Skip to content
Post Views: 2,612
வேளை – 17(2)
மாலை நேரம் சக்தியும் லாலாவும் டவுனில் இருக்கும் கடைக்குச் சென்றனர். ஆளுக்கொரு பரோட்டா கலக்கி வாங்கி உண்ண,
“என்ன மச்சான் டயட்டா? ஒரு பரோட்டாவோட நிறுத்திட்ட?” என்று சக்தி கேட்க, லாலாவோ
Advertisement
“அதையேன் டா கேட்குற? எங்கம்மா எனக்காக சமைச்சு வச்சிருக்கும். நான் மட்டும் சாப்பிடல பொண்டாட்டி சாப்பாடுன்னா சாப்பிடுவான் என் சாப்பாடை சாப்படலனு நைட்டுக்கு ஒரு கச்சேரியைக் கூட்டிடும்” என்றான் சலிப்பாக.
Advertisement
“என்னமோ தெனமும் மாமியார் மருமக சண்டையை தீர்த்து வைக்குற மாதிரி சலிச்சுக்குற, உனக்கென்ன மாசத்துல ரெண்டு நாள் வந்துட்டு ஓடிடுற?” என்று சக்தி கிண்டல் செய்தான்.
Advertisement
“சொல்லுவ டா? அந்த ரெண்டு நாள் மீதி இருபத்தெட்டு நாளை பாதிக்குமே” லாலா புலம்ப,
Advertisement
“ஏண்டா உதயா உங்கம்மாவை வச்சு சண்டை போடுதா?” சக்தி அக்கறையாக விசாரிக்க,
“அதெல்லாம் இல்லடா. அவ அப்படி போட்டாக்கூட கோவம் வரும். அவ அப்படியெல்லாம் கிடையாது, எங்கம்மா இப்படி இருப்பாங்கனு நான் நினைச்சதே இல்லடா. உண்மையை சொல்லணும்னா எங்கம்மா நல்ல மாமியாரா இருப்பாங்க நினைச்சதுக்கு மொத்தமா ஆப்படிச்சுட்டாங்க”
“நானும் பயந்துருக்கேன் மச்சி, அதுவும் உன் தங்கச்சியும் என் அம்மாவும் சும்மாவே அடிச்சுப்பாங்க. எங்க என்னை வீட்டுக்குள்ளயே கோடு போட வச்சிடுவாங்களோனு பயந்திருக்கேன். சசிகலா சாக்பீஸை எடுன்னு எங்கப்பா சொல்லிடுவாரோனு நினைச்சதுக்கு அப்படியே ஆப்போசிட்”
“அரசியல்ல கூட்டணி மாற மாதிரி மாமியார் ஆனதும் எங்கம்மா மாறிட்டாங்க” சக்திவேல் சந்தோஷமாக சொன்னான்.
“உனக்கு அப்படி! எனக்கு இப்படி” என்று சலித்த லாலா,
“கண்டண்ட் க்ரீயேட்டர்ஸ் கூட கன்டெண்ட் இல்லாம கடும்பஞ்சத்துல இருப்பாங்க டா. ஆனா எங்கம்மா எதை கன்டெண்ட் ஆக்கும்னு ஐடியாவே எனக்கில்லை டா. உதயா என்ன செஞ்சாலும் பேசுறாங்க, செய்யலன்னாலும் பேசுறாங்க. அவ அமைதியா இருந்தாலும் பேசுறாங்க. பாவம்டா” என்று மனைவிக்காக இரக்கப்பட்டவன்,
“எங்கம்மாவும் மோசம் கிடையாது. உனக்கே தெரியுமே, நம்ம ரெண்டு வீட்டுக்கு சண்டை நடந்தா கூட அவங்க பேசாம அமைதியா இருப்பாங்க, சரோ சண்டை போட்டா அவளைப் பேசுவாங்க. அவங்களா இப்படினு எனக்குக் கஷ்டமா இருக்கு” என்று லாலா மிகவும் வருத்தப்பட்டான்.
அதை மனைவியிடம் சக்திவேல் சொல்ல,
“தெரியும்ங்க” என்றாள் சரோஜினி.
