Skip to content
Post Views: 4,811
வேளை 10
வார்த்தைகளால் வாகை சூடி கொள்வதும் வாதையை இழுத்துக்கொள்வதும் சொல்பவரை பொறுத்து மட்டும் அமையாது. சில நேரம் அது கேட்பவரைப் பொறுத்தும் அமையும். இயல்பான, நகைச்சுவையான பேச்சாக இருக்கலாம். ஆனால் அதனை எதிரில் இருப்பவர் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை பொறுத்தே அந்த சொல்லின் சுவையும் நயமும் தெரியும். எதிர்கொள்பவரின் மன நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எப்போதும் எவராலும் எல்லாவற்றையும் யோசித்துப் பேசிட முடியாதுதான்.
Advertisement
சிலரிடம் மட்டுமே சட்டென தோன்றும் வார்த்தையை இளைப்பாற விடாமல் உடனே நம்மிடமிருந்து இறக்கி வைத்து விடலாம். லாலா பொதுவாகவே யோசித்தெல்லாம் பேச மாட்டான், மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லிவிடுவான். அது சில நேரம் கைகொடுக்கும், சில நேரம் கொடுக்காது.
இன்று அப்படியான ஒரு நேரம். லாலாவின் வார்த்தைகள் உதயநிலாவை சட்டென சுட்டது.
Advertisement
Advertisement
“அதான் நமக்குக் கல்யாணமாகிடுச்சே, இப்போ ஏன் வீட்ல உள்ளவங்களை இம்ப்ரெஸ் பண்ண நினைக்கிறடி?” என்று கேட்டுவிட அந்த வார்த்தைகளை லாலா மிகவும் சாதாரணமாக சொல்லிவிட்டான். உதயாவால் அதனை சாதாரணமாக ஏற்க முடியவில்லை.
“கல்யாணத்துக்கு முன்னாடி என்ன நான் உங்களை இம்ப்ரெஸ் பண்ண நினைச்சேன் லாலா சொல்லுங்க? இப்போ நான் வீட்ல உள்ளவங்களுக்குச் செஞ்சா அது ஏன் உங்களுக்கு அன்பா தெரியல? உங்களுக்குத் தெரியலன்னா கூட பரவாயில்லை, இப்படி பேசி என்னை ஹர்ட் பண்ணாதீங்க!” என்றவளின் வார்த்தைகளில் அப்படியொரு அழுத்தம். குரல் உயர்த்தாமல் வார்த்தைகளை அழுத்தி நிதானமாக தன் கோபத்தைக் காட்டினாள்.
Advertisement
அவளின் முகத்திலும் கூட வலி.
“எல்லாரும் இருந்தாலோ, எல்லாமே இருந்தாலோ அதோட அருமை தெரியாது. எனக்கு எட்டு வயசு இருக்கும்போது என் அப்பா இறந்துட்டார். இப்போ நான் ஃபினான்சியலா நல்ல நிலைமையில இருந்தாலும் என்னால என் அப்பாவுக்கு ஒன்னுமே வாங்கித் தர முடியாது! அதனால உங்கப்பாவுக்கு, தாத்தாவுக்குன்னு எல்லாருக்கும் டிரஸ் வாங்கி கொடுத்தேன்.”
“உதயா! இல்லடி நான் விளையாட்டா…” என்று லாலா சங்கடமாக இழுக்க
“எல்லாமே ஜோக் கிடையாது! விளையாட்டுப் பேச்சு கிடையாது, எது பேசினாலும் நான் பொறுமையா எடுத்துப்பேன் நினைக்காதீங்க”
பட்டென்று அவன் பேச்சை நிறுத்தினாள் உதயா.
“பொருள் வாங்கி கொடுத்தா அது பணத்தோட பகட்டைக் காட்டவோ இல்லை இம்ப்ரெஸ் பண்ணவோன்னு கிடையாது. எனக்கு விவரம் தெரிஞ்சு என் தாத்தா, பாட்டி நான் பார்த்ததில்லை. அதனால உங்க தாத்தா, பாட்டிக்கு செய்ய நினைக்கிறேன். அது தப்பா?”
உதய நிலாவின் கண்களில் துளிர்த்தது கண்ணீர்.
“உதயா! ப்ளீஸ்டி! நான் ஜஸ்ட் விளையாட்டா கேட்டேன். நீ இப்படி எடுத்துப்பன்னு எனக்குத் தெரியல. சாரிடி” என்றான்.
“இப்பவும் நீங்க பேசினது தப்புன்னு தோணல, நான் அதை தப்பா எடுத்துக்கிட்டேனு சொல்றீங்க?” என்ற உதயாவின் பேச்சில் லாலா திணறிவிட்டான்.
