Skip to content
Post Views: 2,568
அத்தியாயம் _11
அவன் பற்றிய தோள் இரண்டும் கன்றி போகும் அளவிற்கு வலித்தது .
நீண்ட முத்தத்தின் அழுத்தம் அவன் காதலின் அளவை சொல்லி விட முனைந்தது .
ஒரு பரிபூரண தன்மையை அவன் மூளையும் , மனமும் ஒரு சேர உணர்ந்தது .
Advertisement
சோர்ந்து குழம்பி கிடந்த அவன் மனம் சமன்பட்டதும் . அவள் இதழை விடுவித்து ….அவள் கன்னத்தில் முத்தமிட்டான் .
அன்று அறைந்து தன்னை தற்காத்து கொண்டவள் இன்று ஆட்டம் கண்டு போனாள் .
உனக்கு என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும் ஸ்வாதி .
Advertisement
இல்லைனு பொய் சொல்லி என்னை ஏமாற்றி உன்னை ஏமாற்றிக்காதே ஸ்வாதி .
Advertisement
அவன் அணைப்பில் இருந்து விலகிவிட மூளை எச்சரித்தும் …அவனை விலக்காமல் தொய்ந்து சரிந்தாள் .
விழிநீர் வழியே அவள் கரைந்து கொண்டிருப்பது அவனுக்கு புரியாமல் இல்லை .
என்னை விட்டு போகும் தைரியம் உனக்கு இருக்கா ? அவள் முகம் பற்றி நிமிர்த்தினான் .
Advertisement
அவனை பார்க்க இயலாது கண்களை மூடினாள் .மூடிய விழியினின்று நீர் வழிந்தோடியது .
ஸ்வாதி ….மூனு வருஷமா உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன் . உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் நங்கூரமிட்டு நின்று விட்டாய் .
மூனு வருடமாய் என்னுள் நானே போராடி ஓய்ந்து போயிட்டேன் .
உன் கண்ணில் இருக்கும் ஏதோ ஒன்று என்னை கவர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கிறது.
உன் கண்ணில் இருக்கும் வலியா ? எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காத உன் உறுதியா ? உன் வேலையில் நீ காட்டும் ஆழ்ந்த ஈடுபாடா …எனக்கு தெரியல .
நீ சின்னப் பெண் என்று விலக தான் நினைக்கிறேன் . முடியலடி … சாத்தியமா என்னால முடியல ..
அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டவள் ….ஸார் உங்க தங்கை கணவர் பார்த்திருக்கும் பெண்ணை ஓகே சொல்லுங்க .
நோ …எனக்கு ஸ்வாதி தான் வேணும் . அவன் உறுதிபட சொன்னான் .
பிடிவாதம் பிடிக்காதீங்க ….
அம்மாக்கு சந்தோஷத்தை கொடுங்க .
அவள் வெளியேற ….ஸ்வாதி எனக்கு வாழ்க்கை துணையா ஒருத்தி வர முடியும் என்றால் அது நீ மட்டும்தான்டி .
உன்னை விலக நினைக்க.. நினைக்க தான் உன் எண்ணம் என்னுள் வியாபித்து கொண்டே போகிறது .
இதற்கு மேலும் போராடும் வல்லமை எனக்கில்லை. சீக்கிரம் என்கிட்ட வந்துடு!
தளர்ந்து கட்டிலில் அமர்ந்து விட்டான் .
உடம்பை பார்த்துக்கோங்க ! மனசை அமைதியா வச்சிக்கோங்க .
அமைதியாக வெளியேறி ஹாலில் அமர்ந்தவள் ….
கிச்சனை நோக்கி குரல் கொடுத்தாள் .
அம்மா நான் கிளம்பறேன் !
ஸ்வாதி லன்ச் ரெடியாகுது . சாப்பிட்டு போகலாம் .
இல்லைம்மா …இன்னொரு முறை வரும்போது கண்டிப்பா சாப்பிடறேன் .
ஸ்வாதி விடைபெற்று கிளம்பிவிட ….கல்யாணி கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் .
