Skip to content
Post Views: 2,874
அத்தியாயம் 6.2
அதன் பிறகான திருமண நிகழ்ச்சிகளில் ஓரளவு தமயந்தியும் அனைவருடனும் கொஞ்சம் உற்சாகத்துடனே கலந்து கொண்டார்.
Advertisement
திருமணத்தன்று காலையில் எதிர் பாராத விதமாக அழகு நிலையத்தில் இருந்து வந்துகொண்டிருந்த பெண்ணின் கார் விபத்துக்கு உள்ளாகியது என்ற தகவல் வந்தது… விபத்து என்று கூறினால் அப சகுனமாக இருக்குமோ என்று நினைத்து பெண்கள் கலக்கமாக இருந்தார்கள்.
மணப்பெண் அழுகவே ஆரம்பித்துவிட்டாள்… நான் கல்யாணத்துக்கு நல்லா மேக்கப் போடணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா என்று.
Advertisement
Advertisement
இதை கவனித்த கருணாம்பிகை, “எதுக்கு கவலை படறீங்க.. எங்க அத்தை சூப்பரா மேக்கப் பண்ணுவாங்களே.. அவங்களே பண்ணி விடுவாங்க” என்றாள்.
தமயந்தி “யாரை சொல்ற பாப்பா” என்றார் கருணாவிடம் கிசுகிசுப்பாக.
Advertisement
“உங்களை தான் அத்தை”
“என்னது.. நானா?”
“சும்மா இருங்க அத்தை.. மேக்கப் தானே பார்த்துக்கலாம்.. நீங்கதானே எல்லார் கூடவும் சேர்ந்து ஜாலியா இருக்கனும்னு ஆசை பட்டீங்க?”
“என்னது … நானா?”
“அத்தைய்ய்ய் .. சும்மா ஒரே கேள்வியை கேட்டுட்டு இருக்காதீங்க.. இப்ப எப்படி மேக்கப் பண்றதுன்னு யோசிங்க..”
“என்னது…”
“நீங்களே தான்… பேசாம யோசிங்க..”
அனைவரும் இவர்களையே பார்க்கவும்,
“ சும்மா இப்ப தலையை ஆட்டுங்க..” என்றாள் கருணா மெதுவாக.
எதற்கு என்று தெரியாமல் தமயந்தியும் தலையை நாலா பக்கமும் உருட்டினார்.
“நல்ல வேலை தமயந்தி… நீ செய்றேன்னு ஒத்துக்கிட்ட. சீக்கிரம் ஆரம்பி மா. நான் போய் மத்த வேலை எல்லாம் சரியா நடக்குதான்னு ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்… எங்க யாருக்கும் மேக்கப் எல்லாம் நல்லா போட தெரியாது. கடவுள் தான் உன்னை அனுப்பி வச்சிருக்கனும்” என்று பெண்ணின் அம்மா நீளமாக பேசிவிட்டு சென்றார்.
“என்னது? நானா?” என்றார் தமயந்தி மீண்டும் கொஞ்சம் சத்தமாக. கருணா அவரின் கையை பிடித்து கிள்ளி விட்டாள்.
அதற்குள், பெண்ணின் அத்தைகள் வந்து நகைகளை எல்லாம் எடுத்து கொடுத்தார்கள்.
“மேக்கப் திங்ஸ்” என்றாள் கருணா.
“வீட்டுல நிறைய எல்லாம் இருக்காதே.. உங்க கிட்ட இல்லையா?” என்றார் பெண்ணின் சித்தி.
“நீங்க உங்ககிட்ட இருக்கிறத எல்லாம் கொடுங்க. அப்புறம் பத்தலைனா என்னன்னு யோசிப்போம்” என்றாள் கருணா.
தமயந்தி அழகாக பின்னல் போடுவார். எல்லா சனி ஞாயிறுகளிலும் கருணாம்பிகைக்கு வித விதமாக தலை வாரி விடுவார். அதை புகைப்படமும் எடுத்து வைத்து கொள்வார்கள்.
