Skip to content
Post Views: 438
நீண்ட தூரம் ஓடிய உணர்வில் இருந்தான் லாலா. பெற்றவரிடம் மனத்தை சொல்லியபின் அவனிடம் சொல்லில் அடங்காத ஒரு ஆசுவாசம்.
கடல் சுழலில் சிக்கியவனுக்குச் சிறு துடுப்பு கிடைத்தால் எப்படி பற்றிக்கொள்வானோ, லாலாவுக்கும் அப்படியான ஒரு துளி தைரியம் பிறக்க, அதன் வழியே சென்றவன் மனத்தை சொல்லிவிட்டான்.
Advertisement
அவனின் தைரியம் ‘உதயா’ என்றது அவன் உள்மனம். உண்மை அதுதான்!
Advertisement
மனித மனம் நேசத்தை விட புரிந்துணர்வையே அதிகம் எதிர்ப்பார்க்கும். புரிதல்! அது காதலை விடவும் பெரிது, எளிதாக நேசித்துவிடலாம், ஆனால் நேசம் நீடிக்க, நிலைத்திட புரிதல் அத்தியாவசியம். அப்படியான புரிதல் கொண்ட பெண் கிடைத்துவிட்ட தைரியம், காதல் கொடுத்த துணிச்சலே லாலாவை அவன் முடிவை தெரியப்படுத்த செய்தது. இப்போதும் அவளிடம் பேசிய பின் புன்னகை அவன் இதழ்களில் குடியேறியது.
Advertisement
அவனின் அகநெருக்கடிகள் எல்லாம் கலைந்து போக, மனைவியிடம் பேசிவிட்டு நண்பன் சக்திக்கு அழைத்தான். இரு அழைப்புகள் சென்று நின்றுவிட, பத்து நிமிடத்தில் அவன் அழைத்தான்.
Advertisement
“சொல்லுடா லாலா” சக்தி இயல்பாகச் சொல்ல,
“சொல்லிட்டேன் மாப்ள” என்றான் லாலா.
“என்ன?”
“எங்கப்பா கிட்ட நான் இனி எக்ஸாம்கு ப்ரிப்பேர் பண்றதில்லைனு சொல்லிட்டேன்” என்றதும் சக்தியின் கண்கள் விரிந்தன.
“என்னடா சொல்ற?” என்றான் அதிர்ச்சியாக.
“சொல்லிட்டேன் டா” என்றான் லாலா மீண்டும்.
“அட வெங்காயமே! என்னத்த சொன்ன உங்கப்பாருகிட்ட, தைய தையான்னு சுதந்திர விலாசுத்துக்காரர் குதிச்சிருப்பாரே” என்று நக்கல் செய்ய,
“அவர் குதிச்சார், நான் பார்க்காம வந்துட்டேன்” என்றவன் மாலை நடந்த கதையை அப்படியே சொல்ல, நண்பனை மனத்திற்குள் மெச்சினான் சக்தி.
“இப்போ போனா என்ன சொல்வார்னு தெரியல, உதயாவை வேற தனியா விட்டுட்டு வந்துட்டேன்” என்றான் வருத்தமாக.
“உங்கப்பா சொல்றது இருக்கட்டும், நீ நல்லா இருக்கதானே? நீ ஓகேதானே?” என்று நண்பனின் மன நிலை அறியக் கேட்டான் சக்தி.
“மச்சான், நான் நல்லா இருக்கேன்” லாலா அழுத்திச் சொன்னவன்,
“உண்மையில எனக்கு இன்னிக்குத்தான் விடுதலை கிடைச்ச ஃபீல்டா, உதயாகிட்ட சொல்லிட்டாலும் அப்பா, அம்மாகிட்ட சொல்றவரைக்கும் டைம் பாம் கட்டிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.”
“அப்போ சுதந்திர தின வாழ்த்துகள் மச்சான்” என்று சக்தி வம்பு செய்ய,
“கொய்யால! என்னடா நக்கலா? எவ்வளவு நாள் தூக்கமில்லாம இருந்திருக்கேன் தெரியுமா? இப்போ புது வேலைக்குச் சேர்ந்த பின்னாடி எவ்வளவு நிம்மதியா தூங்குறேன் தெரியுமா” என்றவன் குரல் கரகரத்தது.
