Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அலை – 12.1

“அவன் போன் போட்டானா ரோஹி?”

“போடலையே அத்தை” பதில் கொடுத்தவளின் கண்கள் தினசரி செய்தித்தாளின் விளையாட்டு பக்கத்தை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்தது.

“இவனுக்கு இதே வேலை. இத்தனை நாள் சரி, கல்யாணம் ஆனதுமாவது உனக்காச்சும் போன் பண்ணி பேசணும்ல.”

கவனமே இல்லாமல், “ம்ம்” கொட்டியவள் விளையாட்டு செய்தியில் இருந்த மட்டைப்பந்து தொடர்பான செய்தியை ஒவ்வொரு வரியாக வாசித்தாள். அவன் பெயர், அவன் பெயர் என கடலின் ஆழம் சென்று தேடியவளுக்கு அஸ்வின் என்ற பெயரை பார்த்ததும் அத்தனை உவகை முகத்தில்.



Advertisement

“எண்ணெய் ரொம்ப நேரம் வச்சிருக்காத ரோஹி. ஜுரம் வந்துடும், அப்றம் உன் வீட்டுக்காரன் என்கிட்ட தான் ஆடுவான், போய் குளி.”

தான் அவசரப்படுத்தியதற்கு எந்த பதிலும் வராமல் போக மருமகள் கொடுத்த கற்றாழை எண்ணெயை சீராக தலையில் தேய்த்து தலை சாய்த்து படுத்திருந்தவர் கண்களை திறந்து பார்க்க, மருமகள் அந்த நாளிதழில் மூழ்கி கிடந்தாள். விட்டால் குப்புற கவிழ்ந்து அதனுள்ளே குதித்துவிடுவாள் போல்.

“என்ன பண்ற அண்ணி?” வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த் அவளை பார்த்த மாத்திரம் சிரித்துவிட்டான்.

Advertisement

இருவர் அழைத்தும் மௌனமே வர, அவளை நோக்கி நடந்தவன் அவள் தலையை மெல்ல ஆட்டினான். அவன் கையை தட்டிவிட்டவள் சுருங்கிய முகத்தோடு தலையை தூக்கினாள்.

Advertisement

“உன் அண்ணன் இப்ப இன்னைக்கு தான் டீம் கூட பிராக்டிஸ் பண்ண போயிருக்கார். ஆனா ஏன் பொய் சொன்னார்?”

மதி மருமகளின் ஏக்கத்தில் மகிழ்ச்சி பெருக பேச்சற்று அமைதியானார். சித்தார்த் மனமும் நெகிழ்ந்தாலும் கோணல் சிரிப்போடு, “ஒருவேளை யாரையாவது பாக்க போயிருப்பானோ?”

“யவ்னிகாவா இருக்குமோ?” சோகம் கண்களில் இழையோட அவள் கேட்பதை பார்த்து மதிக்கு அந்த வருத்தம் தொற்றிக்கொண்டது.

Advertisement

“அவ்ளோ வருத்தம், சந்தேகம் இருந்தா நீயே அவனுக்கு போன் பண்ணி கேளேன்” என்றவர் குரலில் இளைய மகன் மேல் சிறு கோவமும் வந்தது.

அவள் அமைதியாக இருந்தாலும் இவன் எதற்கு தேவையில்லாதது பேசுகிறான் என்கிற கோவம். பெரிய மகன் மேல் முழு நம்பிக்கை, அன்று தன்னிடம் மருத்துவமனையில் வைத்து சத்தியம் செய்தானே, இவள் மட்டுமே தன்னுடைய மனைவி என்று. அதை மீறி செயல்படுபவன் அவன் அல்லவே. அதை மருமகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் சொல்லிவிட்டார்.

“அது என்ன சந்தேகம் இருந்தா? எங்களுக்கு சந்தேகம் தான். என்ன ரோஹி?”

