Skip to content
Post Views: 6,098
துணை 19:
அவளுக்காக காத்திருந்தவனின் பொறுமை பறந்தோடியது. வரக்கூடாது என்ற காரணத்திற்காகவே அவள் இன்னமும் கிளம்பவில்லை என்று நினைத்தான்.
‘எல்லாம் திமிர்…உடம்பு முழுக்க திமிர்… இவளை ஒரு ஆளுன்னு மதிச்சு கூப்பிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்..’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.
Advertisement
“அவ வரலைன்னா என்ன..? நீ கிளம்பி போக வேண்டியது தான..? உனக்குத்தான் அவ வரலைன்னாலும் பிரச்சனையில்லையே..?” என்றது மனம்.
“எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா, அப்பா கேட்பாரே. அவருக்கு என்ன பதில் சொல்றது..?” என்றான்.
“ஹோ..! அப்போ உங்கப்பாவுக்காகத் தான் அவளைக் கூட்டிட்டு போகணும்ன்னு நினைக்கிற.. உனக்காக இல்ல..” என்றது மனம் கிண்டலாய்.
Advertisement
“நெவர்..! எனக்காக நான் ஏன் கூப்பிட போறேன்..” என்று சமாளித்தான் மனதிடம்.
Advertisement
“நல்லா சமாளிக்கிறடா மகனே..” என்ற மனம், அவனிடம் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது.
“இவ வரவே வேண்டாம்..!” என்று கிளம்பி, வாசற் கதவு வரை சென்றவனுக்கு, அதற்கு மேல் செல்ல மனம் வரவில்லை.
‘என்னதான் பண்றான்னு பார்த்துட்டே போவோம்..!’ என்று கோபமாய் அவளின் அறைக்கதவை தட்ட போக, அது கைவைத்தவுடன் திறந்து கொண்டது. கதவு திறந்தது தான் மாயம்…அர்ஜூன் தன் போக்கில் கத்தத் தொடங்கினான்.
Advertisement
“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..? நைட் அவ்வளவு தூரம் சொல்றேன். எதையும் காதுல வாங்காம, இப்படி ஓவரா சீனைப் போடுற..? நான் வந்து கெஞ்சிகிட்டு நிற்கனும்ன்னு எதிர்பார்க்குறியா..?” என்று கோபத்தில் பேசத் தொடங்கியவன், சட்டென்று பேச்சை நிறுத்தினான். இல்லையில்லை, அவள் நின்றிருந்த கோலம் அவன் பேச்சை நிறுத்தியிருந்தது.
முன் முந்தானை சேலையை அரையும் குறையுமாக, கையோடு இறுக்கிப் பிடித்திருந்தவள், அவன் உள்ளே வந்த அதிர்ச்சியில் அதை கவனிக்காமல், முழித்துக் கொண்டு நின்றிருக்க, அவளை அந்த கோலத்தில் பார்த்தவன், மூச்சடைத்துப் போனான். சில வினாடிகள் பேச்சிழந்தவன், சில மணித்துளிகள் கழித்து சுய நினைவிற்கு வந்து,சட்டென்று திரும்பி நின்றான்.
“சாரி..!! நான் ஏதோ டென்ஷன்ல சட்டுன்னு உள்ள வந்துட்டேன்..” என்றான். அவன் என்னதான் சாரி கேட்டாலும், அவள் பிடித்திருந்த சேலையும், அவளும் தான் அவன் கண் முன் வந்தது.
“பரவாயில்லை சார்..!” என்றவள் மீண்டும் முழித்துக் கொண்டு நிற்க,
“இவ்வளவு நேரமா..? சீக்கிரம் கட்டிட்டு வா..!” என்று வெளியேறப் போனான்.
“தெரிஞ்சிருந்தா கட்டிட்டு வந்திருக்க மாட்டேனாக்கும். நானே இங்க அவதி பட்டுட்டு இருக்கேன். இந்த கல்யாணத்துக்கெல்லாம் அவசியம் சேலைதான் கட்டனுமா..? அதுவும் பட்டு சேலை. இந்த சுடிதார், லெகங்கா எல்லாம் போட்டுட்டு வந்தா ஆகாதா..?” என்றாள் கடுப்புடன். அவ்வளவு நேரம் போராடியளின் சோர்வு எரிச்சலாக வெளியே வந்தது.
