Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சொல்லி விடு வெள்ளி நிலவே

சொல்லி விடு வெள்ளி நிலவே – 12

“ரித்து.. அப்பாக்கு.. அப்பாக்கு  ஹார்ட் அட்டாக்காம். ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம். என் மாமா போன் பண்ணினார்.

அவர் வந்துட்டு இருக்கார். கூட இப்ப பாபு மாமா தான் இருக்காராம். நான் அம்மாவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போறேன். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல! ஒரே பயமா இருக்கு ரித்து!” மானு போனில் பதட்டமாக சொன்னாள்.

“பயப்படாதே குட்டிமா, அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. நீ ஆன்டிய கூட்டிட்டு போ. நான் நேரா அங்க வந்துடறேன்! தைரியமா இரு!” என்று சொல்லி விட்டு,  “எந்த ஹாஸ்பிட்டல்?” என்று மேலும் விவரம் கேட்டுக் கொண்டான்.

 அடுத்த சில நிமிடங்களில் அவன் ஹாஸ்பிட்டலில் ரிசப்சனில் விபரம் கேட்டு விட்டு மானு வருவதற்கு காத்துக் கொண்டிருந்தான்.



Advertisement

அவளும் அவள் அம்மா பாமாவும் வேகமாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்!

உள்ளே இருந்து வெளியே வந்த பாபு அண்ணா, மானுவைப் பார்த்து விட்டு, “வா குட்டிமா, பயப்படாதே! அம்மாவை பத்திரமா பாத்துக்கோ. உள்ளே  டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க. உன் மாமா சிவா அண்ணன் கேரளா சவாரி போய்ட்டு ரிட்டர்ன் வந்துட்டு இருக்காரு. பாலக்காடு க்ராஸ் பண்ணிட்டார்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்!” என்றவர் அருகில் நின்று கொண்டிருந்த ரித்துவை அப்போது தான் கவனித்து விட்டு,

Advertisement

 “தம்பி, நீங்க எப்படி இங்க? நல்ல நேரத்துல தான் தம்பி நீங்க இங்க வந்தீங்க! கொஞ்சம் எங்களுக்கு துணையா இருக்க முடியுமா? குட்டிமா சின்ன பொண்ணு, பாமாவுக்கும் விவரம் பத்தாது!”

Advertisement

“கண்டிப்பா இருக்கேன் அண்ணே, என்ன ஆச்சு மானு அப்பாக்கு?” என்று கேட்டான்.

“ஹார்ட் அட்டாக் தம்பி! பஸ் ஓட்டிக்கிட்டு  இருக்கும் போதே நெஞ்சு வலி வந்துருக்கு! ஆனா வண்டிய எங்கேயும் இடித்து விடக் கூடாதுன்னு அவ்வளவு வலியோடவும் பத்திரமா பஸ்ஸை ஒரு ஒரு ஓரமா நிறுத்திட்டு தான் மயங்கி இருக்கார்!

பஸ்ஸில் இருந்த அத்தனை பேருக்கும் ஒரு ஆபத்தும் இல்லாம எந்த ஆக்சிடென்ட்டும் ஆகாம பாதுகாப்பா நிறுத்திட்டு தான் மயங்கி இருக்காரு, அந்த நேரத்துல கூட! நல்ல மனுசம்பா அவரு..” பாபு அண்ணா சொல்லிட்டு இருக்கும் போதே, டாக்டர் வெளியே வந்து விட, அவரை நோக்கி சென்று பாபு அண்ணாவும் ரித்துவும் “எப்படி இருக்காரு?” என்று கேட்க,

Advertisement

“சாரி. அவரை இங்க கொண்டு வரும் போதே பல்ஸ் ரொம்ப டவுனா தான் இருந்துச்சு. நாங்க எங்களால ஆன முயற்சி எல்லாம் பண்ணியும் அவர காப்பாத்த முடியல! சாரி! பார்மாலிட்டிஸ் முடிஞ்சு பாடிய தருவாங்க. வாங்கிட்டு போங்க”. என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.

