Skip to content
Post Views: 4,294
அப்போது ஒரு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த உமாவுக்கு அவன் போட்டோ எடுக்காமல் சென்றது ஒரு மாதிரி ஆகி விட்டது.
“ஒரு போஸ் வேஸ்ட் ஆகிருச்சே டி? அவன் கிளம்பிட்டான்”, என்று நிஷா சொல்ல “ஏய் மேன்”, என்று கத்தி விட்டாள் உமா.
Advertisement
அவன் குழப்பமாக திரும்பிப் பார்க்க “நாங்க இங்க போட்டோக்காக போஸ் கொடுத்துட்டு இருக்கோம். நீ பேசாம போற?”, என்று அதட்டலுடன் வந்தது அவள் குரல். அவன் அவளை வழிவது போல பார்க்க வில்லை என்ற அவள் உள்ளத்தின் புகைச்சலால் இந்த கோபமா என்று அவளுக்கு மட்டுமே தெரியும்.
Advertisement
“நிறைய போட்டோ எடுத்தாச்சு. அதான் கிளம்பிட்டேன்”, என்று தன்மையாக தான் பதில் கொடுத்தான் சிவன்.
Advertisement
“அது எங்க இஷ்டம். சம்பளத்துக்கு தானே வந்திருக்க? நாங்க பொண்ணோட பிரண்ட்ஸ். அனிதாவே எங்களை போட்டோ எடுக்க சொன்னா தானே? வா வந்து எடு”, என்று அவள் அரட்ட அவனுக்கு எரிச்சல் வந்தது.
Advertisement
ஆனாலும் “சாரிங்க, பொண்ணு மாப்பிள்ளையைக் கவர் பண்ணனும். நான் போறேன்”, என்று பொறுமையாகச் சொன்னான்.
“என்ன திமிர்? இப்ப வரப் போறியா இல்லையா?”, என்று அவள் ஆணவமாக கேட்க அவனுக்கும் கோபம் வந்தது.
“உங்க இஷ்டத்துக்கு போட்டோ எடுக்கணும்னா ஆள் வச்சு எடுங்க. உங்க இஷ்டத்துக்கு ஆடணும்னு எனக்கு தலையெழுத்து இல்லை. நான் பொண்ணு மாப்பிள்ளையை தான் போட்டோ எடுக்க வந்தேன். கண்டவங்களையும் இல்லை”, என்று முகத்தில் அடிப்பது போல பேசியவன் அங்கிருந்து சென்று மணமக்களைப் தனியே போட்டோ எடுக்க அனுமதி கேட்டான்.
ரஞ்சித் மற்றும் அனிதா இருவரும் சரி என்று சொல்லவே அவர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்று விட்டான். அவனுக்கு உமா மீது கோபம் உருவாகி இருந்தது.
“என்ன மா அதட்டுறா? பாக்க தான் அழகு போல?”, என்று எண்ணி விட்டு வேலையில் கவனம் செலுத்தினான்.
“என்ன டி இவன் இப்படி அசிங்க படுத்திட்டு போய்ட்டான்?”, என்று கேட்டாள் தனா.
“சரி விடுங்க. அதான் நிறைய எடுத்துட்டோமே?”, என்றாள் நிஷா. ஆனால் உமாவுக்குள் மட்டும் அவன் மீது வன்மம் எகிறிக் கொண்டே இருந்தது. முதல் கோபம் அவன் அவளை ஆர்வமாக பார்க்காதது. இரண்டாவது மற்ற ஆண்கள் ஒரு நொடியாவது நின்று அவளை ரசிக்க அவனோ சாதாரணமாக அவளைக் கடந்து செல்வது. மூன்றாவது அவளை திட்டியது. அனைத்தும் சேர்ந்து அவளுக்கு கோபத்தை உருவாக்கி இருந்தது.
அது அன்று முழுவதுமே இருந்தது. அவனை முறைத்த படியே தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அவனுக்கு இப்போது அவள் மீது கோபம் இல்ல தான். ஆனால் வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை மீறி தங்க கலரில் சோளி உடை அணிந்து அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தவளை ரசிக்கவே செய்தான்.
