Skip to content
Post Views: 6,890
ரூபலஷ்மியை தவிர்க்க ஆரம்பித்து இருபது நாள் முடிந்திருக்க, தனது திருமண விசயத்தை சொல்லிவிடலாம் என்று திருனேஷ்வரனே ரூபலஷ்மிக்கு அழைத்தான். அழைப்பை ஏற்றது ரூபலஷ்மியின் மகன் யுகன்.
“எப்படி சார் இருக்கிங்க? ஏன் எங்களை பார்க்க வரலை?”
“கொஞ்சம் வேலை, அதான் வரமுடியல. அம்மா எங்க?”
“அம்மா குளிச்சிட்டிருக்காங்க, அப்பாகிட்ட கொடுக்கட்டுமா?”
Advertisement
“ஓ… அப்பா வந்துருக்காரா? அப்பாகிட்ட கொடு” என்றான்.
“ஆனா அப்பா பேசமாட்டாரே” என்றபடி தந்தையிடம் சென்றவன், விசயத்தை சொல்லி மொபைலை நீட்ட, யுகன் சொன்னது போலவே, “மம்மிக்கு வர கால்ஸ் எதுக்கு என்கிட்ட எடுத்துட்டு வர?” என்று பேச மறுப்பது திருனேஷ்வரனுக்கும் கேட்டது.
“அப்பா பேச மாட்டார் சார்” என்று யுகன் சொல்ல, “அப்பா நம்பர் சொல்லு யுகன்” என்று கேட்டு வாங்கி ரூபலஷ்மியின் கணவருக்கு அழைத்தான்.
Advertisement
ராஜதுரை அழைப்பை ஏற்க, “சார் இங்க ஒரு மர்டர் ட்ரை பண்ணியிருக்காங்க, ஆனா உயிர் போகல, க்விக்கா வந்தா காப்பாத்திடலாம், குற்றவாளியையும் பிடிச்சிடலாம். ரொம்ப கஷ்டப்பட்டு அவன் கை காலை கட்டி வச்சிருக்கேன்.
Advertisement
இவன் மட்டும் தனியா வந்த மாதிரி தெரியல, கை கால் கட்டியிருந்தாலும் வீணா உயிரை விட்டுடாத, என் உயரம் தெரியாம என்னை கட்டி வச்சுருக்க… என் ஆளுங்க வந்துட்டா கொடூரமா செத்துப்போவ, அப்படி இப்படினு பயங்கரமா பேசுறான் சார். உண்மையா எனக்கு பயமா இருக்கு. சீக்கிரம் வாங்க” என்று, தான் தங்கியிருக்கும் வீட்டின் முகவரியை சொல்ல, உடனே கிளம்பினார்.
திருனேஷ்வரன் சொன்ன முகவரிக்கு வந்து சுற்றிலும் பார்த்தவர் தனது துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக்கொண்டு கதவை தட்ட, கதவு திறந்திருந்தது.
மெதுவாக உள்ளே செல்ல பின்னிலிருந்து ராஜதுரையின் கழுத்தை ஒரு கையால் சுற்றிப்பிடித்து, “சாரி சார், நீங்க கோவப்ரேட் பண்ணலைனா உங்களுக்கு போன் செய்தவன் உயிர் போயிடும், உள்ள கட்டி வச்சிருக்கேன்” என்க, ராஜதுரையின் உடல் தளர்ந்தது.
Advertisement
“இங்க எந்த கொலையும் நடக்கல, எதோ காரணத்துக்காக என்னை வரவச்சிருக்க. இது எவ்வளோ பெரிய குற்றம்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்க,
அதற்குள் ராஜதுரையின் கைகளை பின்னே கட்டி, நாற்காலியில் அமர வைத்து கால்களை நாற்காலியோடு சேர்த்து கட்டி முடித்து கைகளை உதறியபடி ராஜதுரை முன்னே வந்து நின்றான் திருனேஷ்வரன்.
