Skip to content
Post Views: 6,697
அதன் விளைவே சக்தி லாலாவை ஒத்துக்கொள்ள வைக்கும் நோக்கோடு பேச, லாலா அதனை சரியாக புரிந்துகொள்ளவில்லை.
“நான் அப்படி சொல்லல லாலா. நடக்கிறத சொன்னேன், உன் நல்லதுக்கு சொல்றேன் டா” சக்தி அழுத்தமாக சொல்ல, லாலா அதைவிட அழுத்தமாக இருந்தான்.
Advertisement
“அப்படி வேண்டாம்னா நோ சொல்லிட்டு போடா, அந்த பொண்ணாச்சும் நிம்மதியா இருக்கும்.” சக்தியும் லாலா ஒத்துக்கொள்ளவில்லை என்றதும் கத்தினான்.
“அன்னிக்கு நான் அந்த டிரெயினை மிஸ் பண்ணியிருக்கலாம்னு இப்போ பீல் பண்றேன்” எரிச்சலாக சொன்ன லாலா பட்டென்று போனை வைத்தான்.
Advertisement
Advertisement
சக்திக்கும் கோபமாக வந்தது.
“திமிரெடுத்த தடிமாடு” என்று திட்டிவிட்டு அவனும் திரும்பி அழைக்கவில்லை.
Advertisement
லாலாவுக்குப் படிக்கும் மன நிலையே போய்விட்டது. அகாடெமிக்கு விட்டு சிறிது தூரம் தள்ளியிருக்கும் தேனீர் கடையில் டீ குடிக்க வந்தவன் சக்திக்கு அழைத்துப் பேசியிருந்தான். டீ குடித்து மீண்டும் அகாடெமி சென்று படிக்கலாம் என்று நினைத்தவனுக்கு கொஞ்சமும் படிக்கும் மன நிலையில்லை.
அதுவும் இன்னும் எரிச்சல் தர அப்படியே நடந்து சிறிது தூரமிருந்த பூங்கா வந்தடைந்தான். பூங்காவில் எல்லாம் ஜோடி ஜோடியாக சுற்ற பார்த்தவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு இருக்கையில் கண்மூடி உட்கார்ந்துவிட்டான்.
கண்ணுக்குள் இருள் கவ்வியிருக்க அவன் எண்ணம் உதய நிலாவை கண்ட நாளை எண்ணியது.
************
ஒருவருடத்திற்கு முன்..
லாலா அடுத்த நாள் நடக்கவிருந்த அரசுத்தேர்வுக்குச் சென்னை செல்லவிருந்தான். அது மத்திய அரசு நடத்தும் தேர்வென்பதால் அதிகமான செண்டர்கள் இல்லை, தமிழகத்தில் பெரு நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. லாலா அவசர அவசரமாக பேருந்தை விட்டு இறங்கி ரயில் நிலையத்துக்குள் நுழைந்தான். ‘மன்னை’ எக்ஸ்பிரஸ் ரயிலில் அவனுக்கு எஸ் 3 கோச்.
வந்த வேகத்தில் எஸ் 3 வரை வந்துவிட்டவன் ரயிலில் விளக்குகளும் போடப்பட்டிருக்க உள்ளே ஏறிவிட்டான்.
எஸ் 3 கோச்சில் அவனுக்கு முப்பத்திரண்டாவது இருக்கை. அது சைட் அப்பர். யாருக்கும் தொந்திரவில்லாத இருக்கை, பேசாமல் இப்போதே ஏறி படுத்துவிடலாம். அப்போதுதான் காலையில் சோர்விருக்காது என்று நினைத்து வைத்திருந்த ஒற்றை பையைத் தலையைணையாக மாற்றியவன், போர்வையெடுத்து போர்த்திக்கொண்டான்.
ரயிலில் மக்கள் போவதும் வருவதுமாக இருக்க, பேச்சுக்குரல் கேட்டாலும் தூக்கத்தின் வழியில் மெல்ல அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்த லாலாவை கலைத்தது ஒரு குரல்.
