Skip to content
Post Views: 2,671
அன்பு – 18
இன்றோடு ஒரு மாதம் கடந்திருந்தது!!!
Advertisement
தமிழினி இப்பூவுலகை விட்டு பிரிந்து சென்று!!!
இருந்த ஒரு உறவும் கானல் நீராக கரைந்து போனதில், மனதளவில் மிகவும் துவண்டு போன பிரபஞ்சன், சுத்தமாக தன் பேச்சை சுருக்கிக் கொண்டு, எந்நேரமும் சூனியத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவனை கொஞ்சம் கொஞ்சமாய் அந்த மன அழுத்தத்தில் இருந்து மீட்டது கவி மட்டுமே!!!
Advertisement
Advertisement
எதற்கு இனி வாழ வேண்டும் என வாழ்வின் மீது பற்றற்று இருந்தவனுக்கு,
எனக்காகவேணும் கண்டிப்பாக நீ சிறப்பாய் வாழ்ந்தாக வேண்டும் என தன் ஒவ்வொரு செயலாலும் அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தாள் பெண்ணவள்.
Advertisement
முதல் இரண்டு வாரங்கள், கல்லூரி செல்வது போல் அவனின் இல்லம் சென்று, அவனை சாப்பிட வைத்து, வாயைத் திறக்க மாட்டேன் என தனக்குள் இறுகிப் போய் அமர்ந்திருப்பவனை தன் பேச்சால் மெது மெதுவாய் இயல்புக்கு மீட்டுக் கொண்டுவந்திருந்தாள்.
கவியின் கட்டாயத்தின் பெயரில் மூன்றாம் வாரம் தான் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்திருந்தான் பிரபஞ்சன்.
உண்மையில் வீட்டிற்குள்ளே அடைந்து கிடப்பதைக்காட்டிலும், இந்த வெளிக்காற்றை சுவாசிப்பது பிரபஞ்சனுக்கு சற்று இதமளிக்க, கவிக்காக இல்லையென்றாலும், அவனின் மனமாற்றத்திற்காகவே தொடர்ந்து கல்லூரி வரத்தொடங்கிவிட்டான்.
இருந்தும் அவன் முகத்தில் நிரந்தரமாய் குடியேறிவிட்ட வெறுமை கவியை மிகவும் சோதிக்க, என்ன செய்தாவது அவளின் பழைய பிரபாவை மீட்டுவிட தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டே இருந்தாள்.
அன்றும் அதுபோல, புத்தகத்தை திறந்து வைத்துவிட்டு வேறொரு சிந்தனையில் மூழ்கிப் போய் கிடந்த பிரபஞ்சனை வருத்தத்துடன் பார்த்த கவி,
“பிரபா!!! இப்படி இருக்காத டா!!! எனக்குப் புரியுது.. ஆண்ட்டி இல்லாதது உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு.. பட் அந்த இடத்திலேயே தேங்கி நின்னுட முடியாதுல.. மூவ் ஆன் ஆகுறது தானே வாழ்க்கை பிரபா..”
“அம்மா இடத்தை யாராலையும் ரீ – பிளேஸ் பண்ண முடியாது!! பட் டிரஸ்ட் மீ!!! உனக்கு யாருமே இல்லைன்ற எண்ணமே வராதபடி, உனக்கு எல்லாமுமா நான் இருந்து உன்னை பார்த்துப்பேன் பிரபா!!!”
“தயவுசெஞ்சு நீ இப்படியே இருக்காத!! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!!!” என பேசிக்கொண்டே வந்தவள், இறுதியில் எவ்வளவு அடக்கியும் முடியாமல் கண்ணீர் சிந்திவிட,
அவளின் கண்ணீர் பிரபாவை மிகவும் அசைத்துப் பார்த்தது!!!
