Skip to content
Post Views: 2,774
அத்தியாயம் 21
“நாளைக்கு சண்டே தானே, எங்கயாச்சும் வெளியே போவோமா?” என்றான் வில்வா பாரியிடமும் கருணாவிடமும்.
Advertisement
“போலாமே” என்றான் பாரி உடனே.
“நானே சொல்லணும்னு நினைச்சேன், நாளைக்கு எங்க சென்டர்ல இருந்து எல்லாரும் ஒரு இடத்துக்கு போறோம், என்னை பேச சொல்லி இருக்காங்க” என்றாள் கருணா மெதுவாக.
Advertisement
Advertisement
“ஓ” என்றான் வில்வா சுரத்தின்றி.
“நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.. எங்க சென்டர்ல இருந்து எல்லாரும் போறோம், அதனால நானே சமாளிச்சுப்பேன்”
Advertisement
“ஆமா, டெல்லில என்ன பேசப்போற? எங்க பேச போற?”
“அது, எகனாமிக்ஸ் கிளாஸ்ல ஒரு ப்ராஜெக்ட் மாதிரி.. ஜெயில்ல இருக்கிற கைதிகளுக்கு ஒரு ஸ்பீச் கொடுக்கணும். யாராவது வாலண்டீயர் இருக்கீங்களான்னு கேட்டாங்க.. நான் பேசுறேன்னு சொல்லிட்டேன். இங்க வந்துட்டு ஒரு தடவை கூட பேசற சந்தர்ப்பம்மே கிடைக்கலை இல்லயா?”
“என்னது ஜெயில்லையா?” என்றான் வில்வா.
“நாங்க ஜெயில் எல்லாம் பார்த்ததே இல்ல.. நாங்களும் அங்கேயே வர்றோம்” என்றான் பாரி, நண்பன் முறைப்பதை கண்டுக்கொள்ளாமலே.
“ஏன்டா ஜாலியா எங்கயாச்சும் போலாம்ன்னா ஜெயில் போலாம் சொல்ற, சரி சரி, இதுவும் ஒரு புது எக்ஸ்பிரியன்சா தான் இருக்கும், அங்கேயே போவோம்”
“ஆமா கருணாம்பிகை.. நாங்க ஜெயில், கோர்ட் எல்லாம் சினிமால தான் பார்த்திருக்கோம், அதனால நாங்களும் உன்னோடவே வந்துடறோம்”
“சரி, நான் நீங்க ரெண்டு பேரும் வர்றீங்கன்னு சென்டர்க்கு சொல்லிடறேன், அவங்க ஏற்பாடு பண்ணிடுவாங்க” என்று கூறி உடனே அழைத்து உறுதி செய்துவிட்டாள்.
“சரி கருணா, இங்க இருக்கிற ஜெயில்னா எந்த மொழில பேச போற?”
“ஹிந்தில தான் அண்ணா“ என்று அசால்ட்டாக கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள்.
அடுத்த நாள் காலை, மூவரும் கிளம்பி கருணாவின் கிளாஸ் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கே இருந்து பஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அங்கே உள்ளவர்களுக்கு பாரியையும் வில்வாவையும் நன்றாக தெரியும் என்பதால், கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றார்கள்.
“கருணாவுக்கு ரொம்ப தைரியம், இங்கயே பிறந்த எங்களுக்கே ஹிந்தியில் பேசறதுன்னா கஷ்டம், அவ எப்படி பேசப்போற? அதுவும் ஜெயில் கைதிகளும் பெரிய பெரிய அதிகாரிகளுக்கும் முன்னாடி” என்றான் அங்கே இருந்த ஒரு மாணவன் இவர்களிடம்.
“பேச்சு தான் அவ மூச்சே.. அங்கே வந்து பாருங்க ப்ரோ” என்றான் பாரி பெருமையாக.
“அவளுக்கு ஹிந்தி சொல்லி கொடுத்ததே நாங்க தான்.. கொஞ்சம் ஓவர் பில்ட் அப் தான்” என்றான் அந்த இளைஞன்.
இவர்கள் மேற்கொண்டு விவாதிக்கவில்லை. அவனே நேரில் பார்த்துக்கொள்ளட்டும் என்று அமைதியாகிவிட்டார்கள்.