நெருப்பை ஊதுகுழல் வைத்து மேலும் மேலும் ஊதினான் கொழுந்தன். ஆரோஹிக்கு எந்த பக்கம் சாய்வதென்றே தெரியவில்லை, காகித கப்பல் போல் நிலையற்று திரிந்தது மனம்.

ஆனால் பேசி பார்த்தே தீர வேண்டும் போல் இருக்க, தான் குளிப்பதாக சாக்கிட்டு ஓடிவிட்டாள் அவள், அவன் அறைக்கு.

உள்ளே நுழைந்ததுமே கணவனுக்கு அழைத்து பார்க்க, அழைப்பை ஏற்பார் இல்லை. சரி என குளித்து அவதியோடு வந்து பார்த்தாலும் மறுஅழைப்பும் வந்தபாடில்லை.

காத்திருந்தாள், காத்திருந்தாள். அவனது இணைய வலைத்தளங்களில் அவன் பயிற்சி செய்வது போல், நண்பர்களோடு இணைந்து சிரித்து பேசுவது போல் பல வகையான புகைப்படங்களை பதிவு செய்தான் தான், ஆனாலும் மனைவிக்காக முழுதாய் ஒரு நிமிடம் ஒதுக்கவில்லை.

வீட்டில் அர்த்தமே இல்லாமல் உலா வந்தவள் செய்தது யாவும் தேவையற்ற வேலையே. என்ன செய்கிறோம் என்று தெரியாமலே வளைய வந்தவளை பார்க்க மதிவர்த்தினிக்கு சிரிப்பு அதிகம் வந்தது.

ஓய்வெடு, உறங்கு எனக் கூறியும் கண்களில் தூக்கம் சொட்ட சொட்ட முழித்து கைபேசியை அவ்வபோழுது பார்த்துக்கொண்டே இருந்தாள். காலை தொடங்கிய ஏக்கம் மதியம், மாலை தாண்டி இரவு வரை அழையா விருந்தாளியாக பின்தொடர்ந்தது.

கடன்பட்டவனோ பொறுமையாக இரவு உணவை முடித்த பிறகே அழைத்தான். அதுவும் வெறும், “ஹலோ” மட்டுமே.

மூக்கு விடைக்க கோவம் அவன் மனைவிக்கு, ‘ஹலோவாமே ஹலோ’ ஆத்திரம் பொங்க மௌனம் சாதித்தாள். கைபேசியை காதிலிருந்து எடுத்து பார்த்தான் இணைப்பு இணைந்து பத்து நொடிகளுக்கு மேல் ஆகியிருந்தது.

“ஹலோ இருக்கியா?” ஸ்பீக்கரில் போட்டு உறங்க தயாராகினான்.

உடல் மொத்தமும் அடித்துப் போட்டது போல் அலுப்பு தட்டியது, காலையிலிருந்து பயிற்சி கடுமையாக இருந்தது. இடையிடையே நண்பர்களோடு பேச, சிரிக்க என்றிருந்தாலும் இரவு வரை மைதானத்தை விட்டு வர மனம் வரவில்லை.

அதோடு இரண்டு நாட்களாக யவ்னிகா அழுகை, கோவம், தவிப்பு என பார்த்தவன் உள்ளமும் சோர்ந்து தான் கிடக்கிறான்.

‘என்ன ஹலோ எனக்கு பேர் இல்லையா?’ சண்டையிட தூண்டிய மனதினை துணியை மடித்து வைத்து பெரும்பாடு பட்டு அமைதிப்படுத்தினாள்.

“போன் பண்ணா என்ன ஏதுன்னு பேசணும். அதைவிட்டு உன் வேலைய பாக்கவா எனக்கு கால் பண்ண?” எரிந்து விழுந்தான் அந்த பக்கம்.

அவனது உயர்ந்த குரலும் ஓங்கிய சினமும் ஆரோஹிக்கு தூக்கிவாரி போட, செய்த வேலையை விட்டு அப்படியே நின்றாள்.