“ஹலோ” என்ற அழைப்பு. லாலாவோ கனவில் பரீட்சை ஹால் வரை சென்றுவிட, பெண்ணின் குரல் எல்லாம் அவன் உறக்கத்தைக் கலைக்கவில்லை.
“ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ” என்று காதருகே கொஞ்சம் சத்தம் கேட்கவும், மெல்ல போர்வையை விலக்கிப் பார்த்தான்.
“என்னங்க?” என்று லாலா படுத்தவாக்கில் கேட்க
“இது என் சீட் சார்” என்றாள் அந்த பெண்.
படுத்துக்கொண்டு கேள்வி கேட்டவன் பதறி உட்கார்ந்து,
“என்ன சொன்னீங்க?” என்றான் மீண்டும்.
“32 என் சீட். நான் புக் பண்ணியிருக்கேன்” அந்த பெண் பொறுமையாக சொன்னாலும் அழுத்தமாக வந்தது அவள் வார்த்தைகள்.
“இல்லங்க இது என் சீட்” என்று லாலாவும் வாக்குவாதம் செய்ய,
“சார்! இங்க பாருங்க” என்று தன் அலைப்பேசியில் பயணச்சீட்டைக் காட்டினாள்.
“மேடம்! என் கிட்டயும் இருக்கு” என்ற லாலாவுக்கும் கோபம். உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி என் இருக்கை என்று உரிமை வேறு கோருகிறாள் என்று எரிச்சல்.
அலைப்பேசியை எடுத்து பயணச்சீட்டினை திறந்து அப்படியே அவள் பக்கம் காட்டினான். இவ்வளவுக்கும் அவன் இருக்கை விட்டு இறங்கவில்லை. அந்த சைட் அப்பர் பெர்த்தில் உட்கார்ந்தவண்ணம் பேச, அந்த பெண் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அவன் காண்பித்த பயணச்சீட்டைப் பார்த்தவள்,
“32 உங்க சீட்தான் சார், ஆனா இந்த டிரெய்ன்ல இல்ல” என்று பொறுமையாகச் சொல்ல
“என்ன?” என்ற லாலாவிடம் இப்போது உண்மையில் பதட்டம். இன்னும் அரை மணி நேரத்தில் ரெயில் புறப்பட்டுவிடும். நாளைக்குத் தேர்வு வேறு.
“நீங்க மன்னையில இருந்து சென்னை போறதுக்குப் பதிலா சென்னையில இருந்து மன்னைக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கீங்க சார்” என்று அப்பெண் இவன் தவறை சொல்ல லாலாவுக்கு அரசுத்துறைகள் அத்தனையும் தனக்கு எதிராக செயல்படுகிறதோ என்ற எண்ணம்.
அவள் சொல்லவும் பயணச்சீட்டினை வாங்கி பார்க்க உண்மையில் மாற்றியே முன்பதிவு செய்திருந்தான். தலை வலித்தது. வீட்டில் சொன்னால் அப்பா இன்னும் பேசுவார், இதை கூட ஒழுங்காக செய்ய முடியாதா என்று கத்துவார்.
அடுத்த நாள் தேர்வில்லை என்றால் முன்பதிவு செய்யாத இருக்கைகளுக்குச் சென்றுவிடுவான், பணமும் போய் பயணமும் செய்ய முடியாத நிலை. என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து அப்படியே உட்கார்ந்திருக்க, அந்த பெண்ணுக்கு இவன் உணர்வுகள் புரியாவிட்டாலும் அமைதியாக நின்றாள்.
அந்தவழியாக இன்னொருவர் செல்ல அந்த பெண் நகரவும்தான் அவள் நினைவு வர,
“சாரிங்க. நீங்க உட்காருங்க” என்று சொல்லி கீழே இறங்கினான்.
“இட்ஸ் ஓகே. டிடிஈ கிட்ட கேட்டு டிக்கெட் மாத்த முடியுமா பாருங்க” என்று சொன்னவள் இருக்கையில் உட்கார்ந்தாள். லாலா அந்த கோச்’சின் வாசலில் நின்றவன் அவன் நண்பன் சக்திவேலுக்கு அழைத்தான்.
