Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 29

அத்தியாயம் 29

“எப்பவுமே நீங்க தமயந்தி வீட்டுக்கு தான் வர்றீங்க, அங்க தான் சாப்பிடறீங்க. இந்த தடவை எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும்” என்று வேதாச்சலம் தாத்தா இவர்கள் வீட்டிற்கு முருகானந்தம் தாத்தாவையும் அழைத்திருந்தார்.



Advertisement

தொழில் பொறுப்புகள் எல்லாம் பெரும்பாலும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொள்வதால், அவருக்கு பெரிதாக வேலைகளும் இருக்கவில்லை அதனால் அவரும் உடனே கிளம்பி சென்னை வந்து விட்டார்.

அவினாஷ், அருந்ததி, தாத்தா மூவருமே மிகவும் பரபரப்பாக இருந்தார்கள். என்ன பொருட்கள் வேண்டும் என்று சேர்ந்து லிஸ்ட் போட்டு, எல்லாம் வாங்கி வந்தனர்.

Advertisement

Advertisement

என்ன என்ன மெனு சமைக்கலாம் என்று திட்டமிட்டனர். ஏதோ அவர்கள் வீட்டில் விஷேசம் என்பதை போல குதூகலமாக இருந்தனர். விருந்தோம்பல் என்பது எத்தனை மகிழ்ச்சியை தரும் என்பதை முழுதாக உணர்ந்தனர்.

அவினாஷ் மாவு அரைப்பது, தேங்காய் துருவி வைப்பது, இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து வைப்பது என்று எல்லாம் இரவே செய்து பிரிஜ்ஜில் வைத்து விடுவான்.

Advertisement

காலை உணவும், மதிய சமையலிற்கான ஏற்பாடும் ஓரளவுக்கு செய்துவிட்டு ஆபிஸ் கிளம்பிவிடுவான்.

மிச்சம் சமையலை மூன்று தாத்தாக்களும் சேர்ந்து முடித்தனர்.

மாலை அருந்ததி, கருணா, அவினாஷ் மூவரும் சமைத்தனர். கருணாவிற்கு வேலை இருந்தால், தர்மராஜ் சங்கர் இருவரும் உதவிக்கு வருவார்கள்.

அன்று மாலை அப்படித்தான் அவினாஷ், கருணா, அருந்ததி மூவரும் அடுப்படியில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

“நேத்து ஸ்பீச் எப்படி போச்சு கருணா? என்னால வர முடியலை?” என்றான் அவினாஷ்.

“நல்லா போச்சு அவினாஷ், நான் பேசிக்கிட்டே தானே இருக்கேன். இது மிஸ் ஆனா என்ன அடுத்த தடவை வாங்க”

“இன்னிக்கு ராஜிம்மா ஹஸ்பெண்ட் அங்கே டெல்லில அண்ணாஸ் வீட்டுக்கு வந்தாங்களாம்” என்று அருந்ததி கதை கூறினாள்.

“மேஜர் சார் வந்திருந்தாங்களா?” என்றாள் கருணா ஆர்வமாக.

“அவங்க தான் ராஜிம்மா ஹஸ்பெண்ட்னு அண்ணாஸ்கு அப்ப தான் தெரிஞ்சதாம். அவர் அண்ணாஸ் ரெண்டுபேரையும் ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்கன்னு அத்தைங்க கிட்ட சொன்னாராம்”

கருணா சிரித்துக்கொண்டாள்.

“என்ன பாப்பா எப்ப பார்த்தாலும் போன் தானா, இன்னிக்காச்சும் படிச்சியா இல்லையா?”

“ஆரம்பிக்காதீங்க அண்ணா..”

பேசிக்கொண்டே வெங்காயத்தை குண்டு குண்டாக நறுக்கினாள் கருணா.

“கருணா, அதை இன்னும் நைசா நறுக்கணும்”

“அப்ப தான் அடை ஊத்தும்பொழுது தேயிக்கவும் வரும், சாப்பிடவும் நல்லா இருக்கும்”

சரி, என்று கருணாவும் இன்னும் கொஞ்சம் சிறியதாக நறுக்கினாள்.