உணர்ச்சிப்பெருக்கில் பேசிய நண்பனை எண்ணி மனம் கலங்கினாலும், அவனாகவே தெளிந்திருக்க,
“நல்லா தூங்குற அளவுக்கா வேலை கொடுக்கிறானுங்க, இது தெரியாம நைட்டெல்லாம் முழிச்சுக் காவல் காத்துட்டு நிக்கிறேனே” என்று சக்தி சீண்ட,
“அடேய்!!” என்ற லாலாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“உங்க சித்தப்பா கிட்ட சொல்லிட்டியா?” என்று சக்தி கேட்க,
“அவர்கிட்ட சொல்லணும்னு கால் பண்ணினேன். எடுக்கல, பிசியா இருப்பார் போல” என்றான்.
“சரிடா, ரொம்ப நேரம் வெளியே இருக்காத, தனியா என் தங்கச்சி என் மாமியார்கிட்ட சிக்கியிருக்கும்” என்றான் சக்தி கொஞ்சம் எரிச்சலாக.
சக்தி சொல்லவும் லாலாவுக்கும் அந்தவுணர்வே. அவனுக்குமே புரியவில்லை.
“எங்கம்மா எது நடந்தாலும் உதயாவையே குறை சொல்றாங்கடா, ஒரு கட்டத்துக்கு மேல வெறுத்துடுவேனோன்னு பயமா இருக்கு சக்தி. நீயெல்லாம் எப்படிடா சமாளிக்கிற?” என்றான் ஆயாசமாக.
லாலாவுக்கு அப்பாவிடம் விஷயத்தை சொன்னதை விட, அம்மாவின் சொற்கள் உதயாவைக் காயப்படுத்தியது இப்போது பெரிதாகப்பட்டது.
“நான் என்ன சமாளிக்கிறேன்? எங்க வீட்ல மாமியாரும் மருமகளும் சேர்ந்து என்னை வேணும்னா பாடாப்படுத்துவாங்க” என்றான் சின்ன சிரிப்போடு.
அவன் நினைத்ததற்கு மாறாக, அவன் அம்மா சசிகலாவும் அவன் மனைவி சரோஜினியும் ஒற்றுமையாக இருந்தார்கள்.
ஒற்றுமை என்று சொல்வதை விட, சண்டை, மனஸ்தாபங்கள் இருந்தாலும் மனத்தில் வைத்து கருக்காமல், வெளிப்படையாக பேசிடும் குணம் கொண்டவர்கள். ஆகையால், அவன் வீட்டில் அந்த பிரச்சனை இல்லை.
சக்தியிடம் பேசும்போதே சித்தப்பா சித்ரஞ்சனிடமிருந்து அழைப்பு.
“டேய், சித்தப்பா கூப்பிடுறார்டா” என்று லாலா சொல்ல,
“கான்பிரன்ஸ்ல போடு” என்றான் சக்தி.
அவன் சொன்னவாறே செய்தவன், “சொல்லுங்க சித்தப்பா” என்றிட,
“ஏண்டா? அண்ணங்கிட்ட உன் விஷயம் சொல்றதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்ல மாட்டியா?” என்று கோபமாகக் கத்தினார்.
“என்ன சத்தம் அதிகமிருக்கு?” சின்ன மாமனாரை சீண்டினான் சக்திவேல்.
“டேய், நீயும் அவனோட இருக்கியா?” என்று சித்ரஞ்சன் கடுப்பாகக் கேட்க,
“இல்ல சித்தப்பா, அவன் என்னோட கால் பேசிட்டு இருந்தான்” என்று லாலா சொல்ல,
“என்னாச்சு மாம்ஸ்? உங்க அண்ணன் அண்டாவுல போட்டு வறுத்துட்டார் போல..வாய்ஸ்லயே இவ்வளவு வயலென்ஸ் இருக்கே” சிரிப்பை அடக்கிக் கேட்டான் சக்தி.
“பேசுவடா, உனக்கென்ன நீ மாப்பிள்ளையா போயிட்ட, சிக்கினான் சித்ரஞ்சனு எங்கண்ணன் என்னைத்தானே பேசுறார்?” என்று புலம்பினான் சித்ரஞ்சன்.