ஹாஸ்டலுக்கு வந்து ஒரு பாட்டில் தண்ணீரை அப்படியே வாயில் சரித்தாள் .
தண்ணீர் வயிறை நிறைத்தாலும் …மனம் வெறுமையாய் இருந்தது .
கண்ணோடு கண் உரச …
காதலில் கரைந்து நின்ற பிரபாவின் தோற்றம் …அவள் விழி திரையில் இருந்து அகல்வதாய் இல்லை .
சுருண்டு கட்டிலில் படுத்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .
படுத்தால் மூச்சு முட்டுகிறது என்று எழுந்து அமர்ந்தாள் .
தனக்கென்ன தகுதி இருக்கிறது …பிரபாவின் காதலைப் பெற …? அவள் உள்ளம் ஊமையாய் அழுதது .
பிரபாவிற்கு நாட்டில் வேறு பெண்ணே கிடைக்கவில்லையா ? தன்னை எண்ணி கூசிப் போனாள் .
மன புழுக்கம் தாளாது ஜன்னல் ஓரம் நின்று சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள் .
அடுத்து என்ன என்பது அவளுக்கு பயத்தை கொடுத்தது .
சொந்த ஊருக்கு போகவும் அவள் விரும்பவில்லை .
சென்னையை விட்டு பிழைப்பு தேடி எங்கே செல்வது …? அதீத பயத்திலும் சிந்தையிலும் ஜன்னலின் திரைச் சீலையை முறுக்கி கொண்டிருந்தாள் .
மொபைல் அழைத்தது …சுரத்தே இல்லாமல் எடுத்து பார்த்தாள் .
பாலாஜியின் அழைப்பு தான் ….ஆன் பண்ணி காதில் வைத்தாள் .
” ஸ்வாதி நான் உன்னோடு கொஞ்சம் பேசணும் ! “
” சொல்லுங்க ஸார் ! “
” நேரில் பேசணும் ….ஈவ்னிங் கிளம்பி இரும்மா வெளியில் போய் பேசுவோம் “
ஸார் …வெளியில் போயா …? அவள் தயங்கினாள் .
நீ என்னோட தங்கை தான் …உனக்கு எந்த பயமும் வேண்டாம் .
அது இல்லை …ஏன் வெளியில் ? அவள் மிடறு விழுங்கினாள் .
பேசுவோம் ….நேரில் பார்த்து பேசுவோம் . 4.30 க்கு ஹாஸ்டலுக்கு வரேன் .
என்னவா இருக்கும் ? பிரபா ஸார் ஏதாவது சொல்லி இருப்பாரா ? நகம் கடித்துக் கொண்டிருந்தாள் .
“———“
பாலா எம்புள்ள இதுவரை எதுக்கும் ஆசைப்பட்டதில்லை .
மூனு வருஷமா அந்த ஸ்வாதி பொண்ணை விரும்பி இருக்கான் .
அவன் ஆசைபட்ட பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோம் பாலா .
நான் அந்த பொண்ணு காலில் விழுந்து எம்புள்ளையை ஏத்துக்க சொல்லி கேட்கிறேன் …..கல்யாணி கண்ணீர் வழிய …விம்மினார் .
அம்மா ….நான் ஸ்வாதியை நேரில் பார்த்து பேசறேன் . அந்த பொண்ணுக்கும் நம்ம பிரபா மேல விருப்பம் இருக்கும்மா .
பாலா ….என் புள்ள சந்தோஷமா வாழறதை நான் கண் குளிர பார்க்கணும் ! எனக்கு வேறு எதுவும் வேண்டாம் .
கண்டிப்பாம்மா ….சீக்கிரம் நடக்கும் . கவலை படாதீங்க கல்யாணிக்கு தேறுதல் சொன்னான் .
ஸ்வாதியை லன்ச் சாப்பிட்டு தான் போகவேண்டும் என்று சொல்ல வந்த கல்யாணி ….
ஸ்வாதியிடம் பிரபா பேசிய அனைத்தையும் கேட்டு விட்டார் .
அவளை உயிராய் நினைத்து உருகும் மகனை எண்ணி ரத்தக் கண்ணீர் வடித்தார் .