“இன்னும் சின்னதா நறுக்கணும் கருணா” என்றான் அவினாஷ்.

அதை கேட்டு கிளுக் என்று சிரித்தாள் அருந்ததி.

“அவங்களுக்கு பேச்சு வர அளவுக்கு சமைக்கிறது வரலை அண்ணா, விடுங்க” என்றாள் அருந்ததி.

அவினாஷ் மறுத்து பேச வரவும், கருணா வேண்டாம் என்று கண் காட்டினாள்.

“எப்பவுமே நான் செய்றதை மட்டும் நீங்க ரெண்டு பேரும் இப்படி செய்யணும் அப்படி செய்யணும்னு சொல்லிட்டே இருக்கீங்களே. இப்ப பாருங்க அக்காவுக்கு கூடத் தான் சமையல் சுமாரா வருது. முந்தாநேத்து அக்கா பண்ண கிச்சடியை சாப்பிட்டு தான் மாமா தாத்தா எல்லாம் அலறி ஓடுனாங்க… எல்லாருக்கும் எல்லாம் வராதுன்னு நீங்க இரண்டு பேரும் புரிஞ்சுக்கோங்க”, என்றாள் அருந்ததி தான் பேசியதற்கு விளக்கமாக.

“நீ சொல்றது ரொம்ப சரி அருந்ததி. இப்பகூட நான் சரியா செய்யாததை அவினாஷ் சுட்டிக் காட்டி, அதை சரி செய்ய தானே சொன்னாங்க? “

“சொன்னாங்க தான்..”

“நான் அதை கேட்டு அதை திருத்தக்க முயற்சி செய்றேன் தானே?”

‘இந்த அண்ணாஸ் சொல்ற மாதிரி வாயை கொடுத்து நானே வந்து மாட்டிகிட்டேன் போலவே’ என்று தன்னையே நொந்துகொண்டாள்.

“சரி சரி விடுங்க அக்கா, உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”

“இந்தா அண்ணா, கொத்தமல்லி கறிவேப்பிலை எல்லாம் சுத்தம் பண்ணிட்டேன்” என்று அவள் கையில் உள்ளதை கொடுத்தாள்.

“அதை அலசி நைசா நறுக்கி கொடு” என்றுவிட்டு, கல்லை எடுத்து அடுப்பில் வைத்தான்.

“நான் ஒன்னு மட்டும் சொல்லவா அருந்ததி” என்றாள் கருணா அருந்ததியிடம்.

“அட்வைஸ் மட்டும் பண்ணாதீங்க அக்கா, நான் எப்படியும் படிச்சு முடிச்சதும், அண்ணாஸ் ஆரம்பிக்க போற பிசியோ சென்ட்ரல்ல ஜாயின் பண்ணிப்பேன், அதனால கிளாஸ் டாப்பரா வரணும்னு இல்லை”

அவினாஷ் கவலையாக கருணாவை பார்க்கவும், கருணா பார்த்துக்கலாம் என்று கண்களாலே பதில் கூறினாள்.

பின், அவினாஷ் சொல்ல சொல்ல கருணா அடைகளை அழகாக சுட்டு எடுத்து வைத்தாள்.

மிதமான தீயில், பொன்னிறமாக வேக வைத்த அடை பசியை தூண்டியது.

நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க, அப்புறம் மத்தவங்களுக்கு கொடுப்போமென்று அவினாஷ் கூறவும், அருந்ததி முதலில் ஒரு அடையை தட்டில் எடுத்து கொண்டு ஹாலிற்கு சென்று அமர்ந்துகொண்டாள்.

“நீயும் சாப்பிடு கருணா”

“இல்ல நான் செய்றேன் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்”

“உன் பசி கண்ணுல தெரியுது, அவ சின்ன பொண்ணு, அவ சொல்றதை சீரியஸா எடுத்துக்காத, சாப்பிடு”

பின் அவனே, கருணாவிற்கு தட்டில் ஒரு அடை வைத்து அவளுக்கு பிடிக்கும் என்று ஒரு துண்டு வெல்லத்தையும் அதனுடன் வைத்து கொடுத்தான்.

