Skip to content
Post Views: 2,358
வேளை 15
அடுத்த ஒரு மாதமும் லாலாவுக்கு வேகமாக ஓடியது. உதயா ஏழாவது வானத்தில்(மிகவும் உயர்ந்த மகிழ்ச்சி நிலை) இருந்தாள்.
Advertisement
லாலா அவளோடு எல்லா வகையிலும் நெருக்கமாக இருந்தான். அவள் அதிகமாக எதிர்ப்பார்த்த அருகாமையை அவளுக்குத் தந்திருக்க, அதற்குமேல் அவளுக்கு என்ன வேண்டும்? உதயநிலா முழு வெண்ணிலாவாக இருந்தாள்.
அதற்காக சண்டைகள் இல்லாமல் இல்லை. சிறு சிறு பூசல்கள் எட்டிப்பார்த்தாலும் உதயா அவளது பொறுமையாலும் பக்குவத்தாலும் அதனை எட்ட நிறுத்தினாள். அன்றும் அப்படியான ஒரு நாள்.
Advertisement
Advertisement
“ஏன் லாலா டிரஸ் மாத்துனீங்க? நம்ம காய்கறி, க்ராசரி எல்லாம் வாங்கணும்னு சொன்னேன் தானே?” என்று கேட்க,
“ப்ச், டயர்டா இருக்கு உதயா. பேசாம ஆர்டர் போடு” என்று அவன் கட்டளையிட, உதயா மறுத்தாள்.
Advertisement
“அது ரொம்ப காஸ்ட்லி, ஒவ்வொரு பொருளுக்கும் அஞ்சு பத்துனு ஏத்தி விக்குறாங்க. நீங்களும் க்ளாஸ் மட்டும்தானே போறீங்க, வாங்க நம்ம சேர்ந்து வெளியே போனா சேஞ்சா இருக்கும்” என்று அழைக்க,
“எனக்குக் காய்கறியெல்லாம் வாங்கி பழக்கமில்லை உதயா. எங்க வீட்ல எல்லாம் எங்கம்மா, ஆத்தா வாங்குவாங்க. அப்படியே கடையில போய் வாங்கினாலும் எங்க தாத்தாவோ அப்பாவோ போவாங்க. நான் ரொம்ப போனதே இல்லை. எனக்குப் பார்த்து வாங்க தெரியாது” என்று காரணம் சொன்னான்.
உதயாவுக்கு அய்யோடா என்றானது.
“மிஸ்டர். லாலா லஜபதி ராய்! நான் மட்டும் காய்கறி வாங்குறதுல டிகிரி வாங்கியிருக்கேனா? எனக்கும் எங்கம்மாதானே வாங்கிட்டு வந்திருப்பாங்க. அப்புறமும் ஹாஸ்டல்ல தானே இருந்தேன். ரெண்டு மூணு தடவ போய் வாங்கிப் பார்த்தா தெரியப்போகுது”
“வீட்ல நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பேன் டி, ஏன் டி இம்சை பண்ற? எனக்கென்ன உன்னை மாதிரி சட்டர்டே சண்டே லீவா?” என்று எரிச்சல்பட்டான்.
“வேற எங்க நம்ம போறோம்? இப்படி ஒன்னா போனாத்தானே உண்டு?” என்றவள்,
“சரி போங்க, நானே போறேன்” என்று உதயா காய்கறி, மளிகை வாங்க தேவையான பைகளை எடுக்கவும்,
“நீ எப்படி அவ்வளவும் தூக்கிட்டு வருவ, நானும் வரேன்” என்று உடன் வரவும் உதயாவின் முகம் பிரகாசமானது.
அந்த முகத்தின் பிரகாசத்திற்காகவே லாலாவும் வந்தான். அவனுக்காய் இந்த யோசனைகள் எல்லாம் வந்ததே இல்லை.
