Skip to content
Post Views: 3,092
அத்தியாயம் 27
‘ங்கியா..ங்கியா..’
Advertisement
“இதோ வரேன்.. ஜோ ஜோ..ஜோ..” என்று ஹாலில் இருந்த தொட்டிலில் கேட்ட அழுகுரலுக்கு விரைந்து சென்று ஆட்டி விட்டான் கதிர்.
ஐந்து நிமிடங்கள் ஆட்டவும் மெல்ல அழுகை சிணுங்களாக மாறி பின் அமைதியாகியது.
Advertisement
Advertisement
‘அப்பாடா’ என்று வந்து நீளிருக்கியில் அமர்ந்தான்.
‘ங்கியா…ங்கியா..’
Advertisement
“இதோ வரேன் மெதுவா அழு பாப்பா… உன் சத்தத்தை கேட்டு இன்னொன்னும் ஆரம்பிச்சிடபோது..” என்று முதலில் ஆட்டிய தொட்டிலுக்கு பக்கத்தில் இருந்த தொட்டிலில் கேட்ட அழுகுரலுக்கு விரைந்து சென்று ‘ரோ..ரோ..ரோ..’ என்று ஆட்டி விட்டான்.
நல்லம்மை வீராவின் மகள் தமிழினி ஒரு தொட்டிலிலும், வள்ளிமயில் வெற்றியின் மகள் மகிழினி ஒரு தொட்டிலிலும் தூங்கி கொண்டிருந்தனர்.
பாலுவும் கதிரும் மட்டும் தான் வீட்டில் இருந்தனர். மற்றவர்கள் அனைவரும் கல்யாண பட்டு எடுக்க கடைக்கு சென்றிருந்தனர்.
நல்லம்மையும் வள்ளிமயிலும் வீட்டில் இருப்பதாக தான் ஏற்பாடு…
“உங்களுக்கும் ஆசை இருக்கும் இல்ல அண்ணீஸ்.. நான் குழந்தைகளை பார்த்துகிறேன், நீங்க போயிட்டு வாங்க” என்று கதிர் தான் முன்வந்தான்.
இத்தனை பெண்களுடன் ஷாப்பிங் போவதற்கு டிமிக்கு கொடுத்து விடலாம் என்று நினைத்து.
“இரண்டு குழந்தைகளையும் எப்படி தம்பி பார்த்துப்பீங்க?”
“சின்ன குழந்தைகள் தானே.. நெறைய நேரம் தூங்கிட்டு இருக்க போறாங்க.. அது எல்லாம் நான் பார்த்துக்குவேன்”
‘அவ்வளவு நல்லவனா நீ’ என்று அனைவரும் அவனை பார்த்தனர்.
“எனக்கு படிக்கிற வேலை இருக்கு, நான் அண்ணன் கூட இருக்கேன். வேணும்னா நான் ஹெல்ப் பண்றேன். நீங்க போயிட்டு வாங்க” என்று பாலுவும் கதிருடன் நின்று கொண்டான்.
“அப்புறம் என்ன நானும் நண்டுவும் பார்த்துகிறோம், போயிட்டு வாங்க. சமாளிக்க முடியலைனா போன் பண்றோம் வந்துடுங்க.. சென்னை தானே” என்று கூறி அனைவரையும் அனுப்பிவிட்டான்.
அதிக நேரம் தூக்கத்தில் இருந்த குழந்தைகளை தான் கதிர் பார்த்திருந்தான்.
ஆனால் இன்று இருவரும் சித்தப்பாவை ட்ரில் வாங்கினார்கள். மாற்றி மாற்றி தொட்டில் ஆட்டி களைத்து விட்டான்.
“டேய்.. நண்டு எங்க டா இருக்க.. கொஞ்சம் வா டா.. அண்ணனால முடியல” என்று பாவமாக அமர்ந்து விட்டான்.
“கதிர் அண்ணே, ஒரு மணி நேரம் கூட குழந்தைகளை பார்த்துக்க முடியல… நாளைக்கு உங்க பாப்பா வந்தா எப்படி பார்த்திப்பீங்க?” என்று நக்கலாக கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தான் பாலு.
