அ01_2 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 01_2
தாத்தா பாட்டி, கோமலின் உலகமாய் மாறியிருக்க, பெற்றவர்களின் இழப்பு அப்படி எல்லாம் சிறியவளைப் பாதிக்கவில்லை.
Advertisement
ஊரைச் சுற்றித் திரியும் சிட்டுக்குருவியாய் தான் அவள் வாழ்ந்தாள். சிரிப்புக்குப் பஞ்சமில்லாத வாழ்க்கை. அந்த சின்ன சிறு கிராமத்தில் அவள் பாதம் படாத பூமி இல்லை. பாட்டி மடி சாய்ந்து தாத்தா கையில் உணவுண்டு நிம்மதியாக வாழ்ந்தவள்.
அங்கிருந்த பள்ளியில் ஆரம்பப்படிப்பை படித்தவள், படிப்பில் அதிக ஆர்வம் காட்டவும் தினமும் பத்து கிலோமீட்டர் தொலைவில் டவுனில் இருந்த மேல் நிலைப் பள்ளியில் படிக்க வைத்தனர்.
Advertisement
Advertisement
அவளுக்கென்று நண்பர்கள் கூட்டம். குறைவில்லா அட்டகாசங்களும்.. அமர்க்களங்களுமாய் அவள் தோட்டம் என்றுமே பூத்துத் தான் குலுங்கியது.
அப்பா தனிக்காட்டு ராஜா போல் வளர்ந்த வீட்டில் கோமல் தனிக்காட்டு ராணியாய் வலம் வந்தாள்.
Advertisement
பாட்டி கொஞ்சம் அதட்டுவார், கண்டிப்பார்.. கைநீட்டியது இல்லை. தாத்தாவிற்கு அரவணைக்க மட்டும் தான் தெரியும். இருவரும் பொக்கிஷமாய் அவளை ஏந்தினர்.
பாட்டி தவறியதும் மனம் அடிப்பட்டது. இரண்டு வருடம் கழித்து தாத்தா படுக்கையில் விழவும் வாழ்வு ருசிக்கவில்லை. மலர் உதிர்ந்த தோட்டமாய் மாறிப்போனாள்.
அம்மா காலமானதும் வயதான தகப்பனையும் மகளையும் தன்னோடு அழைத்துக் கொள்ள ராஜனுக்கு ஆசை. அதற்கும் மாதுரி உடன்படவில்லை. அவ்வப்போது விடுப்பெடுத்து தகப்பனோடு வந்து இருந்து போனார்.
பதினைந்து வருடம் மனதை மூடிவைத்திருந்தவருக்கு திடீரென்று மகளிடம் மனம் திறக்க வரவில்லை. மகளை அருகில் பார்த்துக் கொண்டார். அந்த ஒரு நிம்மதி மட்டும் அடுத்த இரண்டு வருடம் நிலைத்தது.
பெற்றவர்கள் இல்லாமல் தாத்தாவின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட செல்லப் பெண்ணின் வாழ்வு, தாத்தா இருந்தவரை எந்த பாடும் இல்லாமல் சென்றது. கடைசி சில மாதங்கள் தாத்தா படுக்கையில் விழுந்த போதும் வேறுமை இல்லாத வாழ்வு. அவர் கட்டில் ஓரத்திலிருந்தே கதை பேசுவாள்.
[the_ad id=”6605″]
“நீங்கக் கவல படாதீங்க தாத்தா… அப்பா என்னை பார்த்துப்பாங்க. நான் அங்கேயும் இளவரசி மாதிரி இருப்பேன்..” கண்ணீர் மறைத்து அவர் கடைசி நாட்களில் நிம்மதியை மட்டுமே அள்ளித்தந்தாள்.
பன்னிரெண்டாவது மதிப்பெண் தாளோடு வீட்டிற்குள் நுழைந்தவளைத் தட்டிக்கொடுக்கவோ பாராட்டவோ தாத்தா உயிரோடு இல்லை.
அன்று முடிந்தது கோமலின் சிரிப்பு சத்தம். காரியம் முடியவும் அப்பாவோடு தில்லிக்குப் பயணப்பட்டாள்.