ஜெயிலின் உள்ளே இருந்த கிரௌண்டில் அனைத்து கைதிகளும் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தார்கள். உயர் அதிகாரிகள் எல்லாம் முன் வரிசையில் அமரிந்திருந்தனர், ஜெயிலர், வார்டன் என்று மற்ற ஊழியர்கள் அனைவரும் ஒருபக்கமாகவும், மாணவர்கள் ஒரு பக்கமும் நின்றுகொண்டிருந்தார்கள். அன்றய சிறப்பு விருந்தினராக, மேஜர் விக்ராந்த் வந்திருந்தார்.
இவர்களை போல இன்னும் பல மாணவர்கள் வந்திருந்தார்கள். வில்வாவும் பாரியும் அவர்களுடனே அமர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி உற்சாகமாகவே இருந்தது. சிறப்பு உரை, கைதிகளில் சிலருக்கு நன்னடத்தை விருது, சில போட்டிகள், அதற்கான பரிசுகள் என்று வித்யாசமாக இருந்தது.
கருணாவின் முறை வந்தது. பாரியையும் வில்வாவையும் கருணாவின் வகுப்பு மாணவர்கள் ‘என்ன பேசறான்னு பார்ப்போம்’ என்பதை போல ஒரு பார்வை பார்த்தனர்.
தங்கள் பிள்ளைகள் நிச்சயம் நன்றாக செய்து பொறாமை படுபவர்கள் மூக்கை உடைப்பார்கள் என்று தெரியும் போது பெற்றோர்கள் முகத்தில் ஒரு கர்வ புன்னகை இருக்கும். அப்படி ஒரு புன்னகை உறைந்திருந்தது நண்பர்களின் முகத்தில்.
“நமஸ்கார், மேரா நாம் கருணாம்பிகை..”
என்று ஹிந்தியில் தனது உரையை தொடங்கினாள். அதற்கு பிறகான அவள் பேச்சு வழக்கம் போல தங்கு தடையின்றி பாய்ந்து ஓடும் நதிபோல ஒரே சீராக சென்றது. முதன் முதலாக ஹிந்தியில் பேசுபவள் என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அத்தனை நேர்த்தியுடன் வார்த்தைகள் விளையாடியது அவள் பேச்சினில்.
இன்று நான் இங்கு நிற்பது வெறும் பேச்சு பேச அல்ல… ஒரு உண்மையை சொல்ல.
இந்த உலகில் யாரும் தவறில்லாமல் வாழவில்லை. சிலர் சிறிய தவறு செய்கிறார்கள், சிலர் பெரும் தவறு செய்கிறார்கள். ஆனால் தவறு செய்தால் வாழ்வே முடிந்துவிடும் என்று சொல்லும் சட்டம் இந்த உலகில் கிடையாது. தண்டனை என்பது முடிவு அல்ல… மாற்றத்தின் தொடக்கம்.
இந்தச் சிறைச்சுவர்களுக்குள் இருக்கிற ஒவ்வொருவரும் குற்றவாளி என்ற அடையாளத்தை தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் நான் உங்களை வேறுவிதமாக பார்க்கிறேன்.
நான் உங்களை இன்னும் முடித்திடப்படாத வாழ்க்கை கதைகள் என்று பார்க்கிறேன். இன்னும் எழுதப்பட வேண்டிய வெற்றி அத்தியாயங்கள் என்று பார்க்கிறேன்.
இங்கே இருக்கும் ஒவ்வொரு அண்ணனும், ஒவ்வொரு அக்காவும் வாழ்க்கையில் ஒரு சோதனையை சந்தித்திருக்கிறீர்கள். சில நேரம் கோபம் உங்களை தவறான வழிக்கு நடத்தி இருக்கும். சில நேரம் விதி உங்களை இங்கே தள்ளியிருக்கலாம். ஆனால் இனி நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வாழ்க்கையின் மீதிப் பாதை இருக்கிறது.
இந்த சுவர்களுக்குள் இருளை நிரப்பமுடியாது. ஏனெனில் உங்கள் மனதில் இன்னும் ஒரு தீப்பொறி எரிகிறது — அது வாழ வேண்டும் என்ற ஆசை! மாற்ற வேண்டும் என்ற தீவிரம்!
நீங்கள் தவறுடன் பிறக்கவில்லை. அப்படியானால் ஏன் தவறுடன் வாழ வேண்டும்? ஏன் தவறுடன் முடிக்க வேண்டும்?
