Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 13.2

தானும் வேகத்தை கூட்டி சென்ற அஸ்வின் பார்த்தது அவளுக்கு அரணாக காப்பர், மேவரிக் இருவரும் நடந்து செல்ல அவன் மனைவி சிறிதும் அச்சம் காட்டாமல் அவைகளோடு பேசியபடியே நடந்தாள்.

அவளது கேள்விக்கு மேவரிக் சரியாக மிதிவண்டி இருந்த பக்கம் பார்த்து குறைக்க அவனை தொடர்ந்தே தானும் நடந்தவள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதத்தை பார்த்து அஸ்வினை முறைத்தாள்.

“எப்போ பழகுன இவங்ககிட்ட?” அவளை முந்தி அவனே கேள்வி கேட்டு வைத்தான்.

“அது எதுக்கு உங்களுக்கு? என் சைக்கிள இப்டி தான் தூக்கி போடுவீங்களா?” கோவமாக அவனை கேட்டாள்.



Advertisement

“யாரோ அதை வேணாம்னு சொன்னதா நியாபகம்”

ஆரோஹி, “சொன்னா சமாதானம் பண்ணிருக்கணும். அதை விட்டு மூலைல தூக்கி போட்டுடுவீங்களா?” பெண்களுக்கான இந்த மூட் ஸ்விங்கை சமாளிப்பது என்பது அந்த இறைவனுக்கே சவாலாக இருக்க அஸ்வின் சாதாரண மானுடன் தானே, திணறினான் அவனும்,

“சரி எடுத்துக்கோ”

Advertisement

அனுமதி கொடுத்தவன் கண்களில் பல மடங்கு மகிழ்ச்சி. பளிச்சென மின்னல் சிரிப்பு இதழ்களில் மலர்ந்திட ஆரோஹி அந்த மிதிவண்டியில் ஏறி அமர அவள் உயரத்திற்கு அது எட்டாமல் இருந்தது.

Advertisement

சீட்டை இறக்கி விட்டால் சரியாக இருக்குமோ என்கிற எண்ணத்தில் அஸ்வினிடம் கேட்க நாளை செய்து தருவதாக கூறினான். ஆரோஹிக்கு திடீரென தோன்றிய எண்ணம் முகத்தை ப்ரகாசமாக்க மிதிவண்டியை தள்ளியபடியே அஸ்வினிடம் அதனை ஒப்படைத்தாள்.

“நான் ஓட்டவா?”

“ம்ம்ம்”

Advertisement

“எனக்கு சைக்கிள் எல்லாம் இண்டெர்ஸ்ட் இல்ல ஆரூ. நாளைக்கு சீட் அட்ஜஸ்ட் பண்றேன். இப்ப வா”

ஆரோஹி, “இல்ல நான் இப்ப கண்டிப்பா போகணும்”

அஸ்வின், “நீ போகணும்னா நான் எப்டிம்மா ஓட்டுனா சரியா வரும்?”

“நீங்க இங்க உக்காருங்க, நான் இங்க ஒக்காருறேன்” சீட்டை காட்டி அஸ்வினுக்கு இடம் ஒதுக்கியவள் அந்த சீட்டுக்கும் ஹாண்ட்பார் இடையே இருக்கும் கிராஸ்பார் எனப்படும் கம்பியை காட்டி தனக்கென கூற அஸ்வின் தொண்டை குழி ஏறி இறங்கியது.

“ஆரூ. அது கம்ஃபோர்டபிளா இருக்காது”

ஆரோஹி உடனே, “அதெல்லாம் எனக்கு பிரச்னை இல்ல, வாங்க” அவனை இடைமறித்து நிறுத்தினாள்.

‘உனக்கு யாருடி சொன்னது…? பிரச்சனை எனக்கு தான்’

ஒரே பிடியாக நின்ற ஆரோஹியின் வார்த்தை மீறாமல் தானே சைக்கிளில் ஏறி அமர்ந்தவன் அவளை பார்க்க, ஆரோஹி கரங்கள் கூட சற்று நடுங்க தான் செய்தது. இருவரையும் மீறி அவரவர் உள்ளத்தினில் வந்தமர்ந்த சுவாரஸ்யம் மேலும் இந்த செயலை செய்ய உந்தியது.

