Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்…..23

அன்பில் இணைந்த இதயங்கள்….23

கயல்விழியின் வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.இன்று நந்திதாவின் ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் விழா நேற்றைய இரவே வீடு கலைகட்டிவிட்டது.வனிதாவும்,ராகவும் அவர்களின் மகளுடன் வந்துவிட்டனர்.பார்வதியும்,குருவும் நிற்க நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருந்தனர்.இதில் வனிதாவின் மகளுக்கு காய்ச்சல் கண்டிருக்க அவள் வனியை விடாமல் பிடித்துக் கொள்ள கயல்விழி தான் பார்வதிக்கு உதவிக்கு நிற்கும் படியானது.

கயலிற்கு சமையலின் புகை ஒவ்வாமையை தந்த போதும் பொறுத்துக் கொண்டு நின்றாள்.நந்திதாவை வனிதா அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.காலை பத்து மணிக்கு வைபோம் துவங்கும் நேரம் விருந்தினர் வந்தபடி இருக்க வீடு பரபரப்பாக இருந்தது.

நந்துவின் அறையில்



Advertisement

“தலையை ஆட்டாதடி…”என்று வனி நந்துவின் தலையில் மெல்ல தட்ட,

“ப்ச்…வனிக்கா…நீ போ கயல் அக்காவை கூப்பிடு அவ தான் சரியா செய்வா…”என்று கூற,

“நானும் அவளை தான் உனக்கு அலங்காரம் செய்ய சொன்னேன்….அவ தான் சமையல்கட்டுல புகுந்துகிட்டு வெளியில வரமாட்டேங்குறா….”என்று கூறி கொண்டே தலையை சரி செய்ய முயன்று முடியாமல் போக,

Advertisement

“ச்சு…வனிக்கா…உனக்கு இது சரியா வரலை நீ கயலக்கா வை கூப்பிடேன்….”என்று நந்து பிடிவாதமாக கூற,

Advertisement

“சரிடீ….இரு வரேன்….”என்றுவிட்டு வனி கயலை அழைக்க சென்றாள்.

சமையல் அறையில் அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருக்க கயலோ ஏதோ நினைவில் மேடையின் அருகில் நின்று கொண்டிருந்தாள்.மனதெங்கும் சத்யாவின் நினைவு தான் பசலை நோய் வந்தவள் போல் இருந்தாள்.இளைத்து கருத்து போய் கயலின் மொத்த உருவமே இந்த இரு வாரங்களில் மாறியிருந்தது.பார்வதி மகளிற்கு புகுந்த வீட்டில் ஏதோ பிணக்கு அதனால் தான் அவள் இவ்வாறு உள்ளாள் என்று நினைத்தவர் அதை அவளிடம் கேட்க,

“ம்மா….இந்த கேள்வியை இதோட விடு….என்னால முடியலை….”என்று கூறிவிட,

Advertisement

“கயல்….எந்த பிரச்சனைனாலும் அம்மா உன் பக்கம் தான் இருப்பேன்…அதனால பயப்படாம இரு….புரியுதா….”என்று தைரியம் கூறியவர் நந்திதாவின் விசேஷம் முடிந்தவுடன் அமிர்தாவுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

கயலை கூப்பிட வந்த வனிதா பால் பொங்கி வழிந்து கொண்டிருந்ததையும் அதை உணராமல் கயல் நின்று கொண்டிருப்பதையும் கண்டவள் வேகமாக அடுப்பின் அருகில் வந்து அதை அனைத்துவிட்டு,

“கயல்…கயல்….”என்று அழைக்க,வனிதாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள்,

“ஆங் என்ன வனி…”

“என்னடீ…எந்த உலகத்தில இருக்க…”என்று கடிய,

“ப்ச் என்ன ஆச்சு வனி….”என்று கயலும் எரிச்சலில் கத்த,

“ம்ம்….இங்க பாரு…பால் காஞ்சி பொங்கி வழியுது….அது கூட தெரியமா நிக்குற…”என்றவள் வழிந்த பாலை துடைத்தாள்.

“அச்சோ….சாரி….வனி…நான் தான் கவனிக்கல….”என்ற கயலும் வனிக்கு உதவினாள்.

“என்னடீ இது அடுப்படியில ஏதோ கனவு கண்டுகிட்டு நிக்குற….என்ன ஆச்சு…”என்று கேட்க,

“ஆங்…ஒண்ணுமில்ல வனி….நான் ஏதோ…ப்ச் விடு….நீ ஏன் இங்க வந்த உன் பொண்ணு வேற அழுதுகிட்டே இருந்தா அவளை பாரு….நான் இங்க பார்த்துக்குறேன்…”என்று படபடவென கூறினாள்.