உடனே பாலாஜிக்கு மொபைலில் அழைத்து அனைத்தும் சொல்லி விட்டார் .
“——–“
மாலை சொன்ன நேரத்தில் வந்து நின்றான் பாலாஜி .
தயாராய் இருந்த ஸ்வாதியை அழைத்து கொண்டு கிளம்பினான் .
கார் நின்றது பெசன்ட் நகர் பீச் .
அலைகளின் ஆர்பரிப்பை அமைதியாய் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றான் பாலாஜி .
ஸார் என்னவோ பேசணும்னு ..?
ம்ம்ம்ம் …பேசணும் ஸ்வாதி . அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை .
என்கிட்ட என்ன ஸார் தயக்கம் ?
சொல்றேன் …சொல்றேன் …!
” பிரபா ஸார் பத்தியா ? “
” ம்ம்ம் …எக்ஸாக்ட்லி ..! “
அந்த லெக்சரர் பொண்ணு விஷயத்தை நான் சொல்லிட்டேன் ஸார் .
அவனுக்கு அந்த லெக்சரர் வேண்டாமாம் . இந்த ஸ்வாதி தான் வேணுமாம் .
ஸார் …அவள் ஷாக் அடித்தாற்போல் பதறினாள் .
உங்களுக்குள்ள என்ன பிரச்னை என்று எனக்கு தெரியாது . என்னவா இருக்கும் என்று அனுமானம் எனக்கு இருக்கு .
ஸார் இது பற்றி விளக்கமா பேசவோ அனுமானிக்கவோ என்ன இருக்கு ?
ஒரு நண்பனா அவருக்கு நல்லதை செய்யுங்க ! அவள் கிளம்ப எத்தனித்தாள் .
ஸ்வாதி ஒரு நிமிஷம் …அவன் டீன் ஏஜ் பாய் இல்லை . அவனுக்கு நான் சொல்லி புரிய வைக்க எதுவும் இல்லை .
அவன் ஜாலி டைப் இல்லை . எதையும் ஃபிராங்கா பேசவும் மாட்டான் .
அது தான் அவருக்காக ஆஜர் ஆக நீங்க இருக்கீங்களே …?
அவள் கேலியாய் சிரித்தாள் .
ஸ்வாதி …அவனுக்கு ஆறுதல் சொல்லி யாரும் அவனை தேற்றி விட முடியாது .
அப்படியா ? அவள் இதழ்விரியா புன்னகை பூத்தாள் .
அவர் பர்சனாலிட்டி , வசதி வாய்ப்பு பார்த்து நல்ல பொண்ணு கிடைக்கும் .
நீ நல்ல பொண்ணு இல்லையா ?
ம்ம்ம்ம் …கரெக்ட் என்றாள் .
ஸ்வாதி அவருக்கு மேட்ச் இல்லைனு சொல்லிடுங்க .
அவள் நான்கடி நடக்க தொடங்கினாள் .
ஸ்வாதி ஒரு நிமிஷம் ….!
உனக்கு ஏதோ ஒரு கசப்பான கடந்த காலம் இருக்குன்னு புரியுது .
அதே போல் ஒரு இரக்கமற்ற கடந்த காலம் அவனுக்கும் உண்டு .
ஸ்வாதி அமைதியாய் நின்று அவனை கூர்ந்து நோக்கினாள் .
ஆமா ஸ்வாதி . பிரபா ஒரு டிவோர்ஸி .
ஸார் ….ஸ்வாதி அதிர்வுடன் நிமிர்ந்தாள் .
யெஸ் …அவனுக்கு டிவோர்ஸ் ஆகி சிக்ஸ் இயர்ஸ் ஆகுது .
விரிந்த விழி மூடாமல் பாலாவை நோக்கினாள் .
பரந்து விரிந்த கடலை நோக்கியபடி வலிகள் நிறைந்த கதையை பேச ஆரம்பித்தான் பாலாஜி .
வரதராஜன், கல்யாணி தம்பதிகளின் மூத்த மகன் பிரபானந்தன் .