அவள் சொன்ன விதத்தில் சிரித்துக் கொண்டவன்,
“அப்போ புடவை கட்ட தெரியாதா..?” என்றான், மறைத்துக் கொண்ட சிரிப்புடன்.
“தெரிஞ்சிருந்தா எப்பவோ கிளம்பியிருப்பேன். யு டுயூப் பார்த்து ட்ரை பண்றேன். எல்லாம் வருது, இந்த மடிப்பு மட்டும் வர மாட்டேங்குது..” என்றாள் குறையாய்.
“வாய் பேசுற நேரத்துல, உருப்படியா இதையாவது கத்துகிட்டு இருந்திருக்கலாம். உனக்கு அதுக்கெங்க நேரம் இருக்கப் போகுது..?” என்றான் கிண்டலாய்.
“இது தான் சமயம்ன்னு நீங்க ஒன்னும் கிண்டல் பண்ணத் தேவையில்லை. எனக்கு பொதுவா புடவை கட்ட பிடிக்காது. அதானால இதுவரைக்கும் கட்டினது இல்லை. இவ்வளவு பேசுற நீங்க கட்டி விட வேண்டியது தான..?” என்றாள்.
“வாட்…!! நானா..?” என்றான் அதிர்ச்சியாய்.
“ஆமா நீங்கதான்..!” என்றாள்.
“என்ன விளையாடுறியா..? எனக்கு இது தான் வேலையா..? எனக்கெப்படி தெரியும்..?” என்றான். எவ்வளவு முயன்றும் அவனால் அதை கோபமாக சொல்ல முடியவில்லை.
“நீங்க ஒரு வாத்தியார் தான..? இது கூடத் தெரியலை..” என்று தலையில் அடித்தாள்.
“ஆமாடி..! நான் படிக்கும் போது, புடவை கட்டுவது எப்படின்னு ஒரு பேப்பர் இருந்துச்சு… அதைப் படிச்சுட்டு தான் வாத்தியார் வேலைக்கு வந்தேன்..” என்றான் நக்கலாய்.
அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்பு வர, லேசாக சிரித்து வைத்தாள்.
“என்ன சிரிப்பு..?” என்றான்.
“சார்..! ப்ளீஸ்..! கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..” என்றாள் பாவமான குரலில்.
‘இப்போ நான் திரும்பி இவளுக்கு புடவை கட்டிவிடனுமா..? அர்ஜூனுக்கு அதிகாலையில் வந்த சத்திய சோதனையா இது..? வேற வழி.. எல்லாம் என் நேரம்..’ என்று நொந்து கொண்டவன், அவளின் பக்கம் திரும்பினான். அவள் இன்னமும் அப்படியே நின்றிருக்க,
‘இவ வேற..? மனுஷன் நிலைமை தெரியாம..?’ என்று புலம்ப மட்டுமே முடிந்தது.
“இப்ப என்ன பண்ணனும்..?” என்றான்.
“முன்னாடி மடிப்பு எடுக்கணும்.. எனக்கு எடுக்க வரலை..” என்றாள். அவனுக்கும் அது தெரியவில்லை. ஒரு வழியாக அவள் காட்டிய வீடியோவைப் பார்த்து, முன் கொசுவ மடிப்பை எடுத்து முடித்தவன் சொருக போக,
“ஆங்..! அதெல்லாம் வேண்டாம்… நானே சொருகிக்கிறேன்..” என்றவள் அதை வாங்கி தானே சொருகிக் கொண்டாள்.
“இதுல எல்லாம் படு விவரம் தான்..” என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன். அதற்கு பிறகு அவன் அதை சரி செய்து விட்டுக் கொண்டிருந்தான். தான் நின்றிருக்க, அவன் கீழே அமர்ந்து சரி செய்ததைப் பார்த்தவளுக்கு ஒரு மாதிரி சங்கடமாகிப் போனது. கம்பீரமாய் வலம் வரும் அர்ஜூனின் முகம் அவளுக்கு ஞாபகத்தில் வந்து போனது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் , மனம் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தது.