அவளுக்குத் தெரியும் அவள் அங்கு இளவரசியாய் இருக்கப் போவதில்லை என்று. ஆனால்.. சொந்த வீட்டில் வேண்டா விருந்தாளியாய் போனாள் ராஜனின் மகள். ‘நெருப்புக்குள் ஒரு வனவாசம்’ என்ற நிலையை அவள் எதிர்பார்க்கவில்லை.
முதல் தாரத்தின் மகளுக்கு என்ன வரவேற்பு இருக்குமோ அந்த அளவு வரவேற்பு மட்டும் தான் கோமலுக்கு. அப்பா, சித்தி, தங்கை, இரண்டு தம்பிகள் இருந்தும் யாருமில்லா அனாதையாய் போனாள்.
மாதுரியின் அண்ணன் குடும்பம் அவ்வப்போது வந்து போனது. அவர்களோடெல்லாம் மாதுரியும் பிள்ளைகளுக்கும் நல்லவிதமாகத் தான் பழகினர்.
அங்கு, தான் மட்டும் தான் வேண்டாதவள் என்பது சொல்லாமலே உணர்த்தப்பெற்றது. எப்பொழுது வந்தாலும் மாதுரியின் அண்ணன் மகன், ரிஷியின் பார்வை மட்டும் கோமலைத் தழுவிச் செல்லும். ஏனோ அந்த பார்வை கோமலுக்குப் பிடிக்கவில்லை.
அன்றும் அப்படி தான்.. தனி அறையில் ஒதுங்கி நின்றிருந்தவளைத் தேடி வந்தான்.
“ஹா..ய் கோமல்..” அது மட்டும் தான் புரிந்தது. அவன் சென்றபின் சித்தி பேசிய பேச்சு புரியவில்லை என்றாலும் இனி அவன் வந்தால் அவன் கண்ணில் படக்கூடாது.. வீட்டில் இருக்கக் கூடாது என்பதும் புரிந்தது. அன்றிலிருந்து தங்கை என்ற ஒருத்தியும் அவளைப் பார்த்த பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டே அலைந்தாள்.
அப்பா காலை சென்றால் இரவு தூங்கும் நேரம் வந்தார். ஹிந்தியும் தெரியவில்லை. வீட்டிலிருந்தவர்களும் அவளுடன் இரண்டு வார்த்தை நின்று பேசுவதில்லை. தனிமையை உணர்ந்தாள். ராஜன் என்ன எடுத்துக் கூறியும் அவரின் மற்ற பிள்ளைகள் கோமலை எதிரியாகத் தான் பார்த்தனர்.
வீட்டில் இருக்க முடியவில்லை. கல்லூரிக்கு செல்ல ஆசை. அப்பாவிடம் கேட்க வேண்டும். எப்படி என்று தெரியவில்லை. அப்பாவிடம், ஊரிலாவது ஏதோ பேசியிருந்தாள்.. இங்கு வந்தபின் அந்த அளவு பேச்சு வார்த்தைக் கூட இல்லை. அவருக்கு தன்னை பிடிக்குமா? பிடிக்காதா? எதுவும் சிறுமிக்குத் தெரியவில்லை. அவர் முகத்தில் உணர்வுகளை கூட காட்டியதில்லை.
மற்ற பிள்ளைகள் சலுகையாய் அப்பா அருகில் அமர்ந்து கதை அடிக்க.. கோமலுக்கும் உள்ளுக்குள் ஒரு ஆசை.. அப்பா அருகில் அமர.. அவரோடு இரண்டு வார்த்தை பேச…. சலுகையாய் அவள் ஆசைகளைக் கூறி வேண்டியதைப் பெற்றுக் கொள்ள!
ஆனால் எல்லாம் அவள் நெஞ்சாங்கூட்டோடு நின்று விடும். தொண்டையைத் தாண்டி வெளியே வரவிட்டதில்லை.
அன்று ராஜன் நேரத்தோடு வீட்டிற்கு வர, தயங்கித் தயங்கி வந்து நின்ற மகளின் நிலை அவர் கண்ணில் நீர் துளிர்க்கச் செய்தது.
“அப்பா” என்று ஓடி வந்து கழுத்தை கட்டிக் கொள்ள வேண்டாம்… “அப்பா” என்று உரிமையாய் கூப்பிடலாமே.
