Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமிஸஸ் மிஸ்ஸிங் !

மிஸஸ் மிஸ்ஸிங் – 6

இதமான ஊதக்காற்று அவளை தொட்டுவிடும் முனைப்பில் கொஞ்சம் வேகமெடுத்து வந்ததோ என்னவோ, பால்கனியில் நின்றுகொண்டிருந்த மனோவின் மேனி சிலிர்த்து அடங்கியது. ஈரப்பதம் நிறைந்த அந்தக் காற்று, கண்களை நிறைத்துக்கொள்ளும் அந்த நிலவு, கையில் ஒரு காபி. அதுவே அவள் நாள் இனிதாய் முடிய போதுமானதாய் இருந்தது. மொட்டை மாடி நிலவொளியில் குளித்தபடி நின்றிருந்தாள் இந்தத் தேவ லோக மங்கை.

“மனோ… என்னடி பண்ற?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் இன்னுமொரு காபி கப்புடன் வந்து நின்றாள் வைஷ்ணவி.
கல்யாணம் முடிந்து போக இன்னும் இரண்டே மாதங்கள் இருப்பதால், எப்பொழுதும் தங்கையுடன் ஏட்டிக்கு போட்டியாகப் பேசும் அவளுக்கு, இப்பொழுது தங்கையே பிரதானம் ஆகிப் போனாள்.

வைஷ்ணவியை இடையோடு கட்டிக்கொண்ட மனோ,
“என்னவோ தெரியல வைஷு, ஏதோ ரெண்டு நாளா எனக்கு இந்த உலகமே புதுசா தெரியுது…” என்றாள் கண்களை மூடிக்கொண்டே.

அவளை இவளும் கட்டிக்கொண்டு, “புதுசா தெரியுதா? ஏன்? என்னாச்சு?” என்று கேட்டாள்.



Advertisement

“தெரில வைஷு, ஒரு மாதிரி பாக்குறதெல்லாம் புதுசா தெரியுது. நேத்து பேஞ்ச மழையும், இந்த காத்தும் கூட என்கிட்ட எதையோ சொல்லவர மாதிரி இருக்கு!”

“பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கப் படிக்க வச்சதுக்கு, நீ பைத்தியமே ஆகிட்டியா?”

“ப்ச்… நிஜமா தான் சொல்றேன். அங்க பாரேன்…” என்று ஒரு செடியைக் காண்பித்தாள். அதில் இலைகள் எல்லாம் அழகாய் காற்றிற்கு அசைந்தாடிக்கொண்டு இருந்தது. அதில் இரண்டு இலைகள் மட்டும் காய்ந்து ஆளுக்கு ஒரு மூலையில் இருப்பதாய் இருக்க, இரண்டு இலைகளும் ஒன்றொரு ஒன்று காற்றில் மோதிக்கொள்ள முயல்வது போல் தோன்றியது.

Advertisement

“அந்த செடி கூட என்கிட்ட ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கு!”

Advertisement

“என்ன சொல்ல வருதுன்னு நீயே சொல்லிரு தாயே!”

“எல்லாம் சந்தோசமா இருக்குற உலகத்துல, உணர முடியாத, கண்ணுக்குத் தெரியாத சோகம் ஒன்னு ஒளிஞ்சுருக்க மாதிரி அது என்ன பாக்குது!”

“இன்னாது… பாக்குதா?!”

Advertisement

“சரி விடு… உனக்குப் புரியவைக்க முடியாது”

“என்னதான்டி பேசுற. ஆளே ஒரு மார்க்கமா இருக்க!”

“எனக்கு தெரில வைஷு. ஏதோ மனசு படபடன்னு இருக்கு. ஏதோ ஒன்னு தப்பா நடந்துருமோனு பயமா இருக்கு! எதையோ தொலைச்சுட்டு தேடுற மாதிரி தோணுது. ரொம்ப எம்ட்டி (empty) அஹ்”

“ச்சீ… லூசு. அதெல்லாம் ஒன்னும் இல்ல. இப்படி வா”
என்ற வைஷு மனோவை கழுத்தோடு வளைத்துக் கட்டிக்கொண்டாள்.

அடுத்த நாள் விடியலே யுகபாரதியின் விபத்து நடந்து, அந்தச் செய்தி அலுவலகப் பணியாளர்கள் அனைவர்க்கும் பரவி இருந்தது. அவள் மன ஓட்டங்கள் அனைத்தும் உண்மை ஆனது போல் தோன்றியது அவளுக்கு.