“அதை விடு.. இப்ப பசிக்குது டா..”
“பிரியாணி ஆர்டர் போடுவோம்.. “ என்று இருவரும் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு காத்துக்கொண்டிருந்தனர்.
குழந்தைகளுக்கான தாய் பால் எடுத்து பாட்டில்களில் வைத்து விட்டு சென்றிருந்தார்கள் பெண்கள்.
பாட்டில் மேலே மகிழினி தமிழினி என்று பெயர் எழுதி ஒட்டி வைத்திருந்தனர்.
ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு குழந்தைகள் விழித்து கொண்டு சிணுங்க தொடங்கினர். ஆளுக்கு ஒரு குழந்தையாக தூக்கி மடியில் வைத்து கொண்டனர்.
“டேய், நண்டு பால் கொடுக்க சொன்னாங்க டா.. அந்த கூடையில இருக்கு பாரு.. அதை எடு”
.
“எந்த பாப்பாக்கு எந்த பால் டா?”
“அண்ணி பெயர் எழுதி வச்சிருக்காங்க.. பாருங்க… இது மகிழினி.. இது தமிழினி.. பாருங்க” என்று காட்டினான்.
“ஆமா.. எந்த பாப்பா மகிழினி.. எந்த பாப்பா தமிழினி” என்றான் கதிர்.
இருவரும் முழித்தனர்…
இரண்டு குழந்தைகளும் ஒரே ஜாடையில் தான் இருந்தனர். ‘பாப்பா பாப்பா’ என்று கொஞ்சிவிட்டு சென்றுவிடும் சித்தப்பாக்களுக்கு தெரியவில்லை யார் பெயர் என்னவென்று.
“எப்படி அண்ணா கண்டு பிடிக்கிறது? இரண்டு பேரையும் நான் பாப்பான்னு தான் கூப்பிடுவேன்”
“நானும் அப்டி தான் டா..”
“இப்ப என்ன பண்றது?”
“போன் போட்டு கேப்போம்..”
“யாருக்கு போன் போடறது”
“யாருக்கு வேணா போடு.. என் பொண்டாட்டிக்கு மட்டும் போடாதே..”
பாலு தன் அம்மாவிற்கு தான் அழைத்தான். ஆனால் எடுத்தது கண்ணம்மை.
“என்ன நண்டு ப்ரோ.. சொல்லுங்க?”
அவள் குரல் ஸ்பீக்கர் போடாமலே கதிருக்கு கேட்டது.
“அம்மாகிட்ட கொடுங்க அண்ணி..”
“அண்ணி என்பது இன்னொரு அம்மா மாதிரி ப்ரோ… எதுவா இருந்தாலும் எங்கிட்டவே சொல்லுங்க ப்ரோ”
பாலு பாவமாக கதிரை பார்த்தான்.
தன் மனைவியை சமாளிக்க பாலுவால் முடியாது என்று புரிந்து, “கண்ணு.. சத்தம் போடாம நான் சொல்றதை கேளு” என்றான் மெதுவாக அலைபேசியை தன் கையில் வாங்கிக்கொண்டு.
உடனே கண்ணம்மை அங்கே அலைபேசியை ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டாள்.
“எந்த பாப்பாவுக்கு எந்த பாட்டில் பால்ன்னு பெரியம்மா கிட்ட கேட்டு சொல்லு கண்ணு”
“அய்யோ மக்கு போலீஸ்காரரே…. அதான் பாட்டில்ல பெயர் எழுதி ஒட்டிருக்கோமே?”
“பாட்டில் கண்டு பிடிச்சிட்டோம்.. ஆனா எந்த பாப்பா மகிழினி? எந்த பாப்பா தமிழினி?”
“அடப்பாவிகளா?” என்று மொத்த குடும்பமும் அலறிவிட்டது.
‘மெதுவா பேச சொன்னா.. ஸ்பீக்கர்ல போட்ருச்சு குட்டிச்சாத்தான்’ என்று பல்லை கடித்து கொண்டான் கதிர்.
அனைவரும் தலையில் அடித்துக்கொண்டனர்.
