Skip to content
Post Views: 3,193
அத்தியாயம் 6.1
இவர்கள் சிவகங்கை வந்து சேர இரவு ஏழு மணி போல ஆகிவிட்டது.
Advertisement
பாரி கூறியதை போல அரண்மனை போல தான் இருந்தது அவர்கள் வீடு. இரவில் வீட்டின் வெளிப்புறம் வண்ண வண்ண சீரியல் லைட்டுகளால் அலங்கரித்து இருந்தார்கள்.
“வாவ்..” என்று வாயை பிளந்து பார்த்தாள் கருணாம்பிகை.
Advertisement
Advertisement
பாரிக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ‘எப்படி?’ என்று புருவம் உயர்த்தி அவளிடம் கேட்டான்.
அவளும் கையாலே ‘சூப்பர்’ என்று காண்பித்தாள்.
Advertisement
இவர்களை பார்த்ததும் இவர்களை நோக்கி வந்தார் முருகானந்தம்.
“வாப்பா..” என்றார் தர்மராஜிடம் வாஞ்சையாக.
‘வாம்மா’ என்று தமயந்தியையும் அழைத்தார். “வாடா என் வேந்தா..” என்று பாரியை கட்டி பிடித்து கொண்டார்.
வாங்க பசங்களா.. என்று கருணா வில்வாவையும் அன்பாக அழைத்தார்.
“தாத்தா இது தான் என் பிரண்ட் வில்வாநாதன்.. இது அவன் தங்கை கருணாம்பிகை..” என்று முறையே அறிமுக படுத்தி வைத்தான்.
“வாங்க பசங்களா.. இது உங்க வீடு மாதிரி.. என்ன வேணும்னாலும் தாத்தாகிட்ட கேளுங்க” என்றார் இருவரிடமும்.
“உள்ள போங்க… பிரெஷ் ஆயிட்டு சீக்கிரம் வாங்க.. இன்னிக்கு பாட்டு கச்சேரி ஏற்பாடு பண்ணிருக்கு.. தோட்டத்துல தான் நிகழ்ச்சி, விருந்து எல்லாம்..”
“சரிப்பா..” என்றார் தர்மராஜ். உடனே இரு வேலையாட்கள் வந்து இவர்கள் லக்கெஜ் எல்லாம் எடுத்து கொண்டு முன்னே சென்றார்கள்.
“என்ன அத்தை இது சினிமால வர மாதிரி இருக்கு. ஆமா இந்த வீட்ல எத்தனை ரூம் இருக்கு?” என்று தமயந்தி காதில் கிசுகிசுத்தாள் கருணா.
“எப்ப வந்தாலும் ஒரு ரூம் கொடுப்பாங்க, நான் அதுக்குள்ள தான் பெரும்பாலும் இருப்பேன்.. அதனால எனக்கு தெரியாது” என்றார் அவரும் கிசுகிசுப்பாகவே.
இந்த முறை இரண்டு அறைகள் இவர்களுக்கு கொடுத்தார்கள். கருணாவும் தமயந்தியும் ஒரு அறையிலும் ஆண்கள் ஒரு அறையிலும் தங்கி கொண்டார்கள்.
பின் அனைவரும் கிளம்பி அரை மணி நேரத்தில் கீழே சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
தோட்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அனைவரும் தர்மராஜையும் தமயந்தியையும் வரவேற்று பின் அவர் அவர் வேலைகள் பார்க்க சென்று விட்டார்கள்.
தர்மராஜ் அவராக சென்று சிறு சிறு உதவிகளை செய்தார்.
பாரியை மட்டும் அவன் சித்தப்பா பெரியப்பா அத்தை என்று அனைவரும் அழைத்து பேசினார்கள்.
இசை கச்சேரி தொடங்கவும் ஆங்காங்கே அமைத்த வட்ட மேஜைகளில் அனைவரும் அமர்ந்தார்கள்.
பாரியும் வில்வாவும் பாரியின் சொந்தகார பிள்ளைகளுடன் அமர்ந்துவிட்டார்கள்.
தமயந்தி கருணாம்பிகையுடன் ஒரு பக்கம் மேஜையில் அமர்ந்துகொண்டார்.
தர்மராஜ் எல்லா ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா என்று உணவு இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அவர் ஒரு இடத்தில் நிற்கவே இல்லை, சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.