நான் இங்கேயே சாப்பிடுறேன் என்று அடுப்பு மேடை மீது அமர்ந்து கொண்டாள்.

அவினாஷ் இருவருக்கும் சுட சுட பரிமாறினான்.

இவர்கள் உண்டு முடிக்கவும், கோவிலுக்கு சென்ற மூன்று தாத்தாக்களும் வந்துவிட்டார்கள். பின் அவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் சாப்பிட்டுக்கொகொண்டிருக்கும் பொழுதே சங்கரும் தர்மராஜும் வந்துவிடவே, இன்னொரு தோசை கல்லை பக்கத்துக்கு அடுப்பில் வைத்து இரண்டு கல்லிலும் சுட்டான். அவன் சுட சுட கருணா அனைவருக்கும் பரிமாறினாள்.

பின் அவினாஷ் சாப்பிடும்பொழுது கருணாவே சுட்டுக்கொடுத்தாள்.

அருந்ததி தவறு செய்த குழந்தை போல திருதிரு என்று முழித்துக்கொண்டு இங்கும் அங்கும் நடந்துகொண்டிருந்தாள். உணவு முடிந்து சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் கருணா அருந்தியிடம், “நீ பேசுனதை நான் தப்பா எடுத்துக்கலை, போய் தூங்கு” என்றாள் ஆதுரமாக.

அப்பொழுதும் அவள் முகம் தெளிவடையாமல் இருக்கவும், “சரி வா இன்னிக்கு என் கூட தூங்கு” என்று கையோடு அவளையும் அழைத்து சென்றாள்.

“நீ படுத்துக்கோ அருந்ததி, எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேலை இருக்கு. நாளைக்கு ஒரு ஸ்பீச் இருக்கு. அதுக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும்” என்று கூறி மடிக்கணினியுடன் அமர்ந்துகொண்டாள் கருணா.

அருந்ததி அமைதியாக அவள் அருகில் அமர்ந்துகொண்டாள்.

நேரம் செல்ல செல்ல, கருணா குறிப்புகளை எழுத தொடங்கினாள்.

அவள் எழுத எழுத அருந்ததியும் அதை படித்து கொண்டே இருந்தாள்.

பத்து நிமிடங்கள் பேசுவதற்கு எவ்வளவு படிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

சற்று நேரம் சென்று, மடிக்கணியை ஓரமாக வைத்துவிட்டு எழுந்து சென்று சில புத்தங்ககளை கொண்டு வந்தாள். பிறகு அதனுள்ளே முழ்கி விட்டாள்.

அருந்ததி இது வேலைக்கு ஆகாது என்று சென்று படுத்துவிட்டாள்.

காலை ஆறு மணிக்கு முழிப்பு தட்டவும் அருந்ததி மெல்ல கண் திறந்து பார்த்தாள். அப்பொழுதும் கருணா ஒரு புத்தகத்தோடு அமர்ந்திருந்தாள்.

“அக்கா நீங்க தூங்கவேயில்லையா?”

“இல்லடா, இன்னிக்கு பேச போறது ஒரு வித்யாசமான தலைப்பு, புதுவிதமான ஆடியன்ஸ். அதான் நேரம் எடுக்குது, அல்மோஸ்ட் முடிச்சிட்டேன்“

“ஆங்” என்று விழித்தாள் அருந்ததி.

“எங்கே பேச போறீங்க? எதை பத்தி பேசப்போறீங்க?”

“ அது ஒரு மன வளம் குன்றிய பெண்கள் காப்பகம், அங்கே கூப்பிட்டிருக்காங்க”

“அவங்களுக்கு நீங்க பேசுறது புரியுமா? அதுக்கு எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்?”

கருணா பதில் கூறாமல் அமைதியாக, எல்லாம் முடித்துவிட்டு, குறிப்புகளை வரிசைப்படுத்தி எடுத்துவைத்துவிட்டு அருந்ததியை நிமிர்ந்து பார்த்தாள்.