அஸ்வின் இதழ்களில் இருந்த சிரிப்பு, அதன் பின் ஒளிந்திருந்த ஆசை அவளது அருகாமையை பெரிதும் தேடியது.

“என்ன வேணாமா?” ஒரு வேகத்தில் கேட்டாயிற்று அதன் பிறகு தொடரப்போகும் நெருக்கம், அவன் தேகத்தோடு உறவாடும் அவள் தேகம் என உண்மைகள் உரைக்க தூக்கிவாரி போட்டது.

‘வேண்டும் தான், ஆனாலும்…’ முரண்பட்டு நின்ற எண்ண சந்தங்களுக்கு செவிமடுத்து அவன் கேள்விக்கு பதில் கொடுக்க மறந்தாள்.

அஸ்வினுக்கோ அவன் சிந்தை இந்த நிகழ்வை நினைத்து ஒரு அழகிய சொப்பனத்தையே கண்டுவிட்டது. வெட்டிவிட்டால் ஏமாற்றம் மொத்தமும் அவனுடையதே ஆகிவிடும்.

“ஆரூ” ஏமாற்றத்தின் தொடக்கத்தில் ஒலித்த அவன் குரலை கேட்டவளுக்கு இதயம் தாறுமாறாக அலறியது.

இந்த ஒரு அழைப்பை வித விதமாக அழைத்து அழைத்து தானே அவளை சிந்தையிழக்க செய்திருக்கிறான்.

“நீங்.. நீங்க கொஞ்சம் பின்னாடி தள்ளி ஒக்காருறீங்களா?”

பின்னால் திரும்பி பார்த்தவன் அவளிடம், “எங்க ம்மா?” அவனை போலவே அவளும் எட்டி பார்த்தாள் சக்கரத்தை தவிர எதுவும் இல்லை, இருந்தாலும் மனம் கேளாமல்,

“பின்னாடி?” அப்பாவியாக கேட்டவளிடம் சண்டித்தனம் செய்யாமல் மனம் மண்டியிட்டது.

“நான் வீல்ல, நீ சீட்லயா?” அஸ்வின் கேட்ட பிறகல்ல அதற்கு முன்பே அவளுக்கே அவள் கேள்வி அபத்தமாக தோன்றியது தான்.

ஒருவழியாக மனதினை நெறிப்படுத்தி, “சரி கை எடுங்க” அஸ்வின் கை எடுக்க அந்த கம்பியில் அமர்ந்தவள் தன்னாலே வழுக்கிக்கொண்டு அவன் மார்பினில் முட்டி நின்றாள்.

காரணம் அந்த கம்பி சற்று வலுக்கிவிழுகும் வகையில் சாய்வாக அமைந்திருந்தது. இது அஸ்வினுக்கு சாதகமாகி போக மார்பினில் விழுந்த மனைவியை அனிச்சையாக இடை வளைத்து தங்கினான், “ஹே பாத்து” என வேகமாக.

ஆரோஹி குணம் அறிந்து அவள் நிலைப்பாட்டினை உறுதி செய்தவன் கையை அவளிடமிருந்து எடுத்து அவளது தவிப்பை உடனே போக்கினான்.

சிறிதும் உணர்வை காட்டாத அந்த தொடுகையில் உணர்ச்சிகளை பூட்டி வைத்து பெண்ணின் மனம் தான் காரணம் இல்லாமல் நீரினில் அடித்து செல்லப்படும் இலையாக மிதக்கிறது.

“பேலன்ஸ்க்கு என் கையையும் புடிச்சுக்கோ ஆரூ” அவன் கூறியதை போலவே ஒரு கையை சைக்கிளிலும் மற்றொரு கையை பிடிமானத்திற்காக அவனது கையையும் பிடிக்க ஆரோகியின் சைக்கிள் தன்னுடைய முதல் சவாரியை துவங்கியது.