“அவ தூங்கிட்டா…..மருந்து கொடுத்திருக்கேன் அதனால இப்ப எழுந்துக்க மாட்ட…..அங்க நந்து நீ தான் தலை ஒழுங்கா பின்னுவனு உன்னை கூப்பிடுறா போ….”என்று கூற,

“ப்ச்….நான் போனா அவ மாமியார் என் வாயை கிளருதுடீ….எனக்கு வர கோபத்துக்கு நான் ஏதாவது பேசிடுவேன் அதான் நான் இங்க இருக்கேன்….”என்று கயல் கூற,அவளின் கன்னத்தை செல்லமாக தட்டிய வனி,

“டேய் கயலு….நீ எதுக்கு அவங்களுக்கு எல்லாம் பயப்படுனும்….ஏதோ ஒரு தடவை தப்பு செஞ்சா அதையே குத்தி காட்டி பேசுவாங்களா….நீ வா நானும் வரேன் அப்படி என்ன பேசுன்றாங்கனு நானும் பார்க்குறேன்….”என்று வனி கூற,

“வனிஇஇஇஇ…இது நீயா….உனக்கு எங்கேந்துடீ இவ்வளவு தைரியம் வந்தது….அப்பா சும்மா முறைச்சாலே மூணு நாளைக்கு மூக்கை உறிஞ்சிக்கிட்டு இருப்ப….”என்று கயல் கிண்டல் செய்ய,

“ம்ம்….எல்லாம் உன் மாமா செய்த மாயம்…..”என்று வனியும் புன்னகை முகமாக கூறி அவளை அழைத்து சென்றாள்.

வனியும்,கயலும் நந்துவின் அறையில் நுழைந்த போது கயலை கண்ட நந்துவின் மாமியார் முகத்தை சுழித்துவிட்டு,

“வனிமா நீயே என் மருமகளுக்கு எல்லாம் செய்மா….குடும்பமா செழிச்சி இருக்குறவங்க தான் இதெல்லாம் செய்யனும்….”என்று கயலை பார்த்துக் கொண்டே கூற,

“இந்த இருபதாம் நூற்றாண்டுலேயும் படிக்காத கத்து குட்டிகளும் இருக்குது வனி….அதுங்க சொல்லுறதை எல்லாம் நாம காதுல வாங்க கூடாது…வா….”என்று கயல் கூறிவிட்டு நந்துவிற்கு தலையை சரி செய்துவிட்டாள்.

“என்ன என்ன சொன்ன….நான் படிக்காத கத்து குட்டியா…..”என்று அவர் சண்டைக்கு தயாராக,

“அச்சோ அத்தை நான் உங்களை சொல்லலை….அது மாதிரியும் இருக்காங்கனு பொதுவா சொன்னேன்….இப்ப நீங்க கூட தான் ஏதோ சொன்னீங்க….அது என்னை பத்தியா சொன்னீங்க நீங்க பொதுவாதான சொன்னீங்க அது போல தான் இதுவும்….”என்றவள் வனியிடம் திரும்பி,

“வனி நான் நந்துவை பார்த்துக்குறேன் நீ போ அம்மாக்கு உதவி செய்…..”என்று வனிதாவையும் அனுப்பி வைத்தாள்.

“என்ன பேச்சு பேசுறா பத்தியா உன் அக்கா….”என்று அவர் அடுத்து தன் மருமகளிடம் ஆரம்பிக்க,

“அங்க ஏன் கேள்வி கேட்டுகுறீங்க….என்கிட்ட கேளுங்க….என்ன வேணும் உங்களுக்கு எதுக்கு என்னையே கார்னர் பண்ணி பேசிக்கிட்டு இருக்கீங்க….”என்று கயல் உடைத்தே கேட்க,

“என்ன நான் உன்னை கார்னர் பண்ணுறேனா…என்ன பேசுற நீ….”என்று அவர் எகிற தொடங்க,

“கயல்….கயல்….”என்று அழைத்தபடி  உள்ளே வந்தார் பார்வதி.

“மதனி உங்க பொண்ணு….”என்று பார்வதியை கண்டவுடன்  ஆரம்பித்தவர் அடுத்த நிமிடம் கப் என்று வாயை மூடிக் கொண்டார்.

“இது என்ன அதிசயம் இந்தம்மா எங்க அம்மாக்கா பயப்படுது….”என்று நினைத்துக் கொண்டு அவள் வாயிலை பார்க்க பார்வதியின் பின்னால் கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தான் அவளின் மணவாளன்.அவனைக் கண்டவுடன் முகத்தில் மகிழ்ச்சி,கோபம் அனைத்து உணர்சிகளும் ஒருங்கே கயலின் முகத்தில் வெளிபட,அதை அவனும் உணர்ந்தார் போல புன்னகை முகமாக புருவம் தூக்க,கயல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!