Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ02_2 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 02_2

மனம் இப்படிக் கண்டதையும் அசைபோட, ஒரு இடத்தில் வந்து நின்றது! என்றோ ஒரு நாள்.. ஓரே ஒரு நாள்… ஒரு கட்டிளம் காளையைக் கண்டு மனம் துள்ளி குதித்தது சிந்தனையை மயில் இறகாய் தீண்டிச் சென்றது. ‘காங்கேயம் காளை’ உதடு முணுமுணுத்தது. இதழோரம் புன்னகை வந்து அங்கேயே நின்று கொண்டது.

 

அவன் பெயர் தெரியவில்லை.. ஒரு முறை பார்த்திருக்கிறாள் அவள் தோழி வீட்டு விசேஷத்தில். அவனைப்  பார்த்ததும் அவளும் அவள் தோழிகளும் அப்படி தான் நினைத்தனர்… ‘காங்கேயம் காளை!’ என்று. கண்ணிமைக்காமல் பார்க்கத் தூண்டும் ஆளை அசத்தும் ஆண்மகன் அவன்.



Advertisement

 

அன்று, அவன் நடந்தது வர பின்னால் ஒரு காங்கேயம் காளை சிலுப்பிக் கொண்டு நின்றிருந்தது.. வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு மீசையை ஒற்றை விரலால் மேல் தூக்கி விட்டுக் கொண்டே நடந்து வந்த அவனும் அப்படி தான் தோன்றினான் அவள் கண்ணுக்கு! அன்று இதயம் துள்ளிக் குதித்து வெளியில் எட்டிப் பார்த்துச் சென்றதே.. அவனோடு தன்னை இணைத்து என்னவெல்லாம் கற்பனை செய்தாள்?

 

Advertisement

இன்னும் அவன் உருவம் இதயத்தில் அப்படியே இருந்தது. மறக்ககூடிய உருவமா அது?

Advertisement

 

அது கடந்த காலம். நினைக்க உருவம் மட்டும் தான் இருக்க.. வேரொன்றுமில்லை. கடந்து செல்லும் மேகம் போல்! நீண்ட பெருமூச்சு வந்து பழைய நினைவுகளை மூடி மறைந்தது.

 

Advertisement

நாட்களும் நகர்ந்தது. அதிகம் இல்லை என்றாலும் கௌரவை கடையில் பார்க்கத்தான் செய்தாள். வெளியே அவனோடு செல்வதில்லை.

 

இருந்தும் அவ்வபோது கன்னம் பழுத்தது. மனம் கொதித்தது.

பார்த்துக் கையாண்டிருந்தால், பெண், வீட்டினர் பேச்சு கேட்டிருப்பாள். ஒருவருக்கும் அவளோடு இருந்து பேச நேரமில்ல. இரண்டு நிமிடம் ஒதுக்க முடியவில்லையோ? விழையவில்லையோ…? பேசவில்லை! அவ்வளவு தான்.

 

சலனமில்லாத குட்டையில் வீட்டினரே கல்லை எறிந்து குட்டையைக் குழப்பியிருந்தனர்!

 

வீட்டில் நடப்பதைப் பார்க்க அப்பா இல்லை. அம்மா ஸ்தானத்திலிருந்தவளுக்கு அக்கறை இல்லை. அவள் மேல் மோகம் கொண்டவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவன் கோபம் அவள் கன்னத்தில் இறங்க.. கேட்பார் இல்லை.

 

நாதியற்று நின்றவள் வெண்ணெய் கன்னத்தில் தெரிந்த சிகப்பு கை தடம் கண்டு அதை கௌரவ் நீவ.. அவள் அமைதியாய் நிற்க, அவனுக்கு அவள் மனம் புரிந்தது.

 

அவள் வலி கண்டு அவன் கண்ணீர் சிந்த.. பெண்ணின் கண் பனித்தது. தனக்காகக் கூட கண்ணீர் வடிக்க ஆள் உள்ளதா என்ற எண்ணம் அவளை அசைத்தது.

 

அன்று வரை பேச்சும் நட்புமாய் சென்ற உறவு, காதல் என்ற புது பெயர் சூடிக்கொண்டது. அவன் தான் சூட்டினான்… அவள் பளிங்கு கன்னம் வருடி! அவளும் காதலிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாள் போலும்!

 

அவளிடம் அவன் மயங்குவதற்கு அவள் சுண்டி இழுக்கும் அழகு மட்டுமே போதும். மயங்கித் தான் போனான்.

