Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

இலக்கணம் பெண்மையே!…

அத்தியாயம் 6

       முதலில் அதிர்ந்து நின்ற பிரகாஷ், “உளராத சாலா. நாம முன்னவே பேசி வச்சது தான. நீ போய் என்ன பண்ண போற. நம்ம அஜு இருந்துகுவான். ஒன்னும் பயம் இல்லை. நீயும், பசங்களும் இல்லாம நான் மட்டும் எப்படி தனியா இருப்பேன்…”

     “இப்போ நீங்க பேசுறது தான் உளறல் மாதிரி இருக்கு. நாங்க போறது உறுதி…” என்றவள் இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.



Advertisement

     ஏனோ அவனோடு பேச கூட பிடிக்க வில்லை. கணவனின், மற்றுமொரு உறவின் ஆழம் அறிந்த பின், முகம் பார்த்து கூட பேச முடியவில்லை. அவனை நார் நாராக கிழிக்கும் வெறி தான் கிளம்பியது. தன்னுடைய கோபாமும், ஆதங்கமும் தன் பிள்ளைகள் வாழ்க்கையை நிர்க்கதியாக்கி விட கூடாது என்று அடக்கி கொண்டு இருக்கிறாள். அது புரியாமல், தங்களை விட்டு இருக்க முடியாதாம்… என்னவெல்லாம் சொல்கிறான் படுபாவி…

    பிரகாஷ் உடனே இரு வீட்டுக்கும் தகவல் சொல்லி விட்டன், இல்லையில்லை போட்டு கொடுத்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். இரு பக்கமும் தொடர்ந்து போன் செய்து சாலாவை சத்தம் போட்ட போதும் அவள் பின் வாங்க வில்லை. இந்த வீடும், கணவனும் அவளுக்கு மூச்சு முட்டியது.

    பிரகாஷ் பெரிய கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன். அதில் சாலா மூத்த மருமகளாக தன் பொறுப்பு, கடமையை சரியாக செய்தவள். இதுவரை இவள் மாமியாருடன் ஒரு வார்த்தை தகராறு என்று வந்ததில்லை. அந்தளவு அனுசரித்து, விட்டு கொடுத்து தான் செல்வாள். அதனால் தான் பிரகாஷ், பிரச்சனையை அவர்களிடம் கொண்டு சென்றது.

Advertisement

      ஆனால், சாலா யார் சொல்லியும் பின் வாங்க வில்லை. அவள் முடிவில் உறுதியாக நின்றாள். தன் வீட்டில் கூட வாக்குவாதம் தான் முற்றியது. தவிர, மதுரை செல்வது தடைபட வில்லை. அஞ்சுக்கு கவலை, தன் செல்ல டாடி, பிடித்த பள்ளி, நட்பு வட்டம் என்று எல்லாவற்றையும் விட்டு மதுரைக்கு செல்ல. மகளை கொண்டு மனைவியை கட்டி போட நினைத்த கணவனுக்கு தோல்வி தான் பரிசாக கிடைத்தது.

Advertisement

     “என்னங்க…” என்பதை தாண்டி ஒரு வார்த்தை எதிர்த்து சொல்லாத மனைவி திமிறி கொண்டு நிற்கிறாள். தன்னுடைய கோபம், ஆற்றாமை, கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் அவளிடம் எடுபட வில்லை. பிரகாஷ் கண்ணார காண்கிறான், தன் மனைவி தன்னை தாண்டி செல்கிறாள் என்று… தடுக்க தான் முடியவில்லை.

          சாலா, தன்னை திடமாக காட்டி கொண்டாள். ஆம், அப்படி தான் சொல்ல வேண்டும். மனதளவில் உடைந்து ஒன்னுமே இல்லாமல் போனாள். பெற்ற பிள்ளைகள், தாய் மனம் என்ற அச்சாணி மட்டுமே அவளை முன்னோக்கி நகர்த்தி செல்கிறது.