இவர்கள் பேசுவதை தூர இருந்து கேட்டுக் கொண்டிருந்த மானு “அப்பா..” என்று கதறி அழுதுக் கொண்டே மடங்கி சரிந்தாள் மானு.

ஓடிப் போய் அவளைத் தாங்கிப் பிடித்தார்கள் பாபுவும் ரித்துவும்.

“குட்டிமா, அழாதம்மா.. தைரியமா இரு. நீயே இப்படி அழுதா, அம்மாவுக்கு யார் தைரியம் சொல்லுவா? அவங்களே ஒரு குழந்தை மாதிரி  தானே! அழாதடா..” பானு அண்ணா சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ரித்துவுக்கும் அதிர்ச்சி தான்! அவனும் அப்படியே ஒன்றும் சொல்லாது நின்று கொண்டிருந்தான்!

அதற்குள் வார்ட் பாய் ஒருவர் வந்து பாபு அண்ணாவை அழைக்க, “கொஞ்சம் பார்த்துக்கப்பா” என்று ரித்துவிடம் சொல்லி விட்டு அவர், அந்த வார்ட்பாயுடன் சென்றார்.

மானுவின் கைகளை அழுத்தமாக  பற்றிக் கொண்டு “குட்டிமா, நான் இருக்கேன் உன் கூட நீ தைரியமா இரு, உன் அம்மாவை பாரு. அப்படியே ஷாக் ஆகி அந்த ஜன்னல் கிட்ட போய் நின்னுக்கிட்டு இருக்காங்க. நீ போ, அவங்கள பாரு குட்டிமா”, என்று அவளை லேசாக அணைத்து ஆறுதல் சொன்னான் ரித்து.

“சரி” என்று அழுதுக் கொண்டே தலையை ஆட்டியவள், பாமா நோக்கி சென்று, “அம்மா” என்று உடைந்த  குரலில் அழைக்க, திரும்பினார் பாமா.

“அம்மா..” என்று மீண்டும் அழைக்க, அவருக்கு நடந்தது  நன்றாகவே புரிந்தாலும். அவருக்கு அழக் கூட தெரியவில்லை. பேயறைந்தது போல முகம் வெளுத்துப் போய் நின்று கொண்டிரருந்தார் அமைதியாக!

அவள் அருகில் போய் கையைப் பிடித்தவுடன், “பாத்ரூம் போகணும் குட்டிமா” என்றார் பாவமாக!

தள்ளி நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்து இதைக் கேட்டு விட்டு, ரெஸ்ட் ரூம் எங்கே என்று விசாரித்து வந்து, மானுவிடம் சொல்லி பாமாவை அழைத்துப் போக சொன்னான்.

அவள் சென்றவுடன், அதே டாக்டர் எதிர்பட, அவரிடம் சென்று மேலும் விவரம் கேட்டான் ரித்து.

“எப்படி டாக்டர், நல்லா இருந்த மனுஷன், அதுவும் இப்படி டுயுட்டில இருக்கும் போது கூட ஹார்ட் அட்டாக் வருமா?”

“நீங்க யாரு?”

“என்னோட மாமா தான் அவர்! ப்ளீஸ் டாக்டர் சொல்லுங்க”. என்றான் பணிவாக.

“அவருக்கு ஏற்கனவே பெயின் இருந்துருக்கு போல! சடனா ஏதோ ஒரு அதிர்ச்சியால கார்டியாக் அரெஸ்ட் வந்துருக்கு!  இங்க வரும் போதே அவர்  கொஞ்சம் க்ரிடிக்கல் ஸ்டேஜ் ல தான் இருந்தார்!” என்று சொல்லி விட்டு அவர் கிளம்பினார்.

திடீரென்று ஹார்ட் அட்டாக் வரும் அளவு அவருக்கு என்ன அதிர்ச்சி? ரித்துவுக்குள் கேள்விகள்!

