Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நமக்காக வாழ்வோம் வா

நமக்காக💞15

அவ்வளவு தான் வியாபாரம் முடிந்தது என்று தெளிவு படுத்தி விட்டான் மன்னர்.

இளசான ஆடுண்ணே கறி அருமையா இருக்கும் என்றான் கதிர்.

வாங்க வந்தவருக்கும் தெரியும். இந்த விலையில் எங்கும் கிடைக்காது என்று…

கதிரு நம்ம கிடாக்கு என்ன கிராக்கியா இல்லை? அங்கே ஏன் புளி போட்டு விளக்கிட்டு இருக்க? நான் விலையை சொல்லிட்டேன். வியாபாரம் படிஞ்சா பாரு இல்லைனா அனுப்பிவிடு என்று பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டான்.



Advertisement

அண்ணே கோவிக்காதீங்க… இந்தாங்க மொத்த ரூபாயும் பிடிங்க என்று அவசரமாய் எண்ணி கட்டாய் கையில் திணித்தான் வாங்க வந்தவன்.

சாயந்திரம் டிப்பர் கொண்டாந்து ஏத்திட்டு போறேண்ணே என்றான்.

ம்ம்ம்ம் சரிதான். ஏலே கதிரு கயித்தை அவித்துட்டு ஆட்டை ஓட்டி அனுப்பு என்றான். (கிராமங்களில் அது ஒரு நம்பிக்கை ஆடு மாடு விற்கும் போது கயிறை அவிழ்த்து எடுத்துக் கொண்டே அனுப்புவார்கள். கயிரோடு அதிர்ஷ்டம்  போய் விடும் என்று நம்பிக்கை)

Advertisement

கதிர் கையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை திணித்து விட்டு கிளம்பினான். கதிர் வீடு இருக்கும் தெருவில் தான் மன்னரின் ஆட்டுப்பட்டி இருக்கிறது.

Advertisement

வீட்டுக்கு வந்தவன் அறைக்குள் நுழைந்தான். மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள் சுபி.

இந்தா இதை பீரோவில் வைத்து பூட்டு என்று அவள் கையில் பையை கொடுத்துவிட்டு குளிக்க போனான்.

என்ன இருக்கு? ஆவலாய் பிரித்து பார்த்தாள். கட்டாய் பணம். ஆடு வித்த பணம் போல….

Advertisement

குளித்து வந்தவன் சாப்பிட சென்றான்.பாப்பாத்தி சாப்பாடு எடுத்து வைத்தார்.

அப்பா சாப்பிட்டாரா?

ம்….சாப்பிட்டு பின்னாடி வீட்டில படுத்திருக்காரு.

“————————“

ம்ச்….. கடுப்புடன் அவன் கையை தட்டிவிட்டாள்.

இப்போ என்ன உனக்கு? ஆசையாய் மனைவியை நாடியவன் சுணங்கிவிட்டான்.

ஒண்ணுமில்ல அவள் உதட்டை சுழித்தாள்.

ஆறாம் அறிவுன்னா என்ன தெரியுமா? சிந்தித்தல், பகுத்தறிதல்.

எதை செய்யணும், ஏன் செய்யணும் எப்போ செய்யணும் எதை செய்யகூடாது எல்லாம் யோசிக்க தான் ஆறாம் அறிவு.

நீ டீன் ஏஜ் பொண்ணு இல்லை. திருமண வாழ்க்கைக்கு அஸ்திவாரமே புரிதல் தான்.

எனக்கு பிடிவாதம் பிடிக்காது. அவ்வளவு தான் அவன் கண் மூடி உறக்கத்தை தழுவிக் கொண்டான்.

இன்னும் கொஞ்சம் சமாதானம் செய்வான் கண்ணே மணியே என்று கொஞ்சுவான் கெஞ்சுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க…. அவன் உறங்கியே விட்டான்.

“————————“

காலையில் எழுந்து ஆட்டுபட்டிக்கு சென்றுவிட்டான்.