        அன்று அஜய் உற்சாகமாக வீட்டுக்கு வந்தவன்,

Advertisement

    “அம்மா! என்னை ஸ்கேட்டிங் ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல வெளியேத்திட்டாங்க…” என்று உற்சாகமாக சொல்ல,

     “நீ என்னடா கண்ணா தப்பு பண்ண. உன்னை ஏன் வெளியேத்திட்டாங்க…” என்று சாலா தீவிரமாக கேட்க.

    அஜய், அஞ்சு முகத்தில் புன்னகை பூத்தது.

      “அம்மா… மொத சின்ன ரவுண்ட்ல பிராக்டீஸ் பண்ணுவாங்க. அதுல பாஸ் பண்ணா, வெளியேத்தி பெரிய ரவுண்ட்ல பிராக்டீஸ் பண்ண விடுவாங்க. நான் ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல வெளிய வந்துட்டேன்…” என்று அஜய் தெளிவாக விளக்கம் கொடுக்க.

     “அம்மாக்கு இது கூட தெரியலை…” என்று அஞ்சு சொல்லி சிரிக்க,

     “ஆமாடி எனக்கு எதுவும் தெரியலை. உனக்கு எல்லாம் தெரியுமாக்கும். இந்த சம்ம எனக்கு சொல்லி கொடுன்னு என் பின்னாடியே சுத்துணது யாராம்?…” என்று சாலா குட்டி மகளை கேலி பேச

     அஞ்சு முகம் சுருங்கியது. அதை பார்த்த தாய், மகன் இருவரும் சிரிப்பை அடக்கினார். கடைக்குட்டியை சீண்டி விட்டால், பொருட்களுக்கு தான் சேதாரம்.

       இதுவரை சிரித்த படி தன் குடும்பத்தின் கலாட்டாவை பார்த்திருந்த பிரகாஷ், “பார்த்துக்க அஜய், ஸ்கேட்டிங்ன்னா என்னன்னு தெரியாதா உங்க அம்மா தான் உங்களை தனியா படிக்க வைக்க கிளம்பிட்டா… அவ ஒரு ஜோக்கர்ன்னு அவளுக்கு தெரியலை போல…” என்று நக்கல் செய்து சிரித்தவன். தன் கையில் இருந்த தொலைபேசியை காட்டினான்.

      அதில் விசாலாட்சி முகத்தை ஜோக்கர் புகைப்படத்தில் இணைத்து கேலி சித்திரம் செய்து இருந்தான். பார்த்ததும் பற்றி கொண்டது சாலாக்கு. தந்தையோடு சேர்ந்து அஞ்சுவும் சிரிக்க, அந்த சிரிப்பு தாய், மகன் இருவரையும் தொற்ற வில்லை.

        இது புதியதா என்றால் கிடையாது. இதற்கு முன் பல முறை சாலாவை கேலி, கிண்டல் செய்வான் பிரகாஷ். அப்போது எல்லாம் ஒரு அசட்டை சிரிப்பில் கடந்து விடுவாள். தன் கணவன் தானே, தன் குடும்பம் என்ற எண்ணமும் இருக்கும். ஆனால், தற்போது அப்படியல்ல, உண்மையிலேயே இவளை ஜோக்கராக அல்லவா வைத்து இருக்கிறான்.

     தந்தை கையில் இருந்த போனை பார்த்த அஜய்…

         “அப்பா, இது ஜோக்கர் படமா?…”

     “ஆமாடா கண்ணா…”

     “அம்மா, இந்த ஜோக்கர் படம் பார்த்து இருக்கீங்களா… ஜோக்கர் முட்டாள் கிடையாது, அதிக புத்திசாலி. அதாவது முட்டாள் வேசம் போட்ட புத்திசாலி. முட்டாளா இருக்குறது வேற, முட்டாளா ஆக்கப்படுறது வேற… உண்மையிலேயே எல்லோரும் முட்டாள்ன்னு நினைக்கிற ஜோக்கர் தான், அந்த கதையோட ஹீரோ… நீங்க ஜோக்கர் கிடையாதும்மா, ஜோக்கரா நினைக்கிறாங்க. உண்மையிலேயே அவங்க தான் ஜோக்கர்…” என்று தாய்க்கு விளக்கம் கொடுக்க.

