Skip to content
Post Views: 18,456
இலக்கணம் பெண்மையே!…
அத்தியாயம் 14
விசாலாட்சி வார்த்தைகளை மெளனமாக உள்வாங்கி கொண்டு இருந்தான் பிரகாஷ். அவனுக்கு மேற்கொண்டு என்ன பேச என்று கூட தெரியவில்லை. வீடு, கார், ஏ.சி என்று வசதியாக தன் குடும்பத்தை வாழ வைப்பதாக நினைத்து கொண்டு இருக்க, மனைவி மனதில் இவ்வளவு குமுறல் இருக்கிறது என்று அறியவே இல்லை.
சாலா ஒரு தெளிவுக்கு வந்து விட்டாள். தன் உடைகளை, பிள்ளைகள் உடைகளை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். அவள் வாழ்ந்த வாழ்வின் உண்மை தன்மை தெரிந்த பின் இனி இந்த வீட்டில் என்ன வேலை…
Advertisement
கணவனிடம் காட்டிய ரோசம் பிள்ளைகளிடம் காட்ட முடியவில்லை. உன் பிள்ளைகளை நீ பார் என்று தண்டனையாக கூட பிள்ளைகளை விட மனதில்லை. கணவனை சுத்தமாக பிடிக்க வில்லை. ஆனால், அவன் சாயலில் இருக்கும் மகனை ஒதுக்கவே முடியவில்லை.
சாலா கிளம்பி விட்டாள். குடும்பத்தில் ஒரே பதட்டம். எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்து இருக்க, சாலா முடிவு வேற விதமாக இருந்தது. பிள்ளைகள் அம்மாவோடு தான் கிளம்பினார்கள். அஜய்க்கு ஓரளவு புரிந்தது, அமைதி காத்தான். அஞ்சுக்கு, அப்பா தான் மன்னிப்பு கேட்டு விட்டாரே அப்புறம் என்ன…” என்ற நினைப்பு தான். எல்லோரையும் போல பிள்ளைகள் குடும்ப வாழ்வை எதிர்பார்த்தது.
சாலாக்கு, பிள்ளைகளுக்காக கூட கணவனை இழுத்து பிடிக்க முடியவில்லை. மகள் ஏக்கம் தெரிகிறது தான். ஆனால், அவனோடு வாழும் வாழ்க்கைக்கு நரகம் மேல்…
Advertisement
பாண்டியம்மாள் கத்தி கொண்டிருந்தார்,
Advertisement
“இங்க பாரு சாலா, இந்த ஒன்னை தவிர வேற எதுவும் மாப்பிள்ளை மேல குறை இருக்கா… தங்கமான மனுசன். ஒரு நாளும் உன்னை ஒத்த வார்த்தை சொன்னதில்லை, கை நீட்டுணது இல்லை. வேற என்னடி வேணும் உனக்கு… ஒழுங்கா மாப்பிளை கூட வாழ்ற வழியை பாரு…” என்று கத்த, யாரின் சொல்லும் காதில் ஏற வில்லை.
பிரகாஷ் அமைதி மட்டுமே… அது கூட அவன் மேல் ஒரு இறக்கத்தை தான் கொடுத்தது மற்றவர்களுக்கு… சுலோச்சனாவும் எதுவோ சொல்ல வர, நாராயணன் தான்.
“எதையும் ஆற போடுங்க. மருமக மனசு நொந்து போய் கிடக்கும். கொஞ்ச நாள் போகட்டும்…”
Advertisement
“ அதுவரைக்கும் மாப்பிள்ளை தனியாவா இருப்பாங்க… ஏற்கனவே தனியா விட்டு தான் பிரச்சனையே…” எதார்த்தமாக பாண்டியம்மாள் சொல்ல,
சுலீர் என்றது பிரகாஷ்க்கு.
