Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 14

அத்தியாயம் 14

“ஏம்மா இப்படி படுத்துறீங்க? பெண் சுதந்திரம் பத்தி மேடை மேடையா பேசிட்டு வரேன்.. நீங்க சென்னையிலே இருக்கிற ஒரு இடத்துக்கு தனியா என்னை அனுப்ப மாட்டேங்குறீங்க?” என்று தன் அன்னையுடன் காரசாரமாக பேசிக்கொண்டு இருந்தாள் கருணா.



Advertisement

“இப்ப உன் சுதந்திரத்துக்கு என்ன கேடு வந்துச்சு? உன்னை போக வேண்டாம்னு சொன்னா நீ இந்த கேள்வியை எல்லாம் கேளு. துணைக்கு ஒருத்தரை கூட்டிட்டு போக சொன்னா, எதுக்கு இவ்வளவு பேசுற” என்றார் சுமதியும் பதிலுக்கு சூடாக.

Advertisement

Advertisement

“அப்பா இருந்தா பிரச்சனை இல்லை.. இப்ப உங்க பிள்ளைக்கிட்ட நான் போய் கெஞ்சனும். அதானே உங்களுக்கு வேணும்..”

Advertisement

“கருணா எனக்கு நிறைய வேலை இருக்கு. போறதுன்னா வில்வாவை கூட்டிட்டு போ…”

காலம் இருக்கிற நிலைமைக்கு தனியே பெண்பிள்ளையை அனுப்புவதில் அவர்களுக்கு பயம். அசட்டு தைரியத்துல ஆபத்தை வரவழைக்க கூடாது என்பது அவர்களது எண்ணம். வேற வழி இல்லைன்னா பரவாயில்லை. இங்க தான் இத்தனை பேர் இருக்கோமே. ஒற்றை பெண் பிள்ளைகூட போக மாட்டோமா என்று நினைக்கிறார்கள்.

பொதுவாக சங்கர் மகளுடன் வெளி ஊர்களுக்கு செல்லும் போது உடன் செல்வார். அவருக்கு நேரம் இல்லை என்றால் வில்வாவும் பாரியும் உடன் செல்வார்கள். இது வழக்கமான ஒன்று தான். கருணா இவர்களிடம் உதவி என்று கேட்பது இது ஒன்று தான் என்பதால் கொஞ்சம் பந்தா செய்துவிட்டு தான் உடன் செல்வார்கள் இருவரும்.

“ஆமா இன்னிக்கு எங்க போற?” என்று கேட்டார் சுமதி.

“அம்மா தாய் குலமே.. எவ்வளவு சீக்கிரமா கேட்டுட்டிங்க?”

“சீதா லட்சுமி மிஸ் இருக்காங்கல்ல?”

“நீ ஆறாவது படிச்ச அப்போ உன் கிட்ட மாட்டிகிட்டு படாத பாடு பட்டாங்களே.. அந்த அப்பிராணி மிஸ் தானே?”

“போம்மா.. நான் இனி உன்கிட்ட ஒன்னும் சொல்லலை”

“சும்மா கேட்டேன்டா தங்கம்… அவங்களையா பார்க்க போற? எதுக்கு?”

“அவங்க ஆன்லைன்ல தமிழ் ட்யூஷன் எடுக்கிறாங்க.. “

“உனக்கு எதுக்கு கருணா ட்யூஷன் எல்லாம்.. நீ தான் ரொம்ப நல்லா படிக்கிறீயே?”

அம்மாவும் மகளும் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கீரை ஆய்ந்து கொண்டிருந்தார் பாட்டி.

“பாட்டி, உங்க பையன் நிஜமாவே பாவம். எப்படி தான் இவங்களோட குப்பை கொட்டுறாரோ… ஒரு விஷயத்தை முழுசா சொல்ல விடறாங்களா பாருங்க” என்றாள் பாட்டியிடம்.

