Skip to content
Post Views: 3,055
அத்தியாயம் 7.1
திருமண வீட்டில் சொன்னதை போல தர்மராஜின் வீட்டில் இருந்து ஒவ்வொருவரும் குடும்பமாக சென்னையில் இவர்கள் வீட்டிற்கு வந்து சென்றார்கள். மலர்ந்த முகமாக தமயந்தி வந்தவர்களை கவனித்து கொண்டார்.
Advertisement
தர்மராஜ் வேலைக்கு சென்றிருக்கும் பொழுதுகளில் அக்கம் பக்கம் உள்ள இடங்களுக்கு தமயந்தியே வந்திருந்தவர்களை அழைத்து சென்றார்.
அனைவருக்கும் தமயந்தியை இப்பொழுது மிகவும் பிடித்துவிட்டது. சின்ன பெண் போல அத்தனை சுறுசுறுப்பும் எப்பொழுதும் முகத்தில் வாடாத புன்னகையும் அவரிடம் இருந்தது.
Advertisement
Advertisement
பாரியின் தாத்தாவும் இப்பொழுது அடிக்கடி சென்னை வந்து கொஞ்ச நாட்கள் இவர்களுடன் தங்கிவிட்டு செல்கிறார்.
பாரிக்கு எப்பொழுதும் கருணாம்பிகையின் தாத்தா வீரராகு மேல் ஒரு வித ஏக்கம் இருக்கும். கருணா எப்பொழுதும் எங்க தாத்தா சொன்னாங்க என்று நிறைய விஷயங்களை கூறி கொண்டிருப்பாள்.
Advertisement
அதனாலோ என்னவோ பாரி அவன் தாத்தாவிடம் அதிகம் பேசுகிறான். தமயந்திக்கும் தர்மராஜிற்குமே ஆச்சர்யம், பாரி இவ்வவளவு பேசுவானா என்று.
பிள்ளையின் ஏக்கம் புரிந்து, வள்ளல் பாரி வேந்தன் கதையில் இருந்து அவர் அப்பா பாரி வேந்தன் வரை பல கதைகளை கூறினார் தாத்தாவும். இங்கே வந்து இருக்கும் நாட்களில் வீரராகுவிடமும் நல்ல நட்பு ஏற்பட்டிருந்தது அவருக்கு.
தமயந்தியும் ‘அப்பா அப்பா’ என்று அவரிடம் பிரியமாக பழகினாள். அவருக்கு பிடித்த உணவு வகைகளை பக்குவமாய் சமைத்து கொடுத்தார். தர்மராஜிற்கு இப்பொழுது தான் வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டிருப்பதாய் தோன்றியது.
————–
அன்று மாலை பள்ளியில் இருந்து வரும்பொழுதே கருணாம்பிகை, “தாத்தா.. தாத்தா… “ என்று கத்திக்கொண்டு தான் வந்தாள்.
பாரியும் வில்வாவும் அவளுக்கு பின்னால் வந்துகொண்டிருந்தார்கள்.
“என்னடா விஷயம்? எதுக்கு தாத்தாவை ஏலம் விடறா?” என்றான் பாரி வில்வாவிடம்.
“தெரியலை போடா…”
“ஏன்டா சலிச்சுக்குற? என்ன விஷயம்?”
“நாளைக்கு கெமிஸ்ட்ரி எக்ஸாம்.. எனக்கு அந்த பாடம் புரியவே மாட்டேங்குது பாரி. எனக்கு கெமிஸ்ட்ரியே வரலை டா …” என்றான் சோக குரலில் வில்வா.
“எனக்கு புரிஞ்சிடுச்சு டா வில்வா … நான் சொல்லி தரேன்.. வரலைன்னு சோகமா இருந்தா வந்துடுமா? எனக்கு புரியும்னு நீ நினைக்கனும்.. அப்பத்தான் வரும்… வாடா..” என்று நண்பனை சமாதான படுத்தினான்.
“நீ புத்திசாலி டா.. நானும் நீயும் ஒண்ணா தானே படிக்கிறோம் ஆனா நீ நல்ல மார்க் வாங்குற.. எனக்கு வரலை.. அதான் நிஜம்..”
“எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வில்வா.. இப்படி நெகட்டிவா பேசாதைன்னு.. ஒவ்வொருத்தருக்கும் ஒன்னொன்னு நல்லா வரும்.. அதை நாம தான் கண்டு பிடிக்கனும்.. “
“ போடா பாரி.. கருணா நல்லா படிக்கிறா.. நீயும் நல்லா படிக்கிற. நான் தான் மக்கு..”
“மக்குன்னு எல்லாம் சொல்லாதடா வில்வா… இன்னிக்கு உனக்கு என்னாச்சு? அவ சின்ன பொண்ணு.. அதனால எல்லாரும் அவளை கொண்டாடுறாங்க.. நீயே உன்னை கீழா நினைக்க கூடாது.. நான் சொல்லி கொடுக்கறேன்.. ஒரு மணி நேரத்திலே படிச்சிடலாம். அப்புறம் நாம இன்னிக்கு கிரிக்கெட் விளையாட போகலாம்… சரியா?”
