Skip to content
Post Views: 3,741
சுப்பு என்று அழைத்தபடி வந்தான் மன்னர்.
கண்ணான கண்ணாட்டி கண் மூடி படுத்திருந்தாள். விழி மூடிவிட்டால் உறங்கியதாக அர்த்தமோ?
நேரம் 9.15 தான். அதற்குள் தூங்க மாட்டாளே… லைட் ஆன் பண்ணியவன் கையில் இருந்த கவரை டேபிலில் வைத்தான்.
அவன் குளித்து உடைமாற்றி வர சாவகாசமாய் எழுந்தமர்ந்தாள்.
Advertisement
டேபிலில் இருந்த கவரை அவள் மடியில் வைத்தான்.
பிரித்து பார்த்தாள் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஸ்டேஃப்ரீ இரண்டு பாக்கெட்டுகள் இருந்தது.
ஒரு கணம் திகைத்து தான் போனாள்.
Advertisement
அச்சோ….இந்த வாரம் தனக்கு மாதவிலக்கு வரும்…. அப்போது தான் நினைத்துக்கொண்டாள்.
Advertisement
அவனை நிர்சலனமாய் பார்த்திருந்தாள்.
சுப்பு உனக்கு கல்யாணத்தப்போ செவன்த் டே….
அவள் ஒரு மாதிரியாய் பார்த்தாள்.
Advertisement
ஏய் எதுக்கு இந்த லுக்கு? உங்கம்மாவை கேட்டு தான் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணினோம். சாஸ்திரப்படி பீரியட்ஸ் டைமில் மேரேஜ் பண்ண கூடாதாம்.
அவள் இன்னும் விறைப்பாய் பார்க்க… அம்மாக்கு இடுப்பு வலி அதிகமா இருக்காம்.மூவ் வாங்கிட்டு வர சொன்னாங்க. மெடிக்கல்ஷாப் போனேன். அப்போ தான் உனக்கு பீரியட்ஸ் டைம் வருமேன்னு ஞாபகம் வந்தது. இங்கே கடைக்கு போய் வாங்க உனக்கு ஒரு மாதிரி இருக்கும் அது தான் நானே வாங்கிட்டு வந்துட்டேன்.
எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
என்ன மேடம் உர்ருன்னு இருக்கீங்க?
அதெல்லாம் ஒண்ணுமில்ல
வாங்க சாப்பிடலாம் என்று கிச்சனுக்கு சென்றாள்.
தோசை ஊற்றி கொடுத்தவள் முகம் வாட்டமாய் இருப்பதை கண்டு கொண்டான்.
நீ சாப்பிட்டியா?
ம்ம்ம் என்றவளின் கரம் பற்றி இழத்து இரண்டு வாய் தோசை ஊட்டிவிட்டான்.
“——————–“
இன்னைக்கு நாள் எப்படி போச்சு? லைப்ரரியில் இருந்து எடுத்துட்டு வந்த கள்வனின் காதலி படிச்சியா?
இல்லை… சலிப்பாய் சொன்னாள்.
ஏன்? கொஞ்சலாய் கேட்டப்படி தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.
சலிப்பா இருந்துச்சு! முகம் இறுகி போனது.
அதுக்குள்ளேவா? சிரிப்புடன் அவள் கன்னத்தை வருடினான்.
எங்காவது போகலாமா?
மனைவியை கூர்ந்து நோக்கினான். போகலாம்… எப்போ லீவ் கிடைக்குதுன்னு பார்ப்போம்.
எப்போ லீவ் கிடைக்கும்? விடாப்பிட்டியாய் கேட்டாள்.
என்னாச்சு என் சுப்பு குட்டிக்கு? இறுக்கி அணைத்துக்கொண்டான். அவள் மனதிற்குள் எதையோ யோசித்து மருகுகிறாள் என்று புரிந்தது.
அவன் அணைப்பில் அவள் காட்டிய அசௌகரியம் புரிந்தது. அணைப்பை தளர்த்தினான்.
எப்போ போகலாம்? மீண்டும் அழுத்தமாய் கேட்டாள்.