பழைய படங்களில் வரும் இது போன்ற காட்சிகளை பார்த்து அன்னை, தந்தையிடம் கேலி பேசிய நாட்களை நினைத்து பார்த்தவனுக்கு சிரிப்பு தான், அன்று கேலியில் விரிந்த இதழ்கள் இன்று அதே காட்சியை அனுபவித்து ரசிப்பில் இதழ் விரிக்கிறான். ரசனைக்காரர்கள் தான் அவர்கள் என இன்று பாராட்டியது மூளை.

நெஞ்சம் முட்ட முட்ட நிறைந்துகொண்டிருப்பவளை நெஞ்சோடு அணைத்து இரவில் சாதாரண மிதிவண்டியில் உலாவருவது கூட இத்தனை பேரின்பம் கொடுக்குமா என வியந்தே போனான் அஸ்வின் நாராயண்.

அந்த விசாலமான இடத்தினில் மிதிவண்டியை செலுத்த அஸ்வினுக்கு சிரமமானதாக இருக்கவில்லை, கை திருப்பும் திசையில் வாகனம் செல்ல மனைவியின் வாசத்தை நுகர்ந்துகொண்டே ரம்யமான இரவை நீட்டினான்.

“எப்படி காப்பர், மேவரிக் கூட பழகுன?” பாறையை போல் கனத்த அந்த நொடியினை இலகுவாக்க தானே பேச்சு கொடுத்தான்.

“அதை ஏன் கேக்குறீங்க, அவனுங்க பக்கம் போனாலே உர்ருனு பாத்துட்டே இருப்பானுங்க. நானும் போவேன் பாப்பேன் எஸ்கேப் ஆகிடுவேன். அப்றம் இப்டியே விட்டா இவனுங்க சரி வர மாட்டானுங்கனு தெரிஞ்சு போச்சு. போய் நின்னுடுவேன் குறைஞ்சது அரை மணி நேரமாவது.

குறைச்சு குறைச்சு டயர்ட் ஆகிடுவானுங்க. அப்றம் சாப்பாடு நான் தான் உள்ள வைப்பேன். அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டோம். இப்ப அவனுங்க கூட கொஞ்ச நேரம் இருந்தா தான் எனக்கு அன்னைக்கு டே கம்ப்ளீட் ஆகுது. சேட்டைக்கார பசங்க அவங்க”

ரோபோ போல் விறைப்பாக இருந்தவள் உடல் தளர்ந்து மெல்ல அஸ்வின் மார்பினில் தன்னையே உணராமல் சாய்ந்திருந்தது.

“எதுக்கு செய்ற? உனக்கு தான் நாய் மேல பயம் அதிகம்ல?”

“பயம் இருக்கு தான்…”

“ம்ம் அப்றம் ஏன்?” ஏகாந்த இரவினில் அஸ்வின் குரலிலும் ஏகாந்தம் வீசியது.

“உங்களுக்கு புடிச்சது எப்படி இருக்குன்னு நானும் பீல் பண்ணி பாக்கணும்னு ஆசைப்பட்டேன்”

பறந்து விரிந்து வேரூன்றி நிற்கும் மரத்தின் நிழலின் அடியில் நிற்கும் பொழுது வீசும் காற்று அஸ்வின் உடலினுள் இப்பொழுது வீசியது. அந்த குளிர்ந்த காற்று அவன் உடலையே சிலிர்க்க செய்தது.

“ஏன்?” என்றான் மீண்டும் உனக்காக தான் என அவள் உதிர்க்க போகும் அந்த ஒரு வார்த்தைக்காக ஏங்கி.

“எத்தனை ஏன்?” அஸ்வினை திரும்பி பார்த்து ஆரோஹி சிரிப்போடு கேட்க, அவளது சிரிப்பில் சொக்கி போனவன் வண்டியை நிறுத்தி மெல்ல அவளை நோக்கி குனிந்தான்.

அஸ்வின் செயலை சிரிப்பு மறைய உணர்ந்தவள் தலையை பின்னால் இழுக்க, சைக்கிளை பிடித்திருந்த அவன் வலது கை அவள் இடையை மென்மையாக வளைத்து தன்னோடு பிடித்துக்கொண்டான்.

“நாராயணா…” ஆரோஹி மூச்சு வாங்க அஸ்வினை தடுக்க பார்க்க, அவனோ அவளது மூச்சினில் குளிர் காய்ந்தவன் போல் தலையை தாழ்த்தி அவளது நெற்றி முட்டி இளைப்பாறினான்.

