Skip to content
Post Views: 5,295
“கொஞ்சம் சாப்பிடுடி, இல்லன்னா எனக்கு வயிறு வலிக்கும்” என்றவனை முறைக்க லாலா பற்கள் தெரிய புன்னகைத்தவன் உதயாவுக்கு ஊட்டிவிட கை நீட்ட, உதயாவிற்கும் புன்னகை. அவன் ஊட்டிவிட ஒரு வாய் மட்டும் வாங்கியவள் அவனை உண்ணச் சொன்னாள்.
அவன் உண்டு முடிக்க சிறிது நேரம் அமைதி. உதயா அவனிடம் அலைப்பேசியை நீட்டினாள்.
Advertisement
அதனை வாங்கிப் பார்த்த லாலா,
Advertisement
“ஹேய் யார் இவன்? யூடுபரா? இல்லை மாடலா? பார்க்க நல்லாயிருக்கான். இந்த நாகினி சீரியல் ஹீரோ மாதிரி இருக்கான்.” என்றவன்
Advertisement
“இந்த வாட்ச் நான் வாங்கணும்னு ரொம்ப வருசமா நினைச்சிட்டு இருக்கேன். சீக்கிரம் வாங்கணும் உதயா” என்றிட
Advertisement
“நாகினி சீரியலா?” உதய நிலா புரியாமல் பார்க்க
“ஹேய் நாகினி தெரியாதா?” என்று பாம்பை போல் கையை வைத்து காட்டியவன்
“நாங்க காலேஜ் படிக்கிறப்ப இதான் பேமஸ், ஹீரோயின் சூப்பரா இருப்பா. ஊர்ல எங்காத்தாவும் எங்கம்மாவும் பார்ப்பாங்க, நானும் அவங்களோட பார்த்திருக்கேன். சரி சொல்லு இவன் யாரு?” என்று கேட்டான்.
“எங்கம்மா எனக்குப் பார்த்துருக்க மாப்பிள்ளை” என்றதும்
“என்ன?” என்று முறைத்தான் லாலா. உடனே அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை போனிலிருந்து அழித்தான்.
“நான் இருக்கும்போது உங்கம்மா உனக்கு வேற மாப்பிள்ள பார்ப்பாங்களா?” என்றான் கோபமாக.
“கல்யாணத்துக்கு ஓகே சொல்லுனு எங்கம்மா என்னை படுத்துறாங்க லாலா”
“அதனால நீயும் என்னை படுத்துற” லாலாவும் கோபமாகச் சொன்னான்.
“எங்கம்மாவும் பாவம்தானே லாலா? என்னைக்கா இருந்தாலும் நம்ம தானே கல்யாணம் பண்ணிக்க போறோம், இல்லை அதுல மாற்றமிருக்கா?” என்று உதயா கேட்ட விதம் லாலாவை உசுப்பேற்றியது.
“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? எனக்கெல்லாம் ஒரே செடி ஒரே பூ’தான் தெரியுமா?” என்றான் எரிச்சலாக.
“அப்போ இப்பவே கல்யாணம் பண்ணினா என்ன? நான் ஒன்னும் இருபத்தஞ்சு வயசுல உங்களை கட்டாயப்படுத்தல, நம்ம ரெண்டு பேருக்குமே இருபத்தெட்டு ஆகிடுச்சு லாலா. எங்கம்மாவோடது நியாயமான ஆசைதானே?”
“அப்ப என்னோடது நியாயமில்லாத ஆசையா? நமக்கு இருபெத்தெட்டு வயசு ஒத்துக்கிறேண்டி, ஆனா இருபெத்துட்டு வயசுல நீ மாசம் எவ்வளவு சம்பாதிக்குற, அதுல பத்து பெர்சண்ட் தான் என் சம்பளம். என் வயசு பசங்க எல்லாம் சொந்தமா வீடு, கார்னு செட்டில் ஆகிட்டாங்க, நான் அப்படியா இருக்கேன்?” ஆதங்கமாகக் கேட்டான் லாலா.
வாழ்க்கைப் பற்றிய பயம், உதயாவும் போய்விடுவாளோ என்ற கலக்கம். தன்னை பற்றிய தாழ்வுணர்வு, அதனை அப்படியே வேறு யாரிடமும் வெளிக்காட்டிட முடியாத வேதனை என்று கலவையான உணர்வோடு லாலா பேச உதயாவுக்கு அதெல்லாம் புரியத்தான் செய்தது.