வரதன் அங்கிள் வடபழனி ஏரியாவில் சின்னதா ஹோட்டல் நடத்திட்டு இருந்தார் .
நானும் பிரபாவும் பதினாறு வருஷமா க்ளோஸ் பிரண்ட்ஸ் .
எம்.காம் முடிச்சிட்டு நானும் பிரபாவும் தீவிரமா வேலை தேடிட்டு இருந்தோம் .
நிறைய காம்பிடேட்டிவ் எக்ஸாம்ஸ் ட்ரை பண்ணிட்டு இருந்தோம் .
லக்ஷ்மி விலாஸ் பேங்கில் தேனாம்பேட்டை பிராஞ்சில் அவன் வேலைக்கு சேர்ந்தான் .
நான் பெங்களூரில் ஜாப் கிடைத்து போயிட்டேன் .
வருடம் இப்படியே போய் கொண்டிருக்க …வரதன் அங்கிளோட பிரண்ட் சதாசிவம் தன் பெண் பத்மஜாவை பிரபாவிற்கு கொடுக்க விரும்பினார் .
(சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வந்துருவோம் …ஓகே வா )
வரதா என் பொண்ணு பத்மாக்கு வரன் பார்க்கணும் .
நல்ல விஷயம் தானே சதா ?
ஏன் வரதா உன் வீட்டு மருமகளா என் பொண்ணை ஏத்துக்க மாட்டியா ?
இல்லை சதா நீ PW டிபார்ட்மெண்டில் பெரிய போஸ்டிங்கில் இருக்கிறவன் நான் சாதாரணமா ஹோட்டல் நடத்திட்டு இருக்கேன் . நாம எப்படி சம்மந்தம் பண்ணிக்கிறது ?
என்ன வரதா இப்படி சொல்லிட்ட? யாரோ ஒருத்தனுக்கு என் பொண்ணை கொடுத்துட்டு புலம்பறதை விட உன் பையனுக்கு கொடுத்தா நான் நிம்மதியா இருப்பேன் .
எந்த கெட்ட பழக்கமும் இல்லாத உன் பையன் என் வீட்டு மாப்பிள்ளையாக நான் கொடுத்து வைத்திருக்கணும் .
எதுக்கும் உன் பொண்ணு கூட கலந்து பேசிட்டு சொல்லு சதா .
நீயும் உன் வீட்டில் பேசு வரதா .. இது என் பொண்ணு போட்டோ . என் பொண்ணு BE படிச்சிருக்கா .
பிரபா… சதா மாமா அவர் பொண்ணு பத்மஜாவிற்கு உன்னை மாப்பிள்ளையாக்கிக்க ஆசை படறார் .
அப்பா …ஸ்ரீ குட்டிக்கு கல்யாணம் முடிச்சிட்டு எனக்கு பார்க்கலாமே ?
அண்ணா …நான் PG பண்ணனும் .என்னை வச்சி நீங்க எஸ்கேப் ஆக முடியாது ….ஸ்ரீமதி சிரித்தாள் .
அவள் B.Sc மைக்ரோ பயாலஜி பைனல் இயரில் இருந்தாள் .
பொண்ணு லட்சணமா இருக்கா ….கல்யாணி மகிழ்ந்து போனார் .
பத்மஜாவின் போட்டோ பார்த்த பிரபா மயங்கி போனான் .
என்னப்பா சொல்ற ? சதாக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் ?
உங்க இஷ்டம்பா …கன்னம் செம்மையுற வெட்கி …
அறைக்குள் நுழைந்து கொண்டான் .
“———“
பத்மா இந்த போட்டோ பாரு !
நம்ம வரதன் பையன் LVB யில் அசிஸ்டென்ட் மேனேஜரா இருக்கான் .
எனக்கு இப்போ மேரேஜ் வேண்டாம் . அவள் மன்றாடினாள்.
நீ எதை மனசில் வைத்து பேசறேன்னு எனக்கு தெரியும் .
நீ நினைக்கிறது நடக்காது !
உன் அப்பா உனக்கு நல்லதை தான் செய்வேன் …அவர் உள்ளே போய் விட்டார் .
