Skip to content
Post Views: 6,004
வேளை 3
சக்தியிடம் பேசிவிட்டு மகளைப் பார்த்தார் உமா. கண்களில் நீரைத் தேக்கிக்கொண்டு நின்ற உதயாவைப் பார்த்தவர்,
Advertisement
“இங்க பாருடி நீ ஆசைப்பட்டன்னுதான் நான் இவ்வளவு பொறுமையா பேசிருக்கேன். அந்த பையனுக்கே இப்போ கல்யாணம் பண்ணினா சரிவராதுனு தோணும்போது அப்படியென்ன அவன்தான் வேணும்னு உனக்குப் பிடிவாதம்?” என்று கோபத்தோடு கேட்டவர்
“உனக்கு இன்னும் ஆறு மாசத்துக்குள்ள நான் கல்யாணம் பண்ணி வச்சிருவேன், அந்த பையன் ஒத்துவந்தா சரி இல்லைன்னு வை நம்ம வருண் சொன்ன பையனைப் பார்த்து முடிச்சிர வேண்டிதான். அந்த போலிஸ் தம்பிக்கிட்ட சொன்னதுதான், இன்னிக்கு உனக்குக் கஷ்டமா இருந்தாலும் பின்னாடி நீ நல்லாயிருப்ப. பணப்பிரச்சனை எதுவுமில்லாம நிலையான வேலை, வீடு, வாசல்னு இருக்க பையன் நம்ம வருண் சொன்னவன். எனக்கு லாலா மேல ஒரு கோவமுமில்லை ஆனாலும் என் பொண்ஂணை யாரு நல்லா சந்தோஷமா வச்சுப்பாங்கனுதான் நான் பார்ப்பேன்.”
Advertisement
Advertisement
“மா, லாலா என்னை சந்தோஷமா வச்சுப்பார்” உதயா மெல்ல சொல்ல
“அதான் சொல்றேனேடி அந்த பையன் நல்ல பையன், என்னைக்காச்சும் நல்ல நிலைமைக்குப் போவான். ஆனா அதுவரைக்கும் நான் காத்திருக்க முடியாது. யார் இருக்கா உனக்கு? உங்கப்பா மாதிரி நாளைக்கே நான் போய் சேர்ந்துட்டா நீ தனியா நிப்ப. நம்ம சொந்தபந்தம்ல உன்னைப் பார்ப்பாங்களா? யாரு செலவு பண்ணி உன்னைக் கட்டிக்கொடுப்பாங்க.”
Advertisement
“ம்மா, படிக்கணும். சொந்த கால்ல நிக்கணும் சொல்லிட்டு இப்போ நீயே ஏன்மா கல்யாணம்னு அவசரப்படுற? யாரும் நம்மைப் பார்க்க வேண்டாம். நான் படிச்சிருக்கேன், வேலையிருக்கு. நான் என்னையும் பார்த்து உன்னையும் பார்த்துப்பேன்” உதயா வேகமாக சொன்னாள்.
உதயாவின் பதிலில் அவள் அம்மாவுக்கு உவகையாக இருந்தது. ஆனாலும், அவர் காட்டிக்கொள்ளவில்லை. தன் பெண் எதற்கும் யாரையும் எதிர்ப்பார்க்கக் கூடாது, எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் தைரியமும் பக்குவமும் அவளுக்கு வேண்டும் என்பதுதானே அவரின் அத்தனை வருட அவா. திடீரென கணவர் ஒரு நாள் இறந்துவிட, அதுவும் தற்கொலை செய்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாது தான் திக்கற்று நின்ற நிலையில் தன் பெண்ணை அவரால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
அதுவரை மிக மிக அழகான ஒரு வாழ்க்கை அவருடையது. அம்மா பேசவும் உதயாவுக்கு அத்தனை வருத்தமாக இருந்தாலும் அவளுக்கு அம்மாவின் மாற்றம் புரியத்தான் செய்தது. அதுவே இத்தனை வருடமாக எந்த எதிர்ப்பார்ப்புமில்லாது ஒரு கட்டுப்பாடோடு அவளையும் வாழ வைக்கிறது. அவளின் எட்டு வயது வரை அம்மாவின் முகம் எப்போதும் சிறு புன்னகையை சுமந்து நிற்கும். மாலையில் அப்பாவோடு அவள் பள்ளியிலிருந்து வரும்போது மகளுக்காக பலகாரம் செய்து வாசலிலே காத்திருப்பார்.
வேகமாக ஓடி வந்து பையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு கதைப் பேசியபடி அம்மா கொடுக்கும் பலகாரத்தை உண்ட நாட்கள் எல்லாம் அவளின் நினைவாய் மட்டுமே இப்போது நிற்கிறது.
அப்பாவின் மரணத்தில் அப்பா மட்டும் மரிக்கவில்லை, அம்மாவின் புன்னகை, இவளின் குழந்தைத்தனம் எல்லாம் மரித்தவுணர்வு. அவள் அப்பா அவர் உயிரோடு குடும்பத்தின் உயிர்ப்பையும் சேர்த்துக் கொண்டுபோய்விட்டார்.