“அப்போ நான் உங்களை விட அதிகம் சம்பாதிக்குறதுதான் பிரச்சனையா? ஏன் புருஷந்தான் பொண்டாட்டியைப் பார்க்கணுமா? பொண்டாட்டி புருஷனைப் பார்க்கக் கூடாதா?” உதயா லாலாவின் கண்களைப் பார்த்து வேகமாகக் கேட்டாள்.
“ஆத்தாடி! எதிர்கட்சிக்காரன் பேசுற மாதிரி பேசக்கூடாது. எனக்கு நீ நல்லா படிச்சு, நல்ல வேலையில நல்ல சம்பளத்துல இருக்கிறது சந்தோஷம்தான். நீ பெரிய எம்.என்.சி’ல டீம் மேனேஜரா இருக்க, அது ஒன்னும் சாதாரணமில்லை. அது மாதிரி நீயும் என்னை நினைச்சுப் பெருமை பட வேண்டாமா?” என்று உதயாவின் கையைப் பற்றிக் கேட்டான்.
சட்டென்று அவன் கைப்பற்றிட உதயாவின் கவனம் சில நொடிகள் கலைய, அவள் பதில் பேசும் முன் லாலா பேசினான். அத்தனை வெளிப்படையாக யாரிடமும் அவன் பேசியதில்லை. உதயா என்பதால் தன்னை அப்படியே வெளிக்காட்டினான்.
லாலா உதயாவின் இருகரங்களைப் பற்றியவன், “இங்க பாரு உதயா! நான் எங்க வீட்டு மூத்த பிள்ளை. மூத்த பிள்ளைன்னா பொறக்கும்போதே பொறுப்புன்ற டேக்’ஓட இருக்க வேண்டியவங்க. நான் என் வீட்டுக்குனு இது வரை ஒன்னும் செஞ்சதில்ல உதயா, இப்ப சென்னை வந்து ஒரு வருஷம் மேல ஆகிடுச்சு, வேலை வாங்கணும்னுதான் இங்க வந்தேன். இப்போ போய் கல்யாணம்னு நான் நிக்க முடியுமா? கொஞ்சம் யோசிச்சுப் பாரு. என் தங்கச்சி கூட வேலைக்குப் போறா” என்றதும்
“ஏன் பொண்ணுங்க வேலைக்குப் போகக் கூடாதா?” உதயா முறைத்தாள்.
“கொஞ்சம் நேரம் பாரதியார் பேத்தி மாதிரி பேசுறதை நிறுத்திட்டு திலகர் பேரன் சொல்றத கேளு ஆத்தா” லாலா கிண்டலாக சொன்னவன்
“எனக்கு உன்கிட்ட நடிக்கணும்னு அவசியமில்லை உதயா, நான் நானா இருக்கறது உன்கிட்டயும் சக்திகிட்டயும்தான். என் தங்கச்சி வேலைக்குப் போறது சந்தோசம்தான், ஆனா நான் வேலைக்குப் போய் எங்கம்மாவுக்குக் காசு கொடுக்குறதுக்கு முன்னாடி அவ போய்ட்டா. அது எனக்குக் கஷ்டமாதானே இருக்கும்? அப்படியொன்னும் எனக்குப் பரந்த மனசெல்லாம் இல்லடி. ஊர்ல இருக்கவங்க எல்லாம் வேலைக்குப் போய்ட்டு கை நிறைய சம்பாரிச்சுட்டு இருக்கப்ப நான் மட்டும் அப்படியே இருக்கேன். உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது உதயா.”
“நீயெல்லாம் காலேஜ் முடிச்சதும் கேம்பஸ்’ல செலெக்ட் ஆகி உடனே வேலைக்குப் போய்ட்ட, நானும் இந்த எக்ஸாம்ல பாஸ் ஆகிடலாம் பச்சை இங்க்’ல சைன் போட்டிடலாம்னு தினமும் கனவு கண்டுட்டு வாழ்ந்திட்டு இருக்கேன்.. என் கஷ்டம் என்னை மாதிரி இருக்க ஒரு ஆஸ்பிரண்டுக்குத்தான் புரியும்” பற்றியிருந்த உதயாவின் கைகளை விட்டு கடலை வெறித்தபடி சொன்னவன் குரல் மரத்திருந்தது. அப்படியொரு வருத்தமான குரல்.
