Skip to content
Post Views: 7,037
பொன்மணிக்கு தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. “அப்பா” என்றாள் இயல்பாக.
மகளின் இயல்பான பேச்சு தந்தைக்கு தெரியாதா? “என்னடா குரல் இவ்வளோ சோர்ந்து கிடக்கு?” என்றார் கவலையாக.
நேற்று மகள் மருமகன் இருவரும் ஒன்றாக சென்னை சென்றார்கள் என்று அசோகன் மனைவியிடம் சொல்ல, அஞ்சுகத்திற்கு அத்தனை மகிழ்வு அதில்.
பொன்மணி மருமகனை அனுசரித்து பேசினாளா? இல்லை சத்யப்ரகாஷால் கற்பிழந்தவள் என்ற குற்றவுணர்வில் திருனேஷ்வரனிடம் உன்னோடு வாழமாட்டேன் என்று தர்கம் செய்தாளா?
Advertisement
மருமகனுக்கு கோபம் வரும்படி நடந்துகொண்டாளா? இருவரும் ஒன்றாக தங்கியிருக்கிறார்களா? இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர் அசோகன் அஞ்சுகம் தம்பதி.
சென்னை சென்றடைந்ததும் போன் செய்ய சொல்லியும் இரவு பொன்மணியிடமிருந்து அழைப்பு வராமல் போகவே, திருனேஷ்வரனோடு இருப்பாள் என்ற நினைவில் இவர்களும் அழைக்கவில்லை.
“என்னங்க? என்ன சொல்றா?” என்று அஞ்சுகம் கேட்க, மகளிடம் எப்படி கேட்பது என்று “நீயே கேளு” என்று மனைவியிடம் கொடுத்தார் மொபைலை.
Advertisement
“பொன்மணி”
Advertisement
“ம் சொல்லுங்கம்மா”
“எங்க இருக்க? மருமகன் பக்கத்துல இருக்காரா?”
“இல்லம்மா”
Advertisement
“ஏன் பொன்மணி? இரண்டு பேரும் ஒன்னாதான போனிங்க? அவர் உன்னை கூப்பிடலயா? இல்ல அவர் கூப்பிட்டு நீ போகலையா?”
“இல்லம்மா” என்றவளுக்கு உண்மையை சொல்ல தைரியம் வரவில்லை.
‘அடுத்தவங்க தயவுல இருக்கேன், எனக்கு வருமானம் வர கொஞ்சம் லேட் ஆகும். சின்னதா ஒரு வீடு பார்த்துக்கலாம்’ என்றிருந்தான்.
திருனேஷ்வரன் சூழல் வேதனையளித்த போதும், மனதை கல்லாக்கிக்கொண்டு ‘இப்போதைக்கு தனியா வரமுடியாது. உங்களுக்கு பணம் அனுப்பறேன்’ என்று ஒன்றாய் வாழும் சூழலை மறுத்துவிட்டாள் பொன்மணி.
“என்ன பொன்மணி? எதாவது சொல்லு, உன் வாழ்க்கை என்னாகுமோனு நெஞ்சு பதறிட்டேயிருக்குடீ” என்றார் பெரும் வேதனையாக.
“ம்மா ஏதும் பிரச்சனை இல்லம்மா, நேத்துதான் கல்யாணம் ஆச்சு, அதுக்குள்ள எல்லாம் சரியாகிடுமா? நீங்க என்னை யோசிக்கிறதை விட்டுட்டு கலை விருப்பத்தை நிறைவேத்த யோசிங்கம்மா” என்றாள்.
“எல்லாமும் சீக்கிரம் சரியாகனும்னு நான் பேராசை படல பொன்மணி. அது நியாயமும் கிடையாது. நடந்து முடிந்த விசயங்கள் சாதாரணமானவை இல்ல. சம்பந்தி குடும்பமும் உன்னை ஏத்துக்க எவ்வளோ நாள் ஆனாலும் பரவால்ல, ஆனா நீயா எதாவது நினைச்சிட்டு மருமகனை விட்டு விலகிடாத” என்றார் வேண்டுகோலாக.