சொந்த மகள் “அப்பா..” என்றாள். அதில் ஒரு தயக்கம்… ஒரு நடுக்கம்…
[the_ad id=”6605″]
மனிதன் மனம் உருகித் தான் போனது. பேச்சே வரவில்லை. கை நீட்டி ‘வா’ என்று தலை அசைக்க.. ஆசையாய் நெஞ்சில் சாய்ந்த மகளை வாஞ்சையாய் தலை வருட.. இருவருக்குள்ளும் அடங்கா அலைகள்.
பதினேழு வருடம் ஏங்கித் தவித்தார் மகளிடம் அவன் அன்பை உணர்த்த. கடமைக்கோ உணர்ச்சிவசப்பட்டோ பெற்ற மகள் இல்லை. காதலில் திளைத்து பத்து மாதம் தவமிருந்து… வயிற்றிலிருக்கும் போதே மகளிடம் கதைகள் பேசி பெற்றெடுத்த மகள் கோமல்.
யோசிக்காமல் ஓரே ஒரு தவறு செய்தார். மகளை ஆசை தீரக் கொஞ்ச கூட முடியவில்லை. மாதுரியோடு நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும்.. மற்ற பிள்ளைகள் மேல் உயிரை வைத்திருந்தாலும்.. கோமலுக்குத் தகப்பனாக இருக்க முடியவில்லை என்ற மன அழுத்தம் மனிதரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.
நெஞ்சோடே அணைத்துக் கொண்டு, “அப்பா… டா… நான் உன் அப்பா கண்ணம்மா.. என் கிட்ட என்ன தயக்கம்..”, தலை வருட.. இருவர் கண்ணும் பனிக்க நின்றிருந்தனர்.
பதினேழு வயது சிறுமியாக இல்லை… இரண்டு பல் காட்டி சிரித்த மகள் தான் அவருக்குத் தெரிந்தாள். இழந்த வருடங்கள்.. இழந்த இன்ப தருணங்கள்… அவர் கண் உடைப்பெடுத்தது.
ஒரு நிமிடம்… ஒரே ஒரு நிமிடம் நீடித்திருக்கலாம்… நீடிக்கவில்லை. அதன் பின் மகள் அருகில் அவர் வரவும் இல்லை. அவள் இருந்த திசை திரும்பவும் இல்லை.
[the_ad id=”6605″]
காதில் விழுந்த வார்த்தைகளின் வீரியம் அப்படி. விஷம் தடவப்பட்டு அம்பு நேரே அவர் இதயத்தில் பாய்ந்தது.
நாக்கில் நரம்பில்லாமல் அவர் தர்மபத்தினி உதிர்த்த வார்த்தைகள் நல்லவேளை ஹிந்தியில் இருக்கவே அவருக்கு மட்டும் தான் புரிந்தது. அவருக்கும் புரியாமலே இருந்திருக்கலாம்.. மனிதன் படுக்கையில் விழாமல் இருந்திருப்பார்.
கோமல் அப்படியே அவள் அன்னையின் மறுபிறப்பு. அதற்காக ஒரு மனிதருக்கு, மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாதா? நெருப்பாய் அவர் மேல் விழுந்த வார்த்தைகள் அவரை கொன்றே போட அவரை மகளிடமிருந்து அந்த வார்த்தைகள் தள்ளி நிறுத்தியது.
கேட்ட வார்த்தைகள் அவரை உடைத்து போட.. ராஜன், வீட்டில் உண்ணுவதை கூட நிறுத்திவிட்டார். நினைத்த நேரம் வருவார். மனைவி மற்ற பிள்ளைகள் என ஒருவரிடமும் பேசுவதில்லை. மாதுரி முகம் கூட பார்ப்பதில்லை. தள்ளி நின்றுவிட்டார். மனிதனுக்கு வசதி இருந்து என்ன பயன்.. நிம்மதி இல்லை!
வாழ்ந்த வாழ்க்கை பொய்துபோனது போன்ற உணர்வு. கடமை தவறிய, ஒரு மகனாய்.. ஒரு தகப்பனாய்.. தோற்றே போனார்.
இருந்த ஒரு உறவும் வீட்டில் இருப்பதில்லை. கோமலுக்குக் கண்ணை கட்டி காட்டில் விட்ட தனிமை. அவளிடம் என்ன என்று கேட்க ஆளில்லை.