“ஓகே வா..?” என்றான் நிமிர்ந்து.
“ஓகே தான் சார்..!” என்றாள் லேசான தடுமாற்றத்துடன்.
“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா..!!” என்றவன் வேகமாய் அந்த அறையை விட்டு வெளியேறினான். அங்கிருந்து வெளியேறிய பிறகு தான் அவனுக்கு மூச்சே வெளியேறியது.
“இன்னும் கொஞ்ச நேரம் உள்ள இருந்திருந்தா, மூச்சு விடாமையே போய் சேர்ந்திருப்பேன் போல…” என்று நினைத்தவனின் மனக்கண்ணில் மீண்டும் வராஹினியின் உருவம் வந்து போக, முன் முடியை கைகளால் கோதி தன்னை சமன் படுத்திக் கொண்டான்.
அடுத்து அவனை அதிகம் காக்க வைக்காமல் வெளியே வந்த வராஹினி…
“போகலாமா சார்..!!” என்றாள்.
“போகலாம்..!” என்றபடி அவளைப் பார்க்க, அந்த எலக்ட்ரிக் புளு கலர் பட்டுபுடவையில் தேவதையாக மிளிர்ந்தாள் அவள். அந்த வண்ணம் அவளின் நிறத்தை மேலும் தூக்கிக் காட்ட, அவளின் மொத்த அழகையும் அந்த ஒற்றை புடவை வெளிக் கொணர்ந்திருந்தது.
அவன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
‘எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கார்… எங்கயும் சரியா கட்டலையா..?’ என்று தன்னை ஆராய்ந்தாள் வராஹினி. எல்லாம் சரியாக இருக்க,
‘சரியாத்தானே இருக்கு..’ என்று நினைத்தவள்,
“வாத்தியாரே..” என்றாள் மீண்டும்.
அவளின் அழைப்பில் அலைந்தவன்,
“என்ன..?” என்றான்.
“கிளம்பலாமா..?” என்றாள்.
“ம்ம்..!” என்றவனுக்கு அங்கே வார்த்தைகள் பற்றாக்குறையாகிப் போனது. அவன் மனதில் இருந்த மற்ற குழப்பங்கள் எல்லாம் மறைந்து இப்போது அவள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தாள். மனம் கொஞ்சம் லேசானதைப் போல் கூட இருந்தது. அந்த ஏகாந்தத்தை அவன் கலைக்கவும் விரும்பவில்லை. விலக்கவும் விரும்பவில்லை. அப்படியே காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“எனக்கு புடவை நல்லா இருக்கா..?” என்றாள்.
“நல்லா இல்லைன்னு சொன்னா, என்ன செய்றதா பிளான்..?” என்றான்.
“அப்போ நல்லா இல்லையா..?” என்றாள்.
அவன் சிரித்துக் கொண்டான்.
“எதுக்கு சிரிக்கிறிங்க..?” என்றாள்.
“பெண்களை புடவை விஷயத்தில் திருப்தி படுத்தவே முடியாதுன்னு ஏதோ பட்டிமன்றத்தில் கேட்டது ஞாபகத்துக்கு வந்துச்சு. அதை நினைச்சேன், சிரிச்சேன்..” என்றான்.
“எனக்கு அப்படியெல்லாம் இல்லை. நான் நல்லா இருந்தாத்தான உங்களுக்கு கௌரவம். அதான் கேட்டேன்..” என்றாள் அசால்ட்டாய்.
“ஹோ..! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா..?” என்றான்.
“இல்லையா பின்ன..?” என்று சிலுப்பிக் கொண்டாள்.
ஏனோ அந்த நிமிடம், இருவர் மனதிலும் வேறு எந்த சிந்தனைகளும் வரவில்லை. அந்த பயணம் சற்று நீண்ட பயணமாக இருக்க வேண்டும் என்ற ஆசை கூட உண்டானது.