“எவ்வளோ பெரிய பிரச்சனை வந்தாலும் என்னை பாதுகாக்க ரூபலஷ்மி மேடம் இருக்காங்க” என்றான் திமிர் போலவே.
ராஜதுரை வியந்து விழிக்க, அவர் முன்னே ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்தவன், “உங்க மேரேஜ் லைஃப் பத்தி சொல்லுங்க சார்” என்றான்.
“ஏய்… கட்டை அவுத்து விடுடா” என்றார் மிரட்டலாக.
“எனக்கு தேவையான டீட்டெய்ல்ஸ் கிடைக்காம நீங்க கிளம்ப முடியாதுங்க சார்”
ராஜதுரை தீயாய் முறைக்க, “என்னை முறைச்சு உங்க வேல்யுபிள் டைமை வீணாக்காதிங்க, எனக்கும் டைம் ஆகுது. திரும்ப உங்களை பிடிக்க பல நாள், இல்ல பல மாசம் கூட ஆகலாம்.
அவ்வளோ நாள் இந்த விசயத்தைப் பத்தி என்னால பேசாம இருக்க முடியாது. தயவு செய்து நான் கேட்குறதுக்கு ஹானஸ்ட்டா பதில் சொல்லுங்க” என்றான் இம்முறை பணிவாக.
“யார்டா நீ? என் பர்சனல் விசயத்தை உன்கிட்ட எதுக்கு சொல்லனும்? மரியாதையா என்னை ரிலீஸ் பண்ணு, இல்ல… உன் ஃப்யூச்சரை காலி பண்ணிடுவேன்” என்றார் மிரட்டலாக.
“ஹ… என் ஃப்யூச்சரை காலி பண்றது இருக்கட்டும் சார், உங்க ஃப்யூச்சர் காலியாகாம இருக்கத்தான் நான் இப்படி நடந்துக்கறேன், ப்ளீஸ் சார். டைம் வேஸ்ட் பண்ணாம சொல்லுங்க.
இல்லைனா உங்களை உள்ள வச்சு பூட்டிட்டு நான் கிளம்பிடுவேன், ஈவ்னிங் வந்தாலும் எனக்கு தேவையான விசயத்தை வாங்காம உங்களை விடமாட்டேன்” என்றான் பொறுமையாகவே.
“என்னடா தெரியனும் உனக்கு?”
“உங்க மேரேஜ் லைஃப் பத்தி, உங்க வொய்ஃபை உங்களுக்கு எவ்வளோ பிடிக்கும்? இன்னமும் பிடிக்குமா? உங்களை அவங்களுக்கு எவ்வளோ பிடிக்கும்? இவ்வளோதான் சார், இதை சொல்லிட்டிங்கனா விட்டுடுவேன்”
“எனக்கு ரூபாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என் அத்தை பொண்ணு. ரொம்ப சின்ன வயசுல அவளை பார்த்தது. படிப்பு படிப்புனு ஓடிட்டிருந்ததால பல வருசம் நேர்ல பார்க்குற வாய்ப்பு இல்லாம போச்சு.
எனக்கு போஸ்ட்டிங் வாங்கின இரண்டு வருசம் கழிச்சு ரூபாவை பார்த்தும் அந்த குள்ளச்சியா இப்படி அழகா வளர்ந்துருக்கானு பிரம்மிப்பாகிடுச்சு, கூடவே வேற யாருக்கும் அவளை விட்டுக் கொடுக்க கூடாதுனும் தோணுச்சு, கல்யாணம் செய்துக்கிட்டேன்”
“சூப்பர் சார், மேல சொல்லுங்க” என்றான் ஆர்வமாக.
“கொன்னுடுவேன்டா உன்னை? இன்னும் என்னத்தை சொல்றது?”
“ச்சீ ச்சீ… நீங்க நினைக்கிற மாதிரியான எண்ணத்தோட நான் கேட்கலைங்க சார். இப்போவும் அந்த லவ் உங்களுக்கு அவங்க மேல இருக்கானு சொல்லுங்க”
“இருக்குடா, எப்படி இல்லாம போகும்?”