என்ன பேசுவது என்று தெரியாமல் கையை பிசைந்தார் கஸ்தூரி .
அவருக்கு கணவரின் கௌரவமும் தெரியும் , மகளின் பிடிவாதமும் தெரியும் .
கோபமாய் காலால் உதைத்து கதவை அறைந்து சாத்தி விட்டு கட்டிலில் விழுந்தவள் மொபைலை எடுத்து மிதுனுக்கு அழைத்தாள் .
சொல்லுடா ஸ்வீட்டி ….மிதுன் காதலாகி கசிந்துருகினான் .
தந்தை மாப்பிள்ளை பார்த்திருக்கும் விஷயத்தை சொன்னாள் .
மிதுன் அவளுடன் என்ஜீனியரிங் படித்தவன் . இந்தி சினிமா கதாநாயகன் போல் அழகு …கிளாஸ் ஒர்க் , பிளைவுட் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் பக்தவசலத்தின் சீமாந்திர புத்திரன் அவன் . கோடிகளில் புரளும் குடும்பம் .
வெவ்வேறு சாதி ….ஆயினும் காதலில் விழுந்தனர் .
இவர்கள் காதல் சங்கதி சதாசிவத்திற்கு தெரிய வந்தது .
அவர் ஜாதி , குலம் கோத்திரம் பார்ப்பவர் . மகளுக்கு பொறுமையாய் எடுத்து சொன்னார் .
அவள் மிதுன் மயக்கத்தில் இருந்தாள் .
மிதுன் மேற்படிப்பிற்கு லண்டன் சென்று விட்டான் .
கலங்கி அழுத பத்மஜாவை அணைத்து ஆறுதல் படுத்தினான் . படித்து முடித்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்தான் .
அவன் இரண்டாண்டு படிப்பு முடிந்து வருவதற்குள் பத்மாவிற்கு திருமணம் செய்து வைத்து விட தீவிரமாக இறங்கி விட்டார் சதாசிவம் .
ஸ்வீட்டி …நீ உன் அப்பாட்ட பேசி புரிய வை ! எங்காவது வேலைக்கு போ … நான் வர வரைக்கும் எப்படியாவது சமாளி !
இல்லை மிதுன் …என் டாடி பத்தி உனக்கு தெரியல . அவர் ரொம்ப கௌரவம் பார்க்கிறவர் .
பார்த்துக்கலாம் விடு …நம்மை மீறி எதுவும் நடக்காது அவன் ஆறுதல் சொன்னான் .
பத்மஜாவுடன் கனவில் டூயட் பாடி சுவிட்சர்லாந்தில் ஆடி களைத்தான் பிரபா .
கஸ்தூரி நாளைக்கு வரதன் குடும்பத்தோடு பெண் பார்க்க வரான் .
உன் பொண்ணுக்கு சொல்லி வை ! ஏடாகூடமா ஏதாவது செய்ய நினைச்சா இந்த சதாசிவத்தின் இன்னொரு முகத்தை உன் பொண்ணு பார்க்க வேண்டி வரும் .
பிரபா காதில் ரகசியம் ஒதினாள் ஸ்ரீமதி . வாவ்! அண்ணா அண்ணி செம்ம அழகு !
மெல்ல தலை உயர்த்தி பார்த்த பிரபா …மெய் மறந்து போனான் .
காஃபி கொடுத்து விட்டு வணக்கம் சொன்ன பத்மஜாவை உள்ளே அழைத்து செல்லும்படி கண்ணை காட்டினார் சதா .
எங்களுக்கு பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு . நீங்க என்ன சொல்றீங்களோ அது தான் ? வரதன் சொல்லிவிட்டார் .
எங்களுக்கு பரிபூரண சம்மதம் வரதா …சதா அகமும் முகமும் மலர்ந்தார் .
ஜோதிடரை அழைத்து நிச்சயத்திற்கும் , முகூர்தத்திற்கும் நாள் குறித்து விட்டார்கள் .
தன்னால் ஆனவரை முரண்டு பிடித்து பார்த்தாள் பத்மஜா . மிதுனிடம் அழுதாள் .