சுப்பு ஸ்டேஷனில் நைட் டியூட்டி எல்லாருக்கும் ரொட்டேஷனில் உண்டு. நான் புதுசா கல்யாணம் ஆனவன்னு என்னை கண்டுக்காம பாலிஷா விட்டிருக்காங்க. ஏற்கனவே ஸ்டேஷனில் ஆள் பற்றாக்குறை. வீக் எண்ட் லீவ் எடுக்கவே கஷ்டம். இப்போ நான் போய் லீவ் கேட்டு நிற்க முடியுமா?
எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்கீங்க… எரிச்சல் அவளுக்கு.
இன்னும் ரெண்டு வாரம் போகட்டும். வீக் எண்டோட சேர்ந்த மாதிரி ரெண்டு நாள் CL கேட்டு பார்க்கிறேன். ஏற்காடு போயிட்டு வருவோம்.
ஏற்காடா? அவள் முகம் அஷ்டக்கோணலாகியது.
ஏன்?
இல்லை…. கேரளா சைடு போயிட்டு வருவோம் என்றாள்.
கேரளா ஏன்? ஏற்காடுலே நல்ல பிளேசஸ் எல்லாம் இருக்கு.
ஏன் உங்க ஊரிலே கல்வராயன் மலை இருக்கு. போயிட்டு வந்துடுவோமே….. செலவே இருக்காது பாருங்க!
புரிதல் இல்லாத அவளின் அலட்சிய பேச்சில் செம்ம கோபம் அவனுக்கு. ஆனாலும் பொறுமையாக தான் பேசினான்.
ஹனிமூன் போறது ஒருத்தரை ஒருத்தர் பேசி புரிஞ்சுகிட்டு எந்த வித இடைஞ்சலும் இல்லாம தனிமையில் இனிமையா என்ஜாய் பண்ணிட்டு வரணும்னு தான்.
எங்கிருந்தாலும் அன்பும் புரிதலும் இருந்தா போதும்.
இப்போதைக்கு ஏற்காடு போயிட்டு வருவோம். நேரம் அமையும் போது நீ ஆசைப்பட்ட மாதிரி கேரளா கூட்டிட்டு போறேன்.
ஏன் பட்ஜெட் போட்டு வச்சுட்டீங்களா?
நக்கலா? கோபமா? அவள் குரலில்.
சுப்பு…. மென்மையாய் அழைத்தான் அதிலே லேசான கண்டிப்பு இருந்தது. கண்டனமும் தெரிந்தது.
பணத்துக்கு யோசிக்கிறீங்களா? நான் அப்பாட்ட கேட்கிறேன். எங்க அண்ணா கூட சொன்னார் வெளியில் எங்காவது போயிட்டு வாங்க நான் அரேஞ்ச் பண்றேன்னு.
சுப்பு… என்ன பேசறேன்னு தெரிஞ்சு தான் பேசறியா? உங்க வீட்டில் அனுப்பி வைத்து தான் ஹனிமூன் போகணும்னு நான் காத்துகிட்டு இருக்கேனா?கோபமாய் அதட்டினான்.
ஏன் கோபப்படறீங்க? உங்க காசை தான் செலவு பண்ண மாட்டேங்கறீங்க…. எங்க வீட்டில் கேட்கிறேன்னு சொன்னாலும் அதட்டறீங்க…. கண்கள் சிவந்து கலங்கியது அவளுக்கு. சிறப்பாய் ஹனிமூன் போய் வரவில்லை என்றால் ஓரகத்தி என்ன நினைப்பாள்? அவள் கவலை அவளுக்கு.
அவன் மௌனமாய் அமர்ந்திருந்தான். கோபத்தில் விடும் வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம் என்று அவனுக்கு தெரியும்.
பணம் மட்டும் வாழ்க்கை இல்லைங்க… அவன் கரம் பற்றினாள் தத்துவ போதினியாய்.
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை தான் பணம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை என்று அவளுக்கு எப்போது புரியும்?
அமைதியாய் தீர்க்கமாய் அவளை பார்த்தான்.
கையில் காசு இல்லைன்னா பரவாயில்லை.ஆடு வித்த பணம் வச்சிருக்கீங்க, காய்கறி தோட்டத்துக்கு தனியா ஒரு போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் வச்சிருக்கீங்க. அதிலும் பணம் இருக்கு. இவ்வளவு கணக்கு பார்க்கறீங்க…. உரிமையாய் கோபித்தாள்.