அதற்குள் பாபு அண்ணா வந்துவிட, “எப்படி அண்ணா, எந்த  ரூட்டில் நேத்து ட்யூட்டி பார்த்தார்? எப்படி உங்களுக்கு தெரிஞ்சுச்சு?”

அவர் சொன்ன ரூட், மற்றும் நேரத்தைக் கேட்டவனுக்குள் அதிர்ச்சி!

ஒருவேளை தன்னையும் குட்டிமாவையும் சேர்த்து பார்த்திருப்பாரோ? அப்படியே பார்த்து இருந்தாலும் அவருக்கு கோபம் தானே வர வேண்டும்! உயிரை விடும் அளவு அதிர்ச்சி ஏன் வர வேண்டும்?

 அவனுக்குள் ஏகப்பட்ட குழப்பம்!

பாபு அண்ணா மேலும் பேசினார். “நீங்க எப்படி தம்பி இங்க வந்தீங்க? மணி அண்ணன் உன்கிட்ட பேசினாரா? உன்கிட்ட பேசணும்னு என்கிட்ட உன்னோட போன் நம்பர் கூட வாங்கினாரே!”

“என்கிட்ட பேசணும்னு சொன்னாரா? இது எப்ப?”

“ரெண்டு நாள் முன்னாடி தான்! உங்க மாமா கூட  பாங்கில் வேலைப் பார்த்தவர் இப்போ நீங்க இருக்கும் அப்பார்ட்மெண்ட்ல இருக்காராம்.

அவரும் உங்க மாமாவும் தான் மணி அண்ணனைப் பார்த்து பேசினாங்களாம்!

உங்க மாமாவோட பிரன்ட் மணியண்ணன் பஸ்ல தான் வாரா வாரம் வருவாராம் வீக் எண்டுல!

அந்த வகையில மணியண்ணனுக்கும் தெரிஞ்சவர் தான்!

என்ன பேசினாங்கன்னு தெரியல! அத எல்லாம் அண்ணா என்கிட்ட சொல்லல!

உன் கிட்ட கொஞ்ச நாள் டிரைவரா இருந்தானே ஒரு கும்பகோணம் பையன், அவன் போன் நம்பர் கொஞ்சம் தர்றியான்னு கேட்டு வாங்கினார். அப்புறம் நான் அவர்கிட்ட பேசவே இல்ல.

 இன்னிக்கு அவர் கூட டுயுட்டில இருந்த கணேஷ் எனக்கும் பழக்கம் தான் அவர் தான், இந்த மாதிரி மணியண்ணனுக்கு நெஞ்சு வலி நாங்க அவர ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறோம், நீ அவங்க வீட்டுக்கு தெரியப்படுத்திடுன்னு சொன்னாப்ல! என்னமோ போங்க தம்பி. நேத்து நல்லா இருந்த மனுஷன் இன்னிக்கு இல்ல! என்ன மனுஷ வாழ்க்கையோ போங்க”. என்று அவர் ரொம்ப வருத்தப்பட்டு புலம்பினார்.

மானு பயந்து விடுவாள் என்று, பாபு அண்ணா அவருக்கு தெரிந்தவர்கள் மூலம், மார்ச்சுவரிக்கெல்லாம் உடலை எடுத்துப் போகாமல், அதன் வாசலில் வைத்தே அங்குள்ள ரிஜிஸ்டரை வெளியே கொண்டு வந்து என்ரி மட்டும் போட்டு விட்டு, மானுவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைப் பெற்றுக் கொண்டு வேனில் ஏற்றிக் கொண்டு வீடு வந்தார்கள்.

பின்னால் பைக்கில் தொடர்ந்து வந்தான் ரித்து.

மானுவின் மாமா சிவா இன்னும் வந்திருக்க வில்லை. பாபு அண்ணாவே அடுத்து செய்ய வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்.