இவர்கள் பேசிக்கொண்டே கேட் அருகே நின்றுவிட்டனர்.
வில்வா அமைதியாக நண்பன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான்.
அரும்பு மீசை முளைக்கும் பருவம் இருவருக்கும்…
“நீ சீக்கிரம் ட்ரெஸ் மாத்திட்டு வா.. நான் சொல்லி தரேன்..இந்த எக்ஸாம்ல பாரு நீ தான் கிளாஸ் ப்ர்ஸ்ட் வருவ”
“ப்ச்ச்..”
“டேய்… நம்மளை நாம முதல்ல நேசிக்கனும்டா.. புரியுதா? நான் உன்கூட இருக்கும் போது எதுக்கு நீ கவலை படுற?”
அன்று ஏனோ வில்வாவிற்கு மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. வீட்டில் எல்லோரும் எப்பொழுதும் ‘உன் தங்கச்சி எப்படி துரு துருன்னு இருக்கா பாரு? எவ்வளவு சமத்தா இருக்கா.. அவளை பார்த்து கத்துக்க..’ என்று கூறினார்கள்.
பள்ளியிலோ ‘உன் பிரண்ட் கூட தானே எப்பவுமே இருக்க? அப்புறம் ஏன் நீ மட்டும் கம்மி மார்க் வாங்குற? அவன பாரு எவ்வளவு ஷார்ப்… அவனை பார்த்து கத்துக்க’ என்றார்கள்.
இது எப்பவும் நடக்கும் விஷயம் தான். சின்ன வயதில் எல்லாம் இதை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை வில்வா. ஆனால் இப்பொழுது இந்த ரெண்டுங் கெட்டான் வயதில் அவன் மனது சிறிது சஞ்சலப்பட துவங்குகிறது.
நண்பனின் மாற்றத்தை பாரியும் கண்டுகொண்டிருந்தான், இனி நண்பனிடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டான்.
“ஏன்டா… வாட்ச் மேன் மாதிரி கேட்லேயே நிக்குறீங்க.. உள்ள வாங்க” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார் பாட்டி.
“எங்க பாட்டிக்கு ரொம்ப லொள்ளு டா..நம்மளை பார்த்தா வாட்ச்மென் மாதிரியா இருக்கு? “ என்று முனங்கிக்கொண்டே உள்ளே வந்தான் வில்வா.
“நானும் வரேன் வா” என்று பாரியும் உடன் வந்தான். வாடிய முகத்துடன் இருக்கும் நண்பனை விட்டு செல்ல அவனுக்கு மனமில்லை.
அதற்குள் கருணாம்பிகை உடை மாற்றி விட்டு கையில் பலகார தட்டுடன் அமர்ந்திருந்தாள்.
“அப்படி என்ன தான் எப்ப பாரு பேசுவீங்களோ இரண்டுபேரும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர்கள் மாதிரி..” என்றாள் நக்கலாக.
“நீங்க இரண்டு பேரும் போய் டிரஸ் மாத்திட்டு வாங்கப்பா.. “ஸ்னாக்ஸ் சாப்பிடலாம் என்றார் சுமதி.
பாரியும் வில்வாவும் உடைகளை பகிர்ந்துகொள்வார்கள். அதனால் பாரியும் வில்வா ரூமிற்குள் சென்றான்.
“கருணா.. அத்தைக்கு போன் போட்டு பாரி இங்கே இருக்கான்னு சொல்லிடுடா” என்று விட்டு சுமதி அடுப்படிக்குள் சென்றுவிட்டார்.
“பார்த்தீங்களா பாட்டி, இவங்க இரண்டுபேரும் நட்புக்காக படத்தை ஓட்டறதுக்கு எங்க அப்பா போன் பில் கட்டியே நொந்து போகனும் போல.. “என்றாள் கருணா பாட்டியிடம்.
“நல்லா சொன்னடா.. உங்க அம்மாக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கு.. அவனுங்களை ஒரு எட்டு போய் சொல்லிட்டு வர சொன்னா தான் என்ன?”
“இருங்க பாட்டி… நான் ஓடி போய் சொல்லிட்டு வரேன்.. எதுக்கு ஒரு போன் கால் வேஸ்ட் பண்ணனும்” என்று சிட்டாக ஓடி சென்றாள்.
“நல்ல பாட்டி நல்ல பேத்தி “ என்று முனங்கிக்கொண்டே வேலையை பார்த்தார் சுமதி.
சுமதி கொடுத்த தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பாரியும் வில்வாவும் படிப்பதற்காக அமர்ந்தார்கள். வில்வாவிற்கு புரியும் வரை பாரி அவனுக்கு சொல்லிக்கொடுத்தான்.
“இப்ப ஈஸியா இருக்கு” என்றான் வில்வா கொஞ்சம் மகிழ்ச்சியாக.