வானிலை சீராக இருந்தாலும் இருவரது மூச்சு காற்றின் உபயத்தால் அவர்களை சுற்றி மட்டும் சரியில்லாத சீர்தோஷம் தான்.

“எனக்காக யோசிக்கிறியா பட்டாம்பூச்சி?” கணவனது கேள்வியில் ஆரோஹி பேச்சற்று நிற்க, அவன் இதழ்களில் திருப்தி புன்னகை, “கல்யாணத்தை பத்தி என்னென்னமோ எல்லாம் யோசிச்சு பயந்தேன். ஆனா இப்போ சந்தோசமா இருக்கு ஆரூ”

“ஏன்?” அவனது கேள்வி அவள் நாவிலிருந்து வந்தது.

இதழ் பிரியாமல் கண்ணாலே சிரித்தான், “அதை உன்கிட்ட தான் கேக்கணும்” என்ற அஸ்வின் இன்னும் சற்று குனிந்து அவளது நாசியொடு நாசியை இரண்டு முறை உரசினான்.

அந்த இரு நொடி தீண்டலே ஆரோஹியின் மூச்சை பலப்படுத்த தன்னுடைய சேட்டையை கைவிட்டு கண்களை மூடிக்கொண்டான். இமை சிமிட்டாது உரியவனின் அன்பை கண்களாலே கொள்ளளவு கொள்ளாதவரை உறிஞ்சியவள் விழிகளை தாண்டி வெளியேறிய நீரினை அவன் அறியாத வண்ணம் துடைத்து விட்டாள் வேகமாக.

“கிரிக்கெட்டரே… யாராவது பாத்துட போறாங்க” பூ மலரும் ஓசையில் கேட்ட அவள் குரலில் விழி திறந்து சிரித்தான்.

இதோ… இந்த சிரிப்பிற்கு தான் அவள் மொத்தமாய் அடிமையாவது.

ஒரே நொடியில் மிதிவண்டியில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன் தானும் இறங்கி அவளோடு அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தி சில நொடிகளில் வருவதாக கூறி வீட்டிற்குள் ஓடினான்.

சில நொடிகள் முன்பு கிடைத்த நெருக்கம், அது தந்த கிரகத்தில் இருந்து விடுபட்ட ஏமாற்றத்தில் வாடிய மனதினை சம்மட்டியை வைத்து அடித்து உடைக்க ஆவேசம் அதிகமாய் எழுந்தது ஆரோஹிக்கு.

இது எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை, அவனிடம் மயங்கி கிறங்கி அஸ்வினின் ஆரோஹியாய் மாறுவது ஆரோஹிக்கு பிடிக்கவில்லை.

தனக்குள்ளே கட்டுப்பாடு விதித்து பேசினாலும், அவன் அருகில் வந்து இரு வார்த்தை மென்மையாய் பேசினால் போதும், வேதாள மனது மீண்டும் பறந்துவிடுறது.

சென்ற வேகத்தில் வந்தவன் வேகம் அவளை காக்க வைக்க கூடாதென்பதில் முனைப்பாய் இருந்தது.

ஓடியே சென்று ஓடியே வந்தான் போல, மூச்சு வாங்க அவள் அருகில் வந்து அமர்ந்தான், “நான் எங்க போய்ட போறேன், மெதுவா வந்திருக்கலாம்ல நாராயணா?”

அனிச்சையாக அவளது கரங்கள் அவனது முதுகை நீவிவிட்டது அஸ்வினுக்கு சிரிப்பாய் தான் இருந்தது. தன்னை தேற்றும் மனைவியின் கையில் அவள் கேட்ட பரிசுகளையும், பதக்கங்களையும் ஒப்படைத்தான். அத்தனையும் அவன் போட்டியில் வாங்கியிருந்த பதக்கங்கள்.

அதனை பார்த்தவளுக்கு மகிழ்ச்சில் கை கால் ஓடவில்லை. அவன் பரிசு பெற்றதை பார்க்கும் அளவிற்கு அவளுக்கு பொறுமை இருந்ததில்லை அவன் விளையாடுவதை மட்டும் பார்த்துவிட்டு நிறுத்திவிடுவாள்.