“டேய் சக்தி” என்று ஆரம்பித்தவன் நடந்ததை சொல்லி
“அந்த பொண்ணுகிட்ட ஒரே டேமேஜா போச்சுடா, டிக்கெட் கூட புக் பண்ண தெரியலனு நினைச்சிருப்பா. வீட்ல சொன்னாலும் பேச்சுவாங்கணும். நாளைக்கு எக்ஸாம் வேற இருக்கு, தூங்காம போய் எனக்கு கோவிந்தா” என்று புலம்பினான்.
“மச்சான்! டென்சன் ஆகாத.” என்று சக்தி அவனை தேற்றியவன்
“டிடிஈ கிட்ட டிக்கெட் இருக்கா கேளு. இப்படி மாத்தி புக் பண்ணிட்டேன் சொல்லு, பைன் கட்ட சொல்லுவாங்க. கட்டி டிக்கெட் எடு, சீட் இருந்தா கொடுப்பார்” என்றான்.
“சீட் இல்லைன்னா?” லாலா கவலையாகக் கேட்க
“முதல்ல நீ ஊருக்குப் போகணும் எரும, சீட் இல்லைன்னா என்ன. உட்கார்ந்துட்டே தூங்கு” என்ற சக்தி
“பேசாம உன் ஏடிஎஸ்பி சித்தப்பாவுக்குப் போன் பண்ணி ரெயில்வேய்ஸ்ல யாராச்சும் டிடிஈ தெரியுமா கேளு” என்று ஐடியா சொல்ல
“ஓகேடா” என்று உடனே லாலா தன் சித்தப்பா சித்ரஞ்சனுக்கு அழைத்தான். சித்ரஞ்சன் தஞ்சாவூரில் ஏடிஎஸ்பியாக இருக்கிறான். சித்ரஞ்சனிடம் நடந்ததை சொல்ல,
“இனிமே கவனமா டிக்கெட் புக் பண்ணு லாலா. டிடிஈ வரவும் அவர்கிட்ட கொடு. பேசிப்பார்க்கிறேன்” என்றான்.
லாலா பாத்ரூம் அருகே வாசலை பார்த்தபடி டென்ஷனாக நிற்க,
“வேணும்னா நீங்க அந்த சீட்ல படுத்துக்கோங்க” என்ற குரலில் திரும்பினாள் அங்கே அந்த பெண் நின்றாள்.
“என்ன?” என்றான் அதிர்ச்சியாக. அரசியல் கட்சியில் கூட சீட் கிடைத்துவிட ரயிலில் சீட் கிடைப்பதெல்லாம் இன்று அரிது. அதிலும் ஸ்லீப்பர் கிடைப்பதெல்லாம் அரிதினும் அரிது, பாத்ரூம் பக்கமில்லாத சீட் கிடைப்பதெல்லாம் அதற்கு முந்தையை ஜென்மத்தில் எல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டிய நிலையாக இருக்கும். இதில் தனக்குப் பதிவு செய்த இருக்கையை இன்னொருவனுக்குக் கொடுக்க முன் வந்த பெண்.
“ஏங்க உங்க சீட்டையா கொடுக்கிறேன் சொல்றீங்க?” லாலா தெளிவாகக் கேட்டான்.
“நீங்க பேசினதைக் கேட்டேன். உங்களுக்கு எக்ஸாம் வேற சொல்றீங்க. டிடிஈ கிட்ட சொல்லி டிக்கெட் மட்டும் எடுத்துருங்க, நான் வேற எங்காச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். இல்லை அன்ரிசர்வ்ட் போயிக்கிறேன், எனக்குப் பிரச்சனையில்லை” என்றதும்
“ஏங்க அன்னை தெரசா உங்க ஆயாவா?” என்று லாலா கேட்க அந்த பெண் முறைத்தாள்.