 

அவள் மயங்க, அவள் வெறுமையைப் போக்கும் அவன் ஆசை வார்த்தை போதுமானதாக இருக்க, சிறு பெண் அவன் கைப்பாவையாகிப் போனாள்.

 

“எனக்குன்னு யாருமில்ல கோமல். வசதியும் இல்ல. மனசு இருக்கு அதுல நிறைய காதல் இருக்கு. உடம்பில தெம்பிருக்கு உன்ன வச்சு பார்த்துக்க. இப்போதைக்கு உங்க வீட்டு அளவுக்கு வசதியான வாழ்க்கைத் தர முடியாது… ஆனா கண்டிப்பா உன்ன மகாராணி மாதிரி வச்சுப்பேன்.. என்னை நம்பு..” அவன் தவிப்பாய் உதிர்த்த வார்த்தை அவளை பின்னடைய செய்யவில்லை. அவனின் உண்மையான பேச்சு அவளைக் கவர்ந்தது.

 

அவன் வாழ்வில் இப்படி ஒரு மென்மையான பளிங்கு சிலையைப் பார்த்தது இல்லை. படிப்பில், தொழிலில், வசதியில், வசீகரத்தில் என்று எல்லாவற்றிலும் அடிமட்டத்தில் இருப்பவன் அவன். முடவன்!

 

ஆம் முடவன் தான் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டான். அவன் நல்ல நேரம்.. எந்த தடையுமின்றி தேன் அவன் உள்ளங்கையில்.

 

“நீ போதும் கௌரவ். உன் காதல் போதும்”, என்று அவன் தவித்த இதயத்திற்கு இதம் பரப்பினாள்.

 

அவனின் சின்ன சின்ன சீண்டல்கள் ரசிக்கவில்லை என்றாலும் அன்பின் வெளிப்பாடு என்று நினைத்தாள். அவனும் எல்லை எல்லாம் மீறவில்லை.

 

அவன் கொடுத்த முத்தம் பிடிக்கவில்லை தான். அவன் கையை பிடித்ததே பிடிக்கவில்லை பின் அதில் கொடுக்கும் முத்தம் எப்படி பிடிக்கும்? என்றாலும் பிடித்ததாய் காட்டிக் கொண்டாள். முதல் முத்தம் தித்திக்குமாமே… வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்குமாமே… ஏன் தனக்கு அது எதுவும் ஏற்படவில்லை? கை கால் நடுங்கியது தான் மிச்சம்!

 

ஏன் உள்ளுக்குள் இதம் பரவவில்லை? அவளுக்கு அது தெரியவில்லை… இருந்தும் அவன் அன்பின் வெளிப்பாட்டை நிராகரிக்கவில்லை மொத்தத்தில் அன்பிற்காக ஏங்கியவள், எதையும் சகிப்பது தான் காதல் என்று மனதில் பொரித்துக் கொண்டாள்.

 

நிம்மதி எங்கு கிடைக்கும் என்று பதினேழு வயது சிறுமி ஏங்கிக் கிடக்க, அவனிடமிருந்த வந்த சினிமா காதல் வசனம் அவள் காயப்பட்ட மனதிற்கு மருந்தாயிருந்தது.

 

ஒரு முறை வீட்டில் யாருமில்லா நேரம் ரிஷி வந்தான். அவன் காதலை உரைத்தான். அவள் விழித்தாள். அவள் விருப்பம் பற்றி கவலை இன்றி அணைக்க அவள் அரண்டு போனாள்.

 

அவனின் முரட்டுக் காதல் அவளுக்குப் பிடிபடவில்லை. எதற்கும் அடிக்கும் அவன் குணம் பிடிக்கவில்லை.   அவள் விருப்பம் தெரியாமலே அவளைத் தொட்டது பிடிக்கவில்லை. மொத்தத்தில் அவனைப் பிடிக்கவில்லை. அவன் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த சித்தியைப் பிடிக்கவில்லை.

 

அவள் நிலை உணராமல் வீட்டுப் பக்கமே வராமல் போன அப்பா மேல் கோபம் வந்தது. மொத்தத்தில் அந்த வீடே பிடிக்கவில்லை.

 

கௌரவ், “என் கூட வரியா… இங்க இருந்து போயிடலாம்?” என்றான் ஒரு நாள்.

 

அவளுக்குப் புரியவில்லை.. அவனோடு சென்று? குழம்பினாள்.

