Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அரங்கேற்ற வேளை – 26

அன்று காலையில் லாலா சாதாரணமாக இருந்தான். உதயா கூட அடிக்கடி அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் அருகே வந்த லாலா, தலையிலிருந்த ஈரத்தை உதயாவின் மேல் உதறி,

“நல்லா பார்த்துக்கோ” என்று முன்னே நின்றான்.

சட்டையின்றி பேண்ட் மட்டும் அணிந்திருந்தவனின் தலையில் இருந்தும் முகத்திலிருந்தும் நீர் வழிந்தது.



Advertisement

“என்ன பார்க்கணும்?” என்று உதயா கணவனை ரசித்தபடி கேட்க,

“என்னைத்தான் பார்க்கணும்” என்றான் ரசனையாக.

“அய்யே! என்ன லாலா?” என்று உதயா கேட்க,

Advertisement

“அதை நாந்தான் கேட்கணும். என்னையே நீதான் உத்துப் பார்த்துட்டு இருந்த, சரி பாவம் பொண்ணு கஷ்டப்பட்டுப் பார்க்க வேண்டாமே, நல்லா சைட் அடிக்கட்டும்னு காட்சித் தர வந்தேன். பார்த்துக்கோ” என்று நின்ற இடத்திலே வட்டமடித்தவனை கண்டு வாய்விட்டு சிரித்தவள்,

Advertisement

“அதுவா? நேத்தெல்லாம் டென்ஷனா இருந்தீங்களே, இன்னும் கொஞ்ச நேரத்துல அத்தை மாமாவை அழைக்க போகணுமே. ஸோ” என்று உதயா இழுக்க,

அவளை தன்னருகில் நெருக்கமாக இழுத்தவன், உதயாவின் முகத்தோடு உரசிட அவன் உடலின் குளுமை அவளுக்கும் பரவியது.

“ஆஹ்..” என்றபடி அவன் அணைப்பை எதிர்ப்பாராதவள் அவன் தோள்ப்பற்றி நின்றாள்.

Advertisement

“அதாவது மிஸஸ்.லாலா. எனக்கு எங்கப்பாவைப் பார்த்து பயம்தான்! ஆனா முன்னாடியெல்லாம் எந்த முடிவெடுத்தாலும் சொல்ல பயமாயிருக்கும். ஒருவேளை அந்த முடிவு பிடிக்காம போயிடுச்சுன்னா என்னையும் சித்தப்பா மாதிரி ஒதுக்கி வச்சிடுவாங்களோன்னு..”

“இப்போ மட்டும் ஒதுக்க மாட்டாங்களா?” உதயா கணவனின் கண்பார்த்து கதைக்க,

“ஒதுக்கினாலும் இப்படி ஒரு அழகான பொண்ணோடதானே ஒதுங்குறேன், ஸோ கவலை இல்லை” என்றான் கண்ணடித்து.

அவள் ஆரம்ப காலத்தில் சந்தித்த லாலா, எதையும் எளிதாக ஏற்கும், இயல்பாக பேசும் லாலாவை இத்தனை மாதங்களுக்குப் பிறகு பார்ப்பதில் உதயாவினுள் அலாதி ஆனந்தம்.

உதயாவின் அருகாமை லாலாவின் அச்சங்களை களையாவிட்டாலும், அந்த அச்சங்களை எதிர்கொள்கின்ற துணிவைத் தந்தன.

“இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா நமக்குக் குட்டியா ஒரு பாப்பா வரும். அப்பவும் நான் எங்கப்பாவுக்குப் பயந்து இருக்கக் கூடாது இல்லையா? சில நேரம் யார் என்ன நினைச்சா என்னனு நமக்கான முடிவை எடுக்கலன்னா அதென்ன சுதந்திரம்?” என்றான் சுதந்திர விலாசத்துக்காரன்.

உதயாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

“நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?” என்றபடி உதயாவின் உதடுகளை விரல்களால் லாலா வருட,

“நீங்க சந்தோஷமா இருந்தா நானும் சந்தோஷமா இருப்பேன்” என்று உதயா இன்னும் விரிந்த புன்னகையோடு சொல்ல,

“அப்படியா?” என்று ஆச்சரியம் போல கேட்டவன்,

“நானும் உன் சந்தோஷத்துல கலந்துக்கிறேன்” என்றவன் நொடியில் அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

சில நொடி இதமாய் ஒரு இளைப்பாறல். மனத்தினுள் குளிர்ச்சாரல். வெகுமாதங்களுக்குப் பிறகான அருகாமை கொடுத்த குளுமை என்பதை விட லாலாவின் அந்த உற்சாகம் கொடுத்த உவகை உதயாவிற்கு அதிகம்.

குக்கர் விசில் சத்தம் கேட்கவும் உதயா லாலாவை விட்டு விலகினாள். லாலா புன்னகையோடு அவளை பின்தொடர,

“என் பின்னாடி வராம போய் அத்த மாமாவை ஸ்டேஷன்ல இருந்து பிக் அப் பண்ணிட்டு வாங்க. லேட்டாகிடும்” என்று அவசரப்படுத்தினாள்.

“ட்ரெயின் எங்க வருதுன்னு ட்ராக் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இன்னும் ரீச் ஆக அரை மணி நேரம் மேல இருக்கு. இப்போ கிளம்பிடுவேன்” என்றவன் போகும்போது வாடகை இருசக்கர வாகனத்தில் சென்று, வரும்போது பெற்றோர் இருவரையும் வாடகைக் காரில் அழைத்து வந்தான்.

போகும்போதே இதயத்தில் கனமான உணர்வு. இருந்தாலும் அந்த கனத்தை இனியும் தூக்கி சுமப்பதில்லை என்ற தெளிவில் இருந்தான் லாலா.

எப்போதும் தாத்தா என்ன சொல்வார்? அப்பா என்ன சொல்வார்? யார் என்ன சொல்வார்கள்? என்று மற்ற எல்லாரையும் அவன் மனம் முன்னிறுத்தி இருக்கிறது. இதில் அவனுக்கு என்ன வேண்டும்? என்ன உணர்கிறான் என்பது எப்போதோ பின்னுக்குப் போய்விட்டது.

முப்பதினை தொடுகையில் அந்த உணர்வு அவனை இறுக்கிப் பிடித்து விடுதலைக்குக் கெஞ்சியது. அவனிடமிருந்தே அவனுக்கொரு விடுதலை!

சுதந்திர விலாசத்துக்காரன் அவனுக்கே இட்டுக்கொண்ட சிறை. சுயசிறையிலிருந்து ஒருவர் மீள்வது அத்தனை சுலபமில்லை. சமூக கோட்பாடுகளும், எதிர்ப்பார்ப்புகளும் தனி மனிதனை அவனுடையை வாழ்க்கையை, ஒரே முறையான வாழ்வை அவனுடையை இயல்பின்படி வாழ விடுவதே இல்லை.

சிலர் இந்த கோட்பாடுகளின் கோட்டை அழித்து அவர்களுக்கென பாதை வகுத்து வென்றுவிடுவார்கள், தோற்றாலும் அது அவர்களுக்குத் தடையாக இருப்பதில்லை.

லாலா போன்ற சிலர் அடுத்தவரின் மனத்தை, அவர்கள் தன்னை எப்படி நினைக்கிறார்கள் என்ற பிம்பத்துக்காகவே வாழ்கிறவர்கள். அவர்கள் அதிலிருந்து மீள நினைத்தாலும், சில நேரம் சொல்வதைப் போல அது அத்தனை எளிதாக இருப்பதில்லை.

இப்போதும் அப்படியே! தைரியமாக மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தாலும் அப்பாவை எதிர்கொள்கின்ற நொடியை நினைத்தாலே இதயம் தொண்டையில் நிற்கிற உணர்வு.

படபடவென்று அடித்துக்கொண்டது.