அது உதயநிலாவை அசைத்தது. அவளுக்கும் லாலா நல்லபடியாக அவன் லட்சியத்தை அடைய வேண்டும் என்பதே அவா. அம்மா அவளை கட்டாயப்படுத்தாவிட்டால் அவளும் ஒரு வருடம் காத்திருப்பாள், அதே நேரம் அவளுக்கு லாலா இப்படி தனிமையான தாழ்வான மன நிலையில் தனியே விடவும் மனதில்லை. அவன் வெற்றிக்கொண்டபின் அவனுக்குத் துணையாக இருப்பதில் என்ன பெருமை? இல்லை அதற்கென்ன அவசியம்? அவனின் தோல்விகளில், இது போல் அவன் துவளும் சமயங்களில் துணையாக, தூணாக அவனோடு நிற்கவே ஆவல் கொண்டது அவள் காதல்.
அதையே அவனிடமும் பகிர, “எனக்கு உன் இண்டன்ஷன் புரியுதுடி. ஆனா எக்ஸாம் மாதிரிதானே கல்யாண வாழ்க்கை. வெளியே இருந்து பார்க்க ஒரு மாதிரியும் உள்ள போய் எழுதினா வேற மாதிரியும் தெரியும். எனக்கு நம்ம கல்யாணம் நல்லா சந்தோசமா நடக்கணும்” லாலா சொல்ல உதயாவின் முகம் வாட்டத்தைக் காட்டியது.
“எனக்கு உங்க கூட என் கல்யாணம் நடக்கிறதுதான் சந்தோசம் லாலா” என்றவளின் நிலையும் லாலாவுக்குப் புரிய
“ஓகே! நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன். பட் கடைசியா ஒரு நாலு மாசம் டைம் கொடுடி. ப்ளீஸ்” என்று கெஞ்சலாகக் கேட்க உதயாவுக்கும் அவன் இந்தளவு இறங்கி வரவும்
“ஓகே லாலா. நாலு மாசம் டைம் எடுத்துக்கோங்க, நான் அதுவரைக்கும் கல்யாண பேச்சை எடுக்க மாட்டேன். அம்மாவை எப்படியாச்சும் சமாளிக்கிறேன், இதையே நாலு மாசம் அப்புறமும் கேட்காதீங்க. எனக்கும் அம்மாவை சமாளிக்க கஷ்டம் லாலா. உங்களோட இந்த எக்ஸாம் கஷ்டம் எனக்குப் புரியாது சொன்னீங்க இல்லையா அப்படித்தான் என் அம்மாவோட கஷ்டம், என்னோட கஷ்டம் எல்லாம்.”
“அம்மாவுக்கு அவங்க நல்லாயிருக்கும்போதே எனக்குக் கல்யாணம் செய்யணும்னு ஆசை. கொஞ்ச நாள் முன்னாடி அவங்க வயசு உள்ள சொந்தக்கார அத்த ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க, அது அப்புறம் இந்த கோவிட் எல்லாம் வந்ததுல இருந்து அம்மாவுக்குப் பயம். அவங்க சொல்றதும் நியாயம்தானே?”
உதயாவும் லாலாவும் ஒருவழியாகப் பேசி ஒரு மனதாக நான்கு மாதங்கள் காத்திருக்க முடிவு செய்தனர். முடிவெடுத்த பின்னும் லாலா முகம் கொஞ்சம் சோர்வாகவே இருக்க,
“அட ஆபிஸர் சார், அதான் டைம் கொடுத்தாச்சே. சிரிங்க” என்று உதயா மெல்ல புன்னகைத்து சொல்ல, லாலாவும் சிரித்தான்.
“லாலா! ஒன்னு சொல்லவா, கோச்சுக்க மாட்டீங்களே?”
“நீ கல்யாணம் தவிர என்ன சொன்னாலும் கோச்சுக்க மாட்டேன்”
உதயா அவனை முறைத்தாலும் விஷயத்தை சொன்னாள்.