“என்னாச்சுன்னு சொல்லிட்டு புலம்பினா கேட்கிற எங்களுக்கு எண்டெர்டெயின்மெண்டா இருக்கும்”
சமத்தான குரலில் சக்தி பேச,
“நீங்க இப்படியே பேசுங்க, நான் போறேன் டா” என்று சித்ரஞ்சனுக்குக் கோபம் வர,
“சாரி சித்தப்பா, சொல்லுங்க” என்று லாலா சமாதானம் செய்ய,
“கோச்சுக்காம சொல்லுங்க மாம்ஸ், மாமான்னு கிண்டல் கூட பண்ணக் கூடாது, சரிங்க மாமா” என்றதும்,
“உன்னையெல்லாம்!” என்று பல்லைக்கடித்த சித்ரஞ்சன்,
“டேய் லாலா, உங்கப்பா போன் பண்ணி நீ வேலைக்குப் போற விஷயம், எக்ஸாம் ப்ரிபேர் பண்ணாம விட்ட விஷயம்னு சொன்னார். உனக்குத் தெரியுமான்னு என்னைக் கேட்டார், டக்குனு கேக்கவும் உண்மை சொல்லணுமா பொய் சொல்லணுமா தெரியாம உண்மையை உளறிட்டேன் டா” என்றதும் சக்தி சத்தமாக சிரித்தான்.
“வாய்மையே வெல்லும்” என்றுவேறு வெறுப்பேற்ற,
“உண்மை பேசுறது நல்லதுதானே சித்தப்பா” என்றான் லாலாவும்.
“கொப்பன் மவனே! யாருக்குடா நல்லது? தெரியாம தெரியும்னு சொல்லிட்டேன். நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா டா? என் புள்ள வந்து சொன்னா உனக்கெங்க புத்திப் போச்சுன்னு பத்து நிமிஷம் என் காதுல மிக்சி ஓட்டிட்டார்” என்றான் பெருமூச்சுடன்.
“அப்புறம் என்னாச்சு சித்தப்பா?”
“அப்புறம் என்ன? அண்ணே, அப்படியில்லைனு நான் செல்போன்லயே கால்ல விழுந்து சமாதானம் செஞ்சேன். உங்கப்பா கிட்ட சொல்லப்போறேன் சொல்லியிருந்தா நானும் ஒழுங்கா பேசிருப்பேன். அவர் என்னமோ நான் ஐடியா கொடுத்து உன்னைக் கெடுத்த மாதிரி பேசிட்டார் டா” என்று வருத்தமாகச் சொன்னான் சித்ரஞ்சன்.
“நான் அவங்க வரவும் சொல்லலாம்னு இருந்தேன் சித்தப்பா. இன்னிக்கு சொல்லணும் ப்ளான் பண்ணல, ஆனா தோணிச்சு, சொல்லிட்டேன். சாரி சித்தப்பா. அப்பா ரொம்பப் பேசிட்டாரா?” மெய்யான வருத்தத்தோடு ஒலித்தது லாலாவின் குரல்.
“அட விடுடா லாலா, உங்கப்பா முதல்ல கத்தினார், அப்புறம் அவர்கிட்ட நான் பொறுமையா பேசி புரிய வச்சிட்டேன்”
“பரவாயில்லையே! வாஞ்சிநாதனையே சரிகட்டியிருக்கீங்க, வெல்டன் மாம்ஸ்” என்று சக்தி பாராட்ட,
“உன்னைப் பேச விட்டிருக்கணும்டா மாப்ள” என்றான் சித்ரஞ்சன்.
“அவன் பேச ரெடித்தான் சித்தப்பா, ஆனா இவன் பேசினா எங்கப்பா இன்னும் டென்ஷன் ஆவார்னுதான் பேச விடுறதில்லை” என்று லாலா சொல்ல,
“சரிடா, அண்ணன் கோவத்துல கத்தினாலும் கண்டுக்காத, அப்புறம் சரியாகிடும்” என்று பேசி சித்ரஞ்சன் வைக்க,
“லாலா, இது உன் லைஃப், உன் முடிவுகள்தான் உன் வாழ்க்கையில முக்கியம். அதனால குழம்பாம தெளிவா இரு. உதயாவை மட்டும் யோசி போதும்” என்று அறிவுறுத்தினான் சக்தி.