“சரிம்மா” என்றவளுக்கு அதற்குமேல் பேசினால் உண்மையை உளறிவிடுவோம் என்ற பயம் வர “ம்மா, எனக்கு வேலையிருக்கு. நான் நைட் இல்லைனா நாளைக்கு காலைல கால் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்தாள்.
இன்று அலுவலகம் சென்றே ஆக வேண்டும். ஆனால் சத்தியமாய் வேலையில் கவனம் செலுத்தும் நிலையில் இல்லை பொன்மணி. மனமெல்லாம் திருனேஷ்வரனை சுற்றியேதான் இருந்தது.
அலுவலகம் செல்ல தயாராகாமல் கண்மூடி அமர்ந்திருந்தாள் கால்மணி நேரம் வரை. பிறகு தன்போல் எழுந்து அவசரமாக தயாராகி அலுவலகம் கிளம்பினாள்.
*** *** ***
திருனேஷ்வரன் ராஜ்குமார் செய்ய வேண்டிய வேலையை விளக்க, சத்தியமாய் ஒன்றும் புரியவில்லை ராஜ்குமாருக்கு. “எனக்கு புரியல” என்றான் பாவமாக.
“உங்க மாமா எங்க?” என்றவன் உடனே சுந்தரத்திற்கு அழைத்தான்.
“இதோ வந்துட்டிருக்கேன் திருனேஷ், பத்தே நிமிஷம்” என்க, சுந்தரம் வரும்வரை ராஜ்குமாரிடம் ஏதும் பேசவில்லை திருனேஷ்வரன்.
பத்து நிமிஷம் என்றவர் அரைமணி நேரத்திற்கு பின்னேதான் வந்தார். “சாரி திருனேஷ், ஹெவி டிராஃபிக்” என்றார் வருத்தமாக.
மருமகன் முகத்தை பார்க்க, பாவமாய் நின்றிருந்தான். “என்னாச்சு திருனேஷ்? ஒர்க் ஸ்டார்ட் பண்ணலையா?” என்றபடி லேப்டாப்களை ஆராய தொடங்கினார்.
“அதெல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கு சார். ஸ்டாஃப் அப்பாயிண்ட் பண்ண கேட்டுருந்தேனே? இன்னைக்கு வருவாங்களா?”
“நைட்தான சொல்லியிருக்க? இன்னைக்குத்தான் ஆட் கொடுக்கனும்”
“இந்த ப்ராஜக்ட்டை பிடிக்க குறைஞ்சது ஆறு மாசத்துக்கு முன்னாடியாவது யோசிச்சிருப்பிங்க. நான் தற்செயலா வந்தவன். என்னை பார்க்கும் முன்ன யாரை வச்சு செய்யலாம்னு யோசிச்சிருப்பிங்கதான?”
“மருமகனுக்கு தனியா பிஸ்னஸ் பண்ண ஏற்பாடு செய்ய நினைச்சிருந்தேன்தான். உன்னை பார்க்கலனா பொறுமையா செய்திருப்பேன். ஜெர்மன் ப்ராஜக்ட் முன்னாடியே ட்ரை பண்ணினேன், ஆனா உன்னை பார்த்த பின்னாடிதான் ஆஃபர் வந்தது. எதையுமே யோசிக்கல திருனேஷ். கமிட் ஆகிட்டா எல்லாம் நீ பார்த்துப்பன்ற நம்பிக்கையில ஆரம்பிச்சிட்டேன்”
“ம்ப்ச்” என சலித்துக்கொண்டவன், “எனக்கு கை இரண்டுதான இருக்கு? எக்ஸ்பீரியன்ஸ் இல்லைனாலும் பரவால்ல, நாலு இல்லை அஞ்சு பேரையாவது ஏற்பாடு பண்ணுங்க, நான் எக்ஸ்ப்ளைன் பண்றதை அண்டர்ஸ்டாண்ட் பண்ற கெபாஸிட்டி இருந்தா போதும்”
சரி என்பதாய் தலையசைத்து சில நொடி யோசித்தவர், “நாம ஒர்க் பண்ணின கம்பெனியிக்கு இன்டர்ன்ஷிப் பண்ண ஸ்டூடண்ட்ஸ் வந்திருந்தாங்க. அவங்க பயோடேட்டா இருக்கு, கால் பண்ணி பார்க்கிறேன்” என்றார்.