இப்பொழுது அவள் மொத்த கைகளையும் நிறைத்து நிற்கும் பரிசுகள் ஏதோ அவளே வாங்கியது போல் அத்தனை பூரிப்பு. ஒவ்வொன்றாய் காட்டி அதற்கான விளக்கம், பின் கதைகள் என அஸ்வினின் வார்த்தைகளும் நீண்டுகொண்டே சென்றது.

“உங்களுக்கு புடிச்ச மாதிரி அதிகமா ரெட் கலர் மெடல்ஸ் இருக்கு கிரிக்கெட்டரே நோட் பண்ணிங்களா?”

இல்லை என தலையை ஆட்டியவன் சிறு வியப்போடு, “எனக்கு ரெட் புடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?”

“ஏன் தெரியாது, எனக்கு உங்கள பத்தி அதிகமாவே தெரியுமே” பெருமை அதிகமிருந்தது மனைவியின் குரலில்.

“சரி வேற என்ன புடிக்கும்? சொல்லு கேப்போம்”

“ரொம்ப தெரியாது, கவனிச்ச வர சொல்றேன்?” ஊஞ்சலில் மொத்தமாய் அஸ்வின் பக்கம் திரும்பி அமர்ந்தாள் வாகாக.

“ரெட் கலர் புடிக்கும், ஆனா கார்னு வந்துட்டா ப்ளாக் தான் ப்ரீஃபர் பண்ணுவீங்க. டெய்லி சித்துகிட்ட பேசுடுவிங்க, அதே மாதிரி மேட்ச் போக முன்னாடி கண்டிப்பா அத்தைகிட்ட பேசாம போக மாட்டீங்க. வெளிய சாப்பிட புடிக்காது, அதிகம் வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுவீங்க.

ஒர்க்அவுட் பண்ண சொன்னா நாள் எல்லாம் பண்ணிட்டே கூட இருப்பிங்க, கண்டிப்பா ரெண்டு மணி நேரம் பண்ணிடுவீங்க. சாக்லேட்ஸ் ரொம்ப புடிக்கும், நூடுல்ஸ் பிரியர், நீங்க இருக்க இடம் எப்பவும் சுத்தமா இருக்கனும் சரியான neat freak”

அதனை கூறும் பொழுது ஆரோஹியின் முகம் போன போக்கை பார்த்து அஸ்வின் சிரித்தான், “உனக்கு சுத்தம் இல்லனா நான் நீட் ப்ரீக் ஆகிடுவேனா? சரி வேற?” என்றான் இன்னும் கேட்கும் ஆவலுடன்.

“மழைக்காலத்துல வர்ற கார்ப்பரேஷன் தண்ணி மாதிரி அடிக்கடி கோவம் மூக்குக்கு மேல வரும்” வாய் விட்டு சத்தமாக சிரித்துவிட்டான்.

அவனது அந்த சிரிப்பில் கடுப்பானவள், “முக்கியமா ரொமான்ஸ்ல புலி” என கேலி செய்ய அதற்கும் அவனிடம் அட்டகாசமான சிரிப்பு தான். நல்லவேளை அதோடு விட்டானே என்கிற நிம்மதி ஆரோஹிக்கு, இல்லையெனில் நிரூபிக்கவா என செயலில் இறங்கிவிட்டால் அவள் பாடு அவ்வளவு தானே.

“சிரிக்கிறீங்க, நானாச்சும் உங்கள இவ்ளோ கவனிச்சிருக்கேன், நீங்க பறந்துட்டே இருக்குறதுல என்ன பத்தி ஒன்னும் தெரிஞ்சிருக்க மாட்டீங்க”

“யார் சொன்னா, உன்னோட சாப்பாட்டு ஹாபிட்ஸ் எனக்கு அத்துப்படி” என்றான் ரோசம் வந்த கணவனாக அஸ்வின் வேகத்தோடு.

