Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 6

அம்மையப்பன் 6

 

அம்மையப்பன் மாளிகையில் உள்ள ஆண்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு அமர்ந்திருக்க வீட்டின் பெண்கள் அவர்களுக்கு இலை போட்டுக்கொண்டிருந்தனர்.. சில நேரங்கள் தவிர்த்து மற்ற எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவதே அங்கு வழக்கம்.. வேதவல்லி பஞ்சினும் மென்மையாய் உள்ளங்கை அளவில் சிறிதும் குறையாது குண்டு குண்டாக இருந்த இட்லியை பரிமாற.. அவரைதொடர்ந்து குழம்பும் அல்லாது சூப்பும் அல்லாத இளம் ஆட்டுக்கறி குழம்பை அதன் மேல் ஊற்றிகொண்டிருந்தார் மரகதம்.. வாழை இலையில் சூடான குழம்பை ஊற்றும் பொழுது உண்டான மணத்தில் அங்குள்ள அனைவரின் வாயிலும் நீர் சுரந்தது..

 



Advertisement

ராசா.. குழலி என்னய்யா இன்னும் காணா.. நேரத்துக்கு புள்ள கீழ வந்துடுமே.. உடம்பு ஏதும் சரியில்லையா.. என பேச்சியம்மை கவலையாக வினவினார்..

 

அதெல்லாம் ஒண்ணுமில்லங் அப்பத்தா.. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் புள்ளைங்க படிச்சதுங்.. அதான்.. பொறுமையா எந்திரிக்கட்டும்.. என அகத்தியன் கூறினான்..

Advertisement

 

Advertisement

இட்லியையும் கறிக்குழம்பையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த நாகநாதன் உண்பதை விடுத்து அகத்தியனை வம்பிலுக்க ஆரம்பித்தார்.. 

 

என்ன மருமவனே.. அதிசயமா இன்னைக்கு காலை பலகாறதுக்கு வந்துருக்கீங்க.. எந்த சோலியும் இல்லையோ.. என நாகநாதன் கேலியாக அகத்தியனிடம் கேட்டார்.. 

Advertisement

 

ஹுக்கும் என்ற மருமவன் ரொம்ப நா செண்டு காலைக்கி வூட்டுல இருக்கான்.. அது உங்களுக்கு பொறுக்களையோ.. என அகத்தியன் பதில் கூறும் முன்பே படபடபட்டாசாய் பொரிந்தார்.. மரகதம்.. 

 

போச்சுடா.. என்ற அம்மணி இருக்குறது தெரியாம வாயவுட்டுப் போட்டேனே.. இன்னைக்கு முழுக்க மொறைச்சுக்கிட்டே திரிவாகளே என நாகநாதன் வாய்க்குள் மொனாங்க.. அவர் அருகில் அமர்த்திருந்த அகத்தியன்.. மென்புன்னகை புரிந்தான்..

 

மரகதம் இன்னும் தன் கணவனை முறைத்துக் கொண்டிருக்க.. நாகநாதன் பாவமாய் அமர்ந்திருந்தார்..

 

அத்த மாமா சும்மா கேட்டாங்.. வுடுங்.. என்றவன் அத்தை இன்னும் மாமனையே முறைப்பதைக் கண்டு.. இன்னும் கொஞ்சம் கறிகொளப ஊத்துத்தை ரொம்ப நல்லாயிருக்கு என கேட்டதும் தான் தாமதம்.. மரகதம் அனைத்தும் மறந்து அவனுக்கு மேலும் இரண்டு இட்லியை வைத்து ஆட்டுக்கறியை அதிகமாகவும் குழம்பை சிறிது கம்மியாகவும் இட்டிலியில் ஊற்றி அதனை மூழ்கடித்தார்.. 

 

மனைவியை திசை மாற்றிய மருமகனை பாசபார்வை பார்த்த நாகநாதனோ அடுத்த சில நிமிடங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறந்தார்.. ஏனெனில் அவர் அடுத்து ஏதாவது பேசினால் மனைவியின் கவனம் இவர் மேல் திரும்பிவிடுமே..

 

இரட்டை ஜடையிட்டு.. பட்டு பாவாடை சட்டை அணிந்து கழுத்தை சுற்றி துப்பட்டாவை மாலை போல் அணிந்து வந்திருந்த குழலியின் விழிகள் அடிக்கடி வாசலை நோக்கி கொண்டிருந்தது..

 

அம்மணி வந்துட்டியா.. வா வந்து சாப்புடு.. என அழைத்தார் வேதவல்லி..

