அசோக் தன்னைப் பற்றியிருந்த அவளது கரத்தை ஒரு முறைப் பார்த்து விட்டு வைஷ்ணவியின் முகத்தைப் பார்க்க கண்கள் முழுவதும் அந்த அழகின் தித்திப்பு நிறைய அவனை நோக்கிப் புன்னகைத்தாள். அசோக் அந்த கணத்தின் அழகைத் தன் விழிகளால் தாங்க முடியாது தலையைச் சிலுப்பி தன்னை சமனப்படுத்திக் கொண்டான்.
அதன் பின் மீண்டும் பயணித்து திகிலிப்பூர் வந்தனர். அசோக் அவளை அழைத்துக் கொண்டு மதிய உணவு உண்ண அருகில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். சாதம் பிடித்தமில்லை என்றாலும் கடல் மீன்களை உண்டு பசியாறினர். இனி மீளவும் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லாது அவன் மறுபடியும் இருசக்கர வாகனத்தில் வேறிடம் செல்ல வைஷ்ணவி அவன் பின்னே அமர்ந்திருந்தவள் தனது தலைக்கவசத்தை கழட்டி அவனிடம் எங்கே போகிறாய் என கேட்டாள். அசோக் முன்னிருக்கும் சாலையை பார்த்துக் கொண்டே சத்தமாகப் பேசினான்.
அவள் காலையில் அவளுடன் வந்த பயணியர் அனைவரும் அன்று மாலைக் கிளம்பி போர்ட் பிளேயர் செல்வதாக இருந்தது. அந்தமான் தீவில் அவர்களுடைய பயணம் அன்றோடு முடிவடைகிறது.
விருப்பமிருக்கும் பயணியர் அருகிலிருந்த தீவுகளைச் சுற்றிப் பார்த்து விட்டு மாலைக்குள்ளாக வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அசோக் மட்டும் தனியாக தான் பார்க்க நினைத்திருந்த அனைத்து இடங்களையும் பார்க்க இன்று அழைத்து வந்திருந்தான்.
Advertisement
“நைட் கிளம்பணும் அசோக். இப்பவே லேட் ஆகுது”
Advertisement
அசோக்கை அவள் துரிதப்படுத்த அசோக் சீக்கிரம் போயிடலாம் எனச் சொல்லி சமாளித்து அவளை அழைத்து வந்திருந்த இடம் சுண்ணாம்பு கற்களால் ஆன குகைகள் இருக்கும் ஆல்பிரட் குகைகள்.
திகிலிப்பூரில் இருந்தது கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த இடத்திற்கு அரை மணிநேர பயணத்தில் வந்திருந்தனர். வழிநெடுகிலும் இருபுறம் பசுமையான புல்வெளி மரங்கள் சற்று தூரத்தில் ஒரு குன்று இருக்க இடை இடையே மரத்தாலான பாலங்கள் இருந்தது. அங்கங்கே சாலையின் ஓரம் வீடுகளும் இயற்கையை ரசித்தே வாழும் வரம் பெற்ற மனிதர்களைப் புன்னகையோடு காண முடிந்தது. அசோக் ஒரு வீட்டில் வண்டியை நிறுத்த உள்ளே இருந்து யாரோ ஒரு இளைஞன் அவர்களுடன் இணைந்துக் கொண்டான். அனேகமாக உள்ளூர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவன் தன் பெயர் குமார் என அறிமுகம் செய்துக் கொள்ள வைஷ்ணவி அவனை பார்வையால் அளவிட்டாள். ஒரு கை இல்லாத சட்டையும் ஒரு அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தான். வயது முப்பது இருக்கலாம்.
அந்த இளைஞன் அசோக்கிடம் தமிழில் சரளமாக பேசினான். ஏற்கனவே அவனுக்கு அறிமுகமானவன் போலும். வைஷ்ணவி பார்த்து இருக்க அங்கிருந்து அவர்கள் இருவரும் நடந்து போக வேண்டும் என்று குமார் சொல்ல வைஷ்ணவி அவனை கேள்வியாகப் பார்த்தாள்.