“பச்சை தொட்டில்ல தூங்கினது மகிழினி” என்றாள் நல்லம்மை.
“அண்ணி ரெண்டு பாப்பாவையும் தூக்கிட்டோம். எந்த பாப்பா பச்சை தொட்டில்ல இருந்து தூக்கினது? எப்படி தெரியும்?”
“அசிங்கப்பட்டார் போலீஸ்கார்… தன் சொந்த வீட்டில் தன் அண்ணன் மகள்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கும் போலீஸ் ஆபிசர்..” என்று செய்தி வாசிப்பதை போல பேசினாள் கண்ணம்மை.
அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.
“கதிரு, தமிழு பாப்பா மூக்கு நம்ம வீரா மூக்கு மாதிரி கொஞ்சம் நீளமா இருக்கும் பாரு.. “ என்றார் தெய்வா.
பாலுவும் கதிரும் இரு பாப்பா மூக்குகளையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர்.
“மம்மி ரெண்டு பாப்பா மூக்கும் சின்னதா அழகா தான் இருக்கு, வீரா அண்ணன் மாதிரி போண்டா மூக்கு எல்லாம் இல்லை” என்றான் கடுப்பாக கதிர்.
“டேய்..” என்று அலறினான் வீரா.
அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் கொஞ்சம் அதிகரித்தது.
“ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்கோங்க தம்பி.. நாங்க கிளம்பி வந்துடறோம்” என்றாள் வள்ளிமயில் கொஞ்சம் பதற்றமாக.
“அழுதா தோள்ல போட்டுட்டு நடங்க.. வந்துடறோம்” என்றார் சாலா.
“எதுக்கு பதட்ட படறீங்க.. அமைதியா இருங்க..” என்று பெண்களுக்கு சமாதானம் சொன்னார் முருகம்மை ஆச்சி.
“டேய் கதிர்.. காதுக்கு பின்னாடி மச்சம் இருக்கிறது தமிழு.. வலது காது.. காது தோடு போடுற பகுதி..பாரு” என்றான் முத்து இப்பொழுது.
கடுகளவு சிறிய மச்சம் இருந்தது தமிழினி காதினில்.
“இருக்கு அத்தான்.. என் கிட்ட தான் தமிழினி பாப்பா இருக்கு.. நாங்க பார்த்துகிறோம்.. நீங்க எல்லாம் மெதுவாவே வாங்க” என்றான் பாலு ஆர்பாட்டமாய் இப்பொழுது.
“தெய்வம் டாக்டரு நீ..” என்று கதிரும் கூறி அழைப்பை வைத்து விட்டான்.
பிறகு ஆளுக்கொரு பிள்ளையாக பாலை குடிக்க வைத்தனர்.
பாலை குடித்து முடித்ததும், பிள்ளைகள் அமைதியாக கை கால்களை ஆட்டி விளையாடினார்கள்.
கடைக்கு செல்லுவதற்கு முன், ஹாலில் பாய் விரித்து, அதன் மேலே மெத்தை போட்டு வைத்திருந்தனர். அதில் தான் படுக்க வைத்திருந்தார்கள் பிள்ளைகளை.
“வாண்ணே.. பிரியாணி வந்திடுச்சு .. சாப்ட்ருவோம்” என்றான் பாலு.
“இங்கனவே சாப்பிட்டுடுவோம்..” என்று இருவரும் தட்டில் பிரியாணி வைத்துக்கொண்டு அமர்ந்தனர்.
‘டர்ர்ர்ர்..’ என்று ஒரு சத்தம்.
“என்ன சத்தம் நண்டு? “
“பாப்பா பாத்ரூம் போயிருச்சு போல” என்றான்.
பக்கத்தில் இன்னொரு கூடையில் சுத்தம் செய்யும் டிஷ்யூ, டயப்பர் எல்லாம் இருந்தது. இருவரும் சேர்ந்து சுத்தம் செய்து டயப்பர் மாற்றி விட்டனர்.
பின் இருவரும் கை கழுவி சாப்பிட அமர்ந்தனர்.
‘டர்ர்ர்ர்..’ மீண்டும் அதே சத்தம்..