 

“நீயும் நானும் மட்டும். நிம்மதியா இருக்கலாம்..” என்றான் காதலாய்.

 

‘நிம்மதி?’ அது  அவளுக்குப் பிடித்தது.

 

இருந்தும் யோசனையாய் ‘வேண்டாம்’ என்று தலை அசைத்தாள்.

 

அவனுக்கு அவளை விட மனமில்லை. மீண்டும் மீண்டும் சேர்ந்து வாழ்வதைக் குறித்துப் பேசினான்.

 

“அப்பாட்ட வந்து பேசுங்க” என்றாள்.

 

“உங்க வசதி எனக்கு இல்லை கோமல்… ஒத்துக்க மாட்டாங்க. அதுக்கப்புறம் உன்னை வீட்டுல வச்சு பூட்டிடுவாங்க. நீ வெளில வரவே முடியாது. நாம சொல்லாம போயிடலாம்.” என்றான்.

 

“அப்பாட்ட சொல்லாம போனா என்னை தேடுவாங்க.. அப்பா பாவம் ஏதோ மனகஷ்டத்தில இருக்காங்க.. நான் இல்லேனா வருத்தப்படுவாங்க..” என்றாள்,  வருத்தமாக.

 

“ரொம்ப கனவு காணாத கோமல். உன்ன திரும்பி பார்க்க நாதி இல்ல. உன் அப்பாக்கு உன் மேல பாசம் இருந்தா உன்ன ஏன் அந்த வீட்டில விட்டுவச்சிருக்கார்? அவர் உன் கூட பேசி எத்தன மாசம் ஆகுது? யாரு உன்னை தேட போறா? உங்க அப்பாக்கு நீ வீட்டில இல்லனு யார் சொல்ல போறா? அது அவர் காதுக்கு போகாது. உன் சித்தி சொல்ல மாட்டாங்க! உன் அப்பாவா கண்டு பிடிக்கதுக்கு எத்தன வாரம் ஆகுமோ? உன்ன கண்டுக்க அங்க ஆளே இல்ல… எதுக்கு யோசிக்கிற? என் மேல் நம்பிக்கை இல்லையா?”

 

அவன் முயற்சி.. அவனுக்கு வெளிச்சத்தைக் காட்டியது.

 

“நீ சொல்றது சரி தான்! ஆனா… எங்க போறது?” யோசனையாய் அவள் கேட்க

 

“எங்கேயாவது கண் காண தேசத்துக்கு போயிடலாம்.. சின்ன வீடு.. அங்க நீயும் நானும். உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம்… உன் கூடவே நான்… உனக்குத் துணையா… காதலோட..” காதல் வசனம் பேசினான்.

 

அதற்கும் யோசித்தாள். மனம் குழம்பியது.

 

கடைசியாக ஒரு நாள் கல்லும் கரைந்தது. கையிலிருக்கும் பொருள் கையை விட்டு நழுவுகிறது என்று தோன்றும் வேளை அது வேண்டும்.. விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றும். அது அவசியமா இல்லையா என்று தெரியாது. விட்டுப் போய்விட்டால்? என்ற படபடப்பும் குழப்பமும் அதைப் பிடித்து வைக்கத் தூண்டும். அது மனித இயல்பு! அந்த இடத்தில் கோமல் நின்றாள்.

 

“நான் இங்க இருந்து போறேன் கோமல்… நீ வந்தா சந்தோஷமா போவேன். இல்லேனா நான் காலம் பூரா உன்னை நினைச்சு தனியாவே இருப்பேன்.. எனக்கு உன்னை விட்டா யாருமே இல்ல கோமல். உனக்கும் யாரும் இல்ல… வாயேன் கோமல்.. எனக்காக உன் முடிவ மாத்த மாட்டியா?” கண்ணில் காதல் வழியக் கேட்டான்.

 

ஏனோ அவளுக்கு மனம் ஒப்பவில்லை.

 

“உன் கிட்ட வேற வேலை இல்ல. என் கிட்ட படிப்பு இல்ல. வேண்டாம்.. இப்போ என்ன அவசரம்.. நான் அப்பாட்ட கேட்டு அடுத்த வருஷம் காலேஜ் சேர்ந்து படிக்கணும். நீயும் இங்கேயே இரு.. எங்கேயும் போக வேண்டாம்.” என்றுவிட்டாள்.