ஆடுகளை பராமரிக்கும் காத்தான் அவன் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று இரவே சொல்லிவிட்டான். அவன் கையில் இரண்டாயிரம் கொடுத்து அனுப்பினான்.

வேண்டாம் தம்பி மாசா மாசம் சரியா கூலி கொடுத்துடறீங்க,  இதுவேற… அவன் தயங்கினான்.

ஆடு வித்தோமில்ல உனக்கும் கொடுக்கணுமில்ல…. பிள்ளைங்க படிப்பு செலவுக்கு வச்சுக்கோ!

நன்றியோடு கிளம்பி போனான் காத்தான்.  அவன் மூன்று பிள்ளைகளுக்கும் புத்தக பை, எழுது பொருட்கள், செருப்பு, சீருடை என்று அவ்வப்போது வாங்கி தருவான்.

தீபாவளி பொங்கல் என்று புதுத்துணி வாங்கி தருவான்.

காத்தானுக்கு மன்னர் தான் எல்லாமே…. மன்னரின் காய்கறி தோட்டத்திற்கும் காத்தான் தான் பொறுப்பு. அவ்வளவு பொறுப்பாக பார்த்து பராமரிப்பான்.

காத்தானின் பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தி விடவேண்டும் என்பதே மன்னரின் எண்ணம்.

இன்று காத்தான் இல்லை என்பதால் ஆட்டுபட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று காலையிலே கிளம்பிவிட்டான்.

காத்தான் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வடிவேலன் உதவிக்கு ஓடிவந்தான்.

வடிவேலு இது உன் வேலை இல்லை. நான் பார்த்துக்கறேன் நீ போய் படி! ஸ்கூலுக்கு கிளம்பு.

நீங்க ஏன் இதெல்லாம் செய்துகிட்டு? அவன் வருந்தினான்.

போடா…. வந்துட்டான் பெரிய மனுஷன்…. அவனை விரட்டிவிட்டு, தானே இரும்பு முறம் எடுத்து ஆட்டு சாணத்தை அள்ளி அலுமினிய அன்னக்கூடையில் நிரப்பி குப்பைக்கு(எரு) என வெட்டி வைத்திருந்த குழிக்குள் கொட்டிவிட்டு, தொடப்பம் எடுத்து பெருக்கி சுத்தம் செய்து சாம்பிராணி புகை போட்டு விட்டான்.

ஆடுகளுக்கு என்று காத்தான் வைத்துவிட்டு போயிருந்த தழைகளை அள்ளி போட்டான்.

“———————“

என்னத்த உங்க பிள்ளையை காணும்? வயலுக்கு போயிருக்காரா? மாமியாரிடம் விசாரித்தாள்.

இல்லம்மா ஆட்டுபட்டிக்கு போயிருக்கான். இன்னைக்கு காத்தான் இல்லை. அது தான் சுத்தம் பண்ணிட்டு வர போயிருக்கான்.

இதெல்லாம் ஏன் இவர் செய்யறாரு….? அதிருப்தியாய் கேட்டாள்.

நம்ம வேலையை நாம செய்யாம… பாப்பாத்தி சிரித்தார்.

எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை என்றாள். எங்கே தன்னை செய்ய சொல்லி விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு.

நீ இதெல்லாம் செய்ய தேவையில்லை என்றான் பின்னாலிருந்து.

அவன் மீதிருந்து வந்த வாடை அவளை முகம் சுழிக்க வைத்தது.

அம்மா நான் குளிச்சுட்டு வந்துடறேன் என்றான்.

நல்லா குளிச்சுட்டு…. அதற்கு மேல் சொல்ல முடியாமல் விழுங்கிக் கொண்டாள்.

நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.

அய்யோ சுபி உனக்கு வாயில வாஸ்து சரியில்லை என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

“——————–“

குளித்து வந்தவன் நேரே சாப்பிட அமர்ந்து விட்டான்.