“சூப்பர் சார்” என பாராட்டியவன், “அப்புறம் ஏன் சார் உங்களுக்கு மேடமை புரியல?”
“எனக்கு புரியலையா? உனக்கு தெரியுமா?”
“ஹண்ரண்ட் பர்சன் தெரியும் சார். உங்களுக்கு அவங்க ஃபீலிங் புரியல”
எனக்கு அவளை புரியலையா என்று கோபம் வர, “எங்களுக்கு நடுவுல நீ யாரு?” என முறைத்தார் ராஜதுரை.
திருனேஷ்வரன் அமைதியாக பார்த்திருக்க, அவனின் பார்வை தன்னை சிறுவன் போல் பார்ப்பதாய் ராஜதுரைக்கு மேலும் கோபம் வர, சட்டென எழுந்தவர் தன்னை பிணைத்து இருந்த நாற்காலியோடு வேகமாய் சுழன்றதில், நாற்காலியின் இரு பக்க கால்கள் திருனேஷ்வரனின் தோள்பட்டையை பதம் பார்த்தது.
தன்னை தாக்கிய போதும், சமநிலை இல்லாமல் தடுமாறி கீழே விழப்போக, தோள் வலியோடு ராஜதுரை கீழே விழாமல் தாங்கிப் பிடித்து அமரவைத்து, “எதுக்கு சார் இவ்வளோ கோப்படுறிங்க? எவ்வளோ நாள் இல்லையில்ல மாசத்துக்கப்புறம் வீட்டுக்கு வந்துருக்கிங்க, உங்க வொய்ஃப்கிட்ட உங்களால நெருங்க முடிஞ்சதா?
இதுக்கு முன்னாடி எப்படியோ… ஆனா இந்த முறை அவங்களை உங்களால நெருங்க முடிஞ்சிருக்காது, ரைட்டா சார்?” என்றான் அவரை விட அதிகமான கோபத்தோடு.
உண்மைதான், இத்தனை வருட இல்லற வாழ்வில் இதுவரை ரூபலஷ்மி தனக்கு மறுத்ததேயில்லை. நேற்றிரவுதான் முதல் முதலாய் மறுத்தார்.
அந்த கோபம் இன்னும் உள்ளே கணன்று கொண்டிருக்க, தனது அந்தரங்கத்தை நேரிலிருந்து பார்த்தது போல சொல்லும் திருனேஷ்வரன் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
“டேய்…” என்று உச்ச பட்ச கோபத்தோடு ராஜதுரை எழ, “உக்காருங்க சார்” என்று அலட்டலில்லாமல் சொன்னவன், “பக்கத்துலயிருந்து பார்த்த மாதிரி சொல்றானேனு கோபப்படுறதை விட்டுட்டு, நம்ம அந்தரங்கம் வரைக்கும் இவனுக்கு எப்படி தெரியுதுனு யோசிங்க சார்” என்றான்.
தனக்கு எதுவானாலும் ரூபலஷ்மி மேடம் பார்த்துக்குவாங்க என்று சற்று முன்னே திருனேஷ்வரன் சொன்னது நினைவில் வர, திருனேஷ்வரனை ஊன்றிப்பார்த்தார்.
மனைவியை மேடம் என்கிறான். அந்த மரியாதை பொய்யில்லை. இவனிடம் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. அதோடு தனது மனைவியும் வேறொருவனிடம் காதல் கொள்வாள் என்று கடுகளவும் யோசிக்கவில்லை ராஜதுரை.
சில நொடி யோசனைக்கு பின்னே, “நான் ஊருக்கே வரதில்லனு உன்கிட்ட புலம்பினாளா? உடனே நீ கண்டபடி கற்பனை பண்ணிக்கிட்டியா? எங்களுக்குள்ள எதோ பிரச்சனைனு லூசுத்தனமா யோசிக்கிறதை விட்டுட்டு என்னை அவிழ்த்துவிடு.
