Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அரங்கேற்ற வேளை – 2(1)

வேளை 2

உதயநிலாவிடமிருந்து அழைப்பு வர லாலாவுக்கு எடுக்காமல் விடவும் மனதில்லை. எடுத்தால் திருமணம் பற்றி பேசுவாளே என்ற கவலையும் கூட  நாள் முழுக்க பேசாதிருந்தால் வருந்துவாள் என்று புரிந்து, 



Advertisement

“சொல்லு உதயா” என்றான். 

“சாப்பிட்டீங்களா?” என்றவளின் கேள்வியில் அதுவரையிருந்த கவலை எல்லாம் ஒரேடியாக காணாமல் போகவில்லை என்றாலும் கூட அந்த ஒரு நிமிடம் ஒரு அமைதி. எத்தனை எளிமையான ஒற்றை வார்த்தை, ஆனால் அது தெரியாதவரிடம் கூட கேட்கலாம், தெரிந்தவரிடமும் கேட்கலாம். வெறும் சொல்லென நினைத்து சிலர் சொல்லலாம், ஆனால் அதனை கேட்பவருக்கு அதுவொரு அக்கறையின் வெளிப்பாடு. நினைத்தலின் குறியீடு. 

Advertisement

Advertisement

உணவு நிறையாவிட்டால் உள்ளம் நிறையாதல்லவா? அப்படித்தான் லாலாவுக்கு அந்தவொரு சொல் தொட்டது. எப்போதுமே உதய நிலா கேட்டுவிடுவாள். அவளை நினைக்கவும் புன்னகை விரிய

“ரெண்டு தோசை ஒரு வாழைப்பழம். நீ?” 

Advertisement

“சாப்பிட்டேன் லாலா. காலையில இருந்து மெசெஜ் பார்க்கல, பேசல. ஏன்?” என்று சரியாக அவனுக்குப் பிடிக்காத கேள்வியில் வந்து நிறுத்தினாள் நிலா.

“உதயா! நீ மட்டும் அந்த கேள்வி கேட்காம இருந்தா நம்ம ஜாலியா பேசலாம். நாந்தான் டைம் கேட்டேன்ல, மறுபடியும் அதையே பேசினா நான் என்ன பேசுறது? நீயே சொல்லேன்” லாலா மனதிலுள்ளதை அப்படியே பகிர உதய நிலா அவனிடம் காரணம் சொல்லி களைத்துப்போனாள். 

காதலித்தால் திருமணம் தானே? அவன் வேலை, சம்பளம் எதுவும் அவளுக்குப் பிரச்சனையாக இல்லை. லாலா என்ற தனிமனிதனை அவள் காதலித்தாள், அவனின் அன்பினை, பண்பினை, எளிமையினை நேசித்தாள். ஆனால் லாலாவிடம் இத்தனை பிடிவாதமிருக்குமென உதய நிலா இந்த ஒரு வருடத்தில் அறிந்ததில்லை. அந்த பிடிவாதம் பெரிதா என் மீதான பிரியம் பெரிதா என்ற கேள்வியில் வந்து நின்றாள் அவள். 

“என் கேள்விக்கு நோ சொல்லிட்டா பேசாம இருந்திடலாம் லாலா.” கோபமாக சொன்னாள் உதயநிலா. 

அதாவது உதய நிலாவை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமாம். லாலாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவ்வளவு கோபம். எதையாவது உடைக்கலாம் என்றாலும் கூட ஹவுஸ் ஓனருக்கு யார் பதில் சொல்வது என்ற நிதர்சனத்திலும் உடைத்து அந்த பொருளுக்குப் பணம் கொடுக்க வேண்டுமே என்ற கணக்கெல்லாம் நொடி பொழுதில் தோன்றி மறைய அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான். 