“இப்ப யாரு.. மூக்கு அழகியா?” என்று தமிழினி டயப்பர் மாற்றினார்கள்.
மீண்டும் சாப்பிட அமர்ந்தனர்.
“வீல்..” என்று அலறினாள் மகிழினி.
இருவரும் கலவரமாக பார்த்தனர். இரு குழந்தைகளுக்கும் நல்ல தலை முடி.. அவள் முடியை அவளே கையில் பிடித்து இழுத்துக்கொண்டு வலியில் அலறினாள்.
பின் பாலு அவள் கையை பிரித்து விட்டு, “அண்ணா கைக்கு குட்டியா க்ளோவ்ஸ் மாதிரி இருக்கும் பாருங்க.. அதை போட்டு விட்ருவோம்”
“பேசாம கடைக்கே போயிருக்கலாம் போலவே டா… இதுங்கள பார்த்துக்கறது இவ்வளவு கஷ்டம்ன்னு தெரியாம போச்சே..” என்று தலையில் துண்டை போட்டு அமர்ந்து விட்டான் கதிர்.
ஒரு வழியாக கையுறைகளை மாட்டி விட்டனர் சித்தப்பாக்கள் இருவரும்.
இப்பொழுது இரண்டு குட்டிகளும் தூக்கத்திற்கு கண்களை கசக்கியது.
“அண்ணா, முதல இருந்தா..” என்றான் பாலு விட்டால் அழுது விடுபவன் போல.
“தொட்டில் ஆட்டி விட்டா தூங்கிடுவாங்க.. அப்புறம் ஒரு மணி நேரம் ப்ரியா இருக்கலாம்.. வா” என்று தம்பியை தேற்றி இருவரும் ஆளுக்கொரு தொட்டிலை ஆட்டி விட தொடங்கினர்.
தூங்கிட்டாங்களா என்று தொட்டிலை பிரித்து பார்த்தால், பொக்கை வாய் திறந்து அழகாக சிரித்தனர் மகள்கள்.
வந்த பிரியாணியை கையால் தொட கூட நேரமில்லை இருவருக்கும். ஒரு வழியாக பிள்ளைகள் தூங்கவும், தொட்டில் பக்கத்திலே சித்தப்பாக்களும் தூங்கி விட்டனர்.
இவர்கள் விழிக்கும் முன் ஷாப்பிங் முடித்து அனைவரும் வந்து விட்டனர்.
இப்படி கதிரையும் பாலுவையும் கதறவிட்டு சிறப்பாக முடிந்தது கல்யாண ஷாப்பிங்.
ஆளுக்கொரு வேலையாக கல்யாண வேலைகள் ஜரூராக நடந்தது. முருகம்மை ஆச்சிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மட்டுமே அல்லவா, அதனால் பல வருடங்கள் சென்று பெண் பிள்ளை திருமணத்திற்கு ஜோராக தயாராகியது அவர்களது இல்லம்.
வீடு நிறைய சொந்த பந்தங்கள் கூடிவிட்டனர். சாலாவின் தம்பி குடும்பம் அவர்கள் பெற்றோர்களுடன் ஒரு வாரம் முன்பே வந்து விட்டனர்.
பெண் வீடு மாப்பிள்ளை வீடு என்று பாகுபாடின்றி இரு வீட்டினரும் சேர்ந்து வேலைகளை செய்தார்கள்.
செட்டிநாடு வழக்கத்தில் திருமாங்கல்யம் என்பது கழுத்தீரு என்று அழைக்கப்படும். அது பெரும்பாலும் அதிக எடை உள்ளதாக இருக்கும். முந்தைய கால கட்டத்தில் நூறு பவுனில் கூட செய்வர். பிறகு படி படியாக குறைந்து, இப்பொழுது பதினொன்று அல்லது பதினைந்து பவுன் என்ற அளவில் செய்கின்றார்கள். அதை எல்லா நாட்களும் அணிந்திருப்பது கிடையாது. முப்பத்தி ஐந்து தங்க சாமான்கள், இருபத்தி ஒரு மஞ்சள் நூல்கள் இணைந்த கயிற்றில் கோர்க்க பட்டிருக்கும்.