ரஞ்சன்-ரூபிணி திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக செய்யப்பட்டிருந்தது.
காரில் ஜோடியாக வந்திறங்கிய அர்ஜூன்-வராஹினி ஜோடியைப் பார்த்த பலர் வாயைப் பிளந்தனர். பலர் புரியாமல் பார்த்தனர். பலர் பொறாமையுடன் பார்த்தனர். அனைவரின் கண்களும் அவர்களை மொய்க்க, அதைப் பார்த்த ரஞ்சனுக்குத் தான் எரிச்சலாக இருந்தது. என்ன முயன்றும் வராஹினியை அவனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனுக்கு அருகில் இருந்த பிரஜேஷ்,
“அப்படி பார்க்காத ரஞ்சன். ரூபிணி தான் உன்னோட மனைவி…” என்றான்.
“எனக்கு உன் தங்கச்சியை தான் பிடிச்சிருந்தது..” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“அது பழைய கதை. இப்போ அவ அர்ஜுனோட மனைவி. பாரு,அவங்க ஜோடி பொருத்தமே எவ்வளவு அழகா இருக்கு…” என்றான்.
“நீ எப்போ இருந்து அவனுக்கு ஜால்ரா தட்ட ஆரம்பிச்ச..?” என்றான் ரஞ்சன்.
“நம்ம என்னதான் கணக்குப் போட்டாலும், மேல இருக்குறவன் போடுற கணக்கை நம்மளால கண்டுபிடிக்கவும் முடியாது. அதைத் தடுக்கவும் முடியாது. அது எனக்கு தெளிவா தெரிஞ்சு போச்சு..” என்றான் பிரஜேஷ்.
“யார் என்ன சொன்னாலும், இந்த அர்ஜூன் பய என்னைக்குமே எனக்கு வேண்டாதவன் தான்..” என்று உறுதியாக சொன்னான் ரஞ்சன்.
அதற்குள் அவன் அருகில் வந்த அர்ஜூன்…
“வாழ்த்துகள் பிரதரே..!” என்றான் சிரிப்புடன். அவன் உண்மையான மகிழ்ச்சியுடன் தான் சொன்னான். ஆனால் அது கூட ரஞ்சனுக்கு நக்கலடிப்பதாக தெரிந்தது.
“யாருக்கு வேணும் உன்னோட வாழ்த்து..?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“வேண்டாம்ன்னா விடு..! அதுக்கு ஏன் இப்படி முகத்தை அஷ்ட்ட கோணலா வைக்கிற..? கல்யாண மாப்பிள்ளை சும்மா கலகலன்னு இருக்க வேண்டாமா..?” என்றான் அர்ஜூன்.
“மொத்தத்தையும் கெடுக்க, நீ வந்துட்டியே..? அப்பறம் எப்படி சந்தோசம் இருக்கும்..?” என்றான் ரஞ்சன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் அருகில் வந்தார் கார்த்திகேயன்.
“அர்ஜூன்..! இங்க என்ன பன்றப்பா..! அங்க ஐயர் கூப்பிடுறார். வா..!” என்று அவனை இழுத்துக் கொண்டு போனார்.
“நான் எதுக்கு..? எதுக்காக கூட்டிட்டு போறீங்க..?” என்றான்.
“ரெண்டு முகூர்த்தம் இருக்கு. முதல் முகூர்த்தத்துல, உனக்கும் வராஹினிக்கும் கல்யாணம்..” என்று அவர் சொல்லும் போதே, அர்ஜூன் மறுத்துப் பேச வந்தான்.
“எதுவும் பேசாத அர்ஜூன். இத்தனை நாள் உன்னோட ஞாயமான ஆசைகளுக்கும், கோபங்களுக்கும், உணர்வுகளுக்கும் நான் மதிப்பு குடுத்தேன். இன்னைக்கு என்னோட ஆசைக்கும், மகிழ்ச்சிக்கும், நீ மதிப்பு குடுப்பேன்னு நம்புறேன்…” என்றார் உறுதியாக. அவர் அப்படி சொன்ன பிறகு அவனால் மறுத்துப் பேச முடியவில்லை.
