Skip to content
Post Views: 10,958
நீங்காத கண்கள்!…
அத்தியாயம் 6
ஓரளவு கணவன், மனைவி இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள தொடங்கினர். இப்போதெல்லாம் கடையில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும் நிறை தாமதமாகத் தான் கிளம்புகிறாள். பிரபாகரனுக்கு பணம் வசூல் செய்யும் வேலைதான். அதனால் நேராக காலம் எல்லாம் கிடையாது, முன்ன பின்ன ஆகும். ஆனால் எப்படியும் அவன் ஒன்பது மணி பஸ்சுக்கு வந்து விடுவான். அதை கவனத்தில் கொண்டு நிறையும் தாமதமாக வரத் தொடங்கினாள். அடிக்கடி என்று இல்லாமல் வாரத்தில் நான்கு நாட்கள் அவனோடு சேர்ந்து வருவது போல் பார்த்துக் கொண்டாள். அவன் கவனிக்க மாட்டான் என்று இருக்க, கள்ளன் கண்டு கொண்டான்.
“நிறை, நீ எனக்காக லேட் பண்ணி எல்லாம் வர வேணாம். உனக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சா நீ வீட்டுக்கு போ… என்னோட வேலை நேரத்தை சொல்ல முடியாது. நைட்ல நீ தனியா நிப்ப. எப்பவும் கிளம்பற டயத்துக்கு நீ வீட்டுக்கு போ…” என்றதும் தடுமாறிப் போனாள் திருநிறை செல்வி.
Advertisement
அவன், தன்னை கண்டு கொண்டானோ என்று படபடப்பாக இருந்தது. கல்யாணமான கொஞ்ச நாளிலே தான் அவன் பின்னால் அலைவது போல் நினைப்பானோ!… தன் அண்ணனை நினைத்தவள் இவ்வளவு சீக்கிரம் மனம் மாறிவிட்டாளா என்று யோசிப்பானோ!… பிரபாகரன் வெளிப்படையாக சொல்லிவிட, இவளுக்கு ஒரு மாதிரி அவமானமாக இருந்தது.
“அப்படி எல்லாம் இல்லை. நெஜமாவே வேலை அதிகம். வேற நேரத்துல பஸ்ஸும் கிடைக்காது, அவ்வளவுதான்” என்றாலும் குரலில் மாறுதல் இருக்க நிமிர்ந்து மனைவியை பார்த்தான் பிரபாகரன். அவள் முகம் ஒரு மாதிரி இருக்கவும்,
“நிறை நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். ஒன்பது மணி வரைக்கும் நீ வீட்டுக்கு போகாம இந்த நேரத்துல பஸ்ல போறது சேஃப் கிடையாது” என்றதும், புரியாதவள்,
Advertisement
“வேற எதுவும் விசயமா? என்ன சேப் கிடையாது?” என்றதும்,
Advertisement
“உனக்கு புதுசா கல்யாணமாகி இருக்கு. நைட் நேரம் ரோடு ஃபுல்லா புளியமரம் தான். நான் நிறைய டைம் தனியா வந்து இருக்கேன் ஏது ஏதோ சத்தம் கேட்கும் ரொம்ப பயமா இருக்கும்” என்றதும்,
அட அல்பமே என்று பார்த்தாள் நிறை. அவளுக்கு இந்த பேய் அது இது என்றெல்லாம் பெருசா யோசிக்க மாட்டாள். இவன் இவ்வளவு பயந்தவனா!.. சில நேரம் பெரிய தத்துவ ஞானி மாதிரி பேசுவான். பல நேரம் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெருசா யோசிப்பான்.
இவர்கள் இருவரும் ஊர் வந்து நெருங்கும்பொழுது மணி பத்தை தொட கால் மணி நேரமே தாமதமாக இருந்தது. இன்று கடையில் கூட்டம் அதிகம். நிறைக்கு கால் வீங்கி போகும் அளவுக்கு வலி இருந்தது. யாராவது தண்ணி சோறு கொடுத்தால் கூட குடித்துவிட்டு படுக்கும் அளவுக்கு உடல் சோர்வாக கிடந்தது. இரவில் சாதம் எடுத்துக் கொள்வதெல்லாம் நிறைக்கு பிரச்சனை கிடையாது. ஆனால், பிரபாகரனுக்கு கஷ்டம். தோசை இட்லி மாதிரி ஏதாவது லைட் ஃபுட் தான் சாப்பிடுவான். அவனுக்கு ரெண்டு தோசை வார்த்து விட்டு தான் மட்டும் பழைய சாதம் சாப்பிட மனம் வராது. தனக்கும் நாலு தோசை வார்த்து எடுத்துக் கொண்டு வர பத்திரையாகிவிடும். அதன் பின் ஒருவர் ஒருவர் முகம் பார்த்து ரெண்டு வார்த்தை பேசக்கூட முடியாது. ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி விடுவர். வேலை அலைச்சல் அப்படித்தான்.