“என்னடி ஈசியா தெரியும்ங்க்ற? உங்கம்மா பொதுவா வெளியே சண்டை போட்டு பார்த்ததே இல்லை, கூடவே பொண்ணு வச்சிருக்கவங்க, அதனால வர பொண்ணை நல்லா பார்த்துப்பாங்கனு நானே நினைச்சிருக்கேன் தெரியுமா?” என்று சக்தி ஆச்சரியமாக சொல்ல,
“தனக்குப் பொண்ணு இருந்தா மருமகளை ஒழுங்கா நடத்துவாங்கனு எதாவது சட்டமிருக்கா? அவங்களே பொண்ணா இருக்கப்போ இன்னொரு பொண்ணை அப்படித்தானே நடத்தணும்? சொல்லப்போனா பொண்ணு இருக்கிறவங்க, இல்லாதவங்கனு கிடையாது. நல்லா நடத்தணும்னு நினைக்கிறவங்க, நடத்தக் கூடாதுனு நினைக்கிறவங்க ரெண்டே கேட்டகரி. இல்லையா மாமியார்ன்ற போஸ்ட் உறவா நினைக்கிறவங்க பாசமா இருப்பாங்க, அதையே அதிகாரமா நினைக்கிறவங்க மோசமா நடப்பாங்க”
“எங்கம்மா குரல் எங்க வீட்ல அதிகம் உசந்தது எங்கிட்ட மட்டும்தான். இப்போ எங்கண்ணி கிட்ட, அவங்களுக்கே ஆண்கள் உசந்தவங்கனு எண்ணம் உண்டு. அதனால தன்னோட பையன் அந்த இடத்தை விட்டு இறங்கினா தாங்க முடியறதில்ல. இத்தன வருஷம் யார்கிட்டயும் காட்ட முடியாத ஸ்ட்ரெஸை எல்லாம் கிடைச்சான் டா கிச்சான்னு எங்கம்மா அண்ணிக்கிட்ட காட்டுறாங்க. எங்கண்ணி அமைதியா இருக்கிறது அவங்களுக்கு வசதியா போச்சு” என்று உதயாவுக்காக வருத்தப்பட்டாள் சரோஜினி.
“உதயா நல்ல பொண்ணுடி. நீயாச்சும் உங்கம்மா கிட்ட சொல்லு” என்ற சக்தி,
“உங்கம்மாவை விட உங்கண்ணன் கொஞ்சம் திருந்தணும் நினைக்கிறேன் டி. உங்கப்பா உதயாவை கூப்பிட்டு வேலை எப்படியிருக்கு அப்படி இப்படினு விசாரிச்சுப்பாரு போல, மருமக சம்பாதிக்கிறான்னதும் விசாரிக்கிறார்னு சொல்றான் டி. அந்த பொண்ணை இவன் போட்டியா நினைக்கிறான்” என்று சக்தி சொல்ல,
“சக்தி! சம்சார சாகரம் இருக்கே, அதுல ஒரே ரூல்ஸ் எல்லாருக்கும் பொருந்தாது. அவனவன் தண்ணிக்குள்ள குதிச்சு தட்டுத்தடுமாறி கத்துக்கணும். டிக்ப்ஸ் கொடுத்தாலும் நம்ம கால கையை ஆட்டித்தானே நீந்தணும். அப்படித்தான் லாலாவும்!”
“நீ உன் ப்ரண்டுக்காக ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம்” சரோஜினி பழிப்புக் காட்ட
“என் ப்ரண்டுக்கு நான் ஃபீல் பண்ணாம யாருடி ஃபீல் பண்ணுவா?” என்று சக்தி அவள் காதை திருக,
“அய்யே” என்று அவனைப் பிடித்துத் தள்ளினாள் சரோஜினி.
அடுத்த நாள் சுதந்திர விலாசத்தில் அமைதியாக விடிந்தது.