“நான் கல்யாணத்துக்கு ரெடியில்ல உதய நிலா. அதை உனக்கு முன்னாடியே சொல்லிட்டேன், இப்படி அடம்பிடிக்காத. எனக்குப் பிடிக்கல” லாலாவும் சில நொடி அமைதிக்குப் பின் சொல்ல 

“எனக்காக யோசிக்க மாட்டீங்களா லாலா? அம்மாவுக்கு நான் மட்டும்தானே? என்ன இப்போ கல்யாணம் பண்ணினாலும் உங்க இஷ்டப்படி இருங்க சொல்லிட்டேன். நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், இப்ப மாதிரியே நீங்க எக்ஸாம்க்குப் படிங்க” உதய நிலாவுக்கு லாலாவை இழக்க மனமில்லை. அதே நேரம் அம்மாவின் ஆசையும் நியாயம்தானே? ஒற்றை மனுஷியாகத் தன் சுகம் தவிர்த்து, தனக்காகவே வாழ்கிறவரின் ஆசை நியாயம் தானே? ஒரே மகளின் திருமணம் நலமாக இருக்கும்போதே முடிக்க நினைக்கிறார். 

“அதெல்லாம் சரிவராது” லாலா பட்டென மறுத்தான். 

“அப்போ என்ன செய்யலாம் சொல்லுங்க” 

“நீ நாளைக்கு சக்திகிட்ட பேசு” என்றான். 

“என்ன ரெகமெண்டேஷனா?” 

“எஸ்”

“ஓஹ், சரி அப்போ நான் வைக்கிறேன். குட் நைட்” என்று  நிலா போய்விட, லாலா சக்திக்குச் செய்தி அனுப்பிவிட்டு அவனும் உறங்கினான்.

அடுத்த நாள் அகாடெமியில் லாலாவின் நாள் கழிய, சக்தி மாலையில் அழைத்தான்.

“சொல்லு மாப்ள, நிலா கிட்ட பேசினியா?”

“பேசிட்டேன் டா.”

“அப்பாடா, எக்ஸாம் ரிசல்ட் மாதிரி அவ என்ன சொல்வாளோனு டென்ஷனா இருந்தேன் சக்தி. சொல்லு ஓகே தானே?”

“ஓகே தான்! பட் வித் கண்டிஷன்ஸ்” என்று சக்தி நிறுத்த

“சட்டுனு சொல்லுடா” என்று அவசரப்பட்டான் லாலா.

“இன்னும் ரெண்டு மாசம் டைம். தங்கச்சிக்கு அதுக்குள்ள நீ ஓகே சொல்லலன்னா நானே தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளைப் பார்ப்பேன்” சக்தி சாதாரணமாக சொல்லிவிட லாலாவுக்கு எரிந்தது.

“நான் இல்லாம எங்க இருந்து வந்தா தொங்கச்சி? கடுப்பேத்தாத சக்தி” என்றான் கோபமாக.

“இங்க பாருடா லாலா. உதயா மட்டும் என்கிட்ட பேசல, அவங்கம்மாவும் பேசினாங்க. அவங்க சொல்றதும் நியாயம்தானே? ஓவரா பண்ணாம ஒத்துக்கோ டா. உனக்குத் தானா ஒரு பொண்ணு லவ் சொல்லி, அவ வீட்லயும் ஒத்துக்கிட்டு வந்தா அதோட அருமை தெரியலடா. சும்மா அடம் பண்ணிட்டு இருக்காத. அங்கங்க போய் பார்த்தா தான் தெரியும் லட்ச லட்சமா சம்பாரிக்குறவனை கூட பொண்ணுங்க சொட்டை மொட்டைனு ரிஜெக்ட் பண்றாங்க. இல்லையா கார் இருந்தாதான் கல்யாணம் சொல்றாங்க. இதுல சில பேர்லாம் ஹெலிகாப்டர் மாப்பிள்ளை கேட்கிறாங்க. எதிர்ப்பார்ப்பு இருக்க வேண்டிதான், ஆனா இப்போ சிலருக்கு அதெல்லாம் ரொம்ப அதிகம். புரிஞ்சதா?” 

“புரிஞ்சதுடா, நீயே சொல்ற லட்சம் ரூபா சம்பாதிக்காத உன் பின்னாடி ஒருத்தி சுத்துறா. ஒழுங்கா அவளுக்கு ஓகே சொல்லாம உனக்கு ஏன் வீராப்புன்னு கேட்கிற. அதானே?” 