“தெரிஞ்ச பசங்கனா கால் பண்ணி கூப்பிட்டுக்கலாம், நம்ம அவசரத்துக்காக தெரியாதவங்களுக்கு கால் பண்ணிலாம் கூப்பிடக்கூடாதுங்க சார், ஆட் கொடுங்க… இன்ட்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணிக்கலாம், ஆட் கொடுக்கும்போதே சேலரியும் மென்ஷன் பண்ணிடுங்க. அப்போதான் க்விக்கா வேலையாகும்.” என்றவன் சில நொடிகள் யோசித்து,
“எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்தி இருக்கா, கோர்ஸ் முடிச்சு இரண்டு மாசம்தான் ஆகுது. அவ ஒர்க் பண்ணிட்டிருக்கா, அவ ஃப்ரண்ட்ஸ் யாராவது இருக்காங்களானு கேட்டு பார்க்கலாமா?” என்றான்.
“நீ சொன்னா சரியாதான் இருக்கும் திருனேஷ், கேட்டு பாரு” என்றதும் பொன்மணிக்கு அழைத்தான்.
பொன்மணி அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் குறுஞ்செய்தி வந்தது.
“என்னாச்சு திருனேஷ்?”
“பிஸியா இருப்பா போல, அப்புறம் கால் பண்றேனு மெஸேஜ் பண்ணியிருக்கா, நீங்க ஆட் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க, நான் ஒர்க் ஸ்டார்ட் பண்றேன்” என்று லேப்டாப்பை உயிர்ப்பித்தான்.
ராஜ்குமார் அருகில் வந்து நிற்க, சில விசயங்களை அறிவுருத்தி “நான் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷன் வச்சு என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க, உங்களால பண்ண முடியலனா நானே பண்ணிக்கிறேன். தயவு செய்து வேலை புரியலனு என் முன்னாடி நிற்காதிங்க” என்றவன் இரண்டு மணிநேரமாக வேலையில் மூழ்கியிருந்தான்.
திருனேஷ் சொன்னதை வைத்து ராஜ்குமாரும் இரண்டு மணிநேரமாக வேலை செய்தான். அதன் பின்னே என்ன செய்வதென தெரியாமல் போக, திருனேஷ்வரனையே பார்த்திருந்தான்.
கூடவே தங்கையின் நியாபகமும் வர, திருனேஷ்வரனின் உயரம், நிறம், கம்பீரம், புத்திக்கூர்மை என அனைத்தையும் ரசித்தபடி, வெளியே சென்று பத்து நிமிடத்தில் பழரசம், திண் பண்டத்தோடு வந்தான்.
“திருனேஷ்வரன்” என்று பவ்யமாக அழைக்க, அருகே வேலைசெய்து கொண்டிருந்த சுந்தரத்திற்கே ஆச்சர்யமாகிப் போனது.
திருனேஷ்வரன் நிமிர்ந்து பார்க்க, “எதாவது சாப்பிட்டு வேலை பண்ணுங்க” என்றான் மரியாதையாக.
திருனேஷ்வரன் ஊன்றிப்பார்க்க, “நீங்க டையர்ட் ஆகாம இருக்கத்தான். இப்படி வேலைக்கெல்லாம் இன்னும் ஆள் போடலை, அதான் நானே போய் வாங்கி வந்தேன்” என்றான் பவ்யமாக.
நிச்சயம் இது நடிப்பில்லை என்று திருனேஷ்வரனுக்கு புரிந்தது. வேலை தெரியாமல் இருப்பதை இதில் சரிகட்ட நினைக்கிறானோ என நினைத்தாலும் ஏதும் சொல்லாமல் பழரசத்தை வாங்கியவன் “தேங்க்ஸ்” என்றான்.