Advertisement
நேரமாகிவிட்டால் திகிலிப்பூரில் பயணியர் அனைவரும் கிளம்பி விடுவார்கள் வைஷ்ணவி ஏதோ சொல்ல வாய் எடுக்க அசோக் அவளை நோக்கி வா என்பது போல் சைகை காட்ட பெருமூச்சுடன் அவனோடு இணைந்து நடக்கத் தொடங்கினாள். காட்டுக்குள் நடப்பது போல் இருமருங்கிலும் புதர்களும் செடிகளும் நிறைந்திருக்க அந்த உள்ளூர் வழிகாட்டி முன்னே சென்று அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தான். அசோக் ஒவ்வொரு முறையும் அவளைத் திரும்பிப் பார்த்து அவள் வருகிறாளா என்பதைக் கண்டு சில முறை அவளை முன்னேயும், சில முறை அவளை பின்னேயும் நடக்க வைத்து அழைத்து வந்தான். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆனது அந்த காட்டுக்குள்ளான நடைப்பயணம். வைஷ்ணவிக்கு கால்கள் மெலிதாக வலிக்கத் தொடங்கியது.
‘இவனோடு காலையில் இருந்து அலைகிறோம், கால் வலிக்குது ஆனா இவன் கிட்ட சண்டை போடாம நடக்கறேன்? என்னாச்சு எனக்கு? இவனோடு போகிற பயண சுவாரஸ்யம் தான் இதுக்கு காரணமா?’
அவள் யோசித்து இருக்கையில் இருபுறமும் சரிவுகள் நிறைந்த வழியே பாதை சென்றது குமார் எச்சரித்துக் கொண்டே வந்தான். தவறான ஒரு எட்டும் அவர்களை கீழே தள்ளிவிடும் என அவன் சொல்ல வைஷ்ணவி மெலிதான பதட்டத்தில் நடக்க அசோக் அவளது கரங்களைப் பிடித்து அமைதியாக நடத்திச் சென்றான்.
அவன் கரங்களை பிடிக்கும் பொழுது அவளுக்கு இருந்த பயம் மறையத் தொடங்கியது. மெல்வ அவர்கள் நடந்து செல்ல நடுவில் ஒரு நீரோடை வழித்தடம் நீரின்றி காய்ந்திருக்க அதன் மேல் இரு கட்டைகளை இணைத்து பாலம் போல் வைத்திருந்தனர்.
அசோக் வந்துடுவியா என்பது போல் பார்க்க வைஷ்ணவி தலையாட்டி தைரியத்தோடு நடந்தாள். ஒரு வழியாக ஒரு மணி நேர பயணத்தில் அவர்கள் ஆல்பிரட் குகைகளின் உள்ளே செல்ல அதன் நிர்வாக அலுவலகத்திற்கு வந்திருந்தனர். கீழே கட்டையால் ஆன தளம் இருக்க மேலே கூரை வேயப்பட்டு இருந்தது அந்த அலுவலகம். நகரத்தில் அலுவலகம் என்ற வார்த்தை இங்கே இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வியலில் எங்ஙனம் காட்சி மாற்றம் பெறுகிறது. அசோக் உள்ளே சென்று அனுமதி மற்றும் குகை வழிகாட்டியாக ஒரு இளைஞனை அழைத்து வந்தான்.
“இதுக்கும் தனி கைடா?”
வைஷ்ணவி கேட்க அசோக் ஆம் என்பதாக தலையசைத்து அவளை உடன் அழைத்துச் சென்றான். வைஷ்ணவிக்கு அந்த காட்டுக்குள் நடக்கையில் மெலிதாக உடல் நடுங்கியது.
‘இவனை முழுசா நம்பலாமா? காடு தனியா போய் எதாவது நடந்தா? ச்சே ச்சே அசோக் ரொம்ப நல்லவன்! இல்லை இவன் சொல்ற மாதிரி அரைலூசுத்தனமா பாரத்து மூணு நாள் கூட ஆகாத ஒருத்தனை நம்பி தன்னந்தனி காட்டுக்குள்ளே தனியா?’
நினைக்கும் போதே அவள் மிடறு விழுங்கி அச்சத்தைக் கட்டுப்படுத்தி மனதினுள் பேசினாள்.
‘அசோக் அப்படி இல்ல. ஏ மனசே தூங்கும் போது தான் கண்ட மாதிரி பினாத்துவேனா? இப்ப’
அவள் தீவிர சிந்தனையில் கீழே இருந்த கல் தட்டி விழ அசோக் அவளைத் தாங்கி பிடித்தவன் பேசினான்.