பாமா இன்னும் அதிர்ச்சியில் வெறுமனே உட்கார்ந்து இருக்க, மானு கேவிக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்து, “மானு ரெஸ்ட் ரூம் எங்கே?” என்று கேட்டு, வழி  காட்ட சொல்லி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று, ரெஸ்ட் ரூமில் அவளையும் இழுத்துக் கொண்டு, ஆதரவாக அணைத்து ஆறுதல் சொன்னான்.

அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன், “இப்ப தான் குட்டிமா நீ தைரியமா இருக்கணும். உன் அம்மாவைப் பார்த்துக்கணும். அவங்க கூடவே இரு. யாரச்சும் விஷமம் பிடிச்ச பொம்பளைங்க இப்ப கூட அவங்கள வம்பு செய்யலாம்!

நீ அவங்க கூடவே இரு. நான் இருக்கேன் குட்டிமா, உன் அப்பா இடத்துல இருந்து நான் உன்னைப் பார்த்துப்பேன்! உன் ரித்து மேலே உனக்கு நம்பிக்கை இருக்கில்ல?”

“ம்ம். “ என்று விம்மிக் கொண்டே தலையாட்டினாள் மானு.

“அப்போ நீ எதைப் பத்தியும் பயபடாம, உன் அப்பாவை நல்லபடியா அனுப்பி வைக்கணும்!

நீ தான் பொறுப்பா இருந்து உன் அம்மாவை பார்த்துக்கணும்.

நான் இப்ப உள்ளே வந்து உன்கூட நிக்க முடியாது இல்லையா?

நான் இங்க தான் உன் எதிர்ல தான் நின்னுட்டு இருப்பேன்.

உன் ரித்து இங்க தான் இருக்கேன், எது வந்தாலும் நான் பார்த்துப்பேன்ன்னு நீ தைரியமா இந்த சிச்சுவேசனை க்ராஸ் பண்ணி வா!

உன் அப்பாவும் உன்னை விட்டு போக மாட்டார்.

 அவரும் இங்க தான் நம்ம கூடவே அரூபமா இருக்காருன்னு நினைச்சுக்கோ! என்று ஆறுதலாக பேசி அவளை விடுவித்தான்.

முகத்தை துடைத்து, தலை முடியை ஒதுக்கி விட்டு, “போ, எல்லோரும் வர ஆரம்பிச்சுடுவாங்க!”  என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு, அவனும் பாபு அண்ணாவுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு உதவியாக இருந்தான்.

கூடவே அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தாலும், அவன் மனது மானு அப்பாவின் சாவுக்கு காரணம் தேடிக் கொண்டிருந்தது!

நிச்சயம் ஏதோ வலுவான காரணம் தான் அவருக்கு மன அதிர்ச்சியையும் அதைத் தொடர்ந்த நெஞ்சு வலியையும் ஏற்படுத்தி அவர் உயிரை எடுத்திருக்கிறது!

நான் காரணமா? அல்லது என்னையும் குட்டிமாவையும் சேர்த்து கண்ட அதிர்ச்சியா? அல்லது அவன் வீட்டாரின் – முக்கியமாக அவனது மூன்றாவது மாமா சக்தியின் கைவரிசையா? யார் காரணம்? கேள்விகள் அவனைத் துளைத்துக் கொண்டு இருந்தன.

அவன் சந்தேகப்பட்டதும் சரி தான்!

மணியின் சாவுக்கு பின்னே அவன் மாமா சக்தியுடனான அவரின் சந்திப்பே முக்கிய காரணம்!

அவர் மானுவையும் ரித்துவையும் சிக்னலில் வைத்து பைக்கில் போவதைக் காணுவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான் அந்த சந்திப்பு நிகழ்ந்திருந்தது!

அவன் குடியிருக்கும் அந்த அப்பார்ட்மெண்ட்டிற்கு புதிதாக வந்த அவன் மாமாவின் கொலீக் ரமேஷ் தான் அதற்கு ஏற்பாடு செய்தது!