Advertisement
அடுத்த நாள் காலையில் நிறை கண்விழிக்கும் பொழுதே வீடு பரபரப்பாக இருந்தது. வீரணனின் பெரியம்மா அவளின் பெரிய பாட்டி இறந்துவிட்டார். வயது சென்ற இறப்பு தான். அதனால் நல்ல முறையில் காரியம் செய்து அனுப்பி வைக்க நினைத்தனர். நிறையும் கணவனை எழுப்பி லீவ் போட சொன்னவள். தானும் லீவ் போட்டு வீட்டில் இருந்தாள். மாலை ஐந்து மணிக்கு மேல் தான் எடுப்பார்கள். மதியத்திற்கு மேல் மிகவும் சோர்ந்து போனான் பிரபாகரன். அவனால் ஒரு நேர சாப்பாட்டை கூட தியாகம் செய்ய முடியாது. அவனுக்கு ஒரு மாதிரி உடல் எல்லாம் தளர்ந்து விடும். அதைத்தான் மற்றவர்கள் நோஞ்சான் உடம்பு, சீக்காளி என்று தள்ளி வைத்தது. பெரிய சாவு என்பதால் யாரும் உணவை பற்றி யோசிக்கக்கூட இல்லை.
பிரபாகரன் முகம் பார்த்தே நிறை அவனை புரிந்து கொண்டாள். பெரிய சாவு என்பதால் சமைக்க மாட்டார்கள். அவர்களின் உறவு முறையில் ஒருவனை அனுப்பி தான் சாப்பாடு வாங்கி வரச் சொன்னாள். பிரபாகரனை தனியே அழைத்து உணவு கொடுக்க,
“என்ன நிறை இப்படி பண்ற.. ஒரு நாள் சாப்பிடாட்டி நான் ஒன்னும் சாகமாட்டேன்”
“என்ன பேச்சு இது, வாய் மேலே ஒன்னு போட போறேன்” என்றாள் அவன் மனைவி.
“இவ்வளவு பேர் இருக்காங்க நிறை. அப்படி எனக்கு மட்டும் என்ன சாப்பாடு முக்கியம்… ஒரு நாளாவது துக்கத்தை அனுசரிக்கணும்” என்றான்.
“அவங்க நமக்கு பாட்டி தான். அந்த வருத்தம் எனக்கும் இருக்கு. ஆனா, இதுக்கு மேல என்ன பண்ண முடியும். அவங்க ரொம்ப வயசானவங்க… அதோட எத்தனை சொந்தம் சுத்தி நின்னாலும் நம்ம வலியையும், பிரச்சனையும் நாமதான் அனுபவிக்கணும். இப்ப நீங்க சாப்பிடாட்டி நைட் ஒரு வாய் சாப்பாடு கூட வாயில வைக்க முடியாது உங்களால.. வயிறு ஊசி குத்தற மாதிரி வலிக்கும். எதுக்கு இந்த அவஸ்தை, யாருக்கு நாம நல்லவங்களா ஆகணும்”
“இருந்தாலும் நிறை பாட்டியை எடுத்துட்டு போகாம, நான் எப்படி சாப்பிட முடியும்” என்று தயங்கினான்.
கணவனை நேராக பார்த்தவள் “நான் உங்க மனைவியா இருந்தாலும், உங்களோட சரிபாதின்னு சொல்லிக்கிட்டாலும். உங்களோட வலிய என்னால் உணர முடியாது. புரிஞ்சுக்க மட்டும் தான் முடியும். நீங்க என் புருசன் உங்களோட வலியை நான் தாங்கிக்கிறேன் சொல்லி தாங்க முடியுமா? உங்களுக்கு சாப்பாடு தான் மாத்திரை. அதை கண்டிப்பா எடுத்து தான் ஆகணும்” மனைவி சொன்னதும் அவன் நிலை புரிந்தது.
