Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 7.3

வேகமாக அவளிடம் வந்தவன் கைப்பேசியைப் பறித்து, “ஃபுட் டெலிவர் பண்ண வேணாம். நீங்க ரிட்டர்ன் எடுத்துட்டு போயிக்கோங்க.” என்றான்.

“என்னது ரிட்டர்னா? அப்போ எனக்கு சாப்பாடு? என் காசு…? யோவ் நாராயணா, இருக்குற பசில உன்ன கடிச்சு சாப்பிட்டாலும் சாப்டுடுவேன். ஒழுங்கா அவனுக்கு அட்ரஸ் சொல்லிடு.” தன் வாக்கில் அவள் கத்த,

அவனோ, “அமௌன்ட் ரீஃபன்ட் ஆகாது சார். நீங்க கரெக்ட் அட்ரஸ் சொல்லுங்களேன். அரை மணி நேரமா எங்க இருக்கேன்னு கூட தெரியாம சுத்திட்டு இருக்கேன்.”

அவன் நிலையை எண்ணியும் அஸ்வினுக்கு பாவமாகிவிட, அந்த உணவை அவனையே உண்ண கூறி இணைப்பைத் துண்டித்து வீட்டினுள் நடந்தான்.



Advertisement

“போச்சு… என் காசு…” புலம்ப துவங்கிய ஆரோஹி கை பிடித்து, உள்ளே இழுத்து சென்று கதவை அடைத்தான்.

“எல்லாம் உன்னால தான்யா கிரிக்கெட்டரே… இவ்ளோ சம்பாதிக்கிறிங்க, உங்கள நம்பி வந்த பொண்ணுக்கு சோறு கூட போட மாட்டிக்கிறீங்க.”

“நான்தான் கிட்சன் காட்டுனேனே, நம்ம கிட்சன். உள்ள வந்து உனக்கு வேணும்ங்கிறதை செஞ்சுக்க என்ன கூச்சம்?”

Advertisement

“இப்ப யாரு கூச்சம்னு சொன்னது?”

Advertisement

அஸ்வின், “அப்புறம்?”

இறங்கிய குரலில், “எனக்கு சமைக்க தெரியாது.” என அவள் கூறிய பாவனை, அஸ்வினை மொத்தமாய் வீழ்த்தியது. புன்னகை ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் தன் மேல் கோவம்.

தன்னை நம்பி மட்டுமே வந்த பெண்ணின் தேவை எது, அவள் சிரமங்கள் என்ன என அறியாது, அவளைத் தனியாக விட்டு சென்றதை நினைத்து பெரிதும் வருந்திப் போனான்.

Advertisement

“வெயிட் பண்ணு.” அவளிடம் கூறி, சமையலறை நுழைந்து அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தவன், பாலில் சிறிது சர்க்கரை, ஒரு முட்டை கலந்து அடுப்பைப் பற்ற வைத்தான்.

அவன் செய்யும் வேகத்தைப் பார்த்தவள் அவன் அருகே வந்து பார்க்க, எந்த பக்கமும் தெரியவில்லை. பின்னாலிருந்து அவன் தோள் வழி எட்டி பார்க்க, அவனது உயரத்திற்கு இவளால் சிறிதும் எட்டிப் பார்க்க முடியவில்லை.

கால்களை எக்கி எட்டி பார்க்க முயன்று தோற்று போனது தான் மிச்சம். அதில் அவனுக்கு மனதில் திட்டு வேறு, ‘வளந்து நிக்கிறார் பாரு, பனை மரம் உயரத்துக்கு…’ என்று.

“ஆம்லேட் பண்றிங்களா?” முட்டை கூடை பார்த்தவள் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்க, அவள் குரலில் தலையை திருப்பி அஸ்வின் பார்க்க, இருவருக்கும் அரையடி இடைவெளி.