“அதான் தெரியாம பேசிட்டேன் சொல்றேன்ல, சும்மா அதையே பேசி டென்ஷன் பண்ணாத” என்று லாலா குரல் உயர்த்திட, உதயா அவனை பார்த்தாள். அமைதியான ஒரு பார்வை. அத்தோடு ஒன்றும் பேசாது வெளியே வந்துவிட்டாள்.
அவள் வெளியே வந்து பார்க்க, வசுந்த்ராவும் சித்ராவும் சமையலறையில் வேலையாக இருந்தார்கள்.
“எதாவது ஹெல்ப் பண்ணட்டுமாத்த?” என்ற உதயாவின் கேள்வியில் வசுந்த்ரா புன்னகையோடு திரும்பினாள்.
“லாலா என்ன பண்றான் மா?” என்று சித்ரா மருமகளைக் கேட்க,
“ரூம்ல இருக்காங்கத்த, கால் பேசுறாங்க” என்று பொய்யுரைத்தாள்.
“ஓஹ், சரி. போண்டா சுடுறோம், சட்னிக்குத் தேங்காய்த் துருவித் தரியா?” என்று சித்ரா கேட்க,
“ஓகேத்த” என்றபடி உதயா சமையல் மேடை மேல் இருந்த உடைத்து வைத்த தேங்காயை எடுத்தாள். தேங்காய் துருவ அரிவாள்மனை தேட, வசுந்த்ரா எடுத்துக் கொடுத்தாள்.
வசுந்த்ரா இரவு உணவுக்குச் சப்பாத்தி செய்ய, ஆளுக்கொரு வேலையில் வீட்டுப்பெண்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
அறையில் இருந்த லாலாவுக்கோ இப்போது மனது கேட்கவில்லை. உதயாவின் அதட்டல் பேச்சை விட, அவளின் அமைதியான கோபம் அவனை கவலைக்குள்ளாக்கியது.
“இருந்தாலும் அவளுக்குப் பொசுக்குனு கோவம் வருது” என்று மனதில் நினைத்தவன் வெளியே வந்தான். நடுவீட்டில் அவளைத் தேட காணவில்லை என்றதும், சமையல்கட்டுக்குள் பேச்சுக் குரல் கேட்டு வந்தான்.
“என்னடா?” என்று மகனைப் பார்த்து சித்ரா குரல் கொடுக்க,
“தண்ணி குடிக்க வந்தேன் மா” என்று லாலா சொன்னவன் ஓரவிழியால் மனைவியைப் பார்க்க, உதயா கொஞ்சமும் திரும்பவில்லை. அவள் கவனம் முழுவதும் தேங்காயில் தேங்கியிருந்தது. அதில் கொஞ்சமும் கணவனுக்குத் தர அவளுக்குப் பிரியமில்லை.
லாலா சிறிது நேரம் அங்கேயே பார்வையை அத்தனை திக்கிலும் சுற்ற, அவனது சித்தி வசுந்த்ரா,
“என்ன லாலா? நம்ம வீட்டு கிச்சனை சுத்திப் பார்க்காத மாதிரி பார்க்கிற?” என்று கேட்க, மெல்ல மெல்ல தண்ணீரை குடித்தவன் சட்டென்று திணறிவிட்டான். அவனுக்குப் புரையேறிவிட,
“பார்த்து டா லாலா” என்று வசுந்த்ரா சொல்ல, சமாளிப்பாக ஒரு சிரிப்பைத் தந்தவன், அப்படியே அவன் அறைக்குள் போய்விட்டான்.
தாத்தா வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் சாலையை வேடிக்கைப் பார்க்க, அப்பா ஏதோ கையில் சில கோப்புகளை வைத்து வேலையாக இருந்தார். லாலா அறைக்குள் சென்று அப்படியே மெத்தையில் சரிந்துவிட்டான். போண்டாவும் சட்னியும் செய்து முடிக்கவும், உதயாவை விட்டு லாலாவை அழைக்க சொன்னார்கள். உதயா அறைக்குள் வர, சட்டென்று எழுந்தவன்
“சாரி உதயாம்மா” என்றான்.
அவனுக்கு உதயாவின் நிராகரிப்பினைத் தாங்க முடியவில்லை. உதயா அதற்குப் பிரதியாக ஒன்றும் பேசாமல்,
“உங்களை சாப்பிட வர சொன்னாங்க” என்றாள்.