ஆம் இன்று மதியம் தான் போரடிக்கிறது என்று பீரோவை ஆராய்ந்தாள். மன்னர் பள்ளியில் கல்லூரியில் வாங்கிய பாராட்டு சான்றிதழ்கள் தொடங்கி, மதிப்பெண் அசல் சான்றிதழ்கள் தனியே நகல்கள் தனியே என்று கோப்புகளாக அழகாக அடுக்கி வைத்திருந்தான்.
PLI யில் சேமிக்கிறான் போலும் அதற்கான டாக்குமன்ட், ஹெல்த் இன்ஷூரன்ஸ் டாக்குமென்ட் அவன் வாங்கிய நிலத்திற்கான கிரைய பத்திரம்,பட்டா,வீட்டு வரி ரசீது ஒன்றுவிடாமல் பத்திரப்படுத்தி இருந்தான்.
சேலரி அக்கவுண்ட்டிற்கு ஸ்டேட் பேங்க் கணக்கு,இன்னொரு பாஸ் புத்தகம் யூனியன் வங்கியுடையது என்று இருந்தது.போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் என்று பாஸ் புத்தகம் இருந்தது. அதன் மேல் அட்டையில் எழுதி இருந்தான் காய்கறி தோட்டத்தின் வரவு.
அவன் இவ்வளவு விபரமானவன் என்று வியப்பதற்கு பதிலாக பயங்கர கேடி என்றே நினைத்துக்கொண்டாள்.
தன்னை பற்றிய மனைவியின் புரிதல் இவ்வளவு தானா? கொஞ்சம் வேதனை தான் அவனுக்கு.
நீ ஆசைப்பட்டு கேட்கறேன்னு கூட்டிட்டு போறேன் ஆனா அடிக்கடி இப்படி ஆசைபட்டின்னா ரொம்ப கஷ்டம் என்றான் பெருமூச்சுடன்.
நான் இந்த பணத்துக்கு வேற பிளான் வச்சிருந்தேன் என்றவனுக்கு மனம் சஞ்சலம் கொண்டது.
பணத்துக்கு செலவா இல்லை? என்றாள் தத்துவார்த்தமாய்.
பணம்வெறும் காகிதம் தான் ஆனால் அது செய்யும் மாயாஜாலம் இருக்கிறதே….
“——————–“
ஆயிரம் கனவுகளுடன் தன் கரம் பிடித்து வந்திருப்பாள் என்று அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் யதார்த்தம் புரியாமல் அவள் இருந்து விடக் கூடாதே.
இருப்பதை கொண்டு நிறைவாக பெருவாழ்வு வாழ வேண்டும் என்பது அவன் நோக்கம். இதுவரை அப்படி தான் வாழ்ந்து வருகிறான்.
அவர் போல வாழ வேண்டும் இவர் போல வாழவேண்டும் என்று நினைக்காமல் நாமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் அவன்.
போலியாய் ஒரு அரிதார வாழ்க்கை வாழ்ந்து கடனில் தத்தளித்து வாழ்வதில் உடன்பாடு இல்லாதவன் அவன்.
மன்னர் களியை சாப்பிட்டால் பத்தாது என்றால் கரைத்து சாப்பிடும் ரகம்! ( ராகி களி உருண்டையாய் இருக்கும். ஆளுக்கு ஒரு உருண்டை களி வைத்து குழம்பு ஊற்றுவார்கள். களி கொஞ்சம் தான் இருக்கிறது பத்தாது என்றால் தண்ணீர் விட்டு கரைத்து கூழாக மாற்றி எல்லாருக்கும் வயிறு நிறையும் அளவிற்கு கொடுத்து விடுவார்கள். அதை தான் கட்டியாய் தின்றால் பத்தாது என்றால் கரைத்து குடி என்று பழமொழி சொல்வார்கள்)
போக போக புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை கொண்டான்.
“———————–“
சுப்ரஜா ஆசைப்பட்டபடி கேரளாவில் உள்ள மூனாறு சென்றார்கள்.
இரண்டு நாட்கள் தங்குவதற்கு ரிசார்ட் புக் பண்ணியிருந்தான். அவளுக்கு கணவன் மீது மிகுந்த வருத்தம் நான்கு நாட்களாவது தங்கி செல்ல வேண்டும் என்பது அவளின் ஆசை.