“அது எல்லாம் கணக்குல வராது”

“ஓ” என்றான் தாடியை சொரிந்து இரு நொடி யோசித்தான், “சரி கணக்குல வர்ற போல சொல்லவா?” சொல்லேன் என்றது அவள் சவால் விடும் பார்வை.

“என் பொண்டாட்டி சரியான கும்பகர்ணி. தூக்கம்னா உனக்கு அப்டி ஒரு பிரியம். அப்றம் நீ ஒரு சரியான கஞ்சம்”

“நான் கஞ்சம் எல்லாம் இல்ல” உண்மையை ஒத்துக்கொள்ள முடியா காரணத்தால் குரலை தாழ்த்தி தான் பேசினாள்.

“இதுல தப்பு இல்லையே ஆரூ… அதுக்கு கூட உன்கிட்ட காரணம் இருக்கே. அந்த பணத்தை உனக்காக இல்லாம உன்ன சுத்தி இருக்கவங்க கஷ்டப்படுற நேரம் தானே நீ யூஸ் பண்ற?”

இதெல்லாம் எப்படி கண்டுகொண்டான் என அவள் விழி விரித்து பார்க்க அவளிடம் பேசாதே என தலையை அசைத்து மேலும் அவளை பற்றி தான் அறிந்தவற்றை உடைத்தான்.

“சாப்பாடு தான் உன்னோட பிரியமா இருந்தாலும், அதை விட உனக்கு நெருக்கமானவங்க என்ன கேட்டாலும் செய்ற குணம் உன் உயிரையே குடுக்க சொன்னாலும் செய்வ”

இதனை கூறிய அஸ்வின் முகத்தில் அத்தனை பெருமை, கர்வம். அதே நேரம் தானும் அந்த வட்டத்தினுள் வந்துவிட்ட மகிழ்ச்சி அவன் இதயத்தினில்.

ஆரோஹிக்கு வார்த்தைக்கு பஞ்சமானது. அவன் விருப்பு வெறுப்பை தான் பார்த்து அதனை பெருமையாக கூறினால் இவனோ அவளது குணத்தை படித்து அதன் மூலம் அவளை மீண்டும் ஒரு முறை வென்றான். விளையாட்டில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சதமடிக்கும் இவனை வீழ்த்த அவள் சிரமப்பட்டு தான் ஆகா வேண்டும் போல.

“இன்னொரு முக்கியமான விஷயம் விட்டுட்டேன். உனக்கு பாய் ஃப்ரண்ட்ஸ்னு யாரும் இல்ல அதுக்கெல்லாம் சேர்த்து மேடம் அதிகமா சைட் அடிப்ப?”

“ஐயோ இது என்ன அப்பட்டமான பொய்யா இருக்கே” பேசியவளுக்கே நா கூச தான் செய்தது, ஆனாலும் பேச வேண்டி இருந்தது.

“இரு ம்மா இதுக்கே இப்டி பதறுற, லேட்டஸ்ட் அப்டேட் ஒன்னு இருக்கே அதையும் கேட்டுக்கோ” ஆரோஹி வேகமாக எழ பார்க்க பிடித்து இழுத்து அமர வைத்தான்.

“நீங்க ஏதாவது ஒளறிட்டு இருந்தா அதையும் நான் கேட்கணுமா? போங்க”

“நான் சொல்றேன்” அவளை விட அவனிடம் அதிக பிடிவாதம், அவனிடம் தான் அவனுக்கு சாதகமான தகவல் ஒன்று உள்ளதே.

காதுகளை கைகள் கொண்டு பொத்தியவள் கையை வலுக்கட்டாயமாக பிரித்து சிறை செய்தான்.

“உன்னோட புது க்ரஷ் பேர் அஸ்வின் நாராயண். சரி தான?” கண்களை இறுக்கமாக மூடியிருந்தவளின் கண்மணிகள் தவிப்பு அஸ்வினை மேலும் குதூகலமாக்கி அவ்விடத்தையே சிரிப்பில் அதிர வைத்தது.

“நாராயணா போதும் நிறுத்த போறிங்களா இல்லையா?” கெஞ்சலோடு அவளை பார்த்து அவள் கேட்க கேட்க சீண்டியே மனைவியை ஓட வைத்தான் அவள் நாராயணா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!