“சரி வைக்கிறேன்” அதே உஷ்ணத்தோடு அவளது அமைதியில் இணைப்பை துண்டித்தவன் மெத்தையில் படுத்து உருண்டு பிரண்டும் உறக்கம் அண்டாமல் போனது. மனம் தாளாமல் எழுந்து அமர்ந்தவன் அவளது கைபேசிக்கு அழைத்தான்.

ஒரே ஒரு ரிங் தான் சென்றிருக்கும் உடனே ஏற்றுவிட்டாள் இதற்காகவே காத்திருந்தது போல். சிகையினுள் விரல்களை விட்டு கோதியவன் மனம் வாடியது.

“ஹலோ” குரலை வரவழைத்து அவன் பேச, “ம்ம்” என்றாள் அமைதியான வேகத்தோடு அவன் மனைவி.

‘பயப்பட வைத்துவிட்டேன்’ தனக்குள்ளே சிரித்தவன், “தூக்கத்துல இருக்கியா?” என்றான்.

மணியை பார்த்தாள். பத்தை கூட தொடவில்லை சிறிய முள். இவனை போல் ஒன்பதரைக்கெல்லாம் உறங்குபவளா அவள்?

“ம்ம்ஹும்” என்ற முனகல் மறுப்பு தான்.

“அப்றம் ஏன் நான் பேசுறப்போ பதில் பேசாம இருந்த?”

“நீங்க எங்க பேசுனீங்க? திட்டுனீங்க, கோவமா இருந்திங்க.”

எழுந்து அறையை விட்டு பால்கனி வந்தான்.. “அது ஒரு பிரச்சனை ஆரோஹி”

ஆரோஹி, “என்ன ஆச்சு?”

“ஒன்னுமில்ல” அவன் அணியினுள் ஏதேனும் பிரச்சனையோ என சிந்தித்தவள், அவனது சிந்தனையை பற்றி யோசிக்காமல், கேளாமல் தன்னுடைய சந்தேகத்தை முன்னிறுத்தினாள்.

“நீங்க இன்னைக்கு தான் பிராக்டிஸ்க்கு வந்திங்களா?”

புருவம் இடுங்க, “ஆமாம்” என்றான்.

“ஓ…” என ராகம் இழுத்தவள், “யாரை பாக்க போயிருந்திங்க?” அவளது தயக்கமே தான் பேசியதை தவறென அவள் உணர்ந்ததை அறிந்தாலும், அஸ்வினுக்கு சுள்ளென கோவம் ஏறியது.

“யார் பேர் சொன்னா உனக்கு நிம்மதியா இருக்கும் ஆரோஹி?” நாகமாய் சீறிய அவன் வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தின் பெயரிலே எத்தனை மடத்தனம் செய்துள்ளோம் என ஆரோஹிக்கு புரிந்தது.

“உங்கள தப்பா சொல்லல, நீங்க கெளம்பி ஒரு வாரமாச்சு ஒரு கால் கூட பண்ணல…”

“ஒரு வாரம் கால் பண்ணல இவன் யார் கூடயோ ஊர் சுத்த கெளம்பிட்டான்னு நீயா ஒரு முடிவு பண்ணி சந்தேகப்பட்டு கேக்குற?” முகத்தில் சில்லென்ற காற்று அடித்தாலும் அவள் வார்த்தைகளால் ஏறிய உஷ்ணம் மட்டும் மட்டுப்படவே மாட்டேன் என்றது.

“நீ இழுத்து வச்ச பிரச்சனைய நான் முடிக்க முடியாம திணறிட்டு நிக்கிறேன். என்னமோ அவளை நான் ஏமாத்தி கெடுத்த மாதிரி அவ அப்பன் என்ன வந்து கத்துறான். போதாததுக்கு அவ ஒரு பக்கம் கண்ண கசக்கிட்டு, தினமும் என் உயிரை வாங்குறா. இது எல்லாம் போதாதுன்னு உன் பங்குக்கு நீ சந்தேகப்படு. நிம்மதியா இருக்கு.”