அவசரமாய் டிபன் எடுத்து வைத்தாள்.

தன் மீது கோபத்தில் இருக்கிறான் என்று புரிந்தது.

அமைதியாய் சாப்பிட்டு எழுந்தான்.

அவன் கிளம்ப ஆயத்தமானான். அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்தாள்.

அவன் அமைதியாகவே கிளம்பினான்.

ஸாரி என்றாள்…. தலை குனிந்து.

நான் முசுடுன்னு எப்போ எப்படி கண்டுப்பிடித்த? அவள் முகத்தை பார்த்து நேரே கேட்டான்.

அவன் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

இப்போவும் சொல்றேன் புரிதல் இல்லாத வாழ்க்கை நிம்மதியா நகராது என்றான்.

நான் கிளம்புறேன் என்று தொப்பியுடன் சென்றுவிட்டான்.

“—————————-“

மதியத்துக்கு பொன்னாங்கண்ணி கீரை கடைஞ்சு, சேனை கிழங்கு வறுவல் செய்துடுவோமா என்றார் பாப்பாத்தி.

கீரையா? அவள் சிணுங்கினாள்.

பொண்ணாங்கன்னி கீரை உடம்புக்கு அவ்வளவு நல்லது. கண் பார்வைக்கு நல்லது, உடம்பு சூட்டை தணிக்கும், முடி கூட நல்லா வளரும் என்றார்.

அத்தை வேற லெவல் போங்க! கைத்தட்டி சிரித்தாள்.

கிண்டல் பண்றியா? அவருக்கு வெட்கம் வந்து விட்டது.

ச்ச ச…. நிஜமா பாராட்டினேன் என்றாள்.

அவளுக்கு ஆச்சரியம். அவள் அம்மா மாதிரி இவரும் கிராமத்து பெண்மணி தான் ஆனால் வித விதமாக சமைக்கிறார். ஏகப்பட்ட சமையல் குறிப்புகள் சொல்கிறார்.

எப்படி இப்படி? சிரித்துக்கொண்டே கேட்டாள்.

இப்போதான் யூட்டியுப்லாம் இருக்கு. பத்து பனிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விகடன் புத்தகம் வாங்கினா சமையல் புத்தகம் ஒன்னு இலவச இணைப்பா வரும்.

முப்பது வகை காரம், முப்பது வகை இனிப்பு, முப்பது வகை வெரைட்டி ரைஸ்…. இப்படி எல்லாம் வரும்.

மன்னரு புக் வாங்கிட்டு வந்து கொடுப்பான்.  சமைக்கும் போது கூடவே இருந்து  உதவி செய்வான்.

அப்படி படிச்சு ஒவ்வொண்ணா செய்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமா பழகிகிட்டது தான்.

நாளு கிழமைகள்ள பலகாரம் பட்சணம் போடணும்னா மன்னரு கூட வந்து ஒத்தாஸைக்கு உட்கார்ந்துடுவான்.

ஒன்னு சொல்லவா? மன்னரு நல்லா சமைப்பான் என்றார் பெருமையும் சிரிப்புமாக.

மன்னர் இல்லாம இந்த வீட்டில் எதுவும் இல்லையா? எல்லா பேச்சிலும் எல்லா நிகழ்விலும் அவன் அவன் அவன் மட்டுமே… கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது அவளுக்கு.

சுபிம்மா நிறைய புத்தகம் சேர்த்து வச்சிருக்கேன். நீயும் படிச்சு பார்த்து சமையல் கத்துக்கோ என்றார்.

எதே…. முகம் புஸ்ஸாகி போனது அவளுக்கு.

“———————–“

இந்த இரண்டு வாரத்தில் அவள் மன்னரை பற்றி தெரிந்து கொண்டது ஏராளம்! ஆனால் புரிந்து கொண்டது?

உண்மையில் அவளுக்கு பிரம்மிப்பாக இருந்தது.