யோசித்துப் பார்த்தால் இருவருக்கும் ஒரே வயது. ஆனாலும் உதயாவிற்குப் பக்குவமும் பொறுப்பும் அதிகம் என்று தோன்றும். கடைக்குப் போய்விட்டு வந்தபின் உதயா எல்லாவற்றையும் அதனதன் இடத்தில் வைத்தாள். ஒவ்வொரு டப்பாவிலும் என்ன இருக்கிறது என்று ஸ்டிக்கர் ஓட்ட,
“உனக்கு எப்படி எல்லாம் தெரியுது? கரெக்டா திங்க்ஸ் எல்லாம் எழுதிட்டு வந்து வாங்குற?” என்று பாராட்டாகவும் கேள்வியாகவும் அவன் கேட்க,
“எங்க நானே மறந்து மறந்து இப்போதான் தோணும்போதே எழுதி வைக்குறேன். நம்ம வீட்டுக்கு நம்ம ரெண்டு பேரும்தானே செய்யணும்” என்று சொன்னவள் மளிகை சாமான்களில் தேவையானவற்றை டப்பாவில் நிரப்பியவள் மீதியை அதற்கென இருக்கும் பெரிய டப்பா ஒன்றில் வைத்தாள்.
காய்கறிகளை தனித்தனியாக எடுத்து சுத்தம் செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தவள் லாலா டீ கேட்கவும் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவளுக்கும் எடுத்துக்கொண்டவள் அவனோடு பால்கனியில் வந்தமர்ந்தாள்.
‘இவ மட்டும் எப்படி இவ்வளவு வேலை செஞ்சும் டயர்டா எனக்கா நெவர்னு இருக்கா?’ என்று ஆராய்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் அவன் பார்க்க, உதயா புன்னகையோடு கணவனைப் பார்த்தாள்.
“எப்படி டி டயர்டாகாம இவ்வளவு வேலை செய்ற?”
“எப்படியும் நம்மதானேங்க செய்யணும்? உங்களோட பேசிட்டு செய்றதால பெருசா கஷ்டமா இல்லை” என்றாள் இன்னும் புன்னகையோடு.
லாலாவிற்கு அந்த நிமிடங்கள் மிகவும் உவப்பானவை. லாலாவை அவனுக்காக கொண்டாடும் ஒருத்தி அவன் மனைவி. அவன் வீட்டினர் அவனை பெரிதாக ஒதுக்கியதில்லை என்றாலும், தாத்தா, அப்பா என்று கட்டுப்பாட்டில் வளர்ந்த காளை கன்று அவன்.
வயல் வேலை, வெளி வேலை ஆண்கள் செய்தும், சமையலும் அது சார்ந்தவையும் பெண்கள் செய்தும் பார்த்தவன். அவன் நண்பன் சக்திவேல் அவன் அம்மாவுக்கு வேலை செய்து கொடுப்பதைப் பார்த்தால் கூட, அவர்கள் வீட்டில் பெண் இல்லை அதனால் செய்கிறான் என்று நினைத்தானே தவிர, அம்மாவின் வேலைகளில் நாமும் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.
வானத்தில் வட்டமிட்ட பறவைகளைப் பார்த்தபடி, மிகவும் உணர்ச்சிகரமான குரலில்,
“உங்களுக்குத் தெரியுமா லாலா? இந்த வீடு எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். எங்க வீட்ல நானும் அம்மாவும் மட்டும்தான், அதிலயும் அதிகமா நான் மட்டும்தான். எங்கம்மாவுக்குத் தூங்குறதுக்கான இடம். மத்தபடி அந்த வீட்ல எங்களுக்குப் பெருசா ஞாபகங்கள் இல்லை. வாழ்றதே போராட்டமா இருக்கும்போது ஞாபகங்கள்னு ஒன்னு இல்லாம போயிடும் போல”
“ஆனா இந்த வீடு அப்படியில்லை. நம்ம ரெண்டு பேருக்கும் முதல் வீடு, எனக்குப் பிடிச்ச மாதிரி, நமக்குப் பிடிச்ச மாதிரி ஒவ்வொன்னா வாங்கிக்கிறோம். நீங்க என் கூட இருக்கீங்க. சந்தோஷம், அழுகை, தனிமை, இனிமை இந்த கொஞ்ச நாள்லயே இந்த வீட்ல அவ்வளவு உணர்வுகள்” என்றாள் கரகரத்த குரலில்.