அவர்களிடம் பேசியதும் மனம் லேசாக, வீடு வந்தான் லாலா லஜபதி ராய்.
வீடு வந்தவனை வரவேற்றது சித்ராவின் கண்ணீரும் புலம்பலும்.
‘இன்னும் நிற்கவில்லையா?’ என்ற அதிர்வோடு அம்மாவைப் பார்த்தான்.
உதயாவுக்குக் கண் காட்டியவன் அறைக்குள் நுழைந்தான்.
“என்னாச்சு உதயா? அம்மா இன்னும் அழறாங்க?” என்று லாலா கலக்கமாகக் கேட்க,
“நீங்க போனதும் அத்தை என்னைப் பேசினாங்க, மாமா அத்தையைக் கத்தி விட்டாங்க” என்றாள் உதயா.
“நீ ஒன்னும் பேசலயா?”
“ஏன் பேசி பேச்சு வாங்கணும். இப்படித்தான் என்னை நடத்தணும்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்க. அப்போ நான் எப்படி நடந்தாலும் அவங்க மாறப்போறதில்லையே?” என்று உதயா கேள்வி கேட்க,
“கஷ்டமா இருக்கா உதயா?” என்று லாலா அவளின் கரம்பற்றி கண்கள் பார்த்துக் கேட்டான். அவன் கண்களின் பரிபாஷை பாவைக்குப் புரிந்தது.
“அத்தை இப்படித்தான் என்னை டீரிட் பண்ணனும்னுன்றது அவங்க மனநிலை. அதுக்காக நான் வருத்தப்பட்டா என் மனசுக்குத்தான் கவலை. ஐ டோண்ட் டிசர்வ் தட் ஹேட்னு எனக்குத் தெரியும். முதல்ல கஷ்டமா இருந்துச்சு லாலா, அப்புறம் பழகிடுச்சு. அவங்களோட எண்ணங்களுக்கு நான் பொறுப்பில்லையே?” என்று கேட்டவளின் பக்குவத்தை எண்ணி சிலாகிப்பதா இல்லை வயதானாலும் கூட பக்குவமின்றி பேசும் அம்மாவை எண்ணி வருந்துவதா என்று தெரியாமல் இருமுக உணர்ச்சியில் தவித்தான் லாலா லஜபதி ராய்.
“சாப்பிட்டீங்களா? செஞ்சாச்சா இல்லை வாங்கிட்டு வரவா?” லாலா தயக்கத்தோடு இழுக்க,
“செஞ்சுட்டேன். மாமாவைக் கூப்பிட்டேன், நீங்க வரவும் சாப்பிடுறேன் சொன்னாங்க” என்றதும் லாலா முகம் பிரகாசித்தது.
என்ன இருந்தாலும் அப்பாவைத் தேடும் பிள்ளைதானே?
“இரு, நான் ப்ரஷ் ஆகிட்டு அப்பாவைக் கூப்பிடுறேன்” என்றவன் ஓய்வறை சென்று வந்தான்.
“அப்பா, வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க, அவர் பார்வை மனைவியைத் தொட்டது.
“அம்மா, வாம்மா” என்று கூப்பிட, அவரோ பதில் பேசவில்லை.
“நீயும் உதயாவும் வந்து சாப்பிடுங்க. அவளா வரட்டும்” என்று வாஞ்சி நாதன் சொல்லிவிட, உதயா போய் மாமியாரைக் கெஞ்சவெல்லாம் இல்லை.
என்ன செய்தாலும் பேசும் மாமியாருக்கு எதுவும் செய்யாமல் இருப்பதே சிறப்பு என்ற பாடத்தைக் கற்று இருந்தாள்.
லாலாவுக்கு அப்படி இருக்க முடியவில்லை. சித்ராவுக்கு லாலா என்றால் உயிர். தங்கையைவிடவும் தன் மீதுதான் அம்மாவுக்குக் கூடுதல் பாசம் என்று அறிவான்.
“நீங்களும் உதயாவும் சாப்பிடுங்கப்பா. மா, என்னோட வா” என்று அவரை அழைக்க,
“போடா” என்றார்.
“மா, ப்ளீஸ் ரூமுக்கு வா” என்று மல்லுக்கட்டி அவரை இழுத்தான்.