“ப்ச், உதயா…உதய நிலாஆஅ” என்று நீட்டி முழக்கியவன் அவளின் கையைப் பற்றினான். உதயா கொஞ்சமும் எந்த பிரதிபலிப்புமின்றி அப்படியே நின்றாள்.
“நான் விளையாட்டா சொன்னாலும் சொன்னது தப்புதான்! சாரி” என்றான் அவனும் அழுத்தமான பாவனையில்.
“ப்ச், விடுங்க. வந்து சாப்பிடுங்க” என்று உதயா சொல்ல
“சாரி சொன்னேன் டி” என்றதும்
“எனக்கு அப்படியெல்லாம் ஈசியா மறக்க மன்னிக்க முடியாது. அந்த பேச்சை விட்டு வேற பேசுங்க லாலா, வாங்க சாப்பிட போலாம்” என்று உதயா சொல்ல, லாலாவும் பெருமூச்சோடு எழுந்தவன் உதயாவைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். உதயா ஒரு நொடி தேங்கி நின்றவள் அமைதியாக அவன் அணைப்பில் நிற்க, பின்னிருந்தபடி முன்னே தலையை நீட்டியவன்
“சாரிம்மா” என்றான் மீண்டும்.
சிலரின் சுபாவம் அது! அவர்கள் சிரித்தால் உடனே சிரிக்க வேண்டும், அவர்கள் தவறு செய்து மன்னிப்புக் கேட்டாலும் உடனே மன்னித்துவிட வேண்டும். அவனுக்கு அது சிறு சொல்லாக தெரியலாம். ஆனால் அச்சொல் உதயாவை சிறுமைப்படுத்தினால் அவளால் சினம்கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு மனிதரும் வேறு, உணர்வும் வேறல்லவா?
பாசம் காட்ட அப்பா இன்றி, அதுவும் அவராக தேடிக்கொண்ட மரணம் மகள் மனதில் ஆறாத வடுவாக இருந்தது. அம்மாவும் கண்டிப்பை மட்டுமே காட்டியிருக்க, படித்து முடித்து அவர்களை தான் கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம், வருத்தமெல்லாம் ஏகமாக உதயாவுக்கு உண்டு.
பிரிந்தவர்களிடம் காட்ட முடியாத பிரியத்தை அவர்களின் சாயலில், வயதில் இருப்பவர்களிடம் காட்டி ஆறுதல்பட்டுக்கொள்ளவே விரும்புகிறது பிரியம் கொண்ட மனது. அன்பு எல்லா நேரமும் அச்சு அசலாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சில நேரம் சாயலில் கூட சந்தோஷப்பட்டுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. உதயா அப்பாவிடம் காட்ட நினைத்த அன்பினை, காட்டவியலாத அன்பினை யாரிடம் காட்டுவாள்?
ஆனால் அதெல்லாம் லாலாவுக்குப் புரியவில்லை. அவன் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை இப்படி எதையாவது பேச வைத்து விடுகிறது. ஒரு கெட்ட பழக்கத்தை விட என்ன செய்ய வேண்டும்? அதனை விட வேண்டுமா இல்லை விட நினைக்க வேண்டுமா?
அது முதலில் தவறு என்று உணர வேண்டும்! அதனை ஒத்துக்கொள்ள வேண்டும். ஒத்துக்கொண்டால் மட்டுமே திருத்திக்கொள்ள முடியும். லாலா அதை இன்னும் உணரவே இல்லை, அதை உணராமல் எதாவது ஒரு வகையில் உதயாவிடம் காட்டிவிடுகிறான்.
“ஓகே, நான் அப்புறமா சரியாகிடுவேன். நீங்க விடுங்க” என்று சொல்ல லாலாவும் அவளிடமிருந்து விலகி முன்னே நடந்தான்.
இரவு உணவு முடிய லாலா மொட்டை மாடியில் நடந்து கொண்டிருக்க, உதயாவும் உறங்க ஆயத்தமானாள். அப்போதுதான் கட்டில் சுவரில் இருந்ததை கவனித்தாள்.
பார்த்தவுடனே தானாக சிரிப்பு மலர்ந்தது. உதயா அறைக்குள் நுழையவும் லாலாவும் உள்ளே வந்தான். உதயாவின் சிரிப்பைப் பார்க்கவும் புன்னகை மலர்ந்தது. ஒருவரின் புன்னகை உங்களுக்குப் புன்னகைக் கொடுத்தால் அது பிரியத்தின் சமிக்ஞை தானே?