“அவங்களுக்கு என்ன புரியும்னு தெரிஞ்சுக்க தான் முதல் குறிப்பே. அங்க எத்தனை பேர் இருக்காங்க, அவங்களுக்கு என்ன குறைகள், எவ்வளவு புரியும் எல்லாம் அந்த காப்பக இன்ச்சார்ஜ் குறித்து கொடுத்திருக்காங்க. அதுவுமில்லாமல், அங்கே எத்தனை பேர் வேலை செய்றாங்க? எவ்வளவு குழந்தைகள்? இப்படி அந்த டீடெயில்ஸ் எல்லாம் அனலைஸ் பண்ணனும், அப்புறம் அவங்களுக்கு எதை பத்தி பேசுனா கேக்க பிடிக்கும்னு பார்க்கணும், அப்புறம் அதுக்கு தகுந்த மாதிரி தயார் செய்யணும்”

“ஓ”

“நீ போய் பல் விளக்கி முகம் கழுவிட்டு வா.. நான் டீ போடறேன்…

டீ நல்லாவே போடுவேன்…” என்றாள் சிரித்து கொண்டே.

அருந்ததிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“சாரி அக்கா” என்றாள் வருந்தி.

“உன் சாரி எல்லாம் வேண்டாம், நீ ரெப்பிரேஷ் பண்ணிவிட்டு வா” என்று அடுப்படிக்குள் நுழைந்தாள்.

பின் அனைவருக்கும் சேர்த்தே தேநீர் தயாரித்தாள்.

தர்மராஜ் முருகானந்தம் தாத்தா இருவருக்கும் ஒரு பிளாஸ்க்கிலும், அவினாஷ் வேதாச்சலம் தாத்தா இருவருக்கும் ஒரு பிளாஸ்க்கிலும் ஊற்றி தனியே வைத்து, இவள் அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தாள்.

சங்கர் அவரே இரு வீட்டிற்கும் பிளாஸ்கை கொடுத்துவிடுவதாக கூறவும், இவளுக்கும் அருந்ததிக்கு எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்.

“நேத்து நீ பேசுனது உன் மனசுல ரொம்ப நாளா இருந்த ஒரு விஷயம் தான். எல்லாரும் நம்மளையே எதுக்கு அட்வைஸ் பண்றாங்கனு ஒரு எரிச்சல்”

“இல்லக்கா…” என்றாள் அருந்ததி.

“சரி, நீ சொல்ற மாதிரியே வச்சுக்கலாம். படிச்சதும் உங்க அண்ணாஸ் ஆரம்பிக்கிற இடத்துல உன்னை சேர்த்துப்பாங்க, அதுல உனக்கு என்ன கிடைக்கும்”

“என்ன கிடைக்குனா? வேலை இருக்கும் இல்லையா? அண்ணாஸ்கூட வேலை பார்த்தா ஜாலியாவும் இருக்கும்”

“அவங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே, அவங்க ஒரு வேலை ஆர்மபிக்கலைனா?”

“அப்ப அவங்க வேலை செய்யுற இடத்தில என்னையும் சேர்த்து விடுவாங்க”

“அது என்ன அவங்க அப்பாவோட ஹாஸ்பிட்டல்லா? “

“வேலை கிடைக்காட்டி தான் என்ன இப்போ? நான் அத்தைங்க மாதிரி ஹோம் மேக்கரா இருந்துட்டு போறேன். எனக்கு சாதனை பெண் ஆக வேண்டாம், சந்தோஷமா வாழ்ற சாதாரண பெண்ணா இருந்தா போதும் “

“ஹோம் மேக்கரா இருக்கிறது அவ்வளவு ஈஸின்னு நினைக்கிறீயா?”

