Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரங்கேற்ற வேளை

அரங்கேற்ற வேளை – 6

வேளை 6 

லாலாவுக்கு அப்பா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதை சித்தப்பா சொன்னதும், ‘அப்பாடா’ என்ற உணர்வு. இருக்கும் இடர்களில் இன்னொன்றா? நிலையான வேலையில்லாத நிலையில் காதல், கல்யாணம் என்று போக அவன் மனமே அகராதியில்லாத வார்த்தை சொல்லி அர்ச்சித்தது. உதயாவின் சூழலும் புரிய, எப்படியோ வீட்டில் சம்மதம் சொன்னதே போதுமென்று நிலையில் இருந்தான்.



Advertisement

இப்போது அப்பாவின் பேச்சைக் கேட்டதும் அப்படியொரு வருத்தம். அப்பா தன்னை குறைவாக நினைக்கிறார் என்றெண்ணம் அவனையே குறைவாக  நினைக்க வைத்தது. உதயாவின் படிப்பு, வேலை எல்லாம் அவனுக்குத் தெரிந்தது என்றாலும் இப்போது ஒரு ஒப்புமை உருவாகி உள்ளத்தை வாட்டியது.  அதே வாட்டத்திலிருந்தவனை உதயாவின் பேச்சு புன்னகைக்க வைத்தது.

“ஊர் பிடிச்சிருக்கா? நம்ம வீடு எப்படியிருக்கு?” என்று லாலாவும் இயல்பாக பேச, உதயாவும் 

Advertisement

Advertisement

“அழகா இருக்கு. நம்ம வீட்டுக்கு இன்னிக்குத்தானே வந்திருக்கேன், சுத்த ஷையா இருக்கு. கீழ மட்டும் சரோ கூட பார்த்தேன்.” என்ற மனைவியின் பேச்சைக் காதுகள் கேட்டாலும், கண்கள் அவன் பேச்சைக் கேட்கவில்லை. மிக இயல்பான ஒரு இடைவேளையில் கையெட்டும் தூரத்தில் மனைவி இருந்தாள். உதயாவை அவன் அதுவரை சேலையில் எல்லாம் கண்டதில்லை. நேற்றுதான் முதல்முறைப் பார்த்தான், இன்று மீண்டும் அருகே காண அகமெல்லாம் ஆவல் அலைமோதியது. 

புதிதாக ஒரு உணர்வு படபடப்பு! ஆவல்களின் ஆர்ப்பரிப்பு! புடவை, பூ என்று பெண்ணிருக்க கண்கள் சிமிட்டாமல் ஒரு களவாடல். லாலா லயித்து தன் லாளிதத்தைக் கண்டான். 

Advertisement

உதயநிலா அதுவரை பேச்சுத்துணைக்கு ஆளின்றி இருந்தவள் லாலா வரவும் இயல்பாகப் பேச, அவன் பதில் பேசாமல் போக அவன் தோளைத் தட்டினாள்.

“லாலா?” என்று உதயா அவனைப் பார்க்க, சட்டென்று லாலாவின் கவனம் மாறியது. உதயாவின் அருகே உட்கார்ந்திருந்தவனுக்கு அப்பாவின் பேச்சு மீண்டும் நினைவில் வர, அவள் தோள் தொடவும் சட்டென்று எழுந்தான்.

“என்னாச்சு?” அவன் திடீர் செய்கையில் உதயா புரியாது கேட்க 

“தூங்கும்போது ஏன் புடவை கட்டியிருக்க, போய் டிரஸ் மாத்திட்டு வா” என்றதும் உதயாவும் புடவையை மாற்றிவிட்டு பட்டியாலா பேண்ட், டாப்ஸ் என்று வந்தாள். 

“ஓகே!  நீ மேல படுத்துக்கோ. நான் கீழ படுத்துக்கிறேன்.  நேத்திலிருந்து சரியா தூங்கல” என்று சொல்லி லாலா தலையணை போர்வையெலலம் எடுக்க 

“மேலயே படுங்க. இதெல்லாம் வேண்டாம்” என்று உதயா தடுக்க லாலா முறைத்தான். அவனே மனைவியை அருகே வைத்துக்கொண்டு கட்டுப்பாடெல்லாம் தளர்ந்து விடுமோ என்று உள்ளுக்குள் அச்சப்பட்டு, இன்னும் கொஞ்சம் கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் கடனாக கிடைத்தாலும் வாங்கிக்கொள்ளும் நிலையில் இருந்தான். 