“ஆனா..வராஹினி….” என்று எதையோ சொல்ல வந்தான். நாடக கல்யாணத்தை உண்மையான கல்யாணமாக கார்த்திகேயன் மாற்றிக் கொண்டிருக்க, அதற்கும் அவளிடம் கேட்க வேண்டுமென்று நினைத்தான். ஆனால் கார்த்திகேயன் அதற்கான சந்தர்ப்பத்தை அவனுக்குக் கொடுக்கவேயில்லை.
“வராஹினியை நான் தான் அனுப்பி வச்சேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல கூட்டிட்டு வந்துடுவாங்க..!” என்றார்.
அங்கிருந்த அனைவரையும் பார்த்தான் அர்ஜூன். அனைவருக்கும் விஷயம் ஏற்கனவே தெரியும் என்பது அவர்களின் முகத்தில் இருந்தே தெரிந்தது. மணமேடைக்கு அருகில் மோகன் குமார் கூட முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் நின்றிருந்தார். கல்பனா கடமையே என்று இருந்தார்.
“இன்னைக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணது என்னவோ எனக்குத் தான். ஆனா, இங்க கூட அவனுக்கு தான் முக்கியத்துவம்…” என்று சுமித்ராவிடம் பொரிந்து கொண்டிருந்தான் ரஞ்சன்.
அர்ஜூன் மூத்தவன் என்ற எண்ணம் அவனுக்கு மறந்து விட்டிருந்தது போல.
“அப்பா..! எனக்கு இது தேவையில்லாத வேலைன்னு தோணுது. ரஞ்சன் கோபம் இன்னும் கூடித் தான் போகும்..” என்றான் அர்ஜூன்.
“அதைப் பத்தி எனக்கு கவலையில்லை. நீதான் மூத்த பையன். உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட கடமை. அதை நான் மறக்கலை. கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலை, இப்படி ஆகிப் போச்சு. அதை நேர்படுத்த வேண்டிய கட்டாயமும், அவசியமும் எனக்கு இருக்கு..” என்றார் கார்த்திகேயன்.
அதற்குமேல் எதுவும் பேசாமல் அர்ஜூன் மணமேடையில் அமர, சற்று நேரத்திற்கு முன்பு வரை தேவதையாக அவனுடன் வந்தவன், இப்போது இன்னமும் கொஞ்சம் கூடுதல் ஒப்பனையுடன், நகைகளும் சேர்ந்து கொள்ள, அவளைப் பார்த்தவன், கண்களை அவள் முகத்திலிருந்து எடுக்க சிரமப்பட்டான்.
அவனின் அருகில் அமர்ந்தவளுக்கு இன்னமும் நடப்பதை நம்ப முடியவில்லை.
தன்னை விட்டு விலகி செல்கிறான் என்று அர்ஜூனை நினைத்து வராஹினி கவலையுடன் இருந்த நேரத்தில் இப்படி, வலுவான ஒரு பிணைப்பு கார்த்திகேயன் மூலம் நடக்கும் என்று அவள் அறிந்திருக்கவில்லை. இன்று ஊரறிய, அவனின் மனைவியாகப் போகிறாள். இதுவரை மனதில் இருந்த ஏதோ ஒரு பயம் இப்போது சட்டென்று விலகி, அனைத்தும் வண்ணமயமாகிப் போனதைப் போன்ற உணர்வு அவளுக்கு. அதுவும் அவளின் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியே அவளின் முகத்தை மேலும் மலர செய்திருந்தது.
நல்ல நேரத்தில், அனைவரின் ஆசீர்வாதத்துடனும் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு, அவளைத் தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்.
அவனுக்கு அருகில் குனிந்தவள்,
“இப்ப மட்டும் நான் சின்ன பொண்ணு இல்லையா..? வயசு வித்யாசம் உங்களுக்கு இடிக்கலையா..?” என்றாள் வேண்டுமென்றே.