என் பொண்டாட்டி மேல நிறைய மரியாதை வச்சிருக்க. நல்ல பையனா தெரியற… உன்னை மன்னிச்சிடறேன்.” என்றார் இவரும் கோபம் குறைத்து.
“என்னை மன்னிக்கிற நினைப்பை விடுங்க சார். ஏன்னா… நான் இப்போ கேட்கப்போற கேள்வி என்னை மன்னிக்க விடாது”
“டேய்… வீணா என் கோபத்துக்கு ஆளாகாத”
“உங்ககிட்ட பேச எனக்கு நிறைய இருக்கு. உங்க கோபத்துக்கு பயந்து பேசலைனு நினைச்சிடாதிங்க, நான் பேசப்போற விசயம் உங்க அந்தரங்கத்தை தொடும்னு விடறேன்.
ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன், மேடம் உங்களை விட்டு பிரியற மைண்ட்ல இருக்காங்க. அதை என்னானு பார்த்துக்கோங்க. என்னை பழி வாங்க நினைச்சு, பொண்டாட்டி பிள்ளையை இழந்துடாதிங்க” என்று கட்டை அவிழ்த்துவிட்டு, போகும்படி வெளியே செல்லும் திசையை காட்டினான்.
“டேய்” என்று திருனேஷ்வரன் சர்ட்டை கொத்தாக பிடிக்க, “ப்ளீஸ் சார்… நான் சொல்றதை கொஞ்சம் யோசிக்க ட்ரை பண்ணுங்க. நீங்க எவ்வளோ பெரிய அதிகாரி. உங்க மேல கை வச்சா என்னாகும்னு அஞ்சு வருசம் ஜெயில்ல இருந்த எனக்கு தெரியாம இல்ல…
உங்க பவர் தெரிஞ்சே இப்படி பண்றேன்னா ஏன்னு யோசிங்க. தயவு செய்து மேடத்தோட விருப்பம் வெறுப்பு பத்தி புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.
அதிகார பலமும், சமூக அந்தஸ்த்தும் பகட்டான வாழ்க்கையை கொடுக்கும். அன்பான வாழ்க்கையை கொடுக்காது. அன்பான வாழ்க்கைக்கு அன்பு மட்டுமே போதும். அதை முழுமையா மேடத்துக்கு கொடுதிங்களானு யோசிங்க” என்றான் நிறைந்த அக்கறையோடு.
ராஜதுரைக்கு அழைப்பு வர, “மேடமாத்தான் இருக்கும், பேசுங்க, நீங்க இங்கதான் இருப்பிங்கனு கெஸ் பண்ணித்தான கால் பண்ணியிருப்பாங்க” என்றான்.
திருனேஷ்வரன் சொன்னது போலவே ரூபலஷ்மிதான் அழைத்திருந்தார்.
“பக்கத்துலதான் இருக்கேன், வந்துடறேன்” என்று இணைப்பை துண்டித்தவர், வெளியேற திரும்பவே, “மேடம் விலகிப்போனாலும் நீங்க விலகாதிங்க சார். பொண்டாட்டிகிட்ட இறங்கி போனா கிரீடம் கீழ இறங்கிடாது” என்று அறிவுருத்தினான்.
“மூடிட்டு உன் வேலையைப் பாருடா” என்று பல்லை நெறித்தவாறு சொல்லி ராஜதுரை கிளம்ப, ‘இவர் வேலையை இவர் ஒழுங்கா பார்த்தா எனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை வரப்போகுது?’ என்று முணகியவாறு அலுவலகம் கிளம்பினான்.
மதியம் போல் ராஜதுரை திருனேஷ்வரனுக்கு அழைத்து, “நான் உன்னை பார்க்கனும்” என்றார்.