“இல்லைங்க என்னை உங்களுக்கு முன்னாடி தெரியாது. எனக்கும் உங்களை தெரியாது. சீட் எல்லாம் கொடுக்கிறேன் சொல்றீங்களே, அதான் கேட்டேன்”
“நான் பாகிஸ்தான் டெரரரிஸ்ட். இந்த டிரெயின்ல குண்டு வைக்கப் போறேன்” என்று மெல்லிய குரலில் அவன் அருகே வந்து சொல்ல,
“என்ன?” என்று அதிர்ந்து ஒரு அடி நகர,
“ஹேய் பார்த்து” என்று லாலாவின் கையைப் பிடித்தாள்.
“என்னங்க டென்ஷன் பண்றீங்க?” லாலா கதவில் சாய்ந்து நின்று கேட்க
“பின்ன என்னால முடிஞ்சதை செய்றேன் சொல்றேன். அவ்வளவு கேள்வி கேட்குறீங்க. டிடிஈ கிட்ட கேளுங்க சீட் இருந்தா பாருங்க இல்லை எனக்குப் பிரச்சனையில்லை. ஏதோ எக்ஸாம்னு டென்ஷனா சொன்னீங்க, அதான் நான் சொன்னேன்.” என்றவள் டாய்லெட்டுக்குள் நுழைந்தாள்.
ரயிலை விட்டு இறங்கிய லாலா சக்திக்கு அழைத்து இதனை சொல்ல,
“ஏண்டா பரதேசி.. ஏதோ ஒரு மகராசி சீட் தரேன்னு சொல்றா, ஒழுங்கு மரியாதையா டிடிஈ சொல்றதைக் கேட்டு டிக்கெட் வாங்கிட்டு அந்த சீட்ல படு. இல்ல போய் அன்ரிசர்வ்ட்ல ஏறு” என்று திட்டினான்.
நல்லதை நம்ப மறுக்கும் மனம், அல்லதை நம்ப நேரமே எடுப்பதில்லை. அப்படித்தான் லாலாவுக்கும் யாராவது இப்படி உதவி செய்வார்களா என்ற எண்ணம். சித்ரஞ்சன் யாரோ தெரிந்தவர்களிடம் பேச டிடிஈ சீட் இருந்தால் தருகிறேன் என்றார்.
லாலாவின் நல்ல நேரம் எஸ் 3 கோச்சில் வேறொரு இருக்கையில் யாரோ வராது போக, டிக்கெட்டுக்கான பணத்தை வாங்கிவிட்டு அவனை அதில் பயணம் செய்ய அனுமதித்தார்.
‘உதயநிலா’ என்ற குரல் கேட்க பார்த்தால் அவனுக்கு உதவ முன் வந்தவள் பெயர் அது. டிடிஈ யிடம் பெயர் சொல்லிவிட்டு உறங்க ஆயத்தமானவள் இயல்பாக பக்கவாட்டில் பார்க்க, லாலா இன்னொரு பக்கம் அப்பர் பெர்த்தில் அமர்ந்திருந்தான். இவளைப் பார்த்து புன்னகைக்க, அவளும் புன்னகையோடு உறங்கிப்போனாள்.
அன்று எதிர்ப்பாராமல் தட்டுப்பட்டவளை எதேச்சையாகவே அடுத்து சந்தித்தான். ஆனால் அதற்கடுத்த சந்திப்பெல்லாம் லாலா எதிர்ப்பாராததாக இருக்க உதயநிலா எதிர்ப்பார்த்து ஏற்படுத்தியவையாக இருந்தது.
முதல் சந்திப்பை அசைப்போட்டவனுக்கு மனதின் சஞ்சலம் இன்னும் குறையவில்லை. உதய நிலாவையும் வேண்டாம் என்று மறுக்க முடியவில்லை, அவன் ஆசைப்பட்ட உத்யோகத்தையும் விட முடியவில்லை.
கொஞ்சம் மாதம் தானே என்று பிடிவாதமாக இருந்தான். அடுத்த ஒருவாரம் உதய நிலா லாலாவிடம் குறுஞ்செய்தி வழியாகக் கூட பேசவில்லை. லாலாவுக்குத் தாங்கவில்லை, உடனே வெட்கம் மானம் எல்லாம் விட்டு அழைத்துவிட்டான். அவள் பேசிய பேச்சில் திருமணத்திற்கும் சரியென்று விட்டான்.
error: Content is protected !!