Skip to content
Post Views: 7,463
இத்தனை நிராகரிப்பாக பேசியும் முழுப்பெயரை சொல்லாமல் திரு என்றழைக்கிறார். தனது சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்.
அவரிடமிருந்து அதனை பறிப்பது பெரிய விசயமல்ல. ஆனால் அவரை தொடும் நிலையை உண்டாக்குவார் என்றே விட்டுவிட்டான்.
ரூபலஷ்மியின் பிள்ளைகள் இனி தன்னை அண்ணா அல்லது மாமா என்றழைக்கவேண்டும் என்றதற்கு பதிலேயில்லை. இனி உங்கள் வீட்டிற்கு வரும் அவசியத்தை கொடுக்காதீர்கள் என்று அத்தனை பணிவாக சொல்லியும், சர்டிஃபிகேட்ஸை எடுத்துட்டு போய்ட்டாங்க. ஆக… இவரை சரிசெய்வது அத்தனை சுலபமல்ல எனப்புரிய கோபம்தான் வந்தது திருனேஷ்வரனுக்கு.
அமைதியாக கண்மூடி அமர்ந்தவன், சில யோசனைகளுக்கு பின்னே ரூபலஷ்மியை சரிசெய்யும் யுக்திகளை கண்டுபிடித்து, அதனை எப்படி செயல்படுத்துவது என்று யோசித்தவனுக்கு, ஹம்… சிறையிலிருந்து வந்த பின்னே தனது வாழ்வை எப்படி வாழ்வது என்று யோசிக்க நினைத்தால் இவர் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது என்று தலையில் அடித்துக்கொண்டான் எரிச்சலாக.
Advertisement
*** *** *** *** *** *** *** ***
“வாவ்… சூப்பர்டீ. நான் கேட்டமாதிரியே கொடுத்திருக்க. நேச்சரா இருக்கு. தாங்க்ஸ் எ லாட்” என்று மகிழ்வோடு இணைப்பை துண்டித்து, புகைப்படத்தையும், வீடியோவையும் மீண்டும் பார்க்க ஆரம்பித்தாள் பொன்மணி.
பின்னே அறைக்குள்ளேயே கால்மணி நேரம் வரை நடந்துகொண்டிருந்து வெளியே வந்தாள். “பொன்மணி, நாளைக்கு எங்க மேனேஜரோட பொண்ணுக்கு கல்யாணம், நீயும் வா” என்றாள் கலைச்செல்வி.
Advertisement
“இல்ல கலை, எனக்கு வேலையிருக்கு” என மறுத்தாள்.
Advertisement
“இப்படியே நல்லது கெட்டது எதுக்கும் போகாம இருந்தா எப்படி பொன்மணி? போய் வாயேன்” என்றார் அஞ்சுகம்.
“எனக்கு பிடிக்கலம்மா” என்றாள் சுள்ளென.
அஞ்சுகம் கவலையாக பார்க்க, “திருனேஷ்வரன் இன்னும் விடுதலையாகி வெளில வரல. அவருக்கு என்ன ஆச்சோனு அந்த ஆன்ட்டியும் அங்கிளும் தவிச்சிட்டிருப்பாங்க. இதுக்கு மொத்த காரணம் நானு. எல்லாம் மறந்து என்னால நிம்மதியா இருக்க முடியாதும்மா, என்னை என்போக்குல விட்டுடுங்க” என்றாள் கட்டளைபோல.
Advertisement
திருனேஷ்வரன் மீது அஞ்சுகத்திற்கும் வருத்தமும் வேதனையும் இருக்கிறதுதான். ஆனால் அன்றைய சூழலை நினைத்து மனதை தேற்றிக்கொள்வார். தற்போது இறுகிய முகத்தோடு பொன்மணி பேசியதில் உயிருள்ள வரை மகள் இதை விடமாட்டாளா? என்று அயர்ந்து போனார் அஞ்சுகம்.
பொன்மணி மீண்டும் அறைக்குள் சென்றிருந்தாள். ஒருமணி நேரம் கழித்து சரியாக மதிய உணவு வேளை நேரத்தில் தன்னை சீரழித்தவனின் குழந்தை படிக்கும் பள்ளிக்கு கிளம்பினாள்.
“சாப்பிடக்கூட இல்ல, தனியா எங்க போற பொன்மணி? அப்பாக்கு போன் போட்டு வரசொல்லி அவரை அழைச்சிட்டு போ” என்றார் அஞ்சுகம்.