சுந்தரத்திடம் சென்றவன், தனது தங்கைக்கு திருனேஷ்வரனை பேச முயற்சிக்க சொன்னான்.
“ராஜ், இதென்ன மேட்ரிமோனி ஆபீஸா? திருனேஷ்க்கு தெரிஞ்சா அசிங்கமா கேட்பான். இதுக்கெல்லாம் மயங்குற ஆள் அவனில்ல. வாய வச்சிட்டு சும்மா இரு” என அதட்டினார்.
அதெப்படி மயங்காமல் இருப்பான்? தவறிழைக்கவில்லை என்றாலும் தண்டனை அனுபவித்தவன். பெரிதாய் பின்புலம் இல்லாதவன். இனிதான் பணம் சம்பாதித்தாக வேண்டும் என்ற சூழலில் இருப்பவன்.
இத்தனை விசயம் திருனேஷிடம் குறையாக இருக்கும்போது சொத்தோடு, தொழிலும் அமைத்து கொடுத்து பொண்ணையும் கொடுத்தால் ஏற்காமல் இருக்க அவனென்ன ஆசைகளை முற்றும் துறந்த முனிவனா? மாமாவால் முடியவில்லை என்றாலும் நாம் நடத்தி காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
திருனேஷ்வரனுக்கு பொன்மணியிடமிருந்து அழைப்பு வர, எத்தனை வேலை இருந்த போதும் மனைவியின் அழைப்பை எதிர்பார்த்திருந்தவன் அல்லவா? சில நொடிகளிலேயே அழைப்பை ஏற்றான்.
“மீட்டிங்ல இருந்தேன், இப்போதான் முடிஞ்சது”
“இட்ஸ் ஓகே… ஒரு ஹெல்ப் வேணுமே”
என்ன கேட்பானோ என்ற பதட்டத்தில் பொன்மணி இருக்க, “என்ன சத்தத்தையே காணோம்? ஹெல்ப் பண்ணுவியா மாட்டியா?” என்றான்.
“என்னால முடிஞ்சா பண்றேன்”
“உன்னால முடியும்ன்றதாலதான் உனக்கு கால் பண்ணினேன்”
“என்ன வேணும்?”
“ஓ மனசு இந்தளவுக்கு இளகிடுச்சா? என்ன வேணும்னாலும் செய்வியா?” என சத்தமில்லாமல் சிரிக்க, “என்னால முடிஞ்சதை செய்றேன்” என்றாள் அவசரமாக.
“பதறாத, பதறாத.” என இலகுவாய் சொன்னவன், தனது தேவையை சொன்னான். “என் ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் வேலை கிடைச்சிடுச்சே” என்றாள்.
“ஓ அப்படியா?”
திருனேஷ்வரனின் சோர்வான குரல் அவனின் அவசர தேவையை உணர்த்த, “சேலத்துல என்னோட ஸ்கூல் டேய்ஸ் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க, எவ்வளோ பேக்கேஜ் கொடுப்பிங்கனு சொன்னிங்கனா அவங்ககிட்ட சொல்லிப் பார்க்குறேன்?” என்றாள்.
“ம்… கேட்டு சொல்றேன்” என்று இணைப்பை துண்டித்து சுந்தரத்திடம் கலந்தாலோசித்து, பொன்மணியிடம் சொன்னவன், “இன்னைக்கு ஒர்க் முடிஞ்சதா?” என்றான்.
“இம்பார்டண்ட் ஒர்க் முடிஞ்சது, ஆனா மத்த வேலை இருக்கு, சின்ன பிரேக் எடுத்துட்டு ஆரம்பிக்கனும்”
“எப்போ வேலை முடியும்?”
“ஈவ்னிங் சிக்ஸ் ஆர் செவன் ஆகிடும்”
“சரி ஈவ்னிங் கால் பண்றேன்” என்று அதற்கு மேல் பேச விடாமல் இணைப்பை துண்டித்தான்.