வீட்டிற்கு வரும்வரை பொதுவாக பேசியவர்களிடம் லாலாவும் வாய்த் திறக்கவில்லை. காலையில் நண்பர் மகனின் திருமணத்திற்குக் கிளம்பும் பரபரப்பில் இருந்தார் வாஞ்சிநாதன்.

அதனால் அதனை கெடுக்கவிரும்பாது லாலாவும் அவர்கள் தயாராகும்வரை காத்திருந்து இருவருக்கும் ஆட்டோ புக் செய்து திருமணத்திற்கு அனுப்பி வைத்தான்.

மதியம் அவர்கள் வந்தபோது உதயா வீட்டில் இருந்தாள். லாலா காலையிலேயே அனுமதி பெற்று ஒரு மணி நேரம் தாமதமாக சென்றிருந்தான். ஆகையால், மாமனார் மாமியார் வருகையில் தானாவது வீட்டில் இருக்க வேண்டுமே என்று உதயா வீட்டிலிருந்தே வேலை செய்தாள்.

அவர்கள் மதியம் வரவும்,
“அத்தை மதியத்துக்கு என்ன செய்யட்டும்?” என்று கேட்க,

“நாங்க அங்கேயே சாப்பிட்டு வந்துட்டோம். நீ உனக்கு எதாவது செஞ்சுக்கோ” என்றார் சித்ரா.

“லாலா க்ளாஸ் முடிஞ்சு எப்போ வருவான்மா?” என்று கேட்டார் வாஞ்சிநாதன்.

இன்று திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன் நண்பர்களின் பிள்ளைகள் எல்லாம் பெரிய வேலைகளில் இருக்க, மகன் எப்போது அப்படியொரு உயரத்தை எட்டுவான் என்ற கவலை.

உதயாவுக்கு உண்மையை அவளாக சொல்ல எண்ணமில்லை. இது லாலாவின் உண்மை, அவனாக சொல்லட்டும் என்று நினைத்து,

“ஈவினிங் வருவார் மாமா” என்றாள்.

மருமகளின் லேப்டாப்பில் இருந்து சத்தம் கேட்க, அவளுக்கு வேலையிருப்பதை உணர்ந்து,

“நாங்க டீவி பார்த்துட்டு இருக்கோம் மா, நீ போய் உன் வேலையைப் பாரு” என்றார் வாஞ்சி நாதன்.

உதயாவும், “அத்த, எதாவது வேணும்னா கூப்பிடுங்க. இப்போ கால் அட்டன் பண்ணிட்டு வரேன்” என்று சொல்லி சென்றாள்.

அவள் சென்றதும் வாஞ்சி நாதன் செய்திகள் பார்க்க, சித்ரா பட்டு சேலையிலிருந்து ஒரு சாதாரண சேலைக்கு மாறியவர், பாத்திரங்களை கழுவிப்போட்டார்.

மாலை நான்கு மணி போல உதயா ப்ரேக் போட்டுவிட்டு எழுந்து வந்தாள்.

“அத்தை இப்போ நீங்களும் மாமாவும் டீ தானே குடிப்பீங்க?” என்று கேட்டு உறுதிப்படுத்தியவள், சுவையான தேநீர் கலந்து கொடுத்தாள்.

“என்னம்மா அவன் இவ்வளவு நேரம் க்ளாஸ் எடுத்தா எப்போ படிப்பான்? எக்ஸாம் எதாச்சும் எழுதினானா? ரிசல்ட் எப்போ வரும்?” என்று வாஞ்சி நாதன் கேள்விகளால் மருமகளைத் தாக்கினார்.

“அது… அவருக்குத்தான் தெரியும் மாமா. வந்துடுவார்” என்று சமாளித்தாள்.

ஆறு மணி போல லாலா வீடு வந்து சேர்ந்தான். சோர்வு அவனோடு ஒட்டி உறவாடியது.

அவனது டீஷர்ட் பார்த்தாலே அலுவலகம் சென்று வந்தது தெரியும். ஆனாலும் வாஞ்சி நாதனும், சித்ராவும் அதனை கவனிக்கவில்லை.