அவள் எக்கி நின்ற காரணத்தால் அவன் நாசி அவள் நெற்றி தீண்டியது. அதுவரை செயற்கை சுவாசத்தை மட்டுமே சுவாசித்து, அதன் வாசனையை மட்டும் அறிந்திருந்தவனுக்கு, அவளது அந்த இயற்கை வாசனை அவனது எண்ணத்தை முற்றிலுமாக மாற்றியிருந்தது.

சில வாசனை நாசியினைத் தாண்டி இதயத்திற்கு படையெடுத்துவிடும். அதே மாயையை தான் பெண்ணவள் அவனிடம் வீசியது.

அவளது மணத்தை அவன் முழுதாய் அனுபவிக்கும் முன்பு, ஆரோஹி வேகமாக கணிசமான இடைவெளி விட்டு நின்று, “ஆம்லேட் எனக்கு பத்தாதே…” சோகமாக கூறினாள்.

அவளது குரலில்தான் மீண்டு வந்தான். ஏனோ அவனிடம் தோன்றிய அந்த உணர்வு, அவளிடம் சிறிதும் இல்லை. அவள் அவளாகவே இருந்தாள் எந்த சலனமும் இல்லாமல்.

“இல்ல, பிரட் ஆம்லேட்” என்றவன், விட்ட பணியைத் தொடர்ந்தான். அவளும் இந்த பக்கம், அந்த பக்கம் என வந்து பார்த்து, எதுவும் தெரியாது போக அடுப்பிற்கு அருகிலிருந்த சில பாத்திரங்களை ஒதுக்கி வைத்து, ஜம்பமாக திண்டில் அமர்ந்துவிட்டாள்.

தோசை கல் சூடானதை உறுதி செய்தவன், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பிரட் ஒன்றை அந்த பால் கலவையில் நன்றாக இரண்டு பக்கமும் முக்கி எடுத்தவன், தவாவில் போட்டு நெய் ஊற்றினான்.

“கிரிக்கெட்டரே… பாக்கதான் டக்கரா இருக்குனு பாத்தா, வாசனை அதைவிட கும்ததாவா இருக்கே…” மகிழ்ச்சியில் அவனிடம் பேசினாலும், அவள் பார்வை மொத்தமும் அந்த உணவில் தான்.

அஸ்வினோ சிரிப்போடு, “எங்க இப்டி எல்லாம் பேச கத்துக்குட்ட?”

“அதுவா… ஃப்ரண்ட்ஸ் தான். சரி, பிரெட் ஆம்லேட் இப்டி பண்ண மாட்டாங்களே, நீங்க என்ன புதுசா பண்றீங்க?”

அஸ்வின், “இது அம்மா ரெசிபி.” பிரட்டை இரண்டு பக்கமும் வேக வைத்து அவளிடம் கொடுத்தான். “சாப்பிட்டு பாரு, நல்லா இருக்கும்.”

அவளிடம் தட்டை நீட்டியவன், அவள் வாங்கும் முன்பு அதனை பின்னுக்கு இழுத்து அவளுக்கு போக்கு காட்டினான்.

“யோவ் பசிக்கிதுயா…” கெஞ்சலும் மிரட்டலுமாய் கேட்டாள்.

“தர்றேன், அதுக்கு முன்னாடி வெளிய என்னை என்ன சொல்லி திட்டுன?”

புருவம் உயர்த்தி கேட்க, அவளுக்கு தெரிந்தாலும் சமாளிப்பாக, “கிரிக்கெட்டரே சொல்லிருப்பேன், வேற உங்கள என்ன சொல்லுவேன்? அதை கொஞ்சம் தாங்களேன்…” கண்களை உணவில் வைத்து அப்பாவியாக கேட்டாள்.

“இல்ல, வேற சொன்ன, பதில் சொல்லு தர்றேன்.” விடாமல் நின்றான் அஸ்வின்.