நான்கு நாட்கள் தாங்குவதற்கு எவ்வளவு ஆகும் என்று அவனுக்கு தெரியுமே?
ஈஸியாக சொல்லிவிட்டாள் ஆடு வித்த காசு இருக்கிறது என்று…. அந்த ஆடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வளர்த்து பராமரிக்க அதன் பின்னே எவ்வளவு உழைப்பு? எவ்வளவு செலவு?
இரண்டாண்டு பராமரிப்பில் வளர்ந்த ஆடுகளை விற்ற பணம் இரண்டு நாள் தேனிலவு கொண்டாட்டத்திற்கே சரியாய் போனது.
குளிருக்கு இதமாய் மனைவியை போர்த்திக் கொண்டான். அப்படி ஒரு நெருக்கம் அப்படி ஒரு கிறக்கம்.
தான் கேட்டவுடன் கேரளா அழைத்து வந்து விட்டானே…. அந்த அன்பில் அன்னியோன்யம் அதிகரித்து கணவனுக்கு கம்பளியாகி போனாள்.
அவள் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டான், கேட்டதை வாங்கிக் கொடுத்தான். ஜாலியாக சுற்றினார்கள். வீட்டிற்கு தேவையானதை வாங்கினார்கள்.
அடிப்படை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆடம்பர ஆசைகளுக்காக மெனக்கெடுவதும் புலம்புவதும் அர்த்தமற்றது அல்லவா?
வரவில் நான்கில் ஒரு பங்கேனும் சேமிக்க வேண்டும் என்பது அவன் கொள்கை.
அப்படி திட்டமிட்டு சேமித்து தான் பத்து பைசா கடன் வாங்காமல் எட்டு லட்சம் கொடுத்து அரைக்காணி நிலம் வாங்கினான்.
இது சம்பாதிப்பதற்கான வயது மட்டுமல்ல சேமிப்பதற்கான வயதும் கூட….
குழந்தை குடும்பம் என்று கடமைகள் அதிகரிக்கும் போது செலவுகள் அதிகமாகும், அப்போது இறுக்கி பிடித்து சேமிக்க முடியாதே…
மனைவி மீது காதலும், அன்பும் கொட்டி கிடக்கிறது…. அதை பணத்தின் மூலம் தான் வெளிப்படுத்த முடியுமா?
கணவனின் கரம் கோர்த்து குளு குளுவென்று சுற்றி வந்ததிலும், வித விதமாய் போட்டோ எடுத்துக் கொண்டதிலும் சுப்புவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.
மனைவியின் மகிழ்ச்சியை கண்டவனுக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகுமா?
“———————–“
கேரளாவில் எடுத்த புகைப்படங்களையும் பார்த்த இடங்களையும் மாமியாரிடம் பேசி பேசி புலகாங்கிதம் அடைந்தாள் சுப்பு.
மற்ற மாமியார்கள் மாதிரி இல்லாமல் பாப்பாத்திக்கு சந்தோஷம் தான். மருமகள் சொல்லும் கதைகளை ஆர்வமாய் கேட்டுக்கொண்டார்.
மற்ற மூன்று மகன்களை விட பாப்பாத்திக்கு மன்னர் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
சிறுவயதிலே பெற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டவன் என்பதாலோ, பெற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டே அவன் முடிவு இருக்கும் என்பதாலோ, கருத்தாய் புத்தியாய் இருக்கிறான் என்பதாலோ, கூடவே இருக்கும் கடைக்குட்டி மகன் என்பதாலோ ஏதோ ஒன்று.
கேரளா சென்று வந்ததில் கொஞ்சம் மனமும் முகமும் பொலிவாய் இருக்கிறாள் சுப்ரஜா.
நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு அப்படியே உங்க அக்கா வீட்டுக்கு போயிட்டு வந்துடுவோம் என்றான்.
சுபிக்கு செம்ம குஷி. அக்கா மகள் லக்ஷனாவிற்கு ஸ்வெட்டர், சாக்லேட், ஜெல்லி எல்லாம் வாங்கி வந்திருக்கிறாளே…..
ஹை… நிஜமாவா? கன்ஃபார்மா போறோமா? துள்ளளுடன் கேட்டாள்.
அவளின் கேள்வியிலும் துள்ளலிலும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
கண்டிப்பா போகலாம் என்று அவள் கன்னத்தை பிடித்து ஆட்டினான்.