“கிரிக்…”

“தலை வலி தெறிக்கிது தயவு செஞ்சு வை ஆரோஹி” பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கியவன் அவள் உணர்வை கூட புரிந்துகொள்ளாமல் பேச்சை முறித்து மெத்தையில் சரிந்தான்.

அஸ்டராய்டாய் (asteroid) அதீத வேகத்தோடு மோதியவன் வார்த்தைகள் ஆரோஹி மனதினை தீ வைக்க, நெருப்பாய் உறுமினாள் அவளும்.

‘நான் என்ன கேட்டேனாம்? சரி தப்பு தான். அதுக்குன்னு தலைவலியே என்னால தான்னு சொல்றார். இதுல ஆரம்பத்துல இருந்து போன் வைக்கிற வரை கோவம் மட்டும் தான்’ பொருமலோடு அஸ்வினை திட்டி வருத்தத்தை மறைத்து நள்ளிரவை தாண்டி உறங்காமல் தவிக்க, நிதான யோசனைக்கு பிறகே அவன் கோவம் புரிந்தது.

உடனே அவனுக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை அனுப்பி வைத்து தான் உறங்கினாள் நாளை பேசிக் கொள்வோம் என்கிற நம்பிக்கையில். அஸ்வின் அவள் நினைவிற்கெல்லாம் வடிகால் போல அடுத்து வந்த ஒரு வாரம் அவளிடம் பேச முயற்சிக்க கூட இல்லை.

ஏன் அவள் அனுப்பிய மன்னிப்பை பார்க்க கூட இல்லை. கோவம் சிறுக சிறுக வருத்தமாய், வருத்தம் மெல்ல மெல்ல அழுகையாய் மாறியது. இங்கிருந்தவரை சேயாய் பாதுகாத்ததென்ன, தோழனாய் சீண்டியதென்ன, கணவனாய் உரிமை கொண்டாடியதென்ன?

இத்தனையையும் கொடுத்தவன் அவை நிகழ்ந்த தடயத்தையே மறைத்து உதாசீனம் செய்வதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போராடி தோற்றுப்போனவளை இழுத்து பிடித்து தொலைக்காட்சி முன்பு அமர வைத்தார் மதி. அதில் லைவ்வாக நடந்துகொண்டிருந்த கிரிக்கெட் போட்டியை சுவாரஸ்யமே இல்லாமல் பார்த்தவள் முகம் மெல்லிய விடிவெள்ளி போல் அவள் கணவனை காணும் பொழுதெல்லாம் மின்னும்.

அதிலும் இன்று அவன் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. கோவம், ஆக்ரோஷம் என இரண்டு மட்டுமே தெரிந்தது. பேட் பிடித்த ஒரு வீரனோடு வேறு சண்டைக்கு சென்றுவிட, மற்ற வீரர்கள் தான் அஸ்வினை பிடித்து நிறுத்திவைக்க வேண்டி இருந்தது.

அதோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை, அஸ்வின் பேட் செய்ய வரும்பொழுதும் பந்து வீச்சாளர் அவன் முகத்திற்கு நேராக பந்தை எறிய இப்பொழுதும் சண்டைக்கு சென்றவன், அடுத்த இரண்டு பந்துகளில் ஆட்டம் இழக்க, pavilion சென்றவனின் கோவத்தை மறக்காமல் கேமரா பல புகைப்படம் எடுத்துக்கொண்டது.

ஆக அன்று முழுவதும் வலைத்தளங்களில் பேச்சே அவனானான். அவன் கோவம் பேச்சானது. எப்பொழுதும் இருப்பதை விட அதிக ஆக்ரோஷத்தை கண்டு அவன் ரசிகர்கள் கூட பிரமித்துப்போயினர்.

மதி, சித்தார்த் என அனைவரும் வருத்தமுற மௌனமாய் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாள் ஆரோஹி. அன்று இரவு பனிரெண்டை தாண்டிய பிறகு பட்டிமன்றமே அவளுள் நிகழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!