“குளிச்சிட்டு வரேன்மா” என்று சொல்லி அறைக்குள் புகுந்தவன் குளித்து இலகுவான டீஷர்ட், ட்ராக் பேண்ட் அணிந்து வெளியே வந்தான்.

உதயா அவன் வரவும் வேலையை முடித்து வந்தாள். அதுவரை அவளுக்குமே புது ப்ராஜக்டின் வேலைகள் சரியாக இருந்தன.

இரவு உணவு முடிந்து சொல்லலாமா வேண்டாமா என்று லாலா அவனுக்குள் பட்டிமன்றம் நடத்த, வாஞ்சி நாதனோ பொறுக்காமல்,

“ஏண்டா இவ்வளவு நேரம் க்ளாஸ் எடுத்தா உனக்குப் படிக்க எங்க நேரம் கிடைக்கும்?” என்று கேட்டார்.

அவன் பயந்த, எதிர்கொள்ள வேண்டிய சூழல் கண்முன்னே நின்றது. தானாக அவன் கண்கள் உதயாவைத் தொட்டன. அவள் கண்களால் கணவனுக்குத் தைரியம் தர பெருமூச்சு விட்டவன்,

“அப்பா, நான் எக்ஸாம் எதுவும் எழுதலப்பா” என்றான்.

“என்ன? ஏண்டா? அதான் எஸ்.எஸ்.சில நிறைய வேகன்சி விட்டிருக்கானே?” என்று அப்போதும் மகனின் முடிவு புரியாது வாஞ்சி நாதன் இயல்பாகக் கேட்டார்.

சித்ரா சீரியலில் மூழ்கி இருந்தார். ஆனாலும் இந்த பேச்சும் காதில் விழத்தான் செய்தது.

“இல்லப்பா, நான் எக்ஸாம்ஸ் எதுவும் எழுதுறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ கொஞ்ச நாளா வேற வேலையில் சேர்ந்துட்டேன்” என்றிட, வாஞ்சி நாதன் கோபமாக மகனைப் பார்த்தார்.

“என்ன சொன்ன? ஏண்டா? அப்போ இத்தன வருஷம் ஏன் படிக்கிறேன், பாஸாவேன்னு வேஸ்ட் பண்ணின?” என்று கோபமாகக் கேட்டார்.

அந்த கோபக்குரலில்தான் சித்ராவின் கவனம் இங்கே முழுமையாக திரும்பியது.

“என்னடா சொல்ற?” என்று அவரும் கேட்க,

“அப்பா இனியும் என் வாழ்க்கையை வேஸ்ட் பண்ண கூடாதுனுதான் இந்த முடிவை எடுத்தேன்” என்று லாலா உறுதியாக சொல்ல, அவன் குரலில் குற்றவுணர்வோ, வருத்தமோ இல்லை.

வேண்டிய அளவு அவன் வருந்திவிட்டான். சில நேரம் எங்கே எதை நிறுத்த வேண்டும் என்ற அளவுகோல் தெரிய வேண்டும். ஒரே வாழ்க்கையை ஒரே குறிக்கோளில் தொலைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். முடிந்தவரை முயற்சி செய்துவிட்டான். அந்த திருப்தி அவனிடமிருந்தது.

“என்ன வேஸ்ட்டா? அறிவிருக்காடா உனக்கு? தாத்தாவுக்குத் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவார் தெரியுமா? இதுக்கா இத்தன வருஷம் நாங்க பொறுமையா இருந்தோம்? உன் இஷ்டப்படி விட்டது தப்பா போச்சு? ஏன் நான் படிக்கல, உன் சித்தப்பா படிக்கல, எங்களை விடு சக்தி பாஸாகல? இதை முன்னாடி பண்ணித் தொலைக்க வேண்டிதானே?” என்று கத்தினார். அவருக்கு அதிர்ச்சியில் குரல் கரகரத்தது.