“இப்ப நீ எதுக்கு என்னை நடுவுல இழுக்குற. காலையில மாமியார் மருமகள் சிண்டு முடிஞ்சுவிடலாம்னு பார்க்கிறியோ.. போடி போடி… நான் உனக்கு பாட்டி” என்றார் கெத்தாக.

“அப்ப நீங்க இரண்டு பேரும் ஒரே கட்சி.. நானும் பார்க்கிறேன் எவ்வளவு நேரத்துக்குன்னு “

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே வீட்டை பெருக்கி கொண்டிருந்தார் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ரமணி அம்மா.

“அந்த மிஸ் வீடு கே.கே நகர்லயா இருக்கு? டெய்லி எப்படி அவ்வளவு தூரத்துல இருந்து ஸ்கூலுக்கு வராங்க?” என்றார் சுமதி இப்பொழுது.

“முதல்ல நம்ம ஏரியாவுல தான் இருந்தாங்க. அங்க இப்ப தான் வீடு வாங்கி இருக்காங்க. ஸ்கூல் பஸ் அவங்க ஏரியா வரைக்கும் போகும்..”

“எத்தனை மணிக்கு போகும்?”

“ஏம்மா அத தெரிஞ்சுக்கிட்டு நம்ம என்ன செய்ய போறோம்? உனக்கு நேரடியா ஒரு விஷயத்தை கேக்கவே தெரியாதா?”

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் போதும், நீ மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுவ தானே” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்து கொண்டார்.

“வந்துடுவேன்.. வந்துடுவேன்..”

பாட்டி, “என்ன விஷயமா உங்க மிஸ்ஸை பார்க்க போற?” என்றார் மருமகள் விஷயத்தை வாங்க மாட்டாள் என்று தெரிந்து.

“அவினாஷ் வேலை வேணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கான் இல்ல பாட்டி… அப்பாவும் மாமாவும் கண்டுக்கவே இல்லை”

“கண்டுக்காம இல்லை கருணா.. கண்டுக்காத மாதிரி இருக்காங்க.. பாவம் அந்த பிள்ளை, தாத்தாவையும் பார்க்கணும், தங்கச்சியையும் பார்க்கணும், அவனே சமைச்சு வீட்டு வேலை எல்லாம் செய்றான். இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்கான்.. இதுல படிக்கறதே பெரிய விஷயம்.. வேலைக்கு வேற எப்படி போறது” என்று கூறிக்கொண்டே அடுப்படியில் இருந்து வெளியே வந்தார் சுமதி.

“மெய்யாலுமே வா… சின்ன பையன் இவ்வளவுமா செய்யுறான்?” என்றார் ரமணி அம்மா ஆச்சர்யமாக.

“ஆமா.. ரமணி..” என்று சுமதி ரமணியிடம் கதை பேச தொடங்கி விட்டார்.

பாட்டியும் இணைந்து கொண்டார்.

கருணா இவர்களிடம் பேசி வேலைக்கு ஆகாது என்று சீதாலட்சுமி மிஸ் வீட்டிற்கு கிளம்ப சென்று விட்டாள்.

கிளம்பி தயாராகி வில்வாவிடம் சென்றாள்.

“அண்ணா கொஞ்சம் என்கூட வரியா, அம்மா தனியா அனுப்ப மாட்டேங்குறாங்க… “

“போடி.. நான் இன்னும் இந்த அசைன்மெண்ட் முடிக்கவே இல்லை. நாளைக்கு சப்மிட் பண்ணனும்”

“ப்ளீஸ்.. போயிட்டு ஒரு இரண்டு மணி நேரத்துல வந்துடலாம்”

“நிஜமாவே நிறைய இருக்கு டீ.. நீ வேணா பாரி கூட போ”

“அவனும் எழுதனும் இல்ல?”

“அவன் முடிச்சிட்டான்” என்றான் மூக்கை உறிஞ்சிக்கொண்டே.

“என்ன அதிசயமா இருக்கு? அவன் மட்டும் எப்படி முடிச்சான்?”