 

ஹான் இதோ வரேன் அப்பத்தா என கூறியவள்.. சாமியறையின் உள்ளே சென்றாள்.. சிறிது நேரம் கழித்து நெற்றியின் குங்குமம் திருநீர் கீற்றுடன் வெளியே வந்தவளின் விழிகள் மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது..

 

அப்பொழுது அங்கு வேகமாக தலையை பின்னளிட்டாவாரு வந்த ஷாலினி.. விழிகள் மூடி கறிக்குழம்பின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தவாரு சாப்பிடும் கூடம் செல்ல முயன்றவள்.. அங்கு நின்றிருந்த அன்னையை கண்டு ஜெர்க்கானாள்…

 

குழலி எங்க ஆத்தா அங்கன நிக்குறாங்டி.. நான் மட்டும் போனா இப்போதைக்கு எனக்கு சாப்பாடு தர மாட்டாங்.. அதுனால நீயும் கூட வாடி என குழலியிடம் கூறி முன்னே செல்ல.. குழலியோ மற்றவளின் பேச்சை கேட்காது வாசலிலேயே தன் கவனத்தை வைத்திருந்தாள்.. 

 

ஏண்டி அங்கணயே நிக்க.. வாடி.. பசி வவுத்த கிள்ளுது.. ஞாயித்து கிழம தாண்டி என்னால நிறுத்தி நிதானமா நிறைய சாப்புட முடியும்.. மத்த நாளுல எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு இன்னும் என்ன மொக்கிட்டு கிடக்க கிளம்பு கிளம்புன்னு உன்ற அத்தை உசிர எடுத்துப்போடும்.. கறிக்குழம்பு வாசம் அள்ளுது வாடி.. என குழலியின் கரத்தை வேகவேகமாக இழுத்துக் கொண்டு சென்றாள்..

 

ப்ச் நீ மட்டும் சாப்புடுடி.. என்னைய வுடு.. என குழலி எரிச்சலுடன் சொல்ல..  ஷாலினி எதையும் கருத்தில் கொள்ளாது தன் மாமனின் அருகே இலை எடுத்து போட்டு அமர்ந்து கொண்டாள்..

 

அப்பத்தா சீக்கிரம் இட்டிலிய வையுங்க.. ராத்திரி முழுக்க படிச்சதுனால ரொம்ப பசிக்கு.. என பரபரப்பாக சொல்லவும்.. குழலியும் பவளமும் அவளை கொலைவெறியுடன் பார்த்தனர்..

 

வந்தேன் சீவக்கட்டை பிஞ்சுடும் பார்த்துக்க.. என பவளம் கத்தினார்..

 

ப்ச் அக்கா என்ன பண்றீங்.. புள்ளைங்களுக்கு மொதல்ல சாப்பாடு போடுங்.. அம்மணி உட்காருத்தா என அகத்தியன் தமக்கையை மெலிதாக கண்டித்து.. மகளிடமும் அமருமாறு சொல்ல.. குழலி தந்தையின் சொல்லை மறுக்க முடியாது ஷாலினியின் அருகே அமர்ந்தாள்.. 

 

ஷாலினி குழலி இருவருக்கும் படிப்பதற்காக விடுமுறை அளித்திருந்தனர்.. இன்னும் இருபது நாளில் இருவருக்கும் பொதுத்தேர்வு ஆரம்பமாக உள்ளது..

 

குழிலி எந்நேரமும் புக்கை வைத்து கொண்டு மும்மரமாய் படித்துக்கொண்டிருக்க.. ஷாலினியும் ஓரளவிற்கு படிப்பை தன் தலையில் ஏற்றிக்கொண்டிருந்தாள்.. அதோடு இரவு முழுவதும் படிக்கிறேன் என குழலியோடு சில நிமிடங்கள் புத்தகத்தை வைத்திருப்பவள்.. சிறிது நேரத்தில் அதனை தலையணையாக்கி உறங்கி விடுவாள்.. அவளைப் பார்த்து சில நேரம் குழலிக்கும் உறக்கம் வந்துவிடும்.. அதனால் பவளமும் குழலியும் அவளைப் பாசபார்வை பார்க்க.. ஷாலினி பாவமாய் தன் மாமனை பார்த்தாள்..

 

சேட்டைகார அம்மணி என அவள் மூக்கை செல்லமாக இழுத்த அகத்தியன்.. தன் அக்காவைப் பார்த்தான்..