இரவு ரிசப்ஷன் முடிந்ததும் உமாவும் அவளது தோழிகளும் அனிதா வீட்டுக்குச் சென்று விட சிவனோ கல்யாண மண்டபத்தில் தங்கி இருந்தான். அன்றைய இரவு அனைவருக்கும் அமைதியாக கடக்க உமா மற்றும் சிவனுக்கு மட்டும் என்றும் இல்லாத வகையில் சிறு சலனத்துடன் கடந்தது. இருவரும் தங்களின் வீட்டுக்கு அழைத்து பேசினார்கள் தான். ஆனால் ஒரு அமைதி இன்மையை இருவரும் உணர்ந்தார்கள்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. ரஞ்சித் மற்றும் அனிதா திருமணம் நடக்கும் கல்யாண மண்டபத்தை கவர் பண்ணிக் கொண்டிருந்தான் சிவன். பின் மாப்பிள்ளை பெண் வந்து மேடையில் அமர்ந்ததும் அவனுக்கு நிற்க நேரமில்லை.
திருமணம் நல்ல படியாக நடந்தது. மேடையில் மணமக்கள் நிற்க ஒவ்வொருவராக மேடை ஏறியதை சிவன் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். அவன் ஒத்தை ஆளாக சிரமப் படுவதைப் பார்த்த மாப்பிள்ளையின் தந்தை தங்களின் உறவினன் ஒருவனை சிவனுக்கு உதவிக்கு அனுப்பினான். அதற்கு பிறகு சிவனுக்கு வேலை ஈசியாக இருந்தது.
இருந்த வேலையில் உமாவை சைட் அடிப்பதைக் கூட விட்டு விட்டான். ஆனால் வெள்ளைக் கற்கள் பதித்த ரோஜா வண்ண உடையில் மேடை ஏறிய உமாவைக் கண்டு சிவனுக்கு சித்தம் கலங்கித் தான் போனது.
ஏனோ அவனுடைய உள் மனம் அவள் உன்னவள் என்று அவனிடம் சொல்வது போலவே இருந்தது. ஆனால் அவளோ அவனை முறைத்துக் கொண்டே திரிய அவனும் வேலையில் கவனம் செலுத்தினான். அவன் தன்னைக் கண்டு கொள்ளாதது அவள் கோபத்தை அதிகப் படுத்த தான் செய்தது. அவள் மனநிலையை தோழிகளும் சரியாக புரிந்து கொள்ள வில்லை. அவர்கள் சிவனையே மறந்திருந்தார்கள். சாப்பாடு பற்றி தான் அவர்கள் கவனம் இருந்தது.
தோழிகள் அவளை கவனித்திருந்தால் அவள் மனதை அவர்கள் மாற்றி இருப்பார்களோ என்னவோ? திருமண மண்டபத்தில் எல்லாம் முடிந்ததும் பெண் மாப்பிள்ளை மறுவீட்டுக்கு கிளம்பினார்கள். சிவன் உமா எல்லாரும் அங்கே தான் சென்றார்கள்.
அனிதாவின் வீட்டில் வைத்து சிவனுக்கே தெரியாமல் அவனது பர்சை திருடி விட்டாள் உமா. அவளை அவமானப் படுத்தியவனைப் பழி வாங்கவே அவள் அப்படிச் செய்தது. அவள் எடுத்ததை அவன் கவனிக்க வில்லை.
மாலை ஐந்து மணிக்கு பெண்கள் நால்வரும் கிளம்பி முடித்து அனிதா மற்றும் ரஞ்சித்திடம் சொல்ல அவர்கள் அருகே சென்றார்கள்.
“அண்ணா, நாங்க கிளம்புறோம். நீங்க உங்க உடம்பை பாத்துக்கோங்க”, என்று சொன்னாள் நிஷா.
அனிதா அவளை முறைக்க “என்னது? என்ன சொல்ற நீ? நீங்க அஞ்சு பேரும் திக் பிரண்ட்ஸ்ன்னு தெரியும். போகும் போது எங்க பிரண்டை கண் கலங்காம வச்சிக்கோங்கன்னு நீங்க கண் கலங்குவீங்கன்னு நான் நினைச்சேனே?”, என்று கேட்டான் ரஞ்சித்.