“என்னால முடியலை கவி!!! நான்.. என் வாழ்க்கையே இப்படித்தான் இருக்குமா?? நான் என்ன கவி தப்பு செஞ்சேன்?? எல்லார் மாதிரியும் எதுக்கு எனக்கு வாழ்க்கை அமையலை?? எவனோ பண்ணின தப்புக்கு நானும் என் அம்மாவும் இத்தனை வருஷமும் அவமானப்பட்டோம்.. அவங்க ரொம்ப பாவம் கவி!! ஒரு நாள் கூட அவங்க மனசு விட்டு சிரிச்சு நான் பார்த்ததே இல்லை.. என்னென்னமோ கனவு வச்சிருந்தேன் கவி!! அம்மாவை எப்படி எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு!! கடைசி வரைக்கும் சந்தோஷம்னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்காமயே அவங்க போயிட்டாங்க!!! இதெல்லாம் நினைக்க நினைக்க இங்க ரொம்ப வலிக்குது!!!” என தன் நெஞ்சைக் குத்திக்கொண்டு அவன் பேசுகையில், அவன் கண்களில் தெரிந்த வலி பெண்ணவளை மிகவும் பாதித்தது.
“அவங்களுக்கு இருந்த ஒரே சந்தோஷமே நீ தான் பிரபா!!! நீ இப்படி அவங்களை நினைச்சு கஷ்டப்படுறதைப் பார்த்தா அவங்க எவ்வளவு வேதனைப்படுவாங்க!!! மேல போயாச்சும் அவங்க நிம்மதியா இருக்கட்டும் பிரபா!!! இந்த மோசமான உலகமும், சமுதாயமும் அவங்களுக்கு கொடுக்காத அமைதியை, அந்த உலகமாச்சும் அவங்களுக்கு கொடுக்கட்டுமே!!!” என்றவளை விரக்திச் சிரிப்புடன் நோக்கிய பிரபஞ்சன் பதிலேதும் பேசவில்லை.
ஆனால் அதற்குப்பின்னான நாட்களில் அவனிடம் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட, கவிக்கு மிகவும் மகிழ்ச்சி!!
தனக்காக இத்தனை பார்க்கும் பெண்ணிற்காக வேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததை ஏற்றுக்கொண்டு வாழப்பழக வேண்டும் என அவன் நினைத்து செயல்பட்டு, அதில் கொஞ்சம் வெற்றியும் கண்டான்.
முன்பு எப்போதும் விட, பிரபாவை விட்டு இம்மியும் நகராமல் இருந்து, உனக்காக நான் இருக்கிறேன் எனும் உணர்வை அவன் மனதில் அழுந்தப் பதியச் செய்தாள் கவி.
இப்பொழுதெல்லாம் பிரபாவின் மனமும் கவியின் அண்மையை மிகவும் வேண்ட, அவளாவது கடைசிவரை தன்னுடனே இருக்க வேண்டும் என அவனறியாமலே அவனின் மனம் விரும்பத் துவங்கியிருந்தது.
முன்பு போல, வண்ணமயமாக நாட்கள் செல்லவில்லை என்றாலும், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க, அமைதியாகவே நாட்கள் சென்றது.
ஆனால், மறுபக்கம் அங்கே இவர்களின் உறவைப் பிரிக்க வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதை பாவம் அந்த இளம்சிட்டுக்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
ஆம், சேதுராமனுக்கு இவர்களின் விஷயம் தெரிய வந்திருந்தது.
பிரபாவின் அன்னை இறந்த சமயமே, மகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பொற்கொடி, கணவனின் கவனத்திற்கு அந்த விஷயத்தைக் கொண்டு சென்றிருந்தார்.
முன்பே மகளின் மேல் ஏற்பட்டிருந்த சிறு துளி சந்தேகம், மனைவியின் கூற்றில் பூதகரமாய் மாற, மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மகளை அதிகம் கவனிக்கத் தொடங்கிவிட்டார் மனிதர்.
பிரபாவைப் பற்றிய எண்ணங்களில் சிக்கித் தவித்திருந்த கவிக்கு, தந்தையின் ஆராய்ச்சிப் பார்வை கவனத்தில் பதியவில்லை.
அதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆரம்பமாகிப் போனது!!
அவள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியைப் பற்றி சேதுராமன் ஒருநாள் பேச்சுவாக்கில் விசாரிப்பது போல் அவளுக்கு வலை விரிக்க,
சட்டென என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல், பதற்றத்தில்,
“தொலைஞ்சு போச்சுப்பா!!. எங்க தேடியும் கிடைக்கலை.. ” என பயத்தை மறைத்துக்கொண்டு பொய் சொல்லிய கவி,
“காலேஜ்க்கு லேட் ஆச்சுப்பா!! நான் கிளம்புறேன்!!” என தந்தையின் பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென வெளியே சென்றுவிட்ட மகளைத் தான் கண்களில் பொங்கிய கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.