“சரிங்க சார், நைட் மீட் பண்ணலாம்”
“இப்போவே பார்க்கனும், உன் வீட்டுக்குத்தான் வந்துட்டிருக்கேன்”
“நான் வீட்டுல இல்ல சார். வேளச்சேரில இருக்கேன், பிஸியா இருக்கேன், நைட் மீட் பண்ணலாம்”
“ரூபலஷ்மியோட புருசன் நான், என்னை விட வேலை முக்கியமா? கிளம்பி வாடா, இல்ல… உன் ஆபீஸ்க்கு வருவேன்”
“என்ன விசயம்னு சொல்லுங்க, இங்கயிருந்தே பதில் சொல்றேன்”
“ரூபா என்னை டைவர்ஸ் பண்றேனு சொல்றாடா, எதோ ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு. உனக்கு தெரியும்னு எனக்கு தோணுது, என்மேல அவளுக்கு என்ன குறைனு உன்கிட்ட சொன்னாளா? சொல்லுடா”
“அதை அவங்ககிட்டயே கேளுங்க சார்”
“என்கிட்ட பேச அவளுக்கு டைம் இல்லையாம், டைவர்ஸ் விசயமே என் மாமியார் சொல்லித்தான் எனக்கு தெரியும், காலைல உன் வீட்டுலயிருந்து என் வீட்டுக்கு வரதுக்குள்ள ரூபா கிளம்பிட்டா.
என் அத்தை போன் செய்து ரூபா எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க, இரண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு பிரிஞ்சு வாழ நினைக்கிறது நல்லதில்லனு, என்னவோ நான் அவகிட்ட டைவர்ஸ் கேட்ட மாதிரி சொல்றாங்க.
ரூபாக்கு போன் செய்து கேட்டா, நிறைய விசயம் இருக்கு, அதை உங்ககிட்ட சொல்ல எனக்கும் டைம் இல்ல, கேட்க உங்களுக்கும் டைம் இருக்காது, சொன்னா மாறுற விசயமும் இல்ல. நாம சேர்ந்து வாழ இனி வாய்ப்பேயில்லன்றா” என்றார் வேதனையாக.
“சார் மேடம் லைன்ல வராங்க, நான் பேசிட்டு வரேன்” என்று ரூபலஷ்மியின் அழைப்பை ஏற்றான்.
“இருபது நாளா அவாய்ட் பண்ணின? இப்போ மட்டும் அட்டன் பண்ற” என்றார் இலகுவாக.
“புது மாப்பிள்ளைனா பின்ன பிஸியா இருக்கமாட்டாங்களா மேடம்? இப்போ கொஞ்சம் ஃப்ரீயா இருந்தேன், அதான் அட்டன் பண்ணினேன்”
சில நொடி அதிர்ந்தவர் பின்னே சுதாரித்து, “யாரு புதுமாப்பிள்ளை? நீயா? என்னை வெறுப்பேத்த இப்படி ஒரு ஐடியாவா? கல்யாணம் செய்தாத்தான் புதுமாப்பிள்ளை திரு, கல்யாணம் செய்ய நினைக்கிறவங்க எல்லாம் புதுமாப்பிள்ளைனு சொல்லக்கூடாது” என எள்ளலாய் சொல்லி, “கவலைப்படாத, இன்னும் கொஞ்ச நாள்ல புது மாப்பிள்ளை ஆகிடலாம்” என்றார்.
“நான் இப்போவே புதுமாப்பிள்ளைதான் மேடம், என் கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆகப்போகுது, என் பொண்டாட்டியோட இருக்க போட்டோவை உங்களுக்கு அனுப்பறேன், என் சரிபாதினு சொல்லமாட்டேன், அவ இல்லைனா நான் ஒன்னுமியில்லாதவன். அவள் என் பொன்னெழில்” என்று இணைப்பை துண்டித்து, பொன்மணியோடு கோவிலில் எடுத்த புகைப்படத்தை அனுப்பி வைத்தான் ரூபலஷ்மிக்கு.
error: Content is protected !!