இதுவரை இப்படியொரு தனிமை கிட்டியதில்லை, அதோடு உரிமையும். ‘ரைட்ஸ் ஆர் டேஞ்சரஸ்’(உரிமைகள் ஆபத்தானவை) என்று நினைத்தான் லாலா. எப்போதும் பொது இடங்களில் சந்திப்பார்கள், காதலோடு கண்ணியமும் உடனிருக்கும். ஆசையாக கைகோர்த்தல் அவ்வளவுதான் அவர்களின் நெருக்கம். 

இன்றோ உரிமையும் தனிமையும் உவகை கொடுக்காமல் அவனுக்கு உயவினை(suffering) கொடுத்தன. பிடித்த பெண்ணோடு திருமணம், ஆனாலும் ஒரு பிடித்தமின்மை. அவன் மீதே அவனுக்குக் கோபம், அந்த வேளையை அனுபவிக்க இயலாத கோபம். உதய நிலாவைப் பார்க்க வேண்டும் என்று மனது உந்தினாலும் தலையைத் தூக்கவில்லை அவன். தரையில் படுத்திருந்தவன் தப்பியும் அவள் முகம் பார்க்கவில்லை. 

பார்க்க பார்க்க கை கோர்க்க, காதல் செய்ய, முத்தமிட என்று அவனுக்கும் அவாக்கள் அணிவகுத்தன. பார்க்காமல் இருப்பதே நல்லதென்று எண்ணினான். அதே நேரம் அப்பாவின் பேச்சு, அது கொடுத்த காயம் கட்டுப்பாட்டைத் தளர்த்த விடாமல் அவனை கண்மூட வைத்தது. திருமணமே எனக்குப் பெண் கிடைக்காது, இவள் என் தகுதிக்கு அதிகம் என்ற எண்ணத்தில் என் வீட்டினர் செய்து வைத்திருக்கின்றனர், என் தகுதியை  நான் உயர்த்த வேண்டும் என்ற தீரா உறுதியோடு உறங்கிப்போனான் லாலா.

உதயா நிலா மகிழவும் முடியாமல் வருந்தவும் முடியாமல் லாலா இருக்கும்போதே தனிமையில் தவிப்போடு இருந்தாள். கீழே படுத்திருந்தவனையே லேசாய் இருந்த அந்த அறை வெளிச்சத்தில் அவள் கண்கள் பார்த்தன. அவனை புரிந்தது, அம்மாவின் முகத்தில் இன்று கண்ட நிம்மதி அவளுக்குத் திருப்தியாக இருந்தது. லாலாவுக்கு இப்போது திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பது நிச்சயம் தெரியும், இருந்தும் அவளுக்காக செய்ததே பிரியத்தின் செயல்தானே?

அதே நேரம் முதலிரவில் அவன் தனியாக படுப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. பேச கூட செய்யாமல் அவன் விலகிச் சென்றதில் வருத்தம். அவனை பார்த்தபடியே உறங்கிப்போனாள் உதய நிலா.

காலையில் உதய நிலா எழும்போது லாலா பாத்ரூமில் இருந்தான். பறவைகளின் சத்தம், சேவலின் கூவல் என்று தொடங்கிய காலைப்பொழுது அவளுக்கு புதிதாக இருந்தது. உதயா நேரத்தைப் பார்க்க மணி ஐந்தானது. உறக்கம் வரவில்லை என்பதால் போர்வையை மடித்து படுக்கையைச் சுத்தம் செய்துவிட்டு கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தாள். பாத்ரூம் கதவையே பார்த்துக்கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம். லாலா லுங்கி கட்டியிருந்தவன் சட்டையின்றி தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு இயல்பாக கதவை திறந்தான். 

“அம்மாடி!” என்று அந்த மெல்லிய இருளில் உட்கார்ந்திருந்த உதயாவைப் பார்த்தவனுக்கு ஒரு நொடி அதிர்வில் படபடப்பானது. 

