Skip to content
Post Views: 968
வெய்யோனின் செம்மஞ்சள் கதிர்கள் நாலாப்புறத்திலும் விரவி இருளை மெல்ல விரட்டி அடித்திருக்க, பனிப் பொழிவும் சீதளக் காற்றுமாக அழகாக விடிந்தது இளங்காலைப் பொழுது.
இயற்கையின் இந்த அதிசயத்தை ரசிக்க மனமில்லாதவராய்,
“என்ன திலோ இப்படி லேட் பண்ணிக்கிட்டு இருக்க.. சீக்கிரம் எடுத்து வாயேன்!” என வாசலில் நின்று கூவிக் கொண்டிருந்தார், கேஷவமூர்த்தி. காலில் சுடுநீரை ஊற்றிக் கொண்டாற் போன்ற பரபரப்பு அவருக்கு.
Advertisement
“என்ன மாமா, இங்க ஒருத்தி இருக்கேன். வர வர நானெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குறேனே!” என குற்றம் சுமத்தியபடி பொறுமையாக மாடிப்படி இறங்கி வந்தாள், சாருலதா.
கேஷவனின் முகம் சட்டென்று கனிந்தது.
“சாரு கண்ணு..” என அவர் உள்ளார்ந்து அழைத்த அழைப்பில் சாருலதா உண்மையில் உருகித் தான் போனாள்.
Advertisement
கேஷவன் அவளது தாய் ரேவதிக்கு ஒன்றுவிட்ட சகோதரனாம். அவள் சிறு வயதினளாக இருக்கும் போதொன்றும் குடும்பத்தோடு குடும்பமாக அமர்ந்து உறவாடிப் பழக்கமில்லை.
Advertisement
இத்தனைக்கும் ஏன்.. பெற்றவளை இழந்து அவள் கண்ணீர் வடிய நின்றிருந்த போது கூட,
“என்கூட வாம்மா, உன் அத்தை உன்னைத் தங்கம் போல கண் கலங்காம பார்த்துக்குவா!” என அன்பொழுக கை பற்றி அழைத்தவரை சாருவுக்கு அடையாளம் தெரியாமல் போனது.
“யாரு நீங்க?” என்ற வினாவுடன் அந்நியமாக ஒதுங்கத் தான் முயன்றாள்.
Advertisement
பின்பு, “நான் உனக்கு மாமா முறை. பேரு கேஷவமூர்த்தி! உன்னோட அம்மா என்னைப் பத்தி சொன்னதில்லயா குட்டி?” என வேதனை ததும்பிய குரலில் அவர் கேட்கையில் தான் என்றோ.. எப்பொழுதோ குடும்ப மனஸ்தாபங்களால் விரிசலிட்டு உறவு முறிந்து போனதாய் ரேவதி கூறியிருந்த இந்த மூர்த்தியைப் பற்றிய நினைவு வந்தது சாருவுக்கு.
அப்போது மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்கு பதினைந்து வயதிருக்கும்; இளம் குமரிப் பெண்.
மூர்த்தியின் வார்த்தையை நம்பி – மறுக்காமல் உடனே அவருடன் புறப்பட்டு வரும் அளவுக்கு ரேவதி அவரைப் பற்றி நல்ல விதமாகத் தான் கூறி வைத்திருந்தாள். கூடவே நற்குணங்களின் இருப்பிடமான திலோவைப் பற்றியும் நிறையவே பெருமை பேசியதாய் நியாபகம்..
கூறியது போலவே கிட்டத்தட்ட பத்து, பதினைந்து வருடங்களாக திலோத்தமை அவளை தாங்கு தாங்கென தாங்கி வருகிறாள். ஒருநாள் கூட வேற்றுமை காட்டியதில்லையே!
கேஷவன் கை நீட்டி அழைத்ததும் திலோ நீட்டிய பையை வாங்கிக் கொண்டு அவரை நெருங்கினாள், சாரு.
எத்தனை வருடங்களானாலும் நிறம் மாறாத இந்த அன்பு அவளை புதிதாகப் பூரிக்கச் செய்தது. முதலில் தந்தை, அடுத்து தாய் என தனக்குச் சொந்தமாக இருந்தவர்களை இழந்த பிறகு பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டிப் பழக்கமில்லை.
கலங்கிய கண்களை அவசர அவசரமாக இமை தட்டி மறைத்துக் கொண்டவள், “ஏர்லி இன் த மோர்னிங்கே எங்க கெளம்பிட்டிங்க மாமா?” என்றாள்.
“கடைக்கு தான் கண்ணு..”
“இந்த நேரத்துலயா? எப்போவும் எட்டு, எட்டரை மணியாகுமே மாமா!” என்றாள், உன்னை நான் அறிவேன் எனும் மிதப்புடன்.
கேஷவன் தயங்க,
“என்கூட வாங்க மாமா, பேசணும்..” என அவரை அழைத்துக் கொண்டு நடைபாதையில் இறங்கியவள் மெல்லத் திரும்பி திலோவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
இருவருமாக வீட்டு கேட்டை நெருங்கியிருக்க,
“அப்பறம் மாமா, அவங்க இப்போ என்ன சொல்லுறாங்க?” – மெல்ல பேச்சைத் துவக்கினாள், சாருலதா.