செல்லவிருக்கும் பள்ளியின் பெயரை சொல்லி, “என்னோட படிச்சவ அந்த ஸ்கூல்ல டீச்சரா இருக்காம்மா, அவங்க ஹஸ்பண்ட் ரொம்ப ஸ்ட்ரிட்டாம். வெளில வச்சு ஏதும் பேச முடியாதுனு ஸ்கூலுக்கு வர சொன்னா. லன்ச் டைம் வரைக்கும்தான் பேசுவா. அரைமணி நேரத்துல வந்திடறேன்” என்று அக்காவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தாள்.
தானாக அவனிடம் போவதை விட தன்னை தேடி அவனை வர வைக்க வேண்டும் என்பதே பொன்மணி ஆசை. ஆனால் தனது செயல் பெற்றோருக்கு தெரிந்தால் பயத்தில் அவனுக்கு சாதகமாக பேசுவார்கள் என்பதாலேயே குற்றவாளியைத் தேடி பொன்மணி சென்றாள்.
சத்யப்ரகாஷின் குழந்தை படிக்கும் பள்ளிக்கு எதிரேதான் அவனின் அலுவலகம் உள்ளது. தந்தை நடத்தி வந்த கந்துவட்டி தொழிலையே பைனாஸ் கம்பெனியாக மாற்றியிருந்தான். அங்கே நகை மற்றும் பத்திரத்தின் பெயரில் கடன் வழங்குவார்கள் ஆதலால், பொன்மணி உள்ளே வந்ததும் புதிய வாடிக்கையாளர் என வரவேற்புடன் உள்ளே அனுமதிகப்பட்டாள்.
பின்னே கடன் நகை பெயரிலா? அல்லது பத்திரம் பெயரிலா? என்று பணியாளர்கள் விசாரிக்க, “இரண்டுமே என்கிட்ட இல்ல, ஆனா பெரிய தொகை தேவைப்படுது” என்றாள்.
“ஏதும் இல்லாம இங்க கடன் கொடுக்கமாட்டாங்க மேடம்” என்று பணியாளர் சொல்ல, “மிஸ்டர் சத்யப்ரகாஷ் எனக்கு தெரிஞ்சவர்தான். அவர்கிட்ட பேசனும்” என்றாள்.
ஒருவேளை சொந்தமாக இருக்குமோ என யோசித்தபோதும், அப்படியேன்னாலும் நம்ம பாஸ் அப்படிலாம் பணத்தை சும்மா தூக்கி கொடுக்கமாட்டாரே என நினைத்திருக்க, “பொன்மணி வந்துருக்கேனு சொல்லுங்க” என்றாள்.
இவன் சத்யப்ரகாஷின் அறைக்குள் செல்ல, பின்னோடே இவளும் அனுமதியின்றி உள்ளே சென்றிருந்தாள். பொன்மணியைப் பார்த்ததும் அடையாளம் தெரியவில்லை சத்யப்ரகாஷிற்கு.
“யார் நீ? உள்ள எதுக்கு அலவ் பண்ணின?” என்று பணியாளரையும் சேர்த்து முறைக்க, “ஹம்… என்னை மாதிரி எத்தனை பேர பார்த்திருப்பியோ? அதான் அடையாளம் தெரியலபோல” என அசால்ட்டாக சொல்லி, “பொன்மணின்ற பேராவது நியாபகம் இருக்கா?” என்றாள்.
உடல் முழுதும் மின்னல் உண்டானது போல தோன்ற, அதிர்ந்த கண்கள் சுருங்கும் முன்னே, “நீ போ” என்று பணியாளரை வெளியே அனுப்பினான்.
வசதியாக அமர்ந்து இருக்கையில் சாய்ந்து ஊன்றிப்பார்த்தாள் சத்யப்ரகாஷை.
“என்னடீ திமிரா? எவ்வளோ தைரியம் இருந்தா என் இடத்துக்கே வந்து என்னை எதிரிபோல பார்ப்ப? நீயெலாம் எனக்கு ஒரு ஆளே இல்ல. இருக்குற இடம் தெரியாம ஆக்கிடுவேன், ஒழுங்கா கிளம்பி போய்டு” என்றான் மிரட்டலாக.
“அப்படியா?” என்றாள் திமிராக.
“ஏய்” என்று மிரட்டியபடி அவளருகே வர, “என்ன பண்ணுவ? முன்ன பண்ணின மாதிரியா?” என்றாள் அசால்ட்டாக.
முன்னே தனிக்கட்டை. இப்போது அப்படியில்லையே. மனைவி இருக்கிறாளே. விசயம் அவளுக்கு தெரிந்தால் தொலைத்துவிடுவாள் என்று பயம் வர, “நீ உண்மையை கூவி கூவி சொன்னாலும் எனக்கொன்னும் இல்ல, அதுக்கு எந்த ஆதாரமும் இல்ல. உன்னால என்னை ஒன்னும் பண்ணமுடியாது.