பெரிய பாட்டி இறந்திருக்கு… தானும் சாப்பிடாமல் இருந்து, தனக்கு ஏதேனும் இழுத்துக் கொள்ளக்கூடாது. பேருக்கு அவன் கொஞ்சம் உள்ளே தள்ள, மீதம் இருந்ததை வீணாகி விடக்கூடாது என்று நிறைவு உண்டாள். அதிகமாக சாப்பிட்டால் ஜீரணமாக ஆகாமலும், சாப்பிடாமல் இருந்தால் வயிற்று குத்தலும் அதிகமாக இருக்கும் பிரபாகரனுக்கு…
வேலையை முடித்து கணவன் மனைவி இருவரும் வந்து அமர,
“இவ சொந்த பேத்தி. பாட்டி இறந்த துக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சாப்பாடு தான் முக்கியம்ன்னு ஓடுகிறாங்க. என்னத்த சொல்ல” மாமியாரிடம் புலம்பினால் ரோகினி.
கல்யாணிக்கு மகன் உடல்நிலை தெரியும் என்பதால் அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பதினாறவது நாள் காரியம் பேசி இருக்க, நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டார் பெரியம்மா.
வளர் வரவில்லை என்பதால் தாயிடம் கேட்டாள் நிறை.
“வளரு மாசமா இருக்கு” என்றால் திலகா.
என்ன என்ற அதிர்ந்து போனவள் அதிர்ச்சியை தாயிடம் காட்ட வில்லை. அதற்குள் குழந்தையா என்று தான் இருந்தது. அது சரி சிலர் வாங்கி வரும் வரம் அப்படி… கேட்டதெல்லாம் கிடைக்கும் வரம் பெற்றவர்கள். தான் என்ன அப்படியா? முதுகுல எண்ணெய் தடவி மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமாம். அந்த மாதிரி நமக்கெல்லாம் சோதனையை தாண்டி ஒரு நல்லது நடக்க மாட்டுது.
நிறை, முன்பே தாயை அழைத்து சொல்லிவிட்டாள்,
“அம்மா எனக்கு கூட நீங்க நல்ல சேலை எடுக்க வேணாம். ஆனா, ரோகினிக்கும், சினேகாவுக்கும் பார்த்து நல்லதா, தரமானதா பார்த்து எடுத்துட்டு வாங்க. இல்ல இல்ல எனக்கு சேலையே கூட வேணாம். அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் நல்லதா எடுத்துட்டு வா.. என் புருசன் வீட்டு ஆளுக முன்னாடி என்னை தலை குனிய வச்சிடாத”
“நேத்து கல்யாணம் பண்ணி போயிருக்க அதுக்குள்ள உனக்கு புருசன் வீடா? எனக்கு அது பொறந்த வீடு நீ ஞாபகம் வச்சுக்கோ” வெடுக்கென்று சொன்னார் திலகா.
“அம்மா ப்ளீஸ்.. நான் திரும்பவும் சொல்றேன். நாலு பேரு முன்னாடி என்னை சங்கடப்பட்டு நிக்க வைக்காதீங்க” பல தடவை சொல்லியே தாயை அனுப்பி வைத்தாள் நிறை.
இவர்கள் பக்கம் பெரியவர்கள் யாராவது இறந்தால் அந்த வீட்டு பெண்கள் எல்லோருக்கும் சேலை எடுத்துக் கொடுக்க வேண்டும். நிறை பாயந்தது போலவே தான் திலகா ஒன்றும் அவ்வளவு பிரமாதமான சேலை எடுத்து வரவில்லை. ஆனால், வெளியே பெருமையாக ரோகினி, சினேகா இருவருக்கும் சேலையை கொடுத்தார்.
நிறைக்கு பார்த்ததும் தெரிந்து விட்டது சேலை இவர்களுக்கு பிடிக்காது என்று… தன்னால் நிறைக்கு ஒரு அயற்சியான பெருமூச்சு. பிறந்த வீடு தான் இப்படி இருக்கு என்றால், புகுந்த வீடு அதைத் தாண்டி நிக்குது. மிக மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு வீட்டில் கட்டி கொள்ளலாம். மனசு இருந்தால் பெருந்தன்மையாக எடுக்க வேண்டும். ஆனால், நிச்சயம் ரோகினி அப்படி விடமாட்டாள்.