“இல்லையே, மறந்து போச்சே…”

“ஆனா எனக்கு ஞாபகம் இருக்கே, நாராயணானு சொன்னியே…”

ஆச்சிரிய பாவம் காட்டி, “அப்டியா சொன்னேன்?” தன்னையே கேள்வி கேட்டு பிறகு சீரியஸாக, “அட! பசில பெருமாளை நாராயணானு கூப்பிட்டிருப்பேன். நீங்க தப்பா நினைச்சு… பாருங்க, சாப்பாடு காக்குது.”

எளிதாக அனைத்தையும் மாற்றி கையேந்தி அவள் கேட்க, அதற்கு மேல் அவனாலும் பிடிவாதம் பிடிக்க முடியவில்லை.

அவளுக்கு முன் வந்து நின்றான் அவளது கருத்தைக் கேட்கும் ஆவலோடு. அவளையேப் பார்த்து அவன் நிற்க, ஒரு கவளம் உண்டவள், அடுத்த கவளத்தை ஊதி ஊதி உள்ளே இறங்க, சூடும் சுவையும் மறையும் முன்பு மொத்தத்தையும் வயிற்றின் உள்ளே இறக்கிவிடும் ஆர்வம் அவளிடம்.

பசி என நினைத்தவன், அவளுக்கு இடைவெளி விட்டு அடுத்த பிரட்டை பாலில் முக்கினான்.

“கிரிக்கெட்டரே, ரெண்டு செகண்ட் ஊற வச்சு, அப்புறம் போடுங்க.” அவனுக்கு திருத்தம் கூறியவளை, புருவம் உயர்த்தி பார்த்து சிரித்தவன், அவள் கூறியபடியே செய்தான்.

இம்முறை உணவை அவளிடம் கொடுக்கும் பொழுது, “எப்படி இருக்கு?” ஆவலில் கேட்டான்.

“பேசாம இத எனக்கு கத்து குடுத்துடுங்க. தள்ளுவண்டி கடை வச்சு பொழச்சுக்குவேன். எப்பா! என்ன டேஸ்ட்… என்ன டேஸ்ட்…” என்றவள் உணவை சட்டென நிறுத்தி, “நீங்க சாப்டீங்களா?”

“இல்ல, நான் சுகர் ஆட் பண்ணிக்க மாட்டேன்.” அவனுக்கு இரவு உணவை எடுக்கும் எண்ணம் இப்போதில்லை. அவள் பசியை போக்க வேண்டும் அவ்வளவு தான்.

“ஒரு நாள் பண்ணா தப்பில்ல.” உணவை எடுத்து, அவனுக்கு முன்னால் நீட்டினாள் சிறிதும் தயக்கமின்றி.

அவளையும் அவள் கையையும் அவன் யோசனையோடு பார்த்து நிற்க, “அட, ஆ சொல்லுங்க கிரிக்கெட்டரே…”

அவனும் வாயைத் திறக்க அவனுக்கு மீதம் இருந்த அனைத்தையும் ஊட்டிவிட்டு, “வெறும் பிரட் டோஸ்ட் பண்ணி தாங்களேன், இது தெகட்டிடுச்சு.” அவள் கேட்டதையும் தண்ணீரையும் அருகில் வைக்க, டோஸ்ட் செய்த பிரட்டை அவனுக்கு தான் ஊட்டிவிட்டாள்.

“நீ சாப்பிடு…” என்று கூறி பார்த்தான், “எனக்கு பசி போய்டுச்சு, உங்களுக்கு தான் கேட்டேன்.” என்றவள் ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க, இடத்தை சுத்தம் செய்தவன், “என்ன வேணும்?” என்றான்.

“இல்ல, வேற ரூம் இருக்கா?” பெரிதான தயக்கம் அவள் உடல்மொழியில். “இல்லனா, என்னை ஹாஸ்டல்ல விட்டுடுறிங்களா?”

இத்தனை நேரம் விடாமல் சிரித்த முகத்தோடு சுற்றி வந்தவன் முகம் முற்றிலும் மாறியிருந்தது.