“என்ன சொல்கிறார், இதுவா என் குணம். மனைவி தள்ளி நின்றாள் அடுத்தவள் தேடி ஓடி போவேனா… என் மீது வைத்திருக்கும் மதிப்பு அவ்வளவு தானா…”
“பாண்டியம்மா…” என்று முத்தையா அதட்ட
“அட நீ சும்மா இருய்யா… நம்ம ஊர்ல எல்லாம் பொம்பளைங்க எம்புட்டு வேலை பாக்குறாங்க. இந்த கழுதை வீட்டிலே இருந்து நோயை இழுத்து வச்சிட்டுச்சு… அதுதான் இம்புட்டு பிரச்சனைக்கும் காரணம். இவ ஒழுங்கா இருந்தா…” என்று பாண்டியம்மாள் முடிக்கும் போதே “அம்மா…” என்று கத்தி விட்டாள் சாலா.
பதினேழு வயது மையனை வைத்து கொண்டு என்ன பேச்சு இது. மகன் என்ன நினைப்பான்… பிரகாஷ் தலை நிமிரவே இல்லை. மகனின் முகத்தை பார்க்க அவ்வளவு சங்கடம்…
வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில், பெற்றோருக்கு தாம்பத்தியம் இழை பின் மறைந்து இருக்கும் காய் போல தான். அதை வெட்ட வெளிக்கு கொண்டு வர கூடாது. அப்படி வெளியே வந்தால் பிரகாஷ் போல, பெற்ற பிள்ளையை பார்த்து தலை குனிய தான் வேண்டும்.
பாசம், அன்பு, அப்பா என்ற உறவு இருந்த போதும் பிள்ளைகளுக்கு அப்பா உடனான உறவில் பள்ளம் விழுந்து விட்டது. அத்தோடு தாயின் மேன்மை புரியவும் செய்தது. அம்மாக்கு ஒன்றும் தெரியாது, அப்பாக்கு தான் எல்லாம் தெரியும் என்ற பிம்பம் உடைந்தது. பிள்ளைகள் தாய் பின் நிற்க தந்தை தனித்து நின்றான்.
சாலா பிள்ளைகள் உடன் மதுரைக்கு புறப்பட்டு விட்டாள். இவனுக்கு புரிய வைத்து கொண்டே இருந்தால், என் பிழைப்பை யார் பார்ப்பது…
சாலா மதுரை சென்று கதவை தான் திறந்து இருப்பாள். பின்னாடியே சாலா வீட்டு ஆட்கள் வந்து விட்டார்கள். என்னவோ என்று பதறி பார்க்க, தேவி முகத்தில் பதட்டம், பாண்டியம்மாள் அழுகை ஊரை கூட்டியது.
அது வேற ஒன்றும் இல்லை. ஊர் பஞ்சாயத்து… கூட்டியது சாலாவும் இல்லை, பிரகாஷும் இல்லை ஷாலினி தான். தனக்கு நியாயம் வேண்டும் என்று…
சாலா சலிப்பாக உணர்ந்தாள். அடுத்து என்ன என்று பார்க்கவே விடமாட்டார்களா…
கேஸ் வாபஸ் வாங்கப்பட்டது என்றதும் ஷாலினி வீட்டு ஆட்களுக்கு அதிர்ச்சி தான்.
“என்ன, நல்லா தெரியுமா…” என்று கங்கா கேட்க.
“வேற என்ன பண்ணுவாங்க. என்ன இருந்தாலும் பிரகாஷ் தான் சாலா புருசன். ரெண்டு பிள்ளை இருக்கு, தள்ளி வைக்க முடியாதில்ல…” என்று ஷாலினி சித்தப்பா மணிகண்டன் சொல்ல
கங்கா முகத்தில் யோசனை, கண்களில் நீர் வடிந்தது.
“இதோ பார்த்தையாடி, குடும்ப சண்டை மாதிரி புருசன், பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டாங்க. ஊர் முன்னாடி அசிங்க பட்டு ஒத்தையில கிடக்கிறது யாரு?… நீ தான. ஊர் முழுக்க உன் பேர் கெட்டு போச்சு, உன்னை எப்படி கரை சேர்க்க…” என்று அழுக.