மிகவும் சோகமாக முகத்தை வைத்துக்கொண்ட வில்வா, “கருணா… அவன் என்னை ரொம்ப திட்டிட்டான்..” என்றான்.

“நம்ப முடியலையே..”

“என்னாலயும் நம்பவே முடியலை. போன வாரம் இந்த அசைன்மெண்ட் செய்யலாம்ன்னு கூப்பிட்டான். நான் இன்னும் ஒரு வாரம் இருக்குல டா.. இப்பவே எதுக்கு அவசரம்னு சொன்னேன். எப்பவும் கட்டாய படுத்தி என்னை எழுத வச்சிடுவான் இல்ல.. இந்த தடவை.. பேசாம விட்டுட்டான்.. நானும் ஜாலியா இருந்துட்டேன். என் கிட்ட சொல்லாம அவன் மட்டும் முடிச்சிட்டான்“ கூறும் பொழுதே அவன் குரல் கமறியது.

கருணாவிற்கு சிரிப்பு வரும்போல இருந்தது. அடக்கி கொண்டு அமைதியாக நின்றுகொண்டாள்.

“நீயே சொல்லு.. பாரி இப்படி செய்யலாமா.. என்னால தாங்கவே முடியலை..”

“ஏன் இப்படி செஞ்சான்னு அவனையே கேட்க வேண்டியது தானே”

“கேட்டேன்.. அதுக்கு.. அவன் சொல்றான்… என்று ஆரம்பித்து, உன்கிட்ட சொல்ல மாட்டேன் போடி. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்” என்றான் வீம்பாக.

கருணா அவனை முறைத்துவிட்டு, பாரி வீட்டிற்கு சென்றாள்.

“பாரிவேந்தன், கொஞ்சம் என்கூட துணைக்கு வரியா. அண்ணா அசைன்மெண்ட் எழுதணும்னு சொன்னான்”

“எங்க போகணும்?”

“சீதா லட்சுமி மிஸ் வீட்டிற்கு, கே.கே நகர்ல இருக்காங்க..”

“சரி.. நான் சாப்பிட்டுட்டு வரேன்.. போலாம்” என்றான் உடனே.

“என்ன அத்தை நான் கேட்டதும் ஓகேன்னு சொல்லிட்டான்” என்றாள் தமயந்தியிடம் மெதுவாக.

“காலையில இருந்து சோக கீதம் தான் வாசிச்சிட்டு இருக்கான், என்ன விஷயம்னு தெரியலை… “

“அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை… அவனுக்கும் எங்க அண்ணாக்கும் சண்டை போல..”

“என்னது?என்ன கருணா சொல்ற?நிஜமாவே யா?” என்று அதிர்ச்சி ஆகிவிட்டார் தமயந்தி.

“ஆமா அத்தை.. அது வந்து அசைன்மெண்ட் …” என்று தான் ஆராம்பித்தாள்.

“அதான் காலையில இருந்து வில்வாவை பார்க்க முடியலையா? நம்பவே முடியலையே! எனக்கே அடிக்கடி சந்தேகம் வரும். நானும் சுமியும் தனி தனியா தானே பிள்ளை பெத்துக்கிட்டோம், இதுங்க எப்படி ஒட்டி பிறந்த இரட்டை பிள்ளைகளாட்டும் இருக்காங்கன்னு..” என்றார் தமயந்தி.

“வரவர உங்ககிட்டயும் அம்மாகிட்டயும் ஒரு விஷயமும் சொல்ல முடியறதே இல்ல.. குறுக்க குறுக்க பேசிகிட்டு.. சப்பா முடியல…நான் போய் அம்மா கிட்ட சொல்லிட்டு கிளம்பி வரேன்” என்று அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டாள்.

“ஏன்டி.. எங்க போறேன்னு கேட்டா, சீதலட்சுமி.. அவினாஷ் வேலைன்னு பிட்டு பிட்டா சொல்லிட்டு போய்ட்ட” என்றார் சுமதி.