“நாந்தான் கத்தாதீங்க” என்று உதயா மெல்ல சொல்ல, பெருமூச்சுவிட்டான். தலையை உலுக்கியவன் கட்டிலில் வந்து உட்கார்ந்தான். லாலாவின் அருகாமை உதயாவுக்குப் புதிதாக இருந்தது, சட்டென்று இயல்பாக அவனைப் பார்க்க முடியாமல் வேறு பக்கம் பார்க்க உதயாவின் அந்த செயல் லாலாவுக்கு சுவாரசியமானது.

மெல்ல அவள் பக்கம் சாய்ந்து “குட் மார்னிங்” என்று கிசுகிசுக்க, உதயாவுக்குச் சட்டென்று அவன் சாயவும் ஒரு சிலிர்ப்பு. வெற்றுத்தோள் உரச அவன் காலை குரல் காதில் கிசுகிசுக்க 

“பாத்ரூம் போகணும்” என்று முணுமுணுத்தவள் தனது பையிலிருந்து தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பாத்ரூமினுள் புகுந்தாள். 

லாலா புன்னகையோடு அவள் தடுமாற்றத்தை ரசித்தவனுக்கு மனைவியை அள்ளியணைக்க ஆவல் தோன்ற, அவ்வளவுதான் உஷாராகிவிட்டான். வேகமாக எழுந்து சட்டையை மாட்டி பேண்ட் அணிந்து  அறையை விட்டு சென்றான். 

இவன் திண்ணைக்குப் போன நேரம் திலகர் நாளிதழைப் புரட்டிக்கொண்டிருக்க, லாலா திண்ணையிலிருக்கும் கட்டையில் காலை நீட்டி அமர்ந்து அவனும் ஆங்கில நாளிதழைப் படிக்கத் தொடங்கினான். திலகருக்குப் பேரனின் பொறுப்புணர்வு கண்டு காலை நேரத்தில் புல்லரித்த அதே நேரம் திருமணமான மறு நாள் காலையே இத்தனை கடமையுணர்ச்சியா இவனுக்கு என்று புரியாமல் இருந்தார். அதனை கேட்கவும் முடியவில்லை. சிறிது நேரத்தில் சித்ரஞ்சனும் காலை நடைபயிற்சி செய்ய எழுந்து வந்தவன் அண்ணன் மகனை அந்த நேரம் கண்டு அதிர்ந்தான்.

“லாலா” என்று வேகமாக அழைத்துவிட்டவனுக்கு அடுத்த என்ன கேட்பதென்று புரியவில்லை. 

“என்ன சித்தப்பா? வாக்கிங்கா?” என்று லாலா கேட்க, 

“ஆமாடா, நீயென்ன இவ்வளவு சீக்கிரம்?” என்று தயக்கத்தை மறைத்து இயல்பாகப் பேச 

“எப்பவும் எந்திரிக்கிற டைம்தானே சித்தப்பா” என்று பதில் சொல்ல, சித்ரஞ்சனும் வேறென்ன கேட்பான். தலையசைத்தவன் நடைபயிற்சிக்குச் சென்றான். சித்ரஞ்சன் சென்ற சில நிமிடங்களில் உதயா தலைக்குக் குளித்து புடவையில் அழகாக தயாராகி வந்தாள். வீட்டில் ஆள் நடமாட்டமில்லாமல் இருக்க திண்ணையில் தாத்தா இருப்பதைப் பார்த்து தயக்கத்தோடு எட்டிப்பார்த்தாள். 

“அட வாம்மா” என்று திலகர் அழைக்கவும், லாலாவும் பார்க்க 

‘காலையில கூட நிலா அழகுதான்!’ என்று கவிதையாக மனைவியைக் கொஞ்சிக் கொண்டவன் அதை வார்த்தையால், பார்வையால் பகிராமல் கஞ்சமாக இருந்தான். உதயாவைப் பார்த்து புன்னகைத்தவன் மீண்டும் நாட்டு நடப்பே கதி என்பது போல்  நாளிதழில் மூழ்கிப்போனான்.

“நீங்க காலையில என்ன குடிப்பீங்க தாத்தா? நான் போட்டு வரேன்” என்று உதயா கேட்கவும் லாலா அவளிடம் 

“தாத்தாவுக்கும் எனக்கும் காஃபி போடு உதயா, உனக்கு என்ன வேணுமோ போட்டுக்கோ” என்றான்.

“மத்தவங்களுக்கு?”

“அவங்க எந்திரிச்சதும் போட்டுப்பாங்க மா, நீ நமக்கும் மட்டும் போட்டு எடுத்தா ஆயி” என்றார் திலகர்.