“ஏ சீனிப் பட்டாசு, பார்த்து நட”
அவள் அவனை முறைக்க அந்த வழிகாட்டி இளைஞனும் அப்சலும் அவர்களை ஆல்பிரட் குகை முகப்புக்குள் அழைத்து வந்திருந்தனர்.
அந்த குகைகளின் இருபுறமும் பாறைகள் உயர்ந்து நிற்க அதனுள் செல்ல கிட்டத்தட்ட ஒரு 7 அடிக்குள் குகைக்குள் இறங்க வேண்டும். வைஷ்ணவி அதை எட்டிப் பார்த்துவிட்டு நேராக வந்து அசோக் இடம் நின்றாள்.
“அதான் பார்த்தாச்சுல வா போலாம்”
வைஷ்ணவி சொல்ல அசோக் முறைத்தான்.
“நான் தான் சொன்னேன்ல உனக்கு இந்த ட்ரிப்”
அவன் ஆரம்பித்ததும் வைஷ்ணவி கைக் காட்டி அவனை அமர்த்திப் பேசினாள்.
“சரி, சரி, வரேன்”
அவள் குரல் கோபம் கலந்த எரிச்சலில் இருக்க அசோக் அவளை நிறுத்தினான்.
அவள் தனது ப்ளோரல் டிசைன் கவுனை பார்க்க அசோக் தலையை இருபுறமும் ஆட்டி பெருமூச்சு விட்டுப் பேசினான்.
“இந்த டிரஸ் அழகைப் பார்த்தா இந்த குகை அழகை எல்லாம் நீ எப்ப பார்ப்ப?”
“எது குகைக்குள்ள அழகு இருக்கா? வௌவால் வேணா இருக்கும்!”
வைஷ்ணவி சொல்ல சற்று தள்ளி இருந்த குமார் அவள் குரல் கேட்டு அருகில் வந்தான்.
“ஆமா மேடம் குகைக்குள்ள நிறைய வௌவால் இருக்கும்! நீங்க கைடு சொல்ற எல்லா விஷயத்தையும் கேட்டு ஃபாலோ பண்ணணும்”
குமார் சொல்லி முடிக்க அசோக் அவனிடம் திரும்பி ஏன்டா ஏன் என்பது போல் பார்த்தான்.
“ஏன் சார் நான் எதாவது தப்பா பேசிட்டேனா?”
குமார் குழப்பமாகக் கேட்க அசோக் இல்லை எனச் சொல்லி வைஷ்ணவியை கூட்டிக் கொண்டு நடந்தான்.
அல்பிரெட் குகை அலுவலகத்தில் இருந்து வந்த வழிகாட்டி அவர்களிடம் தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சொல்லி குகைக்குள் ஒரு கயிற்றை கட்டி இறங்க அடுத்து அசோக் இறங்கினான்.
அடுத்து வைஷ்ணவியை இறக்கி விட அவளைப் பிடித்து பத்திரமாக இறக்கினான் அசோக். குகைக்குள் வெளிச்சம் இல்லை. அந்த கைடு எந்த ஒளிவிளக்கையும் உபயோகிக்கக் கூடாது எனச் சொல்லி தனது கையில் இருந்த டார்ச்சை மேல் நோக்கிக் காட்ட நூற்றுக்கணக்கான வௌவால்கள் கூட்டம் கூட்டமாக தொங்கிக் கொண்டு இருந்தது. அடுத்து குகைக்குள்ளே குறுகலான பாதையில் ஒடுங்கி நடக்க ஒரு வட்ட வடிவ பாத்திரத்தை பாதியில் வெட்டி ஒட்ட வைத்தாற் போல் அங்கங்கே பாறைச் சுவற்றில் கூடுகள் இருக்க வைஷ்ணவி அதனைத் தொட்டுப் பார்த்தாள்.
அந்த வழிக்காட்டிப் விளக்கம் கொடுத்தான்.
“இது ஹவாயில் பறவை எச்சிலினால் ஆன கூடு”
வைஷ்ணவி தனது கைகளைத் துடைத்துக் கொள்ள வகைத் தேட அசோக் நமுட்டுச் சிரிப்புடன் தனது கையில் இருந்த துணியைக் கொடுத்தான்.