இவன் எப்படியான மனிதன்? அவள் உணர்வுகளுக்கு அவனை எடை போட தெரியவில்லை.

மதியம் போன் பண்ணி அவளே பேசினாள்.

புது பொண்டாட்டியிடம் கோபம் எத்தனை நாள் நீடித்து விடும்?

ஓரளவு இருவருமே சமாதானம் ஆகியிருந்தனர்.

இரவு வரும் போது அப்பாவிற்கு ஓமப்பொடி மிக்ஸரும் அம்மாவிற்கு மிளகு சேவும், மனைவிக்கு மினி பாதுஷாவும் வாங்கி வந்திருந்தான்.

பூ வாங்கிட்டு வரலையா? கேலியாக கேட்டாள்.

என் குயினுக்கு பூந்தோட்டமே வளர்க்கிறேன் என்றான் பெருமையாக.

ம்க்கும்…. பூ வாங்கினா செலவாகிடும்னு பூந்தோட்டம் வளர்த்திருப்பாரு என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.

“————————-“

மாமியாருக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்த சங்கீதா அக்கறையாய் சுப்ரஜாவை நலம் விசாரித்தாள்.

சுபி பக்கத்துல தான் இருக்கா பேசும்மா என்று போனை கொடுத்துவிட்டு நகர்ந்தார் பாப்பாத்தி.

என்னம்மா புது பொண்ணு எப்படி இருக்கீங்க?

ஹான் அக்கா நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? மாமா நல்லா இருக்காங்களா? குட்டீஸ் நல்லா இருக்காங்களா?

நானா பேசினப்புறம் நலம் விசாரிக்கற பார்த்தியா நீ உன் புருஷனை விட கில்லாடி தான் என்று நக்கலாய் சிரித்தாள் சங்கீதா.

அச்சோ அக்கா ஸாரி…. என்கிட்ட உங்க நம்பர் இல்லை. நான் அத்தைட்ட அடிக்கடி உங்களை எல்லாம் விசாரிச்சுட்டு தான் இருப்பேன்.

ஊர் செட்டாகிடுச்சா?மாமியார் கூட ஒத்து போகுதா? வாயை பிடுங்கினாள்.

ம்ம்ம்ம்ம்ம் எல்லாம் ஓகே தான் அக்கா.

மாமியார் ரொம்ப வேலை வாங்குதா?

அப்படிலாம் இல்லைக்கா…. அவள் வார்த்தைகளை விடவில்லை.

உன் புருஷன் என்ன சொல்லுறாரு?

என்ன சொல்லுவாரு?

உன் புருஷரு முடியனூரின் முடிசூடா மன்னர் ஆச்சே…. அவ்வளவு கிண்டல் இழையோடியது அவள் குரலில்.

எப்படி பொழுது போகுது?

ம்ம்ம்ம்ம் ரிலாக்ஸா போகுது.

அப்புறம் ஹனிமூன் எங்கேயும் போகலையா?

மறுமுனை நிசப்தமாய் இருந்தது.

சுபி கேட்குதா? லைனில் இருக்கியா?

ம்ம்ம்ம்ம் அக்கா… என்ன கேட்டீங்க? ஹனிமூனா? அவருக்கு லீவ் இல்லையே..

அப்படினு சொல்லி சமாளிச்சாரா?

இல்லை… அவருக்கு டென் டேஸ் லீவ் கிடைச்சதே பெரிய விஷயம்னு சொன்னாரு.

போலீஸ் டிபார்ட்மென்ட்டில் லீவ் கிடைக்காதுனு யாரு சொன்னா? ரிக்வஸ்ட் பண்ணி கேட்டு வாங்கணும்!

செலவாகிட போதுனு கூட்டி கழிச்சு கணக்கு பார்த்திருப்பாரு உன் புருஷரு.

அப்படிலாம் இல்லை.லீவ் கிடைக்கும் போது கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு.