லாலா அவளின் கரத்தைப் பற்றிக் கொடுத்தான். அவர்கள் பேசிக்கொண்டே டீ குடிக்க லாலாவின் அலைப்பேசி சத்தம் போட்டது.
“எங்கம்மா” என்றபடி எடுத்துப் பேசியவன்,
“அடுத்த வாரம் வரோம்மா. கவர்மெண்ட் ஹாலிடே’ல சோ லீவ் கேட்டிருக்கேன். வரேன், நீதான் கூப்பிட்டா இங்க வர மாட்டேங்குற” என்று சலிக்க,
“ஆமா, உன் ஆத்தாவும் உங்கப்பாவும் என்னை அனுப்பிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க. சித்ரா சித்ரான்னு ஏலம் போடாம உங்கப்பாவுக்குப் பொழுதே போகாது” என்று வழக்கம்போல் புலம்பினார் சித்ரா.
அவர்கள் பேசட்டும் என்று உதயா வேடிக்கைப் பார்த்தபடி தேநீரைப் பருகினாள். உதயா லாலாவிடம் அலைப்பேசியைக் கேட்க, அவனும் ஸ்பீக்கரில் போட்டுக் கொடுத்தான்.
“அத்த, எப்படி இருக்கீங்க?” என்று உதயா நலம் விசாரிக்க,
“ஓஹ், இப்போதான் உனக்கு அதை கேட்க நேரம் கிடைச்சதோ. நல்லா இருக்கேன்” என்று இழுத்தார்.
உதயாவின் பிரகாசம் அப்படியே ஆடி தள்ளுபடியும் அமேசான் ஆஃபரும் போல் காணாமல் போனது.
“இல்லத்த, ஆபிஸ்ல கொஞ்சம் அதிக வேலை. நைட் வர லேட்டாகிடுது” என்று உதயாவும் சமாளிக்க,
“மாமியார் மோட் ஆன்” என்று முணுமுணுத்தான் லாலா.
உதயா கண்டிப்பாக பார்க்க, “சரி சரி ஊருக்கு வந்து ஒரு மாசம் மேல ஆகுது. ஒழுங்கா லீவ் போட்டு வர வழியைப் பாரு. லீவ் இல்லைனு சொல்லி என் புள்ளையையும் பிடிச்சு வச்சுக்காத” என்றார்.
உதயா எந்த எதிர்ப்பேச்சும் பேசாமல் அமைதியாக பேசி வைத்தாள்.
“நீ பிடிச்சு வச்சுக்க நான் என்ன கொழுக்கட்டையா?” என்று கேட்ட லாலா
“எங்கத்தா எங்கம்மாவை கொஞ்சம் அதட்டிப் பேசும்போது மாமியாரா எங்கம்மாவை கொடுமை பண்ற மாதிரி தோனும். இத்தனைக்கும் எங்காத்தா அவ்வளவு வேலை செஞ்சு கொடுப்பாங்க எங்கம்மாவுக்கு. அதனால அவங்க மாமியார் ஆனா ரொம்ப நல்ல மாமியாரா இருப்பாங்க நினைச்சேன் உதயா” என்றான் ஆற்றாமையோடு.
“உங்கம்மாவை விட மோசமான மாமியார்லாம் இருக்காங்க. நான் என் ஆபிஸ் கொலிக்ஸ் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவங்களுக்கு உங்க மேல ரொம்ப பாசம், அதான் பொசசிவ்நெஸ்” என்று புரிதலோடு பேசியவளை தோளோடு சேர்த்தணைத்தான்.
“ஆனாலும் அம்மாவையும் பொண்டாட்டியையும் பேலன்ஸ் பண்றது ரஷ்யா யூஎஸ்’ஐ பேலன்ஸ் பண்ற இந்தியா மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ ஏதோ புரிஞ்சு நடந்துக்கிற, இல்லைன்னா என் கதி” என்று சிரித்தான்.