இப்போதைய சூழ்நிலையில் நான் இந்தியா வர வாய்ப்பே இல்லை . பைனல் செமஸ்டர் டைம் இது . லீவ் கிடைக்காது .
ஏதாவது செய்து மேரேஜை நிறுத்த பாரு …அவன் வைத்து விட்டான் .
லக்ஷ்மி விலாஸ் பேங்க் தொலைபேசி எண்ணை மிதுனுக்கு அனுப்பி வைத்தாள் பத்மஜா .
ஹலோ சொல்லுங்க ….நான் பிரபானந்தன் .
நீங்க மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணோட லவ்வர் நான் .
“வாட் …? “
“யெஸ் ….நாங்க நாலு வருஷமா லவ் பண்றோம் ! “
“அப்படியா ? உங்க பேர் என்ன?”
அது ஏன் உனக்கு ? இந்த கல்யாணம் நடக்க கூடாது .
ஹலோ …இந்த மாதிரி அனானிமஸ் காலிற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் பண்ணிட்டு இருக்க முடியாது .
தந்தையிடம் சொன்னான் பிரபா
பிரபா ….சதா அப்படி எல்லாம் பெண்ணை வளர்த்திருக்க மாட்டான் . இதை எப்படி அவனிடம் கேட்பது ?
யாரோ வேண்டும் என்றே செய்யும் சதி இது மகனுக்கு தைரியம் சொன்னார் வரதராஜன் .
நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த பதினைந்தாவது நாள் முகூர்த்தம் .
வீட்டு காவலில் சிறை பிடிக்க பட்டிருந்தாள் பத்மஜா .
சதா மகளிடம் ஒற்றை வரியில் சொன்னது இது தான் .
உலகத்தில் உள்ள எல்லா பெற்றவர்களும் சொல்லும் அதே டயலாக் தான் எனக்கு வேற வழி இல்லை .
இந்த கல்யாணம் நடக்கலைன்னா நானும் உங்கம்மாவும் உயிரை விட்டுடுவோம் . விஷத்தை எடுத்து காட்டினார் .
நாங்க செத்த பிறகு நீ எவன் கூட போனா எங்களுக்கென்ன ?
மிதுன் இன்னும் ஆறுமாதம் பொறுத்து கொள்ள சொன்னான் .
உண்மையில் என் மீது காதல் இருந்தால் நீ இவ்வளவு அலட்சியமாக இருப்பாயா என்று கதறினாள் .
இந்த வயசில் படிப்பு முக்கியம் ஸ்வீட்டி . More than fifty lakhs செலவு செய்து லண்டனில் படிக்க வைக்கிறாங்க . அதை வீணாக்கிட முடியாது .
கண்டிப்பா உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன் இது சத்தியம் என்றான் .
கை மீறி எல்லாம் போய் விட்டது .ஒரு சிறு சந்தர்ப்பம் கூட பத்மஜாவிற்கு கிடைக்கவில்லை . விதி அவளுக்கு எதிராகவே இருந்தது .
திருமணம் ஆனால் என்ன? இன்னும் ஆறு மாதம் தாக்கு பிடித்தால் போதும் . மிதுன் வந்து விடுவான் . தன்னை வந்து மீட்டு செல்வான் . திடமாய் நம்பினாள் .
கோலாகலமாய் திருமண வைபவம் நடந்தேறியது . பொம்மையாய் அனைத்து சடங்குகளையும் செய்தாள் . மறந்தும் பிரபாவை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை .
திருமணம் ஆகி விட்டது ….இனி மகள் மனம் மாறிவிடுவாள் என்று நம்பினார் சதாசிவம் .
“——–“
பால் சொம்புடன் அறைக்குள் வந்து தயங்கி நின்றவளின் கரம் பற்றினான் பிரபா .
கையை விடு …ஆங்காரமாய் ஓங்கி ஒலித்து எதிரொலித்தது அவள் குரல் .
கனவுகள் சில்லு சில்லாய் நொறுங்கி …ஸ்தம்பித்து நின்றான் பிரபா .
—–தொடரும் —–
error: Content is protected !!