“ஹா ஹா, இவளை ஒருத்தர் கலங்க வைக்க முடியுமா? ஆனா இவ ஊரையே அழ வைப்பா. அதான் உங்களை கவனமா இருக்கச் சொல்றோம்”, என்று தனா சொல்ல அனிதா அவள் காலில் ஒரு மிதி மிதித்தாள்.
ஆனால் ரஞ்சித் ஆ என்று அலற “நான் சொல்லலை, இது தான் நடக்கும்னு. என்ன மிதிச்சிட்டாளா?”, என்று கேட்டாள் நிஷா. “ஐயோ சாரிங்க, நான் அவன்னு நினைச்சு….”, என்று பதறினாள் அனிதா.
மற்ற அனைவரும் சிரித்தார்கள். அவர்கள் சேட்டையில் ரஞ்சித்துக்கும் சிரிப்பு தான் வந்தது. போகும் போது அனிதா காதில் மற்ற நால்வரும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க “அப்படி என்ன பேசுறாங்க?”, என்று குறுகுறுப்பாக இருந்தது ரஞ்சித்க்கு.
இந்த காட்சியை எல்லாம் ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சிவனும் ரசிக்க தான் செய்தான். உமாவின் சிரிப்பு அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.
ஒரு வழியாக நால்வரும் கிளம்பி வெளியே வந்தார்கள். அனிதாவின் தந்தை ஒரு ஆட்டோவை வரச் சொல்லி அவர்களை பஸ் ஸ்டாண்டில் விடச் சொன்னார். ஆட்டோ வந்ததும் நால்வரும் ஏறி அமர்ந்தார்கள்.
ஆட்டோ கிளம்பப் போகும் போது சிவனும் வெளியே வந்தான். அதுவும் உமாவைப் பார்க்க தான் வந்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் கடைசியாக ஏறி அமர்ந்தாள்.
போகப் போகிறாளா? இனி இவளை எப்போது பார்ப்பேன் என்ற எண்ணம் வந்தது. கூடவே அவள் திமிர் பேச்சும் அவனுக்கு நினைவில் வந்தது. எல்லாவற்றையும் எளிதாக கடந்து விடும் அவனால் இன்று அவள் விஷயத்தில் அதைச் செய்ய முடிய வில்லை. அவன் அவளையே பார்க்க அப்போது அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
பார்த்தவளின் கண்கள் பளபளத்தது. “என்ன இவ இப்படி பாக்குறா? இவ்வளவு நேரம் முறைச்சிட்டே தானே இருந்தா”, என்று அவன் குழப்பமாக நிற்கும் போதே ஆட்டோ டிரைவர் ஆட்டோவை எடுத்தார். ஆட்டோ நகர ஆரம்பித்ததும் தன்னுடைய ஹேன்ட்பேகில் இருந்த பர்சை கையில் எடுத்து அவனுக்கு தெரியும் வகையில் ஆட்டினாள்.
சட்டென்று திகைத்துப் போனவன் அவசரமாக பேன்ட் பாக்கெட்டில் பர்ஸைத் தேட அங்கே அது இல்லை என்றதும் அவள் எடுத்துச் செல்வது தன்னுடையது தான் என்று புரிந்தது.
“ஏய் அது என்னோட பர்ஸ். ஆட்டோ நிறுத்துங்க…”, என்று அவன் கத்த ஆட்டோ நில்லாமல் சென்றே விட்டது. திகைத்து நின்று விட்டான் சிவன். சட்டென்று அவனுக்கு என்ன செய்ய என்று கூட தெரிய வில்லை. அவன் இப்படி ஒரு நிகழ்வை எதிர் பார்க்கவும் இல்லை.
அப்போது அவனை போட்டோ எடுக்க அழைக்க அங்கே சென்றாலும் பர்ஸ் பற்றியே அவன் நினைவு சென்றது. இரவு ஒன்பதரை மணிக்கு எல்லா வேலையும் முடிந்தது.
அவன் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. ஆனால் கையில் பணம் இல்லாமல் எப்படிச் செல்ல என்று அவனுக்குத் தெரிய வில்லை. உமாவின் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. எரிச்சலோடு இருக்கும் போது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
போனை எடுத்து “ஹலோ யாருங்க”, என்று சுள்ளென்று தான் கேட்டான் சிவன்.
காதல் தொடரும்….
error: Content is protected !!