“இதை கண்டிப்பா எங்க சித்தப்பாதான் எழுதிருப்பாரு உதயா, முன்னாடி அவங்கதான் இந்த ரூம் யூஸ் பண்ணினாங்க.” என்றான் லாலா. சுவரில் கட்டில் பக்கம் இருந்த ஸ்விட்ச் போர்ட் அருகே, ‘வசு, ரஞ்சன்’ என்று இதயத்துக்குள் பென்சிலால் எழுதியிருந்தது.
“சித்தப்பாவா? மாமாவைப் பார்த்தா அப்படி தெரியலயே. அவங்க ரொம்ப ஸ்டிரிக்டான போலீஸ் ஆபிஸர் போல நினைச்சேன். ஆனா பேசும்போது நல்லாதான் பேசுறாங்க”
இயல்பான வாழ்க்கை அதுதானே? பிணக்குகளை எல்லாம் தூக்கித் திரிந்திட முடியாதே? மனதோரம் இருந்தாலும் அந்த நேரம் அதை மறந்துவிட்டு வேறு பேச்சைப் பேசினர்.
“அட எங்க சித்தப்பா ஒரு காதல் மன்னன்.” என்றவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.
லாலா சிரித்தால் அத்தனை கலையானவன். காதல் கொண்டவர்களின் சிரிப்பே தனி கலையும் கவிதையும்தானே? உதய நிலாவுக்கு மாலையில் வந்த சுணக்கம் மங்கி இரவில் கணவனின் சிரிப்பில் லயித்தாள்.
“என்னனு சொல்லிட்டு சிரிங்க பா” என்று சொல்ல
“அது எங்க சித்தப்பா இந்த வயசுல கூட இப்படி பண்ணிட்டு இருக்கார் நினைச்சா சிரிப்பா வருதுடி” என்ற லாலாவின் சிரிப்பின் லயத்தோடு பொருந்தாத சிரிப்பென்றாலும் உதயாவின் சிரிப்பும் லாளிதமாக இருந்தது.
“நம்ம கூட லவ் பண்ணினோம், இந்த சரோ சக்தி எல்லாம் பல வருஷ லவ் அவங்களாம் கூட இப்படி பண்ணினதில்லை. ஆனா இவரை பாரேன்” என்றவன் பார்வை சுவரில் நிலைத்திருந்தது.
“பண்ணினோமா அப்போ இப்போ பண்ணலயா?” என்று உதயா புருவம் உயர்த்திட
“அம்மாடி! உடனே அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. பண்றோம், போதுமா?” என்று லாலா சமாதானமாக பேசிட
உதயா சிரிப்போடு அவன் பக்கம் உட்கார்ந்தாள்.
“இன்னமும் லவ் பண்றதாலதான் இப்படி எழுதுறாங்க. சிலருக்குக் கிரிஞ்சா தெரியலாம், அண்ட் காதலோட ஆரம்பத்துல இருக்க பரவசத்துல எல்லாரும் இப்படி செய்வாங்கதான். அது ரொம்ப ரொம்ப சகஜம், ஆனா பதினைஞ்சு வருஷம் வாழ்ந்தும் அதே அன்போடு சின்ன சின்ன விஷயம் கூட இப்படி செய்றப்போ அது வெறும் பரவசமில்லை, பட்டாம்பூச்சி உணர்வில்லைனு தோணுது. சின்ன மாமா அத்தையைப் பெயர் சொல்லிக் கூப்பிடும்போதே தெரியும். அவ்வளவு அழகா சொல்லுவாங்க. மாமா எல்லாம் ஹேய் இங்க வா போ சொல்றாங்க, தாத்தா அம்மாடி சொல்றார் இல்ல..” என்று உதயா கேட்க
“எஸ் எஸ். சித்தப்பா தான் காதல் மன்னன்னு சொல்லிட்டேனே. அவராலதான் நான் காதல், லவ்ன்ற வார்த்தையெல்லாம் முதல்ல தெரிஞ்சுக்கிட்டேன். பக்கத்து வீட்ல இருந்த சித்தி பார்த்த ஒரு நாள்ல எங்க வீட்ல வந்துட்டாங்க. அதெல்லாம் நினைச்சா…” என்று இழுத்தவன்
“நீ சொல்ற மாதிரி பரவசம் மட்டும் கிடையாது அப்போ சரியான பட்டாசானா ரிலேஷன்சிப் அவங்களோடது. அதுக்கு நம்ம சில வருஷம் பின்னாடி போய் பார்க்கணும்” என்று சினிமா பாணியில் வசனம் சொன்னவன் வசுந்தரா சித்ரஞ்சனின் காதல் கதையை சொன்னான்.