“ஏண்டா இப்படி பேசுற? ஏன்மா நீதான் இதுக்குக் காரணமா? என் பையன் எவ்வளவு ஆசையா கவர்மெண்ட் வேலைக்குப் போகணும்னு கனவு கண்டான் தெரியுமா?” என்று உதயாவிடம் எகிறிய சித்ரா, கணவனிடம் திரும்பி,

“இதுக்குத்தாங்க அப்பவே சொன்னேன், இவன் வேலைக்குப் போகட்டும் அப்புறம் கல்யாணம் செய்யலாம்னு, நீங்கதான் விரும்புறான், நல்ல சம்மந்தம் அது இதுன்னு பாருங்க. இப்போ என் புள்ளையை அவன் கனவை விட வச்சிட்டா” என்றவருக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

அந்த சூழலை தான் எப்படி கையாள வேண்டும் என்று முன்பே யோசித்து, தயாராக நின்றிருந்த லாலாவுக்கு அம்மாவின் குற்றச்சாட்டை எப்படி எதிர்ப்பது என்று தெரியவில்லை. எப்படி தன்னுடையை முடிவுக்கு எளிதாக உதயாவைக் குற்றவாளியாக்கி விட்டார் என்று அதிர்ச்சியோடு அம்மாவைக் கண்டவன் பார்வை, உதயாவைக் கவலையோடு ஏறிட்டது.

உதயா பேச வர, அதற்குள் வாஞ்சி நாதன் மருமகளிடம்,
“ஏன் மா வேற எதாவது பிரச்சனையா? நீயாச்சும் இவனுக்குச் சொல்லக் கூடாதா ம்மா?” என்று கேட்டார்.

“இல்லை மாமா, இது அவரோட முடிவு. அவர் முடிஞ்சளவு ட்ரை பண்ணிட்டார்” என்ற உதயாவை முடிக்க விடவில்லை சித்ரா.

“என்ன அவனோட முடிவு? உனக்குத் தெரியாமத்தான் அவன் வேலைக்குப் போறானா? எங்ககிட்ட ஏன் இவ்வளவு நாளா சொல்லல? இத்தனை வருஷம் கவர்மெண்ட் உத்யோகந்தான் கனவுன்னு சொன்ன பய இன்னிக்கு இப்படி பேச நீதான் காரணம்” என்று சித்ரா ‘எல்லாம் எதிர்க்கட்சிக்காரன் சதி’ என்று ரீதியில் பேசினார்.

“அம்மா! போதும். சும்மா என்ன அவளைப் பேசிட்டு இருக்க?” என்று லாலாவும் பொறுத்தவன் பேசிவிட,

“எனக்குப் பதில் சொல்லுடா, உங்க தாத்தா கேட்டா என்ன சொல்லுவ? அவர் எவ்வளவு ஆசையா இருந்தார்? இத்தன வருஷமா நீயும் கவர்மெண்ட் வேலைக்குப் போய்டுவன்னு நானும் அவரும் நம்பிட்டு இருந்தோமே அந்த நம்பிக்கைக்கு என்ன பதில்? உன் பையன் கவர்மெண்ட் வேலைக்குப் போய்ட்டானான்னு இன்னிக்குக் கூட என் கூட வேலைப் பார்த்தவங்க கேட்டாங்க, அவங்களுக்கு எல்லாம் நான் என்ன பதில் சொல்றது? அவமானப்படணுமா நான்?” என்றார் அழுத்தமாக.

“உனக்குப் பணப்பிரச்சனையா இருந்தா சொல்லுடா, என் பென்சன் பணம் இருக்கு, நான் தரேன்” என்று வாஞ்சி நாதன் சொல்ல,

“அப்பா, ப்ளீஸ்பா. பணம் பிரச்சனை அதில்லை காரணம். எனக்கு இதுக்கு மேல முடியாதுனு தோணிடுச்சு. தாத்தா என்ன சொல்வார், மத்தவங்க என்ன சொல்வாங்கனு யோசிச்சு பயந்தே எனக்கு வாழ்க்கையில ஏழெட்டு வருஷம் போயிடுச்சுப்பா. இனி எனக்காக வாழணும்னு நான் நினைக்கிறேன்” என்றதும் வாஞ்சி நாதனின் பொறுமை பறந்தது.