திலகா சின்ன மகளை காண சென்று விட, நின்றது நிறை தான். சினேகாவை அழைத்துக் கொண்டு நிறை அருகில் வந்த ரோகினி,
“நாங்க இந்த மாதிரி சேலையெல்லாம் கட்ட மாட்டோம் நிறை, உங்க அம்மா எடுத்துக் கொடுத்தது நீயே வச்சுக்கோ” ரெண்டு சேலையும் அவள் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்து கொண்டார்கள்.
வீட்டில் உறவுகள் இருக்க பெரிய தர்ம சங்கடமாகி போனது நிறைக்கு… சேலை அப்படி ஒன்றும் பிரம்மாதம் இல்லை தான். அதேபோல தூக்கி போடும் அளவுக்கு தரமற்றதும் கிடையாது. ஒரு மரியாதைக்காகவது வாங்கி வைத்து வீட்டின் ஒரு மூலையில் போட்டு இருக்கலாம், இல்லை வேற யாருக்காவது கொடுக்கலாம். அப்படியும் இல்லையா நீயே தூக்கி கீழ கூட போட்டு இருக்கலாம். அதைத் திரும்ப நிறை கையில் கொடுத்தது தவறல்லவா?…
எதுவும் பேசாமல் கொடுத்ததும் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்து விட்டாள். என்ன முயன்றும் அவள் கண்களில் லேசாக நீர் படலம் வந்துவிட்டது. இது ரொம்ப பெரிய உதாசினம். ஒரே வீட்டில் மருமகளாக வந்து பரஸ்பர நட்பு கூட இல்லாமல் நடத்துவது ஒரு மாதிரி அழுத்தமாக இருந்தது.
பிரபாகரன் அறையில்தான் இருந்தான். மனைவியின் முகம் பார்த்தே பதறிப் போனவன்.
“என்னாச்சு நிறை?” என்றான். நடந்ததை அவள் சொல்ல, அவனுக்கு இதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்றே தெரியவில்லை. பிடிக்காமல் இருந்தாலும் திரும்ப கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்பது தான் அவன் எண்ணம். அதற்காக மனைவி உடைந்து போவாள் என்று நினைக்கவில்லை.
“நீ எவ்ளோ போல்டான பொண்ணு.. இதுக்கு போய் உடைஞ்சு போயிட்டியே நிறை”
“வேற யாராவது இருந்தா, ரொம்ப ஈஸியா கடந்து போய் இருப்பேன். இது ஒரே வீடு, நாம எல்லாம் ஒரே குடும்பமா இருக்கும் போது, என்னை மட்டும் உதாசீனப்படுத்தற மாதிரி இருக்குது. அது நிஜமாக எனக்கு வலிக்குது” என்றாள் கண்களில் நீரோடு…
உண்மைதான் ரோகினியை அவனுக்கு ஆறு வருடமாக தெரியும். இப்படி எல்லாம் யாரிடமும் நடந்து கொண்டதில்லை. சினேகாவிடவும் நல்லபடியாக தான் நடக்கிறார். அப்போது நிறை மட்டும் ஏன்? கேள்வி இருந்த போதும் மனைவியை சமாதானம் செய்ய எண்ணினான்.
“நிறை நான் சொல்றத நீ முழுசா நம்பனும்” என்று இருவருக்கும் இருந்த பத்தடி தூரத்தை அரை அடியாக மாற்றினான்.
மனம் கலங்கி நின்றவள் கணவனின் நெருக்கத்தில் தடுமாறிப் போனாள். அவனின் வாசம் முதல் முறையாக அவள் நாசிக்குள் சென்றது. பிரபாகரன் உணரவில்லை,
“நீ என் மனைவி. நான் உன் கணவன். காலத்துக்கும் உன் வாழ்க்கை இங்க தான். இதுதான் நம்ம குடும்பம். இது என்னைக்கும் மாறாதது. ஆனா, இப்படி மனம் கலங்கி நீ அழுகிறது எனக்காக மட்டும் தான் இருக்கணும்…” அவள் வலது கையைப் பிடித்துக் கொண்டவன்,
“இந்த வீட்ல யாரோடையும் நமக்கு ஒட்டல, யாரும் நம்மளை சேர்த்துக்கல, நாம தனியா இருக்கோம்.. இப்படி ஒரு பீல் உன் கூட நான் இல்லாதப்ப வரணும். நீ இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்தாலும், என் கூட வாழத்தான் வந்திருக்க நிறை.. அப்ப நீ என்னைதான் யோசிக்கணும். உன் புருஷன் சரியில்லாதவனா இருந்தா நீ அழுகலாம். இந்த வீட்டு ஆட்கள் சரியில்லன்னு ஏன் அழுகணும்” என்றதும், கணவனின் முகத்தை யோசனையாக பார்த்தாள் நிறை.