“ஆத்தா இன்னேரம் வரை எந்திரிக்கலயா தாத்தா?” லாலா விசாரிக்க 

“கால் வலின்னு மாத்திர போட்டு தூங்குறா டா. அதான் இன்னும் எந்திரிக்கல” என்றார். உதயா பதினைந்து நிமிடத்தில் மூவருக்கும் காஃபி போட்டு எடுத்து வந்து நீட்டினாள். தாத்தாவுக்குக் கொடுத்துவிட்டு அவளும் ஒரு டம்ளரோடு திண்ணையில் உட்கார்ந்தாள். அவள் பார்வை திண்ணையில் மாட்டியிருந்த திலகரின் தந்தை சுப்ரமணியும் காந்தியடிகளும் சேர்ந்து நின்ற புகைப்படத்தில் பதிய, திலகர் இருநூறு வருட விடுதலைப் போராட்ட கதையை புதிதாக மாட்டிய பேத்தியிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

உதயா உண்மையில் ஆர்வமாகக் கேட்டாள். அவளின் ஒரே பாட்டி பத்து வயதில் தவறியிருக்க, மற்ற யாரையும் விவரம் அறிந்து பார்த்ததில்லை. யாரும் அப்போது உயிரோடில்லை, ஆகையால் தாத்தா, பாட்டியின் அருகாமையை அவர்களின் அன்பை எல்லாம் உணராதவளுக்குத் திலகரின் பேச்சு உண்மையில் சுவாரசியம் கொடுத்தது. 

ஆறு மணி ஆகிவிட வீட்டினர் ஒவ்வொருவராக எழுந்துவிட்டனர். பக்கத்து வீட்டு காம்ப்வுண்ட் சுவர் அருகே நின்ற சக்தி அத்தனை காலையில் நண்பனை எதிர்ப்பார்க்கவில்லை. 

“டேய் மச்சான், இங்க வா” என்று சக்தி அழைக்க லாலா எழுந்து சென்றான்.

“என்னடா இவ்வளவு சீக்கிரம்?” என்று சக்தி மெல்லிய குரலில் காம்பவுண்ட் சுவரில் கை வைத்து சாய்ந்தபடி கேட்க லாலாவும் சக்தியும் பேசிக்கொண்டிருந்தனர். திலகர் அவர்களை ஒரு பார்வைப் பார்த்தவர்,

“அதோ நிக்கிறானே சக்தி, நம்ம சரோஜினி புருஷன் அவன் கொள்ளுத்தாத்தா வெள்ளைக்காரனுக்குக் கூஜா தூக்கினவர். துரைகிட்ட வேலைப் பார்த்தார், கொஞ்சம் கூட தேசப்பற்றே கிடையாது. என்ன செய்றது?  நம்ம வீட்டுதுங்களுக்கு அந்த வீட்ல உள்ளவங்க மேலதான் இந்த காதல் கீதல் எல்லாம் வருது. என்ன என் சின்ன மருமகளும் சரி, இந்த சக்தி பயலும் சரி நல்ல மாதிரி. ஆனா நம்ம லாலா, அப்படியே அவங்கப்பனை மாதிரி. என் பேரன் மட்டும்தான் எங்க பேச்சைக் கேட்டு கல்யாணம் பண்ணிருக்கான்.” என்று சொல்லவும் உதயநிலா சிரிப்பை சிரமப்பட்டு அடக்கி தாத்தா பேசுவதைக் கேட்டாள்.

சித்ரஞ்சன் காலை நடைப்பயிற்சி முடிந்து வர, வீட்டிலும் எல்லாரும் எழுந்துவிட்டனர். சரோஜினி காலையிலே குளித்துத் தயாராகி பிறந்த வீடு வந்துவிட்டாள். லாலா திண்ணையில் இருப்பதைப் பார்த்தவள், 

“டேய் அண்ணா, லவ்வெல்லாம் பண்ண மாட்ட சொல்லிட்டு ஜாலியா லவ் மேரேஜ் பண்ணிட்ட?” என்று அவன் பக்கத்தில் உட்கார்ந்து மெல்ல வம்பிழுக்க 

“எல்லாம் இந்த சக்தியை சொல்லணும். உங்கிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்றான். எங்க நட்புல புகுந்த நந்திடி நீ” என்று திட்ட 