அவளின் சித்தி விமலா, “ஷாலினிக்கு ஒரு வழிய பிரகாஷ் தான் சொல்லணும். ரெண்டு வருசம் ஒன்னா வாழ்ந்து இருக்காங்க, அப்ப அவன் தான் பதில் சொல்லணும். நம்ம பக்கம் ரெண்டு பொண்டாட்டி எல்லாம் சகஜம் தான்…”
“போலீஸ் கேஸ் எல்லாம் இனி கொடுக்க முடியாது. பிரகாஷ் ஒன்னும் இவளை ஏமாத்தல… அங்க வரை போன நமக்கு தான் அசிங்கம். இவளை ஊரை விட்டே போக சொல்லுங்க…” மணிகண்டன் சொல்ல.
“ஊர் பஞ்சாயத்து கூடுவோம்…” என்றாள் விமலா.
“என்ன?…”
“மதுரை பக்கம். அங்க தான் ஊர் பஞ்சாயத்துக்கு மதிப்பு இருக்கும்…”
கங்காக்கு யோசனை தான்.
“விவாகரத்து ஆகிடுச்சுன்னு சொல்லி கூட வேற மாப்பிள்ளை பார்க்கலாம். இதை சொல்லி எந்த மாப்பிளை பார்க்க முடியும். ஊர் முழுக்க பேரும் கெட்டு போச்சு, வேற யாரும் வர மாட்டாங்க. அடைக்கலம் கொடுத்த வீட்டுக்கே தப்பு பண்ணவ, சொந்தத்துல எப்படி பொண்ணு கொடுப்பாங்க…” என்று விமலா சொல்ல, நிதர்சனம் புரிந்தது.
ஏற்கனவே ஒருத்தனோடு கல்யாணம் ஆகி விவாகரத்து வாங்கியாச்சு, இப்போ பிரகாஷ் உடன் இரண்டு வருட வாழ்க்கை, பேரும் கெட்டு கிடக்க, வேற வழியும் தெரியவில்லை.
சாலா தாய் வீடு வந்து விட்டாள். நாளை பஞ்சாயத்து… தேவி நாத்தனார் உடன் இருந்து கொள்ள, முகத்தை தூக்கி கொண்டு திரிந்தாள் சித்ரா.
சாலாக்கு புரிந்தது. விருந்தாளி வேறு, வீட்டோடு வருவது வேறு… கடந்த சில மாதங்களாக குடும்பமே சாலா பிரச்சனை பின் திரிவதும், அவள் வாழாமல் வந்ததும் சித்ராக்கு தங்களின் அமைதி வாழ்க்கை கெடுமோ என்ற எண்ணம்.
சித்ரா, என்னவோ மூணு மூணுத்து கொண்டே இருக்க, சாலாக்கு சங்கடம்.
“அம்மா, நாளைக்கு பஞ்சாயத்து முடிஞ்சதும் நாங்க ஊருக்கு போறோம்…” என்று அறிவிக்க, பாண்டியம்மாள், தன் மகனை ஒரு பார்வை தான் பார்த்தார்.
குமரன் உள்ளே சென்றவன், “சித்ரா, ஒரு காபி கொண்டு வா, தலை வலிக்குது…”
காபியை எடுத்து கொண்டு உள்ளே சென்றவள், “மாமா…” என்றாள்.
நிமிர்ந்து மனைவி முகம் பார்த்தவன், மெல்ல கதவை அடைத்தான்.
“என்ன மாமா…” என்ற சித்ரா, அடுத்த நிமிடம் கன்னத்தில் கை வைத்தாள்.