   புது உவகை சாலாக்கு. அட! இந்த ஏமாளிக்கு பிறந்த மகன் புத்திசாலி…

    “நீ நம்புறையா கண்ணா அம்மா, நான் ஜோக்கர் இல்லா தான… என்னை நம்பி மதுரை வருவீங்களா…” என்று சாலா கேட்க.

     உங்களை நம்பாம யாரை நம்ப போறேன். எனக்காக தான அவ்வளவு தூரம் வாரீங்க. அத்தோட ஜோக்கர் வந்து ஹீரோசிம்மா…” என்ற மகனின் வார்த்தை தாய்க்கு ஆறுதல் அளித்தால், தந்தைக்கு காயத்தை தான் அளித்தது.

           “உங்க அம்மா ஹீரோன்னா, அப்ப நான் தான் முட்டாளா அஜய்…” ஆதங்கமாக பிரகாஷ் கேட்க.

     “இருக்கலாம், யாருக்கு தெரியும்…” விட்டெறியான பதில் மகனிடம்

     “என்ன அஜய், இப்படி சொல்ற…” முகம் வாடி போனான் பிரகாஷ்.

     “காந்திஜி யாருப்பா…”

      “அவர் தான்டா தேச தந்தை. நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்…”

    “இந்தியாவோட தேச தந்தை. அவர் எழுதிய சுய சரிதையில என்ன எழுதி இருக்கார். அவரால அவர் மனைவி அனுபவிச்ச கஷ்டங்களை தெளிவா எழுதி இருக்கார். இவர் மாதிரி தான் வாழணும்ன்னு அடையாளம் காட்ட பட்ட ஒருத்தரே, நான் என் மனைவிக்கு உரிய மரியாதை தரலன்னு சொல்லி இருக்கார்… அவரோட வாழ்க்கையை முன் உதாரணமா கொண்டு, எனக்கும் சொல்லி கொடுத்த நீங்க ஏன் ப்பா மாறல…” என்று அஜய் பூடகமாக சொல்ல

    புரியாமல் பார்த்தான் பிரகாஷ். “நான் எந்த தப்பும் செய்யலடா…”

     “தப்பு செய்யாதவங்க யாருமே கிடையாதாம். தப்ப ஒத்துகாதவங்க தான் அதிகமாம்…” மிக நிதானம் அஜய்.

      “விசாலாட்சி என் மனைவிடா… எனக்கு உரிமை இல்லையா. ஒரு சின்ன கேலி தானே…”

       “அந்த ஒரு சின்ன கேலி அம்மாவ ஹார்ட் பண்ணுதுப்பா. அதை நீங்க அவாய்ட் பண்ணலாம் தானே. அன்னைக்கும் அப்படி தான், ஷாலினி அக்கா அம்மாவ கேலி பண்றேன்னு குறைச்சு சொல்றாங்க. நீங்க அமைதியா சிரிச்சுட்டு நிக்கிறிங்க. உங்களை பாராட்டுனா போதுமா, அம்மாவை குறைச்சு பேசுறாங்க. நீங்க கேட்கவே இல்லை. நான் நீங்க கேட்பீங்கன்னு எதிர்பார்த்தேன்…” என்று மகன் வருத்தமாக சொல்ல

      வாயடைத்து போய் பார்த்தான் பிரகாஷ். மகன் வளர்கிறான் என்று உணர முடிந்தது. அத்தோடு எல்லாவற்றையும் கவனிக்கிறான், தெளிவாக சிந்திக்கிறான். ஒரு தந்தையாக பெருமைப்பட வேண்டிய விசயம் தான். பதினாறு தொட்டாச்சு, பெரிய மனிதனாக வளர்ந்து நிக்கிறான்.