இனி புதிதாக முலாம் பூசுவதில் பயனில்லை எனப் புரியவே, “நீ எங்க சும்மா டென்ஷன் ஆகுவியோனு தான் உன்கிட்ட சொல்லாம மறைச்சேன் குட்டி..” என தன்னிலை விளக்கமளிக்க முனைந்தார், கேஷவமூர்த்தி.
எனக்கு இந்த முன் விவரிப்பு எதுவும் அவசியமில்லை என்பதாய் தலையை இருபுறமாக சிலுப்பிக் கொண்டவள்,
“ஓகே, லெட்ஸ் கம் டு த பாயிண்ட் மாமா!!
நான் அந்த பேமிலியை மீட் பண்ண போகலாம்னு இருக்கேன்..” என்க,
“என்ன!” – மூர்த்தி அதிர்ந்தார்.
“அஸ் அ நர்ஸ் மாமா..” என குரலில் அழுத்தம் கொடுத்துக் கூறி அவள் தன் முடிவை உறுதியாக நிலை நிறுத்த முயல, உடனடி மறுப்பு பெரியவரிடம்.
தன்னால் முடியவில்லை என்றதும், வீட்டுப் பெண்ணை கொண்டு காரியத்தை சாதிக்க நினைக்கும் சந்தர்ப்பவாதி என்று அவர்கள் தன்னை அற்பமாக எண்ணி விட மாட்டார்களா என்ற தயக்கம் ஒருபுறம். கூடவே இன்னுமொரு வலிய காரணத்தையும் அவர் முன் வைத்தார்.
“அவரு கண்டிப்பா இதை ஏத்துக்க மாட்டாரு கண்ணு. சிட்டி ஹாஸ்பிடல் சீப் டாக்டரோட தனிக் கண்காணிப்பு, சிபாரிசு பேர்ல தான் அவரோட மனைவி, மகனை கவனிச்சுக்க நர்ஸஸ் நியமிச்சிக்கிட்டு இருக்காரு. இதை அவரே சொல்லி நான் கேட்டேன்..”
சாருலதா பல் வரிசை தெரியும்படி அழகாகச் சிரித்தாள்.
ஓரிரு தினங்களுக்கு முன்பு வாசுதேவ பிரதாப்பை வீடு வரை சென்று சந்தித்து விட்டு வந்த சம்பவம் கண் முன் விரிந்தது.
உதவி.. உதவியென வார்த்தைக்கு வார்த்தை சாருலதா உச்சரித்ததில் தீவிரத்தை பூசிக் கொண்ட வாசுவின் முகம் பாவை உடலை சில்லிடச் செய்வதாய்!!
கோப்பைத் திறந்து அதில் பார்வையை மேய விட்டவன், “டுவெண்ட்டி செவென், ரைட்?” என்றான் தலை நிமிராமலே.
“ஆமா டாக்டர்..”
மெல்ல நிமிர்ந்தவன், “நீ பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா தெரியிற! ஃபைல் பார்க்கலனா சூடம் அடிச்சி சத்தியம் பண்ணியிருந்தா கூட உனக்கு டுவேண்டி செவென்னு நான் நம்பியிருக்க மாட்டேன்..” என்றான், வியப்பைத் தாங்கிய குரலில். திடீரென ஒருமைக்குத் தாவிய அவனது பேச்சை இருவருமே உணர்ந்தாற்போல் தெரியவில்லை.
சாருவின் வதனத்தில் ஒரு வெட்க ஹாஸ்யம் மலர்ந்தது.
“ஸோ.. என்கிட்ட என்ன ஹெல்ப் எதிர்பார்க்கற சாருலதா?” – அவனே தான் கேட்டான்.
விபத்தைப் பற்றி மேலோட்டமாக விவரித்தவள், “நான் அவங்களுக்கு சேவை செய்ய விரும்புறேன், அது மூலமா மாமாவோட குற்றவுணர்ச்சியை அழிக்கணும். இன்னும் ஒருசில இன்டென்ஷன்ஸ் இருக்கு டாக்டர், நீங்க தான் என்னை அவங்களுக்கு சஜஸ்ட் பண்ணனும். ஃபைல்ல இருக்கற டாக்குமெண்ட்ஸ் பார்க்கிறப்போ நான் இதுக்கு தகுதியானவ தான்னு உங்களுக்கு தோனியிருந்தா இந்த உதவிய பண்ணுங்க..” என்றாள்.
கொஞ்சும் கிளியாய் அவள் கெஞ்சிய தோரணையில் நிச்சியமாக எவருக்குமே மறுக்க மனம் வராது. உண்மையில் வாசுதேவனும் மறுக்கவில்லை.
‘யோசித்துப் பார்க்கிறேன்’ எனக்கூறி பேச்சை கத்தரித்துக் கொண்டவன் நேற்றுத் தான் ஹாஸ்பிடல் ரிசெப்ஷனிஸ்ட் மூலமாக அவளுக்கு அழைப்பு விடுத்து இன்று ஹாஸ்பிடல் வரை வந்து செல்லக் கூறியிருக்கிறான்.