சிறை என்பது தண்டனைக்கான இடம் மட்டும் அல்ல, மறுபிறவிக்கான இடம்.
அன்பிற்குரிய அதிகாரிகளே,
நீங்கள் சட்டத்தை காப்பவர்கள் மட்டுமல்ல, மனிதர்களின் எதிர்காலத்தை காக்கும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. ஒரு மாற்றத்தை உருவாக்க உங்களால் முடியும். ஒரு வீழ்ந்தவரை எழுப்புவது தான் உண்மையான நீதியாகும்.
இங்கு இருக்கும் அண்ணன், அக்காக்களே—
கடந்த காலம் உங்கள் கதை இல்லை – அது ஒரு பாடம் மட்டுமே.
உங்களால் முடியும். உங்கள் வீட்டில் உங்களுக்காக காத்திருக்கும் குடும்பம் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறது. சமூகம் உங்களை எதிர்பார்க்கிறது.
இது உங்கள் வாழ்வின் புல் ஸ்டாப் இல்லை. இது ஒரு கமா (,). இன்னும் உங்கள் கதைக்கு பல வரிகள் மீதம் உள்ளது.
நீங்கள் மாற்றம் அடைந்தால்—
உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல, உங்களைப் பார்த்து இன்னொரு விழுந்த மனிதனும் மீண்டும் எழுவார்.
நீங்கள் உதாரணமாக நிற்க முடியும்.
என்று பேசிக்கொண்டே சென்றாள் கருணா. அங்கே இருந்த அனைவரது ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்தது அவளது பேச்சு.
பாரியையும் வில்வவாவையும் பெருமையாக பார்த்தனர் அந்த மாணவர்கள் இப்பொழுது.
நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. முதலில் கைதிகள் வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர்.
அப்பொழுது அன்றைய சிறப்பு விருந்தினர் மேஜர் விக்ராந்த் கருணாவிடம் வந்து பாராட்டி பேசிக்கொண்டிருந்தார்.
தீடீர் என்று ஒரு கைதி கருணாவின் அருகில் வந்துவிட்டார்.
அவர் கருணாவை நெருங்கும் முன்னே வில்வாவும் பாரியும் கருணாவின் இரு பக்கமும் அரணாக வந்து நின்றுவிட்டார்கள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கைதி வரவும், அதற்குள் இவர்கள் இருவரும் கருணாவை பாதுகாத்து நின்றதையும், பார்த்த மேஜர் மெச்சுதலாக நண்பர்களை பார்த்தார்.
“மிகவும் நன்றாக பேசினாய் மகளே, நீ நல்லா இருக்கணும். உன்னை பார்த்தா இறந்து போன என் மகள் ஞாபகம் வருகிறது”, என்று ஆசரிவதித்துவிட்டு அந்த கைதி சென்றுவிட்டார்.
யார் இவர்கள் என்று மேஜர் விசாரிக்கவும், கருணா முறையே இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு, நண்பர்கள் தோளை தட்டி கொடுத்துவிட்டு சென்றார் மேஜர்.
“டேய் பாரி இவர் பாசமா தட்டிட்டு போனதே எனக்கு வலிக்குதுடா.. இவர்கிட்ட எல்லாம் அடிவாங்கினா அவ்வளவு தான் இல்ல?”
“ஆமாடா வில்வா, கைய தூக்கவே முடியாது போல.. தட்டுனதுக்கே இப்படியா?”
“இது தான் ஆர்மி பவர் போலடா”
“இருக்கும் இருக்கும்”
“கருணா இன்னிக்கு சாயங்காலம் எங்கயாவது போலாம், இன்னிக்கு எங்க ட்ரீட், நீ முதல் முதலா ஹிந்தில பேசுனத்துக்கு ஓகேவா?”
“சரி போலாம்” என்றாள் கருணாவும். பாவம் இவர்கள் இருவரும் இவளுக்காக எவ்வளவோ விட்டு கொடுக்கும் போது அவர்களது சின்ன சின்ன ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று.
மாலை மூவரும் படம் பார்த்துவிட்டு வெளியே உணவையும் முடித்துக்கொண்டே வீடு திரும்பினார்கள்.
அதற்கு பிறகான நேரம் படிப்பு அவளை இழுத்து கொண்டது.
error: Content is protected !!