“இது கூடு ஒரு கிலோ ஆயிரம் டாலர் தெரியுமா? இதைச் சாப்பிடறது உடம்புக்கு இளமையைக் கொடுக்கும்.”
அசோக் சொல்ல வைஷ்ணவியோ வாந்தி வரத் தயாரான மனநிலையை சரிசெய்து முறைத்தாள்.
‘எல்லாம் உன்னாலத் தான்’
அவள் மனதிற்குள் ள் அசோக்கை திட்டிக்கொண்டே நடந்தாள். குறுகலான பாதையில் தவழ்ந்து போகச் சொல்லி குமார் சொல்ல தனது வெளிர் நிற கவுனை வெறித்து விட்டு அசோக்கை முறைத்து அவன் சொன்னது போல் தவழ்ந்து சென்று இன்னொரு குகையை அடைந்தாள்.
இருபுறமும் சுண்ணாம்பு கற்களால் ஆன அந்த குகை தான் முன்பு பார்த்த குகையை விட வித்தியாசமானதாக இருந்தது. காலத்தின் கரையான அரிப்பாக நின்ற அந்த குகை இயற்கை மாற்றத்தின் எச்சமாக நின்றிருந்தது. உள்ளே பிரவேசிக்கையில் கூம்பு போன்ற சுண்ணாம்பு கற்கள் கலவைகள் அப்படியே நேராக ஒரு தண்ணீர் சொட்டுவது போல் மேலேயும் கீழேயும் இணைத்திருந்தது. அதைப் பார்த்திருக்க பார்த்திருக்க திடீரென்று வைஷ்ணவியின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது அதை அசோக்கிடம் கேட்டு வைத்தாள்.
“அசோக் திடீர்னு இந்த குகை இடிந்து விழுந்துருச்சுன்னா!”
அவள் கேட்க அசோக் தலையில் அடித்துக் கொண்டான்.
“உனக்கு எந்த ஒரு விஷயமும் நல்லதாகவே யோசிக்க தெரியாதா? இது எவ்வளவு அழகா இருக்கு இது உருவாகிய எத்தனை நூறு வருஷம் இது இந்த இடத்துல நின்னு அந்தக் காலத்தினுடைய சுவடா நிற்காது! ஒரு நிமிஷம் யோசிச்சு பார்!”
வைஷ்ணவி ஆம் என்பதாக அதை யோசித்தால் இயற்கை கட்டிய சிறு மாளிகையின் தூண் ஓவியமாக தெரிந்தது அந்த குகை. தான் எல்லாவற்றையும் வேறொரு கோணத்தில் காண அதை அனைத்தையும் அழகான ஒரு விஷயமாக மாற்றும் அவனது வார்த்தைகள் வைஷ்ணவி புன்னகையோடு அடுத்து நடந்தாள். வரும்போது காலில் வலிக்காதவாறு ஒரு காலணியை அணிய வாங்கித் தந்திருந்தான். அசோக் இரு குகைகளையும் இணைக்கும் நிறைய பாதையில் முட்டி அளவு கால் முட்டி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருக்க நடந்த தான் அதை கடக்க வேண்டும் அதை பார்க்கும்போது மெலிதான பயம் வழக்கம் போல் வைஷ்ணவியைத் தாங்கியது அசோக்கின் கரங்கள்.
புதிதாக காணும் கண்டுபிடிக்கும் போது மனதில் எழும் மகிழ்வை அப்படியே இன்னொருவருக்கு வார்த்தைகளில் கடத்தி விட முடியாது. அது தான் சாகசத்தை எப்பொழுதும் தனிப்பெரும் போதையாக வைத்திருக்கிறது. வைஷ்ணவி அதை அனுபவிக்க அனுபவிக்க வலிகளை முற்றிலும் மறந்துப் போனாள். அந்த குகைகளில் குகை முத்துக்கள் உருளை வடிவில் படிந்திருக்க அதை வருடுகையில் அவற்றின் வயது நூற்றாண்டுகள் கற்பனையில் வந்துப் போனது.