 

வர வர நீ இவளுக்கு ரொம்பத்தான் இடம் கொடுக்கறடா என நொடித்துக் கொண்டே அவளுக்கு இட்லியை வைத்தார்..

 

அவ்வளவு தான்.. இனி அங்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்பதுபோல் கறியையும் இட்லியையும் தன் வாய்க்குள் தள்ள ஆரம்பித்தாள்.. ஷாலினி.. 

 

அம்மணி சாப்புடுத்தா.. இல்ல இவளே எல்லாத்தையும் முழுங்கிடுவா.. என பவளம் குழலிக்கும் பரிமாற.. அவளோ ஏமாற்றமாய் வாசலையே பார்த்தாள்.. விழிகள் கலங்குது போல் இருக்க சாப்பிடுவது போல் தலை குனிந்து கொண்டாள்… பாதி இட்லி தான் சாப்பிட்டு இருப்பாள் அதற்குள் அவள் இலை பறிக்கப்பட.. திடுக்கென நிமிர்ந்தவள்.. தன்னெதிரே அமர்ந்திருந்தவனை கண்டு விழி விரித்தாள்..

 

அதோடு இதுவரை வதங்கிய மலர்ப்போல் பொலிவிழந்திருந்த முகம்.. இப்பொழுது சூரியனைக் கண்ட சூரியகாந்தியாய் பூத்துக்கிடந்தது.. ஓர் நிமிடம் அவனை மகிழ்ச்சியாக பார்த்தவள் அடுத்த நொடியே முகத்தை கோபமாக்கி தன் அத்தையிடம் குறைக்கூற ஆரம்பித்தாள்..

 

அத்த அது என்னோட இலை.. அதை கொடுக்க சொல்லுங்.. என முகம் சிவக்க கூறினாள்.. ஏனெனில் அவளின் இத்தனை நேர மனஉளைச்சலுக்கு உரியவன்.. அவள் உண்ட இலையிலேயே குழலியை ஓர் பார்வை பார்த்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.. 

 

அமுதா என்னடா.. திடீர்னு வந்துருக்க.. நேத்தைக்கு நான் கேட்கும் போது.. வரமாட்டேன்னு சொன்ன.. என அமிர்தவல்லி ஆச்சரியமாக கேட்டார்..

 

ஹ்ம்ம்.. இன்னைக்கு நடக்க வேண்டிய வகுப்ப தள்ளி வச்சுட்டானுங்ம்மா.. அதான் கிளம்பிட்டேன்.. என பதிலைக் தாய்க்கு கூறினாலும்.. விழியோ பாவையையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தது..

 

அத்த.. என சிணுங்கி அமிர்தாவை அழைக்க.. ஆடவனோ அவளின் சிணுங்கள்கலில் உள்ளுக்குள் இன்பமாய் நொறுங்கிக் கொண்டிருந்தான்..

 

அடேய் வந்ததும் என்ற பேத்திய தான் வம்பிலுக்கனுமா.. பாரு அம்மணி எப்படி சிணுங்குறான்னு.. என வேதவல்லி அவனை அதட்டினார்..

 

ஹுக்கும் அதைபாத்து தான் தலைசுத்திபோய் கிடக்கேன்.. மறுபடியும் பாத்தேன் அவளை மடியில தூக்கிவச்சு கொஞ்ச ஆரம்பிச்சுடுவேன்.. என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தவனின் விழிகளில்.. அவளை தூக்கி வைத்துக்கொள்ளும் நாளுக்கான ஆவலும் ஏக்கமும் நிறைந்து கிடந்தது.. 

 

அம்மத்தா வர வர உங்களுக்கு எம்பட மேல அக்கறையே இல்லாம போச்சு.. உங்களை எல்லாம் பார்க்கணும்ங்கிறதுக்காக எவ்வளவு பசியோட வந்தேன் தெரியுமா.. ஆனா நீ என்ன அதட்டுற போ.. என அவன் முகத்தை தூக்க.. வேதவல்லி அப்படியே மாறிப்போனார்..

 

அயோ ஏன் கண்ணு.. இப்படி சொல்லுற.. நீ என்ற சின்ன ராசாடா.. என அவன் முகத்தை வழித்தவர்.. ஏய் அமிர்தம் அந்த இட்டிலிய எடுடி என மகளை ஏவி மேற்கொண்டு கறிக்குழம்பை ஊற்றி அவனை சாப்பிடுமாறு கூறினார்..

 

அமுதன் குழலியை பார்த்து பழிப்பு காட்டியாவாரு சாப்பிட.. அவளின் கோபம் அதிகமாகியது..