மன அமைதி வேண்டி கோவிலுக்குச் சென்றிருந்தாள். அதுவும் பெருமாள் கோவில். உள்ளே நுழைந்தவளுக்கு எப்பொழுதும் வந்து ஒட்டிக்கொள்ளும் பரவசம் இப்பொழுதும் வந்து ஒட்டிக்கொண்டது.

அண்ட சராசரத்தை ஆளும் அந்த ஆதி மூலம், இவளைப் பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டு இருந்தார் சிலையாய். அப்படித் தான் அவளுக்குத் தோன்றியது.

‘யார் கொடுத்த சூடு?
நெஞ்சுவரை எரிகிறது.
உற்றார் கொடுத்ததா?
உறவினர் கொடுத்ததா?
நிலையில்லா மனிதனைக் கண்டு
சிலையிலா சிரிக்கிறாய்?
பேசும் மடந்தை பேசாமல் உன்னிடம்
சொன்ன கதை எத்தனை?
பேசாத உன்னிடம்
பேசும் மனம் எத்தனை?
யார் கொடுத்த சூடு?
நெஞ்சுவரை எரிகிறது.

என்று அவள் மனம் ஓர் ஓரமாய் குமைந்து கொண்டிருந்தது.

சில தினங்களாக, காரண காரியங்கள் ஏதுமின்றி அவள் மனம் குழம்புவதும் தவிப்பதுமாய் இருக்கிறது. அதை என்ன என்று சொல்லி அந்தக் கடவுளிடம் பிராத்திப்பது என்று ஒன்றும் விளங்கவில்லை.
அவள் கையுடன் வாங்கி வந்திருந்த துளசி மாலையையும், அர்ச்சனை பொருட்களையும் அர்ச்சகரிடம் கொடுத்தவள், சாமி பேருக்கே அர்ச்சனை பண்ணிருங்க என்று என்றும் போல் இன்றும் செய்திருந்தாள். அந்த அர்ச்சகர் மகிழ்வாக அதை வாங்கிக்கொண்டவர்,

“அது என்னமோ தெரியலை டா கொழந்தே… வாரா வாரம் நீ வரும்போது மட்டும் பெருமாள் முகத்துல அப்படி ஒரு பிரகாசம் தெரியுரது. நீ கொடுக்கிற பூமாலையும், துளசி மாலையும் பகவான் கழுத்துல விரும்பி ஏத்துக்குறார் போல, அடுத்தநாள் வேற மாலை மாத்துறப்போ கூட உன் மாலை கொஞ்சமும் வாடாம பிரெஷ் அஹ் இருக்கு. அந்தப் பகவான் உன்ன நல்லா வச்சுருப்பார்!” என்று புன்னகை முகமாகச் சொன்னவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இப்பொழுது அந்தப் பகவானே தெருத் தெருவாய் அலைகிறார் என்று.

அவர் கூறியதில் மனோவிற்கு அத்தனை மகிழ்ச்சி. மனம் லேசானது போல் உணர்ந்து, முன் இருந்த மனச் சஞ்சலங்கள் விலகினது போல் தோன்றியது. தரிசனம் முடித்து வெளியில் இருந்த பெட்டிக் கடையில் குலத்தடி மீன்களுக்கு ஒரு பொறி பாக்கெட் வாங்கி வந்தவள், அருகில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர் ஒருவரைப் பார்த்து அவருக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் வாங்கி கொடுத்திருந்தாள்.

பார்க்கவே தாடியும் நரையுமாக இருந்தவர், அவள் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக்கொண்டு அவளைப் பார்த்து அட்டகாசமாய் சிரித்தார். ஏதோ புத்தி பேதலித்தவர் போல என்று எண்ணி அவளும் வாஞ்சையாய் புன்னகைத்தாள்.

“அம்மாடி, கொஞ்சம் நில்லு தாயி!” என்று அவர் கணீர் குரலில் அழகாகப் பேசுவது அவளுக்குப் பிரமிப்பைக் கொடுக்க தவரவில்லை. இவரைப் பைத்தியம் என்று எண்ணிவிட்டோமே என்று ஒருபுறம் மனம் வருந்தவும் செய்தாள்.

“சொல்லுங்க ஐயா! வேற ஏதும் வேணுமா? சாப்பாடு ஏதும் சாப்புடறீங்களா?”