ஒவ்வொரு பெண்ணும் அவள் திருமணத்திற்கு பிறகு அவளது வளைகாப்பு, அதன் பிறகு தன் மகன் திருமணத்தில் தான் அதை அணிவாள்.
நல்ல அறக்கு கலர் பட்டுபுடவையில், கழுத்தீரு அணிந்து மிகவும் அழகாக வளம் வந்தார் அன்னம். அவர் முகத்தில் தான் எத்தனை பூரிப்பு.
சுந்தரம் அன்னத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். இவள் எங்கள் வாழ்வில் வந்தது நாங்கள் செய்த புண்ணியம் தான் என்று மனைவியை வாஞ்சையாக பார்த்து கொண்டிருந்தார்.
“மாமா.. உங்க பார்வையை பார்த்தா.. பேரன் பேத்தி பார்க்க ஆசை படர மாதிரி தெரியலயே .. நம்ம முத்துக்கு தம்பி பாப்பா வந்துடும் போலயே” என்றான் கதிர் அவரை இடித்து கொண்டு பக்கத்தில் அமர்ந்து கொண்டே.
“டேய்.. நீ வேணும்னா போய் உன் பொண்டாட்டிய பாருடா.. சும்மா என் பின்னாடியே சுத்திகிட்டு” என்று அவனை கடித்து விட்டு எழுந்து சென்று விட்டார்.
கலகலப்பாக தொடங்கியது திருமண நாள். தவமாய் தவமிருந்து, விசாலாட்சி அருணாச்சலம் தம்பதியருக்கு கிடைத்த பொக்கிஷம் விசாகா.
தெய்வம் தந்த வரமாய், அன்னம் சுந்தரம் தம்பதியருக்கு கிடைத்த பொக்கிஷம் முத்துகருப்பன்.
அழகாய்-ஆரவாரமாய் நெகிழ்ச்சியாய்-நிறைவாய் மலையைய்யா அருளால் நடந்தது முத்து கருப்பன் விசாகா திருமணம். இருவரின் ஜோடி பொருத்தம் அத்தனை அழகாக இருந்தது.
ஒவ்வொரு சடங்குகளையும் அத்தனை பார்த்து பார்த்து செய்ய வைத்தார் முருகம்மை ஆச்சி.
பெண் வீட்டில் அனைத்து சடங்குகளும் முடிந்து பெண்ணை அழைத்து செல்ல வேண்டும் மாப்பிள்ளை வீட்டினர். இறுதியாக பெண் அனைவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி போயிட்டு வருகிறேன் என்று முறையே விடை பெற்று செல்ல வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் போயிட்டு வருகிறேன் என்று கூறும் போதும் கண்கள் குளமாகியது விசாகாவிற்கு.
அப்பத்தா, ஆயா, அய்யா, சித்தாப்பாக்கள் சித்திகள் அண்ணன்கள் அண்ணிகள், அனைவர் கண்களும் கலங்கத்தான் செய்தது.
அன்னமும் சுந்தரமும் வந்து நின்றனர். அத்தை என்று விசாகா அவரை கட்டிக்கொண்டு அழுதாள். அன்னமும் சுந்தரமும் கண்கள் கலங்க நின்றனர்.
“இது என்னடி கூத்தா இருக்கு.. மாமியார் மாமனாரும் இல்ல அழுறாங்க?” என்றார் மீனா, வள்ளி தெய்வாவின் அம்மா.
“அவங்க முருகுவோட அத்தை மாமாவா அழறாங்க ஆத்தா.. சில விஷயங்கள் சொல்லி புரிய வைக்க முடியாது” என்றார் முருகம்மை ஆச்சி நெகிழ்வாக.
இறுதியாக சாலாவும் அருணும் “நல்லபடியா போயிட்டு வாம்மா.. சீரும் சிறப்புமா வாழனும் இரண்டுபேரும்.. “ என்று மகளை ஆசிர்வாதம் செய்து, கலங்கி தவித்து நின்றனர்.
ஆதரவாக கை பிடித்து ஆறுதல் சொன்னான் முத்து கருப்பன் தன் அத்தை மாமாவுக்கு.
error: Content is protected !!