 

அப்பத்தா.. என குழலி கோபமாக அழைக்க.. வேதவல்லி இப்பொழுது தன் பேத்தியை சமாதானம் செய்ய முயன்றார்..

 

வுடு கண்ணு.. பாவம் உன்ற மாமன் பசியோட வந்துருக்கான்.. பொறு.. அப்பத்தா உனக்கு இன்னொரு இலை போடுறேன்.. என அவளை கொஞ்சினார்.. ஆனால் பேத்தி விடுவதாய் இல்லை போலும்..

 

ஹுஹும்.. எனக்கு என்ற இலைதான் வேணும்.. என அப்பத்தாவிடம் மல்லுக்கட்டியவள்.. அமுதன் உண்ட இலையிலேயே எடுத்து சாப்பிட்டாள்.. அமுதன் ஆச்சரியமாகவும் ஆசையாகவும் அவளைப் பார்க்க.. அவளோ யாரையும் கவனியாது இலையின்னுள்ளே புகுந்து விடுபவள் போல் குனிந்து சாப்பிட்டுகொண்டிருந்தாள்.. இதழில் அவளையும் மீறி ஓர் இளம் புன்னகை..

 

அமுதன் விழியெடுக்காது அவளையே காதலாய் பார்த்துக் கொண்டிருந்தான்.. பவளம் அமிர்தவல்லிக்கு இதனை காண்பித்து சிரிக்க.. அவரின் முகம் மகிழ்ச்சியில் பொங்கிக்கொண்டிருந்தது.. அவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் இதனை கவனிக்க தான் செய்தனர்..

 

அகத்தியன் இருவரையும் ஆழமாக பார்த்தவன் பின் ஓர் மெல்லிய சிரிப்புடன் தன் உணவில் கவனம் வைத்தான்..

 

அவள் அணைத்தையும் உண்டு.. அவனை பார்த்து புருவம் உயர்த்த.. உள்ளே ரசித்தாலும் வெளியில் மொறைத்தவன்.. போடி.. இங்க இல்லைன்னா என்ற மாமா இலையில சாப்புட்டு போறேன்.. அதோட அங்க ஸ்பெசல் ஐட்டம் ஒன்னு இருக்கும் என வம்பிலுத்தவன் அகத்தியனிடம் சென்றான்..

 

டேய்.. மொத என் மக இலை.. இப்போ என்னோடதா டா.. என அகத்தியனின் வாய் கண்டித்தாலும்.. உணவை அள்ளி அமுதனுக்கு ஊட்டிவிட்டான்..

 

அவனிடம் ஆசையாக வாங்கிகொண்ட அமுதன் தன் மாமனையும் வம்பிலுக்க ஆரம்பித்தான்..

 

நினைச்சேன்.. இது இங்கன தான் இருக்கும்னு.. வயசுப்புள்ள தான் இந்த நல்லிய கடிக்கோணும் மாமா.. உங்கன மாதிரி கிழவர் இல்லை என அவன் இலையில் இருந்த நல்லியை எடுத்து உரிந்தான்.. 

 

ஏலேய் யாரைப் பாத்து கிழவன்னு சொன்ன.. இப்போ என்ற தம்பி வேட்டிய மடிச்சுக்கட்டி நின்னா.. இந்த ஊருல உள்ள ஒரு இளந்தாரியும் அவேன் முன்னாடி நிக்க முடியாது பாத்துக்க.. என அமிர்தவல்லி பெருமையாக கூறினார்.. 

 

ஹுக்கும் அதான் தெரியுமே.. இப்படி நல்லியும் ஈரலுமா அள்ளிவச்சு வளர்த்தா.. நாங்களும் அப்படித்தான் இருப்போம்.. மாமோய் பாரு எல்லார் இலையிலயும் சக்கையாட்டம் தான் கறி இருக்கு.. உம்பட இலையில நல்லி நெஞ்செலும்பு ஈரலு சுவரொட்டின்னு வித விதமா இருக்கு.. பேரன் பேத்தி வந்தாலும் இங்கன உள்ள எல்லாருக்கும் நீதான் உசத்தி.. என முகத்தை நொடித்துக் கொண்டு சொல்ல..

 

கார்க்குழலி தன் தந்தைக்கு பரிந்து வந்தாள்.. ஆமா என்ற ஐயன் உசத்திதான்.. ஏன்னா அவரு அகத்தியனாக்கும் என பெருமையும் கர்வமுமாக சொல்ல.. அகத்தியன் சிறு சிரிப்புடன் அவர்களின் சண்டைகளை பார்த்து கொண்டிருந்தான்..