“இல்ல தாயி, எல்லாரும் பார்த்துட்டு ஒதுங்கி போற இந்த கெழவனை பாத்து நீ மட்டும் வந்து சாப்பிட பிஸ்கட் கொடுத்துட்டு போற பாத்தியா? நீ என் தாயின்னு நிரூபிச்சுட்ட” என்று மீண்டும் பட்டாசு வெடிப்பது போல் சிரித்து வைத்தார்.

“தாயி, உன் மனசுக்கு நல்லா இருப்ப!”

“நன்றி ஐயா!”

“இன்னும் நான் சொல்லி முடிக்கல தாயி!”

“என்னங்க ஐயா?”

“தெய்வத்தைத் தேடி நீ இங்க வந்திருக்க, ஆணா அந்த தெய்வம் உன்ன தேடிது. அது தெரியுமா தாயி உனக்கு?”

“என்ன சொல்றிங்க ஐயா? எனக்கு ஒன்னும் புரியல”

“புரியும், புரியும்… நீ பாத்து சூதானமா இருந்துக்க தாயி. அம்புட்டு தான்!”

“சரிங்க ஐயா!” என்றதோடு குழம்பியபடி சென்றுவிட்டாள்.

ஹரியும் நரேஷும் யுகாவின் அடைக்கலத்திற்குள் வந்து இரு தினங்கள் ஆகி இருந்தது. லட்சுமியாக இருக்கலாம் என்று எண்ணிப் பார்த்த வைஷ்ணவியைப் பற்றி யுகாவிடம் எப்படி கூறுவது என்று ஒரே குழப்பம் இருவருக்கும்.

“நரேஷு…!”

“பாஸு”

“இப்போ நம்மகிட்ட அந்த பொண்ணு போட்டோவும் இல்லை. அந்த பொண்ணை பத்தியும் நமக்கு ஒன்னும் தெரியாது. எதை வச்சு அந்த பொண்ணை நாம கண்டுபிடிக்க போறோம்?”

“இப்படி சட்டுனு கேட்டா எப்படி பதில் சொல்றது பாஸ். இருங்க கொஞ்சம் சாப்பிட்டு வந்து யோசிக்கிறேன்!” என்று எழுந்து செல்லப்போனவனை இழுத்து அருகில் அமர்த்தி மண்டையில் நங்கு நங்கென்று வைத்ததில் தலையைச் சுற்றி நட்சத்திரங்கள் பறந்தது நரேஷிற்கு.

“என் வாழ்க்கையை பத்தி பேசிகிட்டு இருக்கேன். நீ என்ன எப்ப பாத்தாலும் சோறு சோறுன்னு ஓடுற. இடியட். ஒழுங்கா வந்து ஐடியா சொல்லு!”

“பாஸ், இப்படி போர்ஸ் பண்ணியெல்லாம் ஐடியா வராது. அது தானா உதிக்கணும்!”

“அது உதிக்கலைன்னா, நான் உன்ன உதைப்பேன்! பரவாலையா?”

“பாஸ், இப்படி உங்களைப் பத்தி கவலைப் பட்டு, அக்கறைல கூட வரேன்னு சொன்ன நல்ல மனசை, பாவப்பட்ட ஜீவனை, ஒன்னும் தெரியாத இந்த பச்ச மண்ணை…”

“சரி போதும், இதோட நிறுத்திக்க!”

“டென்ஷன் ஆகாதீங்க பாஸ்! எதாவது வழி கண்டுபிடிப்போம். அதை விடப் பெரிய மேட்டர் அஹ் நாம மறந்தே போய்ட்டோம் பாருங்களேன்!”

“என்ன?”

“இந்த யுகாவுக்கும், நம்ம ஷேஷாவுக்கும் என்ன சம்பந்தம். இல்ல ரெண்டு பேரும் ஒரே ஆளான்னு கண்டுபிடிக்கணும்ல!”

“இதென்ன தனி தலை வழி. பூமிக்கு வந்ததும் தான் வந்தோம், எவனை பாத்தாலும்… இவன் அவனா இருப்பானோ, அவ இவளா இருப்பாளோன்னு ஒரே குழப்பம் தான். இனிமேல் நம்ம பிரம்மன் கிட்ட ஒரு பெட்டிசன் போட்டு ஒரே முக ஜாடைல ரெண்டு பேரை பூமிக்கு டெலிவரி செய்யாதீங்கன்னு சொல்லிறனும்.
நாம பாத்த பொண்ணு என் பொண்டாட்டி இல்லைனு தைரியமா சொன்னாலும், அந்த ஜாடைய பாக்கும்போது
என் பொண்டாட்டி அஹ் இருந்துட்டா என்ன பண்றதுன்னு ஒரு குழப்பம் வருது. இதென்ன நாய் பொழப்பா இருக்கும் போலவே! ச்சை…!”