பாட்டி, “கிழிஞ்சது..நல்லா கேட்ட கேள்வி “ என்றார் மருமகளிடம் நக்கலாக.

“அண்ணா அசைன்மெண்ட் எழுதணுமாம். அதான் பாரி வேந்தன் கூட போயிட்டு வரேன்.. வந்து பொறுமையா சொல்றேன்” என்று விரைவாக உண்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.

இருவரும் பேருந்தில் தான் சென்றார்கள்.

“வில்வா கவலையா இருக்கானா கருணாம்பிகை?”

“———————”

“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?”

“எதுக்கு, எங்களுக்குள்ள ஆயிரம் இருக்குன்னு என் மூக்கை உடைக்கவா?”

“இல்ல, அவன்கிட்ட நிறைய திறமை இருக்கு. எப்பவும் விளையாட்டா படிப்புல கவனம் செலுத்த மாட்டேங்குறான். நான் எப்பவும் கூட இருக்கிறதனுலா இந்த அலட்சியம்ன்னு தோணுச்சு”

“அடேங்கப்பா… எவ்வளவு சீக்கிரமா உன் மண்டையில பல்பு எரிஞ்சிடுச்சு”

அவன் முறைக்கவும்,

“இதை நான் நீங்க பத்தாங் கிளாஸ் படிக்கும் போதே உன் கிட்ட சொன்னேன்”

“ஆமா, இனி அவன் கொஞ்சம் கவனமா இருக்கனும்ன்னு தான் அவனை விட்டுட்டு அசைன்மெண்ட் முடிச்சிட்டேன். ஆனா அவன் ரொம்ப அப்செட் ஆயிட்டான்”

“இப்ப நீ செஞ்சது ரொம்ப சரி, கொஞ்சம் இந்த தடவை அப்படியே விடு. நல்ல மாற்றம் வரும்.. அவனுக்கும் பொறுப்பு வரணும் தானே”

“சரி…ஆனாலும் அவன் அப்செட் ஆனதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கருணாம்பிகை”

பதில் கூறாமல் சிரித்துக்கொண்டாள். இவர்கள் நட்பை எண்ணி எப்பொழுதும் போல சிறு பொறாமை எழுந்தது பெண்ணுக்கு.

“எகனாமிக்ஸ் எப்படி இருக்கு? உனக்கு பிடிச்சிருக்கா?”

“ரொம்பவே பிடிச்சிருக்கு… உனக்கு காலேஜ் எப்படி போகுது?”

இப்படி பேசிக்கொண்டே இருவரும் மிஸ் வீட்டிற்கு சென்றார்கள்.

மிகவும் மகிழ்ச்சியாக இவர்களை வரவேற்றார் சீதாலட்சுமி மிஸ்.

“சொல்லு கருணா.. எதுக்கு வீடு வரை என்னை பார்க்க வந்திருக்க? ஸ்கூல்ல தான் தினமும் பார்க்கிறோமே?”

“பர்சனல்லா கொஞ்சம் பேசணும்.. அதான் வீட்டுக்கு வந்தேன்”

“பர்சனல் என்கிறாள், கூடவே பாரிவேந்தனை கூட்டிட்டு வந்திருக்கா. காதல் விவகாரம்னு சொல்லுவாங்களோ? நல்ல பெண்ணாச்சே.. அப்படி எல்லாம் இருக்காது” என்று அவர் மனது பலதையும் யோசிக்க தொடங்கியது.

அவரது முழியே அவரது எண்ணத்தை காட்டியது.

“அப்பா வேலை விஷயமா ஊருக்கு போயிருக்காங்க, அண்ணாக்கு அசைன்மெண்ட் வேலை இருந்துச்சு, அதான் எனக்கு துணைக்கு அம்மா பாரிவேந்தனை அனுப்பி வச்சாங்க”

“நான் கேக்கவே இல்லையே” என்றார் அவர் சமாளிப்பாக.

“நீ என்னப்பா படிக்கிற? ஆமா உன் பிரண்ட் வில்வா, அவன் என்ன படிக்கிறான்?”