முற்பகல் பதினொரு மணி வரை எந்தவொரு சத்தமும் இல்லை. இன்னிக்கு ஒரு பொழுது தாண்டிட்டா நாளைக்கு ஊருக்கு ஓடிடலாம் என்று லாலா திட்டம் தீட்டியிருக்க சித்ரா அதனை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்.
உதயா பதினொரு மணி போல எல்லாருக்கும் சோளத்தைக் கொண்டு கார்ன் சீஸ் செய்தாள். சில பொருட்கள் அவர்கள் வீட்டில் இல்லையென்பதால் சரோவிடம் வாங்கி ஆசையாக வீட்டில் உள்ளவர்களுக்கு செய்தாள். அவளுக்கு அத்தனை பேருக்கும் உணவு சமைக்க ஆசை, இதற்கு முன் இவ்வளவு பேருக்கு சமைத்ததே இல்லை, அதனையும் விட அவளுக்கு அசைவம் சமைக்க பெரிதாக வரவில்லை. முயற்சி செய்துகொண்டிருக்கிறாள். ஆதலால் லாலாவை வைத்து முதலில் பரிசோதித்துவிட்டு வீட்டினருக்கு செய்து தரலாம் என்றிருந்தாள்.
முக்கியமான இன்னொரு விஷயம் எப்போதடா துண்டு விழும், போட்டுத் துவைக்கலாம் என்று காத்திருக்கும் அவள் மாமியாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தெரிந்ததை செய்ய வேண்டும் என்று தெளிவாக நினைத்தாள் உதயா.
உதயா கொடுத்ததை உண்ட திலகர்,
“நல்லாயிருக்கு ஆயி, ஆனா எனக்கு இந்த வெள்ளக்காரன் சாப்பாடெல்லாம் ஒத்துவராது” என்று மறுக்க
“தாத்தா இது பிரிட்டிஷ் இல்லை, இத்தாலியன்” என்று உதயா சொல்ல,
“அவனும் வெள்ளையாதானே இருப்பான்?” என்று திலகர் கேட்டவர்,
“அந்த இங்கிலிஷ்காரனுக்கு இத்தாலிக்காரன் பங்காளிதானே? எல்லாம் ஐரோப்பாவை சேர்ந்தவனுங்கதானே?” என்று கேட்க, உதயா விழித்தாள்.
“மாமாவுக்குப் புதுசா ட்ரை பண்ண பிடிக்காது உதயா. நீ மத்தவங்களுக்குக் கொடு” என்று வசுந்த்ரா சொல்ல அவளும் அஞ்சம்மாவிடம் கொடுக்க,
“அட எம்மூட்டு பேத்தி என்ன அருமையா செஞ்சிருக்கா? சோளத்தை சூடவும் அவிக்கவும் தவிர இவளுங்களுக்கு ஒன்னும் செய்ய தெரியாது. டேய் லாலா உன் பொண்டாட்டி நல்லா சமைக்கிறா டா” என்ற அஞ்சம்மாவிற்கு உண்மையில் அந்த ருசி பிடித்திருந்தது.
வாஞ்சி நாதனும், “நல்லாயிருக்கு மா” என்று கொடுத்ததை உண்டு முடித்தார். லாலா, பகத் இருவரும் சூப்பர் சூப்பர் என்று சொல்லி இன்னொரு கிண்ணம் வாங்கிக்கொள்ள,
சித்ராவோ, “என்னதிது கோந்து மாதிரி இருக்கு” என்றவர் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு பிடிக்கவில்லை என்றுவிட்டார்.
உண்மையில் அவருக்கு சீஸ் எல்லாம் பிடிக்கவில்லை. அத்தோடு விட்டிருந்தால் வீடு சாந்தி நிலையமாகியிருக்கும், ஆனால் அஞ்சம்மாவின் பாராட்டுப் பேச்சு சித்ராவை தூண்டிவிட்டது.
லாலாவிடம், “ஏண்டா உங்காத்தா சாம்பாரையும் புளிக்குழம்பையும் தவிர வேற எதை வச்சாலும் பிடிக்காதுனு ஒழுங்கா சாப்பிடாது. வசு ஒருதடவ மோர் குழம்பு வச்சதுக்கு என்னதிது மஞ்சத்தண்ணினு திட்டுச்சு, இப்போ உன் பொண்டாட்டி செஞ்சதை மட்டும் நல்லாயிருக்குனு சொல்லுது” என்று புகைந்தார்.
