிச்சலுடன் சொன்னாள்.

“நீ விழுந்துறக் கூடாதுன்னு பிடிச்சது தப்பா டி?”

“என்ன டி யா?”

“அதெல்லாம் எப்பவாது வரும். கண்டுக்க கூடாது. இப்ப என்ன உன் பிரச்சனை?”, என்று சற்று எரிச்சலுடன் வந்தது அவன் குரல்.

“ஓஹோ பண்ணுறதையும் பண்ணிட்டு உங்களுக்கு கோபம் வேற வருமா?”, என்று அவள் மீண்டும் எகத்தாளத்துடன் கேட்க அவனுக்கு சுள்ளென்று கோபம் எழுந்தது. அவன் கோபம் ஏறுவதைக் கண்டவள் திகைத்த படி நிற்கும் போதே வேகமாக அவள் அருகே வந்தவன் அவள் கை பற்றி தன் பக்கமாக இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் விழுந்த உமா தடுமாறி நிற்பதற்கு முன்பே அவன் கரங்கள் அவளை இறுக அணைத்துக் கொண்டது. அவனது பிடியில் அவள் உடலே வலித்தது. அந்த வலியை விட அவன் அருகாமை அவளை பாதித்ததை தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெகு அருகில் நின்ற அவன் மார்பில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்ற வேகம் எழ அவளை நினைத்தே அவளுக்கு கோபம் வந்தது.

அந்த கோபத்தைக் காட்ட முடியாமல் அவள் கண்கள் கண்ணீரை வடிக்க அதைக் கண்டு அவளை விட்டு விலகி நின்றான் சிவன். “இது தான் வேணுக்குன்னு நடக்குறது. அப்ப நடந்தது தன்னால நடந்தது. நானா ஒண்ணும் உன் மேல விழலை. நீ தான் விழுந்த. இன்னொரு தடவை நான் பண்ணாத விஷயத்தை பண்ணினேன்னு சொன்னா கண்டிப்பா பண்ணிட்டே திட்டு வாங்கிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்து விட்டான்.

வெளியே வந்தவனுக்கு தான் ஏன் அவளிடம் அப்படி நடந்து கொண்டோம் என்று கஷ்டமாக இருந்தது. மன்னிப்பு கேக்கலாமா என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதை வைத்து அவள் வேறு ஏதாவது பிரச்சனையைக் கிளப்பி விடக் கூடாதே என்ற பயத்தில் அவள் எதிரே கூட செல்ல வில்லை.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!