“நாம இங்கேயே இருந்தாலும் நமக்கான வாழ்க்கை தனியா இருக்கு. அதுல நம்ம ரெண்டு பேரு மட்டும் தான். உனக்கு நான் சரியா இருக்கணும், எனக்கு நீ சரியா இருக்கணும். உன் துணைக்கு நான் வரணும், என் துணைக்கு நீ வரணும். இதுல ஏதாவது ஒரு பக்கம் தவறினால் நீ அழுகலாம். உனக்கான அங்கீகாரத்துக்கு நீ என்னை பார்த்தா போதும் என்ன சுத்தி இருக்கிறவங்களை பார்க்க தேவையில்லை. ஏன்னா இங்க யாரும் குழந்தைங்க கிடையாது நாம எடுத்து சொல்லி புரிய வைக்க முடியாது” என்றதும் நிறை முகம் லேசாக மலர்ந்தது.
“என்ன புரிஞ்சதா?” என்றதும் பலமாக தலையாட்டினாள் நிறை.
“என்ன புரிஞ்சது” திரும்ப கேட்க.
“சோறு தான் முக்கியம்” என்றால் நிறை, முகம் சிரிக்காமல் சீரியஸ் ஆக இருந்தது.
“என்ன… என்ன சொல்ற?”
“ஆமா, சோறு தான் முக்கியம். சோறு இருந்தா போதும் குழம்பு, காய், கூட்டு வேற எதை வேணாலும் வச்சு சாப்பிடலாம். எனக்கு பாகற்காய் குழம்பு பிடிக்காது. அதனால நான் சோறு கூடா அதை வைத்து சாப்பிட மாட்டேன். அதே மாதிரி புருசன் தான் முக்கியம். புருசனை சுத்தி இருக்கிறவங்க எப்படி இருந்தாலும் நாம எடுத்துக்கணும்னு அவசியம் இல்லை. எனக்கு பாகற்காய் குழம்பு ரோகினியும் வேணாம். சுண்டவத்தல் சினேகாவும் வேணாம்” என்று சொன்னதும் கணவனின் முகம் போன போக்கை பார்த்து கலகலவென சிரித்தாள் நிறை.
பிரபாகரன் அவளை முறைத்துப் பார்க்க,
“எப்படி எல்லாம் பேசுறீங்க நீங்க? இந்த பேச்சு எல்லாம் முன்னாடி எங்க போயிருந்துச்சு சார். அப்ப நான் உங்களுக்கு அத்த பொண்ணு, நீங்க எனக்கு மாமா பையன் தானே” சகஜமானால் திருநிறைச்செல்வி.
ஆனால், பிரபாகரன் லேசான சிரிப்போடு அமைதியாகி விட்டான். மனைவியின் கேள்விக்கு விளக்கம் கொடுக்க முடியாது. என்னதான் அத்தை பெண்ணாக இருந்தாலும், அண்ணனின் மனைவியாக மனதில் நினைத்ததினால் மரியாதை தன்மையோடு எட்ட நின்று விட்டான். இன்று விளக்கம் கொடுக்க முடியாது. திருநிறைச்செல்வி, வீர பிரபாகரனின் மனைவி அல்லவா!.. என் மனைவியை சங்கடப்படுத்தும் வார்த்தைகளை கூட உபயோகிக்க மாட்டேன்.
அடுத்த நாள் காலையில் பிரபா வேகமாக வேலைக்கு கிளம்பி விட்டான். நிறை தாமதமாகத்தான் கிளம்பினாள். அவனுக்கு வேறு எங்கோ பணம் வசூல் செய்யும் வேலை இருந்தது. பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போதே பாதி வழியில் நிறை இருக்கும் பஸ்ஸிலே பிரபாகரன் ஏறிக்கொண்டான். அவனும் கவனிக்கவில்லை. அவளுக்கும் தெரியாது. காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாகியது. மூச்சு முட்ட ஜன்னல் வழி லேசாக எட்டிப் பார்த்தாள் கொஞ்சம் காத்து வாங்க.