      தலை சிறந்த ஒருவனாக தன் மகன் வளர வேண்டும் என்று தான் பல புத்தகங்களை பரிசாக கொடுத்தான் பிரகாஷ். ஒவ்வொரு பிறந்த நாள், விசேஷம் எதுவென்றாலும் பிள்ளைகளுக்கு புத்தகம் தான் வாங்கி கொடுப்பான். அப்பாவின் பரிசு என்றாலே புத்தகம் என்ற கெஸ் இருக்கும். அது என்னவென்பது தான் ஆர்வம். அஜயின் பதினான்காம் பிறந்த நாளின் போது தான் சத்திய சோதனை கை வந்து சேர்ந்தது. வரலாற்று பாடத்தில் படித்த தேச தந்தையின் இன்னுமொரு பரிமாணத்தை அவரின் சுயசரிதையில் படித்ததில் பெரும் தாக்கம் அஜய் மனதில்… அதன் தொட்டு தன் செயல்களில், பேசும் வார்த்தையில் கொஞ்சம் உண்மை, நேர்மையை கையாள தொடங்கினான்.

    சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்த மனைவியின் பின்புறம் வந்து நின்றவன்,

     “இப்ப உனக்கு சந்தோசமா சாலா?…” என்று கடுப்பாக கேட்க.

   “ நான் என்னங்க பண்ணேன். என் மேல ஏன் கோபப்படுறீங்க…”

        “என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்சுடீல. இப்ப உனக்கு சந்தோசமா?…”

    “நானா?… நான் எதுவும் செய்யலை. உங்க மகனை நான் ஏன் பிரிக்க போறேன். அவனுக்கு, நீங்க ஒரு ஹீரோ…”

    அதை தான் நானும் சொல்றேன். என் மகன் என்னை ஹீரோவா நினைச்சான். இப்போ என்னவோ தள்ளி நிக்கிற உணர்வு… அப்பா சொன்னா சரித்தான்னு சொல்ற என் அஜுவ காணம்…” என்று மறுகளாக சொன்னவன்.

      “இங்க பாரு சாலா. எம் பிள்ளைகளுக்கு நான் நல்ல அப்பாவா தான் இருந்துருக்கேன், இருப்பேன். என் பிள்ளைகளை என் கிட்ட இருந்து பிரிக்க மட்டும் நினைக்காத… அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்…” என்று படபடப்பாக பேசினான் பிரகாஷ்.

         அவனுக்கு ஏதோ ஒரு பயம். என்னவென்று வரையறுக்க முடியவில்லை. மகனின் இந்த தைரியம், நிமிர்வு கண்டு பயம் வந்தது. அதுவும் அம்மாக்கா, மகன் முன் நிற்பது அதிர்ச்சியாக இருந்தது.

         அப்பாக்கு தான் எல்லாம் தெரியும். அப்பா தான் என் கூட கிரிக்கெட் ஆடுவார், அப்பா தான் எங்க மிஸ் கிட்ட இங்கிலீஷ்ல பேசுவார், அப்பா கூட தான் ஹோரோர் மூவி பார்ப்பேன், மால் போக அப்பா வந்தா தான் ஜாலியா இருக்கும், எங்க அப்பா நான் என்ன கேட்டாலும் வாங்கி தருவார், என் மாடல் என் டாடி தான்… என்றெல்லாம் பெருமை பேசிய மகன், பட்டென்று அம்மா என்று நிற்பதை ஒரு தந்தையாக ஏற்று கொள்ள முடியவில்லை.