“என்னடா இத்தன வருஷம் என்னமோ எங்களுக்காக வாழ்ந்து கிழிச்ச மாதிரி பேசுற? படிச்சு பாஸாகாம இருக்க காரணம் சொல்ற நீ? அவனவன் எந்த சூழ் நிலை வந்தாலும் விடாம படிச்சு எக்ஸாம் பாஸ் பண்றது இல்லையா?”

“எவனோ செஞ்சுட்டுப் போகட்டுமே பா. என்னால முடியல. ஒரு எக்ஸாம் என் வாழ்க்கையாகிடக் கூடாதுப்பா. பாஸானா சரி, ஆகலன்னா அடுத்து.. இப்படி யோசிச்சே தினமும் என்னால வாழ முடியாதுப்பா. இப்போ என்ன ப்ரைவேட்ல வேலைப் பார்த்தா வேலை இல்லையா? உங்களை மாதிரி, சித்தப்பா மாதிரி நான் கவர்மெண்ட் வேலைக்குப் போகலன்னா என்னை வெறுத்துடுவீங்களா? ஒரு எக்ஸாம் என்னோட வர்த்தை முடிவு பண்ணிடாதுப்பா”

“டேய்! ஊர்ல கேட்கிறவங்களுக்கு எல்லாம் நாங்க என்ன பதில் சொல்றது? இப்போ சொல்ற நீ முன்னாடியே சொல்ல என்ன?” என்று சித்ரா திட்ட,

“அம்மா, நானும் ட்ரை பண்ணிப் பார்த்துட்டுதானே சொல்ல முடியும்? எப்படி முன்னாடியே சொல்றது? ஊர்ல உள்ளவங்களுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது ம்மா. முதல்ல எனக்கே இப்படி வேலைக்குப் போகணும்னு ஆசை இல்லை, அது தாத்தாவும் அப்பாவும் சேர்ந்து சின்ன வயசுல இருந்து சொன்னதால வந்தது. இப்போ நான் செய்ற வேலையில நான் சந்தோஷமா இருக்கேன். நிம்மதியா இருக்கேன். எல்லாரையும் யோசிக்கிற நீங்க என்னையும், நான் என்ன நினைக்கிறேன்றதையும் கொஞ்சம் யோசிங்க”

எப்போதும் அடுத்தவர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்காகவே வாழ்ந்திட முடியாது. அது பெற்றவர், மற்றவர் என்று எல்லாருக்கும் பொருந்தும். அப்படித்தான் லாலாவும் அவன் அப்பாவின் எதிர்ப்பார்ப்பின் பிரதியாக இல்லாமல் போனான். அதில் அவருக்கு இன்று வருத்தம் இருந்தாலும் ஒரு நாள் அவனை புரிந்துகொள்வார் என்று நம்பினான்.

அதே நேரம் புரியாவிட்டாலும் அது அவன் பிரச்சனை இல்லை. எல்லாருக்காகவும் அவனால் யோசிக்க முடியாது. எல்லோரின் எதிர்ப்பார்ப்பின் சாயலாக அவன் வாழ்க்கை இருக்க முடியாதே!

சித்ராவின் கண்ணீர் நிற்கவே இல்லை. வாஞ்சி நாதன் மகன் பேசியதில் அதிர்ந்து நின்றார்.

“இப்போ இப்படி பேசிட்டு நாளைக்கு ஃபீல் பண்ண போறடா. ஈசியா சொல்ற, முடியலன்னு” என்று அப்போதும் அவர் பேச, லாலாவுக்குக் கசப்பாக ஒரு உணர்வு.

‘ஈசியாக சொல்கிறேனா?’ என்று தோன்றியது. இந்த முடிவை எடுக்க எத்தனை இரவுகள் தூக்கம் தொலைத்திருப்பான். அவனுடையைக் கனவினை உதறி, மற்றவர்களின் எதிர்ப்பார்ப்புகளை பொய்யாக்கி விட்டோமே என்று எத்தனை அழுதிருப்பான்.. இவருக்கு என்னைப் புரியாது என்று புரிய, பெருமூச்சு அவனிடம்.