“என்கிட்டேயே அந்த *** நாய்க்காக பொய் சொல்ல துணிஞ்சுட்ட நீ!!!! ம்ம்ம்!! அவனை சும்மாவே விடமாட்டேன்” என சொல்லிக்கொண்டவரின் குரலில் தான் எத்தனை வன்மம்!!!!
கணவரின் கோபத்தைக் கண்ட பொற்கொடிக்கே குலை நடுங்க,
“என்னாச்சுங்க???” என மெதுவாய் விசாரித்தார்.
“பிள்ளையாடி வளர்த்து வச்சிருக்க?? காலேஜ் போயிட்டு வர பொண்ணு என்ன பண்றா?? ஏது பண்றேன்னு கவனிக்காம அப்படி என்ன ம** புடுங்குற வேலை உனக்கு???” என மகளின் மேல் இருக்கும் கோவத்தை மனைவியிடம் காட்டியவர், தன் சட்டைப்பையில் இருக்கும் அந்தச் செயினை எடுத்து பொற்கொடியின் முகத்தின் மேல் வீசினார்.
கணவனின் ருத்ரதாண்டவத்தில் மிரண்டு போய் நின்றிருந்த பொற்கொடிக்கு, சற்று நேரம் சென்றே அது மகளின் தொலைந்து போன நகை என அடையாளம் தெரிய,
“இது!!! இது அஞ்சலியோட தொலைஞ்சு போன செயின் தானங்க?? உங்ககிட்ட எப்படி???”
“மண்ணாங்கட்டி!!! நகையும் தொலையலை ஒன்னும் தொலையலை!! உன் மக இதை வித்திருக்கா!!! அதுவும் யாருகிட்ட?? என்கிட்ட வட்டிக்கு வாங்கிப் பிழைக்கிற ஒரு நாய்கிட்ட போய் நகையை வித்து காசு வாங்கிருக்கா!??? என் மரியாதையை குழி தோண்டி புதைக்கவே உன் பொண்ணு பிறந்திருக்காளா??” என உட்சபட்ச கோபத்தில் உறுமிய சேதுராமனைக் கண்டு பயம் கொண்ட பொற்கொடி வாயே திறக்கவில்லை.
“படிக்க உன் பொண்ணை காலேஜ் அனுப்புனா.. காதல் பண்ணுறாளாமாம்.. அதுவும் அந்த **** நாயை!!! ” என பிரபாவை நினைத்த மாத்திரத்தில் சேதுராமனுக்கு அவனை கொன்று போடும் வெறி பிறக்க,
“இந்த கழுதைக்கு அறிவில்லைனாலும் அந்த நாய்க்கு தோண வேணாம்?? நம்ம யாரு?? என்ன?? இந்த மாதிரி பொண்ணு பக்கத்துல போகயாச்சும் நமக்கு அருகதை இருக்கா இல்லையான்னு தெரிய வேணாம்?? “
“ஏதோ நல்லா படிக்கிற பையனா இருக்கானே நம்மனால எதுக்கு ஒருத்தனோட படிப்பு பாழகன்னு அமைதியா அன்னைக்கு எச்சரிச்சு விட்டா, பய என்னையை ஈசியா நினைச்சுட்டான் போல!!! விட மாட்டேன்!! அவனை சும்மாவே விட மாட்டேன்!!” என தொடையைத் தட்டிக்கொண்டு ஆக்ரோஷமாய் பேசியவரின் கண்களில் தெரிந்த வன்மம், பொற்கொடிக்கே பயத்தை உண்டுபண்ண, மகளை நினைத்து தான் ஆத்திரம் கொண்டார்.
அவரின் எண்ணவோட்டம் புரிந்ததைப் போல்,
“நீ இத்தனை வருஷமும் எப்படி கேனையா ஒன்னும் தெரியாம இருந்தியோ அப்படியே இரு!! இதை எப்போ என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும்!!! உன் மககிட்ட எதையும் தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்க வேண்டாம்!!!” என முடிவாக சேதுராமன் சொல்லிவிட, கணவர் என்ன முடிவில் தான் இருக்கிறார் எனத் தெரியாமல் பொற்கொடிக்கு தான் மண்டை வெடித்தது.