திருனேஷ்வரனுக்கு பொன்மணி அழைக்கவும் ஏற்றவன், நேற்று பேருந்தில் சொன்னது போல “பாஸிட்டிவா பேசுறதுனா மட்டும் பேசு” என்றான்.
“நேத்தும் இப்படிதான் என்னை பேசவே விடல. எனக்கு பேசலைனா நெஞ்சே வெடிச்சிடும் போல” என்றாள் கோபமாகவே.
“என்ன? நெஞ்சு வெடிச்சிடுமா? அப்போ நேர்லயே பேசு. பொண்டாட்டி நெஞ்சு வெடிச்சு புருசன் பார்க்கலனா எப்படி?” என்று ஆர்வம்போல் சொல்லி இணைப்பை துண்டித்தான் சிரிப்போடே.
மாலை ஆறு மணிக்கு பொன்மணியிடமிருந்து அழைப்பு வர, ஏற்றவன், “நேர்லதான் பேசனும். எங்க வரதுனு சொல்லு” என்றான்.
“இல்ல, போன்லயே” எனும்போதே இணைப்பை துண்டித்தான்.
மீண்டும் அழைப்பு வர, ஏற்றவன் “எங்க வரட்டும்?” என்றான்.
போனில் பேசினால் நிச்சயம் கட் பண்ணுவான், திருனேஷ்வரனிடம் பணமும் இருக்காது என்று “நீங்க எங்க இருக்கிங்கனு சொல்லுங்க, நான் வரேன்” என்றாள்.
“ஒன்றரை மாசத்துக்கு முன்னதான் சென்னைக்கு வந்திருக்க, அதுக்குள்ள எங்க சொன்னாலும் வந்துடுவியா? இப்போவே மணி ஆறு. நீ வந்தா அன்டைம்ல போறமாதிரி ஆகிடும். நான் எங்க வரனும்னு சொல்லு” என்றான் கட்டளையாக.
பொன்மணி சொல்ல, “நான் ரெஸ்டாரண்ட் வர ஒரு மணி நேரமாகிடும். நீ முன்னாடியே வந்துடாத, ஆஃபீஸ்லயே இரு, நான் கால் பண்ணின பின்ன கிளம்பி வா” என்றவன், முக்கால்மணி நேர பயணத்திற்கு பிறகு பொன்மணிக்கு அழைத்து வர சொன்னான்.
பொன்மணி உணவகத்தினுள் நுழைய, “இங்க” என்று கையை உயர்த்தினான் திருனேஷ்வரன்.
திருனேஷ்வரன் அருகே வந்த பொன்மணியின் கண்கள் ஃபார்மல் உடையில் கம்பீரமாய் இருந்த திருனேஷ்வரனின் உருவத்தை மொத்தமாய் உள் வாங்கியது.
நல்லவன், அழகானவன், பண்பானவன். ஆனால் இவனுக்கு கொஞ்சமும் தகுதியில்லாத தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் என்ற எண்ணம் வர கலங்கிவிட்டது கண்கள்.
“ரசிச்சுதா பார்த்த? கன்டினிவ் பண்றதை விட்டுட்டு எதுக்கு அழற?” என முறைத்தான்.
அழவில்லை என்பதாய் பொன்மணி தலையசைக்க, “முதல்ல உக்காரு” என்றான் கட்டளையாக.
பொன்மணி அமர, “நேத்தெல்லாம் பார்க்காம இன்னைக்கு இப்படி பார்க்குற? அவ்வளோ அழகாவா இருக்கேன்?” என கண்ணிமைத்தான் மைய்யலாக.
“ப்ளீஸ் என்கிட்ட இப்படி பேசாதிங்க”
“வேற எப்படி பேசறது? சொல்லி கொடேன்”
பொன்மணி தலைகவிழ, “எதோ பேசனும்ன… இன்னைக்கு ஒரு நாள் பேசாத இரேன். உன் நெஞ்சு வெடிக்கிறதை பார்க்கனும்” என்றவன் பார்வையும் பொன்மணியின் நெஞ்சை தழுவ, கூசிப்போனாள் பொன்மணி.
error: Content is protected !!