“ஏன், இங்க இருக்க உனக்கு என்ன கஷ்டம்?” கடுமையேறியது அவன் முகம். ஏன் விலகி செல்வதில் குறியாய் இருக்கிறாள் என்கிற கோவம் அவனுக்கு.

“கஷ்டம்னு இல்ல, இந்த கல்யாணம்…”

“நம்ம கல்யாணம்.” அழுத்தமாக திருத்தினான்.

“ம்ம்… நம்ம கல்யாணம் வெளிய யாருக்கும் தெரிய வேணாம்னு நினைக்கிறீங்க. அதுக்கு நான் தள்ளி இருக்குறது தான நல்லது. மெய்ட்ஸ் கூட வர வேணாம்னு சொல்லிருக்கீங்க?”

“ஓ… அவங்க இல்லாதது தான் உனக்கு பிரச்சனைனா, லெட் மீ க்ளீயர் யூ. இங்க மெய்ட்ஸ் எப்பவும் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்க மாட்டாங்க. அப்டி வேணும்னா நான் கால் பண்ணி சொன்னா வந்துடுவாங்க. நான் சொல்லாம என்னை பத்தின விஷயம் அவங்க மூலியமா வெளிய போகாது.

இதுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இன்ஃபாக்ட் நம்ம மேரேஜ் அவங்க எல்லாருக்கும் தெரியும். நீ எங்கையும் போக கூடாது. இனிமேல் இதுதான் உன்னோட வீடு, காட் இட்?”

வேகமாக அவள் தலை ஆடியது, “அந்த ரூம்?”

“அப்போ என் ரூம் வா.” வேகமாக அவன் கூற, இவள் தலை மின்னல் வேகத்தில், ‘மாட்டேன்’ என எல்லா பக்கமும் ஆடியது.

அவளது மிரட்சியை ரசித்தவன், “அப்போ என்ன பிரச்சனை?”

“இல்ல, இந்த வீடு பேய் வீடு மாதிரி இருக்கு. நாம ஆன்ட்டி வீட்டுக்கு போகலாமா?”

ஏனோ அந்த வீட்டின் அமைதி அவளுக்கு பயத்தைத் தந்தது. அஸ்வினுக்கு பகீரென்றது, ‘பேய் வீடா?’ என்று. எத்தனை கோடிகள் கொட்டி உருவாக்கிய வீட்டை, ஒரே நொடியில் சிதைத்துவிட்டாளே இந்த பெண்.

“உனக்கு என் வீடு பேய் வீடா?” கொதித்தெழுந்து விட்டான் அஸ்வின்.

“ஆமா, காட்டுல இருக்க மாதிரி இருக்கு. அப்புறம் எனக்கு ஒரு ரூம் குடுத்துருக்கீங்களே, ரூமா அது? எந்த பக்கம் திரும்பினாலும் ரோஸ் கலர் சிங்குச்சான்னு இருக்கு. ஒன்னு, எனக்கு ரூம் மாத்தி தாங்க. இல்ல, நான் ஆன்ட்டி வீட்டுக்கு போறேன். நீங்களே இந்த பேய் பங்களால இருங்க.”

சண்டைக்கோழியாக சிலிர்த்து நின்றவள் தோற்றம், அவன் மனதை அதிரடியாக இலகுவாக்கியது. அவளுக்காக பார்த்து பார்த்து, அவனே ஒரு யூகத்தில் செய்த அலங்காரம் தவறாகியது.

அவன் நினைத்ததை விட இவள்தான் வேறு பெண் ஆயிற்றே…

அவன் எதிர்பார்ப்புகளை, யூகங்களை தகர்த்தெறிந்து வேறு உருவமாய் நின்றாள். ஆசை கொண்டு, அழகில் மயங்கி வீழ்வது தான் காதல் என நினைப்பவனை, எந்த உழைப்பும் போடாது இயல்பான குணத்தோடு, கொள்ளை கொள்ள அந்த பெண் பட்டாம்பூச்சி சித்தமாகிவிட்டது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!