அத்தை உங்க போனை கொடுங்க என்று வாங்கி, அந்த புகைப்படங்களை மணப்பெண்ணிடம் காட்டினாள் கருணா .
“அக்கா.. இது எல்லாம் அத்தை எனக்கு போட்டு விட்டது தான். இதுல ஒன்னு செலக்ட் பண்ணுங்க” என்று காட்டினாள்.
அனைவரும் அதை பார்த்து அசந்து விட்டார்கள்.. அடடா.. எல்லாமே சூப்பரா இருக்கே.
பின் அதில் இருந்து மணப்பெண்ணுக்கு பிடித்ததை முதலில் போட ஆரம்பித்தார் தமயந்தி. ஏற்கனவே அவருக்கு தெரிந்தது என்பதால், மிகவும் அழகாகவே பின்னி முடித்தார்.
கருணா அனைவரையும் அது வரை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தாள்.
யாருக்கும் அவ்வளவாக மேக்கப் நன்றாக வருவது போல தோன்றவில்லை. சிலர் அதிகமாக பவுடர் போட்டிருந்தார்கள். சிலர் கண்ணில் மையை இழுப்பி வைத்திருந்தார்கள். ஒரு சிலர் லிப்ஸ்டிக் கொடூரமாக போட்டிருந்தார்கள்.
‘ஆஹா.. நானே இவங்களை விட நல்லா போடுவேன் போலயே….ஈஸியா சமாளிச்சடலாம்’ என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.
“பூ… “ என்றார் தமயந்தி மெதுவாக.
“என்ன எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இங்கேயே இருக்கீங்க.. போங்க போய் பூ, மேக்கப் ஐட்டம் எல்லார் கிட்ட இருக்கறதையும் கொன்டு வாங்க” என்றாள் கருணா.
சின்ன பெண் என்று யாரும் யோசிக்க வில்லை.. எல்லாரும் கருணா சொல்லுவதை கேட்டனர். இயற்கையிலே கருணாம்பிகையிடம் ஒரு ஆளுமை இருந்தது.
பின் அத்தையிடம் அவளே போனில் மேக்கப் போட்டோக்களை தேடி காண்பித்து, இப்படி போடுங்க அத்தை.. என்று எடுத்து காண்பித்தாள். அரை மணி நேரத்தில் மிகவும் அழகாக தயார் செய்து விட்டனர் மணப்பெண்ணை.
“கண்ணாடியில் பார்த்த மணப்பெண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சி.. அந்த பியூட்டி பார்லர் பெண் வந்திருந்தா கூட இவ்வளவு நல்லா பண்ணிருப்பாங்களா தெரியலை.. ரொம்ப தேங்க்ஸ் சித்தி..” என்று தமயந்தியை கட்டி பிடித்து கொண்டாள்.
தமயந்திக்கு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் வந்து நன்றி தெரிவிக்கவும் சங்கோஜமாக இருந்தது.
“எங்க அத்தைக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க? அவங்க பொண்ணுக்கு அவங்க செய்றாங்க.. இல்லையா அத்தை..”
தமயந்தி மீண்டு நாலா பக்கமும் தலையை உருட்டினார்.
“சரியா சொன்ன பெரிய மனுஷி… உங்க அத்தை பொம்மையை ஆட்டுவிக்குற சாவியே நீதானே.. உன்னை மாதிரி இவ்வளவு சமத்தா இதுவரை நான் யாரையும் பார்த்ததே இல்லை,” என்று அங்கே இருந்த ஒரு பாட்டி கருணாம்பிகையின் கண்ணத்தை வலிக்க கிள்ளி முத்தம் கொஞ்சினார்.
“வீட்டுக்கு போனதும் சுத்தி போடும்மா..” என்றார் தமயந்தியிடம்.
“சரிம்மா..” என்றார் தமயந்தி பூரிப்பாக.
“நான் உனக்கு சின்ன மாமியார்.. அத்தைன்னு கூப்பிடு” என்று விட்டு சென்றார் அந்த பாட்டி.