அனைத்தும் சுபமாக நடக்கும் என்ற நம்பிக்கையில் மூர்த்தியிடம் நடந்ததைக் கூறி மகிழ்ந்தாள் சாருலதா.
அவள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இப்படிச் செய்ததில் மூர்த்திக்கு சற்று அதிருப்தியே!
மறைக்காமல் அதை முக பாவனையில் வெளிப்படுத்தியபடி, “நிகில் கிட்ட இது பத்தி பேசிட்டியா சாரு?” என்று அவநம்பிக்கையுடன் வினவ, மங்கை முகம் அப்படியே தொங்கிப் போயிற்று!
“அவரு தான் ஊர்ல இல்லயே, அதான் வந்ததுக்கு அப்பறம் பொறுமையா சொல்லிக்கலாம்னு..”
“என்னம்மா நீ?” என கடிந்து கொண்டவராக அலைபேசியைக் கையில் எடுத்தார், கேஷவன். மகனின் முன்கோபம் பற்றித் தான் அவர் நன்கு அறிவாரே!
“நோ மாமா, டோன்ட்! நானே அவர் கிட்ட சொல்லுறேன்..” என்றவள் சிறு தயக்கத்தினூடே,
“ப்ளீஸ் மாமா, மறுக்காதீங்க. ஏன் எதுக்குனு தெரியல. எனக்கு அவங்களைப் பார்க்கணும்னு தோணுது. உங்களுக்காக நான் அங்க போனதா இருக்க வேணாம், ஒரு நர்ஸா என்னோட கடமைய செய்ய போறேன்..” என்றாள்.
மேற்கொண்டு கேஷவமூர்த்தி எதுவும் பேசவில்லை.
“எதுக்கும் நிகில் கிட்ட ஒரு வாட்டி டிஸ்கஸ் பண்ணிக்கம்மா!” என்பதோடு காரில் ஏறிக் கொள்ள,
‘ம்ம்கூம், அந்த ஆளுக்கு நான் இப்போ எங்க வேலை பார்க்கறேன்னு தெரியுமாங்குறதே டவுட்டா தான் இருக்கு..’ என உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள் சாருலதா.
“இன்னைக்கு நீ டியூட்டிக்கு போகலயா?” – கார் கதவை இழுத்து சாத்தும் நொடியில் மூர்த்தி கேட்டார்.
“நான் ராஜேஷ் கிட்ட ஆல்ரெடி இதைப் பத்தி பேசிட்டேன் மாமா. ஸோ நோ இஷ்யூஸ். டோன்ட் ஒர்ரி!”
கார் சாலையில் வழுக்கியது.
கேட்டை ஒட்டிப் போடப்பட்டிருந்த பெரிய கல்லில் ஆயாசமாக அமர்ந்து வானைப் பார்த்தாள்.
எங்கும் நீலம்.. என்றும் போல் ஒரு விடியல்.. கூட்டமாகத் திரிந்த பட்சிகளும், கீச்சிட்ட குருவிக்குஞ்சுகள் கவனத்தைக் கவர மறுக்கவே பெரிதாக மூச்சை ஆழ இழுத்து வெளியேற்றியபடி எழுந்து கொண்டாள்.
அடுத்த அரைமணி நேரத்துக்கெல்லாம் வழக்கம் போலான ஜீன்ஸ் பேண்ட்டில் தயாராகி அவள் மாடியிறங்கும் போது, திலோ பழத்தட்டோடு கூடத்தில் அமர்ந்திருந்தாள்.
“எப்படியும் பிரேக்ஃபாஸ்ட் எடுத்துக்க மாட்ட! வா, வந்து இந்த ஃப்ரூட்ஸயாவது கொஞ்சமா சாப்பிடும்மா..”
ஆப்பிள் துண்டை சுவைத்தபடி, “ஆமா, உங்க பையன் எப்போ வருவாரு ஆன்ட்டி?” என்று குறும்பும் நகையுமாகக் கேட்க,
“என்னைக் கேட்கற.. ஏன் உனக்கு தெரியாதாமா? உன்கிட்ட சொல்லலயா என்ன..” என்றாள் திலோ சிரிப்புடன்.
“சொல்லிட்டாலும்.. எப்போ வருவீங்கனு கேட்டா ஏன் உனக்கு அவ்ளோ அவசரமானு கேட்டுடப் போறாரு, அதான் நான் கேட்கவே இல்ல. உங்க கிட்ட எப்படியும் சொல்லி இருப்பாருல ஆன்ட்டி?”
“நெக்ஸ்ட் வீகெண்டுல கண்டிப்பா வீட்டுல இருப்பேன்னு சொன்னான் சாரும்மா..”
“அப்படியா சொன்னாரு?” என்று சிறு தலை அசைப்புடன் கேட்டவளின் மனம் அவசரமாகத் திட்டமிட்டு, வாசுதேவனிடம் என்ன பேச வேண்டும் என்பதை ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டது.
தொடரும்.
error: Content is protected !!