அசோக் வைஷ்ணவி அதன் பின் மீண்டும் குகையில் இருந்து வெளிவந்து குமாருடன் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு காட்டு ரசகுல்லா என அங்கு விளையும் பழத்தை அவர்கள் கொடுக்க அதை உண்ணத் தயங்கினாள் வைஷ்ணவி. அசோக் அவளின் எச்சரிக்கை உணர்வை மனதிற்குள் மெச்சியவனாக குமாரைப் பார்க்க குமார் அந்த பழத்தை உடைத்து உண்டுக் காண்பித்தான். அதன் பின்னே வைஷ்ணவி உண்டாள்.
பின் அவர்கள் கீழிறங்கி குமார் வீடு வர ஒரு மணி நேரமானது. மணி ஐந்து ஆக வைஷ்ணவி பதட்டப்பட்டாள்.
“அசோக் அவங்க கிளம்பிடுவாங்க வா சீக்கிரம்”
வைஷ்ணவி துரிதப்படுத்த அசோக் குமாரின் கைகளில் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு அவனிடமும் அவன் குடும்பத்தாரிடமும் விடை பெற்று வண்டியைக் கிளப்பினான்.
அவர்கள் விடுதி வருகையில் எப்படி முயற்சித்தும் மணி ஆறு ஆகியிருந்தது. நான்கு மணிக்கே அனைத்து பயணியரும் சொகுசு படகில் ஃபோர்ட் ப்ளேர் சென்றிருந்தனர். துஃவையலிடம் இருந்து அழைப்பு வந்தது.
இனி அவர்கள் காலை ஃபோர்ட் பிளேரில் இருக்க வேண்டும் என்றும் அங்கிருந்து விமான பயணம் இருப்பதாகவும் அவர்களால் வர இயலவில்லை என்றால் இந்த பயணத்தை அவர்களால் தொடர முடியாது என சொன்னான். அசோக் அலைபேசியில் வந்த குரல் அருகிலிருந்த வைஷ்ணவிக்குத் தெளிவாகக் கேட்டது. வைஷ்ணவி முகம் முழுவதும் கோபம் அப்பி நிற்க அசோக் அவள் பார்வையை கண்டுக் கொள்ளாதவன் போலவே அறைக்கு நடந்தான்.
“ஏ நீ பாட்டுக்கு போறே! எத்தனை தடவை சொன்னேன் போலாம், லேட்டாகுது லேட்டாகுதுனு கேட்டீயா நீ? இந்த டூருக்கு எத்தனை லட்சம் கட்டிருக்கேன் தெரியுமா?”
வைஷ்ணவி கேட்க அசோக் அறைக்குச் சென்று பொருட்களை ஃபேக் செய்யத் தொடங்கினான். வைஷ்ணவிக்கு கோபமாக வந்தது அந்த பயணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் அது இடையில் நிற்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது கோபத்தில் கத்தினாள். உண்மையில் அந்த பயணம் பிடித்தமைக்கானக் காரணம் அருகில் நிற்பவன் என்பதை உணராதேக் கத்தினாள்.
“நான் பேசிட்டே இருக்கேன்..”
அவளது எரிச்சல் குரலை பொருட்படுத்தாது அசோக் பேசினான்.
“இப்ப கிளம்பினா திகிலிப்பூரில் இருந்து ஃபோர்ட் பிளேர் கு பஸ் இருக்கு. காலையில அங்க போயிடலாம். ஏழு எட்டு மணி நேர பயணம் தான். கிளம்பு”
மனதிற்குள் கோபம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த அது சமயம் இல்லை என்பதால் அவசர அவசரமாக துணிகளை ஃபேக் செய்தாள் வைஷ்ணவி.
ஒரு வழியாக ஏழு மணிக்கு ஃபோர்ட் ப்ளேர் செல்வதற்காக பேருந்து நிலையம் வர பேருந்தில் எட்டு மணி நேரப் பயணம் வைஷ்ணவிக்கு நினைப்பே தலை சுற்றலை வரவழைக்க அசோக் அவளது கண்ணிலேயே சிக்கக் கூடாதென டிக்கெட் எடுக்கச் சென்றான். வைஷ்ணவி எரிச்சலுடன் பெட்டிகளை எடுத்து வைக்க அந்த பேருந்தும் அவர்களை நடுக்காட்டில் நிற்க வைக்கப் போகிறது என்பதும் அன்றைய நாளின் சாகசம் அடுத்து ஒரு திகிலில் முடியும் என அறியாது அந்த பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.