“ரொம்ப யோசிக்காத!! நான் நாளைக்கு ஜல்பல்லி(சேதுராமனின் பூர்வீகம்) போறேன்.. நான் வர வரைக்கும், உன் மகளுக்கு சந்தேகம் வராம எப்பயும் போல அமைதியா சோத்தை ஆக்கிப்போட்டுட்டு மட்டும் இரு!! வேற ஏதாவது சொதப்பி வச்ச, உன்னையும் சேர்த்து மேல அனுப்பிடுவேன்” என எச்சரிக்கை விடுத்து அவர் உள்ளே செல்லத்திரும்ப,
ஜல்பல்லி என்றதும் பொற்கொடிக்கு நெஞ்சம் பதற, தன் பயத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு,
“இப்போ.. இப்போ எதுக்குங்க அங்க போகணும்??” என தைரியத்தை திரட்டி பொற்கொடி கேட்க,
அவரை அழுத்தமாய் பார்த்த சேதுராமன்,
“நீ எதை நினைச்சு பயப்படுறியோ.. அதுக்குத்தான்” என்று அழுத்தமாக சொல்லி பொற்கொடியின் ரத்த அழுத்தத்தை உயர்த்தினார்.
பொற்கொடிக்கு ஐய்யோ என்றிருந்தது.
“வேற ஏதாவது பண்ணலாம்ங்க.. நான் பேசுறேன் அஞ்சலிக்கிட்ட.. புரிஞ்சுப்பா!!” என மகளைக் காக்க பொற்கொடி முயல,
“இதோ பார்!!! வாயை மூடிட்டு இருந்தா உனக்கு நல்லது.. இல்லை உன் மகளைக் காப்பாத்துறேன்னு நீ ஏதாவது பண்ணா உன்னையும் வெட்டி, விறகு வச்சு எரிச்சிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவேன்!!!”
இத்தனை வருடம் அவருடன் ஒன்றாய் வாழ்ந்த மனைவியிடம் பேசுகிறோம் எனும் சிந்தனை கூட இல்லாமல், அவ்வளவு கொடூரனாய் மாறிப் போயிருந்தார் சேதுராமன்.
தன் கணவர் எப்படி ஆகிவிடக்கூடாது என பயந்து, அவரை பல வருடங்களுக்கு முன்பு, போராடி இங்கே அழைத்து வந்தாரோ, அது வீணாய் போனதில் மகளின் மேல் கடும் ஆத்திரம் கொண்டார் பொற்கொடி!!!
‘ பாவி!! எத்தனை தடவை சொன்னேன்.. இவங்க குடும்பமே கொடூரமானதுன்னு.. இப்போ அதுலயே போய் சிக்கப்போறா!! தான் தலையில தானே மண்ணை வாரி போட்டுக்கிட்டா.. படுபாவி!!!’ என மகளை நினைத்து ஆதங்கம் கொண்டவர், அதற்குமேல் கணவருக்கு பயந்து வேறேதும் பேசிக்கொள்ளவில்லை.
சொன்னது போலவே, சேதுராமன் அன்று இரவே ஜல்பல்லி கிளம்பிச் சென்றுவிட,
தந்தை எங்கே என்று கேட்ட மகளிடம் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறார் என மட்டும் சொல்லிய பொற்கொடி, தன்னை மீறி மகளை முறைத்துவிட்டுச் செல்ல, கவிக்கு ஏதோ நெருடலாக இருந்தது.
அன்று மட்டும் அல்ல, அதைத்தொடர்ந்து வந்த நாட்கள் அனைத்தும், பொற்கொடியின் நடவடிக்கை முன்னுக்குப் பின் முரணாகவே இருக்க, கவிக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.
‘ இவர்களுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது!!!!’ என நம்பிய கவி, அன்று தெரியாமல் தன் அன்னை தந்தையுடன் பேசுவதை எதேச்சையாக கேட்க நேரிட, அவளுக்கு பயத்தில் நெஞ்சம் படபடத்தது!!!