 

ஒரு மாதம் அவள் கண்ணில்  அவன் படவே இல்லை. எங்கு சென்றானோ தெரியவில்லை. அவன் அடிக்கடி இப்படி காணாமல் போவது தான். ஆனால் ஒரு மாதம் எல்லாம் போனதில்லை. மீண்டும் தனித்துப் போனாள்.

 

மாதம் கழித்து வந்தவன், “உன்ன பாக்க தான் வந்தேன். நான் என் சொந்த ஊருக்கு போறேன். ஒரு வாரம் தான் இருக்க முடியும். அப்புறம் இங்க என்னால இருக்க முடியாது.” என்று அவள் மனதில் வலியை ஏற்படுத்தினான்.

 

ஒரு கால் ஆற்றிலும் ஒரு கால் சேற்றிலுமாய் குழம்பிப் போனாள்.

 

ஒரு நாள் கோவிலில் அவள் தனித்து நின்று அழுவதை பார்த்தவன் முகத்தில் அப்படி ஒரு கோபம்.

 

“ரிஷியா?” என்றான்.

 

“வீட்ட விட்டு வெளியில போகக் கூடாது சொல்றான். சித்தி வீட்டில இருக்கும் போதே ரூம்க்கு வந்து திட்டறான். எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல”, என்றாள் விழுந்து போன குரலில்.

 

“நான் சொல்றதை நீ கேட்க மாட்டேன்ற! என்ன சொல்ல? நான் போனபிறகு அவன் கூட தனியா அவஸ்தை படணும்னு இருக்கு உனக்கு!” என்றான் கோபக் குரலில். ‘நான் போகத் தான் போகிறேன்’ என்ற தகவல் அதில் இருக்கவும் அவள் முகம் விழுந்து போனது. இருக்கும் ஒரே பிடிப்பும் சென்றுவிட்டால்?

 

அவள் முகம் வாடவும், “நீ வா கோமல்.. உன்ன என் கிரமத்துக்கு கூட்டிட்டு போறேன்… அங்க இருக்க இடம் கூட ரெடி. நான் உன்ன படிக்க வைக்கிறேன். இங்க மட்டும் தான் புக் ஸ்டோர் இருக்கா என்ன? என் சேமிப்ப வச்சு உனக்காக நானே ஒரு தொழில் தொடங்கறேன்… உன்னைப் படிக்க வைக்கிறேன். உன்ன கண்கலங்காம நான் பார்த்துக்கறேன்… நீ வா. உன் இஷ்டத்துக்கு இருக்கலாம். நீ என் மகாராணியா இரு” என்று அழைத்தான்.

 

ஆசை வார்த்தைகளில் பெண் முழுவதுமாக நெகிழ்ந்து போனாள்.

 

ஊர் எல்லாம் சுற்றித் திரிந்து.. அதன் வழிகளை அறிந்த ஆண்மகன் பேசினான். பேசப் பேச சிறுமி கரைந்து போனாள். மீண்டும் பட்டாம் பூச்சியாய் சிறகை விரித்துப் பறப்பது போன்ற கற்பனை. முகத்தில் சில்லிடும் கிராமத்துக் காற்றும்… சிலிர்பூட்டும் பனித்துளிகளும்.. மண் வாசமும்.. தென்றலுக்குத் தலை அசைக்கும் வயலும்… ஆடும்.. மாடும்… சிட்டுக் குருவியும்… கேணியும்.. ஆறும்… விடியலில் அவளை எழுப்பும் சேவலும்…. கற்பனை குதிரை களைகட்டியது.

 

“படிச்சு முடிக்கிற வரைக்கும் நாம வெறும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான்? அப்புறம் வேலைக்குப் போனதும்.. சம்பாரிக்கிற காசெல்லாம் உங்கட்ட தான் கொடுப்பேன்.. சரியா?” கண்ணில் கனவோடு உரைத்தாள்.

 

முகம் விழுந்துபோனாலும்… இன்முகமாய், “ஃப்ரெண்டாவா..? சரி.. உன் மனசு மாறுற வரைக்கும் அது உன் இஷ்டம்… ஆனா தாலி கட்டி என் மனைவியா தான் கூட்டிட்டு போவேன்” என்றான் காதலாய்.

 

கிராமம்.. படிப்பு.. நினைக்கவே இனித்தது. கண்ணில் கனவோடு நான்கு மாத தோழனைக் கணவனாய் கரம் பிடித்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர, பெண் சரி என்றுவிட்டாள்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!