“எங்கிட்ட சொல்லாம வேற இருப்பானா? ரொம்ப பண்ணாத, அவனே ரெண்டு நாள் முன்னாடிதான் சொன்னான். கேட்டா என் ப்ரண்ட் விஷயம் உங்கிட்ட சொல்ல மாட்டேன் சொல்றான்.  நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நீதான் தங்கச்சினு எங்கிட்ட வந்து லவ் பண்றதை சொல்லல, பக்கத்து வீட்டுக்காரன் சக்தி அவங்கிட்ட எல்லாம் சொல்ற, ஒரே ரத்தம் எங்க உனக்குப் பாசமே இல்ல” சரோஜினி புலம்பினாள்.

“என்னது பக்கத்து வீட்டுக்காரனா? உன் வீட்டுக்காரன் டி அவன்! அதே பக்கத்து வீட்டுக்காரனைத்தான் அண்ணன் எங்கிட்ட சொல்லாம அஞ்சு வருஷம் டாவடிச்ச, இப்போ வந்து சீன் போடுறியா?” என்று தங்கையைப் பேச

“சரி விடு அதுக்குமிதுக்கும் சரியா போச்சு. எப்படியோ லவ் மேரேஜை அரெஞ்ச் மேரேஜா ஆக்கிட்ட, ஆனாலும் எப்படிடா அண்ணியை உஷார் பண்ணின?” என்று சரோஜினி கேட்க 

“எது நானா? எனக்கெங்க அதுக்குத் தைரியம்? எனக்கு அவளைப் பிடிச்சாலும் சொல்லல, வாழ்க்கையில போதும் போதும்ன்ற அளவு ரிஜக்ஷன் வாங்கிட்டேன், அதுல வேறயான்னு இருந்தா உதயாவே வந்து ப்ரோபோஸ் பண்ணினா. அப்படியே ஓகே சொல்லிட்டேன்” என்றான் மென்னகையோடு.

“அதானே பார்த்தேன். நீயும் உன் ப்ரண்டும் சரியான தத்திங்க, பொண்ணுங்க வந்து சொல்லணும்னு காத்திட்டு இருப்பீங்க, நாங்களா சொல்லாம நீங்க சொன்னா கௌரவம் குறைஞ்சிடுமோ…” என்று சக்திவேல் மேல் உள்ள தாங்கலையும் அவன் மேல் காட்டினாள்.

“சிஸ்டர், நேத்துதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. கொஞ்சம் உன் வாயை மூடிட்டு இருக்கியா? இப்பவே என்னை மாட்டிவிட்டு திட்டு வாங்க வைக்க போறியா?” என்று லாலா முறைத்தான்.

“என்னைப் பார்த்தா உன்னை மாட்டிவிடற மாதிரி தெரியுதா? போடா வெண்ண” என்று திட்டிவிட்டு சரோஜினி எழுந்துகொள்ள

“வந்ததும் அவனோட என்னடி பேச்சு? உள்ள வந்து ஒத்தாசை செய்ய மாட்ட?” என்று மகளைத் திட்டியபடி வந்தார் சித்ரா.

“இப்படியே பேசிட்டு இருந்தா என் வீட்டுக்குப் போய்டுவேன்” என்று சரோஜினி அம்மாவை மிரட்ட

“பார்த்தியா என் வீடாம்? அப்போ இது?” என்று சித்ரா மகளை முறைக்க, 

“என் வீடுனு சொன்னதும் உன் மாமனாரும் புருஷனும் எனக்கு எழுதிகொடுக்க போறாங்களா?” என்று திட்டியபடி நடுவீட்டுக்குள் சரோஜினி வர, உதய நிலா அவளைப் பார்த்து புன்னகைக்கவும் சரோஜினியின் பேச்சு நின்றது. அன்று குல தெய்வக்கோவில் செல்வது, அடுத்து விருந்து என்று  நான்கைந்து நாட்கள் ஊரில் தங்கியவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.