மருமகள் முன் மகனைக் கெஞ்ச விட விரும்பாமல், அறைக்குள் சென்றார்.
“என்னடா?” என்றார் சலிப்பாக.
“உட்காரும்மா” என்றான் லாலா.
சித்ரா மகனை முறைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
“என்னம்மா உன் பிரச்சனை?” என்று லாலா ஆரம்பிக்க,
“நாந்தான் இப்போ பிரச்சனையா தெரியறனா?” என்று கேட்க, லாலா பல்லைக் கடித்தான்.
“ஆத்தாடி! யம்மா! நிஜமா எனக்கு முடியல, ஏன் மா இப்படி பேசுற? நான் என்ன செஞ்சாலும் உதயாவைக் குறை சொல்ற?” என்று கேட்டவன், அவர் பதில் சொல்ல வர கையமர்த்தி நிறுத்தினான்.
“எக்ஸாம்க்கு படிக்க வேண்டாம்னு வேலைக்குப் போகணும்னு முடிவு செஞ்சது நான். அப்படியே அவ சொல்லியிருந்தாலும் என்ன தப்பு? என் கூட வாழ்க்கை முழுசும் வர போறவ அவதானே? அவ பேச்சைக் கேட்டா என்ன தப்பு?”
“இப்போ அப்பா உன் பேச்சைக் கேட்டா நீ சந்தோஷப்பட மாட்டியா?”
“அப்படியே உங்கப்பாரு கேட்டுட்டாலும்? என்னைக்குடா என் பேச்சைக் கேட்டாரு?” என்று சித்ரா பொறுக்காமல் பேச,
“இதான்மா உன் பிரச்சனை. அப்பா நீ நினைச்ச மாதிரி இல்லை, அதனால் நானும் அப்பா மாதிரி இருக்கணும் நினைக்கிற, உதயாவை நான் நடத்துற மாதிரி அப்பா உன்னை நடத்தியிருந்தா நீ சந்தோஷப்பட்டிருப்ப. அப்பா இல்லாத பொண்ணும்மா அவ, நிறையக் கஷ்டப்பட்டிருக்கா”
“நானும் அவளைக் கஷ்டப்படுத்தியிருக்கேன். நம்ம வீட்டுக்கு வந்தா நிறைய சொந்தம் கிடைக்கும்னு நினைச்சு வந்தாம்மா, ஆனா நின்னா குத்தம், நடந்தா குத்தம்னு ஆத்தாவை விட மோசமான மாமியாரா நடக்குறம்மா.. எனக்கு அவ்வளவு வருத்தமா இருக்கு. நானும் பேசக்கூடாதுனு கம்முனு இருந்தா நீ ரொம்பப் பேசுற! அப்பா கூட என்னைத்தானே பேசினார், நீ கிடைச்ச இளிச்சவாய்னு அவளைப் பேசுற”
“அவளுக்குப் பேசத் தெரியாம இல்லை. பேசக்கூடாதுனு இருக்கா. உன்னைப் பேசினாலும் எனக்குத்தானே கஷ்டமா இருக்கும், அதனால அவ பேசல. ஆனா, நீ அதைப் புரிஞ்சிக்காம அவளைப் பேசி என்னைக் கஷ்டப்படுத்துற” என்றான் தாளமுடியாமல்.
“வாழ்க்கையில அடுத்து என்ன செய்றதுனு யோசிக்க வேண்டிய நேரத்துல, மாமியார் மருமக பிரச்சனையை யோசிக்கிற மாதிரி பண்ணாதம்மா” என்றான் அழுத்தமாக.
“சரிடா, அவளைப் பேசல. அதுக்காக நீ இத்தன வருஷம் படிச்சு ஒரு பெரிய வேலைக்குப் போவன்னு நாங்க கண்ட கனவெல்லாம் இப்போ இல்லைனு ஆகிப்போச்சே, அந்த வருத்தம் எனக்கிருக்காதா? கல்யாணம் செய்யாம இருந்திருந்தா நீ எப்படியாவது பொறுப்பா படிச்சிருப்ப” என்று சித்ரா விடாது பேச.
“கிழிச்சிருப்பேன்” என்றான் லாலா.
error: Content is protected !!