உதயாவின் அந்த பொறுமைக்கும் புரிதலுக்கும் ஆயுள் எத்தனை காலம் என்று தெரியவில்லை.
லாலாவும் உதயாவும் அந்த வார விடுமுறையில் ஊருக்குச் சென்றனர்.
மகன் வரவும் சித்ராவின் உபசரிப்பு தடபுடலாகவே இருந்தது. எப்போதுமே அவர் அப்படித்தான், ஊரிலிருந்து லாலா வரும்போது கூடுதல் உற்சாகத்தோடு இருப்பார். வாஞ்சிநாதனும் திலகரும் அவன் படிப்பை விசாரிக்க, சித்ராவும் அஞ்சம்மாவும் அவன் வயிறைக் கவனிப்பார்கள்.
அந்த முறையும் அப்படியே. சித்ரஞ்சன் இப்போது பணி மாற்றலாக சில மாதங்கள் சிறப்புப் பணியின் காரணமாக சென்னைக்கு இரு தினங்கள் முன் சென்றான்.
“அண்ணி, இந்தாங்க பூ” என்று சக்தி வீட்டின் காம்பவுண்ட் சுவர் பக்கம் நின்றவண்ணம் புன்னகையோடு பூவை நீட்டினாள் சரோஜினி.
“தேங்க்ஸ் சரோ” என்றபடி பூவை உதயா வாங்கிகொள்ள,
“அண்ணி, இன்னிக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு. அரை நாள்ல வந்துடுவேன். பார்ப்போம்” என்று சொல்லி சரோஜினி சென்றுவிட, சசிகலாவும் காலையில் தண்ணீர் பிடிக்கும்போது உதயாவை விசாரித்து சென்றார்.
மாலை நேரம் உதயா, சரோஜினி இருவரும் அந்த தெருவில் நடைபயின்றனர். இருபக்கமும் வயல்கள் சூழ்ந்த பகுதி. பின்பக்கம் வயல்கள் இருக்க, முன்பக்கம் வீடுகள். அந்த தெருவில் எண்ணினால் ஐந்தாறு வீடுகள் வரும். அங்கிருந்து இடப்பக்க திருப்பத்தில் வரிசையாக வீடுகள். வலப்பக்க சாலை அடுத்த ஊருக்கான வழி. நேர் சாலை இன்னொரு ஊருக்கான வழி. வலப்பக்க சாலையோரம் சின்னதாக வாய்க்கால் ஓடும். மேட்டூர் அணைத்திறக்கும்போது அந்த வாய்க்கால் நிரம்பிவிடும்.
“ஹேய் சரோ, போன தடவ வந்தப்போ தண்ணி இல்ல, இப்போ இருக்கு” என்று அந்த வயல்வெளிகளின் ஓரத்தில் சிறு ஓடைப்போல் ஓடிய தண்ணீரைக் கண்டு ஆர்ப்பரித்த துள்ளலோடு உதயா சொல்ல,
“இந்த மாசம் ஆத்துல தண்ணி திறந்துட்டாங்க அண்ணி, அதான் இந்த வாய்க்கால்ல தண்ணி” என்றாள் சரோஜினி.
கொல்லைக்காட்டின் காற்று இரு பெண்களையும் கொள்ளைக் கொண்டு போனது. சாலையோரம் அங்காங்கே தென்னை மரங்களும், பனைமரங்களும் உயர்ந்து வளர்ந்திருந்தன.
அது சிற்றூர்களுக்குச் செல்லும் சாலை என்பதால் பெரிதான வாகனப்போக்குவரத்தும் இராது.
“இந்த ரோட்லதான் நானும் லாலாவும் சின்ன வயசுல பனைவண்டி ஓட்டினோம். விளையாடுவோம்” என்று அந்தாள் ஞாபகங்களை சொல்லியபடி சரோஜினி நடந்தாள்.