அதன் பிறகு வீட்டு பெண்ணாக தமயந்தியை அனைத்து வேலைகளுக்கும் சேர்த்து கொண்டார்கள்.
“என்ன ப்பா.. அம்மாவை காணும்“ என்றான் பாரி.
“தெரியலயே டா.. இப்ப தான் அவங்க ரூம்ல பார்த்துட்டு வரேன்.. பாப்பாவையும் காணும்”
“என் தங்கச்சியை காணுமா.. அப்ப அவதான் அத்தையை கூட்டிட்டு போயிருப்பா” என்றான் வில்வா.
“இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று கிளம்பி வெளியே வந்தார் தர்மராஜ்.
வீடு முழுவதும் தேடிக்கொண்டே வந்தார். திருமணம், வீட்டிற்கு பக்கத்தில் உள்ள முருகன் கோவிலில் தான். அதனால் அனைவரும் வீட்டில் இருந்தே கிளம்பி அங்கே செல்வதாக ஏற்பாடு. அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். முக்கால்வாசி பேர் கிளம்பி தயாராக இருந்தார்கள்.
“என்ன தர்மா… இன்னும் கிளம்பலையா ?“என்றார் அவரது அண்ணன் அவரை பார்த்து.
“இதோ அண்ணா… ஒரு அஞ்சு நிமிஷம்”
சரியாக அப்பொழுது கருணாம்பிகை இவரை பார்த்து விட்டாள்.
இவளும் தமயந்தியும் கிளம்பி தயராகி தான் வெளியே வந்திருந்தார்கள். தமயந்தி நாவல் நிற பட்டு புடவையும், கருணா அதே நிறத்தில் பாவாடை சட்டையும் அணிந்திருந்தார்கள்.
“என்ன மாமா? யாரை தேடிட்டு இருக்கீங்க? அத்தையை தானே” என்றாள் அவளது கணீர் குரலில்.
“டேய்.. போச்சு .. ஆரம்பிச்சிட்டா..” என்று புலம்பினான் வில்வா பாரியிடம்.
“விடு வில்வா.. எங்க அப்பாவுக்கும் வேணும்.. பாப்பா பாப்பான்னு அவளை தான் தலையில் தூக்கி வச்சிருக்காரு.. கொஞ்சம் அனுபவிக்கட்டும்”
“பாப்பா நீ கிளம்பிட்டியா.. ஆமா அத்தை எங்கே..”
“கல்யாண வீட்ல அவங்களுக்கு வேலை இருக்கும் இல்ல மாமா.. உங்களுக்கு என்ன வேண்டும்” என்றாள் மீண்டும் சத்தமாக.
அனைவரும் இவர்களை பார்க்கவும்,
“பாப்பா நீ போய் அத்தையை கொஞ்சம் வர சொல்லேன்” என்றார் கெஞ்சுதலாக.
தமயந்தி, அரிசியில் மஞ்சள் கலந்துகொண்டிருந்தார் அட்சதைக்கு.. பாதியில் விட்டு செல்ல முடியாது.
அனைவரும், “என்ன தமயந்தி.. எங்க அண்ணே உன்ன விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டாரு போலவே” என்று கேலி பேசினார்கள்.
குங்குமாய் சிவந்துவிட்டது அவரது முகம்.
“ஆஹா.. எப்படி அழகா சிவக்குறீங்க சித்தி” என்று கிண்டல் செய்தார்கள் இளம்பெண்கள்.
“ஆமா.. மாமாக்கு எல்லாத்துக்கும் அத்தை வேணும்..” என்றாள் கருணா பெருமையாக.
“என்ன வேணும்னு கேட்டுட்டு வா பாப்பா.. கிட்ட போய் கேளு” என்றார் தமயந்தி..
“என்ன அத்தை கேக்க போறாங்க.. அவங்க மூனு பேருக்கும் டிரஸ் எல்லாம் கேப்பாங்க.. அப்புறம் காபி, பால் எல்லாம் எங்கேன்னு கேப்பாங்க. நீங்க இருங்க.. நான் போய் எடுத்து கொடுத்துட்டு வரேன்” என்றாள் பெரிய மனுசியாக.