“மா, நீ பேசாம ஏன் யூடூபர் ஆகக்கூடாது?” என்று கேலியாக கேட்டான் லாலா.
“ஏண்டா?”
“அவங்கதான் ஒன்னுமே இல்லாத விஷயத்தை கூட ஊதிப்பெருசாக்குவாங்க” என்றான் கொஞ்சம் கடுப்பாக.
“யாரு நான் பெருசாக்குறேனா? என் கவலையா நான் யார்கிட்ட போய் சொல்லுவேன்? மருமகளுங்க ரெண்டு பேர் எதை செஞ்சாலும் குறை சொல்லும் உங்காத்தா, உன் பொண்டாட்டியை உசத்திப் பேசினதும் நீயும் வக்காலத்து வாங்குறியா டா?” என்று லாலாவை பேசினார்.
பின்கட்டுக்குச் செல்ல வந்த வாஞ்சி நாதன் காதில் இந்த உரையாடல் விழ,
“ஏண்டி எங்கம்மா மருமக சமையலை பிடிச்சதுனு சொன்னா இங்க வந்து உன் மகன் கிட்ட குறை சொல்ற? ஒழுங்கா இருக்க மாட்டியா நீ? டேய் நீ போடா” என்று லாலாவையும் விரட்ட, சித்ராவோ அந்த கடுப்பையும் உதயாவிடம் காட்டினார்.
“என்ன சமைச்சு எல்லாரையும் உன் கைக்குள்ள வச்சுக்கணும்னு நினைக்கிறியா?” என்று மதியம் உதவி செய்ய வந்த உதயாவை பேசி விட, அவள் பதிலே சொல்லவில்லை.
வாசலில் இருக்கும் திண்டில் சென்று அமர, சரோஜினி அவளிடம்,
“அண்ணி, சீஸ் கார்ன் சூப்பர். எங்கத்தைக்கும் எனக்கும் ரொம்பப் பிடிச்சது” என்று சொன்னவள் உதயாவிடம் பதில் இல்லை என்றதும்
“என்ன பிரச்சனை அண்ணி?” என்றாள் தயக்கமாக.
“ஏன் சரோ? நான் கஷ்டப்பட்டு படிச்சு டிகிரி வாங்கினது உங்க வீட்டு கிச்சன்ல நிக்கவா?” என்றாள் ஆதங்கமான குரலில்.
சரோஜினி கேள்வியாக பார்க்க உதயா சித்ரா சொன்னதை சொல்ல,
“எனக்கு உங்க கஷ்டம் புரியுது அண்ணி. உங்க மாமியாருக்கு அவங்க கிச்சன் என்னமோ கிம்-ஜாங்-உன் கன்ட்ரோல்ல இருக்க கொரியானு நினைப்பு. அதை எங்க மத்தவங்க கன்ட்ரோல் பண்ணிடுவாங்கனு பயம்” என்று சிரிக்க,
“என்னடி மாமியார்னு சொல்லி சிரிக்கிற?” என்று சசிகலா வாசலில் இருந்த அன்னாகுடையில் மாட்டுக்குத்தண்ணீர் வைத்தார்.
“அது இவங்க மாமியார் கிச்சனைக் கொடுக்க மாட்டேங்கிறாங்களாம் அத்த”
“இவ மாமியா உங்கம்மாதானே டி?” என்ற சசிகலா, “அஞ்சம்மா பேத்திக்கு வாய் அஞ்சூருக்கு நீளுது” என்று சொல்லிவிட்டு போனார்.
“அடியே! என் பெயரை எவடி இழுக்குறது?” என்று அஞ்சம்மா திண்ணையில் இருந்து கொண்டு குரல் கொடுக்க,
“உன் பேத்தியைக் கேளு” என்றுவிட்டு சசிகலா உள்ளே சென்றார்.