என்னை சீண்டாத வரைக்கும் உனக்கு பிரச்சனையில்ல, பழிவாங்குறேன், அது இதுனு எதாவது செய்து வச்ச… கல்யாணம் ஆன என்னை காதலிக்கிறேனு சொல்றா… என் சொத்துக்கு ஆசைப்பட்டு வப்பாட்டியா இருக்கவும் சம்மதம்ன்றானு உன்னை அசிங்கப்படுத்திடுவேன் ஜாக்கிரதை” என்றான்.
“ஓ… பார்டா” என பாராட்டியவள், “ஆனா உன் பேச்சுல இருக்க தைரியம் உன் கண்ல இல்லையேடா பொறுக்கி” என்றாள் பாவம்போல்.
“யாரைடீ டானு சொன்ன? அதுவும் பொறுக்கின்ற? என் உயரம் தெரியாம பொறுக்கினு சொல்லிட்டல்ல? உன்கிட்டயிருந்து இன்னும் என்னென்னத்தை பொறுக்குறேனு மட்டும் பாரு” என்று சத்யப்ரகாஷ் அவளின் கழுத்தை பிடிக்க,
“உன் மாமனார் எம்.எல்.ஏ வாமே? அவரைப் பொறுத்தவரை நீ தங்மான மருமகனாமே? உன் பொண்டாட்டிக்கு உன்மேல செம்ம லவ்வாமே? உன்னோட மூனரை வயசு மகன் நீ இல்லைனா தூங்கமாட்டானாமே” என்றாள்.
உண்மையில் மனைவிக்கும், மாமனார் குடும்பத்தாருக்கும் சத்யப்ரகாஷ் தங்கமானவன்போல்தான் நடந்துகொண்டிருக்கிறான். இவளேது தனது மனைவியிடம் ஏதேனும் உளறி வைத்தால் அவ்வளவுதான். எதாவது செய்தாக வேண்டும்.
தனது மிரட்டலுக்கெல்லாம் இவள் பயப்படப்போவதில்லை என்று புரிய, பொன்மணியின் கழுத்தை விடுவித்தவன், “அன்னைக்கு படுத்ததுக்குத்தான் பணம் கொடுத்துட்டேனே… பத்தாயிரத்துக்கு கூட தகுதியில்லாத உனக்கு பத்து லட்சம் பத்தலையா?” என்றான் ஏளனமாக.
“என்னோட வேல்யூ பத்தாயிரமாவே இருக்கட்டும், இதை பார்த்துட்டு அதோட வேல்யூ என்னனு சொல்லு” என்று தனது மொபைலிலுள்ள வீடியோவை உயிர்ப்பித்து டேபிள் மீது வைத்தாள்.
ஒரு பூங்காவில் குழந்தை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்க, குழந்தையை அணைத்துப்பிடித்தபடி தானும் ஆடிக்கொண்டிருந்தாள் பொன்மணி.
குளிரூட்டப்பட்ட அறை என்றபோதும் வியர்த்துவிட்டது சத்யனுக்கு. சத்யனின் சாயலில் நான்கு வயது பெண்குழந்தை. சத்யனின் முகத்தை வைத்தே தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்பெண் குழந்தையை உருவாக்கியிருந்தாள் பொன்மணி.
விழி பிதுங்கி அமர்ந்திருந்தவனிடம் “ஆதாரம் போதுமா?” என்றாள்.
“டெக்னாலஜி வச்சு எதேதோ கிரியேட் பண்ணிட்டு வந்து பயமுறுத்தப்பார்க்கிறியா?”
“பத்துமாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்து வளர்த்திருக்கேன். பேரு சத்யப்ரியா, அவளும் உன் மகனைப் போல எல்.கே.ஜிதான் படிக்கிறா. இதுவரை இந்த ஊர்பக்கம் அழைச்சிட்டு வந்ததில்ல. என்ன செய்ய? முறையா பெத்துருந்தா அழைச்சிட்டு வந்திருப்பேன்.
சரி அதை விடு. உனக்குத் தேவைனா சொல்லு, அழைச்சிட்டு வரேன். டி.என்.எ செக் பண்ணினா, இது டெக்னாலஜியா? இல்ல ரத்தமும் சதையும் உள்ள குழந்தையானு தெரிஞ்சிடும்” என்று அசால்ட்டாக சொல்லி கிளம்புவது போல் எழுந்தாள்.
“உக்காரு” என்றான் தேய்ந்த குரலில்.
“இது… இது எப்படி சாத்தியம்? வாய்ப்பே இல்ல” என்றான் தைரியத்தை வரவழைத்து.