தேங்க்யூ அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள்.
அவ்வளவு தானா? பாவம் போல் கேட்டான்.
வேற…. அவள் புரியாமல் பார்த்தாள்.
உண்மையில் அவளை குழந்தை என்றே நினைத்தான்.
தேங்க்யூவை பலவிதமா சொல்லலாம்! எப்படி எப்படி சொல்லலாம் என்று அவன் போதிக்கலானான். சிணுங்களுடன் அவள் கற்றுக் கொண்டிருந்தாள்.
“————————-“
சுப்ரஜா காத்தானை கொஞ்சம் காயெல்லாம் பறிச்சுட்டு வர சொல்லியிருக்கேன் அம்மாக்கு எடுத்துட்டு போ! என்றார் பாப்பாத்தி.
சரிங்கத்தை என்றாள் விரிந்த சிரிப்புடன்.
கீரை கொஞ்சம் வாடிடும் இல்லைனா எடுத்துட்டு போகலாம் என்றார்.
பரவால்லத்த அம்மா வீட்டிலேயும் கீரை எல்லாம் விதைப்பாங்க என்றாள்.
நம்ம தோட்டத்துல விளைந்த கொய்யா, பாப்பாளி எல்லாம் உன் மாமனார் கொண்டு வந்தார் மறந்துடாம எடுத்து வச்சுக்கோ!
சரிங்கத்த என்றவளுக்கு அவ்வளவு உற்சாகம்.
பாரேன் அம்மா வீட்டுக்கு கிளம்பறதில் எவ்வளவு ஆனந்தம்? மோவாயில் கை வைத்தார் பாப்பாத்தி.
இல்லையா பின்ன…செம்ம ஜாலியா இருப்பேனே என்றாள் விழி விரித்து.
அப்போ நான் உன்னை கொடுமை படுத்துறேனா? பொய்யாய் கோபித்தார்.
அய்யோ அத்த நீங்க ச்சோ ஸ்வீட், செம்ம கியூட்….. அழகாய் மாமியாரை கொஞ்சினாள்.
அண்ணன் அண்ணி வேறு குரும்பூருக்கு வந்திருக்கிறாங்களாம்….. செம்ம ஹேப்பி மூடில் இருந்தாள்.
ஊருக்கு போகும் உற்சாகத்தில் அவளுக்கு மதிய உணவு இறங்கவே இல்லை. பெயருக்கு கொரித்து வைத்தாள்.
சீவி சிங்காரித்து அலங்காரியாய் வாயிலை பார்த்திருந்தாள் மன்னரின் வரவுக்காக.
நாலு மணிக்குள்ள வந்திடுவேன்னு சொன்னாரே… பார்த்து பார்த்து அவளுக்கு கண்கள் பூத்து விட்டது.
அம்மாடி எதுக்கு இப்படி வாசலில் தவங்கிடக்க….? வந்துடுவான் பொறு! என்றார் பாப்பாத்தி.
நான்கரை தாண்டியது. பொறுமை இழந்தவள் மொபைலை எடுத்து அழைப்பு விடுத்தாள்.
ரிங் போய் கொண்டே இருந்தது பதில் இல்லை. கடுப்பாகிவிட்டது அவளுக்கு.
மீண்டும் அழைப்பு விடுத்தாள்…. பதில் இல்லை.
உச்சகட்ட கோபம் அவளுக்கு…. இந்த ஆளுக்கு என்ன கிறுக்கா…. என்னை பார்த்தா எப்படி தெரியுது? ஆத்திரம் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
என்னம்மா…. சங்கடமாய் கேட்டார் பாப்பாத்தி.
அவர் ஃபோன் எடுக்கல என்றாள் கலங்கிய விழிகளுடன்.
இரு நான் பண்ணி பார்க்கிறேன் என்றவர் தன் மொபைலில் இருந்து அழைப்பு விடுத்தார். அப்போதும் பதில் இல்லை.
ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பான் என்றார்.
சீற்றத்துடன் மாமியாரை பார்த்தாள்.
மகனின் வேலை பற்றி அவருக்கு நன்றாக தெரியும். எட்டு ஆண்டுகளாக பார்க்கிறார் அல்லவா?
அவள் கோபத்துடன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினாள்.
————தொடரும்——–
error: Content is protected !!