“உனக்கு தெரியுமா?” என்றார் அந்த பாட்டி.
“நானும் அத்தையும் சேர்ந்து தான் பேக் பண்னோம் பாட்டி. அதுவும் இல்லாமல், எங்க டிரஸ் கலர்லயே அவங்க மூனு பேருக்கும் ஒரே மாதிரி சட்டை வாங்கினோம். நீங்க தான் எங்க அத்தைக்கு உங்க கலர் கோட் சொல்லவே இல்லையே.. அது தெரியாம நாங்க ஒரு கலர் வாங்கிட்டோம்” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றாள்.
அனைவரும் கொஞ்சம் தர்ம சங்கடமாக பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் இளமஞ்சள் நிறத்தில் சேலை அணிந்திருந்தார்கள்.
“அம்மாடியோவ்…என்ன போடு போடுது இந்த வாண்டு.. யார் இந்த பொண்ணு..” என்றார் அந்த பாட்டி தமயந்தியிடம்.
“எங்க பக்கத்து வீடு அத்தை.. கருணாம்பிகை… அவ பிறந்ததல இருந்து நான் கூடவே இருக்கேன்ல.. என் மேல கொள்ள பாசம்… தங்கமான பிள்ளை.. பாரியும் இவ அண்ணனும் செட்.. நானும் இவளும் செட்.. “ என்றார் பெருமையாக.
கருணா சென்று ஆண்கள் மூவருக்கும் அவர் அவர்களது உடைகளை எடுத்து கொடுத்தது மட்டும் இல்லாமல், மூவரையும் விரட்டி பத்து நிமிடத்தில் தயராக செய்து அழைத்து வந்தாள்.
பின் அவளே சென்று மூவருக்கும் காபி, பால் என்று வாங்கி கொடுத்தாள்.
“டேய் இது எங்க தாத்தா வீடுன்னு உங்களை கூட்டிட்டு வந்தேன்.. இப்ப இவ நம்மளை கவனிக்கிறது பார்த்தா யார் யாரை கூட்டிட்டு வந்ததுனே குழப்பமா இருக்கு” என்றான் பாரி.
“நாங்க எப்ப ஊருக்கு போனாலும் இப்படி தான் பாரி… விடுடா.. நமக்கு வேலை ஆகுதுல.. “ என்றான் வில்வா.
மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது திருமணம்.
புறப்படும் போது இம்முறை தமயந்தியும் தர்மராஜும் அனைவரையும் சென்னை வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.
புதுமண தம்பதிகளையும் விருந்துக்கு அழைத்தனர்.
“அனைவரும் நிச்சயமாக வருவதாக கூறினார்கள். நாங்க எல்லாரும் சென்னை சுத்தி பார்த்ததே இல்ல.. கட்டாயம் வரோம்” என்றார்கள்.
பாரியும் தன் தாத்தாவை சென்னை வந்து தங்களுடன் சில மாதங்களாவது தங்க வேண்டும் என்ற அன்பு கட்டளை இட்டு, அதற்கு தாத்தா சம்மதம் சொல்லவும் மகிழ்ச்சியாக கிளம்பினான்.
நிறைந்த மனதுடன் முதன் முறையாக அங்கே இருந்து புறப்பட்டார்கள்.
பிள்ளைகள் மூவரும் பின் சீட்டில் தூங்கி விட்டார்கள். தமயந்தி முன் சீட்டில் அமர்ந்திருந்தார்.
“இந்த சின்ன பொண்ணு எவ்வளவு பெரிய விஷயத்தை சாதிச்சிட்டா இல்ல தமா.. “ என்றார் தர்மராஜ் தமயந்தியிடம் மெதுவாக.
“ஆமாங்க… என் மனநிலையை வார்த்தையால சொல்ல முடியாது … “ என்றார் தமயந்தி நெகிழ்வாக.
—————————–
error: Content is protected !!