“பேசாம இந்த நாலு மாசம் அகாடெமி போகாம நீங்க எக்ஸாம் மட்டும் படிக்கலாமில்ல, உங்களுக்கு அங்கயும் போய்ட்டு டென்சன் தானே?” அக்கறையாக உதயா கேட்க
லாலா அவள் தோளில் கைப்போட்டவன், “நீ ஏன் சொல்றன்னு புரியுது உதயா. பட் அது முடியாது, ஏன்னா நான் அஞ்சாறு வருசமா இந்த கவர்மெண்ட் எக்ஸாம், பேங்க் எல்லாம் ட்ரை பண்றேன். முதல் இரண்டு மூணு வருசம் வீட்லதான் என் செலவுக்குப் பணம் வாங்குவேன், தாத்தா, அப்பா எல்லாம் எக்ஸாமுக்குப் பீஸ் கட்ட பணம் கொடுப்பாங்க, எங்காத்தா சேர்த்து வச்ச காசெல்லாம் எனக்குக் கொடுக்கும். ஆனா சரோ வேலைக்குப் போனதும் எனக்கு ஈகோ ஹர்ட் ஆகிடுச்சு, சரோ பெருசா சம்பளம் வாங்கலனாலும் சொந்த காசுன்றது வேற தானே?”
உதயா தலையசைக்க, “அப்போ இந்த மாதிரி ஆன்லைன்ல டீச் பண்ற வாய்ப்புக் கிடைச்சது, ஏதோ என் செலவுக்கு யூஸ் ஆச்சு. இது என்னோட செல்ப் ரெஸ்பெக்ட் சம்மந்தப்பட்டது உதயா, இப்போ இந்த வேலையெல்லாம் நான் சொன்ன மாதிரி உன் சேலரில ஒன் பெர்சண்ட்னாலும் என் செலவுக்கு நான் யாரையும் எதிர்ப்பார்க்கல, சாப்பாடு, என் ரூம் வாடகை, பஸ் செலவு, எக்ஸாம் பீஸ் போக அம்மாவுக்கு ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் கொடுக்க முடியுது. அகாடெமியில நான் படிக்கிறதுக்கு டைம் இருக்கும் உதயா. நீ கவலைப்படாத! கண்டிப்பா எதாவது எக்ஸாம் க்ளிக் ஆகும்” என்றான் நம்பிக்கையாக. அந்த நம்பிக்கையின் வெளிச்சத்தில் புன்னகைத்தாள் உதய நிலா.
நான்கு மாதங்கள் முடிந்தன தவிர லாலாவின் தேர்வின் முடிவுகள் நல்லதாக இல்லை. அரை மதிப்பெண்ணில் ஒரு தேர்வைத் தோற்றிருந்தான். ஒரு வங்கித் தேர்வில் மொத்த கட் ஆப்’இல் குறைவாக எடுத்திருந்தான்.
நான்கு மாதங்கள் முடியும்வரை அவ்வப்போது அலைப்பேசியில் பேசி, மாதம் இருமுறை நேரில் சந்தித்து என்று இருவரும் காதல் வளர்க்க, நான்கு மாதங்கள் முடிந்து தேர்வு முடிவு வந்த நாளன்று லாலா யாரிடமும் பேசவில்லை. யாருக்கும் அவன் தேர்வு முடிவுகள் வந்தது தெரியாது, ஒரு தேர்வென்றால் நினைவிலிருக்கும், அவன் நிறையத் தேர்வுகள் எழுதுவதால் அவன் தாத்தா திலகரால் கூட நிறைய நினைவு வைத்துக் கேட்க முடிவதில்லை.
லாலாவுக்கு உதய நிலா கொடுத்த காலமும் முடிய, அவள் ஒரு வாரம் வரை அந்த பேச்சை எடுக்கவில்லை. லாலா சற்று ஆசுவாசமாக உணர மீண்டும் அவள் திருமண பேச்சை எடுத்தாள்.
லாலா வழியின்றி தவித்தான். அடுத்தவரின் முடிவுகள் அவனை எப்போதும் ஆட்கொண்டு அழுத்தம் கொடுக்கும் உணர்வில் தத்தளித்தான். நிலாவுக்கு விடைகொடுக்க அவனுக்கு விழைதல் இல்லை, அதே நேரம் அவளோடு இப்போது திருமணம் என்பதும் அவன் விருப்பமாக இல்லை. நிலாவோ அவனுக்கும் அம்மாவிற்கும் இடையில் திண்டாடினாள்.
error: Content is protected !!