“நம்ம அக்ரிமென்ட் அப்படியே தான் இருக்கு..அதில் மாற்றமில்லை. கல்யாணம் எப்படி நடந்தாலும், டிவேர்ஸ் ஒரே மாதிரி தான் நடக்கும்..” என்றான்.
‘தாலி கட்டின உடனே டிவேர்ஸ் பத்தி பேசுறான்.. கடன்காரன்..’ என்று மனதிற்குள் தாளித்தாள்.
“காலையில தான் ஒரு விஷயம் புரிஞ்சது..” என்றான் சன்னமான சிரிப்புடன்.
“என்ன புரிஞ்சது..?” என்றாள்.
“நீ இன்னும் சின்ன பொண்ணு இல்லைன்னு..” என்றான் உல்லாசமாய்.
அவனிடம் எதையோ சொல்ல வாயெடுத்தவள், அவன் சொல்ல வந்த செய்தியில் அப்படியே குப்பென்று முகம் சிவக்க, தலையை குனிந்து கொண்டாள்.
இதையெல்லாம் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
அடுத்து வந்த முகூர்த்த நேரத்தில், ரூபிணியின் கழுத்தில் வேண்டா வெறுப்பாய் தாலியைக் கட்டி, அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டான் ரஞ்சன். ரூபிணியை வேண்டாம் என்று சொல்ல கண் உள்ள எவனும் யோசிப்பான். ரஞ்சனுக்குத் தான் பார்வை குருடாகி பல வருடங்கள் ஆகிவிட்டதே. அவனுக்கு அறிவு கண்ணும் இல்லை, மன கண்ணும் இல்லை. இருக்கும் கண்களில் அவனுக்குத் தெரிந்தது எல்லாம் வராஹினி மட்டும் தான். அவளை இன்னமும் நினைப்பது தப்பென்று அந்த நிமிடம் வரை கூட அவன் உணரவேயில்லை.
மகளின் திருமணத்தை பார்த்த மோகனுக்கு மனம் நிறைந்து போனது.
“அப்பா..! நீங்க குற்ற உணர்ச்சியில தவிக்க கூடாதுன்னு தான், நீங்க சொன்ன எதையும் நான் மறுத்துப் பேசலை. ஆனா, இனி நடக்கப் போற எதுக்கும் நான் உடன்பட மாட்டேன். இனி எந்த விஷயத்துக்கும் என்னை கட்டாயப்படுத்தாதிங்க. முக்கியமா, அந்த வீட்டுக்கு நான் வர மாட்டேன்..!” என்றான் அர்ஜூன்.
“அது தான் பூர்வீக வீடு. வராஹினி தான் மூத்த மருமகள். அவ வந்து விளக்கேத்த வேண்டாமா..?” என்றார் சுமித்ரா.
“வேண்டாம்..!” என்றான் பட்டென்று.
“அதெப்படி..? முறைன்னு ஒன்னு இருக்குல்ல..?” என்றனர் அனைவரும்.
“எல்லாம் முறைப்படியா நடந்தது. அப்படி பார்த்தா, நான் என்னைக்கு இவ கழுத்துல முதன் முதல்ல தாலியை கட்டினேனோ, அன்னைக்கே விளக்கேத்த சொல்லியிருக்கணும். செய்யலையே..? அதானால, இந்த முறை, முறை வாசல் எல்லாமே நாங்க எங்க வீட்ல பார்த்துக்கிறோம். என்னை எங்கப்பா புரிஞ்சுகிட்டா போதும். மத்தவங்க புரிஞ்சிக்கனும்ன்னு அவசியமும் இல்லை. அதை நான் எதிர்பார்க்கவுமில்லை.
அந்த வீடும், அங்க இருக்கவங்களும் எனக்கு தூரத்து சொந்தம் மாதிரி தான். ஒட்டி உறவாடவும் வேண்டாம், வெட்டி பகையாடவும் வேண்டாம். இனி என் விஷயத்திலோ, என்னோட மனைவி விஷயத்திலோ யாரும் தலையிட மாட்டிங்கன்னு நம்புறேன்..!” என்றான் ரஞ்சனைப் பார்த்துக் கொண்டே.