“அது ஒன்னும் இல்ல பாஸ், எவனையோ எந்த பிறவிலையோ செம்மையா அலைய விட்டுருப்பிங்க. அதுதான் உங்களைத் திருப்பி அடிக்குது… சும்மா இல்லாம போற எடத்துல எல்லாம் ஒரண்டை இழுக்க வேண்டியது. அப்றம் குத்துதே கொடையுதேன்னு சொன்னா. நாங்க என்ன பண்ண முடியும்?”

“என்னது? நான் ஒரண்டை இழுத்துட்டு வந்தேனா?”

“பின்ன இல்லையா? எல்லா பிறவிலையும் எதையாச்சும் ஒரு சம்பவம் சிறப்பா பண்ணிட்டு தானே வந்திங்க…!”

“என்னால முடியல டா நரேஷு… நான் என் பொண்டாட்டியைத் தேடுவேனா? இல்ல இந்த யுகபாரதி யாருன்னு கண்டுபிடிப்பேனா? இல்லை உன்னோட இம்சைய சமாளிப்பேனா? என்னைய பாத்தா பாவமா இல்லையா டா உனக்கு”

“லைட் அஹ் பாஸ்…!” என்று அவன் கூறி முடிக்கவும், ஹரி அவனை முறையோ முறையென்று முறைக்கவும், அவர்கள் இருந்த விருந்தினர் மாளிகை ஒட்டி இருந்த யுகாவின் வீட்டில் இலக்கியாவின் தேன் குரலில் பரிபாடல் ஒன்று ஓங்கி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

“தீயினுள் தெறல் நீ;
பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ;
சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ;
மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ;
பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ;
திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ;
அனைத்தின் உட்பொருளும் நீ;”
என்று ஏற்ற இரக்கங்களுடன் இன்னிசை சேர்த்து அவள் பெருமாளை பூஜித்து வாழ்த்திப் பாடியதில் உண்மையில் நம் பெருமாள் மனம் உருகித் தான் போனார்.

அவள் மனமுருகப் பாடுவதைக் கேட்டுக்கொண்டே வீட்டின் முகப்பு வரை வந்தவர்கள் கண்களில் பட்டது என்னவோ கண்ணீர் கோடுகளோடு கண்ணங்களைத் துடைத்துக்கொண்டு இருக்கும் இலக்கியா தான்.

“பாஸ், என்ன பாஸ் அந்த பொண்ணு உங்களுக்கு பூஜை பண்ணிகிட்டே அழுதுகிட்டு இருக்கு?”

“அதுவா, பேபி பீவர் (baby fever) டா”

“அந்த பொண்ணோட பேபிக்கு பீவர் அஹ்?”

“அட வெண்ண, பேபி பீவர்ன்னா குழந்தைக்கு ஏங்குறது!”

“ஓஹ், புள்ளை வரம் கேட்டு சாமி கும்புடுதா அந்த பொண்ணு!”

“ஹ்ம்ம்… ஆமா”

“ஏன் பாஸ், அந்த பொண்ணு பாக்க நல்ல பொண்ணா தான் இருக்கு. நீங்க கொஞ்சம் கருணை காமிக்கலாமே!”

“எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்… நீ மூடிட்டு வா! மொதல்ல யுகா கிட்டப் போய் ஏதாச்சும் தேறுற மாதிரி சொல்லுவோம். இப்டியே வந்தவரை லாபம்னு டேரா போட்டுக்கிட்டு உக்காந்துருந்தா பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும்!” என்று ஹரி கூறி முடிக்கவும் அவர்கள் பின்னால் யுகா வந்து நின்றிருந்தான்.

“என்கிட்ட என்ன தேறுற மாதிரி சொல்ல போறீங்க?” என்று அவன் குரல் பின்பக்கம் இருந்து கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினார்கள் இருவரும்.
அதில் கொஞ்சம் யுகாவிற்கு சந்தேகம் துளிர்விட்டது உண்மை தான். இருந்தும் ஏதும் சொல்லாமல் அவர்கள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

“ஹ்ம்ம், சொல்லுங்க. என்கிட்ட என்னமோ சொல்லணும் சொன்னிங்களே?’