லாலா வேதனையை விழுங்கி கோபமாகப் பேசினான். சக்தி அந்த விதமாக சொல்லவில்லையென்றாலும் அதுவும் ஒரு அர்த்தம்தானே? லாலா காயப்பட்டுப்போனான். இதற்குத்தான் தனக்கென ஒரு அடையாளம் வந்தபின் திருமணம் செய்ய நினைக்கிறான். 

அது வேலை, பொருளாதாரம் என்று பல கிளைகள் கொண்டதாக இருந்தாலும் ஐந்து வருடமாக உழைத்ததற்கு வேலை கிடைக்காவிட்டால் அர்த்தமே இல்லை என்பது லாலாவின் மனதில் ஆழப்பதிந்த எண்ணம். வெற்றிக்காக கடைசி வரை போராடினாலும் வெற்றி கிட்டாவிடில் அதற்காக செய்த முயற்சிகள் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. இன்னும் முயன்றிருக்கலாம் என்ற அறிவுரை மட்டுமே கிட்டும். லாலா அதனை விரும்பவில்லை. 

அப்பா, சித்தப்பா, சக்தி போல் அவனுக்கும் சர்க்கார் உத்தியோகம் வேண்டும். 

காதல், அவன் கேட்காமல் வந்ததுதான். வேண்டாம் என்று மறுத்திருக்கலாம், அன்று மறுக்க மனமில்லை. சென்னை மா நகரில் தன்னந்தனியே வந்திருந்தவனுக்குத் தனிமை மட்டும் துணையாக இருக்க ஆறுதலாக, நட்பாக தானாக கரம் நீட்டியவளைத் தள்ளிவிட தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் நட்பை, நம்பிக்கையைத் தேடியவனுக்குக் கிடைத்தவள்தான் உதயநிலா.

சக்தி இடக்கையினால் தலையைத் தேய்த்துக்கொண்டான். நிதர்சனம் பேசுகிறேன் என்று லாலாவைக் காயப்படுத்தியது புரிந்தது. உதய நிலாவின் அம்மா உமா அவனிடம் பேசிய விதம் மிகவும் நியாயமாகப்பட்டது, உதயாவையும் அவனுக்குத் தெரியும். அந்த பெண் நண்பனுக்கு நல்லதொரு துணையாக இருப்பாள் என்று நம்பினான். 

“இங்க பாருங்க தம்பி, என் பொண்ணுக்கு விருப்பமான வாழ்க்கை அமைஞ்சா சந்தோஷம். அதுக்காகத்தான் அவளுக்கு லாலா தம்பியைப் பிடிக்கும்னு சொன்னதும் நான் சம்மதிச்சேன். எனக்கு அவ ஒரே பொண்ணு தம்பி, திடீர்னு ஒரு நாள் எனக்கு எதாவது ஆகிடுச்சுன்னா என் பொண்ணு தனியா நிப்பா ப்பா. அதை நினைச்சு நினைச்சு எனக்குத் தூக்கமில்ல, என் நிலைமையில இருந்து யோசிச்சுப் பாருங்க இன்னிக்கு லாலா தம்பிக்கு நல்ல வேலையில்லையா? எனக்கு அது பிரச்சனையில்லை. என் பொண்ணுக்குக் கடவுள் புண்ணியத்துல நல்ல வேலையிருக்கு, பணம் இன்னிக்கு வரும் போகும். அப்படியொன்னும் அவர் வேலைக்குப் போகாம இல்லையே…எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வரணுமில்லையா?”

“அப்படி அவருக்கு இஷ்டமில்லன்னா ஒரேடியா சொல்ல சொல்லிடுங்க, என் பொண்ணுக்குக் கொஞ்ச நாள் கஷ்டமாயிருக்கும், அப்புறம் பழகிப்பா. அவ அப்பா ஒரே நாள்ல எங்களை விட்டுட்டுப் போய்ட்டார், அதையே தாங்கிட்டுதான் இருக்கா. கஷ்டமா இருந்தாலும் என் பொண்ணு யோசிச்சு  நான் சொல்றதையாச்சும் கேட்பா. உங்க தங்கச்சின்னா நீங்க என்ன செய்வீங்கனு யோசிங்க தம்பி.” என்று அவ்வளவு நேரம் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!