“அவ்வளவு தான், இதுக்கு போய் அப்பயில இருந்து சோகமாவே இருக்க. சரி வா கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வரலாம்” என்று வில்வாவை அழைத்து கொண்டு கிரௌண்டிற்கு சென்று விட்டான்.
“என்ன கருணா.. உங்க தாத்தா ஏதோ மும்மரமாக எழுதிட்டு இருக்காரு?”
“அதுவா பாட்டி.. நாளைக்கு எங்க ஸ்கூல்ல மகளிர் தின விழா. திடீர்ன்னு தான் ஏற்பாடு செஞ்சாங்க.. என்னை பேச சொல்லி சொன்னாங்க.. அதுக்கு தான் தாத்தா எழுதிட்டு இருக்காங்க”
பாரியின் தாத்தா முருகானந்தம் சரியாக அப்பொழுது வந்தார். “வாங்க தாத்தா.. அவங்க இரண்டு பேரும் விளையாட போய் இருக்காங்க” என்றாள் கருணாம்பிகை.
“அங்க வந்து சொல்லிட்டு தான் போனாங்க பாப்பா.. எனக்கு போர் அடிச்சுதா அதான் உங்க தாத்தாகூட பேசிகிட்டு இருக்கலாம் என்று வந்தேன்” என்றார்.
அவரும் தர்மராஜ் தமயந்தி கூப்பிடுவதை போல பாப்பா என்று தான் அழைக்கிறார்.
“ஓகே தாத்தா.. நாளைக்கு எங்க ஸ்கூல்ல நான் பேச போறேன். அதுக்கு தான் தாத்தா பாயிண்ட்ஸ் எடுத்துட்டு இருக்காங்க..”
“பலே பலே, உனக்கு பேச சொல்லியா தரணும். ஆமா,என்ன தலைப்பு?”
“நம் நாட்டு பெண் சிங்கங்கள்.. “ யாராவது ஒரு வீர பெண் இல்ல சாதனை பெண் பத்தி பேச சொல்லி இருக்காங்க தாத்தா.
“நீ யாரை பத்தி பேச போற”
“நான் வேலு நாச்சியார் பத்தி பேசலாம்னு இருக்கேன் தாத்தா”
“ஆஹா.. எங்க சிவகங்கை சீமையை மீட்டு தந்த நாச்சியாரை பத்தியா பேச போற.. அருமை.. அருமை..”
வேலு நாச்சியார் என்று சொன்னதுமே அவரை உற்சாகம் தொற்றி கொண்டது.
அவரும் வீரராகு தாத்தாவுடன் இணைந்து கொண்டார். இரண்டு தாத்தாக்களும் இணைந்து தீவிரமாக பேச்சுக்கான உரையை தயார் செய்ய தொடங்கினார்கள்.
இரவு வரை இருவரும் பேசுவதும் குறிப்பெடுப்பதுமாகவே இருந்தார்கள். அவர்கள் முடிக்கட்டும் என்று நீளிருக்கையில் காத்துக்கொண்டிருந்த கருணாம்பிகை அப்படியே தூங்கியே விட்டாள்.
ஒன்பது மணிக்கு வீரராகு, “கருணாம்பிகை.. கருணாம்பிகை.. “ என்று அழைத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தார்.
எதிரில் தீயாக அவரை முறைத்துக்கொண்டு நின்றிருந்தார் அவரது தர்மபத்தினி.
“என்ன தங்கச்சி, பாப்பா தூங்கிருச்சு போலவே?” என்றார் முருகானந்தம்.
“ஏண்ணே.. இந்த மனுஷனுக்கு தான் கூறில்லைன்னு பார்த்தா.. நீங்களுமா?”
என்றார்.
முருகானந்தம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்தார்.
“உனக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத சௌந்தரவள்ளி.. நாங்க தயார் செய்ததை பாரு.. இதை மட்டும் நாளைக்கு கருணாம்பிகை பேசினான்னு வை, அவளுக்கு தான் முதல் பரிசு” என்று கூறி கையில் இருந்த தாள்களை அவரிடம் கொடுத்தார்.
முருகானந்தமும் பெருமையாக அவரை பார்த்தார் இப்பொழுது.
“நாளைக்கு அவ பேசணும்.. பத்து பக்கம் இருக்கு.. பிள்ளை தூங்கிடுச்சு..” என்றார் கடுப்பான குரலில்.
“பாப்பாவை எழுப்பி சொல்லி கொடுத்திரலாம் தங்கச்சி..” என்றார் முருகானந்தம்.
“அதுக்கு வாய்ப்பே இல்லை தாத்தா.. கருணா தூங்கிட்டா அவளை எழுப்பவே முடியாது” என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தனர் வில்வாவும் பாரியும்.
“நீங்க யாரும் எதுவும் பண்ண வேண்டாம். காலையில ஆறு மணிக்கு அவ எழுந்து படிச்சிட்டு போய் பேசுவா… “ என்று முடித்துவிட்டார் தாத்தா. பேத்தியின் மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.
பாரி அவன் தாத்தாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
————-
error: Content is protected !!