“மாமா…”
“நேத்து வந்தவ நீ… எந்தங்கச்சி பொறந்த வீடு வந்தா உனக்கு கசக்குதோ… பக்கத்துல இருக்குற உங்காத்தா வீட்டுக்கு வாரம் வாரம் போய்ட்டு தான இருக்க. என்னைக்கோ அந்த புள்ளை வந்தா பெருசா முணங்குற… எந்த தங்கச்சி இங்க தான் இருக்கும். உனக்கு பிடிக்காட்டி நீ உன் பொறந்த வீட்டுக்கு போ…” என்று குமரன் சொல்ல
மெளனமாக கடந்து விட்டாள் சித்ரா. வெளிய எதுவும் நடந்தது போலவும் காட்டி கொள்ள வில்லை. அடுத்தடுத்து வேலையை பார்த்தாள்.
கோவித்து கொண்டு தாய் வீடு போய் விட்டால் தேடி வரும் ரகம் அல்ல குமரன். சித்ரா இல்லையா அடுத்து தேவி என்று வாழ்க்கையை கடந்து விடுவான். அது தெரிய அமைதியாகி விட்டாள் சித்ரா.
“எம் மக என் வீடு வர, இந்த சின்ன சிறிக்கிக்கு என்ன வலிக்குது. சொல்லி வை மகனே, ஆட்டி அம்பலமாக்கிடுவேன்…” என்றார் பாண்டியம்மாள்.
“நானே நல்லா குடுத்து தான் விட்டேன். பிள்ளை இல்லன்னு வாழ பொறுக்காத ஒருத்திய கட்டி வச்சு இருக்க… இதுவரைக்கும் தேவி ஒத்த வார்த்தை சொல்லி இருப்பாளா… அவ கால் தூசிக்கு வர மாட்டா…” என்று குமரன் சொல்ல
“பிள்ளையை பெத்து புண்ணியம் கட்டி கிட்ட விடு மகனே…”
அடுப்படியில் இருந்து அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தாள் சித்ரா. ஆனாலும் வாய் திறக்க முடியாது. முத்தாக மூணு பெத்தும் தேவி தான் உசந்தவள்.
காலையிலே மணிமாறன், கண்ணகி என மற்ற சொந்தங்களும் வந்து விட்டார்கள். சாலா அமைதி மட்டும் தான். அஜய் யாரிடமும் பேசவே இல்லை. அஞ்சு மட்டும் பஞ்சாயத்துக்கு அழைத்து வர வில்லை.
பிரகாஷ் குடும்பம் காலையில் தான் வந்து இறங்கினார்கள். ஊர் பொது கோவிலில் தான் பஞ்சாயத்து… ஆங்காங்கு சொந்தம் பலரும், வேடிக்கை பார்க்க பலரும் வந்து விட்டார்கள்.
பிரகாஷ்க்கு இனி என்ன என்ற மனநிலை தான். ஏற்கனவே போலீஸ், ஜெயில், பேப்பர் என்று அசிங்க பட்டாச்சு, அடுத்து நடத்தை கெட்டவன் என்று ஊர் முன் கை கட்டியும் நின்றாச்சு…
ஷாலினி பார்வை எல்லாம் பிரகாஷ் மீது தான். அவனை நம்பி தான் அவள் இவ்வளவு தூரம் இறங்குயதே… அவனின் தன் மீதான காதல், ஆசை மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது.
சாலா ஒரு பார்வையாளர் மட்டுமே… ஷாலினி,பந்தை தூக்கி நடுவில் வைத்து விட்டாள். இனி யாரும் அடிக்க கூடாது என்று எப்படி சொல்ல முடியும். சாலா மீதும் ரெண்டு பந்து விழுந்தால், பிரகாஷ் மீது பத்து பந்து விழும். ஆனால், அனைத்து பந்தும் ஷாலினி மீது தான் விழும்.
உள்ளுக்குள் எத்தனை அழுக்கு இருந்தாலும் வெளியில் நியாயம் பேசும் மனிதர்கள் தான் அதிகம். அப்படி இருக்க பாதிக்க பட்டவளாக தன்னை காட்டி கொண்டு நிற்கும் ஷாலினி மீது எந்த நியாயமும் பேசாது.