            தன்னையே சுற்றி வரும் மனைவி, பிள்ளைகள் எல்லாம் தன்னை மீறி நிற்பது போல ஒரு தோற்றம். அதை ஏற்று கொள்ள முடியவில்லை. உடைத்து கேட்டு விடலாம் என்று எண்ணிய போதும், கிணறு வெட்ட பூதம் கிளம்பி விட கூடாதே என்ற பயமும் நிரம்பி நின்றது.

    தலையை பிடித்து அமர்ந்து விட்டான். கணவன் அமர்ந்திருந்த தோற்றம் சாலாக்கு என்னவோ போல இருந்தது. எட்டி நில் என்று அறிவு சொன்னாலும், மனம் கேட்க வில்லை. தன்னை போல ஒரு டீ போட்டு கொண்டு போய் வைத்தாள்.

       பிரகாஷ் நிமிர்ந்து மனைவி முகம் பார்த்தான். இது தான் அவன் மனைவி. கோப பட்டு கத்தி வந்தது இவன் தான். ஆனால், பின்னாலே சமாதானம் செய்ய வந்து விடும் ஆள் தான் அவன் மனைவி. கொஞ்சம் ஆறுதல் தோன்ற, சின்ன புன்னகையோடு மனைவியை பார்க்கும் போதே, போன் வைப்ரேட் ஆனது. ஷாலினி தான் அதை பார்த்ததும் சாலா முகம் இறுக,

         அதை கவனிக்காமல் பிரகாஷ் பதட்டத்தோடு போனை தூக்கி கொண்டு ஓடினான்.

     “ஆபீஸ் கால் சாலா…” என்று அவள் கொடுத்த டீயை தொடாமல் கூட பால்கனி சென்று கதவடைத்து கொண்டான்.

      அவன் தொடாமல் வைத்து விட்டு சென்ற டீயை பார்த்தவள். எடுத்து சென்று சிங்கில் ஊற்றினாள். மனம் வெறுமையாக இறுகி கிடந்தது. அடுத்த கால் மணி நேரத்தில் அவரசமான ஆபீஸ் வேலை என்று ஓடி விட்டான். சாலா சோபாவில கண் மூடி சாய்ந்து விட்டாள்.

        மூன்று நாட்களாக ஷாலினியை காண பிரகாஷ் வரவில்லை. அந்த கோபத்தில் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள் ஷாலு…

        “ஷாலு, பிளீஸ் பேசு. எனக்கு நிறைய ஆபீஸ் டென்ஷன். இதுல நீயும் என் மேல கோப பட்ட நான் எண்ண செய்வேன்…” என்று பாவமாக பிரகாஷ் பேச,

      “சரிங்க மாமா. உங்களையும் நான் புரிஞ்சுக்கணும். சாலா அக்கா மாதிரி நானும் உங்களை படுத்தி வைக்க கூடாது. என்னால தான் உங்களை பார்க்காம இருக்க முடியலை. அந்த ஏக்கம் தான் கோபமா மாறி போச்சு…” என்று சமாதான வார்த்தைகளை ஷாலினியும் பறக்க விட்டாள்.

    “எனக்கு தெரியும் ஷாலு, நீ என்னை புரிஞ்சுப்பான்னு… உன்னை விட்டு தள்ளி இருக்குற ஏக்கம் எனக்கு மட்டும் இல்லையா… நீ ஒரு போன் பண்ணதும் எல்லாத்தையும் விட்டு ஏன் ஓடி வாரேன்…” உல்லாசமாக வார்த்தைகள் வெளி வந்தது.

    சாலாவை விட உனக்கு நான் தான் மேட்ச் என்பதை ஏதேனும் ஒன்றில் சொல்லி கொண்டே தான் வருவாள். அங்கீகாரம் இல்லாத உறவு, அவனிடம் தன்னை நிலைக்க முயன்றாள். பிரகாஷ் அதற்கு ஆமாம் என்றோ, இல்லை என்றோ சொல்ல மாட்டான். அவன் அமைதியே அவளின் நம்பிக்கை. காலத்துக்கும் கள்ள தனமாக தங்கள் உறவை வளர்க்க முடியாது அல்லவா….