“நீ என்னைப் பார்த்துப்பன்னு தெரியும்டி. எனக்கு அப்புறம் உனக்கு ஒரு குடும்பம் வேண்டாமா?” உமா கேட்க
“ஒரு வருஷம் வெயிட் பண்ணினா லாலா எக்ஸாம் பாஸ் பண்ணிடுவார்மா. அதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறோமே” என்றதும் உமாவின் பார்வை முறைப்பானது.
“என்னடி என்ன நினைச்சிட்டு இருக்க, உன்னை ஒன்னும் நான் இருபது இருபத்திரண்டு வயசுல கல்யாணம் பண்ண சொல்லல. இந்த வருசம் உனக்கு இருபத்தெட்டு முடியப்போகுது, முப்பது வயசுலயா கல்யாணம் பண்ணிக்க நிக்கிற?” என்றார் அதட்டலாக.
“எப்போ பண்ணினா என்னம்மா? லாலாவும் சந்தோஷமா ஒத்துப்பார். அவருக்காக ஒரு வருசம் வெயிட் பண்றேன்மா ப்ளீஸ்” என்று உதயா அம்மாவை கரைத்துவிடும் வண்ணம் பேச உமாவின் உறுதியினை அசைக்க முடியவில்லை.
“நான் போன வருஷமே இந்த பேச்செடுத்தேன், வர வரனை எல்லாம் வேண்டாம் சொன்ன. அப்புறம் நீயே அந்த பையனைப் பிடிச்சிருக்கு, ஆறு மாசம் போகட்டும் சொன்ன. நீ ஆறு மாசம், மூணு மாசம் சொல்லியே ஒரு வருசம் ஓடிப்போச்சு. இப்போ ஒரு பேச்சுக்கு இன்னும் ஒரு வருசம் நீ அவனுக்காக வெயிட் பண்ற வச்சிக்கோ, அவனுக்கு நல்ல கவர்மெண்ட் வேலை கிடைச்சிட்டாலும் உன்னையே நினைச்சிட்டு உனக்காக அவன் வெயிட் பண்ணுவானா? அப்போ வந்து வேற முடிவு சொன்னா என்ன பண்றது?” என்று அம்மா கேட்டதும்
“லாலா அப்படியெல்லாம் கிடையாதும்மா” என்றாள் கோபமாக. கோபத்தில் அவள் குரலும் உயர
“என்னடி கத்துற? அவனை உனக்கு இப்போ ஒரு வருசமா தெரியுமா? உங்கப்பா நம்மை நினைக்காம ஒரே நாள்ல விட்டுப் போனாரே அவர் அப்படி செய்வார் நினைச்சியா?” என்றார் கோபமாக.
அப்பா மீது அம்மாவிற்கு இருக்கும் இந்த தீரா கோபத்திற்குத் தீர்வே கிடையாது என்று உதயாவுக்குத் தெரியும். அப்பாவோடு அவளுக்குத் தெரிந்த பிரியமான அம்மாவும் காணாமல் போய்விட்டார் என்று தோன்றும், பிரியம் போனது என்றில்லாமல் பிரியத்தைக் காட்டத் தெரிந்த அம்மா காணாமல் போய்விட்டார் என்பதே உண்மை.
இதோ அவளுக்குத் திருமணத்திற்குப் பார்க்கும் வயதில் அவர் கணவனை இழந்துவிட்டார். எல்லாம் புரிந்தாலும் அம்மா லாலாவைப் பேசுவதை தாங்கமுடியவில்லை.
“அப்ப வருணண்ணா பார்த்து வச்சிருக்க மாப்பிள்ளையை மட்டும் உங்களுக்கு நல்லா தெரியுமாம்மா?” உதயாவின் நியாயமான கேள்வி கூட அம்மாவுக்குக் கோபம் கொடுத்தது.
“நான் இத்தன வருஷமா உனக்குப் பார்த்து பார்த்துதானே செஞ்சேன்? வருணுக்குத் தெரிஞ்ச பையன், அதைவிட நாளைக்கு நானே இல்லனாலும் உனக்கு ஒரு பிரச்சனைன்னா வருண் தம்பியோ ஐயாவோ உனக்காகக் கேட்பாங்க.”
“ம்மா, நான் லாலா கிட்ட பேசுறேன்மா. ப்ளீஸ்மா எனக்காக கொஞ்சம் டைம் கொடு” என்றாள் கெஞ்சலாக.
உதயா அடம்பிடித்தோ பிடிவாதம் பிடித்தோ பல வருடங்கள் ஆகிறது. அப்பா இல்லாமல் அம்மா உறவுகளின் துணையின்றி ஒற்றையாக வளர்க்க, அவரின் கஷ்டம் புரிந்து பெரிதாக எதுவும் கேட்டதில்லை. திருமண வாழ்க்கை மகளுக்குப் பிடித்ததாக அதே நேரம் அவளுக்கு நல்லதாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.