“நான் என்ன சொன்னாலும் நீங்க அத மறுக்கிற மாதிரியே ஏன் பேசுறீங்க? அதான் எனக்கு கடுப்பா வருது. அண்ணாவும் இப்படி தான் சொல்றான்”

“இப்ப நான் உனக்கு ஒரு தோழியா சொல்றேன், பொறுமையா கேளு”

“வேலைக்கு போறதும் வீட்டிலே இருக்கிறதும் ஒவ்வொரு பெண்ணோட விருப்பம். விருப்பம் மட்டும் இல்லாமல் சில சமய சந்தர்ப்பத்தை சார்ந்த ஒரு விஷயம் அது. அதுல எந்த தப்பும் இல்லை. ஆனா அதை அவங்க விருப்பத்தோடு தேர்வு செய்யணும். அந்த தேர்வு செய்றதுக்கு அவங்ககிட்ட ஆப்ஷன் இருக்கணும் இல்லையா?”

அருந்ததி தலையை உருட்டினாள்.

“என்ன புரியது?”

“நான் வேலைக்கு போகணுமா? படிக்கணுமா? அப்படின்றது என்னோட விருப்பம். அதை நான் முடிவு செய்யலாம்னு புரியுது”

“சரியா சொன்ன, உனக்கானதை தேர்ந்தேடுக்கிற உரிமை உன்னோடது. அப்படி தானே”

“ஆமாம்”

“எப்படி தேர்ந்தெடுக்கலாம்னு நினைக்கிற?”

“எப்படின்னா? நான் சூப்பரா படிக்காட்டியும் சுமாரா படிப்பேன். நான் ஒன்னும் மக்கு இல்லை”

“நானும் உன்னை மக்குன்னு சொல்லவே இல்லை. படிப்பே வரலன்னாலும் யாரும் பொழைக்க முடியாதுன்னு இல்லை. நான் சொல்றதை சரியான கோணத்துல புரிஞ்சுக்க முயற்சி செய் அருந்ததி.

யு ஹவ் டு கிரியேட் யுவர் ஆப்ஷன்ஸ் வென் யூ கேன். அதாவது, நீ என்ன செய்யலாம்னு நினைக்கிறியோ, அதை தேர்ந்தெடுத்து செயல் படுத்துற நிலைமையை நீ முன்கூட்டியே உருவாக்க வேண்டும். உனக்கு அதற்கான வாய்ப்பு இருக்கும் போது அதை பயன் படுத்திக்கணும். உனக்கு தேவையான சமயத்தில் வாய்ப்பு இருக்குமான்னு சொல்ல முடியாது.

என்னோட மிக பெரிய இன்ஸ்பிரேஷன் யாருன்னு கேட்ட எங்க அம்மான்னு தான் சொல்லுவேன். அதுக்கான உழைப்பும் அன்பும் அவங்க போட்டிருக்காங்க. ஹோம் மேக்கர்ன்னா நீ நினைக்கிற மாதிரி சாதாரண பெண்கள் இல்லை.

எந்த ஒரு காரியத்தை செய்யும் போது முழு ஈடுபாட்டோடு செய்யணும்“

“சரிக்கா”

“எனக்கு புரியுது, அட்வைஸ் பண்ணா உனக்கு பிடிக்கலைன்னு. இனி நான் பண்ணல, ஆனா நீயே யோசி.

ஆர்பரிக்கிற நீர்ல விளையாடறது உற்சாகமா இருக்கும். மகிழ்ச்சியா இருக்கும். ஆனா நீச்சல் தெரியாதப்பா அதை முழுசா அனுபவிக்க முடியாது. இதுவே உனக்கு நீச்சல் தெரிஞ்சு இருந்தா, பயமில்லாமல் முழுசா அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.

கண்டிப்பா நீ உங்க அண்ணாஸ் கூடவே வேலை பார்க்க முடியும். அது ஜாலியா இருக்கலாம். அதுவே உனக்குன்னு ஒரு தனி திறமை இருந்து, அருந்ததி நம்மகூட இருக்கிறது நமக்கு ஒரு பலம்னு அவங்க யோசிச்சா, அது உனக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுக்குமில்லையா? நம்மோட பங்களிப்பு முக்கியம் வாய்ந்ததுன்னு உனக்கு தோணனும் இல்லையா? அன்பு பாசம் எல்லாமே வாழ்ககைக்கும் உறவுகளுக்கும் முக்கியம் தான். ஆனா மரியாதை என்பது மட்டுமே நமக்கான மனநிறைவையும் தன்நம்பிக்கையும் கொடுக்க முடியும்.