 

அடேய் கண்ணு போடாதடா.. இம்புட்டு நாளும் எந்தம்பி என்னத்த திங்கானுதான் பாத்துட்டு இருந்தியா.. தம்பி இன்னைக்கு ராவு உனக்கு சுத்தி போடணும்ய்யா.. என பவளமும்.. நாங்க எதுவும் கொடுக்காமத்தான் இப்படி எருமமாட்டாட்டம் வளர்ந்துருக்கியா.. என அமிர்தவல்லியும் கோபம் காட்டினர்.. 

 

அடேயப்பா.. ரொம்பத்தான்.. என நொடித்துக் கொண்டான்.. அமுதன் இவ்வாறான பல கலாட்டாக்களுடன் அவர்களின் காலை உணவு நேரம் களைகட்டியது..

 

************************************

 

மொட்டை மாடியில் நின்றுக்கொண்டு மாலை நேரத்தின் இனிமையை ரசித்துக் கொண்டிருந்தாள் கார்குழலி… இளம் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த சூரியனின் ஒளிக்கற்றையில் பசுமையான மலைகள் மேலும் அழகுற மிளிர்ந்ததைக் கண்டு பூவையவள் மெய்மறந்து நின்றாள்.. அம்மாலை வேளையிலும் ஈரப்பதம் நிறைந்த காற்று அவள் மேனியை தழுவிச் செல்ல.. அதில் உடல் சிலிர்த்தவள்.. தன் கரங்களில் உள்ள மினியேச்சர் பொம்மையை பார்த்தாள்.. அந்நொடியே அவள் விழிகளுக்குள் லட்சம் பூக்கள் பூத்தது.. தாமரை மடல் போலான செவிகள் இளஞ்சூடாக.. இதழ்களோ வெட்கசிரிப்பில் இருந்தது.. அன்றைய நாளின் தன் மனதிற்க்கினிய பொக்கிஷ நிகழ்வுகளுக்குள் மீண்டும் சென்று கொண்டிருந்தாள் பாவை..

 

************

 

யய்யா.. ராசா.. இன்னைக்கும் வெளில போகணுமா.. செத்த நேரம் இருய்யா.. மதியமும் சாப்புட்டு மெல்ல போவலாம்ல.. என மரகதம் கேட்டார்..

 

இல்லங்த்த .. நான் ஊட்டிக்கு போறேன்.. இன்னைக்கு அங்கன கூட்டம் சாஸ்தியா இருக்கும்.. நான் போயி ஒரெட்டு பாத்துபோட்டு வந்துடுறேன்.. அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.. என்றான் அகத்தியன்..

 

செத்த இரு மாமா.. நானும் வரேன்.. என அமுதனும் கிளம்ப.. ஷாலினி அவனை வழி மறித்தாள்.. அண்ணே எனக்கு என்ன வாங்கிட்டு வந்த.. மொத அத சொல்லு.. என வம்பு செய்ய.. 

 

அடியே உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா.. வெளியே போறப்ப இப்படியாடி வழிமறிப்ப.. போற காரியம் உருப்படுமா.. எனக்குன்னு வந்து பொறந்துருக்கே.. மட்டி.. மட்டி.. என பவளம் அவள் தலையில் கொட்டியவாறு.. தன் அர்ச்சனையை துவங்க.. ஷாலினி அலற ஆரம்பித்தாள்.. 

 

பவளம் வுடு.. என்ன பண்ற.. புள்ள ஏதோ தெரியாம பண்ணிப்போட்டா.. அதுக்கு இப்படித்தான் கொட்டுவியா.. என மனைவியை கண்டித்து.. மகளை தன் புரம் இழுத்துக் கொண்டார்.. திருச்செல்வம்..

 

ஐயா.. ஐயா என ஷாலினி தேம்ப.. திரு மனைவியை மேலும் முறைத்து.. மகளை சமாதானம் செய்ய ஆரம்பித்தார்..

 

அச்சோ.. அம்மணி அழக்கூடாதுடா.. அவகிடக்கா.. கோட்டி.. நீ என்ற செல்லம்ல என ஷாலினியை சமாதானம் செய்ய.. தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்தாள்..

 

மற்றவர்களும் பவளத்தை குறைக்கூற.. ஒன்னும் சொல்றதுக்கில்ல என முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டவாறு உள்ளே சென்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!