“என்கிட்ட கெஞ்சாத, போய் அந்த பையன் கிட்ட கேளு. இதே மாதிரி என்கிட்ட கெஞ்சிட்டு நிக்கலாம் நினைக்காத. எனக்கு உன் வாழ்க்கைதான் முக்கியம்! நான் சொல்றதைக் கேட்கிறதுன்னா கேளு இல்லை உன்னிஷ்டப்படிதான் நடப்பன்னா சொல்லிடு நான் எங்கயாச்சும் போயிடுறேன்” என்று மிரட்டலோடு சமையலறைக்குள் நுழைந்தார்.
உதயாவுக்கு அம்மாவையும் லாலாவையும் சமாளிக்க முடியவில்லை. இருவரின் நியாயங்களும் புரிய, இருவருமே அவளுக்கு முக்கியமானவர்கள். அவர்களின் எண்ணமும் ஆசையும் அவளுக்குப் புரிந்தாலும் முடிவெடுக்க முடியாத நிலை. அந்த கோபத்தில் ஒரு வாரம் முழுக்க லாலாவிடம் பேசவில்லை.
லாலாவுக்கு உதய நிலா அழைக்காமல் இருப்பது ஒரு வெறுமை தந்தாலும் நித்தமும் பேசிக்கொண்டும் சுற்றிக்கொண்டும் இருக்க அவனுக்கு நேரமில்லை. அதற்காகவும் அவன் சென்னை வரவில்லை. அகாடெமி வேலை, படிப்பு, வகுப்புகள், தேர்வுகள் என்று அவன் நாட்கள் அட்டவணைப்படி நகர்ந்தன.
ஒருவாரம் முழுதாகக் கடந்திருக்க உதயாவிடம் பேச, அவள் நேரில் அழைத்தாள்.
நிலா பார்த்தல் யாருக்குப் பிடிக்காது?! லாலாவும் ஆவலாக காதலுடன் உதய நிலாவைப் பார்க்க கிளம்பினான். இருள் வானத்தை நிறைத்திருக்க நீரின் இரைச்சலால் நிரம்பியிருந்தது மெரீனா கடற்கரை. அங்காங்கே கடைகள், பஜ்ஜி வாசம், மீன் வாசம், உருளைக்கிழங்கு சிப்ஸ் வாசம், சமோசா வாசம் என்று கடல் வாசத்தை உணரும் முன் அத்தனை வாசம் நாசிக்குள் ஏற, லாலாவும் உதயாவும் மணலில் அமர்ந்தார்கள்.
“சாப்பிட்டீங்களா லாலா?” உதய நிலா வழக்கமான கேள்வியோடு துவங்கியவள் லாலாவின் சோர்ந்த முகம் கண்டே
“இருங்க வரேன்” என்று அவளின் கைப்பையை அவனிடம் திணித்துவிட்டு போனை மட்டும் எடுத்துக்கொண்டு அருகில் வெளிச்சமாக இருந்த இடம் நோக்கி நடந்தாள்.
அவனுக்குப் பிடித்த மசாலா பூரியும் ஸ்ப்ரிங் பொட்டேட்டோவும் வாங்கிக்கொண்டு லாலா உட்கார்ந்தமிடம் வந்தாள்.
“சாப்பிட்டு பேசலாம்” என்றதும் லாலாவின் முகத்தில் சோர்வையும் மீறிய புன்னகை.
“தேங்க்ஸ்டி. அகாடெமியில இன்னிக்கு விக்கெண்ட் க்ளாஸ் காலையில ஏழுக்கு ஆரம்பிச்சு இப்போ ஆறு மணி வரை நடந்துச்சு. எனக்கு ஈவினிங் நாலு டூ ஆறு டைமிங்ஸ், ஸோ அப்படியே வேகமாக பஸ் பிடிச்சு வந்தேன். இந்தா நீ இதை சாப்பிடு” என்று மசாலா பூரியை நீட்ட
“எனக்கு இன்னிக்கு லீவ், வீட்ல நல்லா சாப்பிட்டு டீ குடிச்சிட்டுதான் கிளம்பினேன். நீங்க சாப்பிடுங்க” என்றாள்.
இன்று என்றில்லை. காதல் சொல்லும் முன் ஏன் அவர்களின் முதல் சந்திப்பிலே அவனின் பசி உணர்ந்தவள் போல் உணவு வாங்கிக்கொடுத்தவள் உதயநிலா. லாலாவுக்கு உதய நிலாவை அவ்வளவு பிடிக்கும், ஒரு வேளை முன்பே அவன் விரும்பியது போல் அரசுவேலை கிடைத்திருந்தால் உதயாவுக்கு முன்பே இவன் காதல் உரைத்திருப்பான்.
error: Content is protected !!