எப்போ? ரெண்டு குழந்தை பிறந்த பிறகா? அந்தந்த வயசுல அனுபவிச்சு பார்த்துடனும் சுபி.

நாங்க ஹனிமூனுக்கு கோவா போனோம் தெரியுமா? லைஃப்ல மறக்க முடியாத மொமன்ட் அது. செம்ம மெமரீஸ்.

சரவணன் அஞ்சலி ஆலப்புழா போய் வந்தாங்க.

எழில் தீபா ஊட்டி போயிட்டு வந்தாங்க.

இந்த காலத்தில் எங்கேஜ்மென்ட் முடிந்த கையோட ஹனிமூனுக்கு பிளைட் டிக்கெட் போட்டுடறாங்க.  சுவிஸ், பாரீஸ், தாய்லாந்துன்னு போயிட்டு வராங்க.

காசு பணம் தான் வாழ்க்கைன்னு பட்டிக்காட்டு தனமா யோசிக்க கூடாது வாழ்க்கையை அனுபவிச்சு வாழணும்!

உன் புருஷனுக்கு ஒத்த காசு செலவு பண்ண மனம் வராது. அவரு ஒரு வினோத பிறவி. இந்த காலத்திலும் இப்படி ஒரு கேரக்டர்!

இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு? நமக்கு ஏன் இந்த கருத்து கந்தசாமி வேலை.

அவங்கவங்க குடும்பம் அவங்கவங்க விருப்பம்.

டைம் கிடைச்சா பெங்களூரு வாங்க! கிளைமேட் இங்கே ரொம்ப நல்லா இருக்கு. சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்கு.

சிறப்பாய் பேசி முடித்திருந்தாள் சங்கீதா.

“—————–“

சுபி ஸ்கூல் டூர் போயிருக்கிறாள். திருச்சி மலைக்கோட்டை, கல்லணை, தஞ்சை பெரிய கோயில், சரபோஜி அரண்மனை, தரங்கம்பாடி கோட்டை என்று போயிருக்கிறாள்.

மலை வாழிடங்களுக்கு சென்று வந்ததில்லை.

கோடை காலங்களில் இன்ப சுற்றுலா போகும் அளவிற்கு பூவராகன் வருவாய் உள்ள மனிதர் இல்லை. அந்த குடும்பத்தில் அது பழக்கமும் இல்லை.

தேவிகா கணவன் சௌந்தர் ராஜனுடன் தேனிலவு சென்றுவந்தாள். அரசு கல்லூரி விரிவுரையாளர் என்பதால் வருமானம் உள்ள மனிதர். குதூகலமாய் கிளம்பி விட்டார். ஊட்டியில் நான்கு நாட்கள் தங்கி வந்தனர். வரும்போது ஊட்டி வர்க்கி, சாக்லேட், நீலகிரி தைலம், டீ தூள் எல்லாம் வாங்கி வந்தாள்.

கிருஷ்ணாவும் மனைவி சுகன்யாவுடன் கூர்க் சென்று வந்தான்.

திருமணம் ஆனால் எங்காவது ஜாலியாக சென்று வருவார்கள் போல…. நாமும் திருமணம் ஆனால் இது போல் என்ஜாய் பண்ணலாம் என்று எண்ணியிருந்தாள் சுபி.

திருமணத்திற்கு பிறகு ஆவலுடன் மன்னருடன் பேசும்போது இப்போ லீவ் இல்லை. கண்டிப்பா போகலாம் என்று சொல்லியிருந்தான்.

பிடிவாதமாக போய் தான் ஆகவேண்டும் என்று கேட்கவா முடியும்? அவனுக்கும் அந்த யோசனை ஆசை எல்லாம் இருக்க வேண்டுமே…

யோசித்து பார்த்தால் சுபியோடு பிறந்தவர்களும் சரி, மன்னரோடு பிறந்தவர்களும் சரி தேனிலவு கொண்டாடி ரசித்து வாழ்ந்தவர்கள்.

———–தொடரும்———–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!