ரித்துவையும் மானுவையும் அடிக்கடி சேர்ந்து அவன் வீட்டுக்குப் போவதைக் கண்ட அவர், அவன் மாமா சக்திக்கு தெரியப்படுத்தி விட்டார!.

அதற்கு முன் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ரித்துவின் சொந்த ஊர் பற்றி எல்லாம் நன்கு விசாரித்து அவன் சக்தியின் தங்கை மகன் தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டே அவர் இதை செய்திருந்தார்.

உடனே ரித்துவிற்கு தெரியாமல் கிளம்பி வந்து மானுவைப் பற்றி விசாரித்தார்கள். கல்லூரியிலும் அவள் வீட்டு அருகில் இருப்பவர்களிடமும்!

அப்புறம் தான் தெரிந்தது, மணியின் பஸ்ஸில் தான் ரமேஷ் இங்கு ட்ரான்ஸ்பர் ஆகுமுன் வார விடுமுறைக்கு வந்து செல்வதில் பழக்கமான டிரைவர் என்பது!

பின் அவரே அவரது நண்பர் வட்டாரத்தில் மணியின் போன் நம்பரைப் பெற்று,  அவரிடம் பேசி, சக்தியுடன் சென்று பேசினார்.

சக்தி எடுத்த எடுப்பிலேயே மணியை கண்டபடி பேச ஆரம்பித்து விட்டார்!

“நல்லா கவர்மென்ட் வேலை தானே பார்க்கிற? அப்புறம் ஏன் பொண்ணை இப்படி பெரிய இடத்து பையனோடு பழக விட்டு வேடிக்கைப் பார்க்கிற? ஏன் கவர்மென்ட் சம்பளம் பத்தலையா?”

“என்ன பேசுறீங்க நீங்க? பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுறீங்க? கொஞ்சமாச்சும் நாகரிகமா பேசுங்க!

என்ன ரமேஷ் சார். உங்க நண்பர் என் கிட்ட பேசணும்னு சொன்னாருன்னு நீங்க சொன்னதால தான் நான் இங்க வந்தேன்!

என்ன இவர் எடுத்தவுடனே என் பொண்ணைப் பத்தி தப்பா பேசுறாரு? கொஞ்சம் கண்டிச்சு வைங்க. இல்லன்னா வேற மாதிரி ஆகிடும்!

நான் என் பொண்ணை ஒண்ணும் அப்படியெல்லாம் வளர்க்கல!

 முதல்ல நீங்க யாரை சொல்றீங்கன்னே எனக்கு புரியல!”

“என்ன புரியல! எங்க பையன் வீட்டில் கோச்சுகிட்டு கொஞ்ச நாள் ஸ்கூல் வேன் ஓட்டினான் தான்!

அதுக்காக எங்க அந்தஸ்துக்கு ஏணி வச்சா கூட எட்டாத உன் பொண்ணை கட்டி வைக்க முடியுமா?

நீ ரிட்டயர்ட் ஆகுற வர சம்பாதிக்கும் பணம் எங்களோட ஒரு மாச வருமானத்தை விட கம்மி தான் தெரியுமா?

எங்க வீட்டுல அவனைக் கட்டிக்க மூனு முறைப்பொண்ணுங்க இருக்கிறப்போ, போயும் போயும் உன் பொண்ணையா என் தங்கச்சி அவ பையனுக்கு கட்டுவா? தகுதி வேணும்யா அதுக்கு!”

“நீங்க பெரிய ஜமீன் பரம்பரையாவே இருந்துட்டு போங்க! அதுக்காக என் பொண்ணைக் கேவலப்படுத்துற வேலை வேண்டாம்!

காலேஜ்ல ஒண்ணா படிக்கிறப்போ இப்ப எல்லாம் ஆண் பெண் பேதமில்லாம தான் நண்பர்களா இருக்காங்க இந்த காலத்துப் பசங்க!

 அதுக்காக அவங்கள எல்லாம் காதலிக்கிறாங்கன்னு தப்பா நினைக்க கூடாதுன்னு உங்க அளவு படிக்காத எனக்கே தெரியுது! உங்களுக்கு தெரியாம போனது என் நேரம் தான்!