“நாங்க ரெண்டு பேருமே பிஸியோதெரப்பி படிக்கிறோம் மிஸ்..”

பேசிக்கொண்டே இவர்களுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

“மிஸ், நீங்க ஆன்லைன்ல தமிழ் ட்யூஷன் எடுக்கிறேன்னு சொன்னீங்க தானே?

“ஆமா… நிறைய வெளிநாட்டு குழந்தைகளுக்கு எடுக்கிறேன். அதுவும் இல்லாம பெங்களூரு, ஹைதெராபாத் அங்க இருந்து கூட கேக்கறாங்க”

“நிறைய பேர் கேக்கறாங்கன்னு சொன்னீங்க.. டைம் இல்லைன்னு சொன்னீங்க..”

“ஆமா.. சொன்னேன்.. இப்ப என்ன வேணும் உனக்கு. நேரடியா விஷயத்துக்கு வா கருணா..”

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தர். அவங்களுக்கு இந்த வேலை கிடைக்குமா? காலேஜ் ஸ்டூடெண்ட். ஒரு பார்ட் டைம் வேலை அவங்களுக்கு ரொம்ப அவசியம்”

“ஹ்ம்ம்…..”

“ப்ராப்பர் டீச்சர் மாதிரி தான் இருக்கணுமா, இல்லைன்னா நல்லா சொல்லி கொடுத்தா போதுமா?”

“நல்லா சொல்லி கொடுத்தா போதும். ஏன்னா.. இந்த குரூப் தமிழ் எக்ஸாம் எழுதணும்னு நினைக்கிறவங்க இல்லை. ஓரளவுக்கு தமிழ் பேசவும் வாசிக்கவும் கத்துக்க வரவங்க தான்.

நான் சிபாரிசு பண்ணி சேர்த்துவிட முடியும்.

சரி.. தி கிரேட் கருணாம்பிகை சிபாரிசு பண்ற நபர் யாரு?”

“இவனோட கசின், பேரு அவினாஷ்” என்று கூறி சுருக்கமாக அவனுடைய கதையை கூறினாள்.

“நீ ஒன்னும் கேக்கவே இல்லையே என்றார் பாரியை பார்த்து”

“இவ இதுதான் கேக்கப்போறான்னு எனக்கு தெரியாது.. அதான்” என்று பாவமாக கூறினான்.

“ஹா ஹா ஹா.. அதானே… கருணாவா கொக்கா?” என்றார் மிஸ் சிரித்து கொண்டே.

“காலேஜ் படிக்கிறதா சொன்ன, அப்ப சனி ஞாயிறு பேட்ச் எடுக்கட்டும். நீ அவனை என்னை வந்து பார்க்க சொல்லு. நான் மத்ததை பார்த்துகிறேன்”

“ரொம்ப தேங்க்ஸ் மிஸ், கண்டிப்பா வேலைக்கு நான் ஏற்பாடு செய்றேன்னு சொல்லி இருந்தேன். உங்களால தான் என்னால என் வார்த்தையை காப்பாத்த முடிஞ்சது”

“தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும் பெரிய மனுஷி… நான் உன்னை பார்த்த முதல் நாள்ல இருந்து என்னை ஆச்சரிப்படுத்திட்டே இருக்கிற பொண்ணு நீ. இப்பகூட நீ இலவென்த் தான் படிக்கிற, ஆனா ஒருத்தருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யுற..”

பாரியும் பெருமையாக தன் தோழியை பார்த்தான்.

“சாப்பிட்டு போங்க இரண்டுபேரும்” என்றார் மிஸ்.

“இல்ல மிஸ்.. இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம். அவினாஷை எப்ப வர சொல்லட்டும்?”