“அப்போ!!! இவங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சு!!!” என கவிக்கு புரிந்து போக,
அவர்கள் ஏதாவது செய்வதற்கு முன் தாம் முந்திக்கொள்ள வேண்டும் என அன்று இரவெல்லாம், ஏதேதோ சிந்தித்து புரண்டு படுத்தவள், விடியற்காலையில் ஒரு தெளிவு கிட்ட, ஒரு முடிவுடன் கல்லூரிக்குக் கிளம்பினாள்.
***
இங்கே ஜல்பல்லியில்,
தன் ஒரே தமக்கையின் மகனான ஜெயசிம்மனின் முன் பவ்யமாக அமர்ந்திருந்தார் சேதுராமன்.
கவியைப் பற்றி சேதுராமன் மூலம் அறிந்த அனைத்தையும் தன்னுடைய ஆட்கள் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டவனின் முகத்தில் இருந்த அமைதியை வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்பதை சேதுராமனால் கண்டுகொள்ளமுடியவில்லை.
“அல்லுடு(மாப்பிள்ளை)!!! என்ன அமைதியா இருக்கீங்க??” என தயங்கிக்கொண்டே சேதுராமன் கேட்க,
“அஞ்சலி தான் என் பார்யான்னு(மனைவி) என் அம்மா சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி தான் வளர்த்தாங்க!!!” என அவன் அமைதியாக சொல்வது போல் இருந்தாலும், அவன் குரலில் தெரிந்த அழுத்தம், நீ அஞ்சலியிடம் என்னைப்பற்றி சொல்லி வளர்க்கவில்லை என சேதுராமனை குற்றம் சாற்றியது!!
அதில் தலையை குனிந்து கொண்ட சேதுராமன்,
“இல்லை அல்லுடு!!! அது!! மாவய்யா மேல இருந்த கோபத்துல!!” என சமாளிக்கப் பார்க்க,
வேண்டாம் என கைநீட்டி அவரைத் தடுத்துவிட ஜெய்சிம்மன்,
“என்ன காரணம் சொன்னாலும் நீங்க பண்ணினது தப்பு தான். அஞ்சலி பிறந்தபோவே அவ எனக்குத்தான்னு நிச்சயம் பண்ணினதை நீங்க மறந்திருக்கலாம்.. ஆனா!!! நான்…” மறக்கமாட்டேன் என்பது போல் தலையை இடவலமாக அசைத்து மறுத்தவன்,
“இப்போ உங்களுக்கு ஒரு பிரச்சனை வரவும் தான் எங்க நினைப்பு வந்திருக்கு, ஹம்ம்ம்!! ஆனா நீங்க வரலைனாலும், எனக்கானதை எடுத்துக்க நானே வந்திருப்பேன்!!!” என தீர்க்கமாக மொழிந்தவனின் குரலில் மறைந்திருந்த தீவிரம், சேதுராமனுக்கே சற்று அச்சத்தைக் கொடுத்தது.
“நீங்க எதைப்பத்தியும் கவலைப்படாம போங்க!!! இங்க எலெக்ஷன் டைம்!! நான் இங்க இருந்தே ஆகணும்!!! என் பார்யாவை பத்திரமா பார்த்துக்கோங்க!!! நேரம் வரட்டும்!! நான் வரேன் அங்க!!! என் அஞ்சலி அவ!!! என்னை மீறி எதுவும் நடக்காது!! நடந்தா…” என சொல்லாமல் விட்டவன் என்ன செய்வான் என அவன் பார்வையிலே கண்டுகொண்ட சேதுராமன் மிரண்டு போய் பார்க்க,
“நீங்க போகலாம்!!!” என சட்டென முகத்தை மாற்றி புன்னகையுடன் அவருக்கு விடைகொடுத்தான் அந்த விடாக்கண்டன்.
“சூரியனை கோள்கள் சுற்றுவது போல், காதலர்களை பிரச்சனைகள் சுற்றி வர,
சுழலில் இருந்து தப்பித்து சுகமாய் கரை சேர்வார்களா?? இல்லை சுழலில் சிக்கி மாய்ந்துப்போவார்களா??”
error: Content is protected !!