இருக்கிறாளா செத்தாளா என்று பார்க்க ஆளில்லை. மூன்று வேளையும் அவள் அறைக்கு உணவு வந்து விடும். பெட்டியில் போட்டுக் கொள்ள உடையிருக்கும். தலைமேல் கூரையிருந்தது.
மூன்று மாதம் கடந்து சென்றது. வாழ்வில் ஒரு மாற்றமும் இல்லை. நான்கு சுவருக்குள் பெண்ணுக்குப் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை.
தனியே நின்றாள். ஏதோ கூட்டில் மாட்டிக்கொண்டது போன்ற மூச்சு முட்டல். துள்ளிக் குதித்த மான் அவள். வயற்காடு.. தோட்டம்.. துரவு.. ஆறு என்று எதையும் விட்டு வைத்ததில்லை. ஐந்து நிமிடம் ஒரு இடத்தில் அமர தெரியாத பெண் முடமாக உணர்ந்தாள். கொடுமையான உணர்வு! தாத்தா பாட்டி நினைவில் நாட்களை உந்தி தள்ளும் நிலை. அப்பா தள்ளி நின்றது அவளுக்குப் புதிதில்லை. அதனால் புது பாதிப்பில்லை.
வீட்டின் அருகாமையில் இருந்த இடங்களைச் சுற்றி திரிந்தாள். அருகே இருந்த புத்தகக் கடையை ஒரு நாள் காண.. புத்தகத்தில் தன்னை தொலைக்க துடங்கினாள்.
அங்கு தான் வேலை செய்தான், கௌரவ். மிகவும் கண்ணியமான பேச்சும் பார்வையும் மட்டுமே அவனிடமிருந்து வரும். அவள் கேட்ட புத்தங்கள் எல்லாம் வரவழைத்துக் கொடுத்தான். ஒருவன் பேசக் கிடைத்ததும் அவனுக்காகவே ஆர்வமாய் கற்றுக் கொண்டு, உடைந்த ஹிந்தி பேசினாள்.
பேச்சு நட்பாய் மாறியது. வேடிக்கையான அவன் பேச்சும் அவளைச் சிரிக்க வைக்க அவன் எடுத்த முயற்சியும் பெண்ணை கரைத்தது.
அன்பிற்கு ஏங்கிய சிறு பெண்ணிற்கு அன்பாய் பேசிய இருபத்தி ஒன்பது வயது வாலிபன் கௌரவ் மேல் ஈர்ப்பு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வயதிற்கேற்ற ஈர்ப்பு மட்டும் தான். அங்குக் காதலோ பிடித்தமோ எதுவும் இல்லை.
ஆனால் அவன் வேறு கூறினான்!
யாராவது ஒருவர், வீட்டில் அவளோடு பேசியிருந்தால்… அவள் தனிமை போக்கியிருந்தால்… அவள் ஆசைப் பட்ட கல்லூரி வாழ்க்கை தந்திருந்தால்… அவளை ஒரு ஜீவனுள்ள பெண் என்று நினைத்திருந்தால் கூட இன்று வீட்டிலிருந்திருப்பாள்.
கிணறு மட்டுமே உலகம் என்று வாழ்ந்த தவளை…
[the_ad id=”6605″]
கூட்டை மட்டுமே உலகம் என்று நம்பி வாழ்ந்த கூட்டுப் பறவை..
ஒன்று, பாட்டி தாத்தா போல் அன்பு காட்டும் ஜனம் இல்லை மாதுரி போல் வெறுப்பைக் காட்டும் ஜனம் என்று இரண்டு வகை ஜனம் மட்டுமே உலகில் உள்ளார்கள் என்று நினைத்த விபரம் அறியா சிறுமி…
அது தான் காதல் என்று அவன் சொல்ல… கழுத்தில் கருப்பு மணியை இட்டு ‘நீ தான் என் மனைவி. நான் தான் உன் எல்லாம்’ என்று அவன் சொல்ல… பாலுக்கும் கள்ளிற்கும் பாகுபாடு தெரியாத மடந்தை இதோ இங்கே..
சம்பந்தமே இல்லாத ஒரு பாலைவனத்தில், தனித்து நின்று கொண்டிருக்கிறாள்… “அக்கா…” என்ற சிறுவன் அழைப்பைக் கேட்டுக்கொண்டு!