“அத்தை ஏன் நீங்க யார் கூடவும் பேச மாட்டேங்குறீங்க? உங்க கூடவும் யாரும் பேச மாட்டேங்குறாங்க? கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு… எப்பவும் எப்படி இங்க சமாளிப்பீங்க..”
“அங்க பாரு உங்க மாமாவை… எப்படி உற்சாகமா இருக்காரு.. வசதியா வாழ்ந்தவரு.. எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரு.. அவருக்கு இந்த வீடும் இங்க உள்ளவர்களும் ரொம்ப இஷ்டம்.. அவருக்காக தான்.. “
“என்னமோ சொல்றீங்க … போங்க அத்தை… “
“சரி, அந்த பொண்ணு போட்டிருக்க பாவாடை சட்டை பாரு பாப்பா … டிசைன் நல்லா இருக்கு இல்ல?”
“ஆமா அத்தை… நல்லா இருக்கு… இவங்க எல்லாரும் தீம் கலர் போட்டிருக்காங்க… நாம் மட்டும் தான் வேற கலர்..”
“அட ஆமா… நான் கவனிக்கவே இல்லை…”
“நீங்க மாமாவை மட்டும் தான் கவனிக்கிறீங்க”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே பஃபே முறையில் உணவு தொடங்கியது.
பாரியும் வில்வாவும் உள்ளே புகுந்து ஒரு வெட்டு வெட்டி கொண்டிருந்தார்கள்.
“சரியான சாப்பாட்டு ராமன் அத்தை இரண்டு பேரும். நம்மள கூப்பிடாம சாப்பிடுறாங்க பாருங்க” என்று பழிப்பு காட்டினாள்.
“சரி வா.. நாம சாப்பிடுவோம்”
“ஓகே அத்தை… மாமாவை கூப்பிடலாம்…..”
“அவர் எப்ப வாராரோ தெரியல.. வா நம்ம சாப்பிடுவோம்”
இவர்கள் இருவரும் தங்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
தமயந்திக்கு கருணாவுடன் இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் சலசலத்து கொண்டே இருந்தார்கள்.
தர்மராஜ் கையில் உணவுடன் எங்கே அமர்வது என்று சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அனைவரும் அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார்கள். முருகானந்தம் அவர் நண்பர்களுடன் அமர்ந்திருந்தார்.
இதை கவனித்த கருணா, “மாமா.. மாமா… அத்தையவா தேடிட்டு இருக்கீங்க? அத்தை இங்க இருக்காங்க..” என்றாள் சத்தமாக.
அனைவரும் தர்மராஜை தான் பார்த்தார்கள்.
அவர் அசடு வழிந்துகொண்டே இவர்களிடம் வந்து அமர்ந்து கொண்டார்.
அவரது முக பாவனை பார்த்து தமயந்திக்கு சிரிப்பாக இருந்தது. தமயந்தியும் மலர்ந்த முகத்துடன் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தார்.
“இவ ஸ்பீக்கரை எங்க போனாலும் ஆன் பண்ணிடுவா பாரி” என்றான் வில்வா பாரியிடம்.
அப்பாவும் அம்மாவும் அருகருகே அமர்ந்து மலர்ந்த முகத்துடன் இருப்பதை பார்த்த பின் ஏனோ இம்முறை கருணா மீது எரிச்சல் வரவில்லை.
“வாடா வில்வா நாமளும் அங்கே போகலாம்”, என்று அவனை கூட்டிக்கொண்டு இவர்களிடம் வந்து விட்டான் பாரி.
ஐவரும் பேசிக்கொண்டே உணவருந்தினார்கள்.
“கருணாம்பிகை, அங்கே ஐஸ் கிரீம் இருக்கு வா போய் சாப்பிடலாம்” என்று அழைத்தான் பாரி.
குழந்தைகள் மூவரும் ஐஸ் கிரீம் சாப்பிட சென்று விட்டார்கள்.
“தமா.. உனக்கு நான் போய் எடுத்துட்டு வரவா?” என்றார் தர்மராஜ் மனைவியிடம்.
“கொஞ்சம் என் பக்கத்துல இருங்க.. அதுவே போதும் தர்மா… “ அவர் குரல் நெகிழ்ந்திருந்தது.
“நம்மளை யாரும் வித்யாசமா பார்க்கலை… இல்ல தமா ?”
“அப்படி நினைச்சு தான் இத்தனை வருஷம் இங்க வரப்போ என் பக்கத்துல வராம இருந்தீங்களா?”