இறுகி நிற்கும் மகனை பார்த்து பிரகாஷ்க்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது. சாலா யாரின் புறமும் திரும்ப வில்லை.
“சாலா, கொஞ்சம் அழுகுற மாதிரி முகத்தை வை டீ…” என்று பாண்டியம்மாள் அதட்ட, அவள் கண்டு கொள்ளவே இல்லை.
பஞ்சாயத்து ஆரம்பம் ஆனது. ஷாலினி தன் பக்கத்தை சொன்னதோடு பிரகாஷ்க்கு தன்னோடு தான் வாழ விருப்பம் என்றாள். அத்தோடு ஷாலினி, விசாலாட்சி இருக்க தான் இரண்டாம் தாரமாக இருப்பதில் பிரச்சனை இல்லை என்றும் சொன்னாள்.
“ ஐயா! எம் பிள்ளைக்கு வழி விடுங்க. அவ விசாலாட்சிய விட சொல்லலை. அவளும் ஒரு ஓரமா இருக்கட்டும். தனி வீடு தான்..என்னைக்கும் உரிமை கேட்டு, உறவு கொண்டாடி வர மாட்டா… இவ்வளவு நடந்த பின்னாடி வேற யாரு எம் பிள்ளையை கட்டுவா…”
சாலா பார்த்து தான் நின்றாள். இனி இவள் பேச்சு சபை ஏறாது. மெளனமாக நிற்பது மட்டும் தான் சிறந்தது.
“ஊத்துக்குளி வெண்ணெய் வேணுமாம், உருட்டி உட்கார திண்ணை வேணுமாம்…” என்று ஆரம்பித்தார் பாண்டியம்மாள்.
“பிள்ளை ஊர் மேய்யும் கண்ணை என்ன பொடனிலா வச்சு இருந்த… அடுத்தவ புருசனுக்கு ஆசை பட்டவளுக்கு நியாயம் ஒன்னு தான் கேடு…” என்றவர்,
“இங்க பாருங்க பெரிய மனுசங்களா… உங்க எல்லாருக்கும் எம் பிள்ளையை தெரியும். சாலான்னா தங்கம் கூட தரம் குறையும். அப்படி பட்ட பிள்ளை எம் பிள்ளை. புருசன் வெறட்டி விட வாழாவெட்டியா வந்து நிக்குறாளேன்னு அடைக்கலம் கொடுத்தா, இந்த கேடு கெட்டவ உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றா…” அவருக்கு பல நாள் கோபம் ஷாலினி மீது… சிக்க வில்லை. இன்று தான் கிடைத்தாள்.
“ ஏத்தா பாண்டியம்மா, நாங்க தான் பேசுறோம்ல… அப்புரம் என்னத்தா… நியாயம் நாங்க சொல்ல மாட்டோமா?…” ஊர் பெரியவர் சொல்ல, அமைதியானார்.
“ இங்க பாரும்மா உம் பிள்ளைக்கு நியாயம்ன்னு நீ என்னத்தை கேக்குற… குத்து கல்லு மாதிரி பொண்டாட்டி இருக்கு, ஐயனார் மாதிரி வளந்து நிக்கிற மகன் இருக்கான். அவனுக்குன்னு குடும்பம் இருக்கு… ஒரு குடும்பத்தை அழிக்கிற காரியத்தை நாங்க எப்படி செய்யிறது…”
“அப்ப இவளுக்கு என்னங்க வழி… யாருக்கும் தெரியாம இருந்தா பரவாயில்லை. ஊருக்கே தெரிஞ்சு இருக்கு, காலத்துக்கும் எம் பிள்ளையை வீட்டோட வைக்க முடியுமா…” என்று கங்கா கேட்க.