நல்ல கூட்டம் என்பதால் படியில் தொங்கிக் கொண்டிருந்தான் பிரபாகரன். பார்த்ததும் பதறிப் போனவள், கையை ஆட்டினாள். முதலில் கவனிக்கவில்லை கத்தி கூப்பிட்டதும் தான் எட்டிப் பார்த்தான்.
“மேல வாங்க” சைகையோடு கத்தி சொல்ல,
“ரொம்ப கூட்டம் நிறை வர முடியாது”
“எப்படியாவது மேல வா”
“எப்படியாவது மேல வரவா? இவ்வளவு கூட்டத்தில் எப்படி வர முடியும். ரோட்டை பார்த்து உட்கார்” என்றதும், அவனை முறைத்தவள்,
“அடிச்சு புடிச்சு மேல ஏறி நில்லுங்க”
“கத்தாதே”
“கத்துவேன்” கூட்டம் அதிகமாகவும் பேருந்தில் பாட்டு நின்றுவிட்டது. இப்போது எல்லோரும் பார்வையும் இவர்களை நோக்கி இருக்க, பிரபாகரனுக்கு பெரிய சங்கடம்.
“நிறை அமைதியாக இரு”
“நீங்க படியில தொங்கிட்டு வருது எனக்கு பயமா இருக்கு”
“எனக்கு இதெல்லாம் பழக்கம் தான். நீ கொஞ்சம் வாய மூடு, எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க”
“எனக்கு பழக்கம் இல்லை. யார் பார்த்தாலும் கவலை இல்லை. கீழே விழுந்து வாரி வச்சா என்ன ஆகிறது. மரியாதையா மேலே ஏறி நில்லுங்க” விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய,
“யாருப்பா அது, உன் பொண்டாட்டியா? ரொம்ப பாசம் போல” என்றார் பெரியவர்.
“பஸ்ல பாட்டு போடல. இன்னைக்கு நீங்க தான் எங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு…” என்று கேலி பேச சங்கடமாக இருந்தது அவனுக்கு…
நிறை இப்படி கத்தி பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. மேலும், எதையோ நிறை சொல்ல வர அதற்குள் அடித்து பிடித்து உள்ளே வந்து அவள் அருகில் போய் நின்று விட்டான், இல்லை நிறை கத்திக் கொண்டிருப்பதை பார்த்து அங்கிருக்கும் மக்களே கொஞ்சம் வழி விட்டார்கள்.
எல்லோரும் இவர்களையே பார்க்க, “உங்க பேக் எங்க? ஏன் சுமந்துட்டு இருக்கீங்க குடுங்க நான் மடியில வச்சிக்கிறேன்” என்றவள் வேர்திருந்த அவன் முகம் பார்த்து தண்ணியை எடுத்துக் கொடுத்தாள்.
“கொஞ்சம் குடிங்க, நல்லா இருக்கும்”
“நான் குழந்தை இல்லை நிறை நான் என்னை பார்த்துப்பேன்” என்றான்.
“தெரியும், ஆனாலும் எனக்கு பயமா தான் இருக்கு. நான் பார்க்கும்போது இப்படி படியிலே எல்லாம் தொங்காதீங்க. நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் அதை அக்செப்ட் பண்ண முடியாது. நீங்க மேல ஏறி வர்ற வரைக்கும் எனக்கு பயமா தான் இருந்துச்சு” மனைவி அப்படி சொன்ன பின் மேற்கொண்டு அவன் எதுவும் பேசவில்லை. அவளின் தோதுக்கு அமைதியாகி நின்றான்.
பஸ்சை விட்டு இறங்கியதும் அவள் கூடவே நடந்து வந்து, இரண்டு ஆரம் ஜூஸ் வாங்கி அவள் கையில் கொடுத்து,
“குடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு அப்புறம் வேலைய பாரு” என்று நகர, நிறை முகம் மகிழ்ந்து இருந்தது.
இன்று சம்பள நாள், வீட்டு வரவு செலவு எல்லாம் பொது கணக்கில் இருப்பதால் வீட்டுக்கு ஏதாவது வாங்கிப் போகும் நினைப்பில் இருந்தாள். மாலை கடையை விட்டு வெளியே வர, சரியாக நின்றிருந்தார்கள் திலகா, தெய்வம் தம்பதிகள்.
error: Content is protected !!