சென்னை வரும் முன்னே வாஞ்சி நாதன், “இங்க பாருடா மருமக வந்தாச்சு, இன்னும் எக்ஸாம்னு சுத்திட்டு இல்லாம எதாவது ஒரு நல்ல வேலையா தேடிக்க. உருப்படுற வழியைப் பாரு. அந்த புள்ள அளவுக்கு இல்லன்னாலும் நீயும் நாலு காசு சம்பாரிச்சாதான் உனக்கு மதிப்பிருக்கும். உன் கைக்கும் வாய்க்கும் பத்தாம சம்பாரிச்சா பத்தாது, என்னையும் உங்கம்மாவையும் நீ பார்க்கணும்னு இல்ல. ஆனா உன் பொண்டாட்டி, புள்ளையை நீ பார்க்கணும். புரிஞ்சு நடந்துகோ” என்று ரெயில் நிலையம் கிளம்பும் முன் மகனிடம் தனியே சொல்லியிருக்க அந்த பேச்சு லாலாவுக்கு மனைவி மீது காழ்ப்புணர்வை உண்டாக்கியது. அவரின் ஒப்புமை ஒவ்வாமைக் கொடுத்தது. 

சென்னையில் லாலாவின் அகாடெமிக்குப் பக்கமாக இரண்டு பெட்ரூம் ப்ளாட் ஒன்றை திருமணத்திற்கு முன்பே வாடகைக்குப் பார்த்துவிட்டனர். உதயாவின் அம்மா உமா மகள் வருவதற்கு முன் தேவையானவற்றை வாங்கி, வீட்டை ஓரளவு தயார் செய்துவிட்டார். காலையில் உணவும் செய்துவைத்தவர் மகளும் மருமகனும் வரவும் 

“காலையில சாப்பாடு செஞ்சிட்டேன், பால், மாவெல்லம ப்ரிட்ஜில இருக்கு. நான் நம்ம வீட்டுக்குக் கிளம்புறேன், நாளைக்கு வரேன்” என்று அவர்களுக்குத் தனிமை கொடுத்துக் கிளம்பிவிட்டார். லாலாவும் உதயாவும் தங்க சொல்லியும் கேட்கவில்லை.

லாலா குளித்துவந்தவன் காலை உணவை உண்டுவிட்டு அறைக்குள் சென்றான். உதயாவுக்கு உள்ளுக்குள் ஒரு உற்சாகம் உலா போனது, காதலித்தவனோடு ஒரு வாழ்க்கை. இனி புது உதயம், புது பயணம் என்று கற்பனைகளோடு காலை உணவையும் உண்டாள். உதயா உண்ணும்போதே லாலா தயாராகி வந்தான். 

“எங்க கிளம்பிட்டீங்க?” என்று உதயா இட்லியை விழுங்கிக்கொண்டு கேட்க 

“க்ளாஸுக்குத்தான் உதயா, இன்னிக்கு நான் வர ஈவினிங் ஆகிடும்”  என்றபடி சட்டையை இன் செய்தவன், ஷூவை மாட்டினான்.

“ஏன் லாலா இன்னிக்கே போகணுமா? காலையிலதானே ஊர்ல இருந்து வந்தோம், ரெஸ்ட் எடுக்கலாமில்ல” அக்கறையாகக் கேட்ட மனைவியிடம் 

“ரெஸ்ட் எடுத்தா நான் காசுக்கு என்ன பண்றது? உன்னை மாதிரி எனக்கு லாஸ் ஆஃப் பே இல்லாத வேலை இல்லம்மா. நான் எடுக்கிற டைமுக்குத்தான் எனக்குப் பே பண்ணுவாங்க.” என்றதும் உதயநிலாவிற்குப் பெரும்பயம் உண்டானது. லாலா பேசியது எதார்த்தம் என்றாலும் தன்னோடு அவனை ஒப்பிட்டுப் பேச வேண்டுமா, தண்மையாக எனக்குப் பதில் சொல்லியிருக்கலாமே என்று நினைத்தவள் அவனிடம் அதனை சொல்லவில்லை. 

லாலா உதயாவின் மன நிலையை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை, அப்பா பேசியது அவனை குத்திக்கொண்டே இருக்க, இந்த திருமணம் கூட என் தகுதிக்கு நல்ல பெண் கிடைக்காது என்பதால்தானே என்ற எண்ணம் ஆழமாக அவனை காயப்படுத்தியது. லாலா “வரேன் மா, பை” என்று சென்றுவிட, 

உதயாவிற்குக் கல்யாண வாழ்க்கை காதல் வழியா இல்லை காழக(பயங்கர) வழியா என்ற அச்சம் அங்கமெங்கும் நிறைத்தது.  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!