அதுவரை பெற்றவர்களும் பிள்ளையும் பேசட்டும் என்று பொறுமையாக இருந்த உதயா பேசினாள்.

“மாமா, ப்ளீஸ். நான் பேசுறேன்னு கோச்சுக்காதீங்க. அவர் அவரால முடிஞ்சதை நிறைய ட்ரை பண்ணி ரொம்ப யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கார். நம்ம எல்லாரையும் விட இந்த முடிவெடுக்க அவருக்குத்தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்..” என்று பேச, வாஞ்சி நாதனிடம் இருந்த பொறுமை சித்ராவிடம் இல்லை.

“இப்படி பேசித்தான் அவனை மாத்தினியா? எங்க என் மகன் கவர்மெண்ட் வேலைக்குப் போய்ட்டா உன் பேச்சைக் கேட்க மாட்டான்னு இப்படி உனக்குக் கீழ வைக்கணும்னு நினைச்சிட்டியா?” என்று பேச லாலாவுக்கு கோபம் வந்தது. அதற்குள் உதயாவே,

“கல்யாண வாழ்க்கையில யாரும் மேல கீழன்னு இல்லை அத்தை. நாங்க அப்படி நினைக்கிறது இல்லை. லாலா எந்த வேலை செஞ்சாலும் அவர் மேல நான் வச்சிருக்க பாசம் போகாது. ஏன்னா நான் லவ் பண்றது லாலான்ற மனுஷனை, அவரோட வேலையை இல்லை” என்றாள் அழுத்தமாக.

“அப்போ எனக்கு என் மகன் மேல பாசமில்லை சொல்றியா?”

“நான் அப்படித்தான் மா நினைக்கிறேன்” என்றான் லாலா பட்டென்று.

“டேய் லாலா..” என்று சித்ரா அழ,

“பின்ன என்னம்மா? நான் ஃபீல் பண்றதை விட்டுட்டு, ஊர்ல அவன் பேசுவான் இவன் பேசுவான்னு தான் ஃபீல் பண்ற? நீதான் இவளுக்கு சமாதானம் சொல்லணும். இப்போ என்னமோ நான் வேலைக்குப் போகாம சும்மா இருக்க மாதிரி அழுது சீன் போடுற. கவர்மெண்ட் கொடுத்தாலும், ப்ரைவேட் கொடுத்தாலும் காசு காசுதான்.”

“உன்னை மாதிரி பேரண்ட்ஸ் யோசிக்கிறதாலதான் ஊர்ல தெருவுக்கு ஒரு அகாடமி வச்சு, அவனவன் கவர்மெண்ட் வேலை வாங்கிடலாம்னு பிஸ்னஸ் பண்றானுங்க. 800 வேகன்சி இருக்க வேலைக்கு 1 லட்சம் பேர் எழுதுறானுங்க. அரசியல்ல கூட பாஸ் பெர்சண்ட் அதிகம் மா.” என்றவன் உதயாவிடம் திரும்பி,

“நான் கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வரேன் உதயா” என்று சொல்லி வேகமாக வெளியேறினான்.

உதயா கவலையோடு நிற்க, அதன்பின் யாரும் எதுவும் பேசவில்லை. கணவன் என்ன மன நிலையில் இருக்கிறானோ என்று எண்ணி அறைக்குள் நுழைந்து அவனுக்கு அழைக்க, அவனோ

“இப்படி பில்டப் பண்ணிட்டு வந்தாதான் அவங்க ஃபீல் பண்ணுவாங்க உதயா. நான் ஒன்னும் ஃபீல் ஆகல. உண்மையை சொல்லப்போனா என் மனசு ரொம்ப லேசா இருக்கு.” என்றவன் மனத்தில் புது உதயம்.

மனத்தின் பாரத்தை இறக்கி வைத்தவனுக்கு, பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சல் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!