 ஷாலினி எதிர்பார்ப்பு என்னவென்று பிரகாஷ் நன்கு அறிவான். தன் மனைவியை விட தன்னை யாரும் சரி கட்ட முடியாது என்பதையும் அறிவான். அவனுக்கு குடும்பம் என்றால் சாலாவும், பிள்ளைகளும் மட்டுமே. அதில் ஷாலினி ஒரு நாளும் கிடையாது. இருட்டில் கொண்டாடும் உறவை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாது. இருள் என்பது கண்ணில் புலப்படாத ஒன்று, அது போல தான் ஷாலினியும்.

       ஒரு வேளை விசயம் சாலா வரை சென்றால் கூட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, இனி கடைசி வரை நீ தான் என்று முடித்து கொள்ளலாம். ஒரு மனைவிக்கு வேற என்ன வேண்டும். புரட்சி பெண்ணாகி விவாகரத்து வரை எத்தனை பேர் செல்வார்கள். நிச்சயம் சாலா செல்ல மாட்டாள். ஒரு வாரம் அழுகை, ஒரு மாதம் சண்டை, அடுத்து என்ன இந்த உறவை முடிக்க வேண்டும் என்ற வேண்டுகோள். அவ்வளவு தான் ஒரு மனைவியின் எதிர்பார்ப்பு. தப்பு செய்து விட்டால் திருந்தி விடு. திருந்தி விடுவோம்… இது தான் பிரகாஷ் தீர்மானம்.

      மற்றபடி ஷாலினி போல் காதல் என்றெல்லாம் பிதற்ற வில்லை. நாற்பது வயதில் ஆண்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலுக்கு பிரகாஷ் மனைவியை நாடா, அவளோ நோயில் கிடந்தாள். ஆரம்ப கட்ட ஆசை குறைந்து பிள்ளைகள், அவர்கள் எதிர்காலம், சொந்த வீடு, பெண் பிள்ளைக்கு நகை, தங்களின் முன்னேற்றம் என்று தொடர்ந்து பட்டியல் போடும் சாலா ஒரு வித சலிப்பை கொடுத்தாள்.

   அவனின் நடுவயது சோர்வுக்கு சாலா ஈடு கொடுக்க வில்லை என்ற எண்ணம் வழுக்க ஆரம்பிக்க, ஷாலினி உள் இழுத்து கொண்டாள். அவளின் உற்சாகம், துள்ளல், அடுத்தது என்ன என்ற கவலை இன்றி சிறகை விரித்து உலகம் சுற்றுவது, எந்நேரமும் ஆட்டமும், சந்தோசமும் அவனை வேற ஒரு உலகிற்கு கூட்டி சென்றது.

    இதுவரை குடும்பம் பொறுப்பு என்று இருந்தவனுக்கு, இந்த கலியாட்டம் சந்தோசம் கொடுக்க தன் நிலை மறந்து மூழ்கி விட்டான். திரும்ப எழுந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த உறவு கட்டாயம் கிடையாது, பிரிந்தாலும் சட்டையை கேட்கவும் முடியாது. பிள்ளைகள் பெரிதாகும் முன் எந்த உறவுக்கு முற்று புள்ளி வைத்து, குடும்பம் என்ற அமைப்பில் நுழைந்து விட்டால் போச்சு. ஆண்களுக்கு தான் எந்த வரையறையும் கிடையாதே…

       ஆனால், ஷாலினிக்கு இது போதாதே… வெட்டி கொண்டால் ஒட்டி கொள்ள அவனுக்கு குடும்பம் இருக்கு, தனக்கு?… அவன் தான் வேண்டும். அவனோடு நிலையான உறவு வேண்டும். அவள் தீர்மானம் செய்து கொண்டாள்.