“அப்புறம் பின் வாசல் வழியா வந்தவளுக்கு முறை வாசல் செய்யணுமா… உம் மகளுக்கு என்ன நியாயம் வேண்டி கிடக்கு. அடுத்தவ வாழ்க்கையை கெடுக்கும் போது நியாயம் பார்த்தாளா… அக்கா, அக்கான்னு சொல்லி அவ அடி மடியிலே கை வைக்கிறோம்ன்னு நெஞ்சுல பயம் இருந்துச்சா… “
“ நாய்க்கு சோறு போட்டாலும் நன்றி இருக்கும். ஆனா உம் மக, அந்த நாயை விட மோசம். எம் மக வீட்டுல இருந்துட்டு, அவ கையால வாங்கி தின்னுட்டு, அவ படுக்கையிலே இடம் பிடிக்க பாக்குற… இவளுக்கு என்ன நியாயம் வேணும். எனக்கு தெரிஞ்ச நியாயம், அடிச்சு துரத்தனும்…”
நீ சும்மா இரு பாண்டியம்மாள்.
“எப்பா பிரகாஷ். அந்த புள்ளை கூட உனக்கு கள்ள தொடர்பு இருந்துச்சா…” என்று கேட்க.
பிரகாஷ் கண்களில் நீர் வந்தது. “ஆமாங்க…” ஒத்த வார்த்தை சொல்லி விட்டு குறுகி போனான்.
ஊரே நின்று இருந்தது. ஏகப்பட்ட பெண்கள். தலை நிமிரவே முடியவில்லை.
“உனக்கு அந்த பிள்ளையை ரெண்டாந்தாரமா கட்டிக்க விருப்பமா…”
“எதே! நல்லா இருக்கே உன் நியாயம். அவளை கட்டி வைக்க எம் பிள்ளைக்கு என்ன குறை… பார்க்க அழகா இல்லையா, ஊர் மெச்ச சீர் செய்யலையா, பிள்ளை பெறலையா… ஆணும், பெண்ணும் அம்சமா நிக்குதுக… ஆம்பிளை, பத்து பிள்ளைக்கும் பத்து வாசல் பார்ப்பான். ஒரு பொம்பளை ஒழுங்கா இருக்க வேணாம்…” எகிறி கொண்டு தான் நின்றார் பாண்டியம்மாள்.
அவர் வீட்டு ஆண்கள் யாரும் வாய் திறக்க வில்லை. ஆம்பளைக பேச்சு அடிதடியில் முடியும் அல்லவா… எல்லோருக்கும் பாண்டியம்மாவே பதில் கொடுத்தார்.
தன் மகள் இடத்தை தக்க வைக்க ஒற்றை ஆளாக போராடினார் என்று தான் சொல்ல வேண்டும்.
“இல்லை எம் பிள்ளைக்கு ஒரு நியாயம் சொல்லணும். பிரகாஷ் நீ என் மக கழுத்துல தாலி கட்டு… அண்ணா, நீ தான் வழி சொல்லணும். நீங்க தூக்கி வளர்த்த பொண்ணு தான அவ… ஒரு ஓரமா இருக்கட்டும்…” என்று கங்கா வாதாடா. ஷாலினி பார்வை நேராக பிரகாஷ் மீது தான் விழுந்தது.
“தாலி கட்டனுமா… கை இருந்தா தான தாலி கட்டும், உசுரு இருந்தா தான குடும்பம் நடத்தும். இருந்தா எம் மகளுக்கு புருசனா மட்டும் தான் இருக்கணும்… வேற ஏதாவது நடந்தது, இந்த மதுரைகாரி மவுசு என்னன்னு அப்பறம் தெரியும்…” முதலைக்கு தண்ணியில் தானே பலம். மிகுந்து நின்றார் பாண்டியம்மாள்.
“ பிரகாஷ் நீயும் தான தப்பு பண்ண. நல்லவன் மாதிரி ஒதுங்கி நின்ன என்ன அர்த்தம்…” கங்கா போராடினார்.
ஐ டோண்ட் கேர் எனும் வகை சார்ந்த ஷாலினிக்கே, தாயை பார்த்து நீர் பொங்கியது. தான் செய்த தவறுக்காக தாய் போராடி கொண்டு இருக்கிறார்.