வெள்ளாமை முடிந்து புற்கள் நிரம்பி உழுவதற்காக காத்திருந்த நிலத்தில் ஆடுகளும், மாடுகளும் மேய்ந்தன. நடமாடும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போல பெண்கள் எல்லாம் ஊரின் முக்கிய செய்திகள், சொந்த கதைகள், சொந்தங்களின் கதைகள் என்று எல்லாவற்றையும் பகிர்கின்ற வலைத்தளம் அந்த இடம்.
அந்த மூன்று பக்கம் விரியும் சாலைகளில் ஆடு, மாடுகள் வளர்க்கும் பெண்கள் எல்லாம் அங்கேதான் குழுமியிருப்பார்கள்.
ஆடுகளும் மாடுகளும் புற்களைத் தின்று அசைப்போட, இவர்கள் கதைப்பேசுவார்கள்.
“இவ்வளவு ஆடு, மாடு நிக்குது. எல்லாம் அவங்களோடதா?” என்று உதயா ஆடுகளை குச்சியை வைத்து ஒரு பக்கமாக ஓட்டிய பெண்மணியைப் பார்த்துக் கேட்க,
“இல்ல இல்ல அது சாவித்ரி பெரியம்மாவோட ஆடுங்க. அந்த பெரியம்மா கொல்லக்காட்டு செய்தியை எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க, அந்தக்கா நின்னுட்டு இருக்கவும் விரட்டிவிடுறாங்க”
“செய்தி சொல்வாங்களா?”
“காசிப் பேசுவாங்க சொன்னேன் அண்ணி. எங்க ஊரோட டிவிட்டர் இதுதான். லைக், ஷேர், ரீடிவிட் எல்லாம் பண்ணுவாங்க, ஆம்பளைங்களுக்குக் குளத்தாங்கரை, டீக்கடை, பாலத்துக்கட்டை” என்றதும் சென்னையில் வளர்ந்த உதயாவுக்குக் கிராமம் பிடித்திருந்தது.
எப்போதும் இரைச்சல், கரைச்சல் என்று இருக்கும அவள் சென்னை பரபரப்பிலே இயங்கிக்கொண்டிருக்க, இந்த ஊர் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டாள்.
ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிச்சென்ற ஒரு பெண்மணி சரோஜினியிடம்,
“யாருடி இது? உங்கண்ணியா?” என்று கேட்க,
“எங்கண்ணிதான் அத்த” என்றாள்.
உதயாவும் சம்பிரதாயமாக புன்னகைக்க,
“என்னடி உங்கண்ணியும் அண்ணனும் வந்திருக்காங்க? எதாவது விசேஷமா?” என்று கேட்க,
“லீவ் அதான் வந்தோம்” என்றாள் உதயா.
அவளுக்குச் சட்டென்று அவர் சொன்னதின் உட்பொருள் புரியவில்லை.
“அதில்லம்மா சும்மாத்தான் இருக்கியா?” என்று அந்த பெண்மணி கேட்க, சரோஜினிக்கு சுள்ளென்றது. உதயாவோ,
“இல்லை சென்னையில வேலை பார்க்கிறேங்க” என்றாள்.
“அடப்போம்மா, ஏன் டி சரோ உனக்கெதும் விசேஷமில்லையா?” என்று கேட்க, சரோஜினி கடுப்பாகிவிட்டாள்.
“விசேஷத்துக்கு என்ன? தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாம் வருதுதானே?” என்று நக்கலாக பார்க்க,
“என்னடி கிண்டலா?” என்று கேட்க
“இல்லையே, எனக்கு விசேஷம்னா அதான்” என்று நறுக்கென்று கூறியவள்,
“வாங்கண்ணி” என்று உதயாவோடு திரும்பி நடந்தாள்.
அந்த வனஜா வீட்டிற்குச் செல்லும் வழியில் சசிகலாவிடம் சரோஜினியைப் பற்றி குறைசொல்ல, சசிகலா சரவெடியானார்.
error: Content is protected !!