“இன்னிக்கு சன்டே, ஈவினிங் அஞ்சு மணிக்கு ஒரு கிளாஸ் இருக்கு. ஒரு நாலு மணிப்போல வரச்சொல்லு, ஒரு நாலு கிளாஸ் நான் எப்படி எடுக்கறேன்னு பார்க்கட்டும். நானும் சொல்லி தரேன், எனக்கு நம்பிக்கை வந்தப்புறம் தனியே அவனுக்கு ஸ்டுடென்ட்ஸ் அல்லாட் பண்ணுறேன்”

“சூப்பர் மிஸ்.. நான் ஈவினிங் கூட்டிட்டு வரேன்”

“நீ வரணும்னு தேவை இல்லை கருணா, அந்த பையன் மட்டும் வந்தா போதும்.”

“நான் கூட்டிட்டு வரேன் மிஸ்.. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று முன் வந்தான் பாரி.

மகிழ்ச்சியாக இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

“சூப்பர் கருணாம்பிகை, நல்ல ஐடியா தான். ஆனா அவி சொல்லி கொடுத்துடுவானா?”

“ஒருத்தருக்கு பாதையை காட்டலாம், ஆன அதில் நடக்கிறது அவரவர் சாமர்த்தியம்”

“அதுவும் சரிதான், ஆனா இதுல பெருசா என்ன காசு வரப்போகுது?”

“ஆன்லைன் கிளாஸ் எல்லாம் இப்ப ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவுன்னு ரேட். இவன் நல்லா பிக்அப் பண்ணா, முப்பது ஆயிரம் வரை ஈஸியா சம்பாதிக்கலாம்”

“ஆங்..” என்று வாயை பிளந்தான் பாரி.

“நீயும் உன் பிரண்டும் இந்த ‘ஆங்..’ மட்டும் விடாதீங்க.. சீக்கிரம் வா பசிக்குது”

விஷயம் அறிந்து வீட்டில் யாரும் பெரிதாக இதில் ஆர்வம் காட்டவில்லை.

அவினாஷிற்கு மட்டும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. பாரியும் வில்வாவும் மாலை அவினாஷயை அழைத்து கொண்டு மிஸ் வீட்டிற்கு சென்றார்கள்.

மூன்று நாலு வகுப்புகளுக்கு பிறகு அவினாஷிற்கு வேலை பிடிபட்டுவிட்டது.

அவனது எளிமை, நேர்மை, பொறுமை, சின்ன வயதில் அவனுக்கிருக்கும் வைராக்கியம், கடமை உணர்ச்சி என்று அவினாஷை சீதாலட்சுமி மிஸ்ஸிற்கு அவ்வளவு பிடித்து விட்டது.

அடுத்த மாதம் முதலில் இரண்டு மாணவர்களை அவனிடம் அனுப்பினார். வகுப்பை மிகவும் சிறப்பாக எடுத்தான் அவினாஷ். அதன் பிறகு மாணவர்களின் பீட்பேக் கேட்டு, இன்னும் எட்டு மாணவர்களை அல்லாட் செய்தார்.

பாரியின் லேப்டாப்பை தற்போதைக்கு உபயோகித்து கொண்டான்.

சனி ஞாயிறு நாட்களில் மட்டும், அதுவும் வீட்டில் இருந்தே செய்ய கூடிய வேலை. அவனுக்கு மிகவும் சுலபமாக இருந்தது.

கருணாம்பிகையிடம் பலமுறை நன்றி கூறினான்…

ஒரு மாதம் முடிந்ததும், சீதா லட்சுமி இவன் வகுப்பிற்கான பீஸ் கணக்கு செய்து இவனிடம் கொடுத்தார்.

இருபது ஆயிரம்.

கண்கள் கலங்கிவிட்டது அவனுக்கு. இந்த வேலை அவனுக்கு வாழ்க்கையின் மீது ஒரு புது பிடிப்பையும் பிடித்தத்தையும் ஏற்படுத்தியது. பணத்தை கொண்டு வந்து தாத்தாவிடம் தான் முதலில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டான்.

தாத்தா மனமார ஆசீர்வாதம் செய்து அவனிடமே அதை திரும்ப கொடுத்துவிட்டார்.

————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!