முதல்ல நம்மளை குறை சொல்றாங்கன்னு நினைக்காத. நம்மளை நிறைவா மாத்த எடுத்து சொல்றாங்கன்னு யோசி.

யோசி.. நீ தேர்ந்தெடுத்த படிப்பு தானே? அதில் எப்படி மேலே சாதிக்கலாம்னு யோசி..

உனக்கான இலக்குகளை நீ தான் நிர்ணனயிக்கனும். அதை நோக்கி நீ தான் பயணிக்கணும்.

பயணங்களை சுவாரசியமாக்கிக்கலாம். ஆனால் பயணத்தை மேற்கொள்ளாமலே சுவாரசியம் மட்டுமே போதும்னு தேங்கி நின்னுட்டா இலக்கை அடையவே முடியாது.”

அருந்ததியின் முகம் யோசனையை காண்பிக்கவும், “சரி நான் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன். பதினொரு மணிக்கு அங்கே போகணும். நீயும் போய் காலேஜ் கிளம்பு” என்று அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு உள்ளே சென்று விட்டாள் கருணா.

அன்றைய பேச்சிற்கு தாத்தாக்களையும் உடன் அழைத்து சென்றாள்.

அத்தனை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது கருணாவின் பேச்சை கேட்பதற்கு.

வீட்டிற்கு வந்ததும் அவினாஷிடம் அத்தனை பெருமையாக அதை பற்றி கூறி இருந்தார் வேதாச்சலம் தாத்தா.

“உன்னோட ஸ்பீச் நாளுக்கு நாள் மேன்பட்டுட்டே போகுது கருணா. நேத்து உன்னோட ஸ்பீச் பத்தி தாத்தா சொல்லிகிட்டே இருந்தாங்க. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு” என்றான் அவினாஷ் கருணாவிடம்.

கருணா சிறிய புன்னகையோடு அவன் கூறுவதை கேட்டு கொண்டாள்.

“அருந்ததி இப்பதான் சரியான கண்ணோட்டத்துல யோசிக்க ஆரம்பிச்சுருக்கா, அதுவே எனக்கு நிம்மதியா இருக்கு”

அவினாஷ் கருணாவிற்கு நன்றி கூற முற்படுகையில், “நான் என்ன அன்னியமா?” என்றாள் கருணா கோவமாக.

“——————–”

“திரும்ப நீ ட்ரெயினிங் போய்ட்டா நான் உன்னை மிஸ் பண்ணுவேன்”

“என்னோட பாதை அப்படியானது தானே. ஒரே இடத்துல எப்பவுமே என்னால நின்னு செயல்பட முடியுமா தெரியாது”

“புரியுது கருணா, நீ தேர்ந்தெடுதிருக்கிற பாதை கடினமானது. அது பாய்ந்தோடுகிற நதி மாதிரி அழகானது”

“உன்னோட லட்சியமும் அதற்கான பாதையும் வேறு அவினாஷ். அது ஒரு இடத்துல வேரூன்றி நின்று படரவேண்டியது”

“————————-”

அதற்கு பிறகு கொஞ்ச நேரம் மௌனத்தில் சென்றது. வார்த்தைகள் கூற முடியாதா பல செய்திகளை மௌனமே கூறும்.

இவர்கள் இருவருக்கும் இடையில் அழகான நேசம் மொட்டுவிட துவங்கியதை இருவருமே உணர தொடங்கினார்கள்.

ஆனால் வெவ்வேறு பாதைகளை கொண்ட இவர்கள் இருவருக்குள்ளும் ,

அந்த நேசம் எப்படி மலர்ந்து மனம் வீசப் போகிறது என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!