“அவனோட பொண்டாட்டியை பார்த்தா, உன்னை கொலை கூட பண்ணத் தயங்க மாட்டானாம்… அதைத் தான் இப்படி சுத்தி வளைச்சு சொல்றான்..” என்றாள் ரூபிணி, ரஞ்சனிடம்.
“உன்னைக் கேட்டாங்களா..?” என்றான்.
“கேட்கலைன்னாலும், சொல்ல வேண்டியது என்னோட கடமை பாரு. ஏன்னா..? இப்போ நான் தான் உன்னோட வொய்ப்..” என்றாள் நக்கலாக.
“நீ ஒரு பழைய பீஸ்.. அதுவாவது உனக்கு ஞாபகத்துல இருக்கா..?” என்றான்.
“அங்க மட்டும் என்ன வாழுது..? நீயும் அறுந்த பழைய பீஸ் தான். அதை மறந்துடாத. இவன் பெரிய யோக்கிய சிகாமணி. வந்துட்டான் பேச. என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரியும். எதுவும் செய்ய தயங்க மாட்டேன்..ஜாக்கிரதை..” என்றாள்.
“என்னடி மிரட்டுறியா..?” என்றான் ரஞ்சன்.
“எப்படி வேணும்ன்னாலும் எடுத்துக்கோ..! அது உன்னோட பிரியம்..” என்றவள், மற்றவர்கள் முன் சிரித்து வைத்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அங்கே வராஹினி, அவளின் தந்தையை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
‘என்னமோ இப்பதான் கல்யாணம் ஆகி வர்ற மாதிரி ஓவரா சீன் போடுறா..?’ என்று பல்லைக் கடித்தான் அர்ஜூன்.
“நானே பார்த்திருந்தாலும், இப்படி ஒரு மாப்பிள்ளையை உனக்கு பார்த்திருக்க முடியுமான்னு தெரியலை வராஹிமா. பொறுப்பா இருந்துக்கோடா…” என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் மோகன் குமார்.
“இப்படியே அவளை ஏமாளியா இருக்க சொல்றிங்களா..?” என்றார் கல்பனா கோபமாக.
“வாயை மூடு..! ஏதாவது பேசுன, மண்டம்ன்னு பார்க்க மாட்டேன்..! முக்கியமானவங்களா வந்திருக்காங்க. அவங்க முன்னாடி மானம் போக வேண்டாம்ன்னு நினைச்சா, பேசாம இரு..” என்று அதட்டி, அடக்கி வைத்தார் மோகன்.
அவர் அப்படி சொல்லவும வரை ஆச்சர்யமாக பார்த்தாள் வராஹினி. அவர்களின் வீட்டில் எப்பொழுதும் கல்பனாவின் குரல் தான் ஓங்கியிருக்கும். தந்தையின் இந்த மாற்றம் கூட அவளுக்கு பிடித்திருந்தது.
“என்ன டாடி..? செம்ம பர்பாமான்ஸ் பண்றிங்க..? செம்ம.. போங்க..?” என்றாள் சிரிப்புடன்.
“சாரி வராஹி…” என்றான் பிரஜேஷ்.
“எதுக்குண்ணா என்கிட்டே சாரி கேட்குற..? நான் எதையும் மனசுல வச்சுக்கல.. ப்ரியா விடு..” என்றாள். அந்த நிமிடம் அவளுக்கு எல்லாமே கிடைத்து விட்டதைப் போன்ற ஒரு சந்தோசம்.
எதேச்சையாக பார்வையை சுழற்றியவளின் கண்கள் ஒரு இடத்தில் நிலைத்தது.
அங்கே மண்டபத்தில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தவரைப் பார்த்த வாராஹினிக்கு ஒரே யோசனை.
‘இவரை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே..?’ என்று மூளையைக் குடைந்தவளின், முகம் சட்டென்று வெளிச்சம் பெற்றது.
‘இவரு அந்த டாக்சி டிரைவரா வந்தவர் தானே… இவருக்கு இங்க என்ன வேலை..?’ என்றவளின் மூளை தீயாக வேலை செய்ய ஆரம்பித்தது.
error: Content is protected !!