பாருங்க, நான் மறுபடியும் சொல்றேன்! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் என் பொண்ணு ஒரு நாளும் நடந்துக்கவே மாட்டா!

பிரண்டா நினைச்சு வேணுமின்னா பேசியிருந்துருப்பா! நான் அதையும் கூட வேண்டாம்னு சொல்லி கண்டிக்கிறேன்” என்று கோபமாக சொல்லி விட்டு வந்து விட்டார் மணி.

அங்கு அப்படி சொல்லி விட்டு வந்து விட்டாலும், அவருக்குள் ரொம்ப பதட்டம் இருக்க தான் செய்தது!

விவரம் இல்லாத மனைவி, வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை! ஒற்றை பெண்!

நானும் வேலை காரணமாக பெரும்பாலும் வீட்டில் இருப்பதே இல்லை!

முதலில் இந்த லாங் ட்ரிப் போகும் டுட்டியை மாற்றிக் கொள்ள வேண்டும்!

டவுன் பஸ் ட்ரிப் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு சிந்தனைகள் அவரைப் போட்டு பாடாய் படுத்தி கொஞ்சம் நெஞ்சு வலியை அப்போதே கொடுத்து தான் இருந்தன!

அவர்களோடு அவ்வளவு நம்பிக்கையாய் பேசி விட்டு வந்தவருக்கு, சிக்னலில் வைத்து ரிதுவையும் மானுவையும் நெருக்கமாக பார்த்தது கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்து இதயத்தைத் தாக்கி விட்டது!

அந்த சூழ்நிலையிலும் பஸ் பயணிகளின் பாதுகாப்பு கருதி வலியைத் தாங்கி கொண்டு பெரும்பாடுபட்டே பஸ்ஸை ஓரங்கட்டி நிறுத்தி விட்டி ஸ்டியரிங் வீலில் அப்படியே தலையை சாய்த்து மயக்கமானார் மணி!

பின் தான் கண்டக்டர் அவரை ஹாஸ்பிட்டல் தூக்கி சென்றதும் அங்கு அவர் உயிரை விட்டதும்!

யோசிக்க யோசிக்க ரித்துவின் சந்தேகம் கூடிக்கொண்டே போனது! தலைக்கு மேல் கோபம் வந்தது!

ஆனால் கொஞ்சம் நிதானித்தான்.

அது பற்றி மேலும் ஏதும் செய்ய இதுவல்ல நேரம்!

அப்படி அவர் தான் இதற்கு காரணம் என்று தெரிந்தால், இந்த ரித்து அவரை சும்மா விட்டுட மாட்டான்!

இப்போ குட்டிமாவின் அப்பாவின் காரியங்கள் நல்ல படியாக நடக்க வேண்டும்! மனதில் முடிவெடுத்தவன், பாபு அண்ணாவோடு போய் நின்று கொண்டான்.

பாமா பசி தாங்க மாட்டார் என்று அவ்வபோது டீ காபி ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டிருந்தான்!

அதற்குள் மானுவின் மாமா குடும்பம் வந்து விட்டது!

அதன் பின் அனைத்து சடங்குகளும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!

நல்ல முறையில் தன் இறுதி யாத்திரையை தொடங்கி விட்டிருந்தார் மானுவின் தந்தை!

அதன் பின் ரித்துவின் ஆட்டம் தொடங்கியது!

அவன்  அவன் மாமாவிற்கு மூக்குடைப்பு செய்ய எண்ணி செய்ய ஆரம்பித்த காரியங்கள், கடைசியில் யாரும் அறியாமல்  அவன் குட்டிமாவை திருமதி ரித்தீஸ் ஆக்கியதில் கொண்டு வந்து விட்டது!

யாருக்கும் தெரியாமல் என்றால், யாருக்குமே தான்! அதிலும் அவனின் குட்டிமாவிற்கு கூட தெரியாமல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!