உதயாவோ சசிகலா தவறாக நினைப்பாரோ என்று பயத்தோடு பார்க்க,
“என் மாமியார் கோட்டுக்கு அந்த பக்கமிருந்தா நீலாம்பரி, இந்த பக்கமிருந்தா கோதாவரி. ரொம்ப ஸாஃப்ட்” என்று சிரித்தாள் சரோஜினி.
“என்ன இது ஸாஃப்டா?” உதயா ஆச்சரியமாகக் கேட்க,
“அவங்க டோன் அப்படி அண்ணி. மத்தபடி என்னை திட்டினாலும் மனசுல வச்சுக்காம அவங்களே வந்து நார்மலா பேசுவாங்க” என்றாள் சரோஜினி.
“அப்புறம் அண்ணி எங்கம்மா உங்க கூட போட்டி போடுறாங்க நினைக்காதீங்க. இத்தனை வருஷமா எங்கம்மாதான் சமையல் எல்லாம். சித்தி இங்க வந்து தங்க ஆரம்பிச்சப்ப கூட இப்படி எதாவது சொல்லிட்டே இருப்பாங்க” என்றாள்.
சரோஜினி சொல்வது போல வசுந்த்ரா இங்கயே தங்க வந்த போது சமையல் செய்ய போனால் சித்ரா அவரை சுதந்திரமாக செய்ய விட மாட்டார்.
“மாமாவுக்கு அப்படி பிடிக்காது, அத்தைக்கு இப்படி தாளிக்கணும். இப்படி வெட்டணும், அப்படி வதக்கணும்” என்று கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டே இருந்தார்.
வசுந்த்ராவோ, “அக்கா, நான் சென்னையில உங்க கொழுந்தனாருக்கு என் கையாலதான் சமைச்சுப் போடுறேன். நல்லாதானே இருக்கார், எனக்கு சமைக்கத் தெரியும் கா. தெரியலன்னா கேட்குறேன். எனக்கு இப்படி ஒவ்வொன்னா சொல்லிட்டே இருந்தா செய்ய வராது” என்று சொல்லிவிட்டார்.
சித்ராவுக்கு முகம் வாடிவிட்டது. அவருக்கு தன் ஆளுமையில் இருக்கும் சமையல்கட்டு வசுந்த்ரா வசம் போய்விடுமோ என்ற அச்சம். அதனை எல்லாம் வசுந்த்ரா கண்டுகொள்ளவில்லை. இரவு உணவு அவர் செய்வார், மற்ற நேரம் பொரியலோ குழம்பு நான் இதை செய்கிறேன் என்று சொல்லிவிடுவார்.
“சித்தி வந்துட்டா எங்க அவங்க சமையல் எல்லாருக்கும் பிடிச்சிடுமோனு எங்கம்மாவுக்குப் பயம், இப்போ உங்களைப் பார்த்தும் அதே பயம். எங்க வீட்ல எங்கம்மா சுதந்திரமா இருக்க ஒரே இடம் கிச்சன், அங்க மத்தவங்க வரப்போ அவங்க இப்படியொரு டிஃபன்ஸ் மோட்ல போயிடுறாங்க” என்று சரோஜினி தன் தாயாரின் மன நிலையைப் புரியவைத்தாள்.
சமையலறை சர்வாதிகாரத்தின் சாராம்சத்தை தனக்குப் புரிய வைத்த சரோஜினியை வியந்து பார்த்த உதயா ஊருக்குச் செல்லும் வரை சித்ராவின் எல்லையில் கால் வைக்காமல் இருக்க முடிவு செய்தாள்.
அந்த முடிவு நல்ல முடிவாக இருக்க வேறு பிரச்சனைகள் இன்றி சென்னை வந்து சேர்ந்தனர் லாலாவும் உதயாவும்.
‘அப்பாடா தப்பித்தோம்!’ என்று லாலா தத்திந்தோம் போட்டான்.
அவனைத் தேடி பிரச்சனைகள் எப்படி வருகின்றன என்று லாலா தேடுவதற்குள் அவனே பிரச்சனைகளை உருவாக்கினான்.
error: Content is protected !!