“ நல்லா இருக்கு… ஒரு பொம்பளை இடுப்பு தெரிய பாவாடை கட்டுணது தப்பில்லை, ஒரு ஆம்பளை பார்த்தது தான் தப்புன்ற…” ரவுண்டு கட்டினார் பாண்டியம்மாள்.
வெறுமையாக பார்த்தாள் தேவி. சில ஆண்டுகளுக்கு முன் இப்படி தான், இவளை நிற்க வைத்து மலடி என்று பட்டம் கட்டி, இவள் தங்கையை பேசி முடித்தது.
இன்று தன் மகளுக்கு நியாயம் கேட்பவர், அன்று மருமகளுக்கு அநியாயம் தான் செய்தார்.
“ பிரகாஷ், நீ வாய் திறந்து சொல்லணும். உனக்கு அந்த பிள்ளையை கட்டனுமா?… அப்படி இருந்தா ரெண்டு பொண்டாட்டி எல்லாம் செல்லாது?… உன் முதல் சம்சாரத்தை அத்து விடு, அதுக்கு தகுந்த காரணத்தையும் சொல்லு?… அந்த பொண்ணுக்கு என்ன பதில்?… உன் சம்சாரத்துக்கு என்ன பதில்?….” என்று பல கேள்வி முன் வைக்க.
“எல்லாருக்கும் வணக்கமங்க… நான் அந்த பொண்ணு ஷாலினி கூட பழகினது உண்மைதாங்க. தப்பு தான், என் கொழுப்பெடுத்த செயல் தான். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை நடந்து போச்சு. என் தப்ப நான் உணர்ந்துடேங்க… என்னை மன்னிச்சு , என் குடும்பத்தோட என்னை சேர்த்து வைங்க…” என்றான் பணிவாக.
“ உன்னால கெட்டு போன அந்த பொண்ணுக்கு என்ன பதில்?…”
“நாங்க பழகும் போதே, இது பாதில நிக்கிற உறவுன்னு சொல்லி தான் பேசினாமங்க… அந்த பொண்ணுக்கும் அது நல்லா தெரியும். தப்பு தான். புத்தி கெட்டு போய் நடந்து போனேன். இனி என் பார்வை கூட அந்த பொண்ணு பக்கம் போகாதுங்க… நான், என் பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு உண்மையா வாழ ஒரு வாய்ப்பு கொடுங்க…” என்றவன், ஊர் மத்தியில் அனைவரும் இருக்க, கீழே படுத்து தலை வணங்கினான்.
சாலா முகத்தில் விரக்தி சிரிப்பு வந்தது. நான் தப்பு செய்யலை என்றால் வாதாடலாம்… பொண்டாட்டி, பிள்ளைகள் வேண்டாம், அடுத்த பெண் தான் வேண்டும் என்றால் சண்டை போடலாம், தப்பை ஒத்து கொல்லா விட்டால் நியாயம் பேசலாம்…
பஞ்சாயத்தில் என்ன சொல்லுவார்களோ , அதை முன்னவே சொல்லி ஊர் முன் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்பவனை, யார் என்ன சொல்ல முடியும்…
ஷாலினிக்கு பெரிய அடி தான். செல்லம், டார்லிங், பட்டு, புட்டிங், ஹனி என்ற பெயர் எல்லாம் மறந்து அந்த பெண் என்று யாரோ போல சொல்லி விட்டான். வெறும் ஆசைக்காக பதினேழு வருட வாழ்க்கையை தூக்கி போட்டவன், அவ்வளவு பார்த்த பொண்டாட்டியை மறந்தவன் தன்னை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்று யோசிக்க வில்லையே.
தீர்ப்பு சொல்ல பட்டது. தலைவர் எழுந்தார்,
“எல்லோருக்கும் வணக்கம். நீங்க எல்லாம் காஞ்சனான்னு ஒரு பேய் படம் பார்த்து இருக்கீங்களா?… என்று தலைவர் கேட்க.