          இவர்கள் இருவரின் சிந்தனையும் கை கொள்ளாமல் தன் வலியில் சாலா மதுரை கிளம்ப ஆயத்தமாகி விட்டாள். அதை அறிந்து சுதா தான், அவளை பிடித்து கொண்டாள்.

     “என்ன சாலா நீ… உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல. நீ ஊர விட்டு போய்ட்டா, எல்லாம் சரியாகுமா… தப்பு பண்ண அவங்களுக்கு தான் கொண்டாட்டம்… எல்லாத்துக்கும் நீயே வசதி பண்ணி கொடுக்குற…” ஆதங்கமாக சுதா கேட்க.

      “இங்கேயே இருந்து நான் எதை காப்பாத்த போறேன் சுதா. ஏற்கனவே முடிஞ்சு போச்சு எல்லாம்… எனக்கு தாலி கட்டுன மனுசன் வழி மாறி போய் பல நாள் ஆச்சு. மனசளவுல, உடலளவுல கெட்டு போன ஒருத்தரை இழுத்து புடிச்சு எனக்கு என்ன ஆக போகுது… அவங்க உல்லாச வாழ்க்கையில ஒரு நாள் ராத்திரி குறஞ்சு போகும். அதை பகல்ல ஈடு கட்டுவாங்க. நான் காவல் காக்கணுமாக்கும்…”

    “என்ன சாலா இப்படி சொல்ற. அப்புறம் உன் வாழ்க்கை?…”

  “அதான் முடிஞ்சு போச்சு…”

    “பிரகாஷ் கிட்ட பேசலாம். இனிமே அந்த கேடுகெட்டவளோட தொடர்பு வேணாம்னு சொல்லு. உம் பிள்ளைகளை பார்க்க சொல்லு, நிச்சயம் மனசு மாறுவாரு… நாலு பேர வச்சு பேசுவோம். கண்டிப்பா பொண்டாட்டி பக்கம் தான் நிப்பாங்க…”

  “அது தான் ஏன் சுதா… என் வலி உனக்கு புரியவே இல்லையாடி…” என்றாள் கண்களில் நீரோடு.

   “என்ன சாலா…” பதறி கேட்க.

    எனக்கு அந்த மனுசன் புருசன் மட்டும் இல்லடி. எனக்கு எல்லாமே அவர் தான். அவர் சிரிச்சா மட்டும் தான் என் வாழ்க்கை விருத்தியாகும்ன்னு நினைச்சு இருந்தேன். ஒவ்வொரு நாளும் சுமங்கலியா வாழ்ற வரத்தை கொடு கடவுளேன்னு வேண்டிய பின்னாடி தான் எம் பிள்ளைகளுக்கே நான் வேண்டுவேன். நல்லது எது வச்சாலும் அவருக்கு தான் முதல்ல, அவர் இல்லாத ஒரு நாள் என் வாழ்க்கையில கிடையாதுன்னு நினைச்சு இருந்தேன். எனக்கு போய் துரோகம் பண்ண அவருக்கு எப்படி மனசு வந்தது சுதா…” விம்மல் வெடித்தது.

   “சாலா!….” தாவிப்பாக சொல்ல.

    “அவங்க வீட்டுல மூத்த பையன். ரொம்ப பொறுப்பு, ரொம்ப அமைதி… எல்லாரும் சொல்லுவாங்க பிரகாஷ் கூட எப்படி வாழ்ற, அவனுக்கு சிரிக்கவே தெரியாதுன்னு… அப்பல்லாம் நான் நினைப்பேன் அவர் எவ்வளவு ரொமான்டிக் ஆளுன்னு எனக்கு தெரியும்ன்னு… அவரோட காதல், ஆசை, மோகம், அழுத்தம் எல்லாம் எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்ன்னு நான் பூரிச்சு இருந்தேன். என்னோட, எனக்கு மட்டுமே சொந்தமான ரகசியத்தை வேற ஒருத்திக்கு பங்கு போட்டு குடுத்துட்டாரே… அதையெல்லாம் மறந்து அவர் கூட நான் எப்படி வாழ்வேன் சுதா…” என்று கதற ஆரம்பிக்க.