“அது வந்து என்னனா… எங்க பாஸ், பாஸ்… அதுவந்து…!” என்று நரேஷ் உளறிக்கொண்டு இருக்க,

“அட என்னனு ஒளரமா சொல்லுங்க ஜீ!” என்றான் யுகா.

“எங்க பாஸ் அஹ் காணோம்?”

“என்ன உங்க பாஸ் அஹ் காணுமா? இங்க தான இருக்காரு!”

“அட ச்சே, எங்க முனிவரை சபிச்சுட்டாங்க!”

“என்ன சொல்றிங்க நீங்க? எந்த முனிவரை சபிச்சாங்க!”

“ஐயோ கோர்வையா ஒளறுறனே…! இருங்க ஜீ ஒரு பார்ம்க்கு வந்துக்குறேன்…” என்று இவன் தடுமாறிக்கொண்டு இருக்க, ஹரி அவன் முதுகில் அழுத்தியபடியே,

“வாயை மூடுடா பன்னாடை!”

“பன்னாடை… மீ?”

“ஆமா.. நீதான்!”

“வொய் பாஸ்?”

“ஏன்டா நம்மள பத்தின உண்மையெல்லாம் யார்டையும் சொல்ல கூடாதுனு நாம முடிவு பண்ணோம்ல! நீம்பாட்டுக்கு சாபம் முனிவர் காணோம்ன்னு ஒளறிக்கிட்டு இருக்க!”

“அட போங்க பாஸ். இதெல்லாம் வேலைக்கு ஆகாது! பேசாம உங்க தந்திர வித்தைகளை அவுத்து விடுங்க. அப்றம் நாம கேக்குற ஹெல்ப் அவன் பண்ணாமலா போயிருவான்?”

“எதே வித்தைய அவுத்து விடணுமா? ஏதோ லுங்கிய அவுத்து விடுங்கன்னு சொல்ற மாதிரி சொல்ற. நான் என்ன இங்க சர்க்கஸ் அஹ் நடத்துறேன்?”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, யுகாவிற்கு சந்தேகம் அதிகரித்தது தான் மிச்சம்…
சற்று நேரத்திற்கெல்லாம் யுகாவின் பேச்சே மாறியிருந்தது.

“எனக்கு உங்களை பாத்தா சந்தேகம் தான் வருது. என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்து உதவினதுக்கு ரொம்ப நன்றி. அதுக்கு பதில் உங்களை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கூட்டிட்டு வந்து உதவி பண்ணியாச்சு. நீங்க இப்போ கெளம்பலாம். உங்க பேச்சே ஏதும் சரி இல்லை. ப்ளீஸ் லீவ்!” என்று கூறிய யுகாவின் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.

“அய்யயோ பாஸ். இவன் என்ன அம்பி மாதிரி பதுசா பேசுனவன் இப்போ அந்நியன் மாதிரி பாயுறான்… என்ன பாஸ் பண்றது இப்போ?”

“என்ன கேட்ட நான் என்ன சொல்றது. ஒளறுனது நீதான?”

“நேரம் காலம் தெரியாம என்னைய ஏன் கோத்துவிடுறீங்க?”

“வெளிய போங்கன்னு சொன்னேன்!” என்று இம்முறை யுகா சத்தமாகவே கத்தி இருந்தான்.

“அட சீக்கரம் பாஸ். ஏதாச்சும் பண்ணுங்க பாஸ். அவன் உக்கிரம் ஆகிட்டே போறான் பாருங்க!”

“ஏதாச்சும் பண்ணுங்கன்னா… என்ன பண்றது?!”

“அட ஏதாவது ஜீ பூம் பா பண்ணி என்னத்தையாவது செஞ்சி தொலையுங்களேன் ப்ரபு…!”

“டேய் வாய் நீளுது உனக்கு!”

“ஆமா இப்போ அது தான் மிக முக்கியம்… ஏதாவது செய்யுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன்…”

“சரி இரு இரு…!” என்று இருவரும் பதற்றம் மேலோங்கப் பேசிக்கொண்டே இருக்க,
அங்கே யுகா, “செக்யூரிட்டிஈஈஈ…!!!!!” என்று கத்தி இருந்தான்.

 

– பிரிவோம் சந்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!