“ஹம்…” என மீண்டும் இருக்கையில் அமர்ந்தவள், “செய்த வேலையை மறைக்க பத்து லட்சம் கொடுத்த நீ… அதோட பின் விளைவைப் பத்தி யோசிக்காம விட்டுட்டியே” என்றாள் பாவமாக.
இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை சத்யப்ரகாஷ். நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. “எப்படி? எப்படி உன் வீட்டுல குழந்தை பெத்துக்க சம்மதிச்சாங்க? நீ அப்போ ஸ்கூல்தான படிச்சிட்டிருந்த? இல்ல… நீ எதோ ஏமாத்துற?” என்றான் மீண்டும்.
“ம்… ஸ்கூல்தான் படிச்சிட்டிருந்தேன். நிறைமாச கர்பினியா பப்ளிக் எக்ஸாம் எழுதினேன். அதுக்கப்புறம் காலேஜ் ஜாயின் பண்ண நாலு மாசம் கேப் இருந்துச்சு. சமாளிச்சுட்டேன். உன்னை பழிவாங்கவே இந்த குழந்தையை பெத்தேன். நீ ஆரம்பிச்சு வச்ச ஆட்டத்தை என் பொண்ணை வச்சு முடிச்சு வக்கிறேன்” என்றாள் வன்மமாக.
பென்மணியின் தோரணை உண்மை என்றே தோன்றிட வெகுவாய் பயந்துபோனான் சத்யப்ரகாஷ். “நா… நான் என்ன பண்ணனும்? என்னை மன்னிச்சுடு, என்னை விட்டுடு. அந்த குழந்தைக்கு என்ன வேணும்னாலும் பண்றேன்” என்றான் கெஞ்சலாக.
“மன்னிப்பா? உன்னையா?” என்று ஏளனமாக கேட்டு “அன்னைக்கு எத்தனை கெஞ்சினேன்? என்னை விட்டியா? என்னை அப்படி பண்ணினது பத்தாம என் அக்காவை வச்சு பயமுறுத்தி, ஒரு அப்பாவி வாழ்க்கையை வீணடிச்ச உன்னை மன்னிச்சா… அதைவிட பெரிய பாவம் வேற இல்ல.
விதைச்சதை அறுக்குற காலம் வந்துடுச்சு. அறுத்து உனக்கே தரேன், திண்ணு ஜீரணம் பண்ண தயாராகிக்க” என எழுந்தாள் பொன்மணி.
சத்யனின் பயத்தில் பொன்மணியின் மனம் நிம்மதியானது. இனி நான் சொல்வதை செய்வதைத் தவிர இவனுக்கு வேறு வழியில்லை, ஆனாலும் இவனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தனக்கு என்னவானாலும் பரவாயில்லை. ஆனால் தான் மடியும் முன்னே திருனேஷ்வரனின் பெற்றோருக்கு, தனது மகன் தவறிழைக்கவில்லை என்ற நிம்மதியை கொடுக்கவேண்டியது தனது கடமை.
அது நிறைவேறும்வரை நானும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற யோசனைகள் வர, கதவருகே சென்றவள் திரும்பி சத்யனைப் பார்த்தாள்.
“என்னை கொன்னுட்டா வேலை முடிஞ்சிடும்னு சுலபமா நினைச்சிடாத. எனக்கு எதாவது சின்ன பிரச்சனைனாலும், என் ஃப்ரண்ட் உன்னை சும்மா விடமாட்டான்.
ஃப்ரண்ட்டுனா சாதாரண ஃப்ரண்ட் இல்ல, எம்.பியோட பையன். உன் விசயம் எல்லாமும் அவனுக்கு தெரியும். இப்படி பண்ணினவனை சும்மா விடக்கூடாதுனு உன்னை அப்போவே தீர்த்துக்கட்ட நினைச்சான். அந்த சத்யப்ரகாஷ் செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. அதுக்குள்ள நீ ஏதும் அவனை செய்துடாதனு நான்தான் சொல்லி வச்சிருக்கேன்.
நான் எங்க இருந்தாலும் என்னை க்ளோஸா வாட்ச் பண்ணிட்டுத்தான் இருப்பான். நம்ம விசயம் அவனுக்கு தெரியும்ல, அதனால என்னோட சேர்த்து உன்னையும் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருப்பான். எதாவது ஏடாகுடமா செய்துட்டு விபரீதத்துல சிக்கிடாத” என்று எச்சரித்தே வெளியேறினாள் பொன்மணி.
பொன்மணி மூலம் தனக்கொரு பெண்பிள்ளை இருப்பது மனைவிக்கும் வெளியுலகிற்கும் தெரிந்தால் என யோசித்தவன் வியர்த்து வழிந்த முகத்தோடு தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
error: Content is protected !!