    அவளை அணைத்து கொண்டு, “கடந்து போகும் சாலா பிளீஸ்…”

 “கடக்காது சுதா. இந்த பச்சை உடம்புல நெருப்பு வச்சு எரிச்சலும் மறக்காது சுதா…” என்றவள், எழுந்து சென்று ஒரு பையை எடுத்து வந்து கொடுத்தாள்.

   அதை ஆராய்ந்த சுதா அதிர்ந்து போனாள். இவர்கள் அணுகிய டிடெக்டிவ் ஆபீஸில் இருந்து கொடுத்த ஃபைல் அது… பிரகாஷ், ஷாலினியின் அந்தரங்கம் அரங்கேறி இருந்தது. இவ்வளவு விசயங்களை சாலா கேட்டு வாங்கி இருப்பாள் என்று சுதா நினைக்கவே இல்லை.

     பிரகாஷ், ஷாலினியின் நெருக்கமான புகைப்படங்கள், அவர்கள் சுற்றுலா சென்ற தளத்தில் எடுத்து கொண்ட ரொமான்டிக் கிளிக், பணப்பரிமாற்றம், அத்தோடு அவர்கள் பேசிய ஆடியோ, மெசேஜ் எல்லாம் சாலா தனியாக சேகரித்து இருக்கிறாள் போல…

    காதால் கேட்பதே கொடுமை என்று எண்ண, இவள் கண்ணார பார்த்து இருக்கிறாள். இருவரும் முத்தம் கொடுக்கும் போட்டோவை சுதாவாளே பார்க்க முடியவில்லை. இதில் காதல் கவிதை, ஐ லவ் யு, பொண்டாட்டி, செல்லம், டார்லிங் என்று வார்த்தைகளை கட்டிய கணவன் வேற ஒருத்திக்கு சொல்லும் போது கட்டியவள் மனம் என்ன பாடு படும்.

    “போதும் சுதா… எம் பிள்ளைகளுக்கு நான் வேண்டும். நானே சாவை தேடி ஓடி போவேன்னு பயமா இருக்கு. நெஞ்செல்லாம் வலிக்குது. தூக்கமே வரமாட்டது, பசிக்கவே இல்லை. முகம் கூட கழுவ தோணலை. இப்போ எல்லாம் பூ வைக்க கூட பிடிக்கலை. பைத்தியமாகிறது முந்தி நான் போயிரேன். நான் இல்லன்னா அவருக்கு வேற ஒருத்தி பொண்டாட்டி, எம் பிள்ளைகளுக்கு?…”.

 இதற்கு மேல் என்ன சொல்ல முடியும். நல்ல படியாக வழி அனுப்பி வைத்தார்கள்.

    பிரகாஷ் தலைகீழ் உருண்டு பார்த்தும் சாலா இரு பிள்ளைகளை அழைத்து கொண்டு கிளம்பி விட்டாள். அந்த வீடு அவளுக்கு அவ்வளவு நெருக்கம். அஜய் ஒரு வயதில் சென்னைக்கு வாடகை வீட்டில் குடி வந்தார்கள்.

    அப்போதெல்லாம் எதிரே சொந்த வீட்டில் இருப்பவர்கள்களை பார்த்து ஏக்கம் வரும். எப்போது சொந்த வீடு வாங்குவோம் என்று கனவு கண்டு, மகனின் ஒரு வயதில் இருந்தே சீட்டு போட்டு அவனின் பதினான்கு வயதில் வாங்கிய வீடு. இனி எப்போதும் கை சேராது… பொங்கி வரும் கேவலை அடக்கி கொண்டு பஸ் ஏறினாள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!