“அப்படி இல்ல…”
“நம்ம கல்யாணத்தை பிழைன்னு மத்தவங்க நினைச்சா பராவாயில்லை.. நம்மளே நினைக்க கூடாது… “
“நான் பிழைன்னு எல்லாம் நினைச்சது இல்லை.. ஒரு சங்கோஜம்.. அதான்…”
“நம்ம கணவன் மனைவி தானே.. அப்புறம் எதுக்கு சங்கோஜம்..”
“மத்தவங்க என்ன நினைப்பாங்களோ… காதலிச்சு கல்யாணம் பண்ணது நான் தான் முதல்ல எங்க குடும்பத்துல.. அதுவும் யாருக்கும் சொல்லாம..”
“ஆனா இப்பவும் என்ன தயக்கம்?”
“உண்மை தான்.. அது தேவை இல்லைன்னு இன்னிக்கு தான் புரியுது …”
“உங்க பாப்பா வந்து புரியவச்சான்னு சொல்லுங்க..”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கருணா இரண்டு ஐஸ் கிரீம்களை கொண்டு வந்து இவர்கள் முன்பு வைத்தாள்.
வெண்ணிலாவும் ஸ்ட்ராபெர்ரியும் இருந்தது.
“இல்ல கருணாம்பிகை, அம்மாவுக்கு வெண்ணிலா தான் பிடிக்கும், நீ அதை அப்பாகிட்ட வச்சிருக்க பாரு..” என்று கூறி அதை மாற்ற கையை கொண்டு வந்தான் பாரி.
“அய்யோ… எனக்கு அது தெரியும்.. இன்னிக்கு அவங்களுக்கு கல்யாண நாள். அதான் மாத்தி மாத்தி கொடுத்தேன்.. நீங்க ஊட்டி விடுங்க மாமா..” என்றாள்.
உண்மையில் தர்மராஜ் கல்யாண நாளை மறந்தே இருந்தார். கண்களாலே மன்னிப்பை கேட்டு, ஒரு ஸ்பூன் ஐஸ் கிரீம் எடுத்து மனைவிக்கு ஊட்டி விட்டார்.
ஹேய்.. என்று கூச்சலிட்டனர் பிள்ளைகள்.
“அத்தை இப்ப உங்க டர்ன்..”
தமயந்தியும் ஊட்டி விட்டார் இப்பொழுது.
சுற்றம் மறந்து இருந்தார்கள் இருவரும்.
“டேய்… நிஜமா சொல்றேன் உன் தங்கச்சி வேற லெவல் டா.. எல்லா பால்லும் எப்பவும் சிக்ஸர் தான் அடிப்பா…”
“நம்ம மண்டை உடையாம இருந்தா போதும் டா.. பார்த்து கவனமா இருக்கனும்”
“ஆனா ஒன்னு… இப்பவும் பாரு டா … செலவே இல்லாம அவ ஏற்பாடு செஞ்ச மாதிரி செலிப்ரேட் பண்ணிட்டா பாரேன்”
“அது எல்லாம் எங்க பாட்டி ட்ரைனிங் டா..”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் கருணா சென்று தாத்தாவிடம் இவர்களுக்கு திருமண நாள் என்று கூறினாள்.
உடனே அவர் இரண்டு மாலைகளுக்கு ஏற்பாடு செய்து, மேடையில் ஏறினார்.
“அனைவருக்கும் வணக்கம். நான் பல வருடம் முன்னாடி செய்ய வேண்டிய விஷயம்.. இன்று உங்க எல்லார் முன்னாடியும், என் மகனையும் மருமகளையும் அறிமுகப் படுத்துறேன். உன் மனைவியை கூட்டிட்டு வாப்பா தர்மா… இன்னிக்கு அவங்க பதினைந்தாவது திருமண நாள்.”
தர்மராஜ் தமயந்தியின் கை பிடித்து மேடை ஏறினார். பின் அவர் இருவரையும் மாலை மாற்றிக்கொள்ளுமாறு கூறினார்.
அனைவரும் கரகோஷத்துடன் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
அனைவர் முன்பாக நடந்த இந்த விஷயம், இருவருக்கும் மனதிற்கு எதோ ஒரு ஆசுவாசத்தை கொடுத்தது.
நிகிழ்வான மனதுடன் இரவு அறைக்கு திரும்பினார்கள் இருவரும்.
error: Content is protected !!