“ என்னாட இது கூறுகெட்ட தனமா… படிச்சவன தலைவராக்குனா அப்படி தாண்ட, லூசு மாதிரி பேசுறான்…” என்றார் பாண்டியம்மாள், அந்த படித்த ஊர் தலைவன் தீனதயாளனை பார்த்து.
சின்ன சிரிப்பில் தொடர்ந்தான். “அந்த படத்துல க்ளைமேக்ஸ்ல ஒரு காட்சி வரும். சாமியோட சந்நிதியில பேய் நுழையிற மாதிரி. பொதுவா சாமி இருக்குற இடத்துல பேய் நுழைய கூடாது. ஆனா, அந்த பேய், தனக்கு நடந்த அநியாயத்துக்கு கடவுள் கிட்ட நீதி கேட்குது. பொதுவா பார்க்கும் போது காமெடியா தெரியும்…”
“ஆனா, யோசிங்க… ஒரு பேயோட நியாயத்துக்கு சாமியே வழி விடுது. சாமியோ, பேயோ, மனுசனோ எங்கையும் நிலை நிக்கிறது நியாயம் தான். நியாயமான ஒரு கோரிக்கை மட்டும் தான் வழுவா நிக்கும். நியாயம் இல்லாதது மதிப்பு இழந்து போகும்…”
“ நாம வாழ்கிற வாழ்க்கையும் அப்படி தான். நியாயமான வாழ்க்கைக்கு தான் மதிப்பு இருக்கும். எப்படி வேனா வாழலாம்ன்றுது வாழ்க்கை கிடையாது. இப்படி தான் வாழணும்ன்றது தான் வாழ்க்கை. இப்ப யாரும் அப்படி நினைக்கிறது இல்லை…”
“ இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை ஒழுக்கமா தான் வாழணும்ன்றது போய் இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நம்ம இஷ்டத்துக்கு தான் வாழனும்ன்னு மாறி போச்சு… அப்படி இஷ்டத்துக்கு வாழ்ந்த யாருக்கும் மதிப்பு கொடுக்க முடியாதுங்க…”
“அப்படி பட்ட ஒருத்தவங்களுக்க மதிப்பு கொடுத்தா, அவங்களுக்கு நியாயம் சொன்னா?… இவ்வளவு நாள் பண்பாட்டை, பாரம்பரியத்தை, ஒழுக்கத்தை, நேர்மையை காத்து நிக்கிற மக்களுக்கு அநியாயம் செய்ற மாதிரி…”
“அந்த அநியாயம் நாங்க செய்ய மாட்டோம். என் வாழ்க்கை என் இஷ்டம்ன்னு திரியும் போது நம்ம பண்பாடும், கட்டுப்பாடும் வேலியா தெரிஞ்சது. அது சலிச்சு போய் நமக்கு குடும்பம் வேணும்ன்னு நினைக்கும் போது அதே பண்பாடும், கட்டுப்பாடும் பாதுகாப்பா தெரியுது…”
“ஒரு நல்ல மகன் தான் நல்ல கணவனா இருக்க முடியும். நல்ல கணவன் தான் நல்ல தகப்பனா இருக்க முடியும். ஒரு நல்ல தகப்பன் தான் நல்ல மனுசனா இருக்க முடியும். அந்த நல்ல மனுசன் தான், தன் தலைமுறைக்கு நல்ல வழி காட்டியா இருக்க முடியும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ தான் நம்ம கட்டுப்பாடும், பண்பாடும் சொல்லுது… ஒருவனுக்கு ஒருத்தி தான் நமக்கு… அந்த ஒருத்தி அவன் மனைவி மட்டும் தான்…”
“ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டவனுக்கு அவன் மனைவி தான் பதில் சொல்லணும்…” என்று முடித்து விட்டான் தயாளன்.
error: Content is protected !!