சித்ரஞ்சனின் காதல் கதையாக தொடங்கியது எப்படி இருவருக்குமான காதலாக மாறியது என்பதை லாலா சொன்னான். அவர்களின் கட்டாயத் திருமணம், வசுந்த்ராவின் மன நிலை, சரோஜினி கல்யாண சமயத்தில் உண்மை தெரிந்தது, லாலா அதனை சக்தியிடம் சொன்னது என்று அத்தனையும் சொல்ல,
“வாட்? சின்ன மாமாவா அப்படி செஞ்சாங்க?” என்று அதிர்ச்சியானாள் உதயா.
“பார்த்தியா? நீயே இவ்வளவு ஷாக் ஆகுற? நான் எவ்வளவு ஆகியிருப்பேன். அதுவும் இந்த சக்தி பய கிட்ட அவ்வளவு நாளும் எங்க சித்தப்பாவுக்காக அப்படி சண்டை போடுவேன். அவரை விட்டுக்கொடுக்க மாட்டேன். அவர் அப்படி பெர்ஃபார்ம் பண்ணியிருக்கார். ஆனாலும் எங்க சித்தி அவரை சும்மா எல்லாம் விடல. நல்லா டின் கட்டியிருக்காங்க போல.” என்று லாலா சொல்ல, உதயா இந்த விசித்திர கதையை வினோதமாக கேட்டாள்.
“அதுவும் ஒரு படத்துல உள்ள மொக்க ஐடியாவ ஃபாலோ பண்ணியிருக்கார்..” என்று இன்னும் சிரிக்க, உதயாவுக்குப் பெரிதாக உறவுகள் இல்லை. அப்பா இல்லாத வீட்டில் உறவுகள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் தானே? அதுவும் பெண்பிள்ளை இருந்தால் மறந்தே விடுவார்கள். அப்படித்தான் உதயாவின் உறவுகளும்.
இருந்தாலும் உதயாவுக்குக் காதலேயின்றி எப்படி வசுந்த்ரா ஏற்றார் என்ற கேள்வித் தோன்றியது. ஆனால் அவளுக்கு அது தேவையில்லாதது என்பதால் அதனை அப்படியே விட்டாள்.
எப்படியோ சித்தப்பாவின் கதையை சொல்லி லாலா அன்றைய இரவில் உதயாவின் கோபத்திலிருந்து தப்பித்துவிட்டான். அடுத்த நாள் உதயா சித்ரஞ்சனை பயம் கலந்த பார்வையில் பார்க்க, சித்ரஞ்சனுக்கு அந்த பார்வை புரியவில்லை. வசுந்த்ராவுமே அதை கவனித்தாள். அன்று உதயாவிற்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
மாலை நேரம் சரோஜினியிடம் வசுந்த்ரா உதயாவின் பார்வை மாற்றத்தை சொல்ல, சரோ அண்ணியிடம் கேட்டுவிட்டாள்.
“அது உங்க சித்தப்பா கதையை உங்கண்ணா சொன்னாங்க சரோ. அதான் அவங்களைப் பார்த்தா பயமா இருந்தது” என்றதும் சரோஜினி சிரித்தே விட்டாள். வசுந்த்ராவிடம் காரணம் சொல்ல, அவள் கணவனிடம் முறைத்தவண்ணம் சொன்னாள்.
சித்ரஞ்சன் பார்வை லாலாவை வலை வீசித் தேடியது. லாலாவை அழைக்க,
“என்ன சித்தப்பா?” என்று வந்தவனின் தோளை வலிக்கும்படி அழுந்த பற்றினான்.
“வலிக்குது சித்தப்பா? எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்று கேட்க
“ஏண்டா ராஸ்கல்? என் இமேஜை வீட்ல கெடுத்தது பார்த்ததுனு மருமக கிட்ட என்னடா சொல்லி வச்ச?” என்று திட்ட
“அதுவா சித்தப்பா, நேத்து எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை. நைட் ரூம் போனப்போ நீங்க ஹார்ட்டுக்குள்ள எழுதியிருந்தது பார்த்தோம். அதான் அவளை நார்மலாக்க உங்க கதையைப் பேசி சரி கட்டினேன்” என்றதும்
“ஏண்டா பரதேசி! உனக்கு உன் பொண்டாட்டியை சமாதானம் பண்ண என் கதைதான் கிடைச்சதா?” என்று லாலாவின் காதைத் திருகினான் சித்ரஞ்சன். அதன்பின் சித்ரஞ்சன் பேசியதில் லாலாவுக்கு அவன் தவறு புரிய, அதனை சரி கட்டுவதற்குள் சித்ரா இன